"நான் இப்ப அவியலுக்கு போய்க்கிட்டு இருக்கேன்டா........."
பத்தாம் வகுப்பில் கோடு வாங்கியவர்களும், பத்து நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராதவர்களையும் சாலையில் சந்திக்கும் போது "ஏன்டா பள்ளிக்கூடத்திற்கு வரலே?" என்றால் இப்படித்தான் சொல்வார்கள்.
புதுவயல் என்ற ஊர் முழுக்க அரிசி ஆலைகள் தான். இது பள்ளத்தூர் வரைக்கும் இருந்தது. இன்று வரைக்கும் அரிசி உற்பத்தியில் தமிழ்நாட்டில் இந்த ஊர்களின் பங்களிப்பு மிக அதிகம். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு வசித்தாலும் வாங்கும் அரிசிப்பையின் கீழே பார்த்தால் இந்த ஊரும் மில்லின் பெயரும் நிச்சயம் இருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளது.
அவியல் என்பதன் அர்த்தம் கொஞ்சம் வித்தியாசமானது.
இப்போது போல நவீன ரக அரிசி ஆலைகள் எதுவும் அப்போது இல்லை. பலரும் சிறு தொழில் போலத்தான் இந்த அரிசி ஆலைகளை நடத்திக் கொண்டு இருந்தார்கள். ஓரே கூரையின் கீழ் அத்தனை வசதிகளையும் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். குறிப்பிடத்தக்க முஸ்லீம் மக்கள் தான் பெரிய அரிசி ஆலைகளை வைத்திருத்தனர். இப்போது சிங்கப்பூரில் உணவகத் தொழிலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் பனானாலீப் அப்பலோ உரிமையாளர் போன்றவர்கள் பிறகு உள்ளே நுழைந்து படிப்படியாக வளர்ந்தவர்கள். இவரைப் போல பக்கத்து ஊரில் உள்ள குறிப்பிட்ட சமூகம் சார்ந்த மக்கள் இந்த தொழிலில் வந்திறங்க இந்த தொழில் வேகமாக வளரத் தொடங்கியது.
கையில் கொஞ்சம் காசு இருக்க வேண்டும். அது போதும்.
ஊருக்கு அருகே உள்ள சாக்கோட்டை என்ற பகுதியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைந்த நெல் மூட்டைகளை மாட்டு வண்டியில் கொண்டு வந்து முதல் நாள் இரவே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்கள்.
அங்கே இருந்த மஞ்சு விரட்டு பொட்டலில் தொடங்கி பக்கத்தில் இருந்து ஊரணிக்கரை வரைக்கும் சுற்றிலும் உள்ள மொத்த பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டு இருக்கும். அதிகாலை மூன்று மணி தொடங்கி ஆறு மணிக்குள் அத்தனை வண்டியும் விலை பேசப்பட்டு வாங்கியவர்கள் அவரவர் ரைஸ்மில்லில் கொண்டு போய் இறக்கியிருப்பார்கள். வண்டியில் உள்ள நெல்லை விலைபேசி முடிவு செய்த உடனே ஒரு துண்டுச்சீட்டில் எழுதி எத்தனை மூட்டைகள் மொத்த பணம் போன்றவற்றையும் கையோடு கொடுத்து விடுவார்கள்.
ஒரு சிறிய தொகையை முன் பணமாக கொடுக்க மில்லில் கொண்டு போய் இறக்கிவிட்டு மீதிப்பணத்தை வாங்கிக் கொள்வார்கள். காலை ஏழு மணிக்கு பொட்டல் முழுக்க மாடுகள் போட்ட சாணியை அள்ளுவதற்கு ஒவ்வொருவரும் போட்டு போட்டுக் கொண்டிருக்க ஒன்பது மணிக்குள் அந்த சந்தைப்பொட்டல் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக மாறியிருக்கும்.
ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நெல் வியாபாரம் நடந்து கொண்டே இருந்தது.
ஐம்பது கிலோ மூட்டை முதல் சிறிய அளவு சிப்பமாக கட்டி வருவது வரைக்கும் உண்டான நெல் மூட்டைகளை அவரவர் பணத்தகுதி பொறுத்து வாங்கி மில்லுக்கு கொண்டுச் செல்வர். கையில் பத்தாயிரம் இருந்தால் போதும். ஒரு சிறிய தொழில் அதிபராக மாறிவிட முடியும்.
