நான் ரசித்த "பழைய குப்பைகள்" எனும் புத்தகம் குறித்தொரு பார்வை...
ஆசிரியர் : ஜோதிஜி திருப்பூர்...
வாழ்வின் எல்லாத் தருணமும் லைக்கும், கமெண்டும் மட்டுமே முழு திருப்தியையும், மகிழ்வையும் கொடுத்துவிடுவதில்லை. சில நேரம் காரணமின்றியே ஒரு சோர்வு வரும், சோர்வு வரும் தருணங்களிலெல்லாம் மனம் தனிமையை விரும்பும். மனம் தனிமையை விரும்பும் தருணங்களில் உடன் ஒரு புத்தகம் இருந்தால் அத்தனிமையும் இனிமையாகும். அப்படியொரு தருணத்தில் என் மனதிற்கு உரமாகப் போகிறது என்று தெரியாமலே கையிலெடுத்தது தான் இப்"பழைய குப்பைகள்."
புத்தகத்தின் துவக்கத்திலே ஆசிரியர் சொல்லிவிடுகிறார் இது என் முழு சுயசரிதை அல்லவென்று. புத்தகத்தின் உட்சென்று பார்த்தபின் நமக்கும் அது புரிகிறது...
புத்தகத்தினுள் இதுவரை தான் கடந்து வந்த பாதைகள் பற்றிச் சொல்கிறார். தன் அனுபவங்களைச் சொல்கிறார். தனக்குப் பிடித்ததை சொல்கிறார். தனக்குப் பிடிக்காததை சொல்கிறார். தான் ரசித்ததைச் சொல்கிறார். தனது ஊரை அறிமுகப்படுத்துகிறார். தனது நண்பர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். ஓடித்திரிந்த தெருக்கள், உட்கார்ந்து அரட்டை அடித்த பாலம், நாள் முழுக்க அமர்ந்து இருந்த பஞ்சாயத்து போர்டு குட்டிச்சுவர்கள் எனத் தான் ரசித்த அத்தனையும் சொல்கிறார். தனது வேலையைப் பற்றி சொல்கிறார். தன் குடும்பம், குழந்தைகள் பற்றி சொல்கிறார்...
தன் அம்மாவைப் பற்றி அறிமுகப்படுத்துகையில் "கஷ்டப்படுவதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் பெண்கள் எனும் கொள்கையை இன்றுவரையிலும் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் அம்மா" என்ற ஒற்றை வரியின் மூலம் அவர்கள் கடந்து வந்த பாதையின் மொத்த வலியையும் வாசகர்களின் இதயத்தில் இறக்கிவிட்டு நகர்கிறார்...
சாதாரணமாகவே அருகில் இருக்கையில் புரிந்து கொள்ளப்படாத நபர் அப்பா. அதற்குரிய காரணத்தை விளக்கினாலும், தான் அப்பா ஆனபின் அப்பாவின் அன்பைப் புரிந்துகொண்டு. அவர் இருந்த நேரத்தில் அவருக்குக் கொடுத்திருக்க வேண்டிய அன்பைக் கொடுத்திருக்கலாமோ என நம்மையும் அவருடன் யோசிக்க வைத்து, ஒரு நிமிடம் நின்று இருதுளி கண்ணீர் துளிகளை அவருக்குக் காணிக்கையாக்கி கனத்த இதயத்தோடே நம்மையும் அவருடன் நகர வைக்கிறார்...
இப்போது அவர் தன் மகள்களுடன் நம்மையும் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறார் கோயில், குளம், சிதிலமடைந்திருக்கும் கோயில் தேர், நமக்கெதிரே எதிர்படும் அவருக்குத் தெரிந்த முகங்கள் அத்தனையும் நமக்கும் அறிமுகப்படுத்திவிட்டு அவர்களின் ஊர் ரயில்வே ஸ்டேசனுக்கும் அழைத்துச் செல்கிறார். அழைத்துச் சென்றவர் நமது கரங்களை விட்டுவிட்டார். இப்போது அவர் கரங்களில் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டார் வழக்கமாக அவர் அமர்ந்து படிக்கும் இடத்தில் உட்கார்ந்து படிக்க துவங்கிவிட்டார்...
இப்போது அவர் அமைதியாகிவிட்டார்.
ஆனால் இதுவரை அவர் புத்தகம் மூலம் பேசியது அத்தனையும் நம்முடன் பேச துவங்குகிறது. நீ, உன்னை, உன் வாழ்வை, உன் சுற்றத்தை, உன் வேலையை, உன் நண்பர்களை, உன் ஆரோக்கியத்தை, உன் குடும்பத்தை, உன்னைச் சுற்றி நிகழும் மாற்றத்தை எல்லாம் கூர்ந்து கவனிக்கிறாயா? அவற்றையெல்லாம் ரசிக்கிறாயா? இல்லை பணம் என்ற காகிதத்தின் பின்னால் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறாயா? என்னைப்பற்றி என்னால் எழுத முடியும் போது, உன்னைப் பற்றி உன்னால் ஏன் எழுத முடியாது? என அவரது கேள்விகள் நமை நோக்கி ஆக்டோபஸ் கரங்களால் நீள்கிறது...
ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது வாசகனின் சிந்தனையை தூண்டுவது, அவனை யோசிக்க வைப்பது, அவனைச் செயல்பட வைப்பதாகவே தானே இருக்க வேண்டும். அந்த வகையில் ஜோதிஜி திருப்பூர் இம்முறையும் ஜெயித்திருக்கிறார்...
ஒரு எழுத்தாளன் என்பவன் தேனீ போல் சுறு சுறுப்பாக இருக்க வேண்டும். அவன் தேடித்தேடி தகவல்களைச் சேகரித்து தன் வாசகனிடம் சேர்ப்பிக்க வேண்டும். முதலில் "வெள்ளை அடிமைகள்" புத்தகத்தில் இந்திய வரலாறும், அடிமைகளாக வாழ்ந்த தமிழர்களின் வரலாறும். பின்பு "ஈழம் வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தில் இலங்கையைக் குறித்த ஏழாயிரம் வருட வரலாறு துவங்கி பிரபாகரன் வீழ்ந்தது வரை ஜோதிஜி திருப்பூர் அவர்களும் அதையே தான் சுணக்கமின்றி செய்திருக்கிறார்கள்...
ஒரு எழுத்தாளன் என்பவன் வாசம் வீசும் பூ போல் இருக்க வேண்டும். தன் எழுத்துக்களை சுற்றியே வாசகர்களை வட்டமிடச் செய்ய வேண்டும் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" புத்தகத்தைப் படித்த பின் தானே நமை "பழைய குப்பைகள்" எனும் இப்படைப்பையும் தேடிவர செய்திருக்கிறது அவரது எழுத்து...
என் எழுத்துகள் விற்பனைக்கு அல்ல அது என் ஆத்ம திருப்திக்கு என்று சொல்லுவதோடு நின்று விடாமல். "டாலர் நகரம்" எனும் தன் முதல் படைப்பை தவிர்த்து மற்ற படைப்புகள் அத்தனையும் இலவசமாக படித்துக் கொள்ளுங்கள் என வலைத்தளத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு. தன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடுபவர்களைத் தூரத்தில் நின்று ரசிக்கும் தாயின் மனநிலையில் தன் எழுத்துக்கள் பிறரால் வாசித்துச் சிலாகிக்கப்படுவதை ஓரமாக நின்று கொண்டு ரசிப்பதில் தானே தெரிகிறது அவரது வெற்றி...
இன்னும் சில கட்டுரைகள் மூலமாகவும் பேசுகிறார் ஆன்மீகம் பற்றி நம்முடன் அளவளாவுகிறார். தெளிவான தனது கருத்தைப் பதிய வைக்கிறார். பத்து கேள்வி பதில்களாகப் பலருக்கும் பயன்படும் வகையில் தனது அனுபவத்துடன், ஆசையையும் பகிர்கிறார். புத்தகம் படித்தவர்களுக்கு இப்பழைய குப்பைகள் மனதிற்கு உரமாவது மட்டும் திண்ணமே...
ஜோதிஜி திருப்பூர் அவர்களின் சிறப்புகளில் சில, தேவியர் இல்லம் (deviyer illam) என்ற தனது பிளாக்ல் எழுதிக் குவித்திருக்கும் எழுநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள். மொத்தம் எட்டு புத்தகங்கள். அவை ஒன்றே முக்கால் லட்சத்திற்கு மேற்பட்டோர் கரங்களில் இதுவரை போய் சேர்ந்திருக்கிறது. புதிய தலைமுறை இதழில் கவர் ஸ்டோரியாய் வந்திருக்கும் கட்டுரை. 2013, 2014 ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாய் தேர்வு செய்யப்பட்ட "டாலர் நகரம்" எனும் புத்தகம் என்ற பல சிறப்போடு எழுத்துலகில் பயணப்பட்டு கொண்டிருக்கும் உங்கள் எழுத்துகள் இன்னும் பல லட்சம் பேர்களின் கரங்களைப் போய் சேரட்டும், சேரும் என்ற பிரார்த்தனையும் வாழ்த்துக்களோடும்,
உங்கள் வாசகனாய்
அன்புடன்,
H. ஜோஸ்...
புத்தகம் படித்தவர்களுக்கு இப்பழைய குப்பைகள் மனதிற்கு உரமாவது மட்டும் திண்ணமே...
ReplyDeleteஉண்மை
உண்மை
வணக்கம்
ReplyDeleteதொடரட்டும் தங்களின் பணி எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நூல் பற்றிய மதிப்பீடு அருமை. உங்களது எழுத்தை ரசிக்கும் அந்த வாசகருக்கு பாராட்டுகள். உங்களின் எழுத்துப்பணி தொடரட்டும்.
ReplyDeleteஅருமை..உங்களின் எழுத்துப்பணி தொடரட்டும்..நன்றி.
ReplyDeleteவிமரிசனமே ஒரு பதிவாய் நன்று
ReplyDelete