அஸ்திவாரம்

Friday, July 19, 2019

ஜே.பி யின் ஜெயில் வாசம் (எமர்ஜென்சி).

"கூச்சலும் ஆரவாரமும் அடங்கிப் போகும்
தளபதிகளும் அரசர்களும் காணாமல்போவர்
ஆனால் உன் தியாகம் மட்டும் அழியாதிருக்கும்
உன்னை மறக்காமல் இருக்க
மறந்துவிடாமல் இருக்க
கடவுளே எங்களுக்கு அருள் புரிவாயே"

ருட்யார்ட் கிப்ளிங்கின் எழுதிய வரிகளை வாசிக்கும் போது மற்ற துறைகளை விட இந்திய அரசியலில் கோலோச்சியவர்களைப் பற்றியும், கணப் பொழுதில் காணாமல் போனவர்களைப் பற்றியும் தான் நினைக்கத் தோன்றுகின்றது. சிலர் காலத்தால் மறைந்து நம் நினைவிலிருந்து மறைந்து போனார்கள். பலரோ சிலரின் தனிப்பட்ட அரசியல் கணக்குகளால் மறைக்கப்பட்டார்கள்.

பா.ஜ.க அரசு 2022 ஆண்டை இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டாகக் கொண்டாட இலக்கு நிர்ணயித்து நகர்ந்து கொண்டு இருக்கின்றோம் என்கிறார்கள். ஆனால் கடந்த 72 ஆண்டு கால இந்திய அரசியல் வரலாற்றில் நேரு, இந்திரா, ராஜீவ் இவர்களை மட்டும் தான் இன்னமும் முன்னிறுத்தப்படுகின்றார்கள். வேறு எவருமே இங்கு இல்லையா? மற்ற அனைவரும் எப்படி மறைந்தார்கள்? மறைக்கப்பட்டார்கள் என்பதற்கு சிறிதளவு புரிந்து கொள்ள உதவும் புத்தகம் தான் ஜே.பி யின் ஜெயில் வாசம் (எம்ர்ஜென்சி).

தமிழர் எம்.ஜி. தேவசகாயம் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் ஜெ.ராம்கி மொழிபெயர்த்துள்ள நூல் இது.

நூலாசிரியர் மாவட்ட ஆட்சியராக ஹரியானா பகுதியில் பணிபுரிந்தார். சண்டிகரில் தற்காலிக பொறுப்பிலிருந்த சமயத்தில் உருவானது எமர்ஜென்சி. அந்த சமயத்தில் தான் இருந்த பகுதியில் என்ன நடந்தது? சமூக மாறுதல்கள் என்ன? நடந்த அரசியல் நிலவரங்கள் என்ன? அரசாங்கத்தின் உள்ளே என்னவெல்லாம் நடந்தது? அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள்? என்பதனை ஜெபி என்றழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கைது சம்பவங்களை வைத்து நமக்கு புரிய வைக்கின்றார்.

தமிழர்களுக்கு எமர்ஜென்சி குறித்து முழுமையாகப் புரியாது. வட மாநிலங்களை ஒப்பிடும் போது தென் மாநிலங்களில் அதன் தாக்கம் மிகவும் குறைவு. இன்னமும் திமுக கட்சியினர் தங்களது கூட்டத்தில் பேசும் போது அதனை இன்றும் தவறாமல் குறிப்பிடுகின்றனர். தற்போது 70 வயதைக் கடந்தவர்களுக்கு ஓரளவுக்குப் புரிந்திருக்க வாய்ப்புண்டு. 50 வயதைக் கொண்டவர்கள் அனைவருக்கும் ஐந்து வயதில் என்ன தெரிந்து இருக்க முடியும்?

25 ஜூன் 1975

அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது வெளியிட்ட அறிக்கையிது.

அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 352 உட்பிரிவு 1, எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி இந்தியாவின் குடியரசுத்தலைவராகிய ஃபக்ரூதீன் அலி அகமது என்னும் நான், உள்நாட்டுக் கலவரங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் உள்ளது என்பதால், நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்கின்றேன்.

இப்படித்தான் அதிகாரப்பூர்வமாக நெருக்கடி நிலை உருவானது. மொத்தம் 20 மாதங்கள் இருந்தது. இந்த சமயத்தில் இந்தியா இரண்டு துருவங்களாக மாறியது. அரசாங்கத்தை ஆதரித்து எழுதிய பத்திரிக்கைகள், அதிகார வர்க்கத்தினர் அனைவரும் தன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் வாழ்ந்தனர். எதிர்த்த அனைவரும் எந்த கேள்வி கேட்பாரற்று சிறையில் வாடினர்.

1971 ல் இந்திய பாகிஸ்தான் போரின் போது அமுலுக்கு வந்த தேசியப் பாதுகாப்புச் சட்டம் (மிசா) திரும்பவும் தூசு தட்டப்பட்டது. மிசாவின் படி விசாரணை இன்றி யாரையும் எப்போதும் கைது செய்யலாம். அதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. தேச பாதுகாப்பு இவர்களால் அச்சுறுத்தல் என்ற ஒற்றை வாசகத்தின் மூலம் வாய்ப்பூட்டு போடப்பட்டது.

ஜேபி என்றழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் முழுப்பெயர் ஜெயப்பிரகாஷ் நாராயண ஸ்ரீவத்ஸ்வா. பீகார் மாநிலத்தில் உள்ள ஸ்ரீவஸ்தவா என்பது தான் ஜேபி யின் குடும்பப் பெயர். காயஸ்தா சாதி. பீகாரில் சத்திரிய காயஸ்தா இருப்பது போலப் பிராமண காயஸ்தா குழுக்களும் உண்டு. அரசாங்க உயர் அதிகாரிகள் முழுக்க இவர்கள் தான். இதிலிருந்து வந்தவர் தான் ஜேபி.

நேருக்குவுக்கு மட்டுமல்ல மோதிலால் நேருக்குவுக்கு நண்பராக இருந்தவர். ஜேபியின் கண்பார்வையில் இந்திரா காந்தி வளர்ந்தவர். தன் மகள் என்று பெருமையாகச் சொன்னவர். ஆனால் 73 வயது முதியவரைப் பார்த்துப் பயந்ததும் வெறுத்ததும் இந்திரா அம்மையாரின் குணாதிசயங்களை முழுமையாக இந்தப் புத்தகம் விவரிக்காவிட்டாலும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

எமர்ஜென்சி உருவாகக் காரணம் என்ன?

ஊழல் நெருக்கடிகள், திடீர் சாவுகள், சந்தேக மரணங்கள், அதிகார துஷ்பிரயோகம், நீதி மன்ற கண்டனங்கள், பதவியை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தங்கள் என்று இந்திராவின் ஆட்சி கிச்சன் காபினெட் போல மாறிக் கொண்டு இருந்தது.

தேர்தலை வெறுப்பவர்கள், ஜனநாயகம் என்றாலே வேப்பங்காய் போலப் பார்ப்பவர்களை (பன்சிலால் ஓம் மேத்தா ஆர் கே தவான்) மட்டுமே அருகே வைத்திருந்த இந்திரா காந்தி தான் நினைப்பது மட்டுமே சரி என்ற நிலைக்கு வந்து ஆட்சியை மூக்கணாங்கயிறு இல்லாமல் வெட்கப்படாமல் கையாண்டு கொண்டிருந்தார். தன்னை வளர்த்தவர்கள், வளர காரணமாக இருந்தவர்கள், அறிவுரை சொல்லக்கூடிய தகுதி படைத்தவர்கள் அனைவரையும் இந்திராவைச் சுற்றியிருந்தவர்கள் அவரின் தொடர்பு எல்லைக்கு வெளியே வைத்திருந்தார்கள்.

