அஸ்திவாரம்

Monday, December 30, 2013

உங்களுக்கு (ஒருவேளை) இது உதவக்கூடும்

இந்த வருடத்தின் கடைசிப் பதிவு. ஊர்ப்பக்கம் உள்ள வாழை இலை சாப்பாடு போல நிறையச் சமாச்சாரங்கள். ஏற்கனவே சொல்லியுள்ளபடி இடைவேளை விட வேண்டியதன் காரணமாகவும், இதை இரண்டு பதிவாக எழுதினால் படித்து முடியும் போது உருவாக வேண்டிய எண்ணங்கள் மாறிவிடக்கூடும் என்பதாலும் மெகா பதிவு. அவசரமாக உள்ளே வந்தவர்கள் மட்டும் அமைதியான சூழ்நிலையில் வருவீர்களாக. பிரிவோம் -சந்திப்போம்.

                                                                       o0o

நமக்குள் எப்போதும் ஒரு "பொதுப்புத்தி" வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டே தான் இருக்கின்றது. சில அனுபவங்களை நாம் சந்திக்கும் வரையிலும் இந்தப் பொதுப்புத்தி பார்வையைக் கொண்டே அனைத்து விசயங்களையும் நாம் பார்க்கின்றோம். அதன் வழியே சிந்திக்கின்றோம். 

அரசியல்வாதி என்றால்? மலையாளி என்றால்? பணக்காரன் என்றால்? நவநாகரிக உடைகள் அணிந்த பெண்கள் என்றால்? இரவில் ஒரு பெண் தனியாக நின்றால்? சினிமா நடிகை என்றால்? 

இந்தப் பட்டியல் நீளும் என்றாலும் இந்தப் பட்டியலில் தற்போது மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் என்றால்? என்ற எண்ணம் என்னுள் இருந்த 'பொதுப்புத்தி' இந்த வருடம் கொஞ்சம் மாறியுள்ளது. 

இந்த வருடத்தில் நான் சந்தித்த, உரையாடிய சில நண்பர்கள் மூலம் இந்த மாற்றத்திற்கான விதையை என் மனதில் அவர்கள் ஊன்றியுள்ளனர். 

-0O0-

இந்த வருடத்தில் தாய்மொழி சார்ந்த மயக்கங்களும் அதன் எதார்த்த எதிர்கால மாற்றத்தையும், உருவாகப் போகும் சாத்தியக் கூறுகளையும் பலரும் புரியவைத்துள்ளனர். சுருக்கமாகச் சொல்லப்போனால் வரும் காலத்தில் வளர்ந்த தொழில் நுட்பத்தில் எது வேண்டுமானாலும் வாழும் வளரும். ஆனால் அதில் உள்ள சந்தைக்கான சாத்தியக்கூறுகளும், நிறுவனத்திற்கான லாபத்தைப் பொறுத்தே ஒவ்வொன்றும் மாறும். இல்லாவிட்டால் மறையும். 

இந்த வருடத்தின் கடைசி ஆறு மாதங்களில் தமிழ் கணினி சார்ந்த பலவற்றையும், அதன் தொழில் நுட்ப சவால்களையும், இருக்கும் வாய்ப்புகள், வேகமாக வளராமல் இருப்பதற்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. மென்பொருள் துறையில் உருவாக்கும் நிறுவனம் செய்யும் கட்டுப்பாடுகளும் அதை எப்படிக் காசாக்குகின்றார்கள்?லாபமீட்டும் வித்தையைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

இதுவே தமிழ்மொழிக்காகத் தனியார் நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படும் மென்பொருள் அனைத்தும் ஏன் ஆங்கில மொழி போல அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொன்றும் முதலீடு கணக்கில் பார்க்கப்பட்டு, எதிர்பார்த்த லாபம் கிடைத்த போதிலும், சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் உள்ள மொழி ஆர்வமுள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த நிதியளிப்பு கிடைத்தும் கூட நம்மவர்களின் அதீத விருப்பங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

ஆனால் கடந்த காலக் கட்டத்தில் பலரால் இலவசமாக வழங்கப்பட்ட தமிழ்மொழி சார்ந்த மென்பொருட்களால் இன்று தமிழ் இணையத்தின வேகம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வேகத்தைப் போலவே உள்ளது. 

-0O0-

ஏற்கனவே நான் எழுதிய நண்பர் நீச்சல்காரன் குறித்த பதிவில் அவர் உருவாக்கிய நாவி மென்பொருள் குறித்தும், அவர் செய்து கொண்டிருக்கும் பணியைப் பற்றியும் எழுதியிருந்தேன். இந்த நாவியின் மேம்பட்ட அடுத்தப் பதிப்பு மிக விரைவில் வெளிவரப்போகின்றது என்பதை ஒரு உரையாடலில் அவர் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழ் கலைச்சொல் அகராதியில் உதவிக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும் விவரித்தார். 

தங்கள் சக்திக்கு முடிந்த தாங்கள் சார்ந்து இருக்கும் பணியோடு மொழி ஆர்வத்தோடு இங்கே பலரும் தங்களால் முடிந்த பங்களிப்பை இங்கே செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள். சிலர் நம் பார்வைக்குத் தெரிகின்றார்கள். பலர் இன்னும் சில வருடங்களில் நாம் அவற்றைப் பயன்படுத்தும் சமயங்களில் தெரியவரக்கூடும். 

-0O0-

பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழில் நூறு வலைபதிவுகளாக இருந்த போது எதிர்காலத் தமிழ் வலைபதிவுகள் தேசிய அளவில் முக்கியம் பெற்ற ஒரு கணினி மொழியாக மாறும் என்ற கற்பனைகள் எவரிடமாவது இருந்து இருக்குமா? இன்று தமிழ்மொழியில் நாம் பார்க்கும் எண்ணிக்கையில் அடக்க முடியாத வலைபதிவுகளும், தினந்தோறும் உருவாகிக் கொண்டேயிருக்கும் இணைய இதழ்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து இருப்பார்களா? 

ஒரு சிறிய விதை. எவரோ குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க இன்று வளர்ந்து ஆலமரமாகி உள்ளது. இன்னமும் வளரத்தான் போகின்றது.அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காமல் இருந்தாலும் தங்களின் சுய ஆர்வத்தின் மூலம் தங்களின் கடமைகளைச் செய்து கொண்டு வருகின்றார்கள்.

-0O0-

சமீபத்தில் என் தொடர்பில் வந்த சீனிவாசன் என்ற இளைஞரும் இதைப் போன்றதொரு வேலையைச் செய்து கொண்டு வருகின்றார். மென்பொருள் துறையில் இருந்து கொண்டே, நாடு விட்டு நாடு பறந்து கொண்டே பணியாற்றும் சூழ்நிலையில் இந்தப் பணியைச் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வலைபதிவுகளை, குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை, வலைபதிவில் எழுத முடியாத கட்டுரைகளை மின் நூலாக மாற்றி அதனை உலகத்தில் உள்ள தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றார்.  இதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு வேறு சில விசயங்களைப் பற்றி பேசி விடுவோம்.

-0O0-

வலைபதிவில் எழுதத் தொடங்கிச் சில வருடங்களில் ஒவ்வொருவருக்கும் உருவாகும் ஆசை புத்தகம் போட வேண்டும். நம்மை ஒரு எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. 

எனக்கும் அந்த ஆசை வந்தது. ஆனால் சற்றுத் தாமதமாக வந்தது. 

எனது இருபது வருட திருப்பூர் அனுபவங்களை மூன்று வருடமாக எழுதி அதனை ஒரு வருடமாக அடைகாத்து அதற்குப் பிறகே குஞ்சு பொறித்தது. 

இது எனக்கான வெற்றி என்பதை விட இதில் புத்தகத்திற்கான தகுதியுடைய விசயங்கள் உள்ளது. இதனை ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று ஆறு மாத காலம் இதற்காக உழைத்த 4 தமிழ்மீடியா குழுமத்திற்கும் திரு. மலைநாடன் அவர்களுக்கும் அவர் என் மேல் வைத்த நம்பிக்கை சார்ந்த விசயங்களுமே அவரை முதலீடு போட வைத்துப் புத்தகம் வெளிவர காரணமாக இருந்தது. பலருக்கும் இதனைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரின் எண்ணமே நடைமுறை செயலாக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.

வெற்றியும் பெற்றுள்ளது.  எட்டில் ஒன்று (விகடன் இயர் புக் 2014

பலதரப்பட்ட விமர்சனங்கள் இந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த போதிலும் சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் அழைத்தார். அவர் ஒரு பெரிய நிறுவனத்தின் தொழிலாளர் பயிற்சிப் பிரிவில் பணியாற்றுபவர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழில் நகரத் தொழிலாளர்கள் குறித்தும் ஆய்வறிக்கையைத் தான் சார்ந்த நிறுவனத்திற்கு அளிப்பவர். "எங்களின் அடுத்த முயற்சி திருப்பூர் சார்ந்ததாக இருப்பதால் அங்குள்ள சூழ்நிலை மற்றும் தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டுப் புத்தகங்கள் தேடிக் கொண்டிருந்த போது என் நண்பர்கள் உங்கள் புத்தகத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். டாலர் நகரம் புத்தகம் எங்கே கிடைக்கும்?" என்று கேட்டார்.

-0O0-

தற்போதுள்ள புத்தகச் சந்தை குறித்துச் சுருக்கமாகப் பார்த்து விடலாம். 

இன்று இணையத் தள உதவியால் உங்களால் ஓரளவிற்குத் தமிழ்நாட்டில் உள்ள புத்தகக்கடைகள் மற்றும் பதிப்பாளர்கள், பதிப்பகங்கள் குறித்துத் தெரிந்து இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இங்கே நீங்கள் பார்க்கும் மற்றத் துறைகள் சார்ந்த கடைகளைப் போல நீங்கள் வாழும் பகுதிகளில் புத்தகக்கடைகள் இருப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது. 

அங்கே சென்றாலும் நாம் விரும்பும் புத்தகங்கள் இருக்குமா? என்பது சந்தேகமே? காரணம் புத்தகங்களுக்கான தேவை என்பது இங்கே இல்லை. வாசிப்பு என்பது பாடப்புத்தகங்கள் மட்டுமே. தினசரிகள் கொஞ்சம் மீதி வாரப்பத்திரிக்கைகள்.  அதிலும் சினிமா சார்ந்த செய்திகள்.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் பாடங்களை "நன்றாக படி" என்றே வலியுறுத்துகின்றார்கள். கல்வி "நிறுவனங்களும்" அதனையே சொல்கின்றது. படித்து, வளர்ந்து, வருமானம் வரப்பெற்றவர்களுக்கும் இந்தப் புத்தக வாசிப்பு என்பதும் அவரவர் தேவைப் பொறுத்தே தமிழ்நாட்டில் உள்ளது.  ஆனால் 70 சதவிகிதம் படித்தவர்கள் கூட புத்தக வாசிப்பு தேவையில்லாதவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இதைவிட வாசிப்பு பழக்கம் உள்ளவர்களை பைத்தியம் போல பார்க்கப்படும் பழக்கமும் நம்மவர்களிடமும் உண்டு.

