அஸ்திவாரம்

Sunday, March 03, 2019

எந்திர மொழிகள் புரியும் நேரமிது

  

நண்பர் சீனிவாசன் கிண்டில் கருவியை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதனை வாங்க வேண்டும் என்று நீண்ட நாளாக மனதிலிருந்த ஆசையும் கூட.  ஆர்வத்துடன் அதனைப் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால் சில நாட்களில் விருப்பம் மாறிவிட்டது.  ஏறக்குறைய எரிச்சலாகி விட்டது.

அதுவொரு எந்திரமாகத் தெரிந்தது. அதன் மொழிகள் எனக்குப் புரிபடவே இல்லை. காரணம் எனக்குப் இயல்பாகவே பொறுமையில்லை. இன்னமும் என் வேகம் குறைந்தபாடில்லை என்பதனை புரிந்து கொண்டேன்.

ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் எங்கள் ஊர் நூலகத்தில் சென்று என் வாசிப்பைத் தொடங்கினேன்.  35 ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கும் என் இயல்பான வாசிப்பு முறைக்கு எதிராகவே கிண்டில் அமைப்பு இருந்தது. எண்ணமும் நோக்கமும் இதில் வேறு விதமாக இருந்தது. எழுதுவதும், பேசுவதும், வாசிப்பதும் என்று எல்லாமே வேகம் வேகம் என்று பழகிய எனக்கு கிண்டில் உணர்த்திய பொறுமை பிடிக்கவில்லை.. அதனைக் கையாள்வது கடினமாகவே இருந்தது.  

என் மகளிடம் கொடுத்துப் பார்த்தேன்.  அவரும் சில நாட்கள் பயன்படுத்திப் பார்த்து விட்டு அதை அப்படியே வைத்து விட்டார்.  அடுத்தடுத்த மகளிடம் கொடுத்த போதும் அதையே அவர்களும் செய்துவிடக் கணினி மேஜையில் புத்தம் புதிதாக உரை பிரிக்கப்படாமல் காட்சிப் பொருளானது.

ஒவ்வொரு முறையும் இதனைப் பார்க்கும் போது என் இயல்பான பழக்கவழக்கங்கள் குறித்து எனக்கே ஒருவித சந்தேகம் வந்தது. கடந்த ஒரு வருடமாக பலவற்றை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து ஒவ்வொன்றாக மாற்றி வருகின்றோம். மாற்றங்களைப் பற்றிப் பேசுகின்றோம். எழுதுகின்றோம். ஆனால் நம்மால் மாற முடியவில்லையே? என்ற எண்ணம் உள்ளே கழிவிரக்கமாகச் சுழன்று கொண்டேயிருந்தது.

பலரும் முகநூலில் இன்றைய கிண்டில் பதிப்பில் இந்தப் புத்தகம் இலவசம். தரவிறக்கிக் கொள்ளவும் என்று தகவல் கொடுத்து இருப்பார்கள். நான் நகர்ந்து சென்று விடுவதுண்டு. பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்கள் இன்று கிண்டிலில் வருகின்றது என்பதனையும், பிறகு அதன் விற்பனையைப் பற்றியும் எழுதியதையும் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்த போதும் என் எண்ணத்தில் எந்த மாற்றமும் உருவாகவில்லை.  கிண்டில் என்பது நமக்கு உகந்தது அல்ல என்ற எண்ணம் மட்டும் என் ஆழ் மனதில் எங்கேயோ ஓரமாகப் பதிந்துள்ளது என்பதனையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

வீடு மாறும் போதும், வீட்டைச் சுத்தம் செய்யும் போது உள்ளே அடைந்து கிடக்கும் ஏராளமான புத்தகங்களைப் பார்த்து மனம் வலிக்கும். வெளியே எறியவும் முடியாமல், அதனைப் பாதுகாக்கவும் முடியாமல் உண்டாகும் அவஸ்தை என்பது புத்தகப் பிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். இதன் காரணமாகவே பெரிய விலை உள்ள புத்தகங்கள் வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டே வந்தேன்.

ஆனால் மீண்டும் கிண்டில் குறித்த எண்ணம் மனதின் ஓரத்திலிருந்து கொண்டேயிருந்தது. 