இதற்கு அப்பால் சஞ்சய் காந்தி என்றொரு துடிப்பான வாலிபர் செய்து கொண்டிருந்த சர்வாதிகாரம் நாளுக்கு நாள் எல்லை கடந்து கொண்டு இருந்தது. இது குறித்து இந்திராவிடம் அறிவுரை சொன்ன அனைவரும் வேறு பக்கம் நகர்த்தி வைக்கப்பட்டார்கள். சிலரின் பதவியும் பறிக்கப்பட்டது. தன் காலத்திலேயே மகனுக்குப் பட்டாபிஷேகம் நடத்திவிட வேண்டும் என்ற எண்ணம் இந்திராவின் மனதிலிருந்தாலும் தயக்கமும் தடுமாற்றமும் அவரை பல சமயங்களில் நிலை கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. எதிலும் நிதானமான முடிவெடுக்க முடியாமல் நித்திரை இல்லாமல் இந்திரா வாழ்ந்த காலங்கள் அது.

அள்ளித் தின்ன வேண்டியதை அப்படியே கொட்டிக் கவிழ்த்தால் என்னவாகும்? அது தான் எமர்ஜென்சியாக மாறியது.

எமர்ஜென்சி இருந்த 20 மாதங்கள் முடிவுக்கு வந்த போது அதனை எதற்கும் கலங்காத, தலை வணங்காத ஜேபி என்ற இந்த மனிதர் தான் இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, இரண்டே வருடங்களுக்குள்ளாகவே அதனைத் தோற்கடித்துக் காட்டினார். இந்தியாவின் இரண்டாவது சுதந்திரம் என்று பிறகு பேசப்பட்டது.

இந்திரா ஆட்சியில் பிரதமராக இருந்தாலும் நிழல் பிரதமராகவே சஞ்சய் காந்தி செயல்பட்டுள்ளார். அம்மாவுக்கு எதிராக இருந்த ஒவ்வொருவரையும் சஞ்சய் காந்தி தான் கவனித்துச் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு இருந்தார். பாதி வெளியில் வந்தது. மீதி காற்றோடு கலந்து போனது.

சஞ்சய் காந்தி அடிப்படையில் ஜனநாயகம், காந்தீயம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர். அதன் பிரதிபலிப்பு ஒவ்வொரு நிகழ்விலும் முரட்டுத் தனமாக வெளிப்பட்டது. அதனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களின் இந்திரா காந்தியும் ஒருவர்.

ஜேபி அக்மார்க் காந்தியவாதி. நேரு முதல்முறையாக இந்தியாவின் முதல் மந்திரிசபையை 1950 ல் அமைத்த போது "ஜேபி நீங்களும் வரவேண்டும்" என்று கட்டாயப்படுத்தி அழைத்தார். தன் வீடு தேடி வந்ததை மறுத்தவர். 

"எனக்குப் பிறகு இந்தியாவின் தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியான நபர் ஜேபி" என்று நேரு முன்னிலைப்படுத்திப் பேசினாலும் அரசியலை விட்டே துறவறம் பூண்டு காந்தியின் சம்பூரண சுயராஜ்ஜியம் என்ற கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1954 முதல் அவர் வினோபாபாவேயின் சர்வோதய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் நிலங்களை முற்றிலுமாகத் தானம் செய்தார். இவர் உருவாக்கிய அமைப்புகள் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சனம் செய்த போது அது குஜராத், பீகாரில் பூகம்பமாக மாறத் தொடங்கியது. மக்களும், மாணவர்களும் அரசுக்கு எதிராகத் திரளத் தொடங்கினர். ஊழல், பணவீக்கம், வேலையின்மை முக்கியப் பிரச்சனையாக உருவானது. 

இந்திரா சுதாரித்துக் கொண்டார். அவர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சமய சந்தர்ப்பங்கள் எல்லாமே தலைகீழாகப் போன போது தான் மொத்தமாக தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்த நாட்டின் மீது எமர்ஜென்சி என்ற பூதத்தை ஏவினார்.

