அஸ்திவாரம்

Sunday, March 23, 2014

பயணமும் படங்களும் - சுவாசித்த கவிதைகள்

புகைப்படக்கலையில் எனக்குத் தீராத ஆர்வம் உண்டு. ஆனால் இதற்கு அளவு கடந்த பொறுமை தேவை. என்னிடம் சுத்தமாக இல்லை. காரணம் திருப்பூர் வாழ்க்கை கற்றுத் தந்த "நிர்வாகப் பாடங்களின்" காரணத்தினால் வேகம் என்ற வார்த்தையை மட்டுமே அதிகம் கற்றுள்ளேன். இதன் காரணமாக எது நமக்குச் சரியாக வரும்? என்பதை அடையாளம் கண்டு கொண்டு மற்றவற்றை அது சார்ந்த நபர்களிடம் ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம். 

இந்த எண்ணத்தை நான் வளர்த்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம் ஒரு பேட்டியில் இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் (இது நம்ம ஆளு படப்பிடிப்பு நடந்த சமயத்தில்) எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் சொன்ன அறிவுரையை இப்பவும் மனதில் வைத்துக் கொள்வதுண்டு. 

அவர் அப்போது பாலகுமாரனிடம் சொன்னதாக நான் படித்த வரிகள் இது. 

"நீங்க எதுக்குப் போட்டோகிராபி கத்துக்கனும்ன்னு அவங்க வேலையைக் கெடுத்துக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன வேண்டுமோ? அதை அவர்களிடம் சொன்னால், புரியவைத்து விட்டால் அவர்கள் தந்து விடுவார்கள். உங்களின் உழைப்பு இயக்குநர் வேலையில் இருந்தால் தானே அதில் தனிச்சிறப்பை காட்ட முடியும்" 

நமக்கு எல்லாத்துறையிலும் ஆர்வம் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்டத் துறையில் மட்டுமே நமக்குத் தனிப்பட்ட திறமை சற்று மேலோங்கி இருக்கும் என்பதைக் காலம் உணர்த்தும். நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் தான் படம் எடுத்துக் கொண்டிருந்த மதன் மற்றும் குமாரிடம் ஒவ்வொரு இடத்திலும் நான் எதிர்பார்ப்பதை சொல்லிவிட்டு ஆசான் உடன் உரையாடிக் கொண்டிருந்தேன். 

இதுவரையிலும் சென்னை முதல் தனுஷ்கோடி வரையிலுமான உள்ள பயணத்தில் ரசித்து வாசித்த கவிதைகள் போலப் பல படங்களை எடுத்ததை வெளியிடுகின்றேன். தொடர்ந்து திருவாவாடுதுறை குறித்த பதிவோடு இந்த பயணம் முடிவு பெறும். இங்கு வெளியிட்டுள்ள படங்கள் குறித்த தகவல்களை அந்தந்த படங்களோடு தருகின்றேன். 

நாம் வாசித்து முடிக்கும் போது அதிகச் சிந்தனைகளைத் தூண்டும் வரிகள் பல சமயம் நமக்கு மன உளைச்சலோடு சோர்வையும் தந்து விடும். 

அது போன்ற தாக்கத்தில் இருந்து கொஞ்சம் விலகி நிற்பதற்காகவும் இந்தப் படங்கள் என்னளவில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதற்காகவும் இந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு. 

நன்றி.


ஆசானின் திருச்செந்தூர் வீட்டில் எடுக்கப்பட்ட படம். இந்தச் சாவி தயார் செய்து 60 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அற்புதமாக வேலை செய்து கொண்டிருக்கின்றது.


ஆசான் வீட்டின் உள்ளே நுழைந்த போது இந்தக் கதவு என்னை சுண்டி இழுத்தது. ஆசான் வீட்டில் அவரின் அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் வசித்து வருகின்றனர். அவர்களின் பழக்கவழக்கங்களும் ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பின்னால் உள்ள வாழ்க்கை முறைகளைப் போலத்தான் உள்ளது. மொத்ததில் ஆன்மீகத்தை உயிர் மூச்சாக வைத்துக் கொண்டு எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

காலை உணவை இங்கே சாப்பிட்டு முடித்து விட்டு எல்லோரும் வெளியே சென்ற பிறகு இந்த கதவின் பக்கவாட்டில் ஏறிக் கொண்டு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பயணம் செய்து உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைத் தனத்திற்கு தீனி கொடுத்தேன்.


