வணக்கம் - நூல் விமர்சனம் - 2
கலைஞரைப் பற்றி அவரின் தொடக்கக் கால வரலாற்றைப் பற்றிக் கிண்டலும் கேலியுமாகப் பேசுபவர்களுக்கு இன்றைக்கும் கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்ற நூல் தான் முக்கியக் காரணமாக உள்ளது. ஆனால் அதே கண்ணதாசன் எம்.ஜி.ஆர் குறித்து அலை ஓசை பத்திரிக்கையில் தொடராக எழுதினார் பாதியில் நிறுத்திவிட்டார். காரணம் பணம். கண்ணதாசனின் மொத்த கடன்களும் தீர்க்கப்பட்டது. அத்துடன் அந்த வருடமே கண்ணதாசன் அரசவைக் கவிஞராகவும் மாறினார். எம்.ஜி.ஆர் குறித்த தொடரும் நின்று போனது. தமிழக அரசியலை 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் இதனைப் பற்றித் தெரியும்.
எம்.ஜி.ஆர் தொடக்கம் முதல் அதிக அக்கறை காட்டிய இரண்டு விசயங்கள். ஒன்று தனது ஆரோக்கியம். மற்றொன்று தனது பிம்பம். திரைப்படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தனது மாயப் பிம்பம் கலைவதை எந்தக் காலத்திலும் சகித்துக் கொண்டேயில்லை. அந்தப் பிம்பத்திற்குள் நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது. ஆனால் நல்லது பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் அவருக்கு நிர்வாகம் தெரியாது, கோமாளி, மலையாளி என்ற அவப்பெயர்கள் துக்குநூறாகிப் போனது." நீ இருக்கும் வரையிலும் எங்களுக்கு நீ தான் ராஜா" என்று தமிழக மக்கள் மொத்த ஆதரவையும் வழங்கினர்.
ஆனால் வலம்புரி ஜான் எம்.ஜி.ஆர் பழகிய ஆயிரக்கணக்கான நபர்களில் ஒருவர். இவரைவிடவும் முக்கியத்துவம் பெற்று கடைசி வரைக்கும் அவர் நிழல் போல வாழ்ந்தவர்கள் பலர். எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைச் சுற்றி எப்படிப்பட்ட ஆட்கள் இருக்க வேண்டும்? அவர்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் திட்டமிட்டு சரியாகவே செய்து வந்தார். ஆர்.எம்.வீரப்பனுக்கு உண்டான மதிப்பு வேறு. ஜேப்பியாருக்கு உண்டான மரியாதை வேறு. ஆனால் இருவருமே தங்கள் தலைவரை உயிரென நினைத்தனர். இதே போலப் பயில்வான்கள் முதல் பல்கலை வித்தகர் வரைக்கும் உண்டான அத்தனை பேர்களையும் அழகாக அவரருக்குண்டான மரியாதைகளுடன் வைத்திருந்தார்.
ஆனால் வலம்புரி ஜான் எம்.ஜி.ஆர் குறித்து எழுதும் போதெல்லாம் எம்.ஜி.ஆரின் பலவீனங்களைச் சில வார்த்தைகளிலே சொல்லி புரிய வைத்து விடுகின்றார். "பலவீனம் என்பது மிகப் பெரிய பள்ளத்தாக்கு. அதில் விழுந்தால் யானை கூடப் பூனை தான்."
ஆனாலும் எம்.ஜி.ஆரின் மொத்த பலவீனங்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றது அவரின் தயாள குணம். காரணம் அவரின் இளமைப் பருவத்தில் அவர் அடைந்த துன்பங்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கு அவரும் அவர் குடும்பமும் பெற்ற துன்பங்களைக் கடைசி வரைக்கும் மறக்காமல் இருந்தது ஆச்சரியம். எவரைச் சந்தித்தாலும் முதலில் சாப்பிட்டுவிட்டீர்களா? என்று கேட்பதும் இதனால் தான்.
எம்.ஜி.ஆரின் முதல் நாற்பது வருடங்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூடக் கையேந்தும் நிலையில் வைத்த இயற்கையின் கருணைப்பார்வை அடுத்தடுத்து அவரை வளர்த்தது. நம்பமுடியாத அளவுக்குப் புகழ் வெளிச்சம் அவர் மேல் பரவி கொண்டேயிருந்தது. அஸ்தமனம் ஆகாத சூரியன் போலவே வாழ்ந்தார். அதனால் தான் அறிஞர் அண்ணா நம் சூரியன் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதே எம்.ஜி.ஆர் என்று உறுதியாக நம்பினார். இந்த நம்பிக்கை தான் அண்ணா முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது தான் தேர்ந்தெடுத்த அமைச்சரவை பட்டியலை எம்.ஜி.ஆரின் பார்வைக்குக் கொடுத்து அவரின் ஒப்புதலையும் பெற வைத்தார். அவர் திருத்தியதையும் ஏற்றுக் கொண்டார்.