இந்திரா காந்தி குறித்து இன்று வரையிலும் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளது. அவரின் ஆளுமைகள், அரசியல் கொள்கைகள், இது தவிர அவரின் தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும் பலரும் எழுதியுள்ளார்கள். இந்தப் புத்தகத்தில் சில வரிகள் வருகின்றது.

நேருவின் மனைவி கமலா நேருவும் ஜேபி யின் மனைவி பிரபாவதியும் மிக நெருக்கமானவர்கள். பிரபாவதிக்குக் கமலா நேரு எழுதிய 39 கடிதங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினால் அது இந்திராவின் மொத்த இமேஜ் ம் பாதிக்கப்படும் என்பதற்காக ஜேபி உருப்படியான காரியம் ஒன்றைச் செய்தார். இந்திராவிற்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வேண்டிய சமயம் தொடங்கிய போது அந்தக் கடிதத்தை இந்திராவிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். 

காரணம் அம்மாவிற்கு தன் மகள் மேல் ஒரு துளி கூட மரியாதையும் அன்பும் இல்லை என்பதோடு அவரின் பல கீழ்த்தரமான நடவடிக்கைகளைப் பற்றி விமர்சித்து எழுதியிருந்த கடிதங்கள் அது. வேறு எவர் கையிலும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக இந்திராவிடம் திருப்பி ஒப்படைத்துவிட்டார்.

எமர்ஜென்சி சட்டம் அமுலுக்கு வந்த பின்பு டெல்லியில் உள்ள காந்தி அமைதிக் கழகத்தில் ஜெபி தங்கியிருந்த போது டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சண்டிகர் அழைத்து வந்தனர்.

ஹரியானாவின் குர்காவோன் மாவட்டத்தில் இருக்கும் சொகஹானாவில் உள்ள விருந்தினர் மாளிகைக்குத்தான் முதலில் ஜேபி அழைத்துச் செல்லப்பட்டார். அதே இடத்திற்கு இன்னொரு வாகனத்தில் மொரார்ஜி தேசாயும் அழைத்து வரப்பட்டார். ஆனால் பேச அனுமதிக்கவில்லை.

ஜெபி முதலில் சண்டிகரில் கைதியாக, அடுத்து மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் ஒருடயாலிசிஸ் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டபடி பின்னர், பாட்னாவில் ஒரு சாதாரண வீட்டில் கைதியாக இருந்த போது அவரை கவனிக்க, கண்காணிக்க வேண்டிய பொறுப்பிலிருந்த நூலாசிரியர் அப்போது அங்கே நடந்த தகவல்களை டைரிக்குறிப்புகள் போலக் கொடுத்துள்ளார்.

1979 அக்டோபர் 8 அன்று ஜேபி இறந்தார், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இன்றைய பாஜக அசுர வளர்ச்சிக்கு அடித்தளமிட்டமிட்டவர் ஜேபி. 

ஜேபியின் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஜனசங்கம் விளம்பு நிலையிலிருந்தது. கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, 1977 ல் ஜனசங்கத்தையும் ஜனதா கூட்டணியில் ஜேபி சேர்த்துக் கொண்டார். அதற்குப் பிறகு தான் ஜனசங்கமும் அதைத் தொடர்ந்து உருவான பாரதீய ஜனதா கட்சியும் பெரிய அளவில் மக்களைச் சென்று அடைந்தது.

இந்தப் புத்தகத்தில் வரக்கூடிய வரிகள் இது.

இன்றைய காங்கிரசுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாசகமாகவும், இதுவே இப்போதுள்ள பாஜக வுக்கு பொருந்திப் போய்விடுமோ? என்று அச்சமாகவும் உள்ளது.

"வரலாற்றைக் கற்காதவர்கள் அதில் இழைக்கப்பட்ட தவறுகளை மீண்டும் செய்யவேண்டிய வரும்".

