வைகோவின் திறமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மணிக்கணக்கான பேச்சாற்றலும், எது குறித்து வேண்டுமானாலும் பேசக்கூடிய திறமையும், நாடாளுமன்ற அனுபவங்கள், களப் போராட்டங்கள் என்று எதற்கும் பஞ்சமில்லை.
தனிமனித ஒழுக்கம், ஊழல் இல்லாத மனிதர். வாஜ்பாய் அரசில் காபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி கிடைத்த போதிலும் வேண்டாம் என்று ஒதுக்கியவர். சரியோ தப்போ இன்று வரையிலும் ஈழம் சார்ந்த கொள்கையில் தன்னை மாற்றிக் கொள்ளாதவர்.
இதற்கு மேலாக எவரும் எளிதில் அணுகக்கூடியவர் என்று நீங்கள் எத்தனையோ கூட்டல்களை போட்டுக் கொண்டே போகலாம்.
வலது, இடது சாரிகள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் சாரிப்பா.... என்கிற நிலைமையில் தான் உள்ளது. தா.பா ஒருவர் தான் சூறாவளி என்றாலும் பிழைத்துக் கொள்வதும், டெல்லி உயர்மட்ட காம்ரேட்கள் ஒதுக்க நினைத்தாலும் தப்பிப்பிழைப்பது எப்படி? என்றும் டெல்லியில் உள்ள காம்ரேட்டுகளுக்கே கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர்.
ஒரு வேளை ஜெயலலிதா தலைமையில் கூட்டஞ்சோறு கிண்டி பந்தி பாறிமாறும் சூழ்நிலை அமைந்தால் அதிமுகவின் கொ.ப.செ பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ராமதாஸ் அப்பழுக்கற்றவர் என்று சொல்லப்போனால் அடிக்க வருவார்கள். அவரின் தனிப்பட்ட தமிழ்நாடு சார்ந்த அத்தனை அக்கறையும், அவரின் சாதிய கொள்கைகளால் வெறுப்புக்கு ஆளானாலும் கூட தமிழைச் சொல்லி பிழைப்பு வாதம் நடத்தியவர்கள் மத்தியில் இன்று வரையிலும் தமிழ்நாட்டில் குழந்தைகளுடன் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் தொலைக்காட்சியாக மக்கள் தொலைக்காட்சி மட்டுமே இருக்கின்றது.
தமிழ்நாட்டு இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை உண்மையிலேயே அக்கறையோடு தொடக்கம் முதல் தனது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டு வருபவர்.
அவரின் கருத்துக்கள் தடாலடியாக இருந்தாலும் பலரின் பார்வையில் தரமற்ற கொள்கைகளாகவே இன்று வரையிலும் பார்க்கப்படுவதால் அவரும் என் வழி தனி வழி என்று ஆதிக்க சாதித் தலைவர்களை கூட்டுவதும் பீதியைக் கிளப்புவதும் என்று என் கடன் பணி செய்து கிடப்பதே என்று போய்க் கொண்டேயிருக்கின்றார்.
சமீப காலத்தில் நரேந்திர மோடியின் புண்ணியத்தால் தமிழ்நாட்டில் உருவான அலையினால் இப்போது தான் பாரதிய ஜனதா கட்சி ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது என்பதே தெரியவந்துள்ளது. தற்போது மோடி அலை வீசுவது பா.ஜ.க. ஜெயிக்க உதவுமோ இல்லையோ இவருடன் கூட்டணி அமைத்தால் நமக்கு எதிர்காலத்தில் பலன் இருக்குமோ? என்று இங்குள்ளவர்களை யோசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றொரு கட்சி இருக்கின்றது என்கிற அளவுக்குத் தான் இருக்கின்றது. தலைவர்கள் அதிகமாகவும் தொண்டர்களை தேடிக் கொண்டிருந்த போதிலும் இதே காங்கிரஸின் பொருளாதார மேதைகள் தான் நமக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.
தேர்தல் சமயத்தில் சுமக்க, சுமக்க வைக்க தில்லாலங்கடி வேலைகள் தெரியுமென்ற காரணத்தினால் அவர்களும் கட்சி குறித்து கவலைப்பட்டுக் கொள்வதில்லை.
நேற்று வந்த நடிகர் சரத்குமார் குமார் கூட தேறிவிட்டார்.
