அஸ்திவாரம்

Wednesday, July 24, 2019

1984 சீக்கியர் கலவரம்

நாம் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும், அரசியல்வாதிகளும் மறைந்திருப்பார்கள். நமக்கு முதலில் தோன்றுவது "ஹையா ஜாலி. இன்றைக்கு லீவு" என்று தான் சொல்லியிருப்போம்.

ஏன் இறந்தார்? எப்படி இறந்தார்? அவர் யார்? இறப்புக்குப் பின்னால் என்ன நடந்தது? என்ன மாறியது? போன்ற அரசியல் தட்ப வெப்ப நிலை குறித்து நாம் அறிந்து இருக்க மாட்டோம். காரணம் நாம் கல்லூரி வரைக்கும் அரசியல் என்பதே விலக்கி வைக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாகத்தான் வளர்க்கப்பட்டுள்ளோம். 

கல்லூரி முடித்து சமூக வாழ்க்கையில் உள்ளே நுழையும் போது தான் அடிப்படைக் கடமைகளுடன் நமக்குப் புரிந்த, பிடித்த அரசியலைக் கற்றுக் கொள்ளவே தொடங்குகின்றோம். காலப் போக்கில் சிலர் மேல் விருப்பு உருவாகின்றது. சிலரை நிரந்தரமாக வெறுப்பு பட்டியலிலும் வைத்து விடுகின்றோம்.

இந்திரா காந்தி எந்த சூழலில் மறைந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்தேன். ஆய்வகத்தில் விலங்கியல் ஆசிரியர் டி.குமரேசன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் அய்யா வேகமாக உள்ளே வந்தார். முதல் இருக்கையில் நான் இருந்தேன். விலங்கியல் ஆசிரியர் என் இருக்கை அருகே நின்று கொண்டு இருந்தார்.

"டேய் குமரேசா இந்திரா அம்மாவைச் சுட்டுக் கொன்று விட்டார்களாம்?" என்று பதைபதைப்புடன் சொன்னார். நொடிப் பொழுதும் தாமதிக்காமல் அப்படியென்றால் "இன்றைக்கு லீவா சார்?" என்று கேட்டது தான் தாமதம் விலங்கியல் ஆசிரியர் கன்னத்தில் கொடுத்த அரை இன்னமும் நினைவில் உள்ளது.

அடுத்த முப்பது வருடங்களில் இந்திரா காந்தி குறித்து ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. மகளுக்கு அவர் பெயரை வைக்கும் அளவிற்கு அவரின் குறைகளை மீறியும் இன்றளவும் அவரை நேசிக்க முடிகின்றது.

ஆனால் அவர் இறப்பின் போது நடந்த, உருவான, உருவாக்கப்பட்ட சீக்கியர் இனப் படுகொலை பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதுண்டு. கிண்டில் மூலமாகப் படித்துக் கொண்டு இருந்தாலும் அதில் உள்ள அன்லிமிட் உள்ளே நுழையாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். ஜெ. ராம்கி எழுதிய 1984 என்ற புத்தகத்தைப் பார்த்ததும் இதை வாசிக்க நிச்சயம் நாம் கடலுக்குள் குதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நுழைந்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டுத் தான் தூங்கவே முடிந்தது.

ஆவணம் என்று சொல்லலாம். அற்புதம் என்றும் சொல்லி கடந்து விடலாம்.

ஆனால் நாம் வாழ்ந்த சமகால கொடூரங்களை அப்படியே நமக்குக் கடத்தியதில் முழுமையாக ராம்கி வெற்றி பெற்றுள்ளார்.

ராஜீவ்காந்தி தன் அம்மாவின் இறப்பை எப்படி பார்த்தார்? என்ன சொன்னார்? என்ன செய்தார்? என்ன செய்யாமல் தவிர்த்தார்? காங்கிரஸ்காரர்கள் அந்த சமயத்தில் என்னவெல்லாம் செய்தார்கள்? இதில் பங்கெடுத்த முக்கியஸ்தர்கள் யார் யார்? அவர்கள் பின்னாளில் எந்த உயர் பதவியை அடைந்தார்கள்? வீரத்திற்குப் பெயர் சீக்கிய இனத்தை எப்படி அலங்கோலப்படுத்தினார்கள்? இன்று சொல்லப்படும் கேங் ரேப் என்பதனை எப்படிக் கூசாமல் செய்தார்கள்? காங்கிரஸ்காரர்கள் எப்படி கொள்ளையர்களாக மாறினார்கள்? உருவான விசாரணை ஆணையம் என்ன செய்தது? என்ன செய்யாமல் விட்டது?