வின்ஸ்டன் சர்ச்சில்


#Amazon



11 comments:

  1. கமலா நேரு எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது என்று வரலாற்று ஆசிரியருக்கு எப்படித் தெரிந்ததாம்? ஜேபியே சொன்னாராமா? ஙே......

    ReplyDelete
    Replies
    1. ஜேபி யும் அவர் மனைவி பிரபாவதியில் அப்போது அமெரிக்காவில் இருந்தனர். இந்தியாவில் இருந்து கமலா நேருவும் பிரபாவதியும் மிக மிக நெருங்கிய தோழிகள். அமெரிக்காவில் இருந்த பிரபாவதிக்கு கமலா நேரு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு இருந்தார். அதில் 39 கடிதங்கள் மிக முக்கியமானது. அந்த 39 கடிதங்களிலும் இந்திரா காந்தி பற்றிய புராணங்கள் தான் அதிகம். அந்தக்கடிதத்தில் தன் மகளைப் பற்றிய பார்வை, அவர் வளர்ந்த விதம், இப்போது மாறிய விதம், என்று எல்லாவிதங்களையும் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். இது பெரும்பாலும் இந்திராவின் உள்ளார்ந்த நடவடிக்கை குறித்தே ஒரு அம்மாவின் பார்வையில் இருந்து எழுதுப்பட்டுள்ளது. இந்தக்கடிதம் வெளியே வந்தால், தேவையில்லாத நபர்களிடம் சிக்கும்பட்சத்தில் அது இந்திராவின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கும் என்பதால் ஜேபி அந்த மொத்தக் கடிதத்தையும் இந்திரா அவர்களிடம் முக்கியமான நபர் மூலம் நேரிடையாக ஒப்படைத்துவிட்டார். இந்திராகாந்தி குறித்து இது போன்ற புத்தகங்கள் ஏராளமாக வந்ததுள்ளது. அது குறித்து முழுமையாக படித்தவர், பல விசயங்களை அறிந்தவர் எனக்குத் தெரிந்து முனைவர் ஜம்புலிங்கம் அவர்களும் ஒருவர். ஆனால் நிச்சயம் இதுபோன்ற விசயங்களில் அவர் கவனம் செலுத்த விரும்பமாட்டார். இந்தப் பதிவைப் பார்த்து விட்டு அவர் பதில் அளிக்கின்றாரா என்று பார்க்கலாம்.

      Delete
    2. I am not sure you answered Tulasi madams question. If the contents of these letters are confidential. other folks have no access.they can guess, I don't think Ms Prabavathi would have revealed the contents.///இந்தக்கடிதம் வெளியே வந்தால், தேவையில்லாத நபர்களிடம் சிக்கும்பட்சத்தில் அது இந்திராவின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கும் என்பதால் ஜேபி அந்த மொத்தக் கடிதத்தையும் இந்திரா அவர்களிடம் முக்கியமான நபர் மூலம் நேரிடையாக ஒப்படைத்துவிட்டார்///
      I guess many people hate Ms Indira Gandhi. when she was down they have crested rumors real and fake..
      Rajan

      Delete
    3. இல்லை ராஜன். காங்கிரஸ் ல் எனக்கு பிடித்த மூன்று பேர்கள். நேரு இந்திரா ராஜீவ். இவர்களிடம் குறைகள் உண்டு. ஆனால் இந்த நாட்டை கள்ளமில்லாமல் நேசித்தவர்கள். ஆனால் தங்களைத் தவிர வேறு யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனமாகவும் இருந்தார்கள். ஆனால் ஜேபி பதவிக்கு பணத்திற்கு வேறு எந்த சுகத்திற்கும் ஆசைப்படாதவர். காந்தி போலவே கடைசி வரைக்கும் வாழ்ந்தவர். மனைவிக்கு வந்த கடிதம் மனைவி அனுமதியுடன் கணவன் படிப்பது இயல்பு. காரணம் இது அரசியல் தொடர்பானது. எனவே தான் ஜேபி அவரே இதை கொண்டு சேர்த்து இருக்க வேண்டும். ஆனால் அம்மாவுக்கு மகள் மேல் துளி பிரியமோ மரியாதையோ இல்லை என்பது இந்த புத்தகத்தில் வேறு சில இடங்களில் வருகின்றது.