சென்ற மாதத்தில் ஒரு நாள் மீண்டும் கிண்டில் ஆர்வம் வரப் பொறுமையாக உள்ளே நுழைந்து ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த போது மெதுவாகப் புரிபடத் தொடங்கியது. மகளிடம் கொடுத்து அவரிடமும் அது குறித்துப் பேசிய போது அதன் வசதிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அமேசான் வியாபார ரீதியாகப் புத்தக விற்பனையை அணுகினாலும் வாசகனுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை, வாய்ப்புகள் போன்றவற்றை உணர்ந்து கொள்ள முடிந்தது.  

ஒரு புத்தகத்தை வாசிக்க உடனே வாங்க வேண்டும் என்ற தேவையில்லை.  சில பக்கங்கள் படித்துப் பார்க்க (இலவசமாக) வாய்ப்பு கொடுக்கின்றார்கள்.  இதே போல மாத சந்தா தொடங்கிப் பல கட்டங்களாக இதன் வியாபார எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றது. இதற்கு மேலாக ஒவ்வொரு சமயத்திலும் முக்கியமான புத்தகங்களைக் குறிப்பிட்ட தினங்களுக்கு இலவசமாகக் கொடுக்கின்றார்கள்.  

மகள் இதனைப் பார்த்துப் பல புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொண்டேயிருந்தார். அப்படித்தான் உப்புவேலி என்ற புத்தகத்தைத் தரவிறக்கி வைத்திருந்தேன்.  நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த புத்தகமிது.  ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காலை தொடங்கிய வாசிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஓரே மூச்சில் கிண்டில் கருவியில் வாசித்து முடித்தேன். புத்தகம் சொல்லும் கருத்துக்களும், ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் நடந்த அக்கிர செயல்பாடுகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது என்பதனைவிட கிண்டில் கருவியின் மகத்தான வசதிகளை அப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  

என்னுள் இந்த மாற்றங்கள் உருவாக ஏறக்குறைய நாலைந்து மாதங்கள் ஆனது.  ஒரு அலமாரி முழுக்க அடுக்க வேண்டிய புத்தகங்களை ஒரு சிறிய கருவிக்குள் அடக்க முடியும் என்பதும், அதனை நாம் செல்லும் இடத்திற்கெல்லாம் கொண்டு செல்ல முடிகின்றது என்பதும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.  

தேடுங்கள். கண்டடைவீர்கள்.

+++++++++++++++++

டாலர் நகரம் என் முதல் குழந்தை. தமிழக அளவில் அது செல்ல வேண்டியவர்களுக்குச் சென்று விட்டது. எல்லாவகையிலும் திருப்தியைத் தந்தது.  ஆனால் வலைதளத்தின் வீச்சு அதற்கு அமையவில்லை. உலகம் முழுக்க சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாலர் நகரம் இரண்டு நோக்கத்திற்காக எழுதப்பட்டது.  திருப்பூருக்குள்  வேலை தேடி வருபவர்களுக்கும், தொழில் முனைவோர் முயற்சியில் இருப்பவர்களுக்கும் என அதில் இரண்டு பார்வை உண்டு.  

இது தவிர வெளிநாட்டிலிருந்து திருப்பூரைப் பார்ப்பவர்களுக்குண்டான விபரங்களும் அதில் உண்டு. எனவே அதனை ஆங்கிலத்தில் கொண்டு வாருங்கள் என்று என் நண்பர் ஒவ்வொரு முறையும் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஆசைகள் என்பது இப்படித்தான்.  யாரோ ஒருவர் அள்ளித் தெளித்துவிட்டு சென்று விடுவார்கள். அது மனதில் தீயாய் எறிந்து கொண்டேயிருக்கும்.

டாலர் நகரம் புத்தகத்தை ஆங்கிலத்தில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அத்தனை எளிதாகத் தெரியவில்லை.  இங்கே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது என்பது பெரிய வியாபாரமாக உள்ளது. வெற்றிகரமாகவும் நடந்து கொண்டு இருக்கின்றது. சிறிய, பெரிய எழுத்தாளர்கள் இதற்கெனவே பலரும் உள்ளனர்.  ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பது என்பது கடலைத் தாண்டுவதற்கு ஒப்பாகவே இங்கு உள்ளது.  அதற்கென சந்தை இங்கே இன்னமும் உருவாகவில்லை. 

