தெற்கில் ஒரு சூரியன் - நூல் விமர்சனம்
மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி குறித்து, அவரைப் பற்றி பலரின் பார்வையை வைத்து தொகுக்கப்பட்ட புத்தகமிது. தமிழ் தினசரியான தமிழ் இந்து வெளியிட்டுள்ளார்கள். இது கலைஞரின் சுயவரலாறு அல்ல. அவரைப்பற்றி ஒரு பக்கச் சார்பாகக் கட்டுரைகள், பேட்டிகள் கொண்ட தொகுப்பிது. அவரின் அரசியல் அதிகாரத்தின் மூலம் பெற்ற வீரபராக்கிரமங்களை அவர் செய்த சாதனைகளாக நமக்கு புரிய வைக்க முயன்றுள்ளார்கள்.
ஒரு குடும்பத்தலைவர் தன்னைப் பற்றி சுயவரலாறு எழுதினால் அவரைச் சுற்றியுள்ள சின்ன வட்டத்தின் மூலம் சமூக நிகழ்வுகளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்தந்த காலகட்ட வரலாற்றையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவர் சார்ந்த அந்தரங்க விசயங்கள் அதிகபட்சம் அவர் உறவினர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களுக்கு மட்டுமே புத்தகத்தின் சாதகம், பாதகம் என்று இனம் கண்டு கொள்ள முடியும்.
ஆனால் அரசியல்வாதிகளின் கதை அப்படியா?
1964 ஆம் ஆண்டு "தனுஷ்கோடி மூழ்கிவிட்டது" என்ற செய்தியே அடுத்த நாள் தான் பத்திரிக்கைகள் வாயிலாக தமிழ்கூறும் நல்லுலகத்திற்குத் தெரிய வந்தது. அரசாங்கம் தன் நிலை உணரவே ஆயத்த ஏற்பாடுகள் செய்யவே ஒரு நாள் ஆனது என்று படித்துள்ளோம். ஆனால் இன்று நிலைமை அப்படியா?
மொத்த கண்டத்தையும் ஒரு அலைபேசி அடக்கி வைத்துள்ளது. அப்படியே ஒவ்வொரு செய்திகளையும் நொடிக்கு நொடி கொட்டிக் கொண்டே இருக்கவும் செய்கின்றது. இந்த சமயத்தில் இங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாழ்க்கையும் சமூக வலைதளங்களில் பந்தி விரிக்கப்படுகின்றது. பலரின் பார்வைக்குக் கொண்டு போகப்படுகின்றது. ஒவ்வொருவரும் பயமில்லாமல் கேள்விகள் எழுப்பும் போதும், விமர்சனப் பார்வையாக வைக்கும் போதும் பல மறைக்கப்பட்ட உண்மைகள் நாள் தோறும் வெளியே வந்து கொண்டே தான் இருக்கிறது.
இப்படியொரு சூழலில் இந்தப் புத்தகம் நிறுவும் முக்கிய விசயங்கள் புறக்கணிப்பட முடியாதவையாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உள்ள அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும், அதற்குப் பின்னால் தனிமனிதர்கள் அடைந்த லாபங்களையும் கவனமாக தவிர்த்துள்ளனர்.
கலைஞர் மு. கருணாநிதி தன் வரலாற்றை "நெஞ்சுக்கு நீதி" என்ற பெயரில் பல பாகங்களாக எழுதியுள்ளார். தன் 45 வயதில் தமிழகத்தின் முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்து அமர்ந்தார். அடுத்த அரை நூற்றாண்டு காலம் தமிழகத்தின் ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் அவர் இருந்துள்ளார். இன்னமும் அவர் செய்திகளின் வழியே வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்.. தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டுமென்றால் ஒன்று கலைஞரைத்திட்ட வேண்டும் அல்லது புகழ வேண்டும். இந்த இரண்டுக்குள் தான் இன்னமும் தமிழக அரசியல் களம் உள்ளது. அப்படியான ஒரு தாக்கத்தை உருவாக்கிவிட்டு சென்றுள்ளார்.
