2019 தேர்தலும் மாற்றங்களும்.
1. ஊரில் வாழ்ந்த போது கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் பேச்சாளர்கள் இரவு 7 மணிக்குத் தான் பேச்சைத் தொடங்குவார்கள். முக்கிய பேச்சாளர்கள் நள்ளிரவில் பேசுவார்கள். கூட்டம் கலையாமல் இருக்கும். ஆனால் இதைவிட சிறப்பு என்னவென்றால் திமுக என்றால் கலைஞர் பேசிய பழைய பேச்சுக்களை மாலை 4 மணி முதல் ஒலிபெருக்கியில் ஒலிக்க விடுவார்கள். வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து இருப்பவர்கள், நடந்து கொண்டே சென்று கொண்டிருப்பவர்கள், கடைகளில் இருப்பவர்கள் அனைவர் காதிலும் அந்த கரகர ஒலி ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஆனால் இப்போது எந்த இடங்களிலும் பேச்சு என்பதே இல்லை.
2. எந்த கட்சியாக இருந்தாலும் யாராவது சிலராவது துண்டுச் சீட்டை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக வந்து கொண்டேயிருப்பார்கள். இப்போது எவரும் எந்த இடத்திற்கும் வருவதும் இல்லை. கம்யூனிஸ்ட் தொண்டர்களைக்கூட எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லை என்பதே ஆச்சரியமாக உள்ளது.
3. தொண்டர்கள் என்பவர்கள் அந்தந்த கட்சியில் இருக்கின்றார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ஊடகங்களில் ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடி தொண்டர்கள் என்கிறார்கள். காசு கொடுத்து அழைத்து வருகின்றார்கள். காசு கொடுத்துக் கூவச் சொல்கின்றார்கள்.
4. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் என்ற வர்க்கமே இல்லாமல் போய்விட்டது. அந்தந்த கட்சியில் உள்ள அந்தந்த வேட்பாளர்கள் தான் அவரவர் தொகுதியில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொண்டால் போதுமானது. அதுவே பெரிய விசயம் என்கிற அளவிற்கு மக்கள் நலப் பணியில் வேட்பாளர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
5. தேர்தல் கணிப்பு என்று தொடர்ந்து ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு விதமாகப் போட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் யாரிடம் போய் கேட்டு எடுத்திருப்பார்கள் என்பதே ரகசியமாக இருக்கிறது. எந்த இடத்திலும் பொது மக்களை எந்த ஊடகத்தைச் சார்ந்தவர்கள் சந்தித்து நான் இதுவரையிலும் பார்த்ததே இல்லை.
6. வாட்ஸ் அப் மூலம், தொலைக்காட்சி மூலம் பிரச்சாரம் நடக்கின்றது என்கிறார்கள். நோண்டிக் கொண்டிருப்பவர்கள் துண்டு சினிமாக்களைப் பார்க்கின்றார்கள். வயதானவர்கள் நெடுந்தொடர்களில் மூழ்கியிருக்கின்றார்கள்.
7. யூ டியுப் ல் எந்த கட்சி பிரச்சாரமாக இருந்தாலும், எவர் பேசியிருந்தாலும் குறிப்பிடத்தக்கப் பார்வையாளர்கள் பார்த்திருப்பது உண்மை தான். அவற்றைப் பொழுது போக்கிற்காகப் பார்க்கின்றார்களா? இல்லை தெரிந்து கொள்வதற்காகப் பார்க்கின்றார்களா? என்றே தெரியவில்லை. அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருடன் அரசியல் பேச விரும்பினால் அதெல்லாம் வேண்டாம் பாஸ். ச்சும்மா பார்த்துக் கிட்டு இருந்தேன் என்கிறார்.
8. இணையத்தில் முதலமைச்சராகச் சீமானும், எதிர்பார்ப்போடு காத்திருப்பவர்கள் டிடிவியை யும், ஆமா இவரும் களத்தில் இருக்கிறார் தானே? என்று கமலும் நம் தமிழக இளைஞர்களுக்குப் பொன்னான பொழுதைப் பொழுது போக்காக எதிர்கால தமிழக அரசியலை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.
9. வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டு போடக்கூடியவர்கள் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் அவர்களின் அன்றாட வேலைகளில் மட்டும் கவனமாக இருக்கின்றார்கள். தேர்தல் நாளை விடுமுறை தின நாளாக கருதிக் கொள்பவர்கள் இங்கே யார் யாருக்கோ இணையத்தில் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
10. தங்கள் சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவர்களுக்கும், புதிய சொத்துக்களை பெருக்கிக் கொள்ள விரும்புவர்களுக்கும் உண்டான மக்களாட்சி தத்துவத்தை புரிந்து உங்கள் பொன்னான வாக்கை ஏதோ ஒன்றுக்காக கட்டாயம் ஓட்டு போடுங்க எஜமான்களே.
*************
ஒருவர் மேல் எப்போது வெறுப்பு உருவாகும் என்று ஆழமாக யோசித்துப் பாருங்கள்.
ஒன்று பொறாமையினால் வரும். அல்லது ஆதங்கம் அதிகமாகும் போது வரும். காரணம் நம்மால் முடியவில்லை. நமக்கு வாய்ப்பில்லை. நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்கிற போது தான் உச்சகட்ட வெறுப்பு உருவாகும்.
இது உண்மையா? என்று உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் கடந்த 35 வருடங்களாக ஒரு தனிப்பட்ட நபரின் ஆணவத்தால், அகங்காரத்தால், மேட்டிமைத்தனத்தால் புறக்கணிப்பட்ட, புறக்கணிப்பட்டு கொண்டிருக்கும் தொகுதி என்றால் அது சிவகங்கை தொகுதி மட்டுமே.
பெயர் மட்டும் மாறியது. இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கம், தேவர் திருமகனார் மாவட்டம் என்று மாறி கடைசியில் இன்று சிவகங்கை மாவட்டம் என்று மாறியுள்ளது. அதுவும் சுயநல அரசியல் வியாதிகளால் தொகுதிகள் கொத்துக்கறியாகி இன்று சம்மந்தம் இல்லாத சட்டமன்றத் தொகுதிகள் உள்ளே வந்துள்ளது.
ப.சி குறித்து இந்த பேச்சைக் கேட்ட போது சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.
புத்திசாலி? திறமைசாலி? மொழி ஆளுமை? நிர்வாகப்புலி? தமிழகத்திலிருந்து மத்திய அரசில் உச்சத்தை அடைந்தவர். பிரதமருக்குரிய வாய்ப்புக்கு அருகே சென்றவர்.
எல்லாமே சரி தான்?
யாருக்கும் பிரயோஜனம். யாருக்கு லாபம்? என்ன விளைவுகள் உருவானது?
மகனுக்குத்தான் கிடைத்தது.
மற்ற கட்சிகளில் பல தலைமுறைகளாகப் பணம் என்பதனையே பார்க்காமல் அரசியலுக்கு வந்து கோடி கோடியாக அடித்தார்கள் வாழ்கின்றார்கள் என்றால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு என்று சொல்ல முடியும்.
ஆனால் தலைமுறை தலைமுறையாக அறம் என்பதனையே வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டு வாழ்ந்த குடும்ப பராம்பரியத்தைக் கொண்ட ஒரு குடும்பத்தில் உலகம் முழுக்க இத்தனை சொத்துக்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது.
தமிழ்நாட்டுக்குள் அலுவலகம் அமைக்காமல் பெங்களூர், சிங்கப்பூரில் வைத்துக் கொண்டு எங்கிருந்து எது தொடங்கியது? எதிலிருந்து எங்கே முடிந்தது என்று தெரியாமல் வளைத்து வளைத்து வாங்கிப் போட்ட சொத்துக்கள் அனைத்தும் இன்று உடம்பில் ஊளைச்சதை போலத் தொங்கி அசிங்கமாகத் தெரிகின்றது.
யாருக்கு அவமானம்?
