அஸ்திவாரம்

Wednesday, March 26, 2014

ஆன்மீகம் எனப்படுவது யாதெனில் - 2


ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகள் தேர்தல் சமயங்களில் மட்டுமல்ல எப்போதுமே பேசக்கூடாத விசயங்கள் பல உண்டு. அது சரியாக இருந்தாலும் பெரும்பான்மையினர் ஆதரவு இல்லாதபட்சத்தில் அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். 

தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையை எடுத்துக் கொள்வோமே?  கூடங்குளம் அணுமின் உலை என்பது மிகப் பெரிய கேடு விளைவிக்கும் செயல் என்று அனைவருக்குமே தெரியும்? பத்து தலைமுறைகளையும் வாழ முடியாத அளவுக்கு நாசகார விளைவை தரக்கூடிய சமாச்சாரமது. எந்த அரசியல்வாதியாவது வாயைத் திறக்கின்றார்களா? ஒப்புக்குச் சப்பாணி போலத்தான் உளறி வைக்கின்றார்கள். காரணம் பெரும்பான்மையினர் ஆதரவு இதற்கு இல்லாமல் இருப்பதே இந்தப் போராட்டங்கள் தீவிரப் பாதைக்குச் சென்று சேரவில்லை. 

அத்துடன் நடுத்தரவர்க்கமென்பது எவன் செத்தால் எனக்கென்ன? நாம் பிழைத்திருக்க என்ன வழி? என்று யோசிக்கக்கூடிய வர்க்கமாக இருப்பதால் (இன்று என் வசதிகளுக்கு மின்சாரம் தேவை)அடுத்த தலைமுறைக்குக் கேடு வந்தால் எனக்கென்ன ஆச்சு? என்பதால் மட்டுமே வருடக்கணக்கில் இடிந்தகரை மக்களின் அஹிம்சை போராட்டமானது இன்னமும் முடிவே தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றது. 

இதே போலத்தான் சாதி மற்றும் மதம் குறித்து அரசியல்வாதிகள் மட்டுமல்ல தனி மனிதர்கள் கூட அதிகம் வாய் திறப்பதில்லை. மதம் குறித்து எழுதினால் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் வந்து நிற்பார்கள். சாதி குறித்து எழுதினால் அனானி ரூபத்தில் ஆவியாக வந்து நிற்பார்கள். அவரவர் சிந்தனைகளைத் தங்கள் மனதிற்குள் தான் வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். தேவைப்படும் சமயங்களில் தேவைப்பட்ட இடங்களில் தேவையான அளவிற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். 

தனக்குப் பாதிப்பை உருவாக்காது என்ற நிலையில் மட்டுமே ஒருவர் பலதரப்பட்ட தத்துவங்களை வாரி வழங்குவார். இத்துடன் கடவுள் சார்ந்த சிந்தனைகளையும் சோர்த்து வைத்து பார்த்து விடலாமே? 

"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை" என்று பொதுப்படையாக பழகியவர்களிடம் சொல்லிப் பாருங்க. உங்களை மேலும் கீழும் பார்ப்பார்கள். சிலரோ துணிந்து "இரத்தம் சுண்டினால் தானாகவே நம்பிக்கை வந்து விடும்" என்பார்கள்.

இதற்கு மேலாக. "அவர் பக்திமான். இது போன்ற தப்புகள் எல்லாம் அவர் செய்திருப்பார் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது" போன்ற ஐஎஸ்ஐ சான்றிதழ் கொடுக்கும் மனிதர்களையும் பார்க்க முடியும். அதாவது "ஆன்மீகம் என்பது வாழ்க்கை நெறியல்ல. அதுவொரு அங்கீகாரத்தைத் தேடித்தரும் சமாச்சாரம்".

"நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன்" என்று சொல்பவர்களைக் காட்டிலும் அதிகப் பிரச்சனைக்குரியவர்கள் "நான் கடவுள் நம்பிக்கையற்றவன்" என்பவர்கள் தற்போதைய சமூகத்தில் ஒரு நாடக நடிகர் போலவே வாழ்ந்தாக வேண்டும்.

அம்மா ஒரு திசை, மனைவி ஒரு திசை, என்று வீடு ஒரு திசையில் செல்ல இவன் மட்டும் வாயால் கம்பு சுழற்றுவதே வாடிக்கையாக இருக்கும். 