அவர் தன்னைப் பற்றி எழுதியது போல அவரைப் பற்றி மற்றவர்களும் எழுதியுள்ளார்கள். இது தவிரத் திராவிட அரசியல் என்ற பெயரில் பல ஆயிரம் புத்தகங்கள் இங்கே வெளிவந்துள்ளது.
ஆனால் இன்னமும் கலைஞரைப் பற்றிய முழு சித்திரத்தையும் தமிழகம் உணரவில்லை. அவரின் அரசியல் வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும் உண்டு. பாரபட்சமின்றி உண்மைக்கு அருகே சென்று கலைஞரைப் பற்றி எந்தவொரு நிகழ்வையும் இன்னமும் எவரும் பதிவு செய்யவே இல்லை. புகழ்ந்து அல்லது இகழ்ந்து என்ற இரு எல்லையில் தான் புத்தகங்கள் வந்துள்ளன. இந்தியச் சூழலில் குறிப்பாகத் தமிழகத்தில் எந்த அரசியல்வாதிகளைப் பற்றியும் முழுமையான சித்திரங்களை நம்மால் உணரவே வாய்ப்பில்லாமல் தான் இருந்தது.
இப்போது தான் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பின்பு ஒவ்வொன்றாக மாறிக் கொண்டே வருகின்றது. அந்தரங்கத்திற்குள் மட்டுமே இருந்த ஒவ்வொன்றும் இப்போது அரங்கத்திற்கு வந்து பேசு பொருளாக மாறியுள்ளது.
இது கலைஞர் குறித்த முழுமையான நூல் அல்ல. அவரின் புகழ்பாடும் நூல் என்று எடுத்துக் கொள்ளலாம். கலைஞருடன் பழகியவர்கள், அவர் புகழை மட்டுமே பேசுபவர்கள், கலைஞர் ஆட்சியிலிருந்த போது செய்த சாதனைகள், திட்டங்கள், அதனால் விளைந்த சமூக மாற்றங்கள் என்று இதில் வந்துள்ள ஒவ்வொரு பார்வையின் மூலம் நம்மால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த நூலை விமர்சனப் பார்வையில் நாம் அணுகுவதை விட இதில் உள்ள பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின் என்று இரண்டு விதமாகப் பார்க்கலாம். இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மூன்று விசயங்களை அடுத்த பதிவில் தனியாக எழுதியுள்ளேன். .
நமக்கு முன்னால் வாழ்ந்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவர் மேலும் ஏராளமான விமர்சனங்கள் வைக்க உரிமையுள்ளது என்பதனைப் போல அவர்கள் உருவாக்கிய பாதையினைத் தான் நாம் இன்று சுகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதனை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இது பெரியார், அண்ணா, கலைஞர் அதற்குப் பின்னால் வந்தவர்கள் என்று எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் மொத்தத்தில் தமிழகத்தில் இதுவரையிலும் அரசியல் களத்தில் நடந்த ஊழல்கள், அதன் மூலம் தங்கள் குடும்பத்திற்குக் கொள்ளையடித்து பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்த்துக் கொண்டார்கள் என்பதனை குற்றச்சாட்டாக எடுத்து வைத்தாலும் நமக்குக் கிடைத்து இருப்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொஞ்சம் மிகையாகத்தான் கிடைத்துள்ளது என்பதனையும் நாம் கவனத்தில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
இந்திய சரித்திரத்தை சுதந்திரத்திற்கு முன் சுதந்திரத்திற்குப் பின் என்று பேசுவது போல தமிழக சரித்திரத்தை பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின் என்று தான் நம்மால் பார்க்க முடியும். காரணம் பெரியார் உருவாக்கிய தாக்கம் என்பது எப்போதும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
இந்திய அரசியல் சரித்திரத்தில் எவரும் செய்யத் துணியாக அனைத்தையும் அவர் வாழ்ந்த காலத்திலேயே செய்து முடித்து விட்டார். விமர்சிக்கலாம். வெறுக்கலாம். ஆதரிக்கலாம். ஆனால் எவரும் மறுக்க முடியாது. கடவுளே துணை என்று வாழ்ந்த சமூகத்தை உன் அறிவே உனக்குத் துணை என்று பாதை மாற்றியவர்.
