அஸ்திவாரம்

Monday, September 09, 2013

மரபணு மாற்ற விதைகள் -- பயங்கரத்தின் கதை 4


நீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது மகாராஷ்டிர அரசு 29 விதைக் கம்பெனிகள் மகாராஷ்டிரத்தில் வயல்வெளி பரிசோதனைள் செய்ய சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களுக்கு ஆட்சேபனையில்லை என்ற சான்று வழங்குவது பற்றி ஆராய்ந்து அறிக்கை கொடுக்க அணுசக்தி கமிசனின் உறுப்பினரான முனைவர்.அனில் கக்கோட்கர் தலைமையில் குழு அமைத்தது. 

இவருக்கும் மரபணு மாற்றுப்பயிர்கள் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என கேட்கலாம். 

இங்கு தான் அணு உலை பாதுகாப்பு பற்றி ஆராய ஏவுகணை விஞ்ஞானி போவார், 

காட்டு வளம் காப்பது குறித்து இயற்பியல் விஞ்ஞானி குழுவில் சேர்க்கப்படுவார், 

மரபணு மாற்றுப் பயிர் பற்றி ஆராய அணு விஞ்ஞானி வருவார். 

முனைவர் அனில் கக்கோட்கர் தலைமையிலான குழு மத்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகத்திற்குச் சத்தமின்றிச் சென்று ஆலோசனை நடத்தியது. இருப்பினும் அதன் விவரங்களை அந்தக் குழுவோ, அரசோ தெரிவிக்க மறுத்துவிட்டது.

உயிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் சங்கத்தின் (Association of Biotech Led Enterprises - Agriculture Group (ABLE-AG) ) விவசாயப்பிரிவு ஐம்பதுக்கும் மேலான வயல்வெளிச் சோதனைகள் ஒவ்வொன்றும் அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.  அவைகளுக்கான அனுமதியை விரைவில் அளிக்கவேண்டும் இந்தப் பருவம் தாண்டிவிட்டால் மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்று அழுத்தம கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இவ்விரண்டும் ஒன்றையடுத்து மற்றொன்றாக நடக்கிறது..

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிடி கத்தரிக்கு விதித்த தடை, உச்சநீதிமன்றத்தின் கெடுபிடி விதிகள், மற்றம் வல்லுனர் குழுவின் 10 ஆண்டுகால தடை என்ற பரிந்துரை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் தடை பரிந்துரை, வயல்வெளி சோதனைகளுக்கு அனுமதி மறுப்பு, மிக அண்மை நிகழ்வாக மரபணுமாற்று அங்கீகாரக்குழு வயல்வெளி சோதனைகளுக்கு அளித்த அனுமதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிறுத்தி வைத்தது 

மறுபுறமோ மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை வளர்க்க, அவ்வகைப் பயிர்களை உருவாக்க அரசின் அமைப்புகளான இந்திய வேளாண்மைக்கழகம், தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம், தேசிய தாவர வளப் பெட்டகம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளை மரபணு மாற்று வேலைகளுக்கு ஏதுவான அதன் தலைமைப் பொறுப்புகளுக்கு மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்கியவர்களையே, மான்சான்டோ சார்பு விஞ்ஞானிகளை தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப்படுதல் போன்றவைகளும் நடந்தேறுகிறது. 

இது மான்சான்டோவின் பாணி. 

கீழே உள்ள படம் அமெரிக்காவில் அது எப்படி அரச முடிவுகளை எடுக்கிறது என்பதை விளக்கும். தனது ஆளை அரசின் உயர் பொறுப்பில் அமர வைக்கும். பின் மிக எளிதாக அவர் மூலம் சாதகமான முடிவுகளை எடுக்க வைக்கும். 

இது அதன் நீண்டகால பாணி.


இதே அமெரிக்க பாணியை மான்சான்டோ இந்திய விவசாயச் சூழலை வளைக்க கடைபிடிக்கிறது. வலுவான வலை அரசாங்கத்தின் உதவியோடு பின்னப்படுகிறது.  இதன் உச்சகட்ட வெளிப்பாடு தான் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிராய் சட்ட வரைவாகும்.

பிராய் சட்டவரைவைத் தாக்கல் செய்யும் போதே வேளாண்மைக்கான நிலைக்குழுவின் தலைவரான பாசுதேப் ஆச்சார்யா அவர்கள் கடுமையாக எதிர்த்தார். 