"என் மனைவிக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. ஆனால் எனக்கில்லை. நாங்கள் கோவிலுக்குச் செல்வோம். நான் வெளியே இருப்பேன். அவர் உள்ளே சென்று வணங்கி விட்டு வருவார்" . போன்ற திரைக்கதைகளை இந்த நடிகர்கள் வாயால் கேட்கலாம். இத்தனை விளக்கமாக எழுதும் நான் இதில் எந்த இடத்தில் இருக்கின்றேன் என்ற கேள்வி வாசிக்கும் பொழுதே உங்கள் மனதில் தோன்ற வேண்டுமே? 

அதற்கு முன்னால் தற்போதைய சமூகச் சூழ்நிலையில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களும் இந்த ஆன்மீகம் என்ற வார்த்தையை எப்படிப் பார்க்கின்றார்கள்? கடவுள் பக்தி என்பதை எப்படிப் புரிந்து வைத்துள்ளார்கள்? 

'இறை நம்பிக்கை' என்பது தற்போதைய மக்களிடத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கியுள்ளளது? என்பதைப் பற்றி நாம் புரிந்து கொள்ளச் சில மனிதர்களின் அனுபவங்களைப் பார்த்து விடுவோம். இவர்கள் நான் பார்த்து பழகிக் கொண்டிருக்கும் மூன்று நிலையில் உள்ள மனிதர்கள். 
துவொரு பெரிய ஏற்றுமதி நிறுவனம். கடந்த பத்தாண்டுகளாகப் பல விதங்களில் உச்சத்தைத் தொட்ட நிறுவனமும் கூட. ஆனால் தற்பொழுது இறுதி மூச்சில் இன்றோ? நாளையோ? என்று போய்க் கொண்டிருக்கின்றது. தொழில் ரீதியான காரணக் காரியங்கள் நமக்குத் தேவையில்லை. ஆனால் அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பற்றி அவரின் குணாதிசியம் தான் பார்க்க வேண்டும்.  அந்த நிறுவனத்தின் காசாளர் முதல் கணக்காளர் வரை ஒவ்வொரு வருட வங்கிக் கணக்கு ( மார்ச் மாதம்) முடியும் சமயங்களில் இரண்டு நாட்களில் (மட்டும்) ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். 

வருடத்தின் மற்றத் தினங்களில் உலையில் துடிக்கும் அரிசி போலத் தவித்துக் கொண்டிருப்பார்கள். காரணம் சார்பு நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை காரணமாக இருவரும் அதிகளவில் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்கள். சிலர் வர வேண்டிய தொகையை வசூலிக்க முடியாத கோபத்தில் அலுவகத்திற்கே வந்து இவர்களை பொளந்து கட்டிக் கொண்டிருப்பார்கள். அசைந்து கொடுக்க வேண்டுமே?

நிர்வாகம் எவருக்கும் அத்தனை எளிதாகக் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையைக் கொடுத்து விடுவதில்லை. முடிந்தவரையிலும் இழுத்துப் பார்க்கும். முரண்டு பிடிக்கும் போது பாதித் தொகை கொடுத்து மீதி காந்தி கணக்கில் ஏற்றி விடுவார்கள். ஆனால் முதலாளி ஒவ்வொரு வருடத்திலும் தவறாமல் புதுக்கணக்குப் போடுவதற்கு முன்பு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் குடும்பதோடு சென்று விடுவார். செல்லும் போது இரண்டு பெரிய சூட்கேஸ் நிறையப் பணமும் போகும். காரணம் அந்த வருட லாப நட்ட கணக்கின் அடிப்படையில் வெங்கடாஜலபதிக்கு சேர வேண்டிய தொகையை உண்டியலில் போட்டு விட்டு வருவார். காரணம் வெங்கி அவர்கள் இந்த நிறுவனத்தின் சைலண்ட் பார்ட்னர். 

வர் நெருங்கிய நண்பர் தான். இருபது வருட பழக்கம். இருவரின் ஊரும் அருகருகே தான் உள்ளது. கடந்த ஆறு வருடமாக வேலையில்லாமல் இருக்கின்றார். அவர் மனைவிக்குக் கோவில் கட்டி கும்பிடலாம். அந்த அளவுக்குப் பொறுமையான பெண்மணியை வேறெங்கும் காண முடியாது. இக்கடான சூழ்நிலையில் கூட இருப்பதை வைத்து சமாளித்து விடுவார். குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். பள்ளி கல்லூரிக்குச் செல்கின்றார்கள். வறுமை என்ற வார்த்தை ஒரு குடும்பத்தில் என்னவெல்லாம் செய்யும் என்பதை அவர்கள் வாழ்க்கையில் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.  

