வெளியே பேரருவி சப்தம் கேட்டது. தெருவில் இருந்த குழாயில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் மொத்தமும் அருகே இருந்த சாக்கடையில் கலந்து சென்று கொண்டிருந்தது. வீட்டின் இரண்டு கதவுகளையும் திறந்து கொண்டு வெளியே வருவதற்கு முன்பே எனக்குப் பதட்டம் வந்தது.
நடைப்பயிற்சியைத் தொடங்குவதற்கு அன்று அதிகாலையில் எழுந்து விட்டேன். பக்கத்து வீட்டின் முன்பு இந்தக் காட்சியைப் பார்த்த போது கோபத்தில் நடைப்பயிற்சியை மறந்து விட்டு குழாய் அருகே சென்ற போது தான் புரிந்தது. அந்தக் குழாயில் மேல்பகுதி முழுவதும் கழட்டப்பட்டு இருந்தது. தண்ணீர் வரும் பகுதியில் ஒரு திருகாணி மட்டும் இருந்தது. அதுவும் நசுக்கப்பட்டு இருந்தது. வயல் பகுதிகளில் பயன்படுத்தும் பம்புசெட் ல் வருகின்ற நீரின் அளவைப் போல மொத்த தண்ணீரும் வீணாகிக் கொண்டிருந்தது.
திருப்பூரில் நான் வசிக்கும் பகுதி வித்தியாசமானது. இன்று வரையிலும் தமிழகக் கிராமங்களில் தீண்டாமை கொடுமையுண்டு என்று ஆதங்கப்படுவோர் அநேகம் பேர்கள் உண்டு. அதுவே நகரமயமாக்கலில் படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகின்றது என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நகரங்களில் வசிப்பவர்களை அது வேறுவிதமாகத் தாக்கும். பெருநகரங்கள், தொழில்நகரங்கள், வளர்ந்து வரும் நகரங்களில் நீங்கள் வசிப்பவராக இருந்தால் உங்கள் வசிப்பிடங்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் அதனை உங்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதிகப் பணம் உள்ளவர்கள், பணம் உள்ளவர்கள், பணம் அன்றாட வாழ்க்கை வாழ மட்டும் சம்பாரித்துக் கொண்டு வாழ்பவர்கள், பணம் இல்லாதவர்கள் என்ற அடுக்கு நம் கண்ணுக்குப் புலப்படும். பெரும் கோடீஸ்வரர்கள் வாழும் பகுதிகளில் சாலை வசதிகள் முதல் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அரசாங்கத்தால் அன்றாடம் தெளிவாகப் பராமரிக்கப்படும். அதுவே படிப்படியாகக் குறைந்து கடைசியில் உள்ளவர்களுக்கு ஏனோதானோ என்று தான் அரசாங்க சேவைகள் கிடைக்கும்.
ஆனால் நாங்கள் வசிக்கும் பகுதியில் மேலே சொன்ன நான்கு அடுக்குகளும் கலந்து இருக்கின்றார்கள். இதனை நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக இங்கே வசிக்கின்றோம். நடைபயிற்சி தொடங்கிய போது தான் ஒவ்வொரு பகுதியில் இருந்த வீடுகளையும், மற்ற சமாச்சாரங்கள் அனைத்தும் முழுமையாகக் கண்டறிந்தேன். எத்தனை எத்தனை வேறுபாடுகள் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது.
எங்கள் வீட்டுக்கு அருகே தொழிலாளர் குடியிருப்பு உண்டு. அங்கே பத்து ஓட்டு வீடுகளில் பல ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் மது போதையினால் உருவாகும் சண்டை சச்சரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஒவ்வொரு வாரமும் கவனித்தே வந்துள்ளேன். வீட்டுக்குள் இருந்தால் சந்தின் தொடக்கம் முதல் மற்றொரு சந்தின் இறுதிப் பகுதி வரைக்கும் கலந்து கட்டிய கெட்ட வார்த்தைகள் காற்றில் கலந்து வந்து கொண்டேயிருக்கும். இது வாரந்தோறும் நடக்கும் நிகழ்வு என்பதால் எங்கள் வீட்டுக்குச் சுற்றிலும் இருப்பவர்கள் கண்டும் காணாமல் கடந்து போய்க் கொண்டிருப்பார்கள்.
அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பாடு முடிந்து குழந்தைகளுடன் வெளியே அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் போது சண்டை தொடங்கி விட்டால் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விடுவார். நான் மட்டும் அங்கே அமர்ந்து நடந்து கொண்டிருக்கும் காட்சியின் ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்துக் கொண்டிருப்பேன். அடிதடி, கூச்சல், இரைச்சல், பெண்களின் கதறல் என்று காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் காலையில் பார்த்தால் நடந்த சுவடே இல்லாமல் இயல்பான வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பியிருப்பார்கள்.
மற்ற வீடுகள் அனைத்துக்கும் மாநகராட்சி வழங்கியுள்ள குடிநீர் குழாய் இருக்கும். வீட்டுக்குள் இல்லாதவர்களுக்குத் தெருவில் இருக்கும். குறிப்பிட்ட வீடுகள் இந்தக் குழாய் என்று பாகம் பிரித்து இருப்பார்கள். சற்று வசதிபடைத்தவர்களுக்கும் இந்தத் தொழிலாளர் குடியிருப்புக்கும் சண்டை சச்சரவாகவே இருந்து வந்தது. நான் பலமுறை அலுவலகம் செல்லும் போது பார்த்துக் கொண்டு செல்வேன். கணவன்மார்கள் அலுவலகத்திற்குக் காரில் சென்ற பிறகு சுகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் காலை எட்டு மணிக்குத் தொழிற்சாலைக்குள் நுழைந்தே ஆக வேண்டிய பெண்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள். அது பலசமயம் கலவரமாக முடியும்.
ஒருமுறை நகர்மன்ற உறுப்பினர் எங்கள் சந்தின் வழியே வந்த போது எங்கள் வீட்டின் முன்னால் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருக்கின்றார்? என்பதனை மனைவி என்னுடன் சொன்னபோது வேகமாக அவரிடம் சென்று தினந்தோறும் இங்கே தண்ணீருக்காக நடக்கும் பிரச்சனைகளைப் புரிய வைத்து "தொழிலாளர் குடியிருப்புக்கு அருகே ஒரு குழாய் அமைத்துக் கொடுங்கள்" என்று கோரிக்கை வைத்தேன்.
காரணம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து அவரிடம் சொன்ன போது அது நடக்காமல் இருந்ததை உணர்ந்தே கொஞ்சம் அழுத்தமாகப் பேசினேன். அண்ணே நிச்சயம் செய்து தருகின்றேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவரை தொடர்ந்து அலைபேசி வழியாக நினைவு படுத்திக் கொண்டிருந்தேன். ஆச்சரியமாகச் சில வாரங்களில் குழாய் மாட்டப்பட்டு ஒரு சுபயோக தினத்தில் தண்ணீர் வரத் தொடங்கியது. அதன் பிறகு தான் பிரச்சனை வேறு விதமாக மாறத் தொடங்கியது. பத்துக் குடும்பங்கள் என்பதால் சற்று பெரிய அளவிலான குழாயை மாட்டிக் கொடுக்க அது பிரச்சனையின் ரூபத்தை அதிகமாக்கியது.
ஒவ்வொரு பகுதியிலும் இருந்த குடிநீர்க் குழாயை பராமரிக்கத் தனியாக ஒருவரை நகர் மன்ற உறுப்பினர் நியமித்திருந்தார். அவர் ஊமையும் கூட. இரவில், நள்ளிரவில்,அதிகாலையில், காலையில் என்று மிதிவண்டியில் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டு இருக்கும் திருகாணி போன்ற அமைப்பில் இருக்கும் சமாச்சாரத்தைத் திறந்து விட்டு அவர் வைத்திருக்கும் பெரிய விசில் மூலம் சப்தம் எழுப்புவார். அந்தச் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெருவில் உள்ள குழாய்க்கு ஓடி வருவர். இது நடைமுறையில் இருக்கும் சமாச்சாரம்.