வளமிக்க, சக்திமிக்க, அதிகாரம் பொருந்திய மனிதராக மாற்றிய காலம் எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தை வெளியே சொல்ல முடியாத வெறுமையை, தனிமையை, உடல் பலகீனத்தை, நோயை பரிசாகத் தந்தது.
இடைப்பட்ட காலம் தான் அவரின் பொற்காலம். வெறுமனே பொற்காலம் என்று சொல்லிவிட முடியாது. நாலைந்து பிறவிகள் ஒரு மனிதன் அடையவேண்டிய அத்தனை புகழையும், பெருமையையும் , வசதிகளையும் காலம் வழங்கிச் சென்றுள்ளது. பசி, பட்டினியைப் பார்த்தே வளர்ந்தவர் தன்னை நம்பியே இருந்தவர் என்றால் அவருக்குச் சிறிது கூட யோசிக்காமல் தன்னால் என்ன முடியுமோ? அனைத்தையும் வாரி வழங்கியுள்ளார். இது அவர் உடல் நலிவுற்று இருந்த சமயத்தில் கூட மாறவில்லை. சுய நினைவோடு இருந்த காலம் வரைக்கும் அவரின் வள்ளல் தன்மை மாறவே இல்லை. பேச்சுத் திறன் இழந்த நிலையிலும் அவரால் எப்படி இந்தக் குணாதிசியத்தை மாற்றிக் கொள்ளாமல் வாழ முடிந்துள்ளது என்பதே மகத்தான ஆச்சரியம்.
அரசியலுக்காக, விளம்பரத்திற்காகச் செய்தார் என்றால் கூட அவர் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள், அருகே இருந்து பார்த்தவர்கள் என்று மொத்தமாக அவரின் இந்த ஈகை குணத்தைப் பல இடங்களில் எழுதியதை, கூட்டங்களில் பேசியதை கேட்கும் போதெல்லாம் அவரின் ஆழ்மன காயங்களை இதன் மூலம் தீர்க்க விரும்பியுள்ளார் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது.
"என்னை நம்பியவர் எவரும் கெட்டுப் போவதில்லை" என்பதனை பல இடங்களில் பல பேரிடம் தனது செய்கைகள் மூலம் நிரூபித்துள்ளார். எம்.ஜி.ஆரால் கெட்டுப் போனவர்களின் பட்டியலும் நீளம். அதற்குப் பின்னால் உள்ள காரணங்களும் அதிகம். வலம்புரி ஜான் அதனைப் பற்றி எந்தக் குறிப்பும் இந்தப் புத்தகத்தில் சொல்லவில்லை. ஆனால் ஜெயலலிதா மேல் புரிந்து கொள்ளவே முடியாத தீரா மயக்கம் இருந்தது ஏன்? என்று எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
எம்.ஜி.ஆர் எந்த விசயத்திலும் எவரையும் நம்புவதே இல்லை. ஒருவர் சொல்வதைப் பலபேர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேயிருப்பது அவரின் வாடிக்கையான பழக்கம். ஆனால் ஜெ குறித்த எண்ணங்களில் அவரால் மாற்ற முடியாத நிலைக்கே வாழ்ந்துள்ளார். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, போன்றவர்கள் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட பலவித அழுத்தங்கள், உருவாக்கப்பட்ட அச்சங்கள் எல்லாமே அவரின் ஆயுளை குறைக்கக் காரணமாகவும் இருந்துள்ளன. பல சந்தர்ப்பங்களில் இனி மாறித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் எடுத்த அடுத்த நாலைந்து மணி நேரத்தில் அப்படியே மாறிவிடுவார் என்பதனை அருகே உள்ளவர்கள் உணர்ந்திருந்த காரணத்தால் ஜெயலலிதா விசயத்தை மட்டும் எவரும் கண்டு கொள்ளவே இல்லை. அதனையும் மீறி செயல்பட்டவர் ஆர். எம். வீரப்பன் மட்டுமே.
ஜெயலலிதாவுக்குத் தொடக்கம் முதல் சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பனுக்கு வலம்புரி ஜான் மேல் தீரா கோபம். காரணம் அந்த அம்மையாருக்கு அரசியல் ஆசையை உருவாக்கிக் கொடுத்ததே இவர் தான் என்ற எண்ணத்தில் வீரப்பனுக்குப் பல காலம் வலம்புரி ஜான் வேண்டாத மனிதராகவே இருந்து உள்ளார். ஆனாலும் ஆர்.எம்.வீரப்பனின் நெருங்கிய நண்பராகவும் வலம்புரி ஜான் இருந்துள்ளார். இதில் ஒரு மகத்தான ஆச்சரியம் ஒன்று உண்டு.