ஆனால் திரைப்பட உலகம் மிகப் பெரிய மாறுதலைக் குறுகிய காலத்தில் கண்டுள்ளது. தமிழ்த் திரைப்பட உலகத்திற்கு மற்ற மாநில மொழிப் படங்களைவிட இந்திய அளவில், உலக அளவில் மிகப் பெரிய வியாபார வரவேற்பு கடந்த சில வருடங்களாக உருவாகி உள்ளது.  ஏற்கனவே இருந்தது தான்.  ஆனால் இப்போது இதன் வியாபார எல்லைகள் என்பது பல மடங்கு வீஸ்தீரமானமாகியுள்ளது.  இணைய வசதிகள் என்பது தமிழ்த் திரைப்பட உலகத்திற்கு அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக மாறியுள்ளது.

ஆனால் தமிழ் எழுத்துலகம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஓப்பிடளவில் இப்போது தான் பரவலான கவனிப்பின் தொடக்கப் புள்ளியில் மேலேறத் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட சிலரின் மற்றும் சில அமைப்புகளின் சுயலாபத்துக்காக தமிழ் எழுத்துலகம் இன்னமும் செல்ல வேண்டிய பாதைக்கு வந்து சேரவில்லை என்பது நிதர்சனமாகும்.

இன்றைய சூழலில் வலைதளங்களின் வளர்ச்சியின் மூலம் வெளியாகும் புத்தகங்கள் உலகம் முழுக்க தமிழர்களின் பார்வைக்கும் சென்று சேர்ந்து கொண்டு இருக்கின்றது. ஆனாலும் எழுத்தாளர்களின் பாடு இன்னமும் திக்குத் தெரியாத காட்டில் உள்ளதாகவே உள்ளது. தமிழ் புத்தகங்கள் மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து வெற்றி என்பது கானல் நீர் தான்.  இதன் காரணமாக டாலர் நகரம் ஆங்கில மொழி பெயர்ப்பு என்பது சவாலாகவே இருந்தது. இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள் இந்தப் பணியை தங்கள் பணிகளுக்கிடையே செய்யத் தயாராக இருந்தார்கள்.

நண்பர் ராமச்சந்திரன் பாதி கிணறு தாண்டினார். மற்றொருவர் தொடங்கினார். இப்படியே ஒவ்வொருவராக வந்து பின்வாங்கி விட அது அப்படியே நின்று போனது. நானும் மறந்து போய்விட்டேன்.   அமேசான் புத்தக தளம் குறித்து அவ்வப்போது வாசித்துக் கொண்டே வந்த போது மீண்டும் என் மனதில் ஆசைகள் துளிர்த்தது. குறைந்த பட்சம் டாலர் நகரம் புத்தகத்தை இதில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

+++++++++

என் அனுபவத்தில் புத்தக வாசிப்பாளர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றி எவரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் இணைய தளத்தில் தொடர்பு உள்ளவர்கள் ஏதோவொரு வழியில் அதனைப் பற்றி சிலவார்த்தைகளாவது தகவலாக கொடுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். ஓரளவுக்கு விசயம் உள்ள புத்தகங்கள் தனிப்பட்ட முன்னெடுப்பு  முயற்சிகள் இல்லாத போதும் கூட பலருக்கும் தெரியக் காரணமாக உள்ளது. இப்படித்தான் நான் மின் நூலாக வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் பலருக்கும் சென்று சேர்ந்தது.

நண்பர் சீனிவாசன் இன்னமும் மனம் கோணாமல்.http://freetamilebooks.com/ தன் சொந்தக் காசைப் போட்டு (தற்போது தான் அறக்கட்டளை வழியாக உதவி கேட்டுள்ளார்) நடத்திக் கொண்டு வரும்   தளத்தில் வெளியான என் பத்துக்கும் மேற்பட்ட மின் நூல்கள் மட்டும் இரண்டரை லட்சத்திற்கு மேல் சென்று சேர்ந்துள்ளது.  இது தவிர  பிரதிபிலி மற்றும் இன்னும் சில தனித் தளங்கள் என்கிற ரீதியில் மூன்று லட்சத்திற்கும் மேல் உலகம் முழுக்க சென்று சேர்ந்ததுள்ளது. இது முழுக்க முழுக்க என்னை வளர்த்த, வளரக் காரணமாக இருந்த இணைய தள நண்பர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே விலையில்லாத மின் நூலாக உலகம் முழுக்க சென்று சேர்ந்தது. 