பெரியாருக்கு முன் இங்கே இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா என்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி அமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் பேசியிருக்கின்றார்கள். பெரியார் தான் இதனை முதல் முறையாக மாற்றுகின்றார்.
சாதியை ஒழிக்க வேண்டியது முதல் கடமை என்று தன் கடமையைத் தொடங்குகின்றார். சாதி என்ற கட்டுமானம் மதம் என்ற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. அது கடவுள் நம்பிக்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தால் பிராமண எதிர்ப்பைத் தொடங்குகின்றார்.
அது இங்கே பல சிதைவுகளையும், சமூக சீர்திருத்தங்களையும் அறிமுகம் செய்து வைக்கக் காரணமாக அமைகின்றது. அதுவரையிலும் உயர் அதிகார வர்க்கத்தில் உள்ள மேல் சாதியினரின் கட்டுமானம் படிப்படியாக உடைக்கப்படுகின்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஒதுக்கப்பட்டவர் என்ற மூன்று பிரிவுகளையும் முடிந்தவரைக்கும் சீரமைக்கக் காரணமாக அமைந்தது. இந்தியா மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியைத் தேசத் தந்தை என்று இன்னமும் கொண்டாடுவதற்கு எத்தனை காரணங்கள் உள்ளதோ ஈ.வெ.ராமசாமி யை தந்தை பெரியார் என்று கொண்டாடுவதற்கும் தமிழர்களுக்கு நிறைய நியாயமான காரணங்கள் உண்டு.
பெரியார் விதையை ஊன்றினார். வாக்கு அரசியலில் நம்பிக்கையற்று மக்களிடமே பேசினார். நம்பிக்கை என்பது அறிவியல் மூலம் உருவாகின்றது. மூட நம்பிக்கைகள் என்பது அதிகாரத்தை தக்க வைக்க எப்படி பயன்படுத்தப்படுகின்றது என்பதனை அப்பட்டமாக போட்டு உடைத்தார்.
மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை மாற்ற முயன்றார். ஆனால் அண்ணா அதனைப் பராமரித்து வளர்த்து மரமாக மாற்றினார். அதிகாரத்தை அடைய, கைப்பற்ற, தக்க வைக்க வாக்கு அரசியல் முக்கியம் என்பதனை உணர்ந்து கொண்டார். சமரசம் ஒன்றே பெரிய ஆயுதம் என்பதனை கண்டு கொண்டார். தன் கொள்கைகளை இளக்கிக் கொண்டார். இறுதியாக "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதில் கொண்டு வந்து முடித்தார்.
கூடவே பெரியார் பத்திரிக்கைகள், மேடைகளை மட்டும் நம்பினார். மக்களிடம் சென்று சேர இதுவே போதும் என்று நம்பினார். ஆனால் அண்ணா மேடைப் பேச்சுடன் நாடகம், திரைப்படம், பத்திரிக்கை என்று சகலவிதமான வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். அதற்கான அனைத்து திறமைகளும் அவரிடம் இருந்தன. அண்ணா தமிழ் மொழியை மாற்றினார். பேச்சு மொழியை மாற்றினார். அண்ணாவின் புதிய அலங்கார நடையில் மக்கள் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல மாறினர். குறிப்பாக இளைஞர்கள்.
