விக்கிரமாதித்தனும் வேதாளமும் கதை முடிவில்லாதது போல பிடி கத்திரியை திணிக்கும் முயற்சியில் மீண்டும், வேதாளம் முருங்கை மரம் ஏறியுள்ளது எவரும் எதிர்த்திடாத வகையில், இந்திய அரசமைப்பிற்கு. விரோதமாக, ஆனால் சட்டபூர்வமான முறையில். இதற்கான தொடக்கம் கடந்த நாடாளுமன்றத் தொடரில் நிகழ்ந்தது. அந்த விவரங்கள் அறிவதற்கு முன்னோட்டமாக அமெரிக்க நிகழ்வு அறிவது நல்லது.
கடந்த மார்ச் இறுதியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிதிநிலை அறிக்கை ஒன்றை நிறைவேற்றிட வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது அந்த நிதி நிலையறிக்கையில் எவரின் கவனத்தையும் கவராத வகையில் விவசாய நிதி அறிக்கையில் ஒரு விதியை நுழையச் செய்தார் செனட்டர் ப்ளன்ட் (Blunt)
அந்த விதி இது யாரைக் காப்பாற்ற என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருந்த காரணத்தால் இதை அவர்கள், ‘மான்சான்டோவைப் பாதுகாக்கும் சட்டம்’ என்றே அழைத்தனர்.
அமெரிக்காவில் மரபணு மாற்றுப் பயிர்கள் மற்றும் உயிரினங்களை ஒட்டி பல வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன.
மரபணு மாற்று அல்பாபா அமெரிக்க நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. பி.ஏ.எஸ்.எஃப் (BASF) கலிபோர்னியா மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் மரபணு மாற்று நெல் வயல்வெளி பரிசோதனையின் போது மாற்றி வைக்கப்பட்ட மரபணு வெளிச் சூழலில் கலந்தது.
இந்த மரபணுக் கலப்படமானது சோதனை நடந்து 6 ஆண்டுகள் கழித்து விவசாயிகள் விளைவித்த நெல்லை மரபணுக் கலப்படமாக்கியது. இது ஜப்பான், அமெரிக்காவிலிருந்து நெல்லை இறக்குமதி செய்த போது தான் தெரியவந்தது. மரபணுக் கலப்படமான நெல்லைத் திருப்பி அனுப்பியது ஜப்பான். நட்டப்பட்ட விவசாயிகள் நட்ட ஈடு கேட்டு பி.ஏ.எஸ்.எஃப் (BASF) நிறுவனம் மீது வழக்கு தொடர அந்த நிறுவனம் நீதிமன்றத்திற்கு வெளியே பல இலட்சம் டாலர்கள் நட்ட ஈடு கொடுத்து முடித்தது.
தற்போது இதைப் போலவே மான்சான்டோவின் மரபணு மாற்று கோதுமை அமெரிக்க விவசாயிகளின் கோதுமையைக் கலப்படமாக்கியது அண்மையில் கண்டறியப்பட்டது. விவசாயிகள் நீதிமன்றங்கள் செல்கின்றனர். மரபணு மாற்று அல்பாஃபா பல சுற்றுச்சூழல் சோதனைகளை முறையாக முடிக்கவில்லை. அப்படியிருக்க அதற்கு அமெரிக்க விவசாயத்துறை அனுமதி வழங்கியது சரியல்ல என்று விவசாயிகள் வழக்கு தொடுக்க நீதிமன்றம் தடை பிறப்பித்தது.
இது மரபணு மாற்று சால்மன் மீன், மரபணு மாற்று கொசு என பல மரபணு மாற்றுப் பயிர்கள், உயிரினங்கள் மீது சுற்றுச்சூழல் பாதிப்புகள் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளன.
பலவற்றை வெளிவிட முடியாத சூழல் அங்கு உள்ளது.
இந்தப் பின்புலத்தில் தான் அவசர நிதி நிலை அறிக்கையில் இரகசியமாக இடைசெருகல் (Rider) மூலம் ‘‘மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த எந்த வழக்கையும் அமெரிக்க பெடரல் நீதிமன்றங்கள் ஏற்கக் கூடாது,’ என்கிற விதி புகுத்தப்பட்டது.