++++++++++

அமேசான் என்பது வேறொரு தளத்தில் இயங்குகின்றது. தனி நபர்கள், பதிப்பாளர்கள் என்ற இரண்டு கட்டங்கள் உண்டு.  எளிய விலை முதல் பெரிய விலை என்பது வரைக்கும் உண்டு. பலவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டாலும் ஒரு தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்.

இதில் குறிப்பிடத்தக்க வகையில் நண்பர் விமாலதித்த மாமல்லன் (மத்திய அரசு ஊழியர் மற்றும் பலருக்கும் தெரிந்து அற்புதமான எழுத்தாளர்) தன் பாணியில் அதன் சாதக அம்சங்களை பட்டியலிட்டு ஒவ்வொருவரும் அங்கே எப்படி தங்கள் புத்தகங்களை வெளியிட முடியும் என்று எழுதியிருந்தார்.  காரணம் புத்தக பதிப்பாளர்கள் எப்படி எழுத்தாளர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது இதில் துணைக் கதையாக உள்ளது. இதன் காரணமாக வெளிப்படைத்தன்மை மட்டுமே உள்ள அமேசான் பலருக்கும் பலவிதங்களில் உதவிகரமாக உள்ளது. ஆனால் எனக்கு பணம் என்பதனை விட உலகளாவிய பார்வை என்பது விருப்பமானதாக இருந்தது. அப்போது தான் சிறு நம்பிக்கை கீற்று என் மனதில் தோன்றியது. இவர் எழுதியதை முழுமையாக வாசித்த பின்பு விருப்பத்தை செயல்படுத்த துவங்கினேன்.

நான் அமேசான் தளத்தில் வெளியிட மிக முக்கியக்காரணமே இவர் தான்.  

ஆனால் நாலைந்து முறை முயன்ற போதும் இதன் வழிமுறைகளை உள்வாங்கி அதற்குத் தகுந்தாற்போல பொறுமையுடன் கையாள்வது கடினமாகவே இருந்தது.

மனிதர்களுடன் (மட்டுமே) புழங்கிக் கொண்டேயிருக்கும் எனக்குத் தொழில் நுட்பங்கள் சார்ந்த பார்வையும், அறிவும் சராசரிக்கும் கீழே தான்.  காரணம் எனக்குத் தேவையானதை அலுவலகத்தில் யாரோ ஒருவர் செய்து தந்து கொண்டேயிருப்பதால் இதன் ஆர்வம் உருவாகாமல் போய்விட்டது. (இது குறித்து எழுத நிறைய விசயங்கள் உள்ளது. தனியாக எழுதுகிறேன்) ஆனாலும் விடாமல் முயற்சித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றேன் என்று சொல்லலாம்.  

நண்பர் விமலாதித்த மாமல்லனிடம் இதனைத் தெரிவித்தேன்.  அவர் கலாய்ப்பது போல இந்த சின்ன விசயத்திற்கு இப்படியா? என்றார்.  இது போன்ற விசயங்கள் தான் எனக்கு மிகப் பெரிதாகத் தெரிகின்றது.  ஆயிரம் பேர்கள் உள்ள நிர்வாகத்தை நடத்துவது என்பது இயல்பாக உள்ளது என்றேன்.

+++++++++++++=

புத்தகத்தை நம் ஆசைக்காக வெளியிட்டு விட்டோம். யார் படிப்பார்கள்? யாருக்குப் போய்ச் சேரும்? என்னவாகும்? என்ற குறுகுறுப்பு என்னுள் இருந்து கொண்டேயிருந்தது.  