ஏற்கனவே ஏதோவொரு மில்லில் உள்ள களத்தையும் (சிமெண்ட் தளத்தால் போடப்பட்ட பெரிய பகுதியை களம் என்பார்கள்) அதன் அருகே உள்ள அடுப்பையும் குத்தகை பேசி எடுத்திருப்பார்கள். மில்லின் சொந்தக்காரருக்கு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து விட்டால் அங்குள்ள அடுப்பில் உள்ள பெரிய அண்டாவில் நெல்லைக் கொட்டி அவிய வைத்து, கலத்தில் காய வைத்து மற்றொரு மில்லில் கொண்டு போய் அரிசியாக மாற்றி விடுவார்கள்.
ஊர வைத்த நெல்லை அவிய வைக்க ஒரு இடம், காய வைக்க ஒரு இடம், அரிசியாக மாற்ற ஒரு இடம் என்று இந்த செயல்பாடுகள் நகர்ந்து கொண்டேயிருக்கும்.இப்போது அவுட் சோர்சிங் என்கிறார்களே அதைப்போலத்தான்.
யாருக்கும் எதுவும் சொந்தமாக இருக்காது. எல்லாமே குத்தகை மயம் அல்லது வாடகை மயம் தான்.
இது போன்று செயல்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு நெல்லை அவிக்க ஆள் தேவைப்படும். நெல் மூட்டையிலிருந்து பிரித்து எடுத்து, ஊற வைத்து மிதப்பதை பிரித்து அதை அடுப்பின் மேல் இருக்கும் அண்டாவில் கொண்டு போய் கொட்டி கீழே கட்டைகள் போட்டு எறியூட்டி, குறிப்பிட்ட பக்குவத்தில் நெல் வெந்ததும், தண்ணீரை வடிகட்டி கலத்தில் கொண்டு வந்து கொட்டி காய வைக்க வேண்டும். காய்ந்த பின்பு மீண்டும் அதை மூட்டை கட்டி நெல் அறைக்கும் எந்திரம் இருக்கும் பகுதிக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.
கடுமையான வேலை. உடல் வலு உள்ளவர்கள் செய்யக்கூடிய வேலை. தொடர்ச்சியாக உழைத்தே ஆக வேண்டிய வேலையிது.
படிப்பறிவு தேவையில்லாத கூலி வேலை போல சொன்னதை செய்யும் வேலைக்குத்தான் பலரும் பள்ளியிலிருந்து நின்று எவரோ ஒருவரிடம் போய் சேர்ந்து விடுவார்கள். எவருக்கும் வேலை கிடைக்கும். எப்போதும் வேலை இருந்து கொண்டேயிருக்கும். ஓடுக்கப்பட்ட குடும்பம் முதல் வறுமையில் வாழ்ந்த குடும்பங்கள் வரைக்கும் அனைவருக்கும் இந்த தொழில் தான் தினந்தோறும் வாழ உதவிக் கொண்டிருந்தது. வேலை பார்க்க கிடைக்கும் சம்பளத்தோடு கூடவே குறைந்த விலையில் கிடைக்கும் அரிசி மற்றும் குருணைகளும் அவர்களின் பசியை போக்க உதவியது.
இப்போது போல பிராண்ட் இல்லாத கலாச்சாரத்தின் காரணமாக அரிசி என்பது வெறுமனே அரிசி தான். அரிசியின் வகைகளும் கை விரலுக்குள் அடக்கி விடலாம். அப்போது ஒரு அரிசி மூட்டை நூறு கிலோ என்கிற அளவுக்கு கோணி ஊசி வைத்து தான் தைத்தார்கள்.
நெல்லிருந்து அரிசியாக மாற்ற ஒரே எந்திரம். அது தான் நெல்லை அறைத்து அரிசியாக கீழே தொங்கிக் கொண்டிருக்கும் துணியிலான பைப் வடிவத்தில் உள்ளதன் வழியாக கீழே வைத்துள்ள ட்ரம்மில் அரிசி தொடர்ச்சியாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். அரிசியின் தரம் பொறுத்து தனித்தனி சாக்குப் பையில் கொண்டு போய் கொட்ட தனியாக ஒருவர் வேகமாக செயல்பட்டு தைத்துக் கொண்டிருப்பார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. இரவே தயாரான அரிசி கடைகளுக்குச் சென்று விடும்.
