இந்தக் கவிதையை எழுதியவர் (தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றார்) இன்று காலையில் எழுதியிருக்க என் பார்வையில் சில மணி நேரத்திற்கு முன் தான் முகநூல் வாயிலாகத் தெரிந்தது. எழுதியவர் பெயர் திருமதி சுஜாதா. அவர் அப்பாவின் பெயர் சிதம்பரம்.
இந்தப் பெயர் சொன்னால் பலருக்கும் தெரியாது. சீனா என்றால் கொஞ்சம் பேருக்குத் தெரியும். வலைச்சரம் சீனா அய்யா என்றால் உலகமெங்கும் வாழும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் குறிப்பாக இணையத் தொடர்பில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் தெரிந்த பெயர் தான்.
சீனா அய்யா காலமான செய்தி சில மணி நேரத்திற்கு முன் தான் எனக்குத் தெரிய வந்தது.
மற்றொருமொரு சோகம்.
பல நினைவுகள். பலவித எண்ணங்கள் படிப்படியாக ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கின்றது.
++++++++++++++++++
நடிகர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா நடத்திய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் அழைத்தார் என்று அவரை சகட்டுமேனிக்கு கட்சி அடிப்படையில் பலரும் பொளந்து கட்டிக் கொண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் முகநூலில் ஒருவர் தன் தரப்பு நியாயமாகச் சிலவற்றை எழுதியிருந்தார்.
"பலரும் பத்திரிக்கை சுதந்திரத்தைப் பற்றி எழுதுகின்றார்கள்.
எழுதுகின்றவர்கள் எவரும் களத்தில் இல்லை என்பதும் அவர்களுக்கு இங்குள்ள எதார்த்தம் புரியவில்லை என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். காரணம் நான் களத்தில் இருப்பதால் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை தெளிவாகச் சொல்ல முடியும். ஒரு வாரம் முழுக்க என் பெயர் பத்திரிக்கையில் வர வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் செலவழித்தே ஆக வேண்டும். அதுவே தொலைக்காட்சி மற்றும் ஏனைய மீடியா உலகில் என் பெயர் வர வேண்டுமென்றால் பத்தாயிரம் செலவழித்தே ஆக வேண்டும். இது தான் உண்மை. காரணம் மீடியா என்றால் பணம். பணம் மட்டுமே மீடியா" என்று எழுதியிருந்தார்.
இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் சீனா அய்யா இறந்துவிட்டார் என்ற செய்தியை நான் வாசித்த போது இவர் நினைத்து இருந்தால், நிச்சயம் பல வழிகளில் சம்பாரித்து இருக்க முடியும்?
காரணம் இணைய உலகில் குறிப்பிட்ட காலகட்டத்தில் முக்கியமானவராக இருந்தார்.
குறிப்பிட்ட நபர்கள் நடத்தி வந்த வலைச்சரம் என்ற தளம் இவரிடம் வந்து சேர்ந்தது. தன்னுடைய வயது மூப்பு, உடல் நலப் பிரச்சனைகள் என்று ஆயிரம் இருந்தாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் ஆசிரியர் பொறுப்பு கொடுத்துக் கௌரவித்தார்.
முகநூல், ட்விட்டர் என்று தொடங்கி பத்தி எழுத்தாளராக வளர்ந்து எழுத்தாளர் ஆக வளர்ந்தவர்கள் பல பேர்கள். ஆனால் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் தன் தளம் யாராவது அறிமுகம் செய்துள்ளார்களா? என்று ஏங்கிப் பார்த்தவர்கள் எத்தனையோ பேர்கள்.? எந்த லாப நோக்கமும் இன்றி, எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், தன்னால் முடிந்த அளவுக்கு வலைச்சரத்தை மிகத் தெளிவாக அழகாக நடத்திய சீனா அய்யாவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
++++++++++++++
நாலைந்து வருடத்திற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பர் கூறிய வார்த்தையிது.
"இங்கு எல்லோரும் அவசரப்பட்டு செய்தித்தளம், மற்ற தளங்கள் என்று தொடங்கி விடுகின்றார்கள். ஆனால் ஐந்தாண்டுகளில் அந்த தளம் காணாமல் போய்விடும். காரணம் நிதி பற்றாக்குறை, கவனிக்க ஆள் இல்லாதது, விருப்பங்கள் மாறிப் போய்விடுவது, அந்த தளத்தைப் படிக்க ஆள் வராமல் தேங்கிப் போய்விட அப்படியே போட்டு விட்டு நகர்ந்து விடுகின்றார்கள். அவர்களுக்கும் மன உளைச்சல் தான் மிஞ்சும்" என்றார்.
கடந்த ஒன்பது வருட இணைய அனுபவத்தில் இதே போலப் பல தளங்களைப் பார்த்துள்ளேன். ஆனால் இன்றும் வலைச்சரம் உள்ளது. ஒரே பிரச்சனை. மக்களின் மனோபாவம் மாறிவிட்டது. தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வெவ்வேறு பாதைகள் உள்ளது.
அதனால் வலைச்சரத்தில் எழுத விருப்பமில்லாமல் போய்விட்டது.
சீனா அய்யாவிற்குப் பிறகு பிரகாஷ் இப்போது நடத்திக் கொண்டிருந்தாலும் பெரிய அளவுக்கு அதனைக் கொண்டு செலுத்த முடியாமைக்குக் காரணம் இப்போதைய சூழல் மாறிவிட்டது.
அதாவது வலைச்சரம் என்பது பல நூறு பேருக்கு ஏணிப்படியாக இருந்தது.
ஏணிப்படி மேலேறிப் பார்த்ததுண்டா? அது அப்படியேதான் இருக்கும்.
சீனா அய்யாவும் அப்படித்தான்.
அவர் இணைய உலகத்தில் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஏணிப்படியாக இருந்தவர். எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னுடைய ஓய்வு காலத்தைத் தமிழ் இணைய உலகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த காரணமாக இருந்தவர்களில் இவரும் முக்கியமான ஒருவராக இருந்துள்ளார் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியும்.
+++++++++++++=
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பார்கள். நிச்சயம் சீனா அய்யாவின் மனைவி என்பவர் அய்யாவைக் கடைசி வரைக்கும் குழந்தை போலவே பார்த்துக் கொண்டிருந்தவர்.
திருப்பூரில் (2013) டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு இருவரும் வந்து இருந்தனர்.
விழா மண்டபத்தில் இருந்தவரை அந்தப் பக்கம் இந்தப்பக்கம் என்று நகரவிடாமல், அப்படியே வெளியே நகர்ந்தால் அவரும் பின்னால் சென்று கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டேயிருந்தேன்.
நானும் அவர்கள் கலாச்சார வாழ்க்கையில் இருந்தவன் என்ற முறையில் நான், "என்னம்மா ஜோடி போட்டுத்தான் எங்கேயும் கிளம்புவீர்களோ? அய்யாவைத் தனியாக விடமாட்டுறீங்களே?" என்று உரிமையுடன் கிண்டல் செய்து சிரித்தேன்.
அப்போது தான் அவர் தனியாகச் செல்லும் போது உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றி என்னுடன் பகிர்ந்து கொண்டார். தன் வயதையும் மீறி சீனா அய்யா பலரையும் நேசித்துள்ளார்.
இதன் காரணமாகவே பல இடங்களுக்குச் சென்று விடுவார். அவ்வப்போது பிரச்சனைகளும் வரத் தொடங்கின. இதன் காரணமாகவே இவரின் ஆசையின் பொருட்டு அம்மாவும் உடன் செல்லத் துவங்கி உள்ளனர். மனமொத்த தம்பதியினராக வாழ்ந்துள்ளார்கள்.
++++++++
தனக்குத் தெரிந்த வகையில், தன்னால் முடிந்த வரையில், தனக்குப் பிடித்த துறையில் உழைத்துள்ளார். உண்மையாக வாழ்ந்துள்ளார்.
நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன். என் எழுத்துலக வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு மற்றும் ஆசிர்வாதங்களும் உண்டு.
அவர் ஆலமரம். வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான் இருக்கும். நாம் கிளைகள். இன்று வெளியே தெரிகின்றோம் என்பதற்குக் காரணம் அந்த வேர்கள் தான்.
நான் உயிருள்ள வரைக்கும் சீனா அய்யா மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்த எண்ணங்கள் என் மனதில் இருந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தில் பிறந்து இருந்தால் குடும்ப உறுப்பினரா? அவரும் தமிழ் இணைய குடும்பத்தில் நிரந்தர தலைவர் தான்.
அவரின் புகழும், நல்லெண்ணங்களும் அவர் தலைமுறையைக் காத்தருள வேண்டுகின்றேன்.
தேவியர் இல்லத்தின் கண்ணீர் அஞ்சலி.
(சீனா அய்யா டாலர் நகரம் புத்தக விழாவில் கலந்து கொண்ட போது நான் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களை விட இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. டீச்சர் திருமதி துளசி கோபால் நிகழ்வில் சென்னையில் எடுத்த படம் கம்பீரமாக இருந்த காரணத்தால் இங்கே பிரசுரம் செய்துள்ளேன்)
பொள்ளாச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து ஓரளவுக்கு தெரிந்து இருக்கும் பட்சத்தில் உங்களுக்குத் தெரிவிக்க இந்த இரண்டு செய்திகள்.
முதல் செய்தி மருத்துவர் ஷாலினி அவர்கள் சொன்னது.
மற்றொன்று ஒரு பெண் மற்ற பெண்களுக்கு எழுதியது.
+++++++++++++++++
I request all of you to STOP SHARING the Pollachi Horror video.
கலவியல் வக்கர நோய்க்காக சிகிச்சைக்கு வந்த ஒருவர் அழுதுக்கொண்டே சொன்னார்,”அதை பார்த்து எனக்கு ஆசை வருது, நானும் அப்படி பண்ணீடுவேனோனு பயமா இருக்கு”
கலவியல் வக்கரம் பெரும்பாலும் பார்த்து பழகி கற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் பார்ப்பதே ஆபத்து.
ஏற்கனவே அந்த தகவமைப்பு இருக்கும் ஆண்கள் இதையெல்லாம் பார்த்து இன்னும் சீரழிய வாய்ப்புள்ளது.
அதனால் இது ஒரு Public Health Precaution: STOP SHARING THE VIDEO😡
+++++++++++++++++
Shobana Narayanan
11 March at 21:49
எனக்கு பெண் தோழிகளை விட ஆண் நட்புக்களே அதிகம். எனது இந்தப் பதிவைப் பார்த்து அவர்கள் தான் முதலில் மகிழ்பவர்களாக இருப்பார்கள்.
தோழிகளே.. முகநூல் என்பது அனைத்து பக்கங்களும் கூராக்கப்பட்ட ஆயுதம். இதில் கீறல் விழாது கையாளுவதென்பதே ஒரு கலை. அது அவ்வளவு எளிதில் வசப்பட்டு விடாது. நான் உணர்ந்த சிலவற்றை உங்களுக்காக சொல்கிறேன். கேளுங்கள். இது பாதுகாப்பான முகநூல் பயன்பாட்டிற்கு உதவும்.
1. முதலில் உங்களது தகுதிகளை பரிபூரணமாக உணருங்கள். உங்கள் அழகு திறமை எல்லாவற்றைப்பற்றியும் உங்கள் மீதான உங்களின் பகுப்பாய்வு அவசியம். ஏனெனில் முதலில் கவிழ்வது புகழ்தலில் தான். அழகுங்க நீங்க, சாமி சிலைபோல உள்ளீர்கள் , உங்க வயசே தெரியல என்று வருவார்கள். உங்களைப்பற்றி உங்களுக்கு தெரியும் எனில் சிக்கலே இல்லை. எளிதாக இவர்களை நீக்கலாம்
2. அடுத்தது உங்களிடம் வந்து இன்பாக்சில் மெல்ல பேசத்துவங்கி அவர்கள் பர்சனலைச் சொன்னாலோ உங்களது பர்சனலைச் சொல்லும்படி செய்தாலோ கவனமாக இருங்கள். என் மனைவி மோசம் என இரக்கம் சம்பாரிக்க பார்ப்பார்கள். இல்லை எனில் பாவம்ங ்க நீங்க உங்க கணவருக்கு உங்க அருமை தெரில, உங்கப்பாக்கு உங்க அருமை தெரிலம்பாங்க. யாரிடமும் உங்கள் பலவீனங்களைப் பகிராதீர். கிடைப்பது தற்காலிக நிம்மதி தான். இதுவே பெரிய தலைவலியாய்ப் போகும்.
3. எக்காரணம் கொண்டும் அவசியமற்று எண் தராதீர்கள். தாட்சணியப் படாதீர்கள். எங்கள் வீட்டில் கண்டிப்பு என தெளிவாக சொல்லிவிடுங்கள்.
4. எதுவாகினும் பொது வெளியில் பேசுங்கள். எங்க பெரியப்பா இருக்காரு சித்தப்பா இருக்காரு என உள்டப்பாவில் நீங்கள் ஆரம்பிப்பது உங்களுக்கே யமனாகப் போகும். உங்கள் படத்தைக் கூட போடாமல் பூ வைத்த படம் குழந்தை படமெல்லாம் வைத்து முகநூலில் என்னைத்தை தேடுகிறீர்கள்? இங்கு ஒன்றும் இல்லை. பல வறட்டுக் கூச்சலும் மொக்கை மீமீ க்களும்தான். உங்கள் பொருளை சந்தகப்படுத்தவோ உங்களது எழுத்துக்களை வெளிப்படுத்துவோ
இது ஒரு களம். நிறைய கற்றுக் கொள்ள பயன்படுத்துங்கள். அதை உணருங்கள். இவையெல்லாம் ஏதுமில்லை சும்மா பொழுது போக்கு எனில் அதை போலி படத்துடன் செய்தால் உங்களுக்கு தான் தலைவலி.
5. குழுக்கள் பாதிக்கு மேல் ஆபத்தானவை. கவனத்துடன் செயல்படுங்கள். அங்குள்ளவர்கள் மற்றவர்களை விட எளிதாக உங்களை அணுக இயலும்.
6. ரத்தமும் சதையுமாக நேரில் கண்ட நபர்களை மட்டுமே உள்டப்பாவில் அனுமதியுங்கள். ஆபாச படங்கள் பேச்சுக்கள் வரும் போது கவனமாகுங்கள்.
7. தவறான நோக்குடன் வருபவர்கள் சுற்றிச்சுற்றி பாலியல் விசயங்களையே பேசுவார்கள். எப்படியும் அந்த டாபிக்கை தொடுவார்கள். அதில் எளிதில் கண்டு கொள்ளலாம்.
8. உங்களுக்கு கமண்டிடுபவர்கள் மற்றவர்களுக்கு எப்படி கமண்டிடுகிறார்கள் என்பதை கவனியுங்கள். உங்களுக்கு வெள்ளை சரி என்றும் மற்றொரு பெண்ணிற்கு கருப்பு சரி யென்றும் வேறொரு ஆணுக்கு பொம்பிளைங்க கேனச்சிங்க என்றும் கமண்டிட்டு இருப்பவர்கள் போலிகள். புரிந்து கொள்ளுங்கள். நேர்மையாளர்கள் எங்கும் ஒரே நிலைப்பாட்டுடன் இருப்பார்கள்.
