அஸ்திவாரம்

Monday, October 21, 2013

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

இது நடந்து முடிந்து இரண்டு வருடம் இருக்கலாம்.  

அந்த நண்பர் மற்ற நண்பர்கள் மூலம் அறிமுகமாகி உரையாடும் போது தான் அவரும் இணையத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் என்று எனக்குத் தெரிந்தது. 

ஆனால் அவர் எழுதுவாரா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய பெரும்பாலான கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருபவர் என்று அவர் பேச்சின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. பொதுவான விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது தெரியாத்தனமாக ஒன்றை அவரிடம் கேட்டு விட்டேன்.  

"எந்த இடத்திலும் உங்கள் விமர்சனங்களைப் பார்த்ததே இல்லையே?" என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் தான் இன்று வரையிலும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.

"எல்லாவற்றையும் படிப்பேன். எதற்கும் விமர்சனம் எழுதி வைக்க மாட்டேன்" என்றார்.  இவர் வாசிப்பில் மட்டும் தான் ஆர்வம் காட்டுவார் போல என்று நினைத்துக் கொண்டிருந்த போது அவரின் அடுத்த பதில் ணங்கென்று காதில் கடப்பாறையை வைத்து அடித்தது போல இருந்தது.

"நாம் ஏங்க இவனுங்களுக்கு விமர்சனம் எழுதி வைக்கனும். தேவையில்லாம லைக் பட்டனை தட்டி இவனுங்களை பெரிய ஆளா ஆக்கனும்" என்றார்.

ஒரு தலைசுற்றலே எனக்கு வந்தது.

அந்த சமயங்களில் வலைபதிவுகளைத் தவிர வேறு தளங்களில் எனக்கு பெரிதான எந்த அறிமுகமும் இல்லை. ஆனால் இன்று பலதளங்களில் பயணிக்கும் போதும், ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும்,  அவர்களின் முகமூடிகளை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிவதால் இன்று அவர் பேசிய வார்த்தைகள் பெரிதான அதிர்ச்சியை உருவாக்கவில்லை.  ஆனால் அன்றைய தினத்தில் உருவான ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி இன்றும் என் மனதில் உள்ளது.

ஒரு விசயத்தை விமர்சிக்காமல் இருப்பதோ, அது குறித்து பாராட்டு மற்றும் எதிர்கருத்து தெரிவிக்காமல் இருப்பதொன்றும் பெரிய கொலைக்குற்றமல்ல. இது அவரவர் சார்ந்த பணிச்சூழல், இருக்கும் நிலைப்பாடுகள் சம்மந்தப்பட்டது.  ஆனால் இதற்கான காரணத்தை தெரிந்த போது தான் இதுவும் ஒரு விதமான மனநோயின் தாக்கம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.  

நான் இவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கி வைத்து விட்டேன் என்ற வாசகத்தை இணையத்தில் இன்று நீங்க சர்வசாதரணமாக பார்க்கலாம்.  ஒரு வாரம் வெளியூர் செல்கின்றேன். என்னைத் தேட வேண்டாம் என்று தன் ஃபேஸ்புக் கணக்கை மறைத்து வைத்து செல்பவர்கள் தொடங்கி இங்கே ஏராளமாக வினோதமான புரட்சியாளர்களையும் பார்க்க முடியும்.   

நீ என் கூகுள் பள்ஸ் ல் விமர்சனம் செய்ய முடியாது, நீ என் பக்கமே வந்து விடாதே என்பது போன்ற பல கூத்துக்கள் அடங்கிய இந்த "பொய் நிகர் உலகில்" தான் எல்லோருமே இந்த உலகத்திற்கான அறத்தை போதித்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.

"கீழான விசயங்களை நோக்கியே ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் நகர்ந்து கொண்டேயிருக்கும்.  இது போன்ற சமூகத்திலும் மேலானவர்களைக் கொண்டது தான் இந்த உலகம்" என்ற எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் புரிந்து வைத்திருப்பவர்கள் எதைக் கண்டும் அஞ்சாமல், எது குறித்தும் யோசிக்காமல் தன்னளவில் தோன்றும்  கருத்துக்களை இணையத்தில் பதிந்தபடியே தான் இருக்கின்றார்கள்.  