ஆனால் நண்பர் காலையில் எழுந்தவுடன் திவ்யமாகக் குளித்து முடித்து நெற்றி நிறையப் பட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினால் ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பார். பத்து மணி வாக்கில் சிக்கியவனை அழைத்துக் கொண்டு டாஸ்மாக் கடைக்குச் சென்று விடுவார். ஒவ்வொரு முறையும் பார்க்கும் பொழுதெல்லாம் அவர் வேலையைப் பற்றி ஞாபகப்படுத்துவேன். உடனடியாக வார்த்தைகள் வந்து விழும். பகவான் பல்லாக்குழி ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார். சனி சுயதிசையில் என்ன செய்வாருன்னு உங்களுக்குத் தெரியாதது அல்ல? என்பார். "அது தான் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றேன்" என்பார். 

இடைப்பட்ட நேரத்தில் கட்டுமரமாய் சேவை செய்து கொண்டிருப்பார். 

வரின் வயது அறுபதுக்கு மேல் இருக்கும். மெல்லிய தேகம். ஆனால் களையான முகம். எவரிடமும் அநாவசியமாகப் பேச மாட்டார். கடமையே கண். தானுண்டு தன் வேலையுண்டு என்கிற நிலையில் இருப்பார். நூறு சதவிகிதம் நேர்மையான மனுஷி. நான் அம்மா என்று தான் அழைப்பேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் கூட்டிப் பெருக்கும் பணியில் இருக்கின்றார். என் அறைக்கு இவர் மட்டும் உரிமையுடன் வந்து போய்க் கொண்டிருப்பார். 

எனக்குத் தேவையான ஒவ்வொன்றும் இடைவெளி விட்டு வந்து கொண்டேயிருக்கும். பல சமயம் உரிமையுடன் "அதை எடுத்து குடித்து விட்டு வேலையைப் பாருங்களேன்" என்று அதட்டுவார். எவரையும் குறை சொல்ல மாட்டார். சென்ற வாரத்தில் பல நாட்கள் ரொம்பச் சோர்வாகவே தெரிந்தார். காரணம் கேட்ட போது விரதம் என்றார். நான் மேற்கொண்டு எதையும் கேட்டுக் கொள்ள விரும்பவில்லை. 

சில தினங்களுக்கு முன்பு மதிய வேளையில் பயந்து கொண்டே என் அருகே வந்து "ரெண்டு நாள் லீவு வேண்டும்" என்று கேட்டார். ஏன்? என்று கேட்ட போது கொண்டாத்தா (இந்தப் பகுதியில் உள்ள பெருமாநல்லூர் என்ற ஊரில் உள்ள காளி கோவிலில் வருடந்தோறும் மிக விமரிசையாக நடக்கும் தீ மிதித்தல் )கோவிலில் விசேடம் என்றார்.

"அதுக்கென்ன காலையில் போய்க் கும்பிட்டு விட்டு வந்துடுங்க" என்றேன். "இல்லை பூ மிதிக்கின்றேன்" என்றார்.

சற்று குரலை உயர்த்திச் சப்தம் போடத் தொடங்கினேன். 


"ஏம்மா விளையாடுறியா? புருஷன் இல்லை. கல்யாணம் செய்து ஒரு வருஷத்துல போயிட்டாரு. குழந்தை குட்டிகளும் இல்லை. அக்கா வீட்டில் தான் இத்தனை காலமும் தங்கியிருக்குறே? வாங்குற சம்பளத்தையும் செலவழிப்பதில்லை. இங்கே உங்களுக்கு எந்தக் குறையுமில்லை. இந்த வயசுல போய்த் தீ மீதிக்கிறேன்னு சொல்றீங்க? இது தேவையா?" என்று சொன்னது தான் தாமதம் கரகரவென்று கண்ணில் நீர் வழிய "நீங்க எதுவேண்டுமானாலும் சொல்லுங்க. ஆனால் ஆத்தாவுக்குப் பூ மிதிக்கற பற்றி மட்டும் எதுவும் சொல்லாதீங்க. போன ஜென்மத்திலே நான் செய்த பாவமெல்லாம் இத்தோட போயிடனும். அது தான் என் ஆசை" என்றார். 

தொடர்புடைய பதிவு 

ஆன்மீகம் என்பது யாதெனில்? 

கடற்கரைச் சாலை பயணக்குறிப்புகள்

பயணமும் படங்களும்

26 comments:

  1. முதலாவது பக்கா வியாபாரம்...

    இரண்டாவது மொள்ளமாரித்தனம்...

    மூன்றாவது பாவம் அறியாமை...

    ஒவ்வொன்றிக்கும் திருமந்திரம் - பதில்கள்...? (!)