சிறந்த ஒட்டுண்ணியாக மாறுவது எப்படி என்று பாலபாடம் கற்றுக் கொண்டதால் அவரின் எந்த திறமையும் வெளியே தெரிய வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு தன்னை அதிமுக உறுப்பினர் அட்டை தேவைப்படாத ரர வாக மாற்றிக் கொண்டுள்ளார்.
அவரின் டெல்லி வாழ்க்கை, கர்நாடகத்தில் வாழ்ந்த வாழ்க்கை, படித்த கல்லூரி என்று பன்மொழித் திறமையை வளர்த்துக் கொண்டிருந்த போதிலும் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய திறமை தேவையில்லை. வசதியான இடத்தில் ஒட்டிக் கொண்டாலே போதும் என்ற மரத்திற்கு மரம் தாண்டி வந்து இன்று இதுவே போதும் என்கிற அளவுக்கு நினைத்த போது மாநாடு நடத்தி தன்னையும் ஒரு ஆளாக காட்டிக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் எந்த இடத்தில் கால் வைக்கின்றாரோ அத்தனை இடங்களிலும் ஊழல் ஆர்ட்டீசியன் ஊற்று போல பெருக்கெடுத்து பொங்குகின்றது. புத்திசாலி பிள்ளை எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்ளும் என்பதற்கு இவரே நல்ல உதாரணம்.
திமுக மற்றும் அதிமுக தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள இத்தனை திறமைசாலிகளின் மத்தியில் விஜயகாந்த் இன்றுவரையிலும் வித்தியாசமானவராக வினோதமாகத் தான் தெரிகின்றார்.
தொடக்கத்தில் வந்த படங்களை தவிர்த்து பிற்பாடு வந்த விஜயகாந்த் படங்களைப் பார்த்தால் இன்றும் ஆச்சரியமாகவே உள்ளது. உண்மையிலேயே எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வேண்டும் என்று காட்சிகளை, வசனங்களை அமைக்கச் சொன்னாரா? இல்லையா? என்று தெரியவில்லை.
அநீதிக்கு எதிராக போராடுபவனாக, கூர்மையான எளிமையான வசனங்கள் மூலம் சராசரி தமிழனுக்கு போய்ச் சேரக்கூடிய வகையில் மிகத் தெளிவாகவே அமைத்துள்ளார்.பலரும் ஒவ்வொரு படத்திலும் உதவியிருப்பதை பார்க்க முடிகின்றது.
திருப்பூரில் சாயப்பட்டறைகள் மொத்தமும் செயல்பட்டுக் கொண்டிருந்த போது அதில் பணிபுரிந்த பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிறிய, பெரிய, வயதான அத்தனை பேர்களுக்கும் விஜயகாந்த் படமென்றால் அது முக்கியமானது. பழைய படமென்றாலும் திரையரங்கில் கூட்டம் நிரம்பி வழியும். சனி, ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம். திருவிழா கூட்டம் தான்.
ஆனால் மாறிப் போன திருப்பூர் சூழ்நிலையில் விஜயகாந்த் படங்கள் எந்த திரையரங்கிலும் போடுவதாக தெரியவில்லை. ஏறக்குறைய மூன்று லட்சம் பேர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூரை விட்டு வெளியே சென்று விட்டதால் பல திரையரங்கில் இன்று எந்த படங்கள் என்றாலும் மூன்றாவது நாளே தூக்கி விட்டு வேறு படங்களை மாற்றி விடுவதும் நடந்து கொண்டு தானிருக்கிறது. இப்போது கூட சாயப்பட்டறைகளில், பல இடங்களிலும் பணிபுரியும் பலதரப்பட்ட கிராமத்து இளைஞர்களிடம் பேசும் போது விஜயகாந்த் மேல் உள்ள பிரியம் குறைந்தபாடில்லை.
ஏதோ ஒரு ஈர்ப்பு. எப்படி ஒரு காலத்தில் ராமராஜனின் சிவப்பு பச்சை நிறத்திற்கு ஒரு மதிப்பு இருந்ததைப் போல விஜயகாந்தின் கருப்பு நிறத்தை களையான முகம் அண்ணே என்று தான் சொல்கின்றார்கள்.
சிங்கத்தின் குகையிலே சென்று பிடறியை உலுக்கியவராக விருத்தாச்சலத்தில் நின்று ஜெயித்து வந்த போது அடித்தட்டு மக்கள் அவரை திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றாக கருதுவதாகத் தோன்றியது. தமிழ்நாட்டில் தேமுதிக விற்கு மொத்தமாக கிடைத்த பத்து சதவிகிதமென்பது சிலருக்கு ஆச்சரியத்தை தந்ததைப் போல பலருக்கு எரிச்சலையும் உருவாக்கியது. அந்த எரிச்சல் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் உதவியது. நம்பமுடியாத எதிர்க்கட்சி பதவியையும் கொண்டு வந்து சேர்த்தது.