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்குப் புத்தகங்களைப் பெறுவதற்கான நடைமுறை சிக்கல்களும், சாத்தியக்கூறுகளும் தமிழ்ப் புத்தகப் பரப்பை நாளுக்கு நாள் சுருக்கிக் கொண்டே தான் வருகின்றது. ஆன் லைன் வசதிகள் உருவாக்கிய தாக்கம் கூட தமிழ் புத்தக உலகில் மிகப் பெரிய வாசகர் வட்டத்தை இன்னமும் உருவாக்கவில்லை.

0o0

சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, புனைவுகள், கவிதைகள், கலைக் களஞ்சியம் என்று இது தொடர்பான பல பிரிவுகள் இருந்தாலும் என்ன மாதிரியான ஆதரவு இதற்கு உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் உண்மைகள் கசக்கத்தான் செய்யும்? 

கவிதை என்றால் வெளியிடுபவர் அவரே வைத்துக் கொண்டு நண்பர்களைப் பார்க்கும் போது இலவசமாகக் கொடுக்க உதவும். கட்டுரைகளுக்கும் இதே நிலைமைதான். இதைப் போல ஒவ்வொரு பிரிவுக்கும் சொல்லிக் கொண்டே செல்லலாம். பிறகு எப்படித்தான் புத்தகங்கள் விற்கின்றது?  இதற்கு மேலும் தமிழ்நாட்டில் புத்தகங்களை சந்தைப்படுத்தி வெற்றி காண்பது என்பது ஏறக்குறைய சாக்கடையை தூர்வாரி அள்ளுவதற்குச் சமம். இன்றைய அலங்கோல ஆட்சியில் "அடிமைப்படை அம்மாவாசைகள்" அமைச்சர்களாக இருப்பதால் நூலகத்துறை என்பது ஒட்டடை படிந்து போயுள்ளது.

வருடந்தோறும் புத்தகச் சந்தைகள், விளம்பரங்கள், இணையத் தளங்களில் பலரும் "படித்ததும் பகிர்வதும்" என்று படம் காட்டுகின்றார்களே என்ற கேள்வி வர வேண்டுமே? 

குறிப்பிட்ட சிலரின் புத்தகத்திற்குக் குறிப்பிட்ட சாத்தியக்கூறுகள் மட்டுமே இங்குள்ளது என்பது தான் உண்மை. அதுவும் ஆங்கிலப் புத்தகச் சந்தைகள் போல மகத்தான வெற்றி என்றெல்லாம் கூற முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ் நூல்களுக்கான சந்தை என்பது வாழும் ஜனத் தொகையை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவே. 

"தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் இனி தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுமே இல்லை என்பதாகக்கூட இருக்கக்கூடும். அந்த அளவிற்கு இங்கே ஒவ்வொருவரும் மிகத் தெளிவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்." 

"பெரும்பாலான மக்களுக்கு பணம் என்பது பிரச்சனையல்ல. அவர்களின் மாற்றிக் கொள்ள முடியாத மனோபாவம் தான் இங்கே சவாலாக உள்ளது".

0o0

உங்கள் கைகளில் மிக முக்கியமான சமூகத்திற்குத் தேவைப்படும் ஆவணம் ஒன்று உள்ளது. அதனை உங்களுக்குத் தெரிந்த ஒரு பதிப்பகத்தில் கொண்டு போய்க் கொடுத்துப் பாருங்கள். உங்களை மேலும் கீழும் தான் பார்ப்பார்கள். காரணம் இது காசாகுமா? என்ற சந்தை தான் இங்கே ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றது. 

ஒரு புத்தகம் போட குறைந்தபட்சம் முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரைக்கும், அதன் தரம் பொருத்து, வடிவமைப்புக் கொண்டு முதலீடு செய்யப்படுகின்றது. அதுவும் குறைந்த பட்சம் 300 புத்தகங்கள் என்கிற ரீதியில் மட்டுமே. இங்குப் புத்தகங்களில் இருக்கும் கருத்துக்கள் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. அது நம் கவலையைப் போக்குமா? என்கிற ரீதியில் பார்க்கப்படுவதால் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் சினிமா சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்கின்றது. 

இந்த 300 புத்தகங்கள் விற்பதே இங்கே குதிரைக்கொம்பாகத்தான் உள்ளது. இதன் காரணமாக "நீங்க முதலீடு செய்தால் நான் புத்தகமாகக் கொண்டு வருகின்றேன்" என்று பதிப்பகங்கள் சொல்லிவிடுகின்றார்கள். "விற்காத போது நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட வேண்டும்" என்கிறார்கள். காரணம் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு பலவகையில் பிரச்சனை தான் என்பதால்.

ஒரு வேளை உங்கள் விருப்பப்படி உங்களின் புத்தகமும் வெளிவந்த பிறகு உங்களின் நெருக்கமான/நெருக்கமற்ற நட்பு வட்டாரங்களை இந்த புத்தக விற்பனைக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டாம்.உறுதி அளித்தவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். பேச்சை நிறுத்திக்கொள்வார்கள். சிலர் உதவி என்ற பெயரில் உபத்திரத்தை உருவாக்குவார்கள். இவன் பிரபல்யம் ஆக நாம் ஏன் உதவ வேண்டும் என்ற பெரிய சிந்தனைகள் உள்ளவர்களை சந்திக்க நேரிடும்? மொத்தத்தில் உங்களின் உண்மையான நட்புக்கு உங்கள் புத்தகம் விலை பேசி விடும் ஆபத்துள்ளது.

மேலும் "உங்களுக்கு இதன் மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும்?" என்ற கேள்வியை பழகுபவர்களிடமிருந்து கட்டாயம் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.இதையெல்லாம் மீறி உங்களின் அசைக்க முடியாத தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான வழியைத் தேடும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

o0o

இன்று தங்களின் தனிப்பட்ட ஆசைக்காக பலரும் தங்கள் சொந்தச் செலவில் மட்டுமே தங்களின் புத்தகத்தைக் கொண்டு வருகின்றார்கள்? இதனால் என்ன லாபம்? 

"உங்களின் ஆசைகளுக்காக புத்தகம் கொண்டு வருவது பெரிதல்ல. ஆனால் நீங்கள் இங்குள்ள சந்தைக்குரிய தகுதியான நபராக இருக்க வேண்டும் அல்லது அந்தச் சந்தையை உருவாக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். "

முப்பதாயிரம் என்பது பெரிய தொகையோ சிறிய தொகையோ உங்கள் புத்தகங்கள் எங்கும் செல்லாமல் உங்கள் வீட்டுப் பரணில் வைக்கப்பட்டு இருந்தால் அதன் மூலம் உருவாகும் மன உளைச்சல் என்பது இழந்த பணத்தைவிட அதிகமாகவே இருக்கும்.

இந்த வருடத்தில் பலரையும் பார்த்துள்ளேன். பல கதைகளையும் கேட்டுள்ளேன். 

-0O0-

மற்றொரு வாய்ப்புள்ளது. 

தற்பொழுது நாம் அனைவரும் வலைபதிவுகளில் கட்டணம் செலுத்த தேவையின்றி இலவசமாகத் தான் எழுதிக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போலத் திரட்டிகள் நம்மிடம் எந்தக் கட்டணமும் வாங்காமல் நம் எழுத்தை உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவே வலைபதிவுக்கு ஒரு கட்டணம். திரட்டிக்கு ஒரு கட்டணம் என்று காலச் சூழல் மாறினால் என்ன ஆகும். முக்கால்வாசிப் பேர்கள் எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். இது தான் உண்மை. 

இதில் நான் பார்த்த மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் பல்வேறு இணையத் தளங்களில் எடுத்து, வெட்டி ஒட்டப்பட்ட கருத்துக்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுரைகளைத் தங்கள் வலைபதிவில் போட்டு எழுத்துச் சேவை செய்து கொண்டிருப்பவர்கள் கூடக் காப்புரிமை பற்றிப் பேசுகின்றார்கள். இந்தச் சமயத்தில் மற்றொரு விசயத்தையும் நாம் யோசிக்க வேண்டும்.

o0o

எதிர்காலத் தொழில் நுட்பத்தில் இந்த வலைபதிவுகள் என்ன விதமான மாற்றங்களைச் சந்திக்கும்? இருக்கலாம்? இல்லாமல் கூட வேறுவழியில் மாறலாம். இதுவும் அப்போதுள்ள சந்தைப் பொறுத்தே கூகுள் நிறுவனம் முடிவு செய்யக்கூடும். 

காரணம் இந்த வருடத்தில் கூகுள் ப்ளஸ் வெற்றிப் பெற்றதாக மாறியது. ஏற்கனவே இருந்த கூகுள் பஸ் மறைந்தது. கூகுள் ரீடர் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. தற்பொழுது ஃபேஸ்புக் தவிர மற்ற அனைத்தும் பின் தங்கியே உள்ளது. இதை விட வேறொரு தொழில் நுட்பம் உருவானால் அதுவும் இலவசமாகக் கிடைக்கும்பட்சத்தில் நாம் அனைவரும் அங்குச் சென்று விடுவோம். 

-0O0-

என் நண்பர் இராஜராஜன் எப்போது என்னை நேரிடையாகச் சந்திக்கும் பொழுதும், அலைபேசியில் உரையாடும் பொழுதும்கேட்கும் முதல் கேள்வியே உங்க பதிவுகளைப் பேக்அப் எடுத்து விட்டீர்களா? என்பார். இந்த நிமிடம் வரைக்கும் அது போன்று நான் எடுத்ததும் இல்லை. அது குறித்துக் கவலைப்படுவதும் இல்லை. என் சார்பாக அவர் தான் இந்தப் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றார். 

அவரும், இன்னும் சிலரும் கேட்ட ஈழம் சார்ந்த கட்டுரைகளைத் தொகுப்பாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது. பல சமயங்களில் நான் எழுதிய ஈழம் சார்ந்த கட்டுரைகள் என் வலைபதிவில் பக்கவாட்டில் மேலேறி வருவதைப் பார்ப்பதுண்டு. 