    ReplyDelete
    Replies
    1. திருமந்திரத்தை சுட்டிக்காட்டியமைக்கும் உணர்த்தியமைக்கும் நன்றி.

      Delete
  2. தங்கள் வாழ்வில் கடந்துவந்த சில தனிப்பட்ட நபர்களின் செயல்பாட்டினை இங்கே மேற்கோள் காட்டியுள்ளீர்கள். இவற்றை வைத்து அதிகபட்சமாகப் போனால் இவர்கள் செய்யும் ஆன்மிகம் போலியானது என்று வேண்டுமானால் நிறுவலாம், ஆனால் எது சரியான வழி என்ற கேள்விக்கு பதிலைத் தர இவை உதவாது. ம்ம்ம்........... தொடருங்கள்.................

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது ஜெய். அமுதவன் சொன்ன மாதிரி கடைசி பதிவுக்கு உங்கள் சிலிர்ப்பு என்ன சொல்கின்றது என்பதை காண ஆவல்.

      Delete
  3. மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்
    எனக்கு மிகவும் பிடித்த திருமூலவரின் வரிகள் ஐயா .

    ReplyDelete
    Replies
    1. ஆனால் எத்தனை பேர்கள் உணர்கின்றார்கள்?

      Delete
  4. கருத்துடன் என் கடமையைச் செய்வதே உன் வழி பாடு என்பதை இறைவா, நான் கற்றுக்கொள்வேனாக .

    கடமையைச் செய்வதே கடவுள் வழிபாடு.
    ஆகையால் அதில் மேலானது கீழானது என்பதில்லை. சுயநலம் படைத்தவனே கடமையைத் தொல்லையென்று கருதுகிறான். சலிப்பும் சஞ்சலமும் சுயநலத்தினின்று வருகின்றன். ஆகையால் கடமையைக் கருத்துடன் செய்யாதவன் ஒழுக்கம் தவறியவனே. தொடர்ந்து மகிழ்வுடன் தன் கடமையைச் செய்பவன் கடவுளுக்கு உகந்த கருவியாகிறான்.
    நான் படிக்கும் தினசரி தியானம் புத்தகத்திலிருந்து கடமையே கடவுள் வழிபாடு என்பதை பகிர்ந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மொத்த பயணத்தின் சாரத்தை அழகாக சுருக்கி கொடுத்தமைக்கு நன்றிங்க.

      Delete
  5. உங்களின் அருகிலேயே நானும் நிற்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. விட்டு விடாதீங்க. உங்களைத்தான் நம்பி இருக்கேன். என்னையும் கூட்டிட்டு போங்க பகவான்ஜீ. (பெயர் என்ன பொருத்தம்?)

      Delete
  6. முதலாவதில் அந்த முதலாளிக்குக் கடவுள் நம்பிக்கை என்பது வியாபாரம், முழுநேர வியாபாரம், நான் உனக்கு இதைக் கொடுக்கிறேன், நீ எனக்கு அதைக் கொடு என்னும் பண்டமாற்று! இதை எல்லாம் ஆன்மிகத்தில் சேர்ப்பதா? ஆன்மிகம் வேறு பக்தி வேறு.

    இரண்டாவதில் சோம்பேறித்தனம் மிகுந்த அந்த நண்பர் தான் மட்டும் சுகமாய் வாழ வழி கண்டு பிடித்துவிட்டுக் கடவுள் மேலும் நவகிரஹங்கள் மேலும் பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். இது முழுக்க முழுக்க சுயநலம், ஏமாற்றுதல். பொறுப்பின்மை.

    இந்த அம்மாவுக்கு மூட நம்பிக்கை. கணவன் ஒரு வருஷத்திலே போனதுமே எவ்விதமான மனப் பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் இன்னொரு வாழ்க்கையைத் துவக்கி இருக்கலாம். தப்பே இல்லை. என்றாலும் தன்னுடைய இந்த நிலைமைக்குப் பாவம் தான் காரணம் என்று சொல்கிறார். ஓரளவுக்குப் பாவம் என்னும் வினை காரணமாக இருந்தாலும் இங்கே அவர் தெரிந்தே தன்னைத் தானே ஒன்றுமில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார். எத்தனையோ பலனுள்ள வேலைகளைச் செய்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கலாம். இம்மாதிரியான நம்பிக்கைகளே தன்னைக் கடைசியில் காக்கும் என்னும் எண்ணம். :(((