தனிப்பட்ட திறமையைவிட அசராத நம்பிக்கையும் ஆச்சரியப்படும் அதிர்ஷ்டமும் கைகோர்க்க தமிழ்நாட்டில் கலைஞரின் அனுபவங்கள் தோற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தையும் பெற முடிந்தது.
எல்லாமே சரி தான்.
வளர நம்பிக்கைத் தேவை. அந்த நம்பிக்கை கனவாக இல்லாமல் நிஜமாக மாற அதிர்ஷ்டமும் தேவைத்தான்.
ஆனால் மேலும் வளர பயிற்சியும் உழைப்பும் தேவை தானே?
கலைஞர் அளவுக்கு திறமையில்லாத எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வாய்ப்புகளை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு மேலேறினார். ஆனால் அவருக்கு இயல்பாகவே இருந்த மக்கள் செல்வாக்கு என்பது அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்த உதவியது.
எம்.ஜி.ஆர் அளவுக்கு விஜயகாந்திற்கு முழுமையான மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும் கூட சரியான சந்தர்ப்பங்கள் அவரை நகர்த்திக் கொண்டே வந்தது. ஆனால் திறமையில்லாமல் வரும் அதிர்ஷ்டம் என்பது என்னவாகும்? என்பதற்கு விஜயகாந்த் உதாரணமாக இருக்கின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.
எந்த அரசியல்வாதிகளும் முழுமையான புத்திசாலிகள் அல்ல.
கலைஞருக்கு இன்று வரையிலும் அறிக்கைகள் தயார் செய்வது முதல் பலதரப்பட்ட வகையில் உதவியாய் இருப்பதில் முதன்மையாக இருப்பவர் சண்முகநாதன். எவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதினாலும் கலைஞரின் எடிட்டிங் உழைப்பு இல்லாமல் அறிக்கை வெளியே வராது. அவரின் அபார உழைப்பும், ஞாபக சக்தியும் சுட்டுப்போட்டாலும் தமிழ்நாட்டில் எவருக்கும் வராது. அதே போல ஜெயலலிதாவுக்கு புலவர் மற்றும் அவர் மகன் (தற்போது யாரோ?) என்று பெரிய படைபட்டாளமே இருக்கின்றார்கள்.
ஆனால் விஜயகாந்த் பின்னால் மூன்று அல்லக்கைகளும், மனைவி, மச்சினன் என்ற கிச்சன் காபினெட் குழுவும் இருப்பதால் கட்சியில் இருந்தவர்களை ஓட வைத்தது தான் மிச்சம்.
இவர் மேடையில் பேசும் பேச்சு முதல் பொது இடங்களில் உளறிக் கொட்டும் விசயங்களையும் பார்க்கும் போது வியப்பாகவே உள்ளது. கற்றுக் கொள்ள பொறுமையில்லையா? இல்லை கற்றுக் கொள்ளும் "சூழ்நிலை"யில் இல்லாமல் இருக்கின்றாரா? என்று எண்ணவே தோன்றுகின்றது.
உருவாகப் போகும் கூட்டணி தர்மத்தின் படி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விஜயகாந்தின் பேச்சுக்களை நேரிலையாக ஒளிபரப்பி பீதியை கிளப்புகின்றார்கள். இத்தனை விசயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் ராகுல் விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி தூண்டில் போட மறுபக்கம் நாங்க வந்து பார்க்கலாமா? என்று பா.ஜ.க. முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கலைஞர் கூட ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்புகின்றார்.
அதிர்ஷ்டத்திற்கு கண்ணில்லை என்பது உண்மைதானோ?
தொடர்புடைய பதிவுகள்
எல்லோரும் விஜயகாந்தை அளவுக்கதிகமாக மதிப்பிடுகிறார்கள். அவர் ஒரு செல்லாக்காசு என்பது விரைவில் நிரூபனமாகும். ஜெ. கூட ஏதோ அப்படி ஒரு மாயையான பயத்தில்தான் கூட்டணி வைத்துக்கொண்டார். மற்ற கட்சிகளின் பயம் விஜயகாந்த்திற்கு பலமாக ஆவதுதான் காலத்தின் கோலம் போலும்!