சிலர் இதன் தொடர்ச்சி அடுத்து என்ன? என்று மின் அஞ்சல் வழியே கேட்பதும் உண்டு. 

நான் முதலில் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்ததே இந்த ஈழம் சார்ந்த விசயங்களுக்காக மட்டுமே. ஆனால் இதைக் காசாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாத காரணத்தினாலும், இணையம் வளர்த்த என்னை அந்த இணையத்தில் என்னைப் போன்று வந்து கொண்டிருப்பவர்களுக்காக இந்த நூலை திரு. சீனிவாசன் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக மின் நூலாகக் கொண்டு வந்துள்ளேன். முடிந்த வரைக்கும் பிழைகள் திருத்தி, விமர்சனங்களில் வந்தபடி சிலவற்றை மாற்றி, படிக்க எளிதான வகையில் உருவாக்கி உள்ளேன்.நண்பர்கள் அனைவரும் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். இந்த மின் நூல் மிகவும் பயன் உள்ள தகவல்களைக் கொண்டது என்று நீங்கள் கருதினால் உங்கள் தொடர்பில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டுகின்றேன். 
-0O0-


அதற்குக் காரணம் உண்டு. 

இன்னும் சில வருடங்களில் உருவாகப் போகும் தொழில் நுட்ப மாறுதல்களின் காரணமாக இணையப் பயன்பாடுகள் அதிகரிக்கத்தான் போகின்றன. தனி மனிதர்களின் உரையாடல் குறைந்து எதையோ ஒன்றை நோண்டிக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டே தான் வாழ்க்கை அமையப் போகின்றது. அப்பொழுது நிச்சயம் மின் நூல்களின் பயன்பாடுகள் பல மடங்கு உருவாகப் போகும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. 

இதனை மனதில் கொண்டே நண்பர் சீனிவாசன் வலைபதிவுகளை மின் நூலாக மாற்றி ஒரே இடத்தில் சேர்த்து வைத்து பலருக்கும் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பணியைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகின்றார். எவ்வித லாப நோக்கமும் இன்றி இதனைத் தனது சேவையாகக் கருதிக் கொண்டு நடத்தி வருகின்றார். 

-0O0-

இதன் மூலம் என்ன பலன்? 

உங்கள் வலைபதிவில் எழுதப்பட்ட விசயங்களை ஒரு மின் நூலாகக் கொண்டு வர முடியும். எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்குக் கணக்கீடு என்பதே இல்லை. மின் நூலாக மாறும் பட்சத்தில் அது உங்கள் வலைபதிவுக்கு வராதவர்கள் பார்வையில் பட்டு உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடத்தில் போய்ச் சேர்கின்றது. அந்தப் பணியைத் தனது தளத்தின் வாயிலாகச் செய்து கொண்டிருக்கின்றார். 

இந்தத் தளத்தில் உங்களின் மின் நூலை பதிவேற்றி வைத்து விட்டால் எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். கட்டணம் எதுவும் இல்லை. மின் நூலாக மாற்றிய பின்பு உங்கள் படைப்புக்கான அங்கீகாரமும், உங்கள் கருத்துக்கான ஆதரவும் உங்கள் காலத்திற்குப் பிறகும் எவரோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிக் கொண்டேயிருக்கும். 

தொழில்நுட்ப மாற்றத்தில் வலைபதிவுகளின் தன்மை மாறி உங்களால் பின்தொடர முடியாத சூழ்நிலையிலும் மின் நூலாக மாற்றி வைத்து விட்டால் உங்கள் படைப்புகளுக்கு அழிவென்பதே இருக்காது. திருச்சி என்ற நகரம் எப்படி இருந்தது என்று எவரோ ஒருவர் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் தேடும் போது அவர் கையில் உங்கள் திருச்சி நகர அனுபவங்கள் கிடைக்கும் பட்சத்தில் எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கும் பொழுது உங்களால் இதனைப் புரிந்து கொள்ள முடியும். 

-0O0-

 ஈழம் - வந்தார்கள் வென்றார் (மின் நூல்)

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் தோற்றுப் போன ராகுலிடம் உங்கள் அப்பா இறந்த கதை? என்று பேசத் தொடங்கினால் அவர் என்ன சொல்வார்? 

"இப்ப எங்க நிலைமையே டப்பா டான்ஸ் ஆடிப்போய் கிடக்கு. உங்க விஜயகாந்த் டெல்லியில் வாங்கின ஓட்டு மாதிரி வரும் தேர்தல் ஆயிடுமோங்ற பயத்திலே நாங்க இருக்கோம். அப்பா ஆட்டுக்குட்டின்னு நீ வேற? "என்பார்.

காரணம் ராஜீவ் காந்தி படுகொலை என்பது அவர்கள் குடும்பமே மறந்து இன்று எந்த வகையில் எந்த இடத்தில் அறுவடை செய்ய முடியும்? என்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இன்று இந்திய ராணுவத்திடம் இலங்கைக்குச் சென்ற  அமைதிப்படை? என்று கேள்விக்குறியோடு போய் கேட்டுப் பாருங்கள். பலரும் ஓய்வு பெற்று, அது குறித்துத் தெரியாத புதிய தலைமுறைகள் தான் தற்பொழுது பணியில் இருப்பார்கள். 

காலம் அனைத்தையும் மாற்றிவிடும். 

ஆனால் ஒரு வரலாற்றை ஆவணமாக்கி அதனைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படித்துப் பார்க்கும் போது பல உண்மைகள் நமக்குப் புரிய வரும் படித்துப் பாருங்கள். பல இடங்களில் திடுக்கிட்டு போவீர்கள். சில இடங்களில் உங்கள் கண்களில் ஆச்சரியம் அலையடிக்கும். என் பதிவில் உள்ள பெரும்பாலான கட்டுரைகளை இணையம் வழியே மட்டும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நான் நினைத்துள்ள முக்கியமானவற்றை நேரம் கிடைக்கும் போது மின் நூலாக மாற்றும் திட்டமும் உண்டு.

-0O0-

உங்களுக்கு இந்த திட்டம் குறித்து முழுமையாக தெரிய வேண்டுமென்றால் சீனிவாசன் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்க. உங்களிடம் இது குறித்து பேசுவதற்கு முன்பாக நானே அதை தொடங்கி வைத்தவனாக உள்ளேன். உங்களையும் அழைக்கின்றேன்.உங்கள் தளங்களில் இதைப் பற்றி எழுதினால் பலருக்கும் இந்தத் தகவல் போய்ச் சேரும். 

இங்கிருந்தே ஒவ்வொன்றையும் பெற்றேன். இந்த வருட பரிசாக நண்பர்களுக்கு இதையே கொடுக்கின்றேன்  நிச்சயம் உலகம் முழுக்க பரவி வாழும் ஈழம் சார்ந்த நண்பர்களுக்கு இந்த மின்நூல் இணையத்தின் வாயிலாக வெளியிடப்படும் போது சென்று சேரும் என்று நம்புகின்றேன்.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்க. பதில் அளிக்கின்றேன். காரணம் இந்தத் திட்டம் குறித்து, இதன் அடிப்படைத்தன்மை குறித்து முழுமையாக எழுத வேண்டுமென்றால் மேலும் இரண்டு பதிவுகள் எழுத வேண்டும்.  

உங்கள் மனதில் உள்ள கனவுகள் நிஜமாக மாற வருகின்ற 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க என் வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன். 

எனது படைப்புகளை புத்தகமாக மட்டுமே கொண்டு வர வேண்டும் என்று நினைக்கின்றேன் என்பவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வரப் போகும் 2014 ஆம் ஆண்டு உங்களின் படைப்புகள் மின் நூலாக மாற்றம் பெற்ற ஆண்டாக இருக்கட்டுமே?




Saturday, December 28, 2013

சிறந்த எட்டில் ஒன்று (ஆனந்த விகடன் இயர் புக் 2014)


இந்த வருடத்தில் எனது எழுத்துக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்.  

இன்று மதிய நேரம் கோவையில் இருந்து விஜயா பதிப்பகத்தில் இருந்து அழைப்பு வந்தது.  அப்போது தான் இந்த வருடம் விகடன் குழுமம் வெளியிட்டுள்ள இயர் புக் 2014 ல் சிறந்த எட்டு புத்தகங்கள் வரிசையில் 4 தமிழ் மீடியா படைப்பாய்வகம் வெளியிட்டுள்ள எனது முதல் படைப்பான டாலர் நகரம் நூலும் இடம் பெற்றுள்ளது என்ற தகவலை அறிந்து கொள்ள முடிந்தது. நண்பன் தெகா என்ற தெக்கிகாட்டன் அழைத்துச் சொன்னதோடு படமும் எடுத்து அனுப்பிவிட இந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்த பதிவு.




Thursday, December 26, 2013

ஒரு அடியாளின் வாக்குமூலம்

வ்வொரு முறையும் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் செல்லும் போது அங்கே உருவாகிக் கொண்டிருக்கும் கட்டிடங்களைப் பார்க்கும் போது அடி வயிறு கலங்கிப் போகின்றது. வருகிற ஆண்டு எந்த அளவுக்குக் கட்டணத்தை உயர்த்தப் போகின்றார்களோ ?  மனதில் பயமும் வந்துவிடுகின்றது. 

கடந்த எட்டாண்டுகளில் நம்ம முடியாத வளர்ச்சி. ஏற்றுமதி நிறுவனங்கள் நினைத்தே பார்க்க முடியாதது. பள்ளி முடியும் சமயங்களில் அவசரமாய் வாகனங்களில் வந்து சேரும் அப்பாக்களும், பெருத்த உடம்பை சுடிதாருக்குள் திணித்து, வேர்வையுடன் ஒப்பனை கலைந்து, மூச்சு வாங்கியபடி அலுப்போடு வந்து சேரும் அம்மாக்களையும் பார்க்கும் போது  கவிதைகளாகத் தெரிகின்றார்கள். 

அங்கே நான் காத்திருக்கும் நேரத்தில் எதிரே வரும் ஃப்ரிகேஜி குழந்தைகளைப் பார்க்கும் பொழுது இவர்கள் பால்குடி மறந்திருப்பார்களா? என்று நினைக்கத் தோன்றுகின்றது. குட்டி தேவதைகள். குழந்தைகளுக்காகக் காத்திருக்கும் சில நிமிடங்களில் கூட அப்பாக்கள் ஹெட்போனில் பேசிக் கொண்டே குழந்தைகளை இழுத்துக் கொண்டு செல்கின்றார்கள். 

