அஸ்திவாரம்

Sunday, May 14, 2017

அம்மா என்ற மம்மி

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பது ஔவையார் வாக்கு. இப்போது அம்மாவின் சொத்துக்களைப் பினாமிகள் சுருட்டுகின்றனர். 

தமிழ் இளங்கோ அவர்கள் சென்ற பதிவில் விமர்சனம் மூலம் தெரிவித்து இருந்தார். அதற்காக  இந்தப் பதிவு.

கடந்த பத்தாண்டுகளாக அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்களில் இருபது வயதிற்குக் கீழாக இருந்தால் அவர்களைப் பாப்பா அல்லது அவர்கள் பெயரைச் சொல்லி அழைப்பேன். இருபதுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட பெண்களிடம் அதி முக்கியமான விசயங்கள் தவிர்த்து உரையாடல் எதையும் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தேவையெனில் எனக்குக் கீழே உள்ளவர்களிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து அவர்களிடம் வேலை வாங்கி விடுவதுண்டு. 

ஆனால் நாற்பதுக்குக் கீழே மேலே இருக்கும் பெண்களை எப்போதும் அம்மா என்று தான் அழைப்பேன். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக இப்படித்தான் நான் பணிபுரியும் இடங்களில் பெண்களிடம் உறவாடுவதுண்டு. வெளியிடங்களில் வயதான அம்மாக்கள் கடைகளில் இருந்தால் வாய் நிறைய மகிழ்ச்சியோடு அம்மா என்றழைத்து சற்று இயல்பாகப் பேச விரும்புவருடன் அரட்டை வரைக்கும் செல்வதுண்டு. 

பெண்களுக்கு அம்மா என்ற வார்த்தை முக்கியமானது. புனிதமானது. ஆனால் இந்த வார்த்தையைக் கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்துவதே இல்லை. என் மேல் எப்போதும் ஏதோவொரு காரணத்திற்காகக் கோபத்துடன் இருக்கும் என்னைப் பெற்ற பெண்மணியைக்கூட அம்மா என்று அழைப்பதை நிறுத்திவிட்டேன். நான் ஊருக்கு அலைபேசியில் அழைக்கும் போது தம்பி மனைவியிடம் என் டார்லிங் இருக்காங்களா?? என்றோ எங்கே அந்தக் கோபக்காரக்கிழவி என்று தான் செல்லமாகக் கேட்பதுண்டு. அவர்கள் என்னைத் திட்டுவார்கள். அறிவுரை சொல்வார்கள். காரணம் அம்மா என்ற வார்த்தையின் உண்மையான புனிதத்தைத் திட்டமிட்டே ஒரு பெண்மணி தந்திர விளம்பரங்களால் மக்களின் மனதில் தவறுதலான பிம்பத்தை உருவாக்கி அழிக்கமுடியாத கறைகளுடன் மறைந்து போய்விட்டார். 

கட்சி, அரசியல் என்று நண்பர்களுடன் உரையாடல் தொடங்கும் போது அம்மா என்ன செய்தார்கள் என்றால்? என்று அவர்கள் தொடங்குவார்கள். நான் வேண்டுமென்றே உங்கள் அம்மா எப்போது அரசியலுக்கு வந்தார்கள்? என்று அப்பாவியாகக் கேட்டு அவர்களை வெறுப்பேற்றுவதுண்டு. பல சமயம் வாக்குவாதமாக மாறிவிடும். 

தேதி, மாதம் நினைவில் இல்லை. ஆனால் பா.ம.க. மருத்துவர் ராமதாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்த வாசகங்கள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. 

"பொருட்களுக்கு விளம்பரங்கள் செய்வது போல அம்மா என்ற பிராண்ட் உருவாக்கப்பட்டுத் தந்திரமாக மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலவசத்திற்கு ஆசைப்படும் மக்களும் அம்மா என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி அதுவே தேர்தலுக்கு அதிமுக விற்கு உதவியாக மாற்றப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது." 

மருத்துவர் ராமதாஸ் அறிக்கையை வாசித்தது முதல் இந்தப் பெண்மணி இறந்தது வரைக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்தவன் , வாசித்தவன் என்ற முறையில் எனக்குத் தோன்றுவது ஒன்றே ஒன்று தான். 

தமிழர்களில் படித்தவர், படிக்காதவர், கிராமத்துவாசி, நகரவாசி என்று பலவித பிரிவுகள் உள்ளதே தவிர இவர்கள் அத்தனை பேர்களும் ஒரே புள்ளியில் சேருமிரும் ஒன்று உண்டு. ஒருவரை நம்பத் தொடங்கி விட்டால் கடைசி வரையிலும் வேறு எவரையும் நம்புவதே இல்லை. ஒரு கடையை நம்பத் தொடங்கிவிட்டால் அவர்கள் கொள்ளை விலையில் விற்கின்றார்கள் என்றால் கூட மனதை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. அரசியலில், ஆன்மீகத்தில், வழிபாட்டு முறைகளில் இன்னும் பல விசயங்களில் மாற்றவே முடியாத மனித இனங்களில் முக்கியமான எட்டு கோடி மனிதர்களும் தமிழகத்தில் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஆறாம் வகுப்பு முதல் இன்று வரையிலும் அரசியல் செய்திகளைத் தான் முக்கியத்துவம் கொடுத்து வாசித்து வருகின்றேன். கடந்த பல ஆண்டுகளாக உருவான நண்பர்கள் மூலம் செய்திகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் அனைத்தும் புரிந்தும் விடுகின்றது. 