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் அவர்களை எப்படி பாடுபடுத்தினார்கள்?

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் ஏன் வாயை பொத்திக் கொண்டு இருந்தார்?

இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள்? துணை ராணுவப்படை ஏன் அமைதியாக இருந்தது. சீக்கிய இனத்திலிருந்த ராணுவ உயரதிகாரிகள் கூட இந்த கலவரத்தில் எப்படி பாதிக்கப்பட்டார்கள்?

ஆறாத ரணங்களை, அதன் காயங்களை, இன்னமும் மாறாத வடுக்களை அப்படியே அழகாகப் படம் பிடித்துள்ளார். இது தவிர பிந்தரன்வாலே, லோங்கோவால், சீக்கிய இனத்தில் உள்ள உயர் சாதி, தாழ்ந்த சாதி, காலிஸ்தான், பாகிஸ்தான் ஊடுருவல், உருவான உருவாக்கப்பட்ட அரசியல் சதிகள் என்று கலந்து கட்டி பொளந்து கட்டியுள்ளார்.

நம் வீட்டில் வைத்திருக்க வேண்டிய புத்தகமிது.

குறிப்பாக மதச்சார்பின்மையை மகோத்தனமாக உச்சரிக்கும் காங்கு மக்கள் மந்திரம் போல வாசித்து தன்னைத் தானே பார்த்துத் துப்பிக் கொண்டால் தவறில்லை.

"என் நாட்டிலேயே நான் அகதியாக வாழ வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை" என்று ஒரு இடத்தில் வரும் வார்த்தைகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யும்.

காங்கு செய்த அரசியல் அலங்கோலத்தை அப்படியே நமக்கு படம் பிடித்துக் காட்டும்.

வாழ்த்துகள் ராம்கி.

#Amazon

19 comments:

  1. நல்ல பகிர்வு! ஆனால் நீங்கள் மேலோட்டமாக எழுப்பியிருக்கிற ஒரு கேள்விக்கு இந்தப்புத்தகம் விடை சொல்லியிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது, கிழக்கு வெளியீடு எதையும் வாங்குவதில்லை என்று முடிவெடுத்து நீண்டநாளாகிற படியால் இதை வாசித்துத் தெரிந்துகொள்கிற வாய்ப்பும் இல்லை.

    பஞ்சாபில் அகாலிதளத்தின் செல்வாக்கை உடைக்க, பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டது இந்திராதான்! அது எப்படி காலிஸ்தான் கோரிக்கையாக மாறி, Operation Blue Star என்று ராணுவநடவடிக்கையாகவும் மாறி, இந்திரா படுகொலைக்கும் காரணமாக இருந்தது என்பதையும் பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காண்டி எப்படி சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதை மிகவும் அலட்சியமாகக் கடந்தார் என்பதையும் இணையத்தில் தேடினால் ஏராளமான சோகக்கதைகள் கிடைக்கின்றன. இதில் ஜெயில் சிங்கையோ நரசிம்மராவையோ மட்டும் கைகாட்டிக் கேள்வி கேட்க முடியாது

    லட்சக்கணக்கான சீக்கியர்கள் பிரிட்டனிலும் கனடாவிலும் தஞ்சம் புகுந்ததையும் இன்றைய பஞ்சாபை போதை மருந்துக்கு அடிமையாக்க பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான கிலோ போதைமருந்தை எல்லைதாண்டி வீசுவதையும் (உட்தா பஞ்சாப் என்றொரு திரைப்படம் கூட வந்ததே, நினைவிருக்கிறதா? பார்த்திருக்கிறீர்களா?) ராகுல் காண்டி பொறுப்பற்ற விதத்தில் போதைமருந்து எடுத்துக் கொண்டதற்கான பரிசோதனைக்கு உட்படுத்தினால் பஞ்சாபில் பெரும்பாலானவர்கள் fail ஆவார்கள் என்று சொன்ன நிகழ்காலத்தையும் சேர்த்துப் பேசியிருந்தால் இந்தப்பதிவு முழுமையானதாக ஆகியிருக்கும் என்று எனக்குப் படுகிறது.