எதிர்க்கருத்துக்களை எழுதியவரை எதிரிகளாக கருதுபவர்களின் மன முதிர்ச்சியை சற்று யோசித்துப் பார்த்தால் நிச்சயம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையும், வாழ்க்கையை அவர்கள் எடுத்துக் கொண்டவிதமும் நமக்குத் தெரியவரும்.   ஆனால் வலைபதிவில் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக் கொண்டு, அதிலும் எந்த காலத்திலும் பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிர கொள்கை கொண்டவர்களின் பல தளங்கள் என் எண்ணத்தில் இருந்தாலும்,  சமீபத்தில் நான் பார்த்த தளம் முக்கியமானது.

என் அனுபவத்தில் வலைபதிவில் எழுதிபவர்களை விட விமர்சிப்பவர்களைத் தான் கூர்மையாக கவனிக்கின்றேன்.  மொய் வைப்பவர்களை விட குறிப்பிட்ட விசயங்களைப் பற்றி கட்டுரை எழுதியவரை விட இது தான்யா விமர்சனம் என்பது போன்ற நச் சென்று கொடுப்பவர்களைப் பார்த்து பல முறை அசந்து போயுள்ளேன்.

சமீபத்தில் உண்மைத்தமிழன் எழுதிய பதிவில் நம்ம நந்தவனம் கொடுத்த காணொளி இணைப்பின் மூலம் அரிச்சந்திரா (1913) போன்ற படங்கள் கூட உள்ளது. இன்று ஆதாரமாக உதவுகின்றது.

நமக்கு என்ன பிரயோஜனம்? என்பதற்கும் பிறருக்கு உதவட்டும் என்கிற மனோநிலைக்கும் உள்ள வித்தியாசங்களை சிலரால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

ரு ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் என் மின் அஞ்சலுக்கும் வந்திருந்த இன்ட்லி மின் அஞ்சலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு ஈழப் பதிவரின் தலைப்பு வித்தியாசமாக இருக்க உள்ளே நுழைந்தேன்.  அதில் திரைக்கதை எழுதுவது குறித்து நண்பர் கருந்தேள் ராஜேஷ் அவர்களின் தளத்திற்கு இணைப்பு கொடுத்திருந்தார்.

தினகரன் பத்திரிக்கையில் தற்போது பணிபுரியும் சிவராமன் கூகுள் ப்ளஸ்ல் இவரின் தொடரைப்பற்றி எழுதியிருந்த போதிலும், இவரின் தளத்தை ஏற்கனவே எனக்கு தெரிந்திருந்த போது அதிக கவனத்தை காட்டியதில்லை. காரணம் படங்களில் அதிக ஈர்ப்பு இல்லை என்பது ஒரு பக்கமும், குறிப்பாக ஹாலிவுட் படங்களில் உண்மையிலேயே ஆர்வம் இல்லை என்பதால் கண்டு கொண்டதில்லை.

கடந்த சில மாதங்களாக யூ டியூப் ல்  சர்வதேச தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள், நவீன உலகம் மற்றும் அறிவியல் முன்னேற்றத்தால் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கும் நவீன ரக ஆயுதங்கள், குறிப்பிட்ட தலைப்புகளைப் பற்றி பொருளாதார ரீதியாக வெற்றி வெற்றி பெற்றவர்களின் ஆங்கிலப் பேச்சுகள் என்று தொடங்கி பல விதமான நாடுகள் சார்ந்த டாக்குமெண்ட்ரி என்று வாசிப்பனுபவம் போல ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டே வந்த போது ஹாலிவுட் படங்கள் மேல் பார்வை திரும்பியது.