9. இவர்கள் அனைவரிடமும் திருப்பி திருப்பி சில பேட்டர்ன்களே ரிபீட் ஆகும். அதை டீ கோட் செய்யுங்கள். போட்டோவிற்கு மட்டும் கமண்டிடுவது, உங்களிடம் பேசிய அதே டயலாக்கை மற்ற பெண்களிடம் பேசுவது போன்று..
10. இவர்களின் மியூட்சுவல் நட்புகளை கவனியுங்கள். அவர்களுள் நமக்கு மதிப்பானவர்கள் இருப்பின் சிறிது நலம். துணிந்து ஏற்கலாம்.
11. சந்தேகம் தோன்றினால் மியுட்சுவல்லில் உள்ளவர்களிடம் கேட்டு கொள்ளலாம்.
12. எல்லாவற்றிற்கும் மேலாக தயவு தாட்சிணியமின்றி நட்பை கத்திரியுங்கள். நட்பை தொடர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை
13. மீறி நமது வார்த்தைகளோ செய்கைகளோ அவர்கள் மிரட்ட இடம் தருமாயின் போங்கடா என்று தைரியமாக சொல்லுங்கள். ஒருபோதும் பிளாக் மெயிலுக்கு அடிபணியாதீர்கள். அது தீரா சுழல்.
14. துணிச்சலாக ஸ்கிரீன்சாட் போடுங்கள் அது மியுச்சுவலில் உள்ள மற்ற பெண்களுக்கும் உதவும். மற்ற கயவர்களுக்கும் ஒரு பய
15. ஒவ்வொரு பெண்ணையும் எப்படி கவிழ்க்க வேண்டுமென தெளிவான திட்டங்கள் இவர்களிடம் உண்டு. ஒருபோதும் இதை மறவாதீர்கள். நமக்கு நிகழாது என அலட்சியம் வேண்டாம்.
16. குடும்ப உறுப்பினர்களிடம் ஆயிரம் சிக்கல் இருப்பினும் வேறு வழியில்லை. அவர்களை நம் கல்வியால் திறமையால் பணியால் மட்டுமே வெல்ல இயலும். இதுபோன்ற அரைவேக்காட்டு நபர்களிடம் சிக்கினால் மிக மோசமாகத் தான் பாதிக்கப்படுவோம்
17. கடைசி விசயம். கெத்தாக, தன்னம்பக்கையுடன் மிளிருங்கள். உங்கள் ஆளுமை அவர்களைத் தள்ளி நிறுத்தும். அதை விடுத்து கண்டபடி பதிவுகள் போட்டு உங்கள் பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள். சோகங்களை இங்கு பகிராதீர்கள். அதன்மூலம் ஆகப்போவது ஏதுமில்லை.
இது பிற்போக்கு பதிவல்ல. ஆண்களின் திட்டங்களை புரிந்து விலக ஓர் வழிகாட்டல் அவ்வளவே. அறிவுரை இல்லை.
எது நடந்தாலும் தைரியமாக கடந்து செல்லுங்கள். சரி தவறென்று ஒன்றுமில்லை. ஊர் வாழ்ந்தாலும் பேசும் வீழ்ந்தாலும் பேசும். வார்த்தைகளை கடந்து செல்லுங்கள்.
(ஜெயா அப்பாவி, சசிகலாதான் குற்றவாளி என தவறாக நினைக்கும் எல்லோரும் கண்டிப்பாக முழுதும் படிக்கவும்)
வடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில் இருந்தாலும், நீதியின் சுத்தியல் உச்சந்தலையில் நச்சென இறங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்துள்ளது. ‘மை லாட்’ என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்பதை, பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் மெய்ப்பித்துள்ளார்கள்.
‘வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால், கவலை தரக்கூடிய தகவல்களை இங்கு மேடையேற்ற வேண்டியிருக்கிறது’ என்ற தீர்ப்பின் சொற்களுக்குள், தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுகால அசிங்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு, நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் (2001, 2011, 2016) மக்களால் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார் ஜெயலலிதா. இன்னோர் இரண்டு வாரங்கள் ஆகியிருந்தால் சசிகலா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியிருக்கக்கூடும். எட்டரைக் கோடித் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இரண்டு பேருமே, பக்கா ஊழல் பேர்வழிகள் என்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் உறுதிப்படுத்தியிருக்கிறது.
`எந்தவிதமான குற்றஉணர்ச்சியும் இல்லாமல், மிகத் திறமையாகத் திட்டமிட்டு சொத்துகளை இவர்கள் வாங்கிக் குவித்துள்ளார்கள். இவற்றையெல்லாம் அடுத்தடுத்து நடந்த விசாரணையில் மறைக்க முயற்சித்துள்ளார்கள். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக இப்படிச் செயல்பட்டுள்ளார்கள். எவ்வளவு பெரிய தந்திரத்துடன் இவற்றையெல்லாம் மூடி மறைத்துள்ளார்கள் என்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு மேல் எங்களால் எந்த வார்த்தையையும் பயன்படுத்தத் தெரியவில்லை.
பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன், அச்சம் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்துள்ளார்கள். பேராசை மட்டுமே இவர்களிடம் இருந்துள்ளது. ஆக்டோபஸ் மாதிரி அனைத்து மட்டங்களிலும் இவர்களது ஊழல் கரம் பரவியிருக்கிறது’ என்பது தீர்ப்பில் உள்ள வரிகள்.
இரண்டு கோடி ரூபாயாக இருந்த சொத்து ஐந்தே ஆண்டுகளில் (1991-96) 66 கோடி ரூபாயாக எப்படி மாறியது என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா எழுதியதை, வரிக்கு வரி உச்ச நீதிமன்றம் வழிமொழிந்துள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிறார். முதலமைச்சரின் அதிகாரபூர்வ வீட்டிலேயே சசிகலா இருக்கிறார்; இளவரசி இருக்கிறார்; சுதாகரன் இருக்கிறார்; பட்டவர்த்தனமாகப் பணம் வாங்குகிறார்கள். சென்னையில் சாந்தோம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, அண்ணாசாலை, கிண்டி, கிழக்குக் கடற்கரை சாலை, நீலாங்கரை, முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, அபிராமபுரம் என எல்லா பகுதிகளிலும் வீடுகள், மனைகள் வாங்குகிறார்கள். சென்னைக்கு வெளியே பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர், செய்யூர் என வளைக்கிறார்கள். தலைநகர் தாண்டி தஞ்சாவூர், திருச்சி, ஊட்டி, திருநெல்வேலி, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் ஏக்கர் ஏக்கராக வாங்கிப் போடுகிறார்கள்.
30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். இவை அனைத்துமே போயஸ் கார்டன் வீட்டு முகவரியில். இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் தினம் தினம் லட்சம் லட்சமாகப் பணம் போடப்படுகிறது. இந்த நிறுவனத்தில் வெளியாட்கள் எவருமே முதலீடு செய்யவில்லை. இந்த நிறுவனங்கள் எந்தப் பொருளையும் உற்பத்திசெய்யவில்லை. எந்தப் பொருளையும் வாங்கவும் இல்லை... விற்கவும் இல்லை. பணம் மட்டும் போடப்படும்... எடுக்கப்படும். இந்த நிறுவனத்தின் பேரில் கடன் வாங்கப்படும்... வாங்கிய கடன் சில மாதங்களில் அடைக்கப்படும்.
இதன் உச்சம், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனின் திருமணம். எடுக்கப்பட்ட ரசீதுகளின் அடிப்படையில் சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் (22 ஆண்டுகளுக்கு முன்னர்) நடத்தப்பட்ட திருமணம் அது. ஆண்டு வருமானம் 44,000 ரூபாய் என்று சொல்லி வீட்டுக்கடன் வாங்கிய சுதாகரன், பல கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்தார். ‘என் திருமணத்துக்கு யார் செலவு செய்தார்கள் என்று எனக்கே தெரியாது’ என்றார். மயிலாப்பூர் கனரா வங்கியில் 105 ரூபாய் கொடுத்து கணக்கு தொடங்கியவரிடம் அடுத்தடுத்து ‘யார் யாரோ’ லட்சக்கணக்கில் பணம் போட்டார்கள். இளவரசியும் தனது ஆண்டு வருமானம் 40,000 ரூபாய் என்றார். அவர் வங்கிக் கணக்கிலும் ‘யார் யாரோ’ பணம் போட்டார்கள்.