    புத்தகங்களை வாசிப்பது அறிமுகம் செய்வது மிகநல்லபணிதான்! வாசித்ததைத் தாண்டி, இன்றைய நிலை என்ன என்பதையும் யோசிக்க வேண்டும், இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஜெ. ராம்கி நரசிம்மராவ் எழுதிய புத்தகத்தை வாசித்த பின்பு இதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.பிகேஆரை வாசிக்கச் சொன்ன போது சில குறிப்பிட்ட தவறுகளை (இதில் பதிவாகியுள்ளது) சொன்னார். நீங்க சொன்னது அனைத்தும் வந்துள்ளது. ஆனால் அனைத்தும் மேலோட்டமாக உள்ளது. இந்தப் புத்தகத்தின் நோக்கம் டெல்லி முழுக்க நடத்த, நடத்தப்பட்ட கோரத்தண்டாவம் பற்றி முடிந்தவரைக்கும் ஆவணப்படுத்தியுள்ளார். உங்கள் வயதுக்கு நிச்சயம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ராஜீவ் குழந்தை முகத்திற்குப் பின்னால் இத்தனை கோர உருவமா? என்பது இதில் சில அத்தியாயங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. நரசிம்மராவ் மூலையில் சார்த்தி உட்காரவைக்கப்பட்டார் என்பதே உண்மை. உங்கள் ஆர்கே தவாண் பற்றி முடிந்தால் எழுதுங்க. பயபுள்ள பயங்கர டெரர் பார்ட்டீயாக இருப்பார் போல.

      Delete
    2. ஆர்கே தவான் ஒரு சாதாரண ஸ்டெனோ இங்கே முகவுக்கு சண்முகநாதன் மாதிரி. ஆனால் எஜமானியம்மா மனமறிந்து காரியங்களைச் செய்த விசுவாசி. PN ஹக்சர் மாதிரி முன்னாள் இடதுசாரிகளாய் இருந்து சிவில் சர்வீசிலும் இருந்த நிறையப்பேர் இந்திராவுக்கு விசுவாசமாக கோர தாண்டவத்தை நடத்தியவர்கள் இருந்தார்கள்.

      ராஜீவ் காண்டி வந்ததும் ஒரு புதிய நட்புவட்டம் மணிசங்கர் அய்யரைப்போல சேர்ந்துகொண்டு கொட்டம் அடித்தது. ராகுல் காண்டிக்கு சச்சின் பைலட் ஜோதிராதித்ய சிந்தியா என்று! இவர்களை பற்றி எழுதினால் இங்கே யாருக்கு அக்கறை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

      Delete
    3. நடந்த வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாதவர்கள் புதிய வரலாற்றை உருவாக்க முடியாது என்பது தான் பொது விதி. 1950 வாக்கில் நடந்தது இப்போது இணையத்தில் நோண்டி நொங்கெடுத்து கிழித்து தொங்கவிடுகின்றார்கள் அல்லவா? அதே போல இன்னும் பத்து வருடங்களில் தமிழக அரசியல் களம் வேறாரு பாதையில் பயணிக்கும். அப்போது நிழல் உலக அந்தரங்கம் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தே தான் தீரும்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //"என் நாட்டிலேயே நான் அகதியாக வாழ வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை" என்று ஒரு இடத்தில் வரும் வார்த்தைகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யும்.//

    அப்படி வாழ்ந்தவர்களால் மட்டுமே அந்த வலியை உணர முடியும். நானும் எத்தனையோ ஆண்டுகளாக என் சிங்கள நண்பர்களுக்கு இதை சொல்கிறேன், ஆனால் அவர்களால் இன்றுவரை புரிந்து கொள்ள முடிந்ததே இல்லை! காரணம் அவர்களுக்கு அந்த அனுபவம் இல்லை.

    முக்கிய குறிப்பு: பெரும்பாலும் சிங்கள மக்கள் இயல்பில் நல்ல மனம் படைத்தவர்கள். அவர்களை குரூரர்களாக மாற்றியதில் / மாற்றிக்கொண்டிருப்பதில் இங்கு வாழும் சிறுபான்மையினருக்கு முக்கிய பங்குண்டு. இதை பற்றி தேவை வரும்போது விரிவாக பேசலாம்.