      Delete
  2. \இதுவே இப்போதுள்ள பாஜக வுக்கு பொருந்திப் போய்விடுமோ? என்று அச்சமாகவும் உள்ளது.எனல்லும் அந்த அச்சம் உள்ளது ஜெயப்பிரகாஷை சின்ன வயதில் அரக்கோணத்தில் பார்த்த நினைவு ஒரு டூரிங் டாக்கிஸ் சொந்தக்காரர் வீட்டில்

    ReplyDelete
    Replies
    1. 1973 என்று நினைக்கிறேன். இறந்து விட்டார்.

      Delete
  3. அச்சங்கள் நிஜமாகாமல் இருக்கட்டும். பின்னாட்களில் சஞ்சய்காந்தி ஹெலிகாப்டர் "விபத்தில்" இறந்ததும் அங்கு வந்த இந்திரா காந்தி அங்கு தேடி அலைந்து ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை மட்டும் எடுத்துச் சென்றார் என்றும் படித்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. சோனியா ராஜீவ் இறந்த இடத்திற்கு வந்த போது அப்போது சென்னை விமானநிலையத்திலிருந்து இடத்தை அடையும் வரைக்கும் அருகே இருந்தவர்களிடம் முக்கியமாகக் கேட்டது எங்கே அந்த இரண்டு சூட்கேஸ். அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது. பெட்டி முழுக்க தேர்தலுக்கான பணம். ஆனால் பயபுள்ளைங்க ஆட்டைய போட்டுட்டாங்க.

      Delete
  4. அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்ட நாள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அப்பொழுதுதான் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் ஆரம்பமானது. அறிவிக்கப்படும் முன்பாக திருமதி இந்திரா காந்தியின் அறிக்கைகள் அனைத்துமே உள்நாட்டுப் பிரச்னைகள், அந்நிய சக்திகளால் ஆபத்து என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தன. தன்னைக் காத்துக்கொள்வதற்காகவும், முழுக்க முழுக்க தன் சுயநலத்திற்காகவும் அவர் இதனை அறிவித்தார். பல பெருந்தலைவர்கள் மரியாதையின்றி நடத்தப்பட்டனர். ஒரு சர்வாதிகாரிபோலவே அவர் நடந்துகொண்டார். இந்தியாவில்தான் இருக்கின்றோமா என்ற எண்ணத்தை உருவாக்கினார். எதிர்க்குரல் எழுப்பியவர்கள் ஒடுக்கப்பட்டனர்.
    இவற்றையெல்லாம் மீறி அதன் சாதகத்தையும் இப்போது நினைவில் கொள்வோம். மளிகைக்கடைகளிலும் பிற கடைகளிலும் பொருள்களின் இருப்பு, விலை நிலவரம் குறித்து அனைவருக்கும் தெரியும்படி வைக்கப்பட்டது. பணிபுரிவோர், குறிப்பாக அரசுப்பணியாளர்கள் உரிய நேரத்திற்கு முன்பாகவோ, உரிய நேரத்திலோ பணிக்கு வந்தனர். அவரவர் தமக்கென ஏதோ ஒரு வகையான கட்டுப்பாட்டை அமைத்துக்கொண்டனர். இதுபோல பல மாற்றங்களைக் காணமுடிந்தது. இருந்தாலும் அவசரநிலைப் பிரகடனம் என்பது இந்தியாவின்மீதான கறுப்புப்புள்ளி என்பதை மறுக்கமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. நைஸா தப்பித்து விட்டீர்கள் போல. நன்றி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.