இந்த வருடம் பள்ளிக்கு இளமையான புதிய உடற்பயிற்சி ஆசிரியை ஒருவர் வந்திருப்பதைப் பார்த்து விட்டுக் குழந்தைகளிடம் அவர் பெயர் என்ன? என்று கேட்ட போது "நீங்க கேட்டதை அம்மாவிடம் சொல்கின்றோம்" என்றார்கள். பழகிய மிஸ்கள் எவரும் பள்ளியில் இல்லை. இந்த வருடத்தில் அறிமுகமானவர்களும் தூரத்தில் தெரிகின்றார்கள். பெற்றோர்கள் மாடிக்குச் செல்ல அனுமதியில்லை என்கிறார்கள். குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளைச் சுமந்து கொண்டு வந்த போது எங்கள் ஊரில் உள்ள ஆரிசி ஆலைகளில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் ஞாபகம் வந்து போனது. 

மூவரில் ஒருவர் சொன்னார்.

 "அப்பா அந்த மிஸ்ஸை போய் என்னன்னு கேட்டுட்டு வாங்கப்பா?" என்றார்? 

"ஏனம்மா?" என்றேன். 

"பிடி கிளாஸ்லே விளையாட விடமாட்டுறாங்க. படிபடின்னு உயிரை எடுக்குறாங்க" என்றார். 

பலசமயம் இவர்களுக்காக அடியாள் வேடமும் போட வேண்டியுள்ளது. 

******************

சென்ற ஆண்டுத் திருப்பூரே சவக்களையாக இருந்தது. ஊரெங்கும் "வீடு வாடகைக்கு விடப்படும்" அட்டைகள் தென்பட்டது. இப்போது "அடுத்த ஆறு மாதத்திற்கு வீடே கிடைக்காது" என்கிறார் நண்பர். சீனாவும், பங்களாதேஷ் ம் பல காரணங்களால் பின்னுக்குப் போய்விட வந்திறங்கிய புதிய ஒப்பந்தங்கள் ஒப்பனை போல ஊரை மிளிர வைத்துக் கொண்டிருக்கின்றது. சென்ற வருட மின் தடையில் பாதிக்கப்பட்ட பலரையும் காணமுடியவில்லை. 

சிறிய நிறுவனங்கள் அழுத்தப்பட்ட காரணத்தினால் பலரும் தங்கள் நிறுவனங்களை வந்த விலைக்கு விற்று விட்டு வேலைக்குச் செல்பவர்களாக மாறியுள்ளனர். இந்த வருட மின் தடையும் அடுத்த வருடத்திற்கான "வேலையாட்களை" உற்பத்தி செய்து விடும் என்றே தோன்றுகின்றது. மனிதர்களையும், மனிதத்தையும் மதிக்காத பல பெரிய முதலாளிகள் ஆட்டத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கத் தொடங்கியுள்ளனர். வங்கியில் அடமானம் வைத்துள்ள சொத்துக்கள் ஏலம் விட எப்போது பத்திரிக்கையில் வருமென்று காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

வங்கி அதிகாரிகள் முடிந்தவரைக்கும் மிரட்டிப் பார்த்து விட்டு அரசியல் "அழுத்தம்" அதிகமானதும் வேறு ஊருக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு செல்ல காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஏமாற்றியே பிழைத்த அத்தனை பேர்களுக்கும் இன்று தொழிலாளர்கள் சவாலாக இருப்பதால் கையில் இருக்கும் சொத்து பெரிதா? காப்பாற்றிக் கொள்ள வேண்டிய மானம் பெரிதா? என்ற பட்டிமன்றத்திற்குப் பலரும் நடுவர்களைத் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள். 

**********************

லைஞர் உருவாக்கியது தானே? என்ற எண்ணமில்லாமல் வெற்றிகரமாகச் சென்ற மாதத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு காவல் துறை கமிஷனர் அலுவலகத்தை ஜெயலலிதா காணொளி காட்சியில் திறந்து வைக்க இப்போது முக்கியச் சாலைகளில் போக்குவரத்துக் காவலர்கள் அதிகமாகவே கண்களுக்குத் தெரிகின்றார்கள். 

பத்திரிக்கை நண்பரிடம் கேட்டேன். "இனி சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வந்து விடும் தானே?" என்றேன். 

"ஆமாம். சட்டப்படி பிரித்துக் கொடுக்க வேண்டும். அதை ஒழுங்காகக் கொடுக்கப்பட வேண்டும்" என்றார். 

முந்தைய ஆட்சியில் எல்லாத்துறையிலும் ஏழரை சதவிகிதம் என்றார்கள். மக்களும் ஏழரை ராசியில்லை என்று வீட்டுக்கு அனுப்ப இப்போது கட்டிங் அளவு உயர்ந்து பதினைந்து சதவிகிதம் என்கிறார்கள். 

கொடுமையான தண்ணீர் பஞ்சம் ஒவ்வொரு சந்து மக்களையும் தடுமாற வைக்க மக்களும் இங்கேயும் ஒரு இடைத் தேர்தல் வந்து விடாதா? என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

*************************

சாலையில் செல்லும் பொழுது பார்த்த புதிய கட்டிடங்களை விட உள்ளே செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகள் ரசிக்கும்படியாக உள்ளது. தரம் பின்னுக்குப் போய் அழகில் பொய்களைத் தேட மக்களும் பழகிவிட்டார்கள். "பிராண்ட் நேம்" பன்னாட்டு நிறுவனக் கடைகளும் இந்த வருடம் அதிகமாக வந்துள்ளது. 

கசாப்புக்கடை திறப்பு விழா முதல் தலைமுடி அலங்கார கடைகள் திறப்பு விழா வரைக்கும் பாரபட்சமில்லாது அரசியல்வாதிகள் திறந்து வைத்து மக்கள் "சேவை" செய்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு நிலையிலும் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். "கட்டிங்" என்ற வார்த்தையை தேசிய முக்கியத்துவம் பெற்ற வார்த்தையாக விக்கிபீடியாவில் கொண்டு வந்து விடலாமா? என்று ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. 

"எனது அரசு","என் ஆணை",போன்ற வார்த்தைகள் தெருவில் கிடந்தவர்களைக் கோபுரத்தில் வைத்துள்ளதால் திருப்பூர் சுகாதாரம் நாறிப்போய்த்தான் கிடக்கின்றது. பேக்கரி,  பீட்சா, பர்கர் கடைகளில் கூட்டம் அதிகமானதால் நரம்புக்கு, மூளைக்கு, முட்டிக்கு, வயிற்றுக்கு  உருவான நவீன ரக மருத்துவ மனைகளைப் போலச் சந்துக்கு நான்கு மருந்துக்கடைகளும் இந்த வருடம் அதிகமாகியுள்ளது.

மனமே வசப்படு படங்கள் பெற 4 தமிழ்மீடியா சொடுக்க


தொடர்புடைய பதிவுகள்





Monday, December 23, 2013

கணக்குபுள்ள மமோ காரியவாதி நமோ

நினைவுகள் 

சிறு வயதில் விரும்பிய இனிப்பு, உடைகள், மிதிவண்டி, சாகசங்கள் பதின்மவயதில் விரும்பிய ஆசைகள், அலங்காரங்கள் எல்லாமே திருமணம் என்ற முற்றுப்புள்ளியோடு நின்றுவிடுகின்றது. திருமணத்திற்குப் பிறகு தேடியலையும் ஒவ்வொரு விசயங்களும், விரும்பியவைகள் அனைத்தும் குறிப்பிட்ட நிலையில் நமக்கு அலுப்பைத் தந்து விடுகின்றது. ஒவ்வொன்றும் மாறி மாறி நம்மை விட்டு விலகிச் சென்று எது ஆசை? எது வாழ்க்கை? என்று தேடல்களாக மாற்றம் பெறுகின்றது.

நாம் தேடிய அனைத்தும் நினைவுகளாகவே நின்று விடுகின்றது. கொண்டாட்ட மனோநிலை மாறி கொண்டாடப்படுவர்களை வேடிக்கைப் பார்ப்பவர்களாக மாறிவிடுகின்றோம். 

இந்த வருடத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலும் ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்த்தால் மனதின் வலிமை என்ன? என்பதை உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது. சுக துக்கங்களை மனதின் உள்ளே அனுமதிக்காமல் வெளியே வைத்து வேடிக்கை பார்க்க முடிந்துள்ளது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தம் இல்லாது வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. நம்மை நாமே உணர்வது எப்படி? என்பதை இந்த வருட அனுபவங்கள் உணர்த்தியுள்ளது.

உணவின் ருசியைத் தவிர மற்ற அனைத்தும் நகர்ந்து போய்விட்டது. அடுத்த வருடம் இந்த ருசியின் தன்மை மாறிவிடக்கூடும். 

பரிசோதனை எலிகள் 

ஒரு வகையில் பார்க்கப் போனால் நாம் அனைவரும் யாரோ ஒருவரின் பரிசோதனைக்குரிய எலிகள் தான். ஒவ்வொரு சமயமும் நம்மை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பரிசோதனைகள் செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள். பல சமயம் பலரின் விருப்பத்திற்குரியவர்களாக மாற முடிவதில்லை. நாம் எதிர்பார்க்கும் நபர்களும் நாம் விரும்பும் அளவிற்கு மாறிவிடுவதில்லை. வருடந்தோறும் வாழும் சூழ்நிலையின் காரணமாக நம்முடைய சிந்தனைகளும் மாறும் என்பது தற்போது மாறி விட்டது. மாதம் தோறும் மாறிக் கொண்டேயிருக்கின்றோம். 

முக்கியக் காரணம் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பம். இல்லாத ஆசைகளை உருவாக்குகின்றது. இருக்கின்ற ஆசைகளை மேலும் வளர்க்கின்றது. சென்ற மாதம் நன்றாகத்தானே நம்மிடம் பேசினாரே? அதற்குள் ஏன் ஒதுங்கிச் செல்கின்றார் என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். பணம் மற்றும் பணம் சார்ந்த சிந்தனைகள் மட்டுமே இங்கே உறவை வளர்க்கின்றது பலசமயம் முறிய காரணமாக இருக்கின்றது.

மன்மோகன் சிங் 

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் தொழில் நுட்ப வசதிகளுக்கு முக்கியக் காரணம் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவான ஆட்சி மாற்றமும் பிரதமராக இருந்த நரசிம்மராவின் தீர்க்கதசரினமுமே ஆகும். இதனால் நல்லதும் கெட்டதும் அதிக அளவு நடந்துள்ளது. மொத்தத்தில் நாம் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய பண்டமாக மாற்றியுள்ளோம். ஆனால் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளே வந்த பிறகே நடுத்தரவர்க்கத்தின் முகச்சாயல் மாறத் தொடங்கியது.