கூட்டணிக்கு முன், கூட்டணிக்குப் பின், கூட்டணியை நோக்கி எதிர்பார்த்துக் காத்திருக்கும் பேரங்கள், கூட்டணி அமையாவிட்டாலும் சம்மந்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் லாபங்கள் என்று அரசியல் விதிகள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகின்றது. 

நான்கைந்து வாரபத்திரிக்கைகள், மூன்று தினசரி நாளிதழ்கள், ஏதோவொன்று ஆங்கிலத் தினசரி பத்திரிக்கைகள் இதற்கு மேலாகச் சமூக வலைதளங்கள் என்று அத்தனை பக்கங்களையும் உற்றுக் கவனிக்கும் போது கடைசியில் சகதியாக இருக்கும் தண்ணீரில் இறுதியாக மிஞ்சும் அந்தக் கழிவுகள் போல எந்தச் செய்தி உண்மை? என்பதனை எளிதாக நம்மால் கண்டு கொள்ள முடியும். 

என்னவொன்று? 

நாம் தெரிந்து கொள்ள முடியும்? செயல்பட வாய்ப்பே இல்லாத உலகம் இந்த அரசியல். ஜெயலலிதா மேல் எத்தனைக் குறைகள், குற்றச்சாட்டுக்கள் சொன்னாலும் இந்தக் களத்தில் நுழைந்து, கையாண்டு, தான் விரும்பியதை சாதித்தவர் என்ற முறையிலும், கட்சியைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர் கூட நினைத்துப் பார்த்திராத உச்சத்தை அடைந்ததும் பலருக்கும் முன்னோடியாகக் கருதப்படப் வேண்டியவர். 

ஆனால் அப்படிக் கருதக்கூடிய செயல்பாடுகளைச் செய்து விட்டு சென்றுள்ளாரா? வாயைத் திறந்தால் பொய். தன் வசதிகளைப் பற்றி யோசித்த பெண்மணி. எல்லாமே குறுக்கு வழி. எப்போதும் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்க்கும் மனோபாவம். சுருக்கமாகச் சொன்னால் பெண் உருவில் இருந்த சைக்கோ. 

இன்று வரையிலும் கலைஞர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது ஊழல். ஊரை அடித்துத் தன் உலையில் போடும் தன்மை. ஆனால் அந்த ஊழலுக்குப் பின்னால் அவர் உழைக்கும் உழைப்பு, அதில் காட்டும் நேர்த்தி, அதன் மூலம் தமிழகத்திற்குக் கிடைத்த வளர்ச்சி என்பதனை எவரும் சுட்டிக் காட்டுவதே இல்லை. காரணம் மாவட்டத்திற்கு மாவட்டம் குறுநில மன்னர்கள் போல ஆட்சி புரிந்த அவசர கோலங்கள் போட்டவர்கள் ஆட்டம். 

அய்யோ நாளைக்கு நம் வீட்டுப் பத்திரம் நம்மிடம் தான் இருக்குமா? அல்லது எவனோ ஒருவன் இது என் வீடு. பத்திரத்தைப் பார். இடத்தைக் காலி செய் என்று சொல்லி விடுவார்களோ என்று உருவாக்கிய அச்சத்தை இன்று வரையிலும் இன்று செயல் தலைவராக மாறியுள்ள ஸ்டாலின் மூலம் கூடத் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை முழுமையாக மாற்ற முடியவில்லை. போராடிக் கொண்டிருக்கின்றார்கள். 

மக்களின் வாழ்வாதாரத்தின், அவர்களின் அடிப்படை விசயங்களின் மேல் கை வைத்து விடாதே? என்று எம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்தக் கொள்கை அதிமுக அன்று முதல் இன்று வரையிலும் செய்து கொண்டிருக்கும் அரசாங்கப்பணத்தைச் சூறையாடுதல் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றது. திமுக வில் குறிப்பிட்ட வட்டம் வரைக்கும் தான் தொழில் அதிபர்களாக வலம் வர முடிந்தது. ஆனால் அதிமுக வில் வந்தவன் போனவன் அத்தனை பேர்களும் தொழில் அதிபர்களாக வலம் வந்து இன்று மீள முடியாத நரககுழியில் தமிழகத்தை விழச் செய்யக் காரணமாக அமைந்துள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் ஜெ. வகுத்த பாதை. 