யூ டியூப் ல் குறிப்பிட்ட பல படங்கள் முழுநீளமாக இருப்பதும், என் இணைய இணைப்பு வேகம் என்ற காரணத்தினால் அவ்வப்பொழுது குழந்தைகளுடன் குறிப்பிட்ட டாக்குமெண்ட்ரிகளை ஒன்றாக உட்கார்ந்து பார்க்கும் பழக்கம் உருவானது. அதன் பிறகே தொலைக்காட்சியில் ஆங்கில படங்களை குறிப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் உருவாகத் தொடங்க பல படங்களை இரவு நேரத்தில் பார்க்க முடிந்த போது தான் தமிழ் சூழலுக்கும் தற்போதுள்ள நவீன உலகத்திற்குள் உண்டான தொழில் நுட்ப வசதிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. 

மேலும் ஆர்வம் உருவாக என் வலைபதிவில் எழுதத் தொடங்கியது முதல் நட்பு வட்டத்தில் உள்ள கார்த்திக்கிடம் சிறந்த ஹாலிவுட் படங்களின் பட்டியல் தாருங்கள் என்ற போது அவர் பங்குக்கு பத்து படங்களை அனுப்பி வைத்தார்.  அது முழுக்க முழுக்க சர்வதேச அரசியல், மற்றும் அவர்களின் உளவுத்துறை சார்ந்த விசயங்கள் அடங்கிய படங்கள்.   

அவர் படங்களை தரவிறக்கம் செய்வது எப்படி? என்பதை கற்றுத் தர தயாராக இருந்த போதிலும் அதில் எனக்கில்லாத ஆர்வத்தின் காரணமாக மெதுவாக கற்றுக் கொள்கின்றேன் என்று சொன்ன மறுநாள் தான் கருந்தேள் ராஜேஷ் எழுதிய திரைக்கதை எழுதுவது இப்படி என்ற நீண்டதொரு தொடர் என் கண்ணில் பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் படிக்கத் தொடங்கிய இந்த தொடரை அடுத்த மூன்று மணி நேரத்தில் தொடர்ந்து வாசித்ததோடு அதில் உள்ள பின்னூட்டங்கள் அனைத்தையும் முழுங்குவது போல வாசித்து முடித்த போது எனக்கு உண்டான பிரமிப்பு நீங்களும் (இதில் ஆர்வம் இருக்கும்பட்சத்தில்) உணரக்கூடும்.

ஒரு இடத்தில் கூட நானும் பின்னூட்டமிடமில்லை. முதல் காரணம் இது குறித்து அச்சரம் கூட எனக்குத் தெரியாது.  

இந்த இடத்தில் மற்றொரு விசயம் நினைவுக்கு வருகின்றது.  

அடிமைகள் குறித்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் என்னிடம் பொறுப்பு கொடுத்து மெனக்கெட்டு சில ஆங்கிலப் புத்தகங்களை அனுப்பியும் வைத்தார். நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் கொடுத்து இதையெல்லாம் படித்து விட்டு எப்படி எழுதப் போறீங்க? என்று முன் வரைவு எழுதி அனுப்புங்க என்றார்?

எனக்கு சற்று குழப்பாக இருந்தது.  அதென்ன முன்வரைவு? என்றேன்.  

எது குறித்து எழுதப் போகின்றேன்? எப்படி எழுதப் போகின்றோம்? அதன் ஒவ்வொரு பகுதியிலும் எதெது வரும்? போன்றவற்றை நாம் கனகச்சிதமாக பிரித்து வைத்துக் கொண்டால் புத்தக வடிவத்திற்கு சிறப்பாக வரும் என்றார்.

நானும் ஓகோ... புத்தகமெல்லாம் இப்படித்தான் எழுத வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டு அவர் சொன்ன மாதிரி பிரிக்கத் தொடங்கினால் பிரி பிரியென்று நம்மை குழப்பம் கிழிக்கத் தொடங்கியது.  இரண்டு மூன்று முயற்சித்துப் பார்த்தும் அதன் கட்டுமானத்திற்குள் என்னை பொருத்திக் கொள்ள முடியவில்லை.  