ஆனால் இருவரும் தனக்காக, தங்கள் குடும்பத்திற்காக எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் விட்டுச் சென்றதுமில்லை. வாழ்நாள் முழுக்க தாங்கள் நம்பிய கொள்கைக்காகவே வாழ்ந்து மடிந்தனர். பெரியார் தனக்குப் பிறகு மணியம்மை தான் என்று அடையாளம் காட்டினார். ஆனால் அண்ணா அதையும் செய்யவில்லை.
அண்ணா இருந்த போது அவருடன் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைகள் கட்சியிலிருந்தனர். அவரவருக்குண்டான தகுதியில் தன் எல்லை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருந்தனர். வரலாற்றில் ஐம்பெரும் தலைகள் என்று சிலர் இருந்தார்கள் என்று கூட நீங்கள் படித்து இருக்கலாம். ஆனால் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் வந்தார். கலைஞர் இருந்தார். கலைஞர் மட்டுமே தலைவராக வாழ்ந்தார். வளர்ந்தார். தான் வாழும் வரைக்கும் தன்னை மட்டுமே போற்றக்கூடியவர்களை மட்டுமே வளர்த்தார். ஆரோக்கியம் குறைந்த போதும், இழந்த போதும், இனி செயல்பட முடியாது என்ற போதும் என்று எல்லா நிலையிலும் தன் தன்னம்பிக்கை ஒன்றைக் கொண்டே கடைசி வரைக்கும் வாழ்ந்தார்.
பெரியார் விதையை, அண்ணாவின் மரத்தைக் கலைஞர் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். கிடைத்த பழங்களை சுவைத்தவரும், குடும்ப உறுப்பினர்களுக்கும், கூட உடன் இருந்தவர்களுக்கு சுவைக்கக் கொடுத்து அழகு பார்த்தார். அதாவது தடாகத்தில் வாழும் மீனின் உணவே அழுக்கு தான். மீன் அழுக்கை உண்டால் தான் தடாகம் சுத்தமாகும் என்ற புதிய தத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார். இந்த தத்துவம் 1971 ல் தொடங்கியது. 2019 ல் தாடகம் முழுக்க மீன்கள் மட்டுமே கொளுத்துப் போய் உள்ளது. தண்ணீரைத் தேடி வந்தவர்கள் தாகத்துடன் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
அண்ணாவிற்குப் பிறகு அடுத்த கட்டத்திலிருந்த பல பேர்கள் எப்படிக் காணாமல் போனார்கள்?
கலைஞரை விட எல்லாவிதங்களிலும் தங்களைத் தகுதியானவர்களாக வைத்திருந்த போதும் ஏன் தோற்றார்கள்? கலைஞர் எப்படி வென்றார்? என்பதிலிருந்து தான் அவரின் உழைப்பு, திறமை, அறிவு, சாமர்த்தியம், முயற்சி, அதிர்ஷ்டம் என்று எல்லாமே கலந்து இருந்தது. எம்.ஜி.ஆர் என்றறொரு மனிதர் அன்று கருணாநிதிக்கு உதவாமல் போயிருந்தால் அவர் வாழ்க்கை முழுக்க கலைஞராக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் நிச்சயமாக முதல்வராக மாறியிருக்கவே முடியாது. அதே போல கலைஞரைத் தவிர வேறு எவர் தலைவர் பதவிக்கு வந்திருந்தாலும் திமுக என்ற கட்சி தமிழகத்தில் இல்லாமலே போயிருக்கும்.
கலைஞர் பிறந்த போது, வளர்ந்த போது சாதீய கட்டுமானம் தான் தமிழகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தது. மன்னர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் என்று யாருமில்லாத போதும் கூட நிலக்கிழார்கள் தான் சாதிய கட்டுமானத்தை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்தார்கள். அதில் உழன்று, அதனால் பாதிக்கப்பட்டு, வாய்க்கும் வயிற்றுக்குமே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்த கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களில் ஒன்று கலைஞரின் குடும்பமும். சாதீயத்தால் இழிவு சுமந்த கொடுமை ஒரு பக்கம். பொருளாதார பின்புலமே இல்லாமல் வாழ்க்கையின் கோரச்சுவடுகள் மறு பக்கம்.