படித்தவர்களுக்குப் பலதரப்பட்ட வாய்ப்புகள் உருவாகத்தொடங்கியது. நரசிம்மராவின் மொழிப்புலமை, அறிவுக்கூர்வை, பழுத்த அரசியல் அனுபவம் பற்றி இந்திய அரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆட்சிக்கு வந்த நரசிம்மராவுக்கு அப்போது அவர் சொல்வதைச் செய்ய ஒரு கணக்குப்பிள்ளை தேவைப்பட்டது. அப்போது கிடைத்தவர் தான் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். நிதி அமைச்சராக மாறினார்.

இந்திய அரசியலில் ஒரு வினோதம் உண்டு. அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்டவர்களாக இருக்க வேண்டும்.அதிகாரிகளை வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். மாறிக் கொண்டேயிருக்கும் அரசியல் சூழலையும் சமாளித்து பதவியையும் தக்க வைத்துக் கொண்டாக வேண்டும். 

கம்பி மேல் நடக்கும் கதை தான். 

பம்பாயில் நடந்த பயங்கரக் கலவரத்தையும், பாபர் மசூதி இடிந்ததையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தனது பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டவர் நரசிம்மராவ். ஊர்கூடி உதிரிக்கட்சிகள் ஒவ்வொன்றும் தேர் இழுத்து இவரை பிரதமராக உட்கார வைத்தது அதிர்ஷடம் என்றால் இவரோ கடைசி வரைக்கும் சமாளித்து முழுமையாக ஆட்சி காலத்தையும் ருசித்தவர் என்கிற வகையில் ஆச்சரியப்படுத்திய அரசியல்வாதி.

ஆனால் இவரின் கடைசிக் காலம் கொடுமையானது. மகன்கள் உருவாக்கிய கேவலங்கள் ஒரு பக்கம். ஆந்திரப் பிரதேச பாடப்புத்தகங்களில் நரசிம்மராவ் குறித்து வந்த பாடங்களை நீக்கும் அளவிற்கு அவமானப்பட்டு இறந்தார். இப்போதுள்ள காங்கிரஸ் சூழ்நிலையில் "கணக்குபுள்ள" மன்மோகன் சிங்கின் கடைசிக் கால வாழ்க்கையும் இதே போலத்தான் மாறப்போகின்றது. 

நரேந்திரமோடி

பிரதமராக நரேந்திரமோடி வரக்கூடாது என்பவர்கள் அவர் மதவாதி என்றும், கோத்ரா கலவரத்தையும் உதாரணம் காட்டுகின்றார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், ஆட்சி செய்த மாநிலங்களில் நடந்த மதவாத கலவரங்களின் பட்டியல் மிக நீளமானது.

இந்த வருடத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் நரேந்திர மோடி. காரணம் அலட்டிக் கொள்ளாமல் தான் நினைத்தவற்றைப் படிப்படியாக அடைந்தவர். அவர் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதியை அடைவதற்கு அவரின் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்குள்ளே இருந்த குழிபறித்தல்களை உடைத்து வந்தவர். 

பா.ஜ.க. கட்சியைத் தொடக்கம் முதல் தங்கள் கைக்குள் வைத்திருந்த லாபி மக்களைப் படிப்படியாக ஆட்டத்தில் இருந்து ஒதுக்கி வைத்து மேலே வந்தவர். நிதின் கட்காரியை ஓரே அடியாக அடித்துச் செல்லாக்காசாக மாற்றிய தந்திரசாலி.

அதன் பிறகே ஒவ்வொரு மாறுதல்களும் விரைவாக நடந்தேறத் தொடங்கியது. 

சமூக வலைதளங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தந்திரங்கள், மீடியாக்களின் பார்வையைத் தன் மேல் எப்போதும் இருக்கும்படி உருவாக்கிக் கொண்டது என்று ஒவ்வொரு படியாக ஏறிவந்துள்ளார். இவர் பிரதமராக வந்தால் ஆர்.எஸ்.எஸ் ன் கட்டுப்பாட்டில் தான் செயல்பட முடியும் என்கிறார்கள். 

நிச்சயம் அப்படியே இருந்தாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அத்தனை லாபிகளையும் தன் வட்டத்திற்குள் கொண்டு வந்து விடுவார் என்றே நினைக்கின்றேன். சோனியாவின் 'அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு'ச் சரியான போட்டி இவரின் அதிர்ஷ்டமும். 

எப்படி என்று கேட்காதீர்கள்? 

சில வருடங்களில் இது நடந்தால் அப்போது இந்தப் பதிவில் வந்து மீண்டும் மறுமொழி வாயிலாக வந்து சொல்லுங்களேன்.  அதுவரையிலும் என்னையும் "அடிப்படை ஹிந்துவ மதவாதி" என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டு செல்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

விஜயகாந்த்.

தமிழக அரசியல் சரியான இடத்திற்கு வந்து விடுவார், வளர்ந்து விடுவார் என்று சொல்லப்பட்ட வைகோ உணர்ச்சி பூர்வமான அணுகுமுறைகள் மற்றும் தெளிவற்ற கொள்கையினால் காணாமல் போனார். தொடக்கம் முதலே மருத்துவர் ராமதாஸ் என்றால் சாதீ என்ற கோரப்பல் துருத்திக் கொண்டு தெரிய குறுகிய வட்டத்திற்குள்ளே நிற்க வேண்டியதாக இருந்தது.  வன்னியர் சாதியில் இருப்பவர்களின் மொத்த ஆதரவும் அவருக்கு கிடைத்து இருந்தாலே அவர் பெரிய சக்தியாக வளர்ந்திருக்க முடியும்.

ஆனால் வன்னியர்கள் கூட தேர்தல் சமயத்தில் திமுக, அதிமுக என்ற ஏதோ ஒரு வட்டத்திற்குள் அடைக்கலமாகி விடுவதால் மருத்துவர் ராமதாஸ் இன்னமும் ஏதோவொரு கட்சியைச் சார்ந்தே இயங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றும் என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றார். வைகோ வும் பா.ஜ.க ஜீப்பில் நம்மை ஏற்றிக் கொள்வார்கள் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றார்.

திருமாவளவன், கிருஷ்ணசாமி மற்றும் ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலரும் ஒன்று சேர்ந்து ஒரு வலிமையான சக்தியாக ஒற்றுமையாக இருந்து தங்கள் இனத்திற்காக ஒன்று சேர்ந்து, கூட்டணி சக்தியாக மாறியிருந்தால் தமிழ்நாட்டில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்க முடியும்.  3013 ஆனாலும் இதற்கு வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம்.

ஆனால் ஏற்கனவே விரிவாக சொன்னபடி இவர்களை விட விஜயகாந்திற்கு தமிழக அரசியலில் நிறைய வாய்ப்புகள் இருந்தது.  திமுக, அதிமுக விற்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் உருவாகி விடும் என்றே பலரும் நம்பியிருந்தனர். ஆனால் இன்று கதாநாயகன் வில்லன் வரிசையில் தேவைப்படும் கோமாளி போலவே இவரை இன்று ஊடகங்கள் சித்தரிப்பதும், இவரும் தன்னுடைய வெளிப்படையான பேச்சால் செயல்பாடுகளால் அதையே உண்மையாக்கிக் கொண்டிருப்பதும் தான் நடந்து கொண்டு இருக்கின்றது.

"மாற்று அரசியல் பார்வை" என்பதற்கும் "மாற்றுக்கட்சி" என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை அர்விந்த் கெஜரிவால் பெற்ற வெற்றிக்குப் பின்னால் அவர் கட்சியினர் ஆற்றிய களப்பணிகளைப் பார்த்து இவர் இனியாவது கற்றுக் கொள்வாரேயானால் பிழைத்துக் கொள்வார் என்றே நினைக்கின்றேன். விகா வின் குடும்ப அரசியல் முக குடும்பம் கொடுத்த பரிசுகளைத் தான் கொடுக்கப் போகின்றது என்றே நினைக்கின்றேன்.

பழைய குப்பைகள் கழிந்து புதிய கொள்கைகள் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி அத்தியாயத்தை தொடங்கி விடாதா? என்ற எண்ணத்தில் இருக்கும் எனக்கு இந்த வருடம் திமுக, அதிமுக கட்சியில் உள்ள இணைய நண்பர்கள் என்னை "கொலவெறி பட்டியலில்" சேர்த்து இருக்கின்றார்கள் என்பதே யான் பெற்ற பலன். நான் எழுதிய, பகிர்ந்த செய்திகளுக்கு, கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு என் தைரியத்தை ஆச்சரியத்துடன் கவனித்து வந்து அழைத்து பாராட்டிய கடிதம் வாயிலாக தெரிவித்த நட்புகளுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

படங்கள்

கூகுள் கூட்டலில் தொகுத்து வெளியிடப்பட்ட 2013 கதைகள் சொல்லும் படங்களை சொடுக்க ரசிக்க  ரசிக்க 2

(அடுத்த வாரம் வெளியிடப்படும் இந்த மின் நூலை இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து எல்லாவித நவீன தொழில் நுட்ப வசதிகளின் மூலமும் நீங்கள் வாசிக்க வாய்ப்புள்ளது.) http://freetamilebooks.com/

படித்ததும் யோசித்ததும்

தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் பாராட்டு மொழிகளையும் எல்லோரிடமும் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவற்றை ஒரு மூட்டையில் சேகரித்து வைத்திருந்தாள்.   

வளர வளர அதை மறந்தும் போனாள்.  வெற்றிமிக்க இளம் பெண்ணாய் வளர்ந்து சிறந்த பிறகு அந்த மூட்டை அவள் கண்களில் பட்டது.   எழுத்துக்கள் மங்கியிருந்தன. காகிதம் இற்றுப்போயிருந்தது.  

ஆனால்,  அவளுக்கு இப்போது தன்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. அடுத்தவர்களின் அபிப்பிராயங்கள் மங்கியிருந்தன.  

நம்மை உணர்வதே நல்லது.


தொடர்புடைய பதிவுகள்




Saturday, December 21, 2013

ஊரெல்லாம் மினுமினுப்பு 2013 .

கடந்த சில மாதங்களில் பல முறை ஊர்ப்பக்கம் சென்று வந்த போது இந்த வருட மாறுதல்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அதில் சிலவற்றை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன். 
மிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து என்பது முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது. பேரூந்து நிலையத்திலிருந்து வண்டி கிளம்பும் வரைக்கும் ஓட்டுநரும், நடத்துநரும் கூவிக்கூவி அலைத்தாலும் மக்கள் கட்டணம் அதிகமென்றாலும் தனியார் பேரூந்துகளில் பயணம் செய்வதைத் தான் விரும்புகின்றார்கள்.  