அதாவது நீதிமன்றங்களை பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பாதிப்புகளையோ, அல்லது சமூக ஆர்வலர்கள் விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியோ அணுகி நிவாரணம் பெறமுடியாது. எந்த பயிரையும் தடை செய்யவும் முடியாது. இப்படிப்பட்ட விதி இருப்பது தெரிய வந்த்தும் இந்த இடைவிதியை ஏற்க வேண்டாம் எனக் கேட்டு, இவ்விதியை இதை மான்சான்டோ பாதுகாப்பு விதி’’ எனக்கூறி 2 இலட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் அதிபர் ஒபாமாவிற்கு வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆறு மாதங்களுக்கு மட்டுமே இந்த விதி செல்லுபடியாகும் என்றாலும் மான்சான்டோவின் வழிமுறைகள் எல்லோரையும் அதிர வைத்துள்ளது.
அமெரிக்காவில் நடக்கும் ஒன்று இந்தியாவில் நடக்காமல் மன்மோகனின் இந்தியாவிற்கு இழுக்கல்லவா?
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அமெரிக்காவில் நடந்தது போன்ற வேலை நடந்துள்ளது. பல பிரச்சனைகளைக் காட்டி நாடாளுமன்றத் தொடரை நடத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகத் தெரிவித்தனர். இருப்பினும் இரண்டாண்டுகளாக தாக்கல் செய்ய முடியாதிருந்த மரபணு மாற்றுத் தொழில் நுட்ப ஒருங்காற்று ஆணையம் (Biotechnology Regulatory Authority of India) அமைப்பதற்கான சட்ட முன் வரைவைத் தாக்கல் செய்தது மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம்.
இந்த ஆணையம் மரபணு மாற்றும் செய்யப்பட்ட பயிர்கள், உயிரினங்களின், உருவாக்கம், பரிசோதணை, விற்பணை, பயிரிடல், அவைகள் மூலம் பெற்ற பொருட்கள், அவைகளை எடுத்துச் செல்லுதல், இறக்குமதி செய்தல் உள்ளிட்ட பலவற்றை ஒருங்குபடுத்தவே அந்த ஆணையம்.
2009லேயே சட்ட வரைவிற்கான வேலைகள் தொடங்கின. 2010 மார்ச்சில் இதன் சரத்துகள் கசிய விடப்பட்டது, அதில் 63வது பிரிவில், மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்ப்பவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றது.
கடும் விமர்சனங்களையடுத்து இந்த விதி நீக்கப்பட்டது.
மக்களின் மனநிலையை ஆழம் பார்க்கவே இந்த விதி நுழைக்கப்பட்டு கசிய விடப்பட்டது எனப் பேசப்பட்டது. இருப்பினும் சட்ட வரைவு தாக்கல் செய்யப்படவில்லை.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட வரைவில் இந்தப் பிரிவு இல்லை.
நிதி ஆதாரங்கள் ஒதுக்கி மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை வளர்த்தெடுக்கும் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் தானே வளர்க்கும் துறையைக் கட்டுப்படுத்துவற்கான விதியை உருவாக்குவது சரியல்ல என்று எதிர்க்கப்பட்டது.
அந்த மறுப்புகளும் எதிர்ப்புகளும் மறுதலிக்கப்பட்டு இந்திய மக்களின் பல உரிமைகளைப் பறிப்பதாகவும், இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமைகளுக்கு விரோதமான விதிகளுடன் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 22 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. நாடாளுமன்றம் நடக்காது என்பதை நன்கு உணர்நதாலேயே இவ்விதம் செய்யப்பட்டது.
விவாதங்கள் இன்றி நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் சட்டவரைவை அறிமுகப்படுத்திய போதே நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக்குழுவின் தலைவரான பாசுதேப் பட்டாச்சார்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். (தனிச்செய்தியாக அந்த விவாதம்.)
சட்ட வரைவில் உள்ளவைகள், அதன் தாக்கங்கள் பற்றி அறியுமுன் நாளது வரை மரபணு மாற்றுப் பயிர்கள் தளத்தில் இந்தியாவில் நடந்தவைகள் பற்றி அறிவது அவசியம்.