அவர் சப்தம் எழுப்பிவிட்டு அடுத்தப் பகுதிக்குச் சென்று விடுவார். இங்குத் தான் பிரச்சனை தொடங்கியது. மற்ற இடங்களிலும் குடிநீர் குழாய் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் குடியிருப்பில் உள்ள குழாயில் உள்ள மேல்பகுதி ஒரு குடிகாரன் போட்ட ஆட்டத்தில் தனியாகக் கழன்று விட்டது. அதை மறுபடியும் மாட்ட முடியாமல், வேறு வாங்கவும் முடியாமல் துணியைச் சில நாட்கள் கட்டி வைத்திருப்பார்கள். பல சமயம் அப்படியே வைத்திருக்கத் தண்ணீர் வந்ததும் அப்படியே கொட்டத் தொடங்கி விடும்.
மற்ற வீடுகளில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து விட்டுச் சுகமாகத் தூங்கிப் பழகிவிடும் பெண்கள் மத்தியில் இரவில், நள்ளிரவில் வேலை முடித்து வந்து படுக்கச் செல்லும் தொழிலாளர்கள் காலை நேரத்தில் குறிப்பாக விசில் சப்தம் கேட்டு எழுவதில்லை. சில நாட்கள் அவர்களிடம் பகல் நேரத்தில் அங்கேயிருந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தேன். சில சமயம் வீட்டுக்குள் சென்று கத்திப் பார்த்த போதும் எவரும் கதவைத் திறந்து வெளியே வந்தபாடில்லை. தன்னிலை மறந்து தூங்குபவர்களின் உலகம் வேறுவிதமாக இருந்தது.
அன்று காலை பதட்டமாய் வேகமாகச் சென்று போராடிய போது அணிந்திருந்த உடைகள் அனைத்தும் நனைந்து விட்டது. ஐந்து நிமிடமாகப் போராடிக் கொண்டிருந்த போது என்னைப் பார்த்த மனைவி வீட்டுக்குள் இருந்த ஒரு ஆயுதத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். அதனை வைத்து மேலே உள்ள வால்வு போன்ற பகுதியைத் திருகி தண்ணீர் வருவதை நிறுத்தினேன்.
அடுத்த உலக யுத்தம் என்பது தண்ணீரை அடிப்படையாக் கொண்டது என்று சூழலியாளர்கள் கணக்கீடு வைத்துச் சொல்கின்றார்கள்.
ஆனால் தமிழர்கள் போல உலகளவில் மடச்சாம்பிராணிகள் வேறெங்கும் இருப்பார்களா? என்பது சந்தேகம். இது தொழிலாளர்கள் குடியிருப்புச் சம்மந்தப்பட்ட விசயமல்ல. நடைபயிற்சியின் நான் பார்த்த வீடுகளில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கொடுமையுண்டு.
மாநகராட்சி வழங்கியுள்ள குடிநீர்க்குழாயை எந்திரம் வைத்து அளவுக்கு மீறித் திருடுபவர்கள், பெரிய அளவிலான குழாய் வைத்து அந்தத் தண்ணீரை வீட்டுக்குள் வைத்திருக்கும் வாகனங்களைக் கழுவி கொண்டிருப்பவர்கள், வீட்டுக்குள் முன்னால் உள்ள தலைகளைத் தண்ணீர் வைத்துச் சுத்தம் செய்கின்றோம் என்று மொத்த நீரையும் வீணாக்குபவர்கள் என்று பட்டியல் பல மைல் நீளம். இங்குப் பணக்காரன் , ஏழை என்று இரண்டு பிரிவாக இருந்தாலும் சுயநலத்தின் அளவுகோல் இடத்திற்குத் தகுந்தாற் போல மாறியுள்ளதே தவிரத் தனி மனித சுயநலம் எந்த இடங்களிலும் குறைந்தபாடில்லை.
நாம் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல எந்த அருகதையும் இல்லாதவர்கள். அடிப்படை வசதிகளுக்கு அலையவிட்டால் தான் நம்மை நோக்கி தேவையற்ற கேள்விகள் வந்து தாக்காது என்பதனை அவர்கள் தெளிவாக உணர்ந்தே வைத்துள்ளார்கள்.