1991-ம் ஆண்டுக்கு முன்னர் ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் 12 வங்கிக் கணக்குகள் இருந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவை 52 வங்கிக் கணக்குகளாக விஸ்வரூபம் எடுத்தன. சசிகலாவுக்கு இருந்த வருமானம், கணவர் நடராசனின் ஊதியம். ஸ்கூட்டர் வாங்க 3,000 ரூபாய் கடன் வாங்கும் நிலைமை. அரசுக் கடன் மூலமாக வீடு வாங்கும் நிலைமை. அவர்தான் `திருத்துறைப்பூண்டியில் 250 ஏக்கர் இருந்தது’ என்று நீதிமன்றத்தில் சொன்னார்.
ஜெயலலிதா சொன்ன பொய்கள் பலவிதம். டான்சி நிலத்துக்குக் கையெழுத்து போட்டுவிட்டு எனது கையெழுத்தே இல்லை என்றவர் அவர். ‘மைசூர் மகாராஜா குடும்பம்' என்று சொல்லிக்கொண்ட இவர், ‘நான் அரசியலுக்கு வந்து புதிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை. சுதாகரன் திருமணத்துக்கு நான் எதுவுமே செலவு செய்யவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் வாங்கிய சொத்துகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு எங்கேயோ இருந்து கொண்டுவந்த நகைகளை, போயஸ் கார்டனில் வைத்து படம் பிடித்துக்கொண்டார்’ என்று நீதிமன்றத்தில் நீட்டி முழக்கினார். 23 கிலோ தங்கம், 125 கிராம் வைரம், 1,116 கிலோ வெள்ளி வாங்கும் அளவுக்கு நல்லம நாயுடு என்ன விஜய் மல்லையாவா?
2,000 ஏக்கர் நிலம், 30 பங்களாக்கள், 33 நிறுவனங்கள், தங்கம் - வைரம் எனக் கூட்டிக் கழித்து 66 கோடி ரூபாய்க்குக் கணக்கு கேட்டபோது இவர்கள் நான்கு பேருமே சொன்ன பதில், ‘கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கை இது’ என்றது மட்டும்தான். ‘தங்கள் மீது எந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளனவோ, அதன் அடிப்படையைத் தகர்க்கும் ஒரே ஓர் ஆதாரத்தைக்கூட ஜெயலலிதா தரப்பு சொல்லாமல், மேம்போக்கான அரசியல் விளக்கங்களையே நீதிமன்றத்தில் சொன்னது’ என்றார்கள் நீதிபதிகள். `தாங்கள் வைத்திருந்த பணத்துக்கு, சொத்துக்கு நியாயமான கணக்கைக் கடைசி வரை இவர்களால் காட்ட முடியவில்லை, ஓர் ஆதாரத்தைக்கூட தரவில்லை' என்றும் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.
1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றி என்பது, தமிழக வரலாற்றில் முக்கியமானது. எதிர்க்கட்சியான தி.மு.க இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வென்ற தேர்தல் அது. ஜெயலலிதாவுக்கு முதல் அரசியல் வெற்றியைக் கொடுத்த தேர்தல். சசிகலா குடும்பத்தின் முதல் அறுவடைக் காலமும் அதுதான். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அரசாங்க கஜானாவே போயஸ் கார்டனுக்குப் பாத்தியதைப்பட்டது என்று நினைத்தார்.
முந்தைய 15 ஆண்டுகள் நிரந்தர வருமானம் இல்லாமல் எம்.ஜி.ஆருக்கும், ராமச்சந்திர உடையாருக்கும், இன்னும் சிலருக்கும் கடிதம் எழுதி பணம் கேட்கும் நிலைமையிலிருந்த ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் பதவி, பணப் பாதையாகத் தெரிந்தது. சசிகலா குடும்பம் வறண்ட நிலம். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் இழுத்துக்கொள்ளும். அதனால்தான் ஊழலையும் முறைகேட்டையும் துணிச்சலாக, பட்டவர்த்தனமாக, கூச்சமே இல்லாமல் இன்னும் சொன்னால் பெருமையாகவே செய்தார்கள். வளர்ப்பு மகன் திருமணம் என்பது, திருட்டை, திருவிழா ஆக்கிய நிகழ்வு. உலக வழக்குகளை எல்லாம் கரைத்துக்குடித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷும் அமிதவ ராயும், ‘எங்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது’ என்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு இது பேரழிவு. நான்கு பேர் சேர்ந்து நாட்டை நாசமாக்கிச் சூறையாடியிருக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்பில் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடையவேண்டிய ஒரு தகவல் இருக்கிறது. ‘போயஸ் கார்டன் வீட்டில் வாழ்வதற்காக இவர்கள் ஒன்று சேரவில்லை. பணம் சம்பாதிக்கவே ஒரே வீட்டில் கூடினார்கள்’ என்பதுதான் அது. `சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேரும் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது' என்றோ, `அவர்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்றோ, ஜெயலலிதா சொன்னதை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ‘இவர்கள் கிரிமினல் சதிசெய்து சம்பாதிக்கவே கூடினார்கள்; நிறுவனங்கள் தொடங்கினார்கள். எனவே, குற்றச் சதியில் நான்கு பேருக்கும் சம பங்கு உண்டு’ என்றது நீதிமன்றம்.
‘மனிதர்களை நேசிக்கும் கொடைப் பண்பு காரணமாக சசிகலாவுக்கு போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. குற்ற நடவடிக்கையில் இருந்து, தான் தப்பித்துக்கொள்ளவே சசிகலாவைத் தனது வீட்டில் ஜெயலலிதா வைத்துக்கொண்டார். இவர்கள் கூட்டுச் சதியால்தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. இவர்கள் செய்த ஒரே ஒரு வேலை, சொத்துகளை வாங்கிக் குவிப்பதே’ என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினார்கள். அதாவது, ஜெயலலிதாவை வைத்துச் சம்பாதிக்க சசிகலா அவரோடு சேர்ந்தார், தான் சம்பாதிப்பதற்கு பினாமியாக சசிகலாவை ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார் - இதுதான் நீதிபதிகள் சொல்லவருவது.
சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா; ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா. ஒருவர் கல்லறைக்குள் போய்விட்டார். இன்னொருவர் சிறையறைக்குள் போய்விட்டார். சசிகலா குடும்பம் அடுத்த பாதாள அறையை உருவாக்கிவிட்டது. எம்.ஜி.ஆர் பாடலைக் கேட்டு, இரட்டை இலையைப் பச்சைக்குத்தி வாழும் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் தனியறையில் ரகசியமாக அழுகிறார்கள். இந்தப் புதைகுழியில் இருந்து அ.தி.மு.க யானையை மீட்டெடுப்பது சிரமம். அதுவும் எடப்பாடி போன்றவர்களால் சாத்தியமில்லை. அவ்வளவு கனமானது இந்தத் தீர்ப்பு.