அப்போது நாடாளுமன்றத்தில் நடந்தவை (தனியாக).

அவரின் எதிர்ப்பை மீறி வரைவு தாக்கல் செய்யப்பட்டதும் பொறுத்தமில்லாத அமைச்சகம் இந்த சட்ட வரைவை உருவாக்கி தாக்கல் செய்துள்ளது சரியல்ல. திரும்பப் பெறவேண்டும் என 4 கட்சிகளின் அவைத் தலைவர்கள் உள்ளிட்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஜெயபால் ரெட்டிக்கு கடிதம் எழுதினர். மதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு. அ.கணேசமூர்த்தி உள்ளிட்ட பலரும் தனித்தனியே கடிதம் எழுதினர். தி.மு.க வின் மக்களவை உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் வேளாண்மையில் உள்ள சிக்கல்கள் பற்றி நடந்த விவாதத்தின் போது பிராய் தேவையில்லை எனக் கூறினார். 

மரபணு மாற்றுப் பயிர்கள் இல்லாத இந்தியாவிற்கான அமைப்பினர் உள்ளிட்ட பல மக்கள் அமைப்புகள் அமைச்சர் அவர்களைச் சந்தித்து தங்களின் அச்சத்தைத் தெரிவித்ததுடன் சட்ட வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தினர். 

அவரும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் கொண்ட கூட்டுக்குழுவிற்கு அனுப்பிடலாம் என சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். ஆனால் சபாநாயகர் சட்ட வரைவைத் தாக்கல் செய்த அமைச்சரின் பரிந்துரையை ஒதுக்கி விட்டு காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான சுப்பிராமி ரெட்டியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான நிலைக்குழுவிற்கு அனுப்பினார்.

இந்த நிலைக்குழு கடந்த மாதம் பத்திரிக்கை விளம்பரங்கள் மூலம் ஜுலை 10 தேதிக்குள் சட்ட வரைவு மீதான கருத்துக்களை ஆங்கிலம் அல்லது இந்தியில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. 

121 கோடி மக்கள் மீதும், இனிவரவுள்ள பல நூறு எதிர்காலத் தலைமுறைகள் மீதும் திரும்பச் சரி செய்யவியலாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில் நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட அமைப்பின் மீது அனைத்துத் தரப்பினரும் கருத்துத் தெரிவிக்க வழியில்லாத வகையில் சட்டம் திணிக்கப்படுகிறது. பிடி கத்தரி உள்ளிட்டவைகள் நம் மீது திணிக்கும் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் இந்த ஆணையச் சட்ட வரைவகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் பல அறிவுரைகள், உச்சநீதிமன்றத்தின் தொழில் நுட்ப வல்லுனர் குழுவின் கருத்துக்கள், வேளாண்மைக்கான நிலைக்குழுவின் பரிந்துரைகள், அறிவுரைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஆணையம் அமைக்க முயல்கிறது பிரதமரின் அலுவலகம். 

பிரதமர் அறிவியல் ஆலோசகர்கள் குழு இந்தப் பணியில் இறக்கிவிடப்பட்டுள்ளது. இந்த குழு தான் முன்பு பலத்த எதிர்ப்பைப் பெற்ற அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் காட்டியது.    

ஆனால் பிரதமர் அலுவலகத்தின் இந்த முயற்சிகளை முறியடித்து நம் விவசாயத்தை, உணவை பாதுகாக்க மக்கள் இயக்கங்கள் பங்கேற்ற பிராய் சட்ட வரைவை எதிர்த்தும், உயிரிப் பாதுகாப்பு சட்டத்தை வலியுறுத்தியும் தேசிய அளவிலான இயக்கதின் தொடக்கமாக தில்லியில் மாபெரும் ஆர்பாட்டம் கடந்த ஜூன் 25ம் தேதி நடந்தது. 

அந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் கலந்து இப்பிரச்சனையில் தங்களது ஒன்றுபட்ட ஆதரவை வெளிப்படுத்தினர். பி.ஜே.பியின் தலைவர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் கலந்து கொள்ள இயலாமையை வெளிப்படுத்தி வாழ்த்து மற்றும் ஆதரவுக் கடிதம் அளித்திருந்தார். 

