அஸ்திவாரம்

Sunday, February 26, 2017

கருத்து சொல்ல விரும்பவில்லை

சமீப காலமாகப் பொருளாதார ரீதியாக வெற்றியடைந்தவர்களின் வாழ்க்கை முறைகளை அதிகம் கவனித்து வருகின்றேன். அவர்கள் வாழ்க்கை முறை, எண்ணங்கள், அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத் திறமை போன்றவற்றை அதிகம் கவனிக்கும் போது "அதிர்ஷ்டம்" என்ற வார்த்தையின் அர்த்தத்தையும் இணைத்துப் பார்க்கின்றேன். 

நமக்கு வயதாகும் போது நமக்குள் இருக்கும் அனுபவமும், அதன் விளைவாக உருவான எண்ணங்களையும், வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்த்த போது சில விசயங்கள் புரிந்தது. நாம் உழைப்பு என்பதனை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இவ்வுலகில் கீழ்த்தட்டு முதல் மேலே உள்ளவர்கள் வரைக்கும் அனைவருமே ஏதோவொரு வகையில் அவரவருக்குத் தெரிந்த வரையில் உழைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். 

ஆனால் எல்லோரும் பொருளாதார ரீதியாக வெற்றியடைவதில்லை. அப்போது தான் ஆன்மீகம், விதிப்பயன் போன்ற வார்த்தைகள் இங்கு அறிமுகம் ஆகின்றது. 

ஆனால் ஒரு விசயத்தை நாம் மறந்து விடுகின்றோம். நாம் என்ன தான் கடுமையான முறையில் உழைத்தாலும், அவரவர் பணியில் அதிகபட்ச திறமையைக் காட்டினாலும், நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்தந்த சூழ்நிலையோடு பொருந்திப் போயிருக்கும் பட்சத்தில் அது சாதாரண வெற்றி, அதிகப்படியான வெற்றி என்ற இரண்டு விதமான விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

"எண்ணங்கள் விளைவுகளை உருவாக்குகின்றது" என்ற வாசகம் எல்லா இடங்களிலும் பொருந்திப் போய்விடுவதில்லை. "உழைப்பதனால் மட்டுமே உயர்ந்த இடத்தை அடைந்து விட முடியும்" என்ற கொள்கையும் இந்த இடத்தில் அடிபட்டுப் போய்விடுகின்றது. 

சூழ்நிலைகள் மற்றும் சரியான நேரத்தில் சரியான விசயங்களைச் செய்வது, பலரின் ஆதரவு. இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகும் போது தான் மகத்தான வெற்றிக் கிடைக்கின்றது என்று முடிவுக்கு வர முடிந்தது. 

இதனை இந்த இடத்தில் சொல்வதற்குக் காரணம் உண்டு. ஆறு ஆண்டுகளுக்கு மேலோக 700 பதிவுகளுக்கு அப்பாற்பட்டு இன்னமும் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அரசியல் பதிவுகள் எழுதும் போது இரண்டு நாளில் அதிகபட்சம் 1500 பேர்கள் வந்து படிப்பார்கள். ஆறேழு மாதங்களில் குறிப்பிட்ட தலைப்புகள் 7000 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் படித்தார்கள் என்று புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டும். 

ஆனால் சென்ற பதிவு பல ஆச்சரியங்களையும், நம்பவே முடியாத அதிர்ஷ்டத்தையும் எனக்கு உணர்த்தியது. சட்டத்தின் பிடியில் சிக்கி, இறந்து போன ஏ1 குற்றவாளி என்று அழைக்கப்படும் ஜெ. ஜெயலலிதா குறித்து எழுதப்பட்ட பதிவு இரண்டு நாளில் 3000 பேர்கள் வந்து படித்தார்கள். ஆனால் கடந்த ஏழு நாட்களில் 91 000+ பேர்கள் வந்து படித்துள்ளார்கள். 

இது எதிர்கால ஆவணம் போல இருக்க வேண்டும் என்ற கருத்தில் கொண்டு அதிக நேரம் செலவிட்டு, பலவற்றை ஒப்பிட்டு, சேகரிக்க வேண்டிய தகவல்களைச் சரிபார்த்து, ஆவணங்களை இணைத்து உறுதிப்படுத்திக் கொண்டே வெளியிட்டேன். 

அதற்குத்தான் கிடைத்த பலன் இது. 