    ReplyDelete
    Replies
    1. பிரபாகரன் பற்றித் தெரிந்து கொள்ள நான் வாசித்த 200 க்கும் மேற்பட்ட புத்தகங்களில் சில சமூகக் கட்டுரைகளும் அடங்கும். அதில் ஒரு புத்தகத்தில் 2000 ஆண்டு கால சிங்கள மக்களின் சமூக வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. பிரபாகரனுக்கு முன்னும் பின்னும், ஏன் முஸ்லீம் மக்கள் தமிழர்களுடன் ஒட்டாமல் வாழ்ந்தார்கள், வாழ விரும்பினார்கள் என்பது புரிந்து கொள்ளவே முடியவில்லை. இது தொடக்கம் முதலே கடற்கரையோர முஸ்லீம் மக்களின் வாழ்க்கையைப் பற்றி பலதும் படித்துள்ளேன். நன்றி.

      Delete
    2. எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை. தண்ணீருமே கூட எண்ணெயை ஒதுக்குகிறது! இது தி சா ராஜு என்கிற எழுத்தாளர் எழுதிய சிறுகதை ஒன்றின் முத்தாய்ப்பு.

      Delete
    3. திருப்பூரில் நான் உள்ளே வந்த போது சில ஆண்டுகளில் ஒருதொழில் அதிபர் (முஸ்லீம்) இறந்தார். ஊரே சவ ஊர்வலம் பின் சென்றது. நல்லவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை மிஞ்சும் அளவுக்கு அரசியல் செய்கின்றேன் என்ற பெயரில் எல்லா இடங்களிலும் சாதாரண வாழ்க்கை வாழும் முஸ்லீம் மக்கள் அதிக அளவு பாதிப்படைகின்றார்கள்.

      Delete
    4. ஜோதிஜி, இலங்கை முஸ்லிம்கள் பற்றிய உங்கள் கேள்விக்கு பதில் விரிவாக சொல்வதானால் ஒரு முழு பதிவு பத்தாது. சுருக்கமாக சொன்னால் "மதம்" தான் காரணம். அரசியல் ஆராய்ச்சியெல்லாம் இல்லாமல் இரு சமூகங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்த, தற்போது வாழும் என் சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொண்டதை மட்டும் இங்கே சொல்கிறேன்.
      ஒரு சமூகத்தின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள நாம் அவர்களுடன் நண்பர்களாக, உறவினர்களாக பழகினால் மட்டும் போதாது, அந்த சமூகம் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் நாம் சிறுபான்மையாக சில காலம் வாழ வேண்டும். அப்போதுதான் அவர்களை பற்றி எம்மால் சரியாக தெரிந்து கொள்ள முடியும். தமிழ், சிங்கள மக்களை போல முஸ்லிம்கள் உள்ளும் புறமும் ஒரே முகம் உள்ளவர்கள் கிடையாது. 99% பேர் வெளியில் காட்ட மேக்கப் போட்டு அழகான முகம் வைத்திருக்கிறார்கள், அவர்களின் சமூகத்துக்குள் இருந்து நம்மை அவர்கள் பார்க்கும் கோணமே வேறு. அவர்களை பொறுத்தவரை முஸ்லிம்கள் மட்டும்தான் உலகத்தில் உயர்வானவர்கள் என்று மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள், நம்மை காஃபிர் என்று இழிவாக மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிப்பார்கள். (இதை நீங்கள் தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊருக்கு நடுவில் வாழும் தமிழர்களிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். தம்பாள என்று இழிசொல்லால் விழிப்பதாக ஒரு தமிழ்நாட்டு நண்பன் சொன்னான், இதன் அர்த்தம் தெரியவில்லை)
      இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களுடன் மட்டுமில்லை வேற்று மதத்தவர் யாருடனும் சேர மாட்டார்கள். மதத்தை முன்னிறுத்தியே எல்லா நடவடிக்கையும் இருக்கும். அவர்களுக்கு அரபிகள் தான் சொந்தக்காரர் என்று நினைப்பு. அண்மையில் நடந்த அசம்பாவிதத்தில் எந்த அரபு நாடும் உதவவில்லை என்பதை அவர்களால் இன்னுமே நம்ப முடியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!