ஆனால் நான் படித்த மற்ற புத்தகங்களை வைத்து அடிமைகள் தொடர் ஒன்றை எழுதி பதிவாக மாற்றிய போதும் புத்தக முயற்சிக்கு என்னால் தயார் படுத்த முடியாது என்று தெரிந்து கொண்டேன்.  

காரணம் என் அடிப்படைத் தொழில் வேறு. நான் ஆர்வம் செலுத்தும் துறை வேறு. 

பத்து வரிகள் எழுதிக் கொண்டிருக்கும் போது வரும் அலைபேசி செய்தி அப்படியே போட்டு விட்டு வேறு பக்கம் நகர்த்தி விடும்.  எழுதிக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் அருகே வந்து நின்றால் அதுவும் பாதியில் நின்று விடும். 

ஆசைக்கும் அவசரத்திற்குமிடையே ஊசலாட்டத்தில் வந்து விழும் கட்டுரைகள் முழுமையானதாக இல்லாவிட்டாலும் கூட இந்த முயற்சி இன்னும் சில ஆண்டுகளில் முழுமையடையக்கூடும் என்று நம்புகின்றேன்.

இன்று வரையிலும் எழுத உட்காரும் வரையிலும் என்ன எழுதப் போகின்றேன் என்பதே தெரியாத நிலையில் குழந்தைகள் தூங்கியதும் எழுதத் தொடங்கினால் ஏதோவொன்றை எழுத முடிகின்றது.

சில நாட்களுக்கு முன் மழை பெய்த்து கொண்டிருந்தது.  

மழையை வேடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த போது வெளியே இரண்டு பேர்கள் விஜயகாந்த் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிப்பா? என்று பேசிக் கொண்டே சொல்ல சட்டென்று மடிக்கணியை திறந்து துல்லியமாக 30 நிமிடத்திற்குள் அதிர்ஷ்டத்தை அலறவைக்கும் விஜயகாந்த் என்ற கட்டுரையை எழுதி முடித்தேன்.  பிழை திருத்தி அடுத்த அரை மணி நேரத்தில் பதிவேற்றி விட்டு தூங்கப் போய்விட்டேன்.

ஒரு கட்டுமானத்திற்குள் எப்போதும் என்னை பொருத்திக் கொண்டதே இல்லை. ஒரு திட்டமிட்டு ஒரு காரியத்தைத் பற்றி எழுதத் தொடங்கினால் அது கடைசியில் திருதிரு வென்று முழிப்பது போலவே முடிந்து விடுகின்றது.

இது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. ஆனால் ராஜேஷ் எழுதிய தொடரை படித்த போது வாசிப்பனுபவமும், திட்டமிடுதலும், பொறுமையும் இருக்கும் பட்சத்தில் நிச்சயமான அங்கீகாரத்தை பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

என்னுடன் தொடர்பில் இருந்த ஹாலிவுட் பாலா, இன்று வரையிலும் தொடர்பில் இருக்கும் கார்த்திக் இவர்கள் எழுதும் ஆங்கில படங்களின் விமர்சனங்களை படித்த போதிலும் எனக்கு எந்தவித தாக்கத்தையும் உருவாக்கியது இல்லை.  ஆனால் இன்று ராஜேஷ் எழுதிய தொடரைப் படித்து முடித்த போது  அவர்கள் எழுதிய பல கட்டுரைகள் என் நினைவில் வந்து போனது.

இந்த தொடரை விமர்சிக்கக் கூட நமக்குத் தகுதியில்லை.  காரணம் நம்மைப் போன்ற ஜல்லியடிப்பது என்பது வேறு.  உண்மையிலேலே ஜல்லி, மணல், சிமெண்ட் வைத்து ஒழுங்கான கட்டிடம் கட்டுவதென்பது வேறு என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