தாத்தாக்கள் வழிகாட்டியாக இருந்து பல தர்மஸ்தாபனங்களை கட்டி வாழ்க்கை என்பது அடுத்தவர்களையும் வாழ வைப்பது என்று உணர வைத்துச் சென்றதை இவர் மறந்தது ஏன்? அதை ஏன் மகனுக்கு உணர்த்தாமல் போனார்? என்று யாராவது எந்த பத்திரிக்கையாளராவது இவர் முன்னால் கேட்காமல் இருப்பது ஏன்?
ஒரு காலத்தில் விஞ்ஞான ஊழல் என்பது கண்டு கொள்ள முடியாததாக இருந்தது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் உடனே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும் என்ற சூழலுக்கு வந்து நின்றுள்ளது
என்பதையாவது இவர் உணர்ந்து தான் உள்ளாரா?
நான் வென்றால் தனியார் முதலீட்டைக் கொண்டு வருவேன் என்று மகன் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுக்கின்றார். அப்படி என்றால் ஆட்சியில் அதிகாரத்திலிருந்த 35 வருடங்கள் என்பது எந்த கணக்கில் வரும்?
இவர் பேசிய இந்தப் பேச்சு என்பது சிவகங்கை தொகுதியில் மாலை நேரங்களில் வெவ்வேறு இடங்களில் பேசப்பட்ட பேச்சைச் சிலவற்றைத் தொகுத்துப் போட்டு உள்ளனர். காரணம் பகல் நேரத்தில் வெயில் டவுசரை நனைத்துவிடும்? செல்வச் சீமான்களின் ஊர்வலம் என்பது மாலை நேரத்தில்தான் தொடங்கும். இரவு நேரத்தில் தான் முடியும்.
ஆனால் மக்களுக்குத் தெரியும் எங்கே எப்படி முடிக்க வேண்டும் என்று?
இந்தப் பேச்சை எங்கே பேசினார்?
மத்திய அரசு? மாநில அரசு? என்றாலே முழுமையாகத் தெரியாத மக்களிடம் போய் மோடி குறித்துப் பேசுகின்றார்.
மோடி அவர் பாதையில் நாட்டை சீரழித்தவராகவே இருக்கட்டும். அந்த உண்மையை இவர் சிவகங்கைத் தொகுதி மக்களிடம் சொல்பவராக இருக்கட்டும். சிவகஙகை மக்களுக்கு மோடி நல்லவராக இருந்தால் என்ன? இல்லை கெட்டவராகத்தான் இருந்தால் என்ன ஆகப்போகின்றது.
ஆனால் இவர் கடந்த 35 வருடங்களில் தொகுதி வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளார்.
மக்கள் கேட்பார்களா?
அவர்களுக்குக் கேட்கவும் தெரியாது. சிவகங்கைத் தொகுதியில் பல சட்டமன்றத் தொகுதியில் சாலை வசதிகள் பீகார் போலவே இருந்தது. மாநில அரசியல்வாதிகள் தான் இன்று மாற்றி உள்ளனர்.
மற்ற தொகுதிகளை விடச் சாதி ரேகைகள் உள்ளும் புறமும் தொகுதி முழுக்க ஓடினாலும் அதன் பாதிப்பு எங்கேயும் தெரியாது. காரணம் மக்களின் சுபாவம் அப்படிப்பட்டது. அமைதிப் பூங்கா எனலாம். இருப்பதை வைத்து வாழலாம். இல்லாதபோது இறந்து விடலாம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டவர்கள். நமக்கு வர வேண்டியது நிச்சயம் வந்தே தீரும் என்று நம்புவார்கள். அடுத்தவனைக் கொள்ளையடித்து அதிக நாள் வாழ முடியாது என்று வாழ்க்கையைப் புரிந்தவர்கள்.
அறம் என்பதனை தன் உயிர்மூச்சாகக் கொண்டவர்கள் கட்சி வித்தியாசம் இல்லாமல், சாதிய பாகுபாடுகள் இன்றி இன்னமும் இந்தத் தொகுதியில் பெரும்பாலான மக்கள் இருப்பதால் இவர் இன்னமும் மற்ற தொகுதிகளில் நடக்கும் தரமான சம்பவங்கள் போல் நடக்காமல் அடிவாங்காமல் தப்பித்துக் கொண்டு இருக்கின்றார்.