டெல்லி உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது அறை எண்ணில் உட்கார்ந்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் இருவரும் எட்டே நிமிடத்தில் இறுதித் தீர்ப்பை வாசித்து முடித்தார்கள். 27 ஆண்டுகால அநியாயத்தைச் சொல்ல 27 நிமிடங்கள்கூட தேவைப்படவில்லை. ‘இதுபோன்ற சதிகாரர்களைத் தண்டிக்காவிட்டால் நீதி, நேர்மைக்கு அஞ்சி வாழ்பவர்கள் இந்தியாவில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்’ என்ற ஒற்றை வரியிலேயே அவர்களது தீர்ப்பின் 570 பக்கங்களும் அடங்கியிருக்கின்றன. ‘இந்தத் தீர்ப்பின் ஆவணங்கள் பருமனாக உள்ளன. இந்தப் பாரத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம்’ என்று நீதிபதிகள் சொன்னார்கள். அரசியலைத் தூய்மைப்படுத்தும் பாரம், அந்த நீதிபதிகள் கரங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அதை அவர்கள் கம்பீரமாகச் செய்தார்கள்.
‘திரையரங்கில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தவர் அமிதவ ராய். நீதியரசர்களே... உங்களது தீர்ப்புக்காக தேசம் எப்போதும் எழுந்து நிற்கும்.!!!
நண்பர் சீனிவாசன் கிண்டில் கருவியை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதனை வாங்க வேண்டும் என்று நீண்ட நாளாக மனதிலிருந்த ஆசையும் கூட. ஆர்வத்துடன் அதனைப் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால் சில நாட்களில் விருப்பம் மாறிவிட்டது. ஏறக்குறைய எரிச்சலாகி விட்டது.
அதுவொரு எந்திரமாகத் தெரிந்தது. அதன் மொழிகள் எனக்குப் புரிபடவே இல்லை. காரணம் எனக்குப் இயல்பாகவே பொறுமையில்லை. இன்னமும் என் வேகம் குறைந்தபாடில்லை என்பதனை புரிந்து கொண்டேன்.
ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் எங்கள் ஊர் நூலகத்தில் சென்று என் வாசிப்பைத் தொடங்கினேன். 35 ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கும் என் இயல்பான வாசிப்பு முறைக்கு எதிராகவே கிண்டில் அமைப்பு இருந்தது. எண்ணமும் நோக்கமும் இதில் வேறு விதமாக இருந்தது. எழுதுவதும், பேசுவதும், வாசிப்பதும் என்று எல்லாமே வேகம் வேகம் என்று பழகிய எனக்கு கிண்டில் உணர்த்திய பொறுமை பிடிக்கவில்லை.. அதனைக் கையாள்வது கடினமாகவே இருந்தது.
என் மகளிடம் கொடுத்துப் பார்த்தேன். அவரும் சில நாட்கள் பயன்படுத்திப் பார்த்து விட்டு அதை அப்படியே வைத்து விட்டார். அடுத்தடுத்த மகளிடம் கொடுத்த போதும் அதையே அவர்களும் செய்துவிடக் கணினி மேஜையில் புத்தம் புதிதாக உரை பிரிக்கப்படாமல் காட்சிப் பொருளானது.
ஒவ்வொரு முறையும் இதனைப் பார்க்கும் போது என் இயல்பான பழக்கவழக்கங்கள் குறித்து எனக்கே ஒருவித சந்தேகம் வந்தது. கடந்த ஒரு வருடமாக பலவற்றை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து ஒவ்வொன்றாக மாற்றி வருகின்றோம். மாற்றங்களைப் பற்றிப் பேசுகின்றோம். எழுதுகின்றோம். ஆனால் நம்மால் மாற முடியவில்லையே? என்ற எண்ணம் உள்ளே கழிவிரக்கமாகச் சுழன்று கொண்டேயிருந்தது.
பலரும் முகநூலில் இன்றைய கிண்டில் பதிப்பில் இந்தப் புத்தகம் இலவசம். தரவிறக்கிக் கொள்ளவும் என்று தகவல் கொடுத்து இருப்பார்கள். நான் நகர்ந்து சென்று விடுவதுண்டு. பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்கள் இன்று கிண்டிலில் வருகின்றது என்பதனையும், பிறகு அதன் விற்பனையைப் பற்றியும் எழுதியதையும் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்த போதும் என் எண்ணத்தில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. கிண்டில் என்பது நமக்கு உகந்தது அல்ல என்ற எண்ணம் மட்டும் என் ஆழ் மனதில் எங்கேயோ ஓரமாகப் பதிந்துள்ளது என்பதனையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
வீடு மாறும் போதும், வீட்டைச் சுத்தம் செய்யும் போது உள்ளே அடைந்து கிடக்கும் ஏராளமான புத்தகங்களைப் பார்த்து மனம் வலிக்கும். வெளியே எறியவும் முடியாமல், அதனைப் பாதுகாக்கவும் முடியாமல் உண்டாகும் அவஸ்தை என்பது புத்தகப் பிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். இதன் காரணமாகவே பெரிய விலை உள்ள புத்தகங்கள் வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டே வந்தேன்.
ஆனால் மீண்டும் கிண்டில் குறித்த எண்ணம் மனதின் ஓரத்திலிருந்து கொண்டேயிருந்தது.
சென்ற மாதத்தில் ஒரு நாள் மீண்டும் கிண்டில் ஆர்வம் வரப் பொறுமையாக உள்ளே நுழைந்து ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த போது மெதுவாகப் புரிபடத் தொடங்கியது. மகளிடம் கொடுத்து அவரிடமும் அது குறித்துப் பேசிய போது அதன் வசதிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அமேசான் வியாபார ரீதியாகப் புத்தக விற்பனையை அணுகினாலும் வாசகனுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை, வாய்ப்புகள் போன்றவற்றை உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஒரு புத்தகத்தை வாசிக்க உடனே வாங்க வேண்டும் என்ற தேவையில்லை. சில பக்கங்கள் படித்துப் பார்க்க (இலவசமாக) வாய்ப்பு கொடுக்கின்றார்கள். இதே போல மாத சந்தா தொடங்கிப் பல கட்டங்களாக இதன் வியாபார எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றது. இதற்கு மேலாக ஒவ்வொரு சமயத்திலும் முக்கியமான புத்தகங்களைக் குறிப்பிட்ட தினங்களுக்கு இலவசமாகக் கொடுக்கின்றார்கள்.
மகள் இதனைப் பார்த்துப் பல புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொண்டேயிருந்தார். அப்படித்தான் உப்புவேலி என்ற புத்தகத்தைத் தரவிறக்கி வைத்திருந்தேன். நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த புத்தகமிது. ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காலை தொடங்கிய வாசிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஓரே மூச்சில் கிண்டில் கருவியில் வாசித்து முடித்தேன். புத்தகம் சொல்லும் கருத்துக்களும், ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் நடந்த அக்கிர செயல்பாடுகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது என்பதனைவிட கிண்டில் கருவியின் மகத்தான வசதிகளை அப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
என்னுள் இந்த மாற்றங்கள் உருவாக ஏறக்குறைய நாலைந்து மாதங்கள் ஆனது. ஒரு அலமாரி முழுக்க அடுக்க வேண்டிய புத்தகங்களை ஒரு சிறிய கருவிக்குள் அடக்க முடியும் என்பதும், அதனை நாம் செல்லும் இடத்திற்கெல்லாம் கொண்டு செல்ல முடிகின்றது என்பதும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
தேடுங்கள். கண்டடைவீர்கள்.
+++++++++++++++++
டாலர் நகரம் என் முதல் குழந்தை. தமிழக அளவில் அது செல்ல வேண்டியவர்களுக்குச் சென்று விட்டது. எல்லாவகையிலும் திருப்தியைத் தந்தது. ஆனால் வலைதளத்தின் வீச்சு அதற்கு அமையவில்லை. உலகம் முழுக்க சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாலர் நகரம் இரண்டு நோக்கத்திற்காக எழுதப்பட்டது. திருப்பூருக்குள் வேலை தேடி வருபவர்களுக்கும், தொழில் முனைவோர் முயற்சியில் இருப்பவர்களுக்கும் என அதில் இரண்டு பார்வை உண்டு.