காரணம் இந்த தொடரில் ராஜேஷ் சொல்லியுள்ள விசயங்கள் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  இதை ஒரு திரைப்படம் அல்லது திரைக்கதைக்கு திட்டமிடல் என்கிற ரீதியாக என்னால் பார்க்க முடியவில்லை.  எத்தனை விதமான உழைப்பும், ஒவ்வொரு காட்சிக்கும் உண்டான அசுரத்தனமான அர்ப்பணிப்பும் கலந்து இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது.  ஆனால் இதை எளிமையாக இப்படி இந்த மனிதரால் பொறுமையாக எழுத முடிந்தது என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  

இது ஈழம், மணல் கொள்ளை, காவேரி, மோடி குறித்த  பிரச்சனைகளைப் பற்றி பேசுவதல்ல. எவருக்கும் பிடிக்கும், எல்லோருடைய மனதிலும் ஏதோவொரு ஓரத்திலாவது இருக்கும் சினிமா பற்றி, அதன் பாலபாடங்களைப் பற்றி எழுதியிருப்பதால் நான் சினிமாவில் ஜெயிக்கப் பிறந்தவன் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த தொடர் நிச்சயம் பயன்படும்.

இவர் நினைத்திருந்தால் புத்தமாக போட்டு காசிருந்தால் வாங்கி படிங்க என்று போயிருக்க முடியும். ஆனால் இணையம் இருக்கும் வரையிலும் இந்த துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இதுவொரு அரிச்சுவடி.

மேன்மக்கள் எப்போதுமே பெருந்தன்மை எண்ணங்கள் கொண்டவர்கள் என்பதால் வாசிக்க நினைப்பவர்களை வழிநடத்தும் என்று நினைக்கத் தோன்றுகின்றது.

திரைக்கதை எழுதுவது இப்படி

தமிழ் வலைப்பூக்களில் மென்பொருட்கள் குறித்து அதிகம் எழுதிய நண்பர் எஸ். கே எழுதியது.

எழுத்தாளர்களுக்கான மென்பொருள்கள்: 

தமிழுக்கு யாரும் எழுத்தாளர் மென்பொருள்களை உருவாக்கவில்லை அதனால் ஆங்கில எழுத்தாளர்களுக்கு

23 comments:

  1. விமர்சனம் செய்வதாலும் லைக் செய்வதாலும் ஒருவர் வளர்ந்து விடுகிறார் என்ற அந்த நண்பரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ராஜேஷ் குறித்து பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. வித்தியாசமான பதிவு. நன்றாக சிலவற்றைப் பேசிச் செல்கிறீர்கள்; படிப்பவர்களில் பலர் நீங்கள் காட்டும் ‘திசை’களில் செல்வர் என்றே நினைக்கின்றேன். நான் இப்போது கருந்தேளைத் தேடிப்போகிறேன் ...........

    ReplyDelete
    Replies
    1. இல்லம் என்பதே திசை காட்டும் கருவி தானே?

      Delete
  3. கருந்தேளைத் தேடிப்போனால் இப்படி //Reported Attack Page!// ஒரு செய்தி வருதே! என் செய்வது?

    ReplyDelete
  4. கூகுள் மூலமாகச் சென்றாலும் அவர் தளத்தில் ஏதோ பிரச்சனை என்று தெரிகின்றது. விரைவில் சரி செய்வார் என்றே நினைகின்றேன். ஓய்வாக இருக்கும் போது சொடுக்கி பார்க்கவும்.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள்! நிறைய எழுதனும்னு தோணுது. ஆனா எழுத உட்கார்ந்தா எதுவுமே தோணாது. அல்லது சூடு ஆறிப்போயிருக்கும். என்னவோ போங்க... எதுக்கு எழுதனும்னு கூட சில சமயம் தோணுது. உங்களைப்போல எழுதறவங்களோட எழுத்தைப் படிச்சா போதாதா?

    ReplyDelete
    Replies
    1. சூடென்பது எதுவுமே இங்கு இல்லை. நாம் என்ன வாரப் பத்திரிக்கையா நடத்துக்கின்றேன். முதலீடு போய் விடுமோ என்று பயப்படுவதற்கு. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு இதற்கு தானே ஆசைப்பட்டாய்? பதிவில் அக்கறையாக அப்பாதுரை வந்து விமர்சனம் மீண்டும் வந்து எழுதி வைத்தார். அவர் எழுதிய பதிலே ஒரு பதிவை மீண்டும் எழுதத் தூண்டியது.