காரணம் சமீப காலமாக வலைதளம் முழுக்க ஒரு சிறிய ஆதங்க எழுத்துக்கள் வலைதளத்தில் எழுதுபவர்கள் தங்கள் குறைகளாக எழுதிக் கொண்டேயிருக்கின்றார்கள்.  முன்பு போல யாரும் வருவதில்லை. படிப்பதில்லை. பின்னூட்டம் இடுவதில்லை. வருத்தமாக உள்ளது. தொடர்பு எல்லைக்கு வெளியே என்று விட்டார்கள் என்கிற ரீதியாக எழுதிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். 

 மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.  

தற்போதைய சூழலில் ஒரு இடத்தில் மட்டும் மாற்றங்கள் இல்லை.  நாம் வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது.  சுனாமி போல தாக்கிக் கொண்டேயிருக்கின்றது. மாற்றங்கள் வெவ்வேறு பாதையில் வந்து கொண்டேயிருக்கின்றது.  

இப்போது கல்லூரியில் நுழைவதற்கு முன்  விண்ணப்ப படிவம் வாங்குவதற்கு முன்பே மாணவ மாணவியர் கையில் நவீன வசதிகள் உள்ள அலைபேசி கையில் உள்ளது. அவர் என் பார்வையில் எழுத்தாளர், வாசகர், பத்திரிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலர்.  

இப்படி பன்முகத் தன்மை கொண்ட இளைஞர்கள் முதல் அறுபது வயது கொண்ட (இணைய தளத்தை பயன்படுத்த தெரிந்த) மூத்த தலைமுறை வரைக்கும் நாம் சமாளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

எழுதும் விசயங்கள் நமக்கு பிடித்தமானதாக இருப்பது ஒரு பக்கம். அதுவொரு சுயதிருப்தி.

சுய அனுபவங்கள், விருப்பங்கள், ஆன்மீக ஈடுபாடு, கொள்கைகள், சித்தாந்தங்கள் என்ற களம் வேறு.  ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிஜ வாழ்க்கையின் எதார்த்த தெறிப்புகள் என்பது முற்றிலும் வேறு.  இது குறித்து நெருங்கிய நண்பர்கள் பலரிடமும் பேசியுள்ளேன். எழுதும் விதங்களை மாற்றலாமே? என்று உரிமையுடன் கேட்டுள்ளேன்.

முகநூலை நீங்கள் வெறுக்க வேண்டியதில்லை.  ஆழ்கடலில் உள்ள முத்துக்கள் பலதும் உள்ளது.  வியந்து போயுள்ளேன்.  சாதாரண நபர்கள் (எழுத்துலக அனுபவம் ஏதுமின்றி) எழுதும் பல விசயங்களைப் பார்த்து நம்மால் இது போல எழுத முடியுமா? என்று வியந்துள்ளேன். எந்த இடம் நாம் சென்றாலும் நம் விருப்பங்கள் முக்கியம். அதைவிட அந்த இடத்தின் எதார்த்த சூழலை நாம் புரிந்து கொள்வது அதை விட முக்கியம்.

ஆனாலும் நான் முகநூலை அளவாகவே பயன்படுத்துகின்றேன்.  காரணம் அந்த தளத்திற்குத் தகுந்தாற் போல என்னால் என்னை மாற்றிக் முடியவில்லை என்பது எனக்கே நன்றாகவே தெரிகின்றது.  நம் வயது, அனுபவம், முன் எச்சரிக்கை போன்ற பலதும் நம்மை எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றது.  ஆனால் முகநூல் தளத்தில் ஊரே அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.  நாம் கட்டியுள்ள கோவணம் அவுந்துவிடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம்.  

இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் ஒன்று உண்டு.

அமேசான் தளத்தில் டாலர் நகரம் புத்தகம் பற்றி (வாசித்தவர்கள் குறித்து) கிராப் இங்கே வெளியிட்டுள்ளேன்.  எவரும் சீண்டவே இல்லை.  நான் என் வலைதளம் முகநூல் தவிர எந்த இடத்திலும் இதனை கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை.  நம் பொருள் சரியாக இருந்தால் எப்படியிருந்தாலும் நம்மைத் தேடி வருவார்கள் என்ற எண்ணம் எப்போதும் எனக்குண்டு. ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்பது என் கொள்கை. 