இது தவிர வெளிநாட்டிலிருந்து திருப்பூரைப் பார்ப்பவர்களுக்குண்டான விபரங்களும் அதில் உண்டு. எனவே அதனை ஆங்கிலத்தில் கொண்டு வாருங்கள் என்று என் நண்பர் ஒவ்வொரு முறையும் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆசைகள் என்பது இப்படித்தான். யாரோ ஒருவர் அள்ளித் தெளித்துவிட்டு சென்று விடுவார்கள். அது மனதில் தீயாய் எறிந்து கொண்டேயிருக்கும்.
டாலர் நகரம் புத்தகத்தை ஆங்கிலத்தில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அத்தனை எளிதாகத் தெரியவில்லை. இங்கே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது என்பது பெரிய வியாபாரமாக உள்ளது. வெற்றிகரமாகவும் நடந்து கொண்டு இருக்கின்றது. சிறிய, பெரிய எழுத்தாளர்கள் இதற்கெனவே பலரும் உள்ளனர். ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பது என்பது கடலைத் தாண்டுவதற்கு ஒப்பாகவே இங்கு உள்ளது. அதற்கென சந்தை இங்கே இன்னமும் உருவாகவில்லை.
ஆனால் திரைப்பட உலகம் மிகப் பெரிய மாறுதலைக் குறுகிய காலத்தில் கண்டுள்ளது. தமிழ்த் திரைப்பட உலகத்திற்கு மற்ற மாநில மொழிப் படங்களைவிட இந்திய அளவில், உலக அளவில் மிகப் பெரிய வியாபார வரவேற்பு கடந்த சில வருடங்களாக உருவாகி உள்ளது. ஏற்கனவே இருந்தது தான். ஆனால் இப்போது இதன் வியாபார எல்லைகள் என்பது பல மடங்கு வீஸ்தீரமானமாகியுள்ளது. இணைய வசதிகள் என்பது தமிழ்த் திரைப்பட உலகத்திற்கு அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக மாறியுள்ளது.
ஆனால் தமிழ் எழுத்துலகம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஓப்பிடளவில் இப்போது தான் பரவலான கவனிப்பின் தொடக்கப் புள்ளியில் மேலேறத் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட சிலரின் மற்றும் சில அமைப்புகளின் சுயலாபத்துக்காக தமிழ் எழுத்துலகம் இன்னமும் செல்ல வேண்டிய பாதைக்கு வந்து சேரவில்லை என்பது நிதர்சனமாகும்.
இன்றைய சூழலில் வலைதளங்களின் வளர்ச்சியின் மூலம் வெளியாகும் புத்தகங்கள் உலகம் முழுக்க தமிழர்களின் பார்வைக்கும் சென்று சேர்ந்து கொண்டு இருக்கின்றது. ஆனாலும் எழுத்தாளர்களின் பாடு இன்னமும் திக்குத் தெரியாத காட்டில் உள்ளதாகவே உள்ளது. தமிழ் புத்தகங்கள் மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து வெற்றி என்பது கானல் நீர் தான். இதன் காரணமாக டாலர் நகரம் ஆங்கில மொழி பெயர்ப்பு என்பது சவாலாகவே இருந்தது. இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள் இந்தப் பணியை தங்கள் பணிகளுக்கிடையே செய்யத் தயாராக இருந்தார்கள்.
நண்பர் ராமச்சந்திரன் பாதி கிணறு தாண்டினார். மற்றொருவர் தொடங்கினார். இப்படியே ஒவ்வொருவராக வந்து பின்வாங்கி விட அது அப்படியே நின்று போனது. நானும் மறந்து போய்விட்டேன். அமேசான் புத்தக தளம் குறித்து அவ்வப்போது வாசித்துக் கொண்டே வந்த போது மீண்டும் என் மனதில் ஆசைகள் துளிர்த்தது. குறைந்த பட்சம் டாலர் நகரம் புத்தகத்தை இதில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
+++++++++
என் அனுபவத்தில் புத்தக வாசிப்பாளர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றி எவரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் இணைய தளத்தில் தொடர்பு உள்ளவர்கள் ஏதோவொரு வழியில் அதனைப் பற்றி சிலவார்த்தைகளாவது தகவலாக கொடுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். ஓரளவுக்கு விசயம் உள்ள புத்தகங்கள் தனிப்பட்ட முன்னெடுப்பு முயற்சிகள் இல்லாத போதும் கூட பலருக்கும் தெரியக் காரணமாக உள்ளது. இப்படித்தான் நான் மின் நூலாக வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் பலருக்கும் சென்று சேர்ந்தது.
நண்பர் சீனிவாசன் இன்னமும் மனம் கோணாமல்.http://freetamilebooks.com/ தன் சொந்தக் காசைப் போட்டு (தற்போது தான் அறக்கட்டளை வழியாக உதவி கேட்டுள்ளார்) நடத்திக் கொண்டு வரும் தளத்தில் வெளியான என் பத்துக்கும் மேற்பட்ட மின் நூல்கள் மட்டும் இரண்டரை லட்சத்திற்கு மேல் சென்று சேர்ந்துள்ளது. இது தவிர பிரதிபிலி மற்றும் இன்னும் சில தனித் தளங்கள் என்கிற ரீதியில் மூன்று லட்சத்திற்கும் மேல் உலகம் முழுக்க சென்று சேர்ந்ததுள்ளது. இது முழுக்க முழுக்க என்னை வளர்த்த, வளரக் காரணமாக இருந்த இணைய தள நண்பர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே விலையில்லாத மின் நூலாக உலகம் முழுக்க சென்று சேர்ந்தது.
++++++++++
அமேசான் என்பது வேறொரு தளத்தில் இயங்குகின்றது. தனி நபர்கள், பதிப்பாளர்கள் என்ற இரண்டு கட்டங்கள் உண்டு. எளிய விலை முதல் பெரிய விலை என்பது வரைக்கும் உண்டு. பலவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டாலும் ஒரு தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் நண்பர் விமாலதித்த மாமல்லன் (மத்திய அரசு ஊழியர் மற்றும் பலருக்கும் தெரிந்து அற்புதமான எழுத்தாளர்) தன் பாணியில் அதன் சாதக அம்சங்களை பட்டியலிட்டு ஒவ்வொருவரும் அங்கே எப்படி தங்கள் புத்தகங்களை வெளியிட முடியும் என்று எழுதியிருந்தார். காரணம் புத்தக பதிப்பாளர்கள் எப்படி எழுத்தாளர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது இதில் துணைக் கதையாக உள்ளது. இதன் காரணமாக வெளிப்படைத்தன்மை மட்டுமே உள்ள அமேசான் பலருக்கும் பலவிதங்களில் உதவிகரமாக உள்ளது. ஆனால் எனக்கு பணம் என்பதனை விட உலகளாவிய பார்வை என்பது விருப்பமானதாக இருந்தது. அப்போது தான் சிறு நம்பிக்கை கீற்று என் மனதில் தோன்றியது. இவர் எழுதியதை முழுமையாக வாசித்த பின்பு விருப்பத்தை செயல்படுத்த துவங்கினேன்.
நான் அமேசான் தளத்தில் வெளியிட மிக முக்கியக்காரணமே இவர் தான்.
ஆனால் நாலைந்து முறை முயன்ற போதும் இதன் வழிமுறைகளை உள்வாங்கி அதற்குத் தகுந்தாற்போல பொறுமையுடன் கையாள்வது கடினமாகவே இருந்தது.
மனிதர்களுடன் (மட்டுமே) புழங்கிக் கொண்டேயிருக்கும் எனக்குத் தொழில் நுட்பங்கள் சார்ந்த பார்வையும், அறிவும் சராசரிக்கும் கீழே தான். காரணம் எனக்குத் தேவையானதை அலுவலகத்தில் யாரோ ஒருவர் செய்து தந்து கொண்டேயிருப்பதால் இதன் ஆர்வம் உருவாகாமல் போய்விட்டது. (இது குறித்து எழுத நிறைய விசயங்கள் உள்ளது. தனியாக எழுதுகிறேன்) ஆனாலும் விடாமல் முயற்சித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றேன் என்று சொல்லலாம்.