      இணையம் என்பது தேடல் உள்ளவர்களுக்கு எப்போதும் பயன்படக்கூடியது. பொழுது போக்கிற்காக அணுகும் போது தான் பல சமயம் அழுகல் வாடை வந்து விடும். நம் கையில் தான் உள்ளது.

      Delete
  6. ///இன்று வரையிலும் எழுத உட்காரும் வரையிலும் என்ன எழுதப் போகின்றேன் என்பதே தெரியாத நிலையில் குழந்தைகள் தூங்கியதும் எழுதத் தொடங்கினால் ஏதோவொன்றை எழுத முடிகின்றது.///

    உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்

    ///மழையை வேடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த போது வெளியே இரண்டு பேர்கள் விஜயகாந்த் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிப்பா? என்று பேசிக் கொண்டே சொல்ல சட்டென்று மடிக்கணியை திறந்து துல்லியமாக 30 நிமிடத்திற்குள் அதிர்ஷ்டத்தை அலறவைக்கும் விஜயகாந்த் என்ற கட்டுரையை எழுதி முடித்தேன். பிழை திருத்தி அடுத்த அரை மணி நேரத்தில் பதிவேற்றி விட்டு தூங்கப் போய்விட்டேன்.///

    இப்படித்தான் நானும் நான் படிக்கும் தினசரி அல்லது வார இதழ அல்லது பதிவுகளில் இருக்கும் ஏதோ ஒரு வரிகள்தான் என்னை பதிவுகள் எழுத தூண்டுகின்றன

    ///ஒரு கட்டுமானத்திற்குள் எப்போதும் என்னை பொருத்திக் கொண்டதே இல்லை. ஒரு திட்டமிட்டு ஒரு காரியத்தைத் பற்றி எழுதத் தொடங்கினால் அது கடைசியில் திருதிரு வென்று முழிப்பது போலவே முடிந்து விடுகின்றது.///

    மிக மிக உண்மை

    ReplyDelete
  7. //எல்லாவற்றையும் படிப்பேன். எதற்கும் விமர்சனம் எழுதி வைக்க மாட்டேன்" என்றார். இவர் வாசிப்பில் மட்டும் தான் ஆர்வம் காட்டுவார் போல என்று நினைத்துக் கொண்டிருந்த போது அவரின் அடுத்த பதில் ணங்கென்று காதில் கடப்பாறையை வைத்து அடித்தது போல இருந்தது.

    "நாம் ஏங்க இவனுங்களுக்கு விமர்சனம் எழுதி வைக்கனும். தேவையில்லாம லைக் பட்டனை தட்டி இவனுங்களை பெரிய ஆளா ஆக்கனும்" என்றார்.///


    இவர்தான் உண்மையான தமிழனுங்க(உண்மைத்தமிழன் அல்ல) அடுத்தவன் வளரக் கூடாது என்று நினைப்பவன்

    ReplyDelete
    Replies
    1. ஆகா, உண்மைத்தமிழன், உண்மையான தமிழன்

      அசத்தலாக இருக்கே.

      Delete
  8. விரைவாகவும் விஷயங்களுடனும் பதிவெழுதும் திறன் எல்லோருக்கும் இருப்பதில்லை.
    அது உங்களுக்கு இயல்பாக வருகிறது..நீளம் மட்டும் சற்று கூடுதலாக இருப்பதுபோல் தோன்றுகிறது. உங்கள் பழைய பதிவுகளை அவப்போது படிப்பது உண்டு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும், பழைய பதிவுகளை படிக்க உங்களுக்கு நேரம்கிடைப்பதற்கு மிக்க நன்றி முரளி.