முந்தைய பதிவுகள்
உங்களுக்கு ஏற்பட்ட இந்த ஆதங்க அனுபவம் எனக்கும் அடிக்கடி ஏற்படும். பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் நடக்கும் கூத்துதான் இது. வீணாகப் போகும் தண்ணீர் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. யாரேனும் ஒருவர், அந்த குழாயை மூடி வைத்தாலும் மறுபடியும் சிறிதுநேரம் கழித்து அது திறந்தே இருக்கும். மக்களுக்கு பயன்படும் ஒரு பொதுக் குழாய் என்ற எண்ணமே நிறைய பேருக்கு வருவதில்லை.
ReplyDelete( உங்கள் வலைத்தளம் திறக்க நிறையவே நேரம் எடுத்துக் கொள்கிறது )
நான் இந்தியாவின் பல மாநிலங்களில் வாழ்ந்தவன். நம்மவர்களைப் போல பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் வேறு யாருமே இல்லை. சாதி, சினிமா, மூன்றாவதாக கட்சி அரசியல் இவைதான் இங்கு பேசுபொருட்கள். சமூகப் பிரச்சினைகளை, தனிமனிதப் பிறழ்வுகளை இங்கே சுதந்திரமாக விவாதிக்க வழியே இல்லை.
ReplyDelete- இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி
தனி மனித சுயநலம்
ReplyDeleteஅங்கு இங்கு என்ற வித்தியாசம் இன்றி அனைத்து இடங்களிலும்
தனி மனித சுயநலம்
தெருவில் பலர் இருக்கும் போது ஒருவன் மட்டும் தன்னிடம் பணம் இருக்கும் மிதப்பில் ஆயிரம் அடி போர் போட்டு தண்ணிரை மனம் போல் பயன்படுத்தி வாழ்கிறான். இத்தனைக்கும் அவன் நகரில் பல கோடிகள் கொழிக்கும் மருத்துவமனையில் பெரிய மருத்துவன். அவன் படித்த படிப்பு, செல்வம் அடுத்தவர் வாழ்வில் துன்பம் தருகிறது.
ReplyDeleteதண்ணீருக்கு கையேந்தும் நாள் வரும்? - மாநகராட்சி வழங்கியுள்ள குடிநீர்க்குழாயை எந்திரம் வைத்து அளவுக்கு மீறித் திருடுபவர்கள், பெரிய அளவிலான குழாய் வைத்து அந்தத் தண்ணீரை வீட்டுக்குள் வைத்திருக்கும் வாகனங்களைக் கழுவி கொண்டிருப்பவர்கள், வீட்டுக்குள் முன்னால் உள்ள தலைகளைத் தண்ணீர் வைத்துச் சுத்தம் செய்கின்றோம் என்று மொத்த நீரையும் வீணாக்குபவர்கள் என்று பட்டியல் பல மைல் நீளம். இங்குப் பணக்காரன் , ஏழை என்று இரண்டு பிரிவாக இருந்தாலும் சுயநலத்தின் அளவுகோல் இடத்திற்குத் தகுந்தாற் போல மாறியுள்ளதே தவிரத் தனி மனித சுயநலம் எந்த இடங்களிலும் குறைந்தபாடில்லை.
ReplyDeleteநாம் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல எந்த அருகதையும் இல்லாதவர்கள். அடிப்படை வசதிகளுக்கு அலையவிட்டால் தான் நம்மை நோக்கி தேவையற்ற கேள்விகள் வந்து தாக்காது என்பதனை அவர்கள் தெளிவாக உணர்ந்தே வைத்துள்ளார்கள்.
= வேதனையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
// அடிப்படை வசதிகளுக்கு அலையவிட்டால் தான் நம்மை நோக்கி தேவையற்ற கேள்விகள் வந்து தாக்காது என்பதனை அவர்கள் தெளிவாக உணர்ந்தே வைத்துள்ளார்கள்//
ReplyDeleteupcoming , Emerging politician. .
people are not bothered so long as the problem does not affect them personaly
ReplyDelete