முக்கிய சாலையில் இருந்து ஐந்தடி தூரம் கீழே உள்ள வீடு.  கடந்த அறுபது ஆண்டுகளில் எந்த அளவுக்கு சாலையின் உயரம் உயர்ந்துள்ளது என்பதை பார்ப்பதற்காக உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படம்.


இன்று "உலகமே ஒரே கூரையின் கீழ்" என்ற தத்துவம் உருவான பிறகு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் காணாமல் போய் நவீன ரக பொருட்கள் நம் வாழ்க்கையை ஆக்ரமித்து விட்டன. சொளகு, அம்மிக்கல், ஆட்டுக்கல், போன்றவை தேவையில்லாமல் போய்விட்டது. 

எங்கள் காரைக்குடி பகுதியில் திருமணத்தின் போது சீர் கொடுப்பது முதல் அன்றாட பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது வரைக்கும் வெண்கலச் சொம்பு மற்றும் பானைகள் தான் பயன்பாட்டில் இருந்தது.  

இன்றோ எவர்சில்வர் தொடங்கி பிளாஸ்டிக் குடங்கள் என்று மாறி இன்னமும் அதன் உருவமும் வடிவமும் மாறிக் கொண்டே இருக்கின்றது. கடந்த 25 ஆண்டுகளில் இது சார்ந்த தொழிலில் ஈடுபட்ட லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது எந்த தொழிலுக்கு மாறியுள்ளார்களோ?






இந்த மின் விசிறியின் வயது அரை நூற்றாண்டு. இன்று வரையிலும் அற்புதமாக வேலை செய்து கொண்டிருக்கின்றது. 

விளம்பரம் தேவைப்படாமல் இருந்த வரைக்கும் உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவரும் தரத்தில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தார்கள்.  இன்று விளம்பரங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்று மாறிய நிலையில் மக்கள் பையில் உள்ள பணத்தை அவர்கள் அனுமதியோடு எப்படி திருடுவது  என்பதாக தொழில் முறைகள் மாறியுள்ளது. 

இப்படித்தான் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு நாகரிகம் என்ற பெயரில் பலரும் பலவற்றை கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார்கள். 


திருச்செந்தூர் என்ற ஊரில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத போதும் கூட இங்கு வருகின்ற அத்தனை பக்தர்களும் சராசரி வருமானத்திற்கு கீழே உள்ளவர்களாகத்தான் உள்ளனர். இவர்கள் தான் அதிக அளவில் தென்படுகின்றனர். இது குறித்து மேலும் சில படங்கள் அடுத்த பதிவில்.


கடல் அழகு. கடலை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது அதனை விட அழகு. அழகுக்கு அழகு சேர்ப்பது போல இவர்களின் ஆட்டமென்பது மொத்தத்திலும் அழகு.


ஆசானுடன் ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஒன்றாக படித்த பள்ளிக்கூட தோழர் இவர். இருவரும் வாடா போடா என்று பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது கொஞ்சமல்ல நிறைய வியப்பாகவே இருந்தது. மாறாத குணம் இருந்தால் வாழ்க்கையின் இறுதி வரையிலும் மனதிற்குள் இருக்கும் குழந்தைத்தனம் மாறாது என்பது உண்மை தானே?


பாம்பன் பாலம் என்ற ஒரு வார்த்தை உருவாக்கும் தாக்கத்திற்காகவே எடுக்கப்பட்ட படம்.


தனுஷ்கோடி என்ற ஊருக்குள் நுழைந்த தருணத்தில் வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம். பாதை மட்டுமல்ல. பயணமும் கடினம் தான். மாறி மாறி சென்று வந்து கொண்டேயிருக்கும் ஒவ்வொரு வாகனங்களும் இந்த டயர் பாதை அடையாளத்தை வைத்து தான் வண்டியை இயக்குகின்றார்கள்.


இந்த படங்களை பதிவேற்றிக் கொண்டிருந்த போது என் அருகில் இருந்த அழகான ராட்சசிகள் நான் எழுத முடியாத அளவுக்கு கையை தடுத்து ரவுசு செய்து கொண்டிருந்தார்கள். காரணம் அவர்களை நான் அழைத்துக் கொண்டு செல்லவில்லையாம்?

இதையும் எழுதி விடுவேன் என்று மிரட்டிய போதும் நீங்க எழுதுங்க? படிப்பவர்களும் எங்களுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள் என்கிறார்கள். 