ReplyDeleteதேவகவுடா கூட இந்தியாவின் பிரதமர் ஆகவில்லையா? விசயகாந்த் முதல்வர் ஆவது ஒன்றும் பெரிய காரியமில்லை நம் ஊரில்.
Deleteஅவர் கற்றுக் கொண்டது வேறு... அவரின் சூழ்நிலையே வேறு...
ReplyDeleteநாடகம் இப்போது தான் ஆரம்பம்...!
நாடகம் முடிவதற்குள் கட்சியே இல்லாத அளவிற்கு அம்மையார் கதக்களி ஆட்டத்தை நடத்தி விடுவார் போல.
Deleteதொழிலதிபதிவரே,
ReplyDeleteமஞ்சத்துண்டு ராசதந்திரத்தில் கெட்டி எனப்படுவது "கணக்குல புலி" என கணக்கே தெரியாத ஒரு விலங்கை பாராட்டுவது போலத்தான் :–))
எம்சிஆருப்பாட்டுக்கு சிவனேனு படத்துல நடிச்சுட்டு போயிருந்திருப்பார்,அவர கிளப்பிவிட்டு பெரும் அரசியல் தலைவராக மாற்றீய மடமையை செய்தார்,
எம்சிஆர் போனப்போ கிட்டத்தட்ட பாதி ஓட்டு வங்கி காலியாச்சு.
அப்புறம் வைக்கோ கொஞ்சம் டெவெலப் ஆனதும் கிளப்பிவிட்டார் அப்போ கொஞ்சம் ஓட்டு வங்கி காலியாச்சு.
சும்மா கிடந்த விசயகாந்தை கிளப்பி விட்டு அரசியல் புகவச்சார், அதுல கெட்டப்பேரு தான் கிடச்சுது. இப்போ வரைக்கும் வி.காந்த் பிரிக்கும் ஓட்டு கலிஜருக்கு தான் ஆப்பாக அமையுது.
மஞ்சத்துண்டு ராசதந்திரி என்றால் ஏன் ஒரு முறைக்கூட எம்சிஆருக்கு பிறகு அடுத்தடுத்து ஆட்சியமைக்கவில்லை?
பக்கத்து மாநிலம் ஆந்திராவில் காலம் சென்ற ராஜசேகர ரெட்டிக்கூட இரு முறை தேர்தலை வென்றார், ஆனால் கலிஞரால் ஒரு முறைக்கூட செய்ய முடியவில்லை, ஒவ்வொரு முறையும் அம்மையார் பிரம்மாண்ட வெற்றியுடன் தான் ஆட்சிக்கு வருகிறார்,ஆனால் கடந்த முறை ஆட்சியே மைனாரிட்டி, இம்முறை பெரும் தோல்வி.
இந்தியாவில் பெரும் ராசதந்திரி எனச்சொன்னால் சோனியவைத்தான் சொல்லனும், ஆட்சி பொறூப்பினை ஏற்காமலே ஆட்டி வைக்கும் கலை அறிந்துள்ளார்.
மஞ்சத்துண்டின் அரசியல் ஆளூமை எல்லாம் போய் ரொம்பக்காலம் ஆச்சு,கட்சிக்கு வெற்றியைப்பற்றி யோசிப்பதை விட கட்சி தன் குடும்ப சொத்தாக வைத்திருப்பதில் தான் வித்தைக்காட்டிக்கிட்டு இருக்கார், இந்த வித்தையிலும் சோனியா பலப்படிகள் முன்னே!
பேரவைத் தலைவரே கலைஞர் மேல கொல வெறியோடுதான் எப்போதும் இருப்பீங்க போல. விட்டா பக்கம் பக்கமா பொளந்து கட்டுவீங்க போல.
Deleteவைகோ பற்றியும் ராமதாஸ் பற்றியும் சொல்லியிருப்பவையும் மற்ற விஷயங்களும் நூற்றுக்கு நூறு சரி. சரியான அலசல். வவ்வால் அவர்களின் 'தொழிலதிபதிவரே' விளித்தல் ரசிக்க வைத்தது.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம். அவரு நமக்கு (வேர்க்)குரு மாதிரி. திடீர்ன்னு சொறிவாரு. அப்புறம் பிறாண்டுவாரு. லேசா தட்டிக் கொடுப்பாரு. இதுவொரு புரிந்துண்ரவு ஒப்பந்த அடிப்படையிலானது. தொடர்ந்து வந்தால் உங்களுக்குப் புரியம்.