      இந்த மனப்போக்கினால் ஒரே மொழி பேசினாலும் தங்களை தனித்துவமான இனமாக காட்டி தமிழர்களிடமிருந்து எப்போதும் விலகியே இருந்தார்கள். சுதந்திரத்திற்கு பின் மலாய் மற்றும் பாரசீக பூர்வீகமுடைய மேட்டுக்குடி முஸ்லீம் அரசியல்வாதிகளை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டார்கள். இதை சிங்கள அரசியல்வாதிகள் கப்பென பிடித்துகொண்டார்கள். காரணம் இங்கே இருவரும் அரசியல் ரீதியில் சேர்ந்தால் சிறுபான்மையினர் 30%, இருவருமே லேசுப்பட்டவர்கள் கிடையாது. அவர்களால் சமாளிப்பது கடினம். அதனால் அந்த இடைவெளியை அப்படியே பராமரித்தார்கள் . எந்தநாட்டில் பிறந்தாலும் தமிழன் இளிச்சவாயன் அல்லது உணர்ச்சி வசப்படும் முரடன், வளைந்து கொடுத்து தந்திரமாக காரியம் சாதித்துக்கொள்ள தெரியாது. அதனால் தமிழன் சிங்களவனுடம் சண்டை போட, சிங்களவன் விட்டுக் கொடுக்காமல் மல்லுக்கட்ட, இரண்டு பக்கமும் பேரிழப்பு. ஆதாயம் யாருக்கு என்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன? இலங்கையில் இஸ்லாமிய ராச்சியம் உருவாக்குவது வரை முன்னேற்றம்!

      தமிழர் பக்கமிருந்து பார்த்தாலும் சரி, சிங்களவர் பக்கமிருந்து பார்த்தாலும் சரி, இலங்கை முஸ்லிம்கள் ஒரு சந்தர்ப்பவாத சமூகம். அரசியலில் எப்போதும் தமிழர் காலை பின்னுக்கு இழுக்கும் சக்தியாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள். முப்பது ஆண்டுகால கோர பாதிப்பினால் சிங்களவருக்கு தமிழர்கள் மேல் கொலைவெறியே இருந்தாலும், அவர்கள் தமிழர்களை மனதளவில் வெறுப்பதில்லை. ஆனால் முஸ்லிம்களை சிங்களவர் ஒருபோதும் விரும்புவதில்லை, எப்போதுமே முஸ்லிம்களிடம் ஒருவித வெறுப்பு உண்டு. அண்மைய குண்டுவெடிப்புக்கு பின் படித்தவர் பாமரர் என்ற வேறுபாடின்றி சிங்கள மக்களிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்வினை இதன் பிரதிபலிப்பு தான்.

      Delete
    5. என்ன தெய்வமே பிச்சு உதறிட்டீங்க? பல வார்த்தைகள் வரிகள் வலிகள் மிகுந்தவை, நிதர்சனமானவை. அற்புதம்.

      Delete
  4. சிக்கியர்கள் உள்மனதில் கனன்று கொண்டிருக்கும்நெருப்பு அப்போது மட்டும் பற்ற வைக்கப்பட்டதல்ல பொற்கோவில் வளாகத்தில் அகல்தக்த் என்னுமொரு ஆர்ட் காலரி உண்டுஅதில் இருக்கும் படங்கள் சீக்கியர்கள் அனுபவித்த கொடுமைகளை கோரமாகக்காட்டி இருப்பது காணலாம் அவர்களின் சரித்திரமே ரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்டதை க் காணலாம்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லீம் பேரரசுகளால் உருவான கொடுமைகளை நினைவு படுத்த அவ்வாறு வைத்திருந்தார்கள்.

      Delete
  5. இதுபற்றி இதுவரை பொதுவான சில விஷயங்கள் தெரியுமே தவிர, பெரிய அளவில் உள்விஷயங்கள் எதுவும் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் நிறைய உள்ளது. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

      Delete
  6. அருமை. எனக்கு புத்தகங்களாகப் படிக்கத் தான் விருப்பம். கிண்டில் படிப்பதில் ஆர்வமில்லை. என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம், எங்கு கிடைக்கும் என்ற பட்டியல் எனது மின்னஞ்சல் முகவரிக்கு கொடுக்க வேண்டுகிறேன். rathnavel.natarajan@gmail.com மிக்க் நன்றி

    ReplyDelete
  7. 1984 - தலைநகர் தில்லியில் பல கொடுமைகள், அநீதிகள் நடந்தேறிய வருடம். அப்போது பள்ளி மாணவன் என்பதால் அத்தனை தெரிந்திருக்கவில்லை. ஆனால் 1991-ஆம் ஆண்டு முதல் இங்கே இருப்பதால் பல விஷயங்களைக் கேட்டு அறிந்திருக்கிறேன். பல கொடுமைகள் வெளியே சொல்ல முடியாத வகை.

    கிண்டிலில் கிடைக்கிறது என்பதால் படிக்கலாம் - தேடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பிருந்தால் அதனைப் பற்றி முடிந்தவரைக்கும் எழுதுங்க நாகராஜ்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.