தொடக்கத்தில் சீண்டப்படாமல் இருந்த டாலர் நகரம் திடீரென்று உச்சத்தில் பறந்துள்ளது.  ஒரு மாதத்தில் 950 பேர்கள் படித்துள்ளார்கள்.  அதுவும் சில நாட்களில் மட்டும் இந்த மாயஜாலம் நடந்துள்ளது.

எழுதும் ஒவ்வொருவருக்கும் நம் எழுத்து அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என்பதும் பாராட்டப்பட வேண்டும் என்பதும் இயல்பான ஆசை. 

அதில் தவறில்லை.

ஆனால் எனக்கு அது யாரால் வாசிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமாகத் தோன்றும். வாசகர்களில் அப்படி பிரிவினை பார்க்க முடியுமா? என்ற கேள்வி இங்கே இயல்பாகவே வரும்? ஆனால் கிசுகிசு மட்டுமே படிக்க விரும்புவேன் என்பவர்களிடம் கொண்டு போய் நீங்கள் என்ன வாசிக்க கொடுத்தாலும் அவன் நடிகையின் ஆடையில் என்ன தெரிகின்றது என்பதில் தான் கவனமாக தேடிப் படிப்பான். வேறு எதையும் எந்த காலத்திலும் படிக்க விரும்பவே மாட்டேன் என்று வாழ்பவர்களிடம் நாம் போராடத் தேவையில்லை.அவர்களைப் போன்றவர்கள் வாசிக்காமல் இருப்பதே மேல். வைக்கோல் பற்றி மாட்டுக்கு மட்டும் தான் தெரியும். 

சரியான, தரமான, தகுதியான விசயங்களைப் பற்றி படிப்பவர்கள், அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் ஒரு நாள் நீங்கள் எழுதியவற்றை வாசித்தே தீருவார்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள். சமகாலத்தில் போற்றப்படாத எழுத்துக்கள் அனைத்தும் காலம் கடந்தும் நிற்கின்றது. இது நிச்சயமான உண்மை. என் அசைக்க முடியாத கருத்தும் ஆகும்.

அப்படித்தான் நான் எழுத்துலகில் வளர்ந்து வந்தேன். இன்னமும் பழைய நண்பர்கள் ஏதோவொரு சமயத்தில் வந்து கருத்திடும் போது நம் எண்ணம் சரிதான் என்று என்னுள் தோன்றும்.

இறுதியாக

பொதுவெளியில் இறங்கி போட்டியிட வேண்டுமென்றால் அசாத்தியமான தைரியம் தேவை.  அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் அளவுக்கு அதிகமான பொறுமையும் தேவை.

நண்பர்களுக்கு நன்றி.



Kindle Edition Normalized Pages (KENP) Read from KU and KOLL (What's this?) 
KENP ReadKindle Edition Normalized Pages (KENP) Read from KU and KOLLFeb 01, 2019Feb 02, 2019Feb 03, 2019Feb 04, 2019Feb 05, 2019Feb 06, 2019Feb 07, 2019Feb 08, 2019Feb 09, 2019Feb 10, 2019Feb 11, 2019Feb 12, 2019Feb 13, 2019Feb 14, 2019Feb 15, 2019Feb 16, 2019Feb 17, 2019Feb 18, 2019Feb 19, 2019Feb 20, 2019Feb 21, 2019Feb 22, 2019Feb 23, 2019Feb 24, 2019Feb 25, 2019Feb 26, 2019Feb 27, 2019Feb 28, 2019Mar 01, 2019Mar 02, 2019Mar 03, 20190200

20 comments:

  1. ப்ரிண்ட் புத்தகம் வாங்கி படிப்பதற்கு இணை ஏதுமில்லை பழைய மற்றும் புதிய புத்தக வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். என் எண்ணமும் அது தான். ஆனால் சொந்த வீடு மற்றும் புத்தகத்திற்கென தனியான வசதிகள். அதுவும் நிரந்தரமாக இருக்க வேண்டும். அப்படியென்றால் புத்தகங்கள் நம் குடும்ப உறுப்பினர் போல.