எந்திரத்திற்கு அருகே புடைப்பதற்கு என்று சலிப்பான் இடைவிடாது ஓடிக் கொண்டேயிருக்கும். அது செவ்வக வடிவில் இருக்க அதில் ஓட்டைகளுடன் இருக்கும் தகடு போன்ற அமைப்பில் பெரிய அரிசிகள் மேலே நின்று விட அதன் ஓட்டை வழியே குருணைகள் கீழே உள்ள குழாய் போன்ற அமைப்பின் மூலம் ஒரே இடத்தில் வந்து தலையில் விழும்.
குருணை தனியாக பிரிக்கப்பட உடையாத அரிசி ஓழுங்காக மூட்டையில் வந்து சேரும். குருணை என்பது முக்கிய விலைக்கு போகும் சமாச்சாரமாக இருந்தது. குருணைக்கஞ்சி என்பது இயல்பான உணவாக இருந்தது.
ஆனால் இன்று எந்த கடையிலும் குருணை என்பதை பார்க்க முடியவில்லை. பெரும்பாலும் இன்று குருணை என்பது கோழிப்பண்ணைக்குத்தான் சென்று கொண்டிருக்கின்றது.
எனக்கு முன்னால் படித்தவர்களும், பின்னால் படித்தவர்களும் இந்த தொழிலில் இறங்கி பத்து வருடத்திற்குள் கோடிக்கணக்கான முதலீட்டில் தொழில் செய்பவர்களாக வளர்ந்து இருந்தனர்.
ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பாதிப் பேர்களை காணவில்லை. அதாவது போட்டியில் நிற்க முடியாமல் முடங்கிப் போனார்கள். சர்வசாதாரணமாக ஐந்து கோடிக்கு மேல் கையில் இருந்தால் மட்டுமே இன்று இந்த தொழில் செய்யும் அளவுக்கு இந்த தொழிலின் போக்கு மாறிப்போய்விட்டது. மற்ற துறைகளைப் போலவே பணமிருப்பவர்களுக்கான தொழிலாகவே மாறிப் போய் விட மற்றவர்கள் பணிபுரிபவர்களாக மாறிவிட்டார்கள்.
எளிய எந்திரங்கள் மறைந்து இன்று மார்டன் ரைஸ்மில் என்று மாறிவிட்டது. இப்போது அரிசி என்பதற்கு மதிப்பில்லை. அது என்ன பிராண்ட் என்று சொன்னால் மட்டுமே மக்களுக்கு புரிந்து வாங்கும் அளவிற்கு இந்த சந்தை முற்றிலும் மாறிவிட்டது.
ஒரே அரிசி பலவிதமான பெயர்களில் பட்டைத்தீட்டப்பட்டு தீட்டப்பட்டு ஊரெங்கும் சக்கைதான் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. அரிசியில் பாலீஷ் பத்தலையே என்கிற அளவுக்கு இன்றைய நாகரிக சமூகம் முன்னேறியுள்ளது. இப்போது மற்றொரு கொடுமையும் உண்டு. ஐந்து மாதம் பழைய அரிசி, ஒரு வருடம் பழைய அரிசி என்கிற பெயரிலும் விலையின் போக்கு கூடியுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் தேவைப்பட்ட அரிசி ஆலை என்பது இன்று மாறியுள்ள மார்டன் ரைஸ்மிஸ் என்பது வசதிகள் பொறுத்து குறுகிய சதுர அடிக்குள் முடிந்துள்ளது. அடுப்பு இல்லாமல் ஒரு பக்கம் நெல்லைக் கொட்டினால் மறுபக்கம் அரிசியாக வந்துவிழும் அளவுக்கு மாறி விட்டது. தயாராக இருக்கும் எந்திரம் கிலோ பார்த்து தைத்துக் கொடுத்து விடுகின்றது. ஒரு அரிசிப் பையின் அளவு பத்து கிலோ என்பதில் தொடங்கி அதிக பட்சம் 25 கிலோ என்பதாக மாறி அதிக ஆட்கள் தேவையில்லாது அத்தனையிலும் நவீனம் புகுந்து தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி என்பது இன்று ஏற்றுமதி வரைக்கும் முன்னேறியுள்ளது.
கர்நாடகாவிலிருந்து வரும் அரிசி தமிழ்நாட்டு அரிசியின் விலையை அவ்வப்போது ஆட்டம் காண வைத்தாலும் இன்றும் பெரும் முதலீட்டில் இது முக்கியத் தொழிலாகவே இருக்கின்றது.