      Delete
  9. ஒருவரின் எழுத்தை அது நல்லா இருக்கா இல்லையா என்று விமர்சனம் செய்வதால் அவரின் எழுத்து இன்னும் மேன்மையாகும்.. இதில் தவறு இல்லை என்பதே என் எண்ணம்... ஒரு பகிர்வுக்குள் பல பதிவர்களைச் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள்...
    அருமை அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பவர்களுக்கு பல தரப்பட்ட பதிவுகளை படிக்க வாய்ப்புகள் உருவாக்க வேண்டும் என்பதே என் எண்ணம் குமார். இதன் காரணமாக முடிந்தவரைக்கும் பகிர ஆசைப்படுகின்றேன்.

      Delete
  10. I am also a regular reader of your blog and this is the first time i am writing a comment on your page. But, The reason is not the one which you mentioned in the top of this article. I believe i need to learn a lot before commenting on some one's work. I hardly see people who writes useful info in Tamil blogs. You are one of them. Please do write more. By the way, I love your writing.

    Thanks,
    Ilangathir

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளங்கதிர். எப்படியே உங்களை எழுத வைத்ததே எனக்கு வெற்றியாக தெரிகின்றது. உங்களின் வெளிப்படையான வார்த்தைகள் மகிழ்ச்சியை தந்தது. மிக்க நன்றி.

      Delete
  11. // பத்து வரிகள் எழுதிக் கொண்டிருக்கும் போது வரும் அலைபேசி செய்தி அப்படியே போட்டு விட்டு வேறு பக்கம் நகர்த்தி விடும். எழுதிக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் அருகே வந்து நின்றால் அதுவும் பாதியில் நின்று விடும். //

    // இன்று வரையிலும் எழுத உட்காரும் வரையிலும் என்ன எழுதப் போகின்றேன் என்பதே தெரியாத நிலையில் குழந்தைகள் தூங்கியதும் எழுதத் தொடங்கினால் ஏதோவொன்றை எழுத முடிகின்றது.//

    இத்தனைக்கு மத்தியிலும் சிறப்பாகவே உங்கள் பதிவுகள் வாசகர்களைக் கவரும் வண்ணம் இருக்கின்றன. இறைவன் கொடுத்த வரம். தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வரமா? சாபமா? என்ற கேள்விக்கு உங்கள் வார்த்தைகள் பதிலாக வந்துள்ளது என்றே நினைக்கின்றேன். மிக்க நன்றி.

      Delete
  12. \\பல கூத்துக்கள் அடங்கிய இந்த "பொய் நிகர் உலகில்" தான் எல்லோருமே இந்த உலகத்திற்கான அறத்தை போதித்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.\\
    மிக வலிமையான வார்த்தைகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான 'அறம்' வேறு இருந்து தொலைக்கிறது.
    பதிவின் தலைப்பு 'சங்கு சுட்டாலும் வெண்மைதரும்' இந்த வெண்பாவுக்கு 'சங்கு சுட்டால்தான் வெண்மை தரும்' என்றொரு பாதபேடம் இருக்கிறது என்பதாக கிவாஜ ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. கேள்வி பதில் போலத்தான் உள்ளது.

      சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

      சங்கு சுட்டால் தான் வெண்மை தரும்.

      நேற்று கூட ஒரு தளத்தில் தமிழ் இலக்கிய இலக்கணம் சார்ந்து ஒரு கட்டுரையை படித்து முடித்த போது நாம் எழுதுவது தமிழே அல்ல என்று தோன்றியது.

      நீங்கள் சொல்வது உண்மைதான். இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறம் இருக்கின்றது. சிலருக்கு அது கொள்கை. பலரின் பார்வையில் கொள்ளை.
      கருத்தியல் ரீதியாக முரண்பட்ட கருத்துக்களை சொல்வதும், அதுவே சரியென்று வாதிடுவதும் அஃதே.

      தொடர் வருகைக்கு நன்றி.

      Delete
  13. மன்னிக்கவும்... one of the worst fellow... very very worst fellow...

    இந்தப்பதிவை நீக்குவது-----உங்கள் விருப்பம்...

    மற்றவை தனி மடலில் அனுப்புகிறேன்... நன்றி...

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.