நீங்களே சொல்லுங்க. செல்லும் இடமெல்லாம் இவர்களை சுமந்து கொண்டு செல்ல முடியுமா?  இவர்களுக்கு நான் கொடுத்துள்ள அளவு கடந்த சுதந்திரம் பல சமயம் என்னையே திருப்பித் தாக்கும் பூமராங் போலவே உள்ளது. 
                                நம்புங்கள், நம் வாழ்க்கையும் கடைசியில் இப்படித்தான்.

தொடர்புடைய பதிவுகள்



23 comments:

  1. //குறிப்பிட்டத் துறையில் மட்டுமே நமக்குத் தனிப்பட்ட திறமை சற்று மேலோங்கி இருக்கும் என்பதைக் காலம் உணர்த்தும்//

    எனக்கு இதுவரை ;அப்படி எதுவும் உணர்த்தவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. அப்ப நீங்க சகலகலா வல்லவர்ன்னு அர்த்தம்.

      Delete
  2. பேசும் படங்கள் ஐயா அனைத்தும்.
    நன்றி

    ReplyDelete
  3. பதிவைபோலவே மனதை அள்ளும் படங்கள்! எல்லா இடத்துக்கும் கூட்டிச்செல்ல முடியாது தான் , ஆனால் அப்பப்போ கூட்டிட்டு போனால் தானே first hand experience கிடைக்கும் ! என் ஓட்டு ராட்சசிகளுக்கு(மருமகள்கள்) தான்!

    ReplyDelete
    Replies
    1. என்ன எழுதியிருக்கின்றார்கள் என்று கேட்டு வந்து பார்த்தார்கள். மாப்பிளைகளை கேட்டதாக சொல்லுங்க.

      Delete
  4. // மாறாத குணம் இருந்தால் - இறுதி வரை - குழந்தைத்தனம் // இதில் வேறு சந்தேகம் உள்ளதா...?

    தூக்கிப்போட்ட அம்மிக்கல், ஆட்டுக்கல் போன வருடம் மிகவும் தேவைப்பட்டது... இப்போது இரண்டு நாளுக்கு முன் தான் எடுத்து சுத்தம் செய்து வைக்க வேண்டிய நிலை மீண்டும் வந்து விட்டது...

    உங்களுக்கு யார் ஆதரவு கொடுத்தார்...? அவர்களுக்குத் தான் என்றும் உண்டு...!

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்கு நீங்க மட்டுமா ஆதரவு. பள்ளிக்கூடத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது பற்றி எழுதும் போது உங்களுக்குப் புரியம். அந்தப் புகைப்படங்கள் கைக்கு வராத காரணத்தால் இன்னமும் எழுதாமல் இருக்கின்றேன்.

      Delete
  5. பதிவு அருமை என்றால் படங்கள் மிக மிக அழகு! அஷ்டாவதானியாக இருப்பதுகடினம்தான் என்றாலும் சகல்கலா வல்லவர்களாக இருப்பவர்களும் இருக்கத்தானே செய்கின்றார்கள்! ஒருவேளை அது நுனிப்புல் மேய்வது போல ஆகிவிடுமோ! Jack of all trades, master of none !!????

    எங்கள் ஆதரவு ராட்சசிகளுக்குத்தான்! பாவம்ங்க! இப்படி அழைத்துச் சென்றால்தானே உங்களுக்குக் கிடைத்தது போன்ற நல்ல அனுபவங்கள் அவர்களுக்கும் கிடைக்கும்! பயணம் என்பது நமக்கு பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருமே! வாழிவியல் தத்துவங்களையும்!

    கடைசில ஒரு பஞ்ச் வைச்சீங்க பாருங்க அருமை!
    //நம்புங்கள், நம் வாழ்க்கையும் கடைசியில் இப்படித்தான்//

    பயணம் இதைஎல்லாம் தான் கற்றுக் கொடுக்கின்றது!!

    ReplyDelete
    Replies
    1. ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றிங்க.

      Delete
  6. Old is Gold! அதைத்தான் ஆசானின் வீடு சொல்லுகின்றது! எங்கள் வீடுகளிலும் இன்னும் அம்மி, சுளகு, ஆட்டுக்கல் இருக்கின்றன! அதன் சுவையே தனிதான்!

    ReplyDelete
  7. அந்த சாவியை போல எங்கள் கோயில் சாவியும் இருக்கும்! என்ன கொஞ்சம் நீளம் அதிகம்! ஆசான் அவர்களின் வீட்டுக்கதவு எங்கள் வீட்டுக்கதவை நினைவூட்டியது! மிக அழகாக எடுக்கப்பட்ட படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கோவிலுக்குள் உள்ளே உள்ள மடப்பள்ளி சாவியை பார்த்துள்ளேன்.