என் உழைப்பு மட்டும் காரணமல்ல என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும். காரணம் சமூக வலைத்தளங்களின் மாற்றங்களை நாம் உள்வாங்கியே ஆக வேண்டும் என்பதனை இது எனக்கு மறைமுகமாக உணர்த்தியது. 

முகநூல் என்று அழைக்கப்படும் ஃபேஸ்புக் என்பதன் நீளம் மற்றும் அகலத்தை இதன் மூலம் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏறக்குறைய 25 பேர்களுக்குப் பகிர்ந்து இருந்தார்கள். கடந்த நாலைந்து வருடமாக இந்த முகநூலை நான் பயன்படுத்திக் கொண்டு வந்தாலும் அதன் மூலம் எனக்கு எவ்வித ஈர்ப்பும் உருவாகவில்லை. காரணம் 70 சதவிகித பேர்கள் தங்கள் குடும்பப் படங்களைப் பகிர்வதில் கவனம் செலுத்துகின்றார்கள். மீதி சாதி, மதம் போன்ற அக்கப்போர்களில் கவனம் செலுத்துகின்றார்கள். 

விரல் விட்டு எண்ணிக்கையுள்ள நபர்கள் மூலம் மட்டுமே ஊடகத்தின் மூலம் மறைக்கப்பட்ட பல விசயங்களை அந்தந்த துறைகளில் உள்ள நபர்கள் மூலம், நடைபெறும் விவாதங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. 

சமீபத்தில் கேரளாவில் நடந்த நடிகை பாவனா விற்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவு என்ற ஒரு வரிக்குப் பின்னால் பல செய்திகள் உள்ளது. குறிப்பாக முத்தூட் பைனான்ஸ் இயக்குநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது முதல் அந்தச் சமயத்தில் இந்த நடிகை எந்த நிலையில் இருந்தார் என்பது வரைக்கும் பல புதிர்கள் உள்ளது. அதற்குப் பின்னால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் யாரோ ஒருவர் போகிற போக்கில் தெளிவாக எழுதி வைத்து விட்டுச் சென்று விடுகின்றார்கள். 

இதே போலச் சமகால அரசியல் செய்திகளுக்குப் பின்னால் உள்ள பேரங்கள், மிரட்டல்கள், கூட்டல், கழித்தல் கணக்குகள் போன்ற அனைத்தும் வெளி வந்து கொண்டேயிருக்கின்றது. ஆனால் கைவிரல்களால் நகர்த்திக் கொண்டே செல்லும் பழக்கம் உள்ளவர்களால் இது போன்ற செய்திகள், நடைபெறும் விவாதங்களை எப்படி உள்வாங்குகின்றார்கள்? இதன் விளைவுகளை அவர்கள் பார்வையில் எப்படி அடுத்த முறை பகிர்ந்து கொள்கின்றார்கள் என்று யோசித்துப் பார்த்தால் "சுயபாதுகாப்பு" என்ற போர்வையில் ஒளிந்து கொள்கின்றார்கள். "நான் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்ற வாசகத்தைத் தேர்ந்து எடுத்துக் கொள்கின்றார்கள். 

பதவியில் இருப்பவர்கள், நல்ல சம்பளத்தில் பணியில் இருப்பவர்கள், ஆதாயம் கருதி அரசியல் தலைமையை ஆதரிப்பவர்கள் என இந்த மூன்று பிரிவுகளும் "காரியத்தில் மட்டும் கண்ணாக" இருக்கின்றார்கள். 

ஆனால் ஓட்டுப் போட்டு விட்டு அரசியலுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களைப் போலச் சமூகவலைத்தளங்களில் எந்த எதிர்பார்ப்புமின்றித் தங்கள் கருத்துக்களை, தங்களுக்குத் தெரிந்த விசயங்களைப் பயம்கொள்ளாது எழுதி வைக்கின்றார்கள். இதன் மூலம் பல ஆக்கபூவர்மான விவாதங்கள், முன்னெடுப்புகள், கவன ஈர்ப்பு போன்றவை சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாகவே இன்று முகநூல் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் எண்ணம் பலருக்கும் மெதுமெதுவாக உருவாகிக் கொண்டே வருகின்றது. 