சி.பி.ஐ யின் திரு.வாக்னே, சி.பி.எம்-ன் திரு.யெச்சுரி,

’’அனைத்து ஆணையங்களுமே மக்கள் விரோதமானவை. அவை சட்ட மன்றங்களையும், நாடாளுமன்றத்தையும் கட்டுப்படுத்தும் அதிக அதிகாரம் கொண்டவைகளாகவும் உள்ளன. அனைத்து ஆணையங்களையும் இன்று வணிக நிறுவனங்கள் கைவசப்படுத்திக் கொண்டு விட்டன,’’ என்று கூறி வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் திரு. அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்கள், பல கட்சிகளின் விவசாய பிரிவுகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் தலைவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

‘கரங்கள் இணைவோம்’ என்ற கோஷத்தை முன் வைத்து தொடங்கப்பட்ட இந்த தேசிய இயக்கத்தில் பல கட்சிகளும் தங்களை இணைத்துக் கொண்ட நிகழ்வாக தில்லி நிகழ்வு நடந்தேறியது.

மறுநாள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்ட வரைவு மீது கருத்துக்கள் தெரிவிக்க குறைந்தது 90 நாட்கள் கால அவகாசம் அளிக்கக் கேட்டல், கருத்துக்களை தத்தமது தாய்மொழியில் தெரிவிக்க அனுமதித்தல் மற்றும் நாட்டின் முக்கிய இடங்களில் பொது கருத்து கேட்பு நடத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி நிலைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வலியுறுத்திடக் கேட்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் சட்ட வரைவின் மீது கருத்துக்களை ஆங்கிலத்தில் மற்றும் தமது தாய்மொழியில் பதிவு செய்திட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

90 நாட்கள் அவகாசம் தேவை என்ற வேண்டுகோள் ஒரளவு ஏற்கப்பட்டு கூடுதல் 45 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் தாய்மொழியில் தெரிவிக்க அனுமதி நிலைக்குழுவால் மறுக்கப்பட்டுள்ளது. வரைவை மொழிபெயர்ப்பது அமைச்சகம் செய்ய வேண்டிய வேலை என்று தெரிவித்ததாகத் தகவல் வந்துள்ளது.

உயிரித்தொழில்நுட்ப ஒருங்காற்று ஆணைய சட்ட வரைவு 2013-ல் என்ன தவறுகள் உள்ளன.            

1.உயிரித்தொழில் நுட்பத்தை வளர்ப்பது அதை ஒருங்குபடுத்துவது ஆகாது.
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் திரு.ஜெய்பால் ரெட்டி 

இந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில், ‘உயிரித் தொழில் நுட்பத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்காக,’ என்ற அறிமுகத்துடன் தான் சட்டவரைவைத் தாக்கல் செய்தார். உயிரித் தொழில் நுட்பத்தை வளர்க்க உருவாகும் சட்டம், ஆணையம் எப்படி அதை ஒருங்குபடுத்தும்? 

உயிர் பாதுகாப்பு-‘Biosafety protection’தான் இந்த சட்டத்தின் மையமாக இருந்திருக்க வேண்டும் ஆனால் ஆணைய வரைவில் அதற்கானதாக இல்லை. 

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1989 உயிர்பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த ஆணையம் ஏன் இதற்கு மாறாக இருக்கவேண்டும்.

2.பொருத்தமில்லாத அமைச்சகம் வரைவை உருவாக்கித் தாக்கல் செய்கிறது. ஆணைய வரைவின் முன்னுரையில் ஐ.நா பல்லுயிர் பன்மயம் மாநாட்டு முடிவுகளையும், கார்ட ஜென்னா உயிரிப்பாதுகாப்பு நடைமுறைகளையும் சுட்டிக்காட்டி அதன்படி இந்த வரைவு சட்டம் தேவை எனக் கூறுகிறது. 

மேற்குறித்த இரு நடைமுறைகளையும் வரையறைகளையும் செயல்படுத்துவது சுற்றுச்சூழல் அமைச்சகம். அறிவியல் மற்ற உம் தொழில்நுட்ப அமைச்ச்சகம் கோடிக்கணக்கில் நிதி அளித்து உயிரித் தொழில்நுட்பத்தை வளர்க்கிறது.