கதைகளில் தான் கதாநாயகர்கள் இது போன்ற சூழலில் சாதித்துக் காட்ட முடியும். அன்றைய தமிழகத்தில் இவையெல்லாம் வாய்ப்பே இல்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் முக்கால்வாசி தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே உண்மை. அதில் கலைஞர் குடும்பமும் ஒன்று. ஒரு வேளை முதல் இருபது வருடத்திற்குள் அவருக்குள் இந்த பொறி தோன்றியிருக்கக்கூடும்.
"பணம் தான் இங்கே முக்கியம். அதிகாரம் அதைப் பெற்றுத் தந்து விடும்" என்ற எண்ணம் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.
அதையே கடைசி வரைக்கும் நம்பினார். அதை மட்டுமே நம்பியது தான் அவர் மேல் உள்ள விமர்சனங்களுக்கு முக்கியமான காரணமாகவும் அமைந்து விட்டது.
அண்ணா, கலைஞரைத் தவிரத் தமிழகத்தில் முன்னால் ஆட்சியில் அமர்ந்த முதல்வர்களுக்குச் சாதி, பணம், கட்சி என்று ஏதோவொரு வகையில் பின்புலம் இருந்தது. அண்ணா கூட முதலியார் என்ற சாதீய சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமூகத்தில் தான் பிறந்தார். கல்வி ரீதியாகவும் முறைப்படியான அங்கீகாரத்தையும் பெற்று இருந்தார். அந்தக் கொடுப்பினையும் கலைஞருக்கு அமையவில்லை. அதுவே அவரை வாழும் வரைக்கும் குத்திக் கிழித்துக் காயப்படுத்தக் காரணமாகவும் அமைந்தது.
பெரியார், அண்ணா, கலைஞர் மூவரில் பெரியார் மட்டுமே பிறவி செல்வந்தர். ஆனால் கடைசி வரைக்கும் தனக்காக வாழாமல் தன் கொள்கைக்காகவே வாழ்ந்தவர். அதற்காகவே தன் சொத்துக்களைக் கொடுத்தவர். தமிழகத்தில் அன்றைய சூழலில் நினைத்துப் பார்த்தாலே அஞ்சக்கூடிய கொள்கைகளைப் பிரகடனமாக முழங்கியவர். தன் 84 வயது வரைக்கும் பாதை மாறாமல் அதற்காகவே வாழ்ந்தவர்.
ஆனால் அண்ணா பெரியார் கொடுத்த வரைபடத்தைப் பயன்படுத்திக் கொண்டார். தன் உழைப்பு, திறமையின் மூலம் தமிழகத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டார். சாமர்த்தியமாகக் காமராஜர் உருவாக்கிய அடித்தளத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டார். வாழ்வில் பெற வேண்டிய எந்த அதிகார சுகத்தையும் பெறாமல் மறைந்தார்.
கலைஞர் உழைப்பாளி, திறமைசாலி, தந்திரசாலி என்பதனை விட மற்ற எவரையும் விட அதிர்ஷ்டசாலி என்ற வார்த்தை தான் சரியாகப் பொருந்தும்.
நாம் செய்யும் காரியங்கள் காலத்தோடு பொருந்திப் போக வேண்டும் அல்லது காலம் உணர்த்தும் காரியங்களை நாம் செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வர வேண்டும். அது கலைஞர் வாழ்க்கையில் இயல்பாகவே வந்தது. எத்தனை போராட்டங்கள் என்றாலும் அது கடைசியில் அவருக்குச் சாதமாகச் சூழலைத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கியது.