நண்பர் விமலாதித்த மாமல்லனிடம் இதனைத் தெரிவித்தேன். அவர் கலாய்ப்பது போல இந்த சின்ன விசயத்திற்கு இப்படியா? என்றார். இது போன்ற விசயங்கள் தான் எனக்கு மிகப் பெரிதாகத் தெரிகின்றது. ஆயிரம் பேர்கள் உள்ள நிர்வாகத்தை நடத்துவது என்பது இயல்பாக உள்ளது என்றேன்.
+++++++++++++=
புத்தகத்தை நம் ஆசைக்காக வெளியிட்டு விட்டோம். யார் படிப்பார்கள்? யாருக்குப் போய்ச் சேரும்? என்னவாகும்? என்ற குறுகுறுப்பு என்னுள் இருந்து கொண்டேயிருந்தது.
காரணம் சமீப காலமாக வலைதளம் முழுக்க ஒரு சிறிய ஆதங்க எழுத்துக்கள் வலைதளத்தில் எழுதுபவர்கள் தங்கள் குறைகளாக எழுதிக் கொண்டேயிருக்கின்றார்கள். முன்பு போல யாரும் வருவதில்லை. படிப்பதில்லை. பின்னூட்டம் இடுவதில்லை. வருத்தமாக உள்ளது. தொடர்பு எல்லைக்கு வெளியே என்று விட்டார்கள் என்கிற ரீதியாக எழுதிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன்.
மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.
தற்போதைய சூழலில் ஒரு இடத்தில் மட்டும் மாற்றங்கள் இல்லை. நாம் வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது. சுனாமி போல தாக்கிக் கொண்டேயிருக்கின்றது. மாற்றங்கள் வெவ்வேறு பாதையில் வந்து கொண்டேயிருக்கின்றது.
இப்போது கல்லூரியில் நுழைவதற்கு முன் விண்ணப்ப படிவம் வாங்குவதற்கு முன்பே மாணவ மாணவியர் கையில் நவீன வசதிகள் உள்ள அலைபேசி கையில் உள்ளது. அவர் என் பார்வையில் எழுத்தாளர், வாசகர், பத்திரிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலர்.
இப்படி பன்முகத் தன்மை கொண்ட இளைஞர்கள் முதல் அறுபது வயது கொண்ட (இணைய தளத்தை பயன்படுத்த தெரிந்த) மூத்த தலைமுறை வரைக்கும் நாம் சமாளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
எழுதும் விசயங்கள் நமக்கு பிடித்தமானதாக இருப்பது ஒரு பக்கம். அதுவொரு சுயதிருப்தி.
சுய அனுபவங்கள், விருப்பங்கள், ஆன்மீக ஈடுபாடு, கொள்கைகள், சித்தாந்தங்கள் என்ற களம் வேறு. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிஜ வாழ்க்கையின் எதார்த்த தெறிப்புகள் என்பது முற்றிலும் வேறு. இது குறித்து நெருங்கிய நண்பர்கள் பலரிடமும் பேசியுள்ளேன். எழுதும் விதங்களை மாற்றலாமே? என்று உரிமையுடன் கேட்டுள்ளேன்.
முகநூலை நீங்கள் வெறுக்க வேண்டியதில்லை. ஆழ்கடலில் உள்ள முத்துக்கள் பலதும் உள்ளது. வியந்து போயுள்ளேன். சாதாரண நபர்கள் (எழுத்துலக அனுபவம் ஏதுமின்றி) எழுதும் பல விசயங்களைப் பார்த்து நம்மால் இது போல எழுத முடியுமா? என்று வியந்துள்ளேன். எந்த இடம் நாம் சென்றாலும் நம் விருப்பங்கள் முக்கியம். அதைவிட அந்த இடத்தின் எதார்த்த சூழலை நாம் புரிந்து கொள்வது அதை விட முக்கியம்.
ஆனாலும் நான் முகநூலை அளவாகவே பயன்படுத்துகின்றேன். காரணம் அந்த தளத்திற்குத் தகுந்தாற் போல என்னால் என்னை மாற்றிக் முடியவில்லை என்பது எனக்கே நன்றாகவே தெரிகின்றது. நம் வயது, அனுபவம், முன் எச்சரிக்கை போன்ற பலதும் நம்மை எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் முகநூல் தளத்தில் ஊரே அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. நாம் கட்டியுள்ள கோவணம் அவுந்துவிடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம்.
இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் ஒன்று உண்டு.
அமேசான் தளத்தில் டாலர் நகரம் புத்தகம் பற்றி (வாசித்தவர்கள் குறித்து) கிராப் இங்கே வெளியிட்டுள்ளேன். எவரும் சீண்டவே இல்லை. நான் என் வலைதளம் முகநூல் தவிர எந்த இடத்திலும் இதனை கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை. நம் பொருள் சரியாக இருந்தால் எப்படியிருந்தாலும் நம்மைத் தேடி வருவார்கள் என்ற எண்ணம் எப்போதும் எனக்குண்டு. ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்பது என் கொள்கை.
தொடக்கத்தில் சீண்டப்படாமல் இருந்த டாலர் நகரம் திடீரென்று உச்சத்தில் பறந்துள்ளது. ஒரு மாதத்தில் 950 பேர்கள் படித்துள்ளார்கள். அதுவும் சில நாட்களில் மட்டும் இந்த மாயஜாலம் நடந்துள்ளது.
எழுதும் ஒவ்வொருவருக்கும் நம் எழுத்து அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என்பதும் பாராட்டப்பட வேண்டும் என்பதும் இயல்பான ஆசை.
அதில் தவறில்லை.
ஆனால் எனக்கு அது யாரால் வாசிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமாகத் தோன்றும். வாசகர்களில் அப்படி பிரிவினை பார்க்க முடியுமா? என்ற கேள்வி இங்கே இயல்பாகவே வரும்? ஆனால் கிசுகிசு மட்டுமே படிக்க விரும்புவேன் என்பவர்களிடம் கொண்டு போய் நீங்கள் என்ன வாசிக்க கொடுத்தாலும் அவன் நடிகையின் ஆடையில் என்ன தெரிகின்றது என்பதில் தான் கவனமாக தேடிப் படிப்பான். வேறு எதையும் எந்த காலத்திலும் படிக்க விரும்பவே மாட்டேன் என்று வாழ்பவர்களிடம் நாம் போராடத் தேவையில்லை.அவர்களைப் போன்றவர்கள் வாசிக்காமல் இருப்பதே மேல். வைக்கோல் பற்றி மாட்டுக்கு மட்டும் தான் தெரியும்.
சரியான, தரமான, தகுதியான விசயங்களைப் பற்றி படிப்பவர்கள், அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் ஒரு நாள் நீங்கள் எழுதியவற்றை வாசித்தே தீருவார்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள். சமகாலத்தில் போற்றப்படாத எழுத்துக்கள் அனைத்தும் காலம் கடந்தும் நிற்கின்றது. இது நிச்சயமான உண்மை. என் அசைக்க முடியாத கருத்தும் ஆகும்.
அப்படித்தான் நான் எழுத்துலகில் வளர்ந்து வந்தேன். இன்னமும் பழைய நண்பர்கள் ஏதோவொரு சமயத்தில் வந்து கருத்திடும் போது நம் எண்ணம் சரிதான் என்று என்னுள் தோன்றும்.
இறுதியாக
பொதுவெளியில் இறங்கி போட்டியிட வேண்டுமென்றால் அசாத்தியமான தைரியம் தேவை. அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் அளவுக்கு அதிகமான பொறுமையும் தேவை.
நண்பர்களுக்கு நன்றி.