அன்று நெல்லை அரைக்கும் போது வந்த தவிடு மாட்டுக்குத் தீவனமாக போனது. இப்போது அதிலிருந்து எண்ணெய் எடுக்க விஞ்ஞான முன்னேற்றம் கற்றுத் தந்துள்ளதால் உருப்படியான சத்துக்களை அனைத்தும் காசாக மாறிப் போய்விட கச்சடா சமாச்சாரம் அரிசி என்ற பெயரில் வந்து நம் வீட்டு அடுப்பில் சோறாக கொதித்துக் கொண்டிருக்கின்றது.
முந்தைய பதிவு
விவரமாக விளக்கமளித்துள்ளிர்கள்
ReplyDeleteநன்றி
Deleteஇப்படி அரிசியை பற்றி எல்லா உண்மைகளும் சொல்லிவிட்டால் எப்படி நாங்க வியாபாரம் செய்யறதாம் எழுத்தாளர்
ReplyDeleteஇன்னோரு பாகம் முழுமையாக எழுதினால் தான் நிறைவு பெறும். இதில் சொல்லியிருப்பது மேம்போக்கான விசயங்களே.
Deleteவேடிக்கைதான் வாழ்க்கை...
ReplyDeleteவாழ்க்கையே வேடிக்கை
Deleteகுருணை தனியாக பிரிக்கப்பட உடையாத அரிசி ஓழுங்காக மூட்டையில் வந்து சேரும். குருணை என்பது முக்கிய விலைக்கு போகும் சமாச்சாரமாக இருந்தது. குருணைக்கஞ்சி என்பது இயல்பான உணவாக இருந்தது.//
ReplyDeleteகுருணை தோசை, குருணை பால் கஞ்சி என்று செய்வது எல்லாம் அந்த காலம் ஆகி விட்டது. குருணை, கல் நீக்கிய அரிசி மூட்டை வாங்குகிறோம் இப்போது. இந்தக் கால குழந்தைகளுக்கு குருணை என்றாலே தெரியாது.
முக்கிய சத்து அனைத்தும் குருணையில்தான் இருக்கின்றது.
Deleteஏற்கனவே ஏதோவொரு மில்லில் உள்ள கலத்தையும் (சிமெண்ட் தளத்தால் போடப்பட்ட பெரிய பகுதியை கலம் என்பார்கள்... கலம் அல்ல களம்
ReplyDeleteநன்றி. திருத்தி விட்டேன்.
Deleteஅவியல் சுவையாக இருந்தது. கோவையில் எங்கள் கிராமத்தில் அரவை மில் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் பலர் இப்போது தொழில் இழந்தது உண்மைதான்..
ReplyDeleteநவீன தொழில் நுட்பங்கள் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையான சத்துக்கள் அனைத்தும் இழந்து சக்கை தான் மிஞ்சுகின்றது.
Deleteஎல்லாத் தொழிலுமே தொழில் நுட்ப மாற்றங்களால் அடிபட்டது உண்மைதானே.....இனி வரும் காலங்களில் தான் மக்கள் சிறு தானியப் பயன்பாட்டை உணர்வார்கள் எனத் தோன்றுகிறது....
ReplyDeleteடிராக்டருக்கு வாடகை கொடுத்து மாளவில்லை. டீசல் விலையும் கூடிவிட்டது என்று ஒருவர் மீண்டும் மாடு வைத்து உழவு செய்வது எளிதாக உள்ளது என்று பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துள்ளார். நிச்சயம் விலையேற்றம் பல வித மாறுதல்களை உருவாக்குகின்றது. மின்சாரத்தடை என்று வருத்தப்படுகின்றோம். ஆனால் அதன் மூலம் பல நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றது. அனுபவிக்கும் உண்மை.
Deleteநீங்கள் சொல்ல சொல்ல அது மனதில் ஒரு உருவகமாக வளர்ந்து கொண்டே போகிறது, முடிவில் இந்த தொழில் பல மாற்றங்களை சந்தித்ததை பார்த்து மகிழ்வதா, அல்லது வேதனை படுவதா என்று தெரியவில்லை !
ReplyDeleteவாங்க சுரேஷ். அனுபவங்கள் என்பது உருவத்தை உருவகங்களை மீட்டெடுப்பது தானே.
Deleteமுன்னேற்றம் என்பதன் பின்னே இருக்கும் சத்து குறைவு இப்போதுதான் தெரிகிறது. தொழில் நுட்பத்தால் நன்மை விளையும் என்றாலும், அந்தத் தொழில் நுட்பத்தால் வரும் கேடுகளையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது வருத்தப்பட வைக்கும் நிஜம்.
ReplyDelete