எதிர்த்து நின்றவர்கள், எதிரியாக மாறியவர்கள், ஏளனப்படுத்தியவர்கள் எத்தனை பேர்கள் தோன்றினாலும் கடைசியில் ஒன்று செல்லாக்காசு போல மாறினார்கள். மற்றொன்று காலம் அவர்களை விரைவாக அழைத்துக் கொண்டு சென்றது. காரணம் அரசியல் என்பது திறமையின் அடிப்படையில் முப்பது சதவிகிதமும் நம் செயல்படும் விதங்களில் எழுபது சதவிகிதமும் தான் வெற்றி அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட கலையைப் பெரியாரை விட, அண்ணாவை விடக் கலைஞர் கற்று வைத்திருந்த அரசியல் அறிவு என்பது கடைசி வரைக்கும் காப்பாற்றியது.
பெரியார் காசு விசயத்தில் கஞ்சனாக இருந்தார். கணக்கு விசயத்தில் பயங்கர கெடுபிடியாக இருந்தார். காலணா என்றாலும் பத்து முறை யோசித்து செலவளிப்பவர்.
ஆனால் அண்ணா ஒழுக்க விதிகளை மீறியவர். மக்களுடன் ஒன்று சேர, மக்களுடன் உறவாட, மக்கள் விரும்பும் மொழியை தன் மொழியாக கொள்கையாக மாற்றிக் கொண்டவர். காலப்போக்கில் தான் உருவாக்கிய மொழியே சரியென்று மக்களை நம்ப வைத்தவர். இளைஞர்களை கிறங்கடித்து பின்தொடர வைத்தவர். இதை அப்படியே கலைஞரும் பின்பற்றி தன்னை தக்க வைத்துக் கொண்டார். கூடவே தன் இடத்தை வேறு எவரும் பிடித்து விடக்கூடாது என்பதில் சாவு நெருங்கி விட்டது என்ற சமயத்தில் கூட சமரசமில்லா கொள்கை கொண்டவர்.
பெரியார் எதை விரும்பினாரோ? அண்ணா எதை தன் கனவாக நினைத்து வைத்திருந்தாரோ அதை முக்கால் வாசி கலைஞர் 1971 முதல் 1976 ஆட்சியில் இருந்த போதே அடித்தளமிட்டு வெற்றிக் கொடி நாட்டி தமிழகத்தின் புதிய பாதைக்கு அடிகோலிட்டவர் மு.க.. மருமகனை மீற முடியாதவராய், மகன்களை அடக்க முடியாத நிலையிலும், மகளை கண்டிக்க முடியாத சூழலிலும் மீண்டும் 1996 முதல் 2001 வரைக்கும் இருந்த ஆட்சியில் புதிய தமிழகத்திற்கு முகமளித்தவர் கலைஞர்.
இன்று கொள்கை நீர்த்துப் போய், கொள்கை என்றால் என்னவென்றே அறியாத கொள்ளைக்கூட்டத்திடம் வந்து திராவிட அரசியல் வந்து நிற்கின்றது
கொள்கை பின்னுக்குப் போய்விட்டது.
கொள்ளையடிப்பதே பிரதானமாகியுள்ளது.
அவன் நல்லவன்? இவன் கெட்டவன்? என்ற பேச்சு கீழ்மட்டத்திலும் "நீயும் நானும் ஒண்ணு மக்கள் வாயில் மண்ணு" என்கிற ஆட்சியதிகாரக வேட்கை மேல்மட்டத்திலும் உள்ளது.