நாளது வரை மரபணு மாற்று தொழில் நுட்பத்தால் உருவான உயிரினங்கள், விதைகள், பயிர்கள், பொருட்கள் அணைத்தும் 1989 சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் வருகிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில் நுட்ப அங்கீகாரக் குழு (Genetic Engineering Approval Committee) இந்த வேலைகளைக் கவனித்து வருகிறது. (தற்போது இதன் பெயர் மரபணு மாற்றுத் தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழு - Genetic Engineering Appraisal Committee-GEAC). அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில் நுட்பத் துறையின் கீழ் மரபணு மாற்றங்களுக்கான மறு ஆய்வுக் குழு (Review Committee on Genetic Modification – RCGM ) இயங்கினாலும் மரபணு மாற்றுத் தொழில் நுட்ப மதிப்பீட்டுக்குழு தான் கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் பெற்ற அமைப்பு.
ஆனால் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள குழு பல சந்தர்ப்பங்களில் மரபணு மாற்றுத் தொழில் நுட்ப அங்கீகாரக் குழுவிற்குத் தெரிவிக்காமலேயே, அதன் அனுமதி பெறாமலேயே சோதனைகள் செய்ய நிறுவனங்களுக்கு உதவியிருக்கிறது..
அனுமதி பெறாமலேயே பி.ட்டி பருத்திக்கான கள பரிசோதனைக்களை கட்டுப்படுத்தப்பட்ட சோதனை’ என்று குறுக்கு வழி கூறி இக் குழு வயல்வெளி கள சோதனைகளுக்கு அனுமதியளித்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. 2000ம் ஆண்டில், வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்து வந்த காலத்தில், குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பி.ட்டி பருத்தி,இந்திய அரசு அனுமதி அளிக்காத நிலையிலேயே, விளைக்கப்பட்டுப்பது கண்டறியப்பட்டது.
உச்சநீதி மன்றம் அனுமதியில்லாத இவ்வகை பருத்தி அவையனைத்தையும் எரித்து அழிக்கும் படி உத்திரவுமிட்டது. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் அனுமதியில்லாத பிடி பருத்தி விளைவிக்கப்பட்டிருந்தது என்றால் பிடி பருத்தி பல ஆண்டுகளாகவே விற்கப்பட்டு விளைவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
காப்புரிமைச் சட்ட மீறலை காட்டி பல்லாயிரக்கணக்கான அமெரிக்க, கனடா நாட்டு விவசாயிகள் மீது வழக்கு தொடுக்கின்றன மான்சான்டோ உள்ளிட்ட விதை நிறுவனங்கள்,
பிடி பிகானிரி என்ற பெயரில் தார்வாட் பல்கலை தயாரித்த பிடி விதையில் மான்சான்டோவின் மரபணுக்களில் ஒன்று இருப்பதாகக் கூறி காப்புரிமையைக் காட்டி எதிர்த்தது மான்சான்டோ.
ஆனால் பி.ட்டி மரபணு மாற்றத்தைச் செய்வதற்கான நவீன ஆய்வக வசதியில்லா நவ்பாரத் என்ற இந்திய விதை நிறுவனமான பிடி பருத்தி விதைகளை விற்பனை செய்கிறது. காப்புரிமை பெற்றுள்ள எந்த விதை நிறுவனங்களும் நவபாரத் பற்றி எக்கேள்வியும் எழுப்பவில்லை. வழக்கு தொடரவில்லை, இந்திய அரசும் கண்டு கொள்ளவில்லை.
இப்படி பிடி பருத்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்பட்டு உள்ளதைக் காட்டியே 2002ல் பிடி பருத்திக்கு அனுமதி பெறப்பட்டது. முதலில் பரப்பி விடு அதைக் காட்டி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்ற விதை நிறுவனங்களின் வழக்கம் இங்கும் நடந்தேறியது.
இப்போதும் பிடி நெல் மற்றும் ரவுண்டப் களைக்கொல்லிக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட பருத்தி ஆகியன இந்தியாவின் சில பகுதிகளில் விளைவிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
2002ல் இந்திய அரசு அனுமதி வழங்கியது.