வளர்க்கும் அமைச்சகமே எப்படி கட்டுப்படுத்தும் ஆமைப்பை நடத்த முடியும்.

3.அரசியல் சாசனச் சட்டம் மாநிலங்களுக்கு அளித்துள்ள உரிமைகளைப் பறிக்கும் சரத்துகளை இந்த வரைவு கொண்டுள்ளது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாகும்.

4.குறுகிய, மையப்படுத்தப்பட்ட அதிகார மையம்- மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு பல அமைச்சகங்களின் பிரதிநிதிகள் உள்ள குழுவாக இயங்குகிறது. பிடி கத்தரியை அந்தக்குழு அனுமதித்த போது 31 உறுப்பினர்கள் இருந்தனர். இந்த 31 உறுப்பினர்கள் கொண்ட குழுவே தவறாக முடிவெடுத்ததை பின்னர் பல அறிவியல் ஆய்வாளர்களின் அறிக்கையைப் பெற்ற பின் தெரியவந்து பி.டி கத்தரிக்குத் தடை விதிக்கப்படது அனைவரும் அறிந்த ஒன்றே. 31 உறுப்பினர்கள் இருந்த போதே தவறு நிகழ்ந்தது. 

ஆனால் இந்த ஆணையம் 3 முழுநேர உறுப்பினர்கள் 2 பகுதி நேர உறுப்பினர்கள் கொண்டதாக அமைக்கப்படுகிறது. மேலும் ஓரிரு உறுப்பினர்கள் இடம் காலியாக இருந்தாலும் இந்தக் குழுவின் முடிவை யாரும் மறுக்கமுடியாது.(பிரிவு-13)

5. தகவல் அறியும் உரிமைச்சட்டம் வளைக்கப்படுகறது-

உயிரிப்பாதுகாப்பு ஆய்வுகள், சோதனைகள் ரகசியமானவைகளாகக் கருத முடியாது என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் இச்சட்ட வரைவு பிரிவு  28ல் 1 ன் படி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களைத் தரத் தேவையில்லை. இரகசிய வணிகத் தகவல்கள் இவை என மறுக்கலாம் என்கிறது.

6.வேளாண் உயிரித்தொழில் நுட்ப சிறப்புக் குழுவின் (Task Force on Agricultural Biotechnology) பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன-

தற்போது சமர்ப்பிக்கப்படுள்ள பிராய்  (BRAI – Biotechnology Regulatory Authority of India) சட்ட முன் வரைவு வேளாண் உயிரித்தொழில் நுட்ப சிறப்புக் குழு 2004ல் சமர்பித்த தனது பரிந்துரையில் தெரிவித்த அடிப்படை கருத்திற்கு சிறிதும் பொருத்தமாக இல்லை. 

அந்தக்குழு தனது அறிக்கையில் உருவாக்கப்படும் ஒருங்குபடுத்தும் அமைப்பானது, ‘சுற்றுச்சூழலின் பாதுகாப்பு. விவசாயக் குடும்பங்களின் நலன், விவசாயத்தின் இயற்கைச்சூழல் மற்றும் அதன் பொருளாதார நிலைத்த தன்மை, உண்போரின் உடல்நலன் மற்றும் ஊட்ட உணவு உத்தரவாதம், உள்நாட்டு, வெளி வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும்நாட்டின் உயிரிப்பாதுகாப்பு,’ ஆகியவற்றை அடி நாதமாகக் கொண்டே அமைக்கவேண்டும்.

7.ஒருங்கைப்பு மிகவும் குறுகியதாக, தொழில் நுட்பம் என்ற அளவில், உள்ளது

ஆணையம் மிகக் குறுகிய அளவில் உயிரிப் பாதுகாப்பைப் பார்க்கிறது. மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மரபணு மாற்று உயிரினங்கள் என்றளவில் மட்டுமே உள்ளது. விவசாயிகளின் நலன்கள், அவர்களின் வணிக நலன்கள், அறிவுச் சொத்துரிமை, ஊரக வாழ்வாதரம் உள்ளிட்ட பல பகுதிகளை ஒதுக்கிவிட்டது. இது தற்போதுள்ள மரபணு மாற்று மதிப்பீட்டுக்குழுவை விட மிகவும் பிற்பட்டதாகும்.