Deleteதா.பாண்டியனுக்கும் ,சரத் குமாருக்கும் கடும் போட்டியே நிலவுகிறது ...யார் முதலில் ஜால்ரா அடிப்பது என்று !
ReplyDeleteதிராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேராமல் இருந்து இருந்தால் விஜயகாந்த் இன்னும் வளர்ச்சி அடைந்து இருப்பார் !
மற்ற தலைவர்களை பற்றிய கருத்தும் ஏற்க கூடியதே !
ஜால்ரா என்ற வார்த்தை அரசியலில் இல்லை. நம்பகத்தன்மையை பெறுவது. தக்க வைப்பது. தொடர்ந்து இருந்தால் நிச்சயம் இங்கே ஏதோ பதவி கிடைக்கும். குறைந்த பட்சம் குழந்தை குட்டிங்க எதிர்கால வாழ்க்கைக்கு உதவ ஏதோவொரு வழியில் நிதியுதவி கிடைக்கும். அதிமுக என்றால் இது நிச்சயம் உண்டு.
Deleteவிஜயகாந்த் அதிர்ஷ்டத்தில்தான் வென்றார், அதிர்ஷ்டத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் என்பதையெல்லாம் நீங்கள் ஒன்றும் சும்மா சொல்லிவிடவில்லையென்பது மற்ற கட்சித்தலைவர்களை அலசி ஆராயந்திருப்பதிலிருந்து தெரிகிறது. உங்கள் முடிவுதான் என்னுடைய முடிவும். எல்லா விஷயங்களிலும் ஏதோ ஒன்று செய்யப்போக அல்லது எதுவுமே செய்யாமல் இருந்தாலும் அதிர்ஷ்டம் ஜெயிக்கவைக்கும் என்பதற்கு இன்றைய நிலையில் விஜயகாந்தும் ஒரு நல்ல உதாரணம். இதுபற்றி நானே ஒரு பதிவு எழுத இருந்தேன். சரி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தேன். நீங்கள் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteநீங்க வேற? இப்படி குண்டக்க மண்டக்க போட்டு பாராட்டித் தாக்கினால் நான் என்ன தான் செய்வது? ஏற்கனவே நம்ம அசின் பேரவைத் தலைவரிடம் விவாதம் செய்வதை விட 600 வார்த்தைகளில் நல்லதொரு பதிவு எழுதி விடுவேன் என்று சொல்ல அவரும் வெயிட்டிங் என்று சொல்லியிருந்தார். முதல் முறையா எந்த பஞ்சாயத்தும் இல்லாமல் எழுதிட்டு போயிருக்குற பார்த்து கண்கள் பனித்துப் போய் கிடக்கும் போது நீங்க வேற முதுகை தடவி கொடுத்துட்டு போயிருக்கீங்க.
Deleteஆனந்த கண்ணீர்.
திரு வவ்வால் கூறுவது தான் சரி. மேலும் அதிர்ஷ்டம் எப்போதும் கை கொடுக்காது என்பதை இப்போது விஜயகாந்த் உணர ஆரம்பிப்பார்.
ReplyDeleteபரமசிவம்
ஆனா நம்ம மக்கள் யார் வேண்டுமென்றாலும் வரட்டும் அவர் மட்டும் வேண்டாம் என்கிற ரீதியாகத்தானே ஒவ்வொரு முறையும் முடிவு எடுக்கின்றார்கள். அது போன்ற சமயங்களில் அதிர்ஷ்டம் தான் முன்னிலையில் நிற்கின்றது.
Deleteஆனா ஜி... விஜி எதிர் கால முதல்வர் என்பது ஒரு சோதிட கனீப்பு ஜி..
ReplyDeleteஎனக்கும் ஒரு பட்சி அப்படித்தான் சொன்னது?
Deleteவரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் எடுத்து வைக்கும் அடிதான் அவரை முன்னிறுத்துமா இல்லை பின்னோக்கிப் போக வைக்குமா என்று தெரிய வைக்கும் அண்ணா...
ReplyDeleteமற்றவர்கள் அனைவரும் செல்லாக்காசுதான்.... குறிப்பாக சரத்குமார் குப்பையாகி ரொம்ப நாளாச்சு.... ராதிகாவுக்கு எம்.பி சீட் கிடைக்கும் என்ற பேச்சு அடிபடுவதால் ஜால்ராவை ஓங்கித் தட்டிக்கொண்டிருக்கிறார்.
குமார் அரசியலில் தேறீட்டீங்க போல.
Delete