      Delete
  8. பயணமும் படங்களும் - சுவாசித்த கவிதைகள்
    திரு ஜோதிஜி அவர்களின் "பழமை போற்றும் பதிவு" = அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு ஜோதிஜி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அக்கறைக்கு நன்றி அய்யா.

      Delete
  9. ரயில்பாதையை விட, மணலில் புதைந்த வண்டிச் சக்கர தடங்களைவிட இந்தப் பதிவில் மிகவும் கவர்ந்த படங்கள் நாம் மறந்தே போன முறம் (சுளகு?) , அம்மி, குழவி, ஆட்டுக்கல் தான்!

    எங்கள் ஸ்ரீரங்கம் வீடு போல இருக்கிறது, ஆசானின் வீடு. பூட்டே கிடையாது ஸ்ரீரங்கம் வீட்டிற்கு. தாழ்ப்பாளைப் போட்டு ஒரு கரண்டியை சொருகிவிடுவார் எங்கள் பாட்டி!

    எனது தோழி என் வீட்டிற்கு வந்தபோது, நாங்கள் இருவரும் 'டி' போட்டுப் பேசியதை அவள் பையன் விழிகள் அகலப் பார்த்துக்கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது.

    எல்லா புகைப்படங்களும் ஒருமுறையாவது பாம்பன் பாலத்தின் மேல் பயணம் செய்ய வேண்டுமென்கிற தீராத ஆசையை ஏற்படுத்துகின்றன. அழகான ராட்சசிகளுக்கே எங்கள் வோட்டு!

    நான் இதுவரை இந்தியாவை விட்டு வெளியே போனதேயில்லை. என் கணவர் பார்க்காத நாடுகள் இல்லை. அதனால் அ.ரா. களுக்கே வோட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. அ.ரா இப்பத்தான் படுக்கப் போனாங்க. இந்தப் படங்கள் யாருக்காவது பழைய நினைவுகளை கிளறும் என்றே நினைத்தேன். உங்களின் உணர்வு பூர்வமான விமர்சனம் அதிக மகிழ்ச்சியைத் தந்தது.

      Delete
  10. படங்களும் தகவல்களும் சிறப்பு. இன்னும் இந்த பொருட்கள் எங்கள் வீட்டிலும் இருக்கிறது என்று நினைக்கும் போது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது..

    ராமேஸ்வரம் சென்றதில்லை தங்கள் பதிவுகளை பார்த்தபின் கண்டிப்பாக செல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்பட்டுள்ளது..

    அழகான ராட்சசிகளே அமைதி காக்கவும்.. நல்ல பிள்ளைகள் அல்லவா..

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாண்டியன். அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள்.

      Delete
  11. ஆசான் வீட்டு கதவு – சாவி, அவருடைய எளிமையான வாழ்க்கை மற்றும் அவர் வீட்டு பொருட்கள் – எல்லாமே செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்பதனை விளக்குகின்றன. இந்த பதிவில் படங்கள் , கருத்துக்கள் எல்லாமெ சுவாரஸ்யமானவை.

    முடிந்தவரை உங்களால் முடியுமானால், சூழ்நிலை ஒத்து வருமானால், வெளியூர்ப் பயணத்தின்போது உங்கள் குடும்பத்தாரையும் அழைத்துச் செல்லுங்கள். நான் சிறுவயதில் என் பெற்றோர் அழைத்துச் சென்றதால் இராமேஸ்வரம், தனுஷ்கோடி சென்றதுதான். அதன்பிறகு அங்கு செல்ல இதுவரை சந்தர்ப்பமே வாய்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் செய்கின்றேன். ஆனால் திடீர் பயணங்கள் மற்றும் குழந்தைகளின் பள்ளிக்கூட வாழ்க்கை தான் பிரச்சனையாக உள்ளது.

      Delete
  12. "முக்கிய சாலையில் இருந்து ஐந்தடி தூரம் கீழே உள்ள வீடு. கடந்த அறுபது ஆண்டுகளில் எந்த அளவுக்கு சாலையின் உயரம் உயர்ந்துள்ளது என்பதை பார்ப்பதற்காக உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படம்."

    செம செம :-) எப்படி வரைமுறை இல்லாம போட்டு இருக்காங்க பாருங்க!!!

    படங்கள் ரொம்ப நன்றாக உள்ளது.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.