இன்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பரஸ்பர புரிதல் அடிப்படையில் அவரவர் சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே தெரியாத புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் அரசியல் செய்கின்றனர். அதையே தங்கள் கொள்கையாகவும் மாற்றி உள்ளனர். மேலும் மேலும் ஆசை அடங்காமல் கொள்ளையடிப்பதில் யார் திறமைசாலி என்கிற ரீதியில் தமிழகத்தின் அரசியல் களம் இன்று மாறியுள்ளது. இதன் காரணமாகத்தான் இன்று நம்பமுடியாத ஆச்சரியமான தலைவராக மாறியுள்ள எடப்பாடி திமுகவினருக்கு மாதப்படியளப்பு திட்டத்தில் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் முடிந்துள்ளது. உதயநிதி தான் எதிர்கால தலைவர் என்று சொன்னாலும் முணுமுணுப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ளவும் துணிந்துள்ளனர்.
மாற்றங்களை இவர்களாவது உருவாக்குவார்களா? என்று நாம் யாரை யோசிக்க நினைக்கின்றோமோ அவர்கள் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவை 2000 ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு போய் நிறுத்தி விடுவார்களோ என்ற பயமும் வந்து கொண்டேயிருக்கின்றது.
உருவான மாற்றங்களை நம் முந்தைய தலைமுறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். நாம் வளர்ந்த நாகரிகத்தில், வளர்ந்துள்ள தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாகத் தைரியமாக விமர்சிக்க, கேள்வி கேட்கவும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதுவே மிகப் பெரிய முன்னேற்றம் தானே? மாற்றங்கள் இன்னமும் வரும். மாறும் என்று நம்புவோம்.
பழைய வரலாறு முக்கியம். நாம் எப்படி இனி வாழப் போகின்றோம் என்பதற்கு அது தான் முக்கிய ஆதாரமாக நமக்கு வழிகாட்டும்.
கடைசியாக,
வாக்கு அரசியலை நம்பி மட்டும் உச்சத்தைத் தொட்ட ஒவ்வொரு அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மக்களால் தூற்றப்படுவார்கள். இது மாற்ற முடியாத உண்மை.
இது இருபது வருடங்களுக்கு முன்பு மேலோட்டமான விமர்சனப் பார்வையாக இருந்தது. இன்று தொழில் நுட்ப வளர்ச்சியில் விரைவாக மாறியுள்ளது. இது கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இந்த நூல் வெளிவந்த போது நூலாசிரியரை போற்றி கொண்டாடிய 200 ரூபா திமுக அல்லக்கைகள்
ReplyDeleteஇன்று அதே சமஸ் அவர்களை திமுக முரசொலி முதல் அத்தனை அல்லக்கைகளும் இணையத்தில் குத்தி குதறிகிட்டு இருக்காங்க
உண்மை தான்.
Deleteசில நெரங்களில் இந்ர்க திராவிட இயக்கம் டிசை மாறீஓஓஈரதோ என்னும் ஐயமெழுகிறது திசை என்ன திசை யார்நிர்ணயிப்பது
ReplyDeleteகாசு பணம் மணி துட்டு
Deleteநானும் சென்ற புத்தகத் திருவிழாவில் இந்தப் புத்தகம் வாங்கிப் படித்தேன்.
ReplyDeleteபடித்து முடித்ததும் உங்கள் பார்வை என்னவாக இருந்தது ராம்.
Deleteவணக்கம்
ReplyDeleteவிரிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி கவிஞரே.
Deleteதெற்கிலிருந்து ஓரு சூரியன் - அருமையான, சரியான விமர்சனம். தி.மு.க.சார்புள்ளவர்களும், அல்லாதவர்களும் வாசிக்க வேண்டிய விமர்சனம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
ReplyDeleteமிக்க நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபுத்தகம் மட்டுமின்றி புத்தகத்தை தொட்டு அதன் வெளியிலும் திராவிட அரசியலை போற்றுவோர் தூற்றுவோர் என அத்தனை தரப்பினரும் ரசிக்கும் வண்ணமும் சிந்திக்கும் வண்ணமும் ஏற்றுக்கொள்ளும் வண்ணமும் நேர்த்தியாய் ஒரு விமர்சனம்.
ReplyDeleteஅருமைங்க சார் 👌👌👌
நன்றி தம்பி.
Delete