Kindle Edition Normalized Pages (KENP) Read from KU and KOLL (What's this?)
இந்த நிகழ்வு மட்டும் எனக்கு இன்றும் நன்றாக நினைவில் உள்ளது. அக்கா கையில் அந்தப் புகைப்படம் இருந்தது. என்னிடம் காண்பித்து பெண் அழகாக இருக்கின்றார் என்றார். நடிகையின் தோற்றப் பொழிவு இருந்து. எனக்கு அப்போது திருமணம் குறித்து எண்ணம் தோன்றவே இல்லை.
27 வயதுக்குண்டான எண்ணங்களில் "வேகம்" மட்டும் தான் அதிகம் இருந்தது. வாசித்த புத்தகங்களின் தாக்கத்தின் காரணமாக எதையும் முழுமையாகத் திருப்பிப் போட்டு விட முடியும் என்ற ஆழமான நம்பிக்கை. திருப்பூர் வாழ்க்கை அதிக நம்பிக்கை அளித்த காலமது. மிகப் பெரிய இடத்தில் அமர்ந்து விடுவோம் என்ற எண்ணமும் ஒரு காரணம். சில நாட்கள் கழித்து பெண்ணின் அப்பா வந்து என்னைப் பார்த்தார். அவர் முடிவே எடுத்து விட்டார். சில வாரங்கள் போராடிப் பார்த்திருப்பார் போல. நான் திருப்பூர் வந்து விட்டேன். மறுத்து விட்டேன்.
இதனைத் தொடர்ந்து பலரும் வந்து கொண்டேயிருந்தார்கள். அதில் ஒரு குடும்பத்தில் அச்சாரம் என்கிற நிலைக்கு வந்து நின்றார்கள்.
அடுத்த ஐந்தாண்டுக் காலம் எங்கங்கே என்னை நகர்த்திச் சென்றது. வெளிநாடு வரைக்கும் அழைத்துச் சென்றது. குடும்பத்தினரின் ஆசைகளை, குறிப்பாக அப்பாவின் விருப்பங்களை நிறைவேற்ற முடியவில்லை.
அப்பா இறந்து விட்டார் என்ற செய்தி வந்த போது முதல்முறையாகக் குற்ற உணர்ச்சி வந்தது. இறந்த தினத்தைக் கணக்கில் வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ள அப்போது தேடி வந்த என் மாமனாரிடம் சம்மதம் சொல்லியிருந்தேன். எப்படி நடந்தது? என்று யோசித்து முடிவதற்குள் திருமணமும் முடிந்து விட்டது.
குழந்தைகள் வந்தார்கள். வளர்ந்தார்கள். என்னுள் மாற்றத்தை உருவாக்கினார்கள். உருமாறிக் கொண்டேயிருந்தேன்.
குழந்தைகள் விசயத்தில் மருத்துவம் சாதிக்காத விசயங்களை எல்லாம் அவர்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்திச் சாதித்துக் காட்டினேன். பாசம் என்பதற்கு அப்பாற்பட்டு கடமை என்ற ஒரு சொல்லில் என் வாழ்க்கை தடம் புரளாமல் இன்று வரையிலும் அழகாக நதி போல ஓடிக் கொண்டிருக்கின்றது.
நான் எடுத்த என் திருமண முடிவென்பது என்னுடன் உடன்பிறந்தோர்களின் வாழ்க்கையில் இல்லாத அனைத்து விதமான மகிழ்ச்சியையும் அமைதியையும் எனக்குத் தந்துள்ளது.
அதற்கு மேலாக ஆரோக்கியத்தையும் வழங்கியுள்ளது. ஆனால் பலவற்றுக்கு இன்னமும் காலம் காத்திருக்கச் சொல்லியுள்ளது.
என் எழுத்துப் பயணத்திற்குப் பிறகு என் வாழ்க்கையில் நுழைந்தவர் என் நண்பர் இராஜராஜன். என் சொந்த வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் சம்மந்தப்பட்டவருக்கு ஏப்ரல் 28 அன்று சென்னையில் திருமணம் நடக்க உள்ளது. இராஜராஜன் தற்போது சிங்கப்பூரில் இருக்கின்றார். பெண் பர்மாவைச் சேர்ந்தவர். காதல் திருமணம்.
திருமணம் என்பது என் வாழ்வில் இல்லை என்பதனை உறுதியாகக் கொள்கை போல கடைப்பிடித்து வந்தவர். என்னைப் போலவே பலவற்றிலும் பிடிவாதமான கொள்கை கொண்டவர். இன்று சற்று தளர்ந்துள்ளது. காதலுக்கு அப்பாற்பட்ட நேசத்தைப் பொழிந்த அந்தப் பெண் பாராட்டுக்குரியவர்.
நேரம் காலம் பார்க்காமல், தமிழ் முறைப்படி ஓதுவார்கள் தமிழ் மறைகளை ஓத இத்திருமணம் நடக்கவுள்ளது.
இது எங்கள் குடும்ப திருமண விழா. இந்த நிகழ்வு என் பதிவில் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருமண அழைப்பிதழை இங்கே எழுதி வைத்திட தோன்றியது.
+++++++
(முகநூலில் எழுதிய) வாழ்த்துகள் - இரண்டு
இன்னும் அறுபது நாட்கள் உள்ளது.
காலசக்கரம் உருவாக்கும் மாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியொரு நிகழ்வு இவர் வாழ்வில் நடக்குமா? என்று யோசித்த காலம் மாறி இப்போது நடக்கப் போகின்றது என்பதற்கான அச்சாரம் இது.
இது எனக்கு, எங்கள் குடும்பத்தினர்க்கு முக்கிய நிகழ்வு. இதற்கான முன்னேற்பாடுகளை இப்பொழுதே செய்யத் தொடங்கியுள்ளோம்.
எனது இன்றைய வலிமையின் ஆதாரமாக, நான் மகிழ்ச்சியாக, வாழ்ந்து கொண்டிருப்பதற்கும், என் குடும்பம் வாழ்வதற்காக இவர் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார்.
என் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும், எங்கள் குழந்தைகளின் வளர்ச்சியிலும் துணையாக இருந்தவரின் வாழ்க்கை இனி வரும் காலத்தில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகள்.
அனுபவங்கள் தான் திசைகாட்டி. வாழ்க்கை கற்றுக் கொடுக்கும். நாம் நம்பும் கொள்கைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் காலாவதியாகும். புதுப்புது வடிவங்கள் உருவாகும். மாறும். மாற்றங்கள் நம்மைப் புது மனிதராக அடையாளம் காட்டும். ஆனாலும் தம்மை இழக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பருக்கு என் இனிய வாழ்த்துகள்.
பத்து வருடத் தொடர்பில் எப்போதும் இவர் குணத்தால் மேலே இருக்கின்றார். நான் எப்போதும் போல இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன். நான் நிறைய மாறியுள்ளேன். இவர் என் வாழ்க்கையை மாற்றியுள்ளார்.
இது திருமண அழைப்பு மட்டும் அல்ல. என்றும் எங்கள் குடும்ப நினைவு பொக்கிஷத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய நாளில் முதல் கடமையாக இங்கே பதிவேற்றி வைக்கின்றேன்.
வாழ்த்துகள் இராஜ ராஜன்
+++++++++
எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் நண்பர் எழுதிய வாழ்த்து.
Ramu Palaniappan நான் இது வரை பார்த்த திருமண அழைப்புகளிலேயே மிக சிறப்பான ஒன்று. திருமண நாளில் தான் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்பது, இயல்பான, நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால், அன்றும் தான் நம்பும் சித்தாந்தத்தை முன்னிறுத்தி, அந்த சித்தாந்தத்தை வடிவமைத்த நாயகர்களின் இணையர்களோடு இருக்கும் சித்திரத்தோடு அழைப்பினை வடிவமைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இணையர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.