மற்ற தொகுதிகளை விடச் சிவகங்கைத் தொகுதியில் உள்ள அத்தனை சட்டமன்றத் தொகுதிகளையும் இண்டு இடுக்கு என்று அலசியவன் என்ற முறையில் மக்களின் மனோபாவம், எண்ணங்கள், நோக்கங்கள், வெள்ளந்தி மனப்பான்மை, விடுப்பா ஆண்டவன் கூலியைக் கொடுத்துடுவான் என்ற நோக்கத்தில் அந்த மக்கள் அங்கே இன்னமும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து கொண்டிருப்பதால் இவரைத் திருப்பி எந்தக் கேள்வியையும் கேட்காமல் இருக்கின்றார்கள் என்பதாவது இவருக்குப் புரியுமா? என்று தெரியவில்லை.
இதை நீங்கள் கட்சிப் பார்வையோடு காழ்ப்புணர்வோடு அணுகினால் நான் நளினி சிதம்பரத்தை, மருமகள் நாட்டியத்தாரகையை பெஸ்ட் என்பேன்.
அவர்கள் வேட்பாளராக வந்திருக்கும்பட்சத்தில் அவர்களை ஆதரிக்கத் தயாராக இருப்பேன். காரணம் தொகுதியோடு தொடர்பே இல்லாதவர்கள் முதல் முறையாகக் களத்தில் வரும் போது மன்னித்து விடலாம்.
வாய்ப்பு தான் கொடுத்துப் பார்க்கலாம் என்று தான் யோசிப்பேன்.
***********
ஒரு முறைப்படுத்தப்பட்ட நிறுவனம் அல்லது ஏற்றுமதி நிறுவனத்துக்கென அடிப்படைக் கட்டமைப்பு உண்டு. கடைபிடித்தே ஆக வேண்டிய கொள்கையும் இருக்கும். இதற்கு மேலாக அரசாங்கத்தின் கொள்கைகளை அடிபிறழாமல் பின்பற்றியே ஆக வேண்டும். மீற முடியாது. மீறினாலும் மாட்டினால் பல மடங்கு நட்டம் என்பதோடு மீண்டு வந்து மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயமிருக்கும்.
தொழில் நடக்காமல் போனாலும் உருவாக்கிய கட்டமைப்புக்கென தினந்தோறும் செலவளித்தே ஆக வேண்டிய அவசியமும் உண்டு.
சிறு குறு நிறுவனங்களுக்கு மேலே சொன்ன பல விதங்களில் விதிவிலக்கு உண்டு.
விதிகள் அனைத்தையும் புறக்கணித்து விடவும் முடியும். இந்த நிலைமையில் தான் இங்கு உருவாக்கப்படும் அரசின் புதிய கொள்கைகள் சிறு குறு நிறுவனங்களை அதிகம் பாதிக்கின்றது? என்ற புலம்பல் அதிகமாகக் கேட்கின்றது.
ஆனால் உண்மை என்ன? சில நடைமுறை உதாரணங்கள்.
00
வீட்டுக்கருகே மூன்று மளிகைக்கடைகள் உள்ளது. மூவருமே தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். மூவர் கடைக்கும் 300 மீட்டர் இடைவெளி தான். ஆனால் வீட்டில் ஒருவரிடம் தான் எப்போதும் செல்வார். காரணம் கேட்ட போது "நீங்க ஒரு நாள் போய்ப் பாருங்கள்? உங்களுக்கே புரியும்" என்றார். மற்ற இருவர் கடையில் ஒருவர் கடைக்கு படிப்படியாக ஆட்கள் வருவது குறைந்து தினமும் 500 ரூபாய்க்கு வியாபாரம் நடப்பது பெரிய காரியமாகத் தெரிந்தது. மற்றொருவர் கடைக்கு நாள் முழுக்க ஆட்கள் வரத்தான் செய்கின்றார்கள். ஆனால் டிமாண்ட் இல்லை.