திருப்பூர் முதல் திருச்சி வரைக்கும் செல்லும் வண்டிகளில் பாதித் தூரம் கடந்த பின்பு தனியார் பேரூந்துகள் நிறுத்தாத இடங்களில் நிற்கும் மக்கள் மூலம் அரசு வண்டிகளில் மக்கள் கூட்டம் சேர்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு போக்குவரத்துத் துறை அமைச்சர்களும் தற்போது தொழில் அதிபர்களாக மாறியுள்ளனர். 

ற்போது பயன்பாட்டில் உள்ள பொதுப் போக்குவரத்துத் துறை பேரூந்துகளை காயலான் கடையில் விற்றால் கூட ஐம்பதாயிரம் கூடத் தரமாட்டார்கள். பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் டயர் பழுதுபட்டு நின்று விடுகின்றது. வாகனங்களில் இருக்க வேண்டிய ஸ்டெப்னி, புது டயர்கள் இது போன்ற வசதிகள் எதுவும் இல்லை. பயணித்தவர்களை அடுத்து வரும் வண்டிகளில் ஏற்றி அனுப்பி விடுகின்றார்கள். மழை பெய்யும் போது பேரூந்தின் உள் பகுதி முழுக்க ஓழுக ஒட்டுநர் பகுதி மட்டும் கொஞ்சம் நனையாமல் இருக்கின்றது. 

திருச்சி முதல் காரைக்குடி வரை செல்லும் சாலைகள் அனைத்தும் புதுப்பெண் போல மினுமினுப்பாய் அழகாய் இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. மக்கள் பயணிக்கும் பொதுப் போக்குவரத்துதுறை வாகனங்கள் மட்டும் மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றது. நாம் பார்க்கும் மற்ற வாகனங்கள் குறைந்தபட்சம் மணிக்கு என்பது கிலோமீட்டர்க்குக் குறைவில்லாமல் வேகத்தில் நம்மைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. 

ரு நகர்புறத்தில் தொடகும் உள்ளடங்கிய கிராமங்கள் பலவற்றுக்கும் சாலை வசதிகள் சிறப்பாகப் போடப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் பயணித்தாலும் சுங்கவரி கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியாது. கையில் காசிருந்தால் மட்டுமே இனி தனி நபர்கள் வைத்திருக்கும் வாகனங்களில் பயணிப்பது சாத்தியமாக இருக்கும். 
ரங்களே தேவையில்லாத தமிழ்நாடாக மாறியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் உபயத்தால் பயன்படாமல் கிடந்த நிலங்களின் விலைகளும் தாறுமாறாக ஏறியுள்ளது. விற்பவர்களைவிட இடைத்தரகர்கள் கடந்த சில வருடங்களில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். 

ர்நாடகாவில் மழை பெய்து உபரி நீராக அவர்களுக்குத் தேவையற்றதாக மாறும் போது மட்டும் திருச்சி பகுதிகளில் பல இடங்களில் தண்ணீரைப் பார்க்க முடிகின்றது. குளித்தலை பகுதிகளில் வாங்கும் வாழைப்பழத்தின் அளவு மிக மிகச் சிறியதாக மாறியுள்ளது. 

யணித்த பாதையில் சாலையின் இருபுறத்திலும் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் அதிகமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களில் கூட்டம் சேராத காரணத்தால் பணிபுரியும் ஆசிரியர்களை "ஆள்பிடிக்கும்" வேலைக்குப் பள்ளி நிர்வாகத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். 
"நூறு நாள் வேலைத்திட்டம்" சமூகத்தில் வேறொரு புதிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.கிராமத்தில் வசதியுள்ளவர்களை தடுமாற வைத்துள்ளது. அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஆள் கிடைக்காமல் தடுமாறுகின்றார்கள். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. கையில் காசு புழங்கியதும் அவர்களின் சிந்தனைகளும் மாறியுள்ளது. தங்களுக்கான உரிமைகள் முதல் உணர்வுகள் வரைக்குமுண்டான அத்தனை விசயங்களிலும் கவனம் செலுத்தி பேசத் தொடங்கியுள்ளனர். ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். 

ற்பொழுது உணவு, உடை இரண்டுக்கும் எவரும் கஷ்டப்படவில்லை. உறைவிடம் என்பதற்கு மட்டுமே "தங்களுக்கென்று ஒரு வீடு" என்ற கனவில் பலரும் இருக்கின்றார்கள். பஞ்சம் என்ற வார்த்தையின் தன்மை அறியாத புதிய தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். வெகு விரைவில் தண்ணீர்ப் பஞ்சம் மட்டுமே பல புதிய திருப்பங்களை இங்கே உருவாக்கக்கூடும். 

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற பழமொழி பழங்கதையாகி விட்டது. தனித்த சிந்தனைகளில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்துகின்றார். தொழில் நுட்ப வசதிகளும், அலைபேசி, தொலைக்காட்சி வசதிகள் மிகப் பெரிய தாக்கத்தை மக்களிடம் உருவாக்கியுள்ளது. 
றவுகளில் சிதைவு என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. மன அழுத்தமும், கவலைகளும் அதிகமானாலும் நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தினராகவே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்."தாங்கள் விரும்பியதை அடைய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற எண்ணம் மெதுமெதுவாக ஒவ்வொருவரின் மனதிலும் உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

ணம் தவிர்த்து வேறு எதையும் பேசுவது யோசிப்பது தவறென்ற எண்ணம் நடுத்தரவர்க்கத்தின் தகுதியான குணமாக மாறியுள்ளது. விளம்பரங்கள் தான் ஒவ்வொரு சந்தையையும் தீர்மானிக்கின்றது. வாங்கும் பொருட்கள் தரமில்லையென்றாலும் அடுத்த விளம்பரத்தின் மூலம் வேறொரு பொருளின் மூலம் உருவாகும் நாட்டம் நட்டத்தை உருவாக்கினாலும் எவரும் அதனை யோசித்துப் பார்ப்பதில்லை. அதற்கான நேரமும் இல்லை. 
சிறிய நகர்ப்புற பகுதிகள், கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் "எம்.ஜி.ஆர் மேலிருக்கும் பாசத்தைத் தங்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை" என்கிறார்கள். இரட்டை இலை சின்னம் என்பது அவர்களின் ஆழ்மனதில் நீக்கமுடியாத இடத்தில் உள்ளது. ஆனால் "ஜெயலலிதா தகுதியானவர் இல்லை" என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாலும் சின்னத்தின் தாக்கத்தால் அவர்களால் மாற்றுக்கட்சி குறித்து யோசிக்க முடியவில்லை. 
டித்தட்டு,கிராமப்புற மக்களிடம் இன்று வரையிலும் கலைஞரால் எந்த நல்ல அபிப்ராயத்தையும் உருவாக்க முடியவில்லை. 
ள்ளடங்கிய கிராமங்களில் இன்னமும் அரசியலை வெட்டி அரட்டைக்காக விவாதிக்கின்றார்கள். இன்றைய உண்மையான நிலவரங்கள் எவருக்கும் தெரியவில்லை. தொலைக்காட்சி என்றால் சினிமாவுக்கு மட்டும் தான். 
ற்று விபரம் தெரிந்தவர்களும் அரசியல் குறித்துத் தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அபிப்ராயங்கள் வைத்துள்ளார்களே தவிர அரசின் ஊழல் குறித்தோ, அதிகப்படியான விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை. 
விலைவாசி உயர்வை கவலைப்பட்டு ஒவ்வொருவரும் பேசுகின்றார்கள். அதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் குறித்துக் கேட்டால் சொல்லத் தெரியவில்லை. 
மேலே என்றால் காங்கிரஸ் தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால்  பீ சிதம்பரத்தைப் பற்றிப் பேசினால் கெட்ட வார்த்தைகளில் திட்டுகின்றார்கள். 
ரேந்திர மோடி குறித்து முழுமையாக கிராமம் அளவுக்கு வந்து சேரவில்லை. அரசியல்வாதிகளை எவரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடவே விரும்புகின்றார்கள். 