அரசியல்வாதிகள் மற்றும் பிரபல்யங்கள் மனதில் கிலியடிக்கின்றது. தங்கள் முகச் சாயம் வெளி வந்துடுமோ என்று பயப்படும் சூழ்நிலை உருவாகின்றது. முகநூல் என்ற வசதியை விட வாட்ஸ் அப் என்ற தொழில் நுட்பம் இன்னமும் ஆழமாக ஊடுருவுகின்றது. பலரையும் பல விசயங்களைப் பற்றி விவாதிக்க வைக்கின்றது. பத்திரிக்கைகளால் செய்ய முடியாத அத்தனை விவாதங்களையும் முன்னெடுக்கின்றது. 

சரியோ? தவறோ? பொய்யோ? அதீத கற்பனை என்று பலவகைகளில் செய்திகள் இருந்தாலும் ஒவ்வொரு மனிதர்களின் ஆழ்மனம் வரைக்கும் இழந்து போன போராட்டக்குணத்தை மெதுமெதுவாக முன்னெடுக்கக் காரணமாக உள்ளது. சமீப காலமாக உலகம் முழுக்கக் கவனத்தை ஈர்த்த "ஜல்லிக்கட்டு" போராட்டமும், மத்திய மாநில அரசாங்கங்கள் இறங்கி வந்தது அவசரச் சட்டம் கொண்டு வந்ததற்கும் முக்கியக் காரணமாக இருந்ததும் இந்த வாட்ஸ் அப் உருவாக்கிய தாக்கம் தான். 

50 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது? என்பதனை எவரும் இங்கே ஆதாரப்படுத்தி வைக்காமல் இருந்த இந்தச் சமூகத்தில் இன்று நல்லது, கெட்டது, தேவையானது, தேவையற்றது என்ற பாரபட்சம் இல்லாத அத்தனை விசயங்களையும் இப்போதுள்ள பல்வேறு தொழில்நுட்ப வசதிகளின் மூலம் சமானியன் கூட ஆவணப்படுத்தும் அளவிற்கு இங்கே தொழில் நுட்ப மாற்றங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் உருவாகியுள்ளது. முன்பு எதனை வைத்துக் கொண்டு எதிராளியுடன் பேசுவது என்ற எண்ணம் இருந்தது. இப்போது ஒரு விசயத்தைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்துப் போட்டு பேச அத்தனை வாய்ப்புகளும் இருப்பதால் இங்கு எல்லோரும் பேச முடியும். எவரும் இது நானில்லை? என்று சொல்ல முடியாது. இது மாற்றத்தின் அடிப்படை மட்டுமே. இன்னும் பல படிகள் கடக்க வேண்டும். 

காரணம் இங்கே ஜனநாயகம் என்ற பெயரில் குடும்பச் சர்வாதிகாரமும் குறிப்பிட்ட சிலருக்குமான வாழ்க்கை வசதிகளுக்காக மட்டுமே இங்கே அரசியல் அதிகாரம் உள்ளது. அவர்களைப் பார்த்து நாம் கேள்வி கேட்க நம்மிடம் ஆதாரப்பூர்வமான தகவல்கள் வேண்டும். அந்த வேலைகளைத்தான் நவீன தொழில் நுட்ப வசதிகள் நமக்கு உருவாக்கித் தந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சில காலம் கழிந்து நம் குழந்தைகள் வாழப் போகும் உலகில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டவர்கள் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சியோடு மக்கள் முன்னிலையில் நிற்கும் சூழ்நிலையைப் புதிய மாற்றங்கள் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புகிறேன். 

இந்தப் புள்ளியின் தொடக்கத்தைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே இனி வரும் காலங்களில் பெரும்புள்ளி ஆக முடியும். மற்ற அத்தனை பேர்களின் முகமும் இப்போது சசிகலாவிற்கு நிகழ்ந்தது போலக் கரும்புள்ளியாக மாற்றப்படும்.

11 comments:

  1. ஆழமான அற்புதமான
    அவசியமான பகிர்வு
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. இன்னும் சில காலம் கழிந்து நம் குழந்தைகள் வாழப் போகும் உலகில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டவர்கள் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சியோடு மக்கள் முன்னிலையில் நிற்கும் சூழ்நிலையைப் புதிய மாற்றங்கள் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புகிறேன்.

    உண்மைதான் நண்பரே.