      Delete
  2. உண்மைதான் நண்பரே .
    புத்தகங்கள் வாங்கி வாசிக்க மிகவும் பிடிக்கும் என்றாலும் இங்கு கனடாவில் விலை ,இடவசதி ,போன்ற பல காரணங்களால் நானும் மாறிவிட்டேன் .நீங்கள் சொன்னமாதிரி பல நூற்றுக்கணக்கான புத்தகங்களை ஒரே உபகரணத்தில் அடக்கும் வசதி மிகவும் அருமை .
    கால மாற்றத்துக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்கத்தான் வேண்டும் நண்பரே .அடுத்து உங்கள் புத்தகம் டாலர் நகரம் நான் இன்னமும் படிக்கவில்லை .விரைவில் படிக்கிறேன் .

    நான் சில காலமாக எழுதாவிட்டாலும் தமிழ்மணத்துக்கு வந்து பதிவுகளை படிக்க தவறுவதில்லை .எனவே தொடர்ந்து எழுதுங்கள் .படிக்க நான் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன் .
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கரிகாலன்.

      Delete
  3. ஆரம்பத்தில் மனம் சோர்ந்து எழுதி விட்டீர்களா என்று நினைத்தேன்... ஆனால் முடிவில் அசாத்திய தைரியம் எனக்கும் வேண்டும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. பல விசயங்களில் நீங்களும் எனக்கு முன்னோடி தான். நான் எழுதிவிடுகிறேன். நீங்க எழுதுவதில்லை. அவ்வளவு தான் தனபாலன்.

      Delete
  4. பயணத்தில் செல்லும்போதோ, வெளியில் இருக்கும்போது நேரத்தை நன்முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை அமையும்போதோ கிண்டில் உதவியாக உள்ளதை நான் உணர்கிறேன். களப்பணி, தொலைதூரப்பயணத்தின்போது கிண்டிலைப் பயன்படுத்துகிறேன். ஆரம்பத்தில் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நேரச் சேமிப்பு மற்றும் கையாளும் நிலை என்ற வகைகளில் பிடித்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ரயில் பயணங்களில் இதுவொரு மிகப் பெரிய வரப்பிரசாதம் தான். ஆனால் ஒவ்வொரு பயணங்களின் போது நான் பார்ப்பது நம் மக்கள் எப்படி அந்தப் பயணத்தை பயன்படுத்துகின்றார்கள் என்பதே. எழுத விசயங்கள் உள்ளது.

      Delete
  5. ரொம்ப நாட்களாக இதை வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளேன் ஆனால், விலை காரணமாக ஒத்தி வைத்துள்ளேன்.

    இதை நான் வாங்க விரும்பக்காரணம், இடத்தை அடைக்காது (தற்போது இருக்கும் சின்ன அலமாரியும் முழுமையடைந்து விட்டது), காகித பயன்பாடு குறையும், விலை குறைவு , எங்கே வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லலாம், பல புத்தகங்களை அடக்கி இருப்பதால், விருப்பமானவற்றை படிக்கலாம், கண்களை உறுத்தாது.

    வாங்குவதை நல்லதா வாங்கிக்கொள்வோம் என்று காத்திருப்பு பட்டியலில் உள்ளது :-) . விரைவில் வாங்கி விடுவேன் என்று நினைக்கிறேன்.

    வாங்கினாலும் ஏதாவது தள்ளுபடி வரும் போது தான் வாங்குவேன், எனக்கு அவசரமில்லை.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வாங்கவும். உங்கள் தளத்தில் ஆஃபர் குறித்து வரும் (அமேசான், பிளிப்கார்டு) அதன் பின்னால் உள்ள சாதக பாதக விசயங்களைப் பற்றி எழுதுங்க கிரி.

      Delete
  6. ​நான் இதுவரை கிண்டில் உபயோகித்தது இல்லை. மின்புத்தகங்களை விட ப்ரிண்டட் புததகங்களே எனக்கு வாசிக்க வசதி.​

    ReplyDelete
    Replies
    1. இதே மனநிலையில் தான் நானும் இருந்தேன். இரண்டு பக்கத்திலும் உள்ள விலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்க.