    ReplyDelete
  7. ஆன்மிகத்துக்கும் இவற்றுக்கும் சம்பந்தமே இல்லை. உடம்பே ஆலயம், உள்ளம் பெருங்கோயில் என்னும் தத்துவம் எத்தனை பேருக்குப் புரியும்? புரிந்தாலும் அதன்படி எத்தனை பேரால் நடந்து கொள்ள இயலும்? அவரவர் தன் கடமையை எவ்விதக் குறைபாடுகளுமின்றி ஒழுங்காகச் செய்தாலே போதுமே! சீவன் சிவலிங்கமாய்த் தெரிய எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ? அதுக்காகத் தான் இங்கே உருவ வழிபாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அது இப்போதெல்லாம் வியாபார ரீதியாக நடைபெற்று வருவது வருத்தமளிக்கத் தான் செய்கிறது. :(

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. நான் பேச நினைத்தெல்லாம் நீங்க எழுத்தாக பேசிட்டீங்க.

      Delete
  8. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  9. ஜோதிஜி, நிஜமாகவே நீங்க சொன்ன மாதிரி ஒரு ஈ.எஸ்.பி தான் வேலை செய்யுது போல இருக்கு...இன்று காலையில் முக நூலில் "சில நேரங்களில் அராஜகங்களின் மவுன சாட்சியாய் நாம் " எனும் தலைப்பில் தோழி ஒருவர் சர்க்கரையால் அவதிப்படுபவர் தீக்குண்டத்தில் இறங்கி கால் புண்ணாகி மருத்துவமனையில் என்பது குறித்து எழுதினேன்...இங்கு வந்து பார்த்தால் நீங்களும் அதையே கூடவே முதலிரண்டு நிகழ்வுகளும் எனக்கு பரிட்சயமானவையே.... எப்படியெல்லாம் இந்த நம்பிக்கைகள் விதைக்கப்பட்டிருக்கின்றன என்பதே என் வருத்தம்...

    ReplyDelete
    Replies
    1. இன்று வெளியிடும் பதிவைப்பாருங்க. நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

      Delete
  10. சரி, முத்தாய்ப்பாய் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாடியோவ், எப்படியோ உள்ளே வந்துட்டீங்க. இன்னும் சிறிது நேரத்தில் முத்தாய்பு கொடுக்கின்றேன். அதற்காவது உங்கள் விமர்சனம் தேவை.

      Delete
  11. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அணைத்து அறன் ஆகுல நீர பிற .

    ReplyDelete
    Replies
    1. அற்புதம் கணேசன். சரியான குறள்

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. திருமந்திரங்களின் வார்த்தைகள், வாழ்க்கைக்கான பதில்..

    தொழிலதிபரின் அறியாமை பணத்தால் மறைக்கப் படுகிறது.

    ஆனால் அது இல்லாத அந்த அம்மா ஆன்மீகத்தின் அறியாமையில் வேண்டா செயல் புரிகிறார்..

    இரண்டாமவர் வறுமைக்கு காரணம் கடவுள் என்றும் இருப்பது ஆன்மீகத்தின் அறியாமை தான்.

    உங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருப்பு..

    ReplyDelete
    Replies
    1. தொடர் பயணத்தில் பங்கெடுத்த உங்களுக்கு நன்றி பாண்டியன்.

      Delete
  14. "நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன்" என்று சொல்பவர்களைக் காட்டிலும் அதிகப் பிரச்சனைக்குரியவர்கள் "நான் கடவுள் நம்பிக்கையற்றவன்" என்பவர்கள் தற்போதைய சமூகத்தில் ஒரு நாடக நடிகர் போலவே வாழ்ந்தாக வேண்டும்.//

    மிகச் சரியான வார்த்தைகள்! கோயில்கள் வியாபாரமாகிவிட்டது! மடாதிபதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வீணர்கள்!

    எல்லாம் உளது மனதுள்ள இருக்க இன்பம் அதை வெளியே தேடி அலைவதில் என்ன பயன்??!!!!

    அன்பே சிவம் என்று திருமூலர் ஒரே வாக்கில் ஆன்மீகத்தைச் சொல்லிவிட்டாரே!

    ReplyDelete
  15. ""என் மனைவிக்கு தெய்வ நம்பிக்கை உண்டு. ஆனால் எனக்கில்லை. நாங்கள் கோவிலுக்குச் செல்வோம். நான் வெளியே இருப்பேன். அவர் உள்ளே சென்று வணங்கி விட்டு வருவார்" . போன்ற திரைக்கதைகளை இந்த நடிகர்கள் வாயால் கேட்கலாம்"

    :-)) எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது.. ஸ்ஸ்ஸ் ஷப்பா. ஒத்துக் கொள்வதில் இவர்களுக்கு அப்படி என்ன வெட்கமோ!

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.