இன்று வரையிலும் ஜெயலலிதா குறித்துப் பேசுபவர்கள் இரண்டு விசயங்களைப் பற்றித் தவறாமல் குறிப்பிடுகின்றார்கள். அவர் நடிகையாக இருந்தார். வசதிக்கு என்ன குறைவு? எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார். இருவருக்கும் இயல்பான உறவு தொடக்கம் முதலே இருந்திருக்கும்?
இரண்டுமே தவறு.
ஒரு நடிகரை விட நடிகையின் ஆயுள் காலம் மிக மிகக் குறைவு. ஜெயலலிதா மாறிக் கொண்டேயிருந்த காலச் சூழலில் அவரின் படங்களும் எடுபடாமல் போனது. ஒதுக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் தொடர்பு இல்லாமல் தான் வாழ்ந்து வந்தார்.
எம்.ஜி.ஆர் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடத்த ஆசைப்பட்டார். அது சார்ந்த முக்கியப் பொறுப்புகள் அனைத்து ஆம்.எம்.வீரப்பன் வசம் கொடுக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆரை நேரிடையாகத் தொடர்பு கொண்டால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஜெயலலிதா ஆம்.எம்.வீரப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு அப்போது அவர் நடத்திக் கொண்டிருந்த "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற நாட்டியக்குழுவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அதிகாரிகள் கூட ஜெயலலிதாவை மதிக்கத் தயாராக இல்லை. அவர்களிடமும் கெஞ்சிக் கூத்தாடி தான் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் எம்.ஜி.ஆருடன் உண்டான தொடர்பு புதுப்பிக்கப்பட்டது.
இது ஆரம்பம்.
இந்த ஆரம்பம் மற்றொரு விசயம் மூலம் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமான தொடர்பை காலம் உருவாக்கிக் கொடுத்தது. அப்போது கலைஞர் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆருக்கு எதிராகச் செயல்படக் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார் என்பதனை அதிகாரப்பூர்வமாகக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அதன் பிறகே ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது நேரிடைப் பார்வையில் கொண்டு வந்தார். இதன் பிறகே மாற்றங்கள் ஒவ்வொன்றும் விரைவாக நடந்தேறத் துவங்கியது.
பட வாய்ப்பு இல்லாமல் வருமான ரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவிற்கு மறுவாழ்க்கை கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன் தான். அது எம்.ஜி.ஆரின் சாவு வரைக்கும் போய் நின்று விட்டது. எம்.ஜி.ஆரின் மரணம் ஜெயலலிதா விரும்பிய அரசியல் பாதையைக் காட்டியது. ராஜீவ் காந்தியின் மரணம் ஜெயலலிதாவிற்கு அதிர்ஷ்டக் கதவை திறந்து விட்டது.
ஜெயலலிதாவின் குணத்தைப் பற்றி ஜான் ஒரு இடத்தில் இவ்வாறு சொல்கின்றார்.
பிராமணர்கள் வக்கிலாக, ஆசிரியராக, நீதிபதியாக, விஞ்ஞானியாகவே இருந்தாலும் அவர்கள் கடைசிவரைக்கும் முழுமையான பிரமாண குணாதிசியங்களாவே இருக்கின்றார்கள். தங்களால் வர முடியாத துறை என்றால் வந்தவர்களை மடக்கிக் கொள்ளுதல் அவர்களுக்குக் கைவந்த கலை. நடிகர் ரஜினிகாந்த வரைக்கும் உதாரணமாக அடுக்கிக் கொண்டே செல்கின்றார்.
காரணம் மத்திய அரசின் செல்வாக்கை தொடக்கத்தில் ஜெயலலிதாவிற்கு உருவாக்கிக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன். அவர் கடைசி வரைக்கும் ஜெயலலிதாவை அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டு வருவதில் கர்மசிரத்தையுடன் செயல்பட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் ஜெ. வுக்குச் சாதி அபிமானம் என்ற ஒரே நோக்கத்தில் பலவிதங்களில் உதவியாக இருந்துள்ளனர். அது எந்த அளவுக்கு இருந்தது என்றால் ராஜீவ் காந்தி சென்னையில் நேரு சிலையைத் திறக்க வரும் போது ஜெயலலிதாவும் அதில் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று எம்.ஜீ.ஆரை மிரட்டிப் பார்க்கும் அளவிற்கு மத்திய அரசின் லாபி வட்டம் கச்சிதமாகச் செயல்பட்டது.