    ReplyDelete
  3. கரும்புள்ளி என்கிறீர்கள் ,பெரும்புள்ளிகளை இன்னும் அவரால் ஆட்டுவிக்க முடியுதே :)

    ReplyDelete
  4. ///சூழ்நிலைகள் மற்றும் சரியான நேரத்தில் சரியான விசயங்களைச் செய்வது, பலரின் ஆதரவு. இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகும் போது தான் மகத்தான வெற்றிக் கிடைக்கின்றது என்று முடிவுக்கு வர முடிந்தது. ///


    மிகச் சரியானது

    ReplyDelete
  5. சமீபத்தில் கேரளாவில் நடந்த நடிகை பாவனா விற்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவு என்ற ஒரு வரிக்குப் பின்னால் பல செய்திகள் உள்ளது. குறிப்பாக முத்தூட் பைனான்ஸ் இயக்குநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது முதல் அந்தச் சமயத்தில் இந்த நடிகை எந்த நிலையில் இருந்தார் என்பது வரைக்கும் பல புதிர்கள் உள்ளது. அதற்குப் பின்னால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் யாரோ ஒருவர் போகிற போக்கில் தெளிவாக எழுதி வைத்து விட்டுச் சென்று விடுகின்றார்கள். //

    பாவனா ஒரு பெரிய குண்டர் படையின் தலைவி என்று கேரளா நண்பர்கள் சொல்வதுண்டு, கலாபவன் மணி இறப்புக்கும் அந்த குண்டர்களுக்கும் சம்பந்தமுண்டு என்ற செய்திகள் வெளியே அவ்வளவாக தெரியவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    யாவரும் படித்து அறிய வேண்டியபதிவு எல்லாம் பணத்துக்கா என்பது தெரிகிறது.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. Thanks sir, for your writing. like to have a tea with you..

    ReplyDelete
  8. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  9. ///சூழ்நிலைகள் மற்றும் சரியான நேரத்தில் சரியான விசயங்களைச் செய்வது, பலரின் ஆதரவு. இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகும் போது தான் மகத்தான வெற்றிக் கிடைக்கின்றது என்று முடிவுக்கு வர முடிந்தது. ///


    துறை சார்ந்த அறிவு, பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை உடல் தகுதி எல்லாம் இருந்தும் கூட, லட்சியத்தை அடைய முடியாதவர்களை பார்க்கிறோம்.
    திறமையால் முன்னேற விரும்புவர்கள் அன்றாட வாழ்வில் பல நெருக்கடிகளை அவமதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
    திறமையை வெளிப்படுத்த முயல்பவர்களை வெற்றிபெற்றவர்களும், சகபோட்டியாளர்களும் நுட்பமாய் அவமதித்து சுகம் காண்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் குழப்பம் அடைவதாலும், வாழ்க்கைத் தேவைகளும் இவர்களது லட்சியப் போராட்டத்தை முடக்குகின்றன.
    திறமைக்கு ஏற்ற வாய்ப்பைப் தேட அன்றாட வாழ்க்கை பல தடைகளை போட்டுகொண்டு இருப்பதனாலும் முயற்சியைத் தொடர முடியாமல் பின் வாங்குபவர்கள் ஆரம்பத்திலேயே ஒதுங்கிக்கொள்கிறார்கள்.
    பின்னர் அன்றாட வாழ்க்கையில் கொஞ்சம் ஒழுங்கு, சில சமரசங்களுடன் கிடைக்கும் வாய்ப்பில் பொருத்திக்கொண்டு வாழ்க்கையை வாழ்வதைப் பார்க்கிறோம்.
    சிலர் திறமை குறைவாக இருப்பினும் நெருக்கடிகளும் காயங்களும் தரும் வலி தாங்கும் சக்தி உடையவர்களாக யார் மறுத்தாலும் அவமதித்தாலும் தம் திறமை மீது அசாத்திய நம்பிக்கையுடன் வெறித்தனமாகவும் கண்மூடித்தனமாகவும் செயல் பட்டு முன்னேறுகிறார்கள் வெற்றி பெறுகிறார்கள்.
    திறமையை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வைப்பதில் நல்ல வாய்ப்பும் மன வலிமையும் முக்கிய பங்கு வகிக்கிறது. I have posted the same in FB some months before and shared it here as it is..

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு அண்ணா...
    இதற்கு முன்பு ஒரு கருத்து இட்ட ஞாபகம்...
    களவாணிகள் எல்லாம் கரும்புள்ளிகளாகட்டும் நல்லவர்கள் வரட்டும்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.