நீ கொள்ளையடிப்பது உன் சாமார்த்தியம். அதனை வைத்தே உனக்குப் பதவி மற்றது எல்லாம். ஆனால் கணக்கு கணக்காக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு உருவாகி விடும் என்ற அச்சத்தை விதைத்துக் கொள்ளையடிப்பதை மாநிலமயமாக்கியதோடு மக்களின் மனதையும் முழுமையாக மாற்றி வெற்றி கண்டுவிட்டார். 

இன்று தமிழர்களின் எண்ணங்களில் உருவான கீழ்த்தரமான எண்ணங்கள் அனைத்துக்கும் முக்கியக் காரணம் ஜெ. உழைக்கவே தயாராக இல்லாத கூட்டத்தை உருவாக்கியவர் ஜெ. கீழ்மட்டம் தொடங்கி மேல் மட்டம் வரைக்கும் போயஸ் தோட்டத்தைத் திருப்தி படுத்தி விட்டால் போதும்? வேறு எவரும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது எண்ணத்தை விதைத்து, வளர்த்து இன்று ஆலமரமாக்கி மறைந்து விட்டார். 

களவாணி, திருடன், திருடி, கொள்ளைக்காரி, கொள்ளைக்காரன் போன்றவர்களுக்கு மன்னிப்பு உண்டு. சட்டத்தில் இடம் இருக்கிறது. 

ஆனால் ஒரு பெரிய சமூகக்கூட்டத்தையே செயல்பட முடியாத இக்கட்டில் கொண்டு போய் நிறுத்திவிட்டவரை அம்மா என்று அழைத்தால் நாம் நம் பெற்ற தாயை எப்படி அழைப்பது? தான் ஆசைப்பட்டதை அடைவதற்காக ஒரு பெரும் கூட்டத்தைத் தன் அருகில் வைத்துக் கொண்டார் என்று நீதிபதிகள் தன் தீர்ப்பில் கூறியுள்ளனர். அப்படியென்றால் யாருக்கு யார் பினாமி? வாரி வளைத்த சொத்துக்கள் அனைத்தும் இன்று கேட்பார் இன்றி காறித்துப்பும் அளவிற்கு மாறியுள்ளதே இனிமேலாவது அம்மா என்ற வார்த்தையைக் கவனமாகப் பயன்படுத்துவோம். 

திருட்டுத்தனம் செய்பவர்களை, செய்தவர்களை ஆதரிப்பவர்கள் திருடிக் கொண்டிருப்பவர்கள் அல்லது திருடத் தயாராக இருப்பவர்கள் என்ற தானே அர்த்தம். 

இதில் நாம் யார்?


தொடர்புடைய அரசியல் பதிவுகள்







8 comments:

  1. நல்லதொரு அரசியல் பதிவு

    ReplyDelete
  2. அருமையா சொன்னிங்க ..டிவி விளம்பரங்களில் சிலவற்றை வேண்டுமென்றே அதாவது உச்சரிப்பு மாற்றி சொல்லுவார்கள் அது விளம்பர டெக்னீக் எந்த நேரமும் நம் மனம் அதை பற்றி சிந்திக்கும் அது போலத்தான் இந்த அரசியல் வியாதிகளும் எப்பவும் லைம் லைட்டில் இருக்க செய்யும் தந்திரங்கள் கணக்கிலடங்கா .

    ReplyDelete
  3. தெளிவான அருமையான உண்மையான
    அம்மா குறித்த அரசியல் பதிவு மிகமிக அருமை

    ஆனாலும் மாற்று வழி தெரியாதே
    நடு நிலையாளர்கள் கூடகுழம்பி
    இந்தக் குட்டையில் வீழந்து கொண்டிருக்கிறார்கள்
    என்பதே என் கருத்து...

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  4. "ஆணவத்தால் அழிந்தவர்" என்று சொல்லும் காலம் வரும்...

    ReplyDelete
  5. சரியாகச் சொன்னீர்கள். ஆனால் மதிப்பீடு போட்டு பார்க்குமளவு நம் மக்கள் இல்லையே.

    ReplyDelete
  6. அம்மா என்ற வார்த்தையின் புனிதத்தையே மாற்றி விட்டவர்/ மாற்ற வைத்தவர் ஜெ

    ReplyDelete
  7. அந்த அம்மணியை, அவர் உயிரோடு இருந்தவரை அம்மா என்று அவரது கட்சியினர் அழைத்த பவ்யத்திற்கும், இப்போது மற்றவர்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டலாக அம்மா என்று அழைப்பதிலும் வெவ்வேறு தொனி இருக்கிறது. இப்போது அந்த கட்சிகாரர்களின் பலருடைய கார்களில் ஜெயலலிதா படமும் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை.

    நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கோபம் நியாயமான ஒன்று.

    // இனிமேலாவது அம்மா என்ற வார்த்தையைக் கவனமாகப் பயன்படுத்துவோம். //

    என்ற அவரது யோசனையை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். அம்மா என்றால் நமது அம்மாதான். இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது அம்மா இறந்தபோது நான் எழுதிய ஒரு பதிவின் தலைப்பு ‘எனது அம்மா – என்று காண்பேன் இனி?

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.