இப்போது வீட்டில் சொன்ன கடைக்கு வருவோம்.
காலை மிகச் சரியாக ஆறு மணிக்குக் கடையைத் திறக்கின்றார். திறக்கும் போதே மனைவி இரண்டு மகன்கள் என குழுவினராகக் காய்கறிகளைக் கடையை ஒட்டிச் செல்லும் சாலையில் பரப்பி வைக்கின்றார்கள். நாம் பத்து நிமிடம் தாமதமாகச்சென்றால் கூட ஒரு காயும் இருப்பதில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் பொறுமான காய்கறி வியாபாரம் முடிந்து விடுகின்றது. கூடவே தினந்தோறும் (ஒரு நாளைக்கு மட்டும் தேவைப்படும் அளவு) மளிகைச் சாமான்கள், மற்ற சாமான்கள் வாங்குபவர்கள் கூட்டத்தில் நீந்திக் கொண்டே வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
முதலில் நான் சென்ற போது எரிச்சலாக சற்று ஆச்சரியமாக இருந்தது. காரணம் எளிமையானது. அவர் விற்கும் கத்திரிக்காய் கிராமங்களில் கூட வாங்க முடியாது. முருங்கைக்காயும் அப்படியே தான். எங்கிருந்து வாங்குகின்றார்? என்ன விலையில் வாங்குகின்றார் என்றே தெரியவில்லை.
ஆனால் விலையும் பெரிய அளவில் இல்லை. வீட்டுக்கே கொண்டு (டிவிஎஸ் 50 வண்டியில்) வந்து கொடுப்பவர்கள், நடந்து வந்து விற்கும் பாட்டிமார்கள் என்று அனைவருடனும் ஒப்பிட்டுப் பார்த்த போது கடைக்காரர் சரியான விலையைத் தரமான பொருட்களுக்குக் கொடுப்பதால் அலைமோதுகின்றது. இரண்டு நாட்கள் ஒருவர் செல்லாவிட்டால் என்ன உடம்பு சரியில்லையா? என்று கேட்பது தொடங்கி மார்க்கெட்டிங் ல் உள்ள மொத்த சாதக அம்சங்களையும் கலந்து கட்டி பொளந்து கட்டிக் கொண்டு இருக்கின்றார்.
என் கணக்குப்படி காலை மூன்று மணி வியாபாரத்தில் 5000 ரூபாயாவது பார்த்து விடுவார் என்றே நினைக்கின்றேன். ஆனால் குடும்பமே கடுமையாக உழைக்கின்றது என்பது மட்டும் உண்மை. இத்துடன் தரமும் நிதானமும் வளர வைத்துக்கொண்டிருக்கின்றது.
000
நண்பர் பரிந்துரைத்தார் என்று அந்தக் கடையைத் தேடிச் சென்றோம். பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்துவிதமான ஆடைகளும் அங்கே கிடைக்கும் என்றார். தரமான நியாயமான விலை என்றார். மனைவி, மகளை அனுப்பி விட்டு உள்ளே பார்த்த போது அதுவொரு குடோன். காற்று வசதிகள் எதுவுமில்லை. அடிப்படை வசதிகள் இல்லை. நுழையும் இடத்தில் வங்கி அட்டைகள் ஏற்றுக்கொள்வதில்லை என்று பெரிய எழுத்தில் எழுதி போர்டு வைத்திருந்தார்கள்.
முறையான பில் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆடையாக பார்த்துக் கொண்டே வந்தேன். பெரும்பாலும் கழிவுத் துணிகளிலிருந்து கொஞ்சம் ஜிகுஜிகு வேலைகள் செய்து ஆடையாக மாற்றியிருந்தார்கள்.
விலையைக் கவனித்துக் கொண்டே வந்தேன்.