8.பல்லில்லாத சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு

ஆணையச் சட்டம் 26 ன் படி சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு உருவாக்கப்படும் என்கிறது. ஆனால் இதன் இன்னொரு விதி 27(4) இந்தக் குழுவை வெறும் சடங்கிற்கான பெயரவிலான குழுவாக அமைத்துள்ளது. இந்தச் சடங்கிற்கான குழுவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் எதிர்ப்பின் காரணமாக அமைக்கப்பட்டுள்ளது,  பல்லில்லாத குழுவாக.

9.சுதந்திரமான நீண்ட கால சோதனைகள் இல்லாமை பிடி கத்தரிக்கு விதிக்கப்பட்ட தடையில் நீண்டகால சோதனைகள் இல்லாமை சுட்டிக் காட்டப்பட்டது. இது போன்ற நீண்ட கால சோதனைகள் குறுகிய கால சோதனைகள் காட்டிய முடிவுகளுக்கு நேர் மாறாக இருந்துள்ளதை அண்மைமையில் வெளியான நீண்ட கால சோதனைகள் காட்டியுள்ளது. இருப்பினும் இந்த ஆணையம் நீண்ட கால சோதனைகளை கட்டாயமாகுவது பற்றியோ, அந்தச் சோதனைகளைக் கண்காணிப்பது பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.

10.ஜனநாயகத் தன்மை இல்லாத செயல்முறை

மரபணு மாற்றுப் பயிர்கள் அனுமதியில் பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்தவேண்டும் என்கிறது கார்ட்டஜென்னா நடைமுறைகள்.

இந்த நடைமுறைகளை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும் அதற்கு நேர்மாறாக பொது மக்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு  சட்ட வரைவில் எந்த வழி வகைகளும் இல்லை.

11.பஞ்சாயத்து சபைகள், உயிர் பன்மயம் (பல்லுயிர் பெருக்கம்)  ஆணையம் ஆகியவற்றிற்கு அங்கீகாரமின்மை

அரசியல் சாசன சட்டத்தின் படி அதிகாரமுள்ள மூன்றாம் அரசாங்கமான பஞ்சாயத்து அரசுகள், அவைகளின் இதயமான கிராம சபைகளுக்கு உள்ளூர் இயற்கை வளத்தை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அது போலவே உயிரினப் பன்மயத்தைக் (பல்லுயிர் பெருக்கம்) காப்பதற்கான சட்டத்தின்படி அமைக்கப்பட்டது உயிர் பன்மய ஆணையம். இவ்இரு சட்டபூர்வமான அமைப்புகளுக்கும் இந்த ஆணையத்தின் முடிவெடுத்தலில் பங்கு இல்லை.

12.அவசியம் தேவை என்பதை மதிப்பீடு செய்வதையும் மற்றும் மாற்று வழிகளை மதிப்பீடு செய்வதையும உள்ளடக்கவில்லை

மனுக்களை பரிசீலிக்கும் முன் அந்தக் குறிப்பிட்ட மரபணு மாற்றம் தேவை தான் என்பதை மதிப்பீடு செய்வதற்கோ, அது போலவே அந்தத்தேவைக்கு மாற்றுவழிஉள்ளதா என்பதை அறிந்திடவோ அதை மதிப்பீடு செய்வதற்கோ .ஆணைய வரைவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. 

இத்தனைக்கும் இந்திய அரசு ஏற்றுக் கொண்ட வேளாண் உயிரித் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு செயல்குழு- Agri Biotech Task Force- இவைகளையெல்லாம் வலியுறுத்தியுள்ளது. இந்தச் சிறப்பு செயல் குழு குறிப்பிட்ட மரபணு மாற்றுப் பயிர்களை சில சிறப்புப் பகுதிகளில் பயிரிடாமல் இருக்க, பரிசோதனை செய்யாமல் இருக்க வழிமுறைகள் வேண்டும் (எ-கா- பாசுமதி நெல் பயிரிடப்படும் பகுதிகளில் மரபணு மாற்று நெல் கூடாது) எனவும் வலியுறுத்தியது. ஆனால் இந்த வரைவு சட்டத்தில் இதற்கான எதுவுமேயில்லை.