      Delete
  7. எந்திர மொழிகள் புரியும் நேரமிது - KINDLE பற்றிய விரிவான, அருமையான பதிவு. நானும் வாங்க வேண்டுமென நினைக்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

    ReplyDelete
  8. வணக்கம் ஜோதிஜி! கிண்டில் நானும் பயன்படுத்தியது இல்லை. என் மகன் பயன்படுத்துகிறான் அவனது புத்தகங்கள் பல அதில் அவன் சேமித்து வைத்துள்ளான். அந்தக் கிண்டில்கருவி கூட அவனது அத்தை அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது.

    புத்தகங்கள் வாசிப்பதுதான் சுகம் என்றாலும் நானும் கணினியில்தான் வாசிக்க முடிகிறது..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வயதாகும் போது கணினியில் நீண்ட நேரம் அமர்வதும் கூட பிரச்சனை தான். ஒரு முறை உங்கள் மகன் பயன்படுத்தும் கிண்டில் வாங்கி படித்துப் பாருங்க. வித்தியாசம் புரியும்.

      Delete
  9. வீடு மாறும் போதும், வீட்டைச் சுத்தம் செய்யும் போது உள்ளே அடைந்து கிடக்கும் ஏராளமான புத்தகங்களைப் பார்த்து மனம் வலிக்கும். வெளியே எறியவும் முடியாமல், அதனைப் பாதுகாக்கவும் முடியாமல் உண்டாகும் அவஸ்தை என்பது புத்தகப் பிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். இதன் காரணமாகவே பெரிய விலை உள்ள புத்தகங்கள் வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டே வந்தேன்.//

    உண்மையே. வீட்டில் பாதுகாப்பது என்று அது எத்தனை கஷ்டம் என்பது தெரியும். இப்போதும் கூட சென்னையில் இருந்து இங்கு பங்களூர் வந்தப்ப பல புத்தகங்கள் சென்னையிலேயே வைத்துவிட்டு வர வேண்டிய சூழல் எங்களுக்கு. சில பழையகடைகளுக்குச் சென்றன..

    //சரியான, தரமான, தகுதியான விசயங்களைப் பற்றி படிப்பவர்கள், அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் ஒரு நாள் நீங்கள் எழுதியவற்றை வாசித்தே தீருவார்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள். சமகாலத்தில் போற்றப்படாத எழுத்துக்கள் அனைத்தும் காலம் கடந்தும் நிற்கின்றது. இது நிச்சயமான உண்மை. என் அசைக்க முடியாத கருத்தும் ஆகும்.//

    இதற்கு இந்த இணையப் பதிவுகள் மற்றும் மின் நூல்கள் கண்டிப்பாக உதவும். நீங்களும் அடிக்கடி சொல்லி வருவது தெரியும்...மின் நூல்லாக்குங்கள் என்று.

    நல்ல ஊக்கம் மிகு வார்த்தைகள் ஜோதிஜி.

    இனி புத்தகங்கள் அச்சிடுவது என்பது எவ்வளவு தூரம் வாங்கப்படும் என்பதும் சந்தேகமாக இருப்பதால்...மின்னூல் நல்லதே.

    இப்போது நம் பதிவர்கள் சிலரும் அமெசான் கிண்டிலில் புத்தகம் போடத் தொடங்கியுள்ளார்கள்.

    கடைசிப் பத்தி வரிகள் அப்படியே டிட்டோ!

    இயந்திரங்கள் நம்மையும் இயந்திரங்களாகச் செய்கிறதோ?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். சீக்கிரத்தில் கூகுள் ப்ளஸ் மூடப்படுகின்றது. இதே ஏதோவொரு சமயத்தில் பிளாக் ம் மூடப்படலாம். குறைந்தபட்சம் நம் அடுத்த தலைமுறைக்கு இதையாவது கொண்டு சேர்க்கலாமே? நன்றி கீதா.

      Delete
  10. மேசை கணினியில் இருக்கும் புத்தகங்களைக்கூட யு.எஸ்.பி உதவியுடன் கிண்டிலுக்கு மாற்றம் செய்து படிக்கலாம் ஐயா

    ReplyDelete
    Replies
    1. அப்படி பிடிஎப் படிக்க வாய்ப்புள்ளதா?

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.