மற்ற துறைகளை விட அரசியல் என்பது வித்தியாசமான துறை. உச்சத்தை அடைந்தவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள், இவர்கள் இருவரையும் அனுசரித்துத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள். இந்த மூன்று வகையினர் தான் நம்மை மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மூன்று வட்டத்திற்குத் தொடர்பில்லாத தன் உழைப்பு தன் வாழ்க்கை என்று எப்போதும் போல மக்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவரவருக்குப் பிடித்த கொள்கைகள், விருப்பங்கள் என்ற எளியத் தத்துவத்திற்குள் தங்களைப் பொருத்திக் கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்கள். எம். ஜி.ஆரும் இப்படி வாழ்ந்து முடிந்து போயிருக்க வேண்டியவர் தான். ஆனால் தன் முயற்சியில் மனம் தளராத எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் பயணம் என்பது தன்னம்பிக்கையின் மொத்த சாராம்சம்.
தான் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் அதனை எப்பாடுபட்டவது நிறைவேற்றி விடுவது என்ற கொள்கையில் எம்.ஜி.ஆர் கடைசி வரையிலும் உறுதியோடு வாழ்ந்துள்ளார். இன்று வரையிலும் ஈழப் போராட்டத்திற்குக் குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர் செய்ய உதவிகள் அனைத்தும் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அதற்கு மத்திய அரசாங்கம் விடுத்த மிரட்டலும் அதனைத் தாண்டி நான் ஏற்கனவே அவர்களுக்குப் பணம் கொடுத்து விட்டேன் என்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆனால் அன்று மத்திய அரசிடம் இவரின் செயல்பாடுகளைப் போட்டுக் கொடுப்பவராகத்தான் ஜெயலலிதா இருந்துள்ளார். ஈழ விசயத்தில் கடைசிவரைக்கும் நடிகையாகத் தான் வாழ்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நடிகர் என்ற ஒரு வார்த்தையைத் தாண்டி தமிழக மக்களின் வாழ்க்கையோடு எந்த அளவுக்குக் கலந்துள்ளவர் என்பதனை சரியாகப் புரிந்து கொண்டவர் அறிஞர் அண்ணா. 1952 க்குப் பிறகு துணை நடிகர் மூலம் அண்ணாவைச் சந்தித்தார். அதுவரையிலும் காங்கிரஸ் அபிமானியாகவே இருந்தார். திமுக வில் எம்.ஜி.ஆர் வந்த பிறகே சூரியன் என்ற சின்னம் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழே உள்ள மொத்த மக்களிடமும் சென்று சேர்ந்து. அது வரையிலும் படித்தவர்கள், குறிப்பிட்ட இளைஞர்கள் கூட்டம் என்று இருந்த திராவிடக் கொள்கைகள், கட்சி, சின்னம் உழைப்பாளிகள், அடித்தட்டு மக்கள் வரைக்கும் சென்று சேர்ந்துள்ளது.
எம்.ஜி.ஆர் எப்போதும் சந்தேகம் கொள்பவராக இருந்துள்ளார். ஆனால் சரியான காரணம் தெரிந்தும் மீண்டும் அவரது இயல்பான குழந்தைத்தனமாக மாறுவதுமாகவும் இருந்துள்ளார். ஆனால் ஜெயலலிதா இதில் இருந்து வேறுபாடானவர்.
ஒவ்வொரு செயல்பாட்டிலும் வன்மமும், வக்கிரமும் கொடி கட்டிப் பறந்துள்ளது. அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துவிதமான அயோக்கியத்தனங்களையும் கூசாமல் செய்துள்ளார். தான் நினைத்ததை அடைந்த பின்பு கூட அவரால் தனது குணாதிசியங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்த போதிலும் உருவான சூழ்நிலைகள் ஒவ்வொன்றும் அவருக்குரியதாகவே மாறிப் போனதும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவரின் செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாற்றியது.
தமிழக மக்களின் மாறாத மனோபாவங்கள் ஒரு புறம். அதை எந்தக் காலத்திலும் மாற்றிவிட ஆசைப்படாத ஆட்சியாளர்களின் தந்திரங்கள் மறுபுறம். இன்று வரையிலும் ஒவ்வொரு வாக்களானும் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவதன் மூலம் தாங்கள் இன்னமும் எம்.ஜி.ஆரின் விசுவாசி என்று காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கின்றார்கள்.
ஆனாலும் காலம் அவருக்குத் தான் வாய்ப்பு வழங்கியது.
வெற்றியாளர்களை மட்டுமே இந்தச் சமூகம் கொண்டாட விரும்புகின்றது. அப்போது அந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள மோசமான விசயங்கள் அனைத்தும் மறக்கப்படுகின்றது. மாற்றப்படுகின்றது.