நைட்டி போன்றவற்றுக்கு 60 சதவிகித லாபம் வைத்திருந்தார்கள். உள்ளாடை மற்றும் பேண்டிஸ் சமாச்சாரங்கள் அனைத்தும் மோசமான சாயத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஒரு மாதத்திற்குள் உதிர்ந்து விடும் என்பதோடு அது பல பக்கவிளைவுகளையும் உருவாக்கி விடும். ஆனால் நாகரிக உடைகள் என்ற வைத்திருந்த உடைகளைப் பார்த்துத் தான் அதுவரையிலும் பொறுமையாக இருந்தவன் அவர்கள் போட்டு இருந்த விலையைப் பார்த்து (ஏறக்குறைய 300 சதவிகிதம்) அங்கிருந்த பெண்ணிடம் சப்தம் போடத் தொடங்கினேன்.
டாப்ஸ் பேண்ட் என்ற வகையிலிருந்த ஆடைகள் ( பொதுவாக இது போன்ற ஆடைகள் நல்ல பருத்தி இல்லாதபட்சத்தில் ஒரு தடவை துவைத்து எடுக்கும்போது பல்லிளித்து விடும்) விலைகளைப் பார்த்த போது கோபம் தலைக்கேறியது.
அந்த பெண்ணுக்கு (சம்பளம் மாதம் ரூபாய் 5000) துணிகளைப் பற்றி தெரியவில்லை.
ஏற்றுமதி நிறுவனங்கள் போல இவர்களுக்குத் தரம் குறித்த நிர்ப்பந்தங்கள் இல்லை. இவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனங்களில் கிடைக்கும் எவ்வித வசதிகளும், சம்பளமும் கிடைப்பதும் இல்லை என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற நிறுவனங்கள் குறிப்பாக உள்நாட்டு உற்பத்தித்துறையில் இருப்பவர்கள் ஒரு வருடத்தில் சம்பாரிக்கும் லாபம் என்பது நான்கு வருடங்கள் உழைத்தாலும் ஒரு ஏற்றுமதி நிறுவனம் சம்பாரிக்க முடியாத லாபமாகும். அடி முதல் நுனி வரை துண்டுச் சீட்டு மட்டுமே.
காரணம் லாபம் என்பதற்கும் கொள்ளை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இவர்கள் பயன்படுத்துவது கழிவுத்துணிகள் மட்டுமல்ல. மக்களையே கழிவாகத்தான் பார்க்கின்றார்கள்.
நாள்தோறும் முழுபக்க விளம்பரங்கள் கொடுத்து, மற்ற ஊடகங்களில் நொடிக்கு இவ்வளவு என்று விளம்பரக்கட்டணம் கொடுத்து, குளிர்சாதன வசதிகள், ஈஎஸ்ஐ, பிஎப் வசதிகளுடன் பணிபுரிபவர்களை பாதுகாத்து, வருடந்தோறும் போனஸ் கொடுத்து தங்களை சந்தையில் தக்க வைத்துக கொண்டே ஆக வேண்டும் என்பவர்கள் இரண்டு சூடிதார்கள் ரூபாய் ஆயிரத்திற்கு விற்பதற்கும், இதுபோன்ற எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் வாழ்பவர்கள் கழிவுத்துணிகளில் தயாரித்து ஒரு சுடிதார் ரூபாய் 1200 விற்கும் போது அதை வாங்கும் நீங்கள் வலதுசாரியா? இடது சாரியா?
தரமில்லாதவர்கள் அழிவு என்பது காலத்தின் நியதி. அதற்கு அரசாங்கம் மட்டும் காரணமல்ல.
******
தற்போது முன்னை விட பிரச்சாரம் குறைந்து விட்டது என்பது உண்மை தான். என்னுடைய அம்மா கூட இதைக் கூறினார்கள்.
ReplyDeleteகுஜராத்தில் வசிக்கும் என் உறவினர் தேர்தல் சமயத்தில் இங்கே பரபரப்பே இருக்காது. வழக்கம் போலவே இருக்கும் என்றார்.
எனக்கு, எப்படி இது போல இருக்கிறார்கள்.. நம்ம ஊரில் ஏன் அது போல இல்லை என்று நினைத்தது உண்டு.
நம்ம ஊரும் இதை நோக்கி செல்கிறது போல :-)