13.இடர் மேலாண்மைக்கான திட்டங்கள் இல்லை-

மரபணு மாற்றுப்பயிர்கள் அணு உலைகள் உருவாக்கும் பிரச்சனைகள் போலவே விளைவுகள் பெரிதாகவும், நீடித்தத் தாக்கம் உள்ளதுமாகும். வெளியேறி இயற்கையில் மரபணுவை மீண்டும் திரும்பப் பெற எடுக்க இயற்கையில் வழியில்லை. இந்த நிலையில் இத்தகு ஆபத்து நேராதிருக்க செய்ய வேண்டியவைகள் பற்றியோ நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதற்கான வழிகள் இல்லை.

14.பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனையில்லை-

மரபணு மாற்றுப் பயிர்களாளோ, வயல் வழி சோதனைப் பயிர்களாலோ பாதிப்புகள் ஏற்பட்டால் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கான தண்டனை என்பது ஏறத்தாழ ஏதுமில்லை.

15.அப்பீல் செய்வதற்கான வழிகள் மிகவும் சிக்கலானவைகள்-

உருவாகக்கூடிய பிரச்சனைகள் பலவாக இருப்பினும் அதன் விளைவுகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளோ, நிவாரணம் பெறுவதற்கான வழிகளோ எளிதானதாக இல்லை.

நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக்குழு மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து சுமார் ஆண்டுகள் இப்பிரச்சனை பற்றி விவாக அலசி, இந்திய அரசு உத்தேசித்துள்ள ஒருங்காற்று ஆணையம் குறித்த சட்ட வரைவு மட்டுமின்றி பல நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள் கட்டுப்பாட்டு சட்டதிட்டங்களையும் ஆராய்ந்து இந்தியாவின் தேவை இ.உ.தொ.ஆணையமல்ல 
ஆனால் உயிரிப்பாதுகாப்பிற்கான பாதுகாப்பு ஆணையம் என ஒருமனதான 2012 ஆகஸ்டில் அறிக்கை சமர்ப்பித்தது.



8 comments:

  1. இந்த தொடரை நீங்கள் கொண்டுசெல்லும் விதம் அற்புதமாக உள்ளது. வாழ்த்துக்கள். இதற்குப் பிறகு இத்தனை சிரமங்கள் உள்ளன என்பதை இதைப் படித்த பிறகுதான் தெரிந்துக்கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மரபணு பயங்கரம் தொடரைத் தொடர்ந்து நமது விவசாயம் குறித்து, உலகளாவிய பொருளாதாரம் இந்த உணவுச் சந்தையில் என்ன மாறுதல் உருவாகப் போகின்றது என்பதை படித்துப் பார்க்கவும்.

      நன்றி

      Delete
  2. மிக விரிவாக இருக்கிறது எல்லா தகவல்களுமே! மக்களின் விழிப்புணர்விற்காக ஒரு சிறிய புத்தமாக இதை அச்சடித்து எல்லோருக்கும் விநியோகிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு ருசி முக்கியமா தரம் முக்கியமா என்று கேட்டால் ருசியை தேர்ந்தெடுப்பார்கள். ஒரு விசயத்திற்குப் பின்னால் உள்ள உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? இல்லை நமக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்றக் கொள்வதா? என்றால் 90 சதவிகிதம் மகிழ்ச்சிக்கான வழியைத்தான் தேர்ந்தெடுக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

      ஆனாலும் யாரோ சிலர் இதுபோன்ற விசயங்களுக்கு எதிராக போராடிக் கொண்டே தான் இருக்கின்றார்கள். அந்த போராட்டமே இன்னமும் பன்னாட்டுநிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் பெரும்பான்மையினர் இங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

      விக்கிபீடியா ஆதாரம் போல நிச்சயம் ஏதோவொரு சமயத்தில் முழுமையாக மூழ்கிய சமூகத்திற்கு இது போன்ற விசயங்கள் நிச்சயம் பயன்படும்.

      நாம் இழந்தது எப்படி? என்பதை தேடத் தொடங்குபவர்களுக்கு அப்போது அதன் பின்னால் இருந்த உண்மைகள் புரிபடத் தொடங்கும்.

      நன்றி கவிப்ரியன்.

      Delete
  3. நல்ல அலசல் ,தொடர்கிறேன் !

    ReplyDelete
  4. விவரமாக அறியத் தந்தீர்கள் அண்ணா...
    நல்ல அலசல்... இதுவும் டாலர் நகரமாகட்டும் அண்ணா...

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.