விதி என்பதை ஆழமாய் நம்புகின்றார்கள். அது தான் இன்றைய வாழ்க்கை என்பதை உணர்ந்து வைத்துள்ளார்கள். ஒவ்வொருவரின் மனதில் இறைபக்தி மாற்ற முடியாத இடத்தில் உள்ளது. அதை விட தான் சார்ந்துள்ள சாதிப்பற்று அதிகமாகவே உள்ளது. 
தாங்கள் எதிரே பார்க்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் எவர் மனதில் எந்த மாறுதல்களையும் உருவாக்குவதில்லை. "தன் விதி தன்னை இப்படி வாழ வைக்கின்றது" என்ற கொள்கையே பணக்காரர்கள் மேலும் தவறான வழிகளில் செல்வம் சேர்க்கத் தூண்டுகின்றது. ஏழைகளை மேலும் மேலும் ஏழையாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது. 
புதுக்கோட்டை ராஜவீதியில் காலையில் ஐந்து மணிக்கு ஒரு பெரிய டீக்கடையில் டீ குடித்து விட்டு அடுத்த ஒரு மணிநேரமும் அங்கு வருபவர்களை (ஏறக்குறைய 100 பேர்கள்) கவனித்தேன். அந்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்த தினந்தந்தியை பார்க்கின்றார்கள். கவனிக்கவும் படிக்கின்றார்கள் அல்ல. குறிப்பிட்ட சிலர் படிக்கும் முக்கியமான விசயமாகத் துணுக்குச் செய்திகளும், சினிமா விளம்பரங்கள் மட்டுமே உள்ளது. அதையும் முழுமையாகப் படிப்பதில்லை. அப்படியே மடித்துக் கூட வைக்காமல் குப்பை போல அருகே போட்டு விட்டு சென்று கொண்டேயிருக்கின்றார்கள். இன்று வரையிலும் தெளிவான உண்மையான வாசிப்பு அனுபவம் இல்லாத தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனைகள் வெறும் கானல் நீரே.
ன் பார்வையில் சிவகங்ககை, புதுக்கோட்டை என்ற இரண்டு மாவட்டங்களில் நான் பள்ளிக்கூடத்தில் படித்த போது மக்கள் எப்படி இருந்தார்களோ இன்றும் சிந்தனையளவில் இருக்கின்றார்கள். கட்டிடங்கள், ஆட்கள், வண்டிகள், வாகனங்கள் என்று பல வகையில் ஒவ்வொரு பகுதியும் மாற்றம் அடைந்துள்ளது. மக்களின் ஆசைகளும் விருப்பங்களும் மாறியுள்ளது. மக்களின் வாழ்க்கை தரம் என்ற பெயரில் அவரவர் கட்டியுள்ள வீடுகளும், தாங்கள் வைத்துள்ள பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு அளவுகோலாகக் கொண்டு தங்களை வெற்றி பெற்ற மனிதராக முன்னிறுத்துகின்றார்கள். 
பொதுச் சுகாதாரம் என்ற வார்த்தையும், பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள இன்னும் கால் நூற்றாண்டு காலம் ஆகலாம். வருகின்ற தலைமுறைகள் மூலம் இந்த மாற்றத்தின் தொடக்கம் இருக்கும் என்றே நம்புகின்றேன். 
"வாழ்வில் உயர மதிப்பெண்கள் மட்டுமே மிக முக்கியம்" என்ற கொள்கையினால் பாடப்புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதையோ, மற்றப் புத்தகங்கள் மூலம் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணமோ எவர் மனதிலும் இல்லை. அப்படியே ஆசைப்படும் மாணவர்களை ஊக்குவிக்க எவரும் தயாராக இல்லை. எதிர்காலப் பயமே இங்கே ஒவ்வொருவரையும் படாய் படுத்திக் கொண்டிருக்கின்றது. 
வ்வொரு தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதைப் போலப் பல மடங்கு அரசு மருத்துவமனைகளில் கூட்டம் உள்ளது. ஆனாலும் பலரும் சுகாதரமற்ற சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தன்னைப் பற்றி உணராமலும், தன்னைச் சுற்றிலும் உள்ள சமூகத்தைப் பற்றி உணர வாய்ப்பில்லாமல் இருப்பதால் எந்தக் கவலைகளும் பெரிதாக அவர்களைத் தாக்குவதில்லை. கவலைகள் இல்லாத மனம் இயல்பான ஆரோக்கியத்தை அவர்களுக்கு வழங்குவதால் இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். 
மாறிக் கொண்டே வரும் தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆனால் அது சினிமா என்ற வடிவமாகத்தான் எடுத்துக் கொள்கின்றார்கள். சிந்திக்கவே பயப்படும் சமூகத்திலிருந்து நாம் உடனடி மாறுதல்களை எதிர்பார்ப்பது தவறு. 
வ்வொரு குடும்பத்தில் உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொலைக்காட்சியில் வருகின்ற நெடுந்தொடர்கள் உண்மையான சேவையை புரிந்து கொண்டிருக்கின்றது.  அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.  பேரன், பேத்திகளுடன் சண்டை போட்டுக் கொண்டே தாங்கள் விரும்பும் சேனல்களை மகன், மருமகள் உதவியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போல சிந்தனை ரீதியான மாற்றம் நிச்சயம் வரும். தங்களால் இனி இங்கு வாழவே முடியாது என்கிற சூழ்நிலை வரும் போது மட்டுமே. அப்போது முதலில் பாதிக்கப்படப் போகும் சமூகம் நடுத்தரவர்க்கமே.

உங்கள் கவனத்திற்கு




வரும் வாரத்தில் நான் வலைபதிவில் எழுதிய ஈழம் சார்ந்த கட்டுரைகள் மின் நூலாக வெளிவரப்போகின்றது.  ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்.

இது குறித்து விபரங்கள் வரும் பதிவில் வெளியிடுகின்றேன்.

உங்களுக்கும் அது போன்ற எண்ணம் இருந்தால் இந்த இரண்டு தளங்களையும் பார்வையிடுங்கள். வரப் போகும் 2014 ஆம் ஆண்டு உங்களின் படைப்புகள் மின் நூலாக மாற்றம் பெற்ற ஆண்டாக இருக்கட்டுமே?






Wednesday, December 18, 2013

சந்துக்குள் சிந்து பாடலாம்.

நாம் வலைபதிவுகளில் என்ன எழுதுகின்றோம்? எதைப்பற்றி எழுதுகின்றோம்? என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். 

நீங்கள் வாழும் சமூகத்திற்கும், நடக்கும் நிகழ்வுகளுக்கும் சம்மந்தம் இருக்கின்றதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில வருடங்கள் கழித்துத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு பிரச்சனையின் ரூபம் உச்சகட்டத்தை அடையும் போது நம் பார்வை என்ன? என்பதை உணர வாய்ப்பாக இருக்கும். நாம் எழுதி நாடு மாறி விடுமா? என்ற எண்ணத்தைச் சற்றேனும் ஒதுக்கி வைத்து விட்டு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிலவற்றையாவது ஆவணப்படுத்த முயற்சி செய்யுங்கள். 

வலைபதிவுகளில் எழுதி பெரிதான எந்த மாறுதல்களையும் உருவாக்க முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் பத்திரிக்கைகளைப் படிப்பவர்களே குறைவு. இதில் வெகுஜன மக்களுக்குத் தெரியாத வலைபதிவில் எழுதுகின்ற சமாச்சாரங்கள் பொது மக்களுக்கு எங்கே தெரியப்போகின்றது?என்று மனதில் சோர்வு எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டும் இந்தப் பதிவு

பத்திரிக்கைகளில் உள்ள தகவல்களை வைத்து வலைபதிவுகள் எழுதிய காலம் மாறி தற்பொழுது வலைபதிவுகளில் வரும் விசயங்களை வைத்துப் பத்திரிக்கைகள் ஒப்பேற்றுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. 

இந்த வருடம் எழுதியுள்ள சில பதிவுகள் மூலம் கற்றதும் பெற்றதும்

திருப்பூரில் உள்ள நண்பர் வினோத் இது குறித்து அவசியம் எழுத வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். சென்றவருடம் அக்டோபர் 30ந் தேதி எழுதிய பதிவு இது. 

சில மாதங்கள் கழித்து ஒவ்வொரு பத்திரிக்கையிலும் இது குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. 

கடைசியில் என்ன நடந்தது? 

சில வாரங்களுக்கு முன் இந்தத் திட்டத்திற்கு நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்த போது அப்போது நண்பர் பந்து எழுதிய தீர்க்க தரிசன விமர்சனம் இப்போது என் நினைவுக்கு வருகின்றது. 

"இதை எதிர்த்து நீதி மன்றம் செல்ல முடியாதா? கொடுமை என்னவென்றால், கோர்ட் அரசு எடுக்கும் கொள்கை (கொள்ளை?) முடிவுகளில் தலையிடமுடியாது என்று பல சமயம் சொல்லிவிடுகிறது! 

(கேஸ் இருந்தால்) வெந்ததைத் தின்போம். விதி வந்தால் சாவோம் என்று முடிந்துவிடுமா நம் எல்லோரின் நிலைமை?"


"நான் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றி விடுவேன்" என்றார் ஜெயலலிதா. ஆனால் இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கும் மின்சாரப் பற்றாக்குறை என்பதை யாவரும் அறிந்ததே. மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே தனது தகுதியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மாநில முதல்வருக்கு இங்கே இருக்கும் வாய்ப்புகள் குறித்தோ? அதற்காக உழைக்க வேண்டிய தேவை குறித்தோ தெரியாமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

மக்களின் சிரமங்களைப் பற்றித் தெரியாதவர்களைப் பற்றி, தெரிந்து கொள்ள விரும்பாதவர்களைப் பற்றி எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. சென்ற ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் "தனியார் மூலம் மின்சாரம் வாங்கினால் மட்டுமே தங்களுக்குச் சேர வேண்டியது கைக்குக் கிடைக்கும்" என்பதே இதன் அடிப்படைக் கொள்கை. மற்றபடி இது சார்ந்த திட்டங்கள் அனைத்தும் கொள்கையளவில் ஆமை வேகத்தில் நடக்கும்... நடந்து கொண்டேயிருக்கும். 

2016-2017 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது இல்லாமல் போயிருக்கும். தனியார் மூலம் மட்டும் மின்சாரத்தைப் பார்க்க முடியும். 


லரும் பல சமயத்தில் என்னை நோக்கி சுட்டிக் காட்டிய முக்கியக் குற்றச்சாட்டு, "ஈழ விவகாரங்களைப் பற்றி உணர்ச்சி அடிப்படையில் தான் எழுதுகின்றீர்கள். இது தவறு" என்றார்கள். 

குறிப்பாக நண்பர்களுடன் உரையாடியபோது, ராஜீவ் காந்தி படுகொலையில் தூக்குத் தண்டனைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பேரறிவாளன் குறித்துத் தகவல்களைத் தெரிந்து கொண்ட போது அப்போது அவர் அம்மாவின் நேர்காணலை பதிவு செய்து இருந்தேன். 

ராஜீவ் காந்தி படுகொலையில் விசாரனை அதிகாரியாக இருந்த ரகோத்தமன் இந்த வழக்கில் உள்ள ஓட்டைகளைப் பற்றி வாய்த் திறந்தார். தற்பொழுது ராஜீவ் கொலை வழக்கில் "பேரறிவானனின் வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவு செய்து விட்டேன். பாவ மன்னிப்புத் தாருங்கள்" என்றார் சிபிஜ முன்னாள் அதிகாரி தியாகராஜன். 

தொடர்ந்து இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான தைரியமும், துணிச்சலும் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? 

என் பிள்ளையிடமிருந்துதான். அவன் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஏனெனில், அவனால் ஒரு சின்னத் தவறுகூடச் செய்ய இயலாது. யாரிடம் பேசும்போதும் முகம் கோணும் விதமாக நடந்துகொள்வதை அவன் விரும்ப மாட்டான். யாருடைய முகமும் வாடிப்போவதை அவன் சகித்துக்கொள்ள மாட்டான். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தரக் கூடாது என்று அவன் எப்போதும் எங்களிடம் சொல்வான். 



டிசம்பர் 3 2013 அன்று இந்தோனேசியாவில் உலக வர்த்தக அமைப்பு மாநாடு தொடங்கியது. இந்தியாவின் சார்பாகத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா இந்திய குழுவினருடன் கலந்து கொண்டார். 159 நாடுகள் கலந்து கொண்டனர். இந்தச் செய்தியை பத்திரிக்கையில் இந்த மாதம் படித்திருக்க வாய்ப்பிருக்கலாம். 

வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் உள்ள விவசாயப் பொருட்களை இரும்பு, எண்ணெய் போல வர்த்தகப் பொருளாக மாற்ற வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகளைத் தங்களது நிறுவனங்களுக்குச் சந்தையாக மாற்றவும் விரும்புகின்றது. இதற்காகத்தான் உலக வர்த்த அமைபு மூலமாக வேளாண் ஒப்பந்தம் போடப்படுகின்றது.இதன் மூலம் உள்நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியங்கள்,ஆதரவு என அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். 

ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் மானிய உணவுகளும் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை இந்தியாவில் கொண்டு விற்க தடையில்லா ஒப்பந்தம் உருவாக்கப்படும். 

தொடக்கத்தில் ஒப்புக்கொள்ள முடியாது என்ற முழங்கிய நம் வீராதி வீரர்கள் பாலித்தீவு தந்த "சுகத்தில்" நான்கு ஆண்டுகள் கழித்து இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு நிறைவேற்றுவோம் என்று மறைமுக ஒப்புதல் கொடுத்து விட்டு வந்துள்ளார்கள். காரணம் காங்கிரஸ் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாராளுமன்றத் தேர்தலே. ஒரு வேளை வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாம் திருவோடு ஏந்த தயாராக இருக்க வேண்டும். 

எப்போதும் போல ஊடகங்கள் மூலம் இந்தியாவிற்கு வெற்றி என்ற கோஷத்தை முன்னிறுத்தியது. ஆனால் உண்மை நிலவரங்களைப் பற்றி விரிவாக எந்த மாநில கட்சிகளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.


உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் மொத்தமும் சேர்ந்து தங்கள் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மொத்த மானியத் தொகையே 19 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளின் மானியத் தொகையின் அளவு எவ்வளவு தெரியுமா? 150 பில்லியன் டாலர்கள். 

ஒவ்வொரு முறையும் உலக வங்கி வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பார்த்து மானியத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்களே? 

ஏன்? 

அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை நிறுத்திவிட்டால் விவசாயி இயல்பாகவே விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடுவான். பிறகென்ன? தேவைப்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை அபகரிக்க வசதியாகத்தானே இருக்கும். கார்ப்ரேட் பாணியில் விவசாயத்தைத் தொடங்கி விடுவார்கள். ஒரே சமயத்தில் ஒரு உணவுப் பொருளின் விலையை ஏற்றலாம், இறக்கலாம், பதுக்கலாம். பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம்.

Sunday, December 15, 2013

வரும் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?

சமீபத்தில் நடந்து முடிந்த ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்த போது இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரிலை விவாதத்தில் தற்போது (அதிமுக முன்னாள் அமைச்சர். சுடுகாட்டு ஊழலின் மூலம் புகழ்பெற்றவர்) திமுகவில் இருக்கும் செல்வகணபதி பேசும் போது ஒரு விசயத்தைப் போகின்ற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார். 

"ஏற்காடு இடைத்தேர்தலில் பணபலம் தான் ஜெயித்தது" என்று சொன்னதோடு மட்டுமல்லாது அங்கே ஒரு குடும்பத்தில் நடந்த சாவைப் பற்றிச் சொன்னார். அது குறித்து எந்தப் பத்திரிக்கையாவது எழுதுகின்றார்களா? என்று ஒவ்வொரு பத்திரிக்கையையும் கவனித்துக் கொண்டே வந்த போது இந்த வார நக்கீரனில் அது குறித்துப் பதிவு செய்துள்ளார்கள். 

இதை இங்கே பதிவு செய்யக்காரணம் கடந்த நாற்பதாண்டு காலத் தமிழ் நாட்டு அரசியலில் ஆண்ட, ஆண்டுக் கொண்டிருப்பவர்கள் உருவாக்கிய பாதைகள் என்ன என்பதையும்,வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் சராசரி வாழ்க்கைக்குக் கீழே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது? மனோபாவமும் எப்படி உள்ளது? என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். 

இதில் உள்ள ஒவ்வொரு வரியிலும் ஒரு துயரக்கதை ஒழிந்துள்ளது. முழுமையாகப் படிக்கும் போது உணர்ந்து கொள்ள முடியும். இனி வரும் தமிழ்நாட்டுத் தேர்தல்களில் பணம் மட்டுமே தீர்மானிக்கப் போகின்றது. இது மதுரையில் திருமங்கலத்தில் தொடங்கிய ப(ய)ணமிது. ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய கொள்கைகளை உருவாக்கியவர்களை மக்கள் மறக்காமல் இருப்பது இயல்பு தானே? 

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு தமிழ்நாட்டு மக்கள் நன்றிக்கடன் பட்டவர்கள். 

நக்கீரன் பதிவு செய்துள்ள விசயம் தற்போது நடந்து முடிந்த ஏற்காடு தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவத்தை மட்டுமே. ஆனால் நான் புதுக்கோட்டையில் சந்தித்த ஒரு மருத்துவர் சொன்ன வாசகம் 

"நமக்கிட்டே இருந்து தான் இவனுங்க கொள்ளையடிக்குறானுங்க. இது நம்ம காசு. இவனுங்க கொடுக்குறத வாங்கினா என்ன தப்பு?" என்றார். அவர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பணம் வாங்கிக் கொண்டே ஓட்டுப் போட்டதாகத் தயக்கமில்லாமல் சொன்னார். 

இன்னும் சில வருடங்களில் இதன் வீரியம் இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதால் இப்பொழுதே இதை இங்கே பதிவு செய்து விடலாம் என்று தோன்றியது. இதன் மூலம் நமது சமூகத்தின் உண்மையான நிலவரத்தினைக் கொஞ்சமாவது நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

காரணம் இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் நம் பகுதிக்கு இடைத் தேர்தல் வந்துவிடாதா? என்று எதிர்பார்க்கும் மனோநிலையில் தான் மக்கள் இருக்கின்றார்கள். 

இறந்தவரின் மாமியார் வாக்குமூலம் 

"நாங்கெல்லாம் கூலி வேலைக்குப் போறவங்க. ஒரு நாளைக்கு 70 ரூபாய் வந்தால் பெரிய விஷயம். எங்க போயர் ஜாதில படிச்சவங்களும் பெருசா இல்லை. அந்த நேரத்துல தான் தேர்தல் வந்துச்சு. கட்சிக்கார்களா வந்தாங்க. எங்க ஊரையே திருவிழா போலக் கவனிச்சுகிட்டாங்க. எங்க ஊரே சந்தோஷப்பட்டுச்சு. ஆனா எங்கூட்டுல மட்டும் அப்பப்போ நிம்மதியில்லை. என் மருமக மலரு மகன் முருகன்கிட்ட பொழுதினிக்கும் சண்டை போட்டுகிட்டே இருப்பா. அன்னைக்குத் தேர்தலில் ஓட்டு போட்டுட்டு பேரன் கண்ணனை கூட்டிக்கிட்டு போனா. 

எப்பவும் போல அவங்கம்மா வீட்டுக்குத்தான் போவான்னு பார்த்தோம். ஆனா ரெண்டு நாள் கழிச்சு உம்மருமவளும், பேராண்டியும் ராமலிங்கபுரத்துல இருக்குற கெணத்துல பொணமா மெதக்குறாங்கடின்னு சொன்னாங்க". 

மாமனார் வாக்குமூலம். 

"எங்க ஊட்டுல அஞ்சு ஓட்டு. இரட்டை இலை கட்சிக்காரங்க ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம்ன்னு கணக்கு வச்சு மொத்தம் பத்தாயிரம் ரூபாய் தந்தாங்க. மூணு மாசம் உழைத்தாலும் இம்புட்டு காசு பார்க்க முடியுமா? சொளையா கிடச்ச பணத்துல எம் மகன் முருகன் நாலாயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்கினான். அது தான் புருஷன் பொஞ்சாதிக்குப் பிரச்சனை வந்து ஊசுரையே விட்டுட்டா. போனவ எம் ஆறு வயச பேரனையும் கூட்டிட்டு போயிட்டாளே? அவன் என்ன பாவம் செஞ்சான்?" 

கணவர் வாக்குமூலம். 

"நாம் இருக்குற நிலைமையிலே எதுக்குச் செல்போன் வாங்கினேன்னு மலரு கேட்டா? அதுல ரெண்டு பேருக்கும் சண்டை. அப்படி இருந்தும் அன்னைக்கு (டிசம்பர் 4ந்தேதி) போயி ஓட்டு போட்டுட்டு வீட்டுக்கு வந்தவ, இனி உன்கூட ஒரு நிமிஷம் கூட வாழ முடியாதுன்னு கோவிச்சுக்கிட்டுப் பையனை கூட்டிக்கிட்டு போனாள். 6ந்தேதி சாயந்திரம் கெணத்துல மிதக்குறா. பாழாப் போன தேர்தல் வந்து என் பொண்டாட்டிய பிரிச்சுடுச்சே". 

இதே போல இது போன்று மற்றொரு செய்தியையும் நாம் கவனிக்க வேண்டும். 

சேலத்தில் இருந்து 60 கிமீ இருக்கும் தும்பல் மலையில் உள்ள வீரன் குடும்பத்திலோ இன்னோரு வகையான துயரம். 70 வயது கணவன் வீரன் இறந்து கிடக்க அவர் உடலை வைத்துக் கொண்டே அவரின் மனைவி (65 வயது) பாப்பாத்தியம்மா வாக்களிக்கச் சென்று தன் ஜ(ப)னநாயக(?) கடமையைச் செய்து வந்தார். 

மகள் வசந்தா 

"அப்பா ஆறு மாசமா படுத்த படுக்கையா இருந்தாரு. தேர்தல் அன்னைக்கு மொதநாள் நைட் எட்டு மணி இருக்கும். அப்பா எறந்துட்டாரு. ஆனாலும் மக்காநாளு ஓட்டு போட்டுட்டு வந்துதான் அப்பாவ அடக்கம் செஞ்சோம்" 

இறந்தவரின் மனைவி 

"செத்தவரு எழுந்தா வரப்போறாரு. அவரு நேரம் போயிட்டாரு. அதுக்காக ஓட்டு போடாமலா இருக்க முடியும். மதுரைவீரன் படம் பார்த்ததுல இருந்து ஒரு முறை கூட நான் ஓட்டு போடாம இருந்ததில்ல. அதான் ஒரு பையனை கூப்பிட்டு அவன் புல்லட்டுல உக்காந்துட்டு போயி ஓட்டு போட்டுட்டு வந்தேன்". 

அருகே வசித்தவர்களின் வாக்குமூலம் 

"இங்கே முக்கால்வாசி பேருங்க ரெட்டை எலை ஆளுங்கதான். அதுவும் இந்த முறை வோட்டுக்கு ரெண்டாயிரமும், வழி செலவுக்குன்னு எரநூறு ரூபாயும் கொடுத்தவங்கள மதிச்சு அந்தம்மா ஓட்டு போட்டு வந்துச்சு. சடங்கு செய்ய ஆரம்பிச்சுட்டா வெளியே போகமுடியாதே?" 

தொடர்புடைய பதிவுகள்