பிடி பருத்தி அனுமதித்த போது இந்தியாவில் ஏறத்தாழ 70 சத பருத்தி பாரம்பரிய மற்றும் மேம்படுத்திய இரகப் (Varieties) பருத்தியாகவே இருந்தது. இன்று இதன் பரப்பு 98%க்கு உள்ளது. அனைத்தும் கலப்பினம் மற்றும் ஒட்டு இரகம் எனப்படும் ஹைபிரீடுகள். விற்கப்படும் அணைத்து பருத்தி விதைகளும் விதை நிறுவனங்களின் பிடி விதைகள் மட்டுமே என்ற நிலை வந்து விட்டது.
ஏறத்தாழ எல்லா இந்திய பருத்தி விதை நிறுவனங்களும் மான்சான்டோவுடன் கை கோர்த்து பிடி ரக ஹைபிரீடு விதைகளை தயாரித்த வழங்கின.
மத்திய விவசாய அமைச்சரின் உறவினரான, மகாராஷ்டிர அரசில் அமைச்சராக இருக்கும் அஜித் பவார் தனது பெயரிலேயே அஜித் பிடி என்று விற்கப்பட்டதும் இங்கு நடந்தது. பாரம்பரிய விதைகளும், மேம்படுத்தப்பட்ட இரகங்களும் சந்தையில் இருந்து அகற்றப்பட்டது
சத்தமின்றி. விவசாயிகளுக்கு பிடி பருத்தி தவிர வேறு வகை விதைகள் இல்லை என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுவிட்டது. வேறுவிதமாகக் கூறுவதானால் இந்தியப் பருத்தி விவசாயம் இன்று மான்சான்டோவின் கையில் உள்ளது.
அதேநேரத்தில் பிடி பிகனேரி என்ற பெயரில் இந்திய பிடி விதை உருவாக்கிட தார்வாட் பல்கலை முயன்றது. ஆனால் அதற்குள் ஏகப்பட்ட ஊழல். மற்றும் ஏமாற்று வேலைகள்,
மேலும் காப்புரிமையைக் காட்டி மான்சான்டோ மிரட்டியது. இந்தக் காரணங்களால் பிடி பிகனேரி முடக்கப்பட்டது.
பிடி பருத்தியை அடுத்து மான்சான்டோ உள்ளிட்ட பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்திய விதை நிறுவனங்களுடனும், இந்திய விவசாயப் பல்கலைக்கழங்களுடனும், ஆய்வகங்களுடனும் ஒப்பந்தங்கள் செய்து ஏறத்தாழ 75 பயிர்களை மரபணு மாற்றுப் பயிர்களாக மாற்றும் வேலையில் இறங்கின. இதில் நெல், கத்தரி, தக்காளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவை உணவுப் பயிர்கள்.
மற்றொரு பக்கம் இந்திய அரசு எம்.எஸ் சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய விவசாயிகள் கமிசன் தனது அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையில்‘வாய்ப்புக் கிடைத்தால் 45 விழுக்காடு விவசாயிகள் விவசாயத்தை விட்ட வெளியேறத் தயாராக உள்ளார்கள்,’ என்று கூறப்பட்டது
அதே அறிக்கையில் மரபணு மாற்றுப் பயிர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. அதில் தேவைப்படும் குறிக்கோளை அடைய வேறு வழியேதும் இல்லாத நிலையில் தான் மரபணு மாற்று உயிரினங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டது.
ஏற்கெனவே இந்திய அரசு உயிரித் தொழில் நுட்பம் குறித்து ஆலோசனை வழங்க சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட உயிரித் தொழில் நுட்ப குழு (Task force on Biotechnology) தனது அறிக்கையி( அத்தியாயம் 2ல் விதி 1.6ல், ‘உயிர் உரங்கள், உயிரியல் பூச்சிக் கொல்லிகள், உயிரினங்கள் கொண்டு மாசுபாட்டை சரி செய்தல் போன்ற மரபணு மாற்றுத் தொழில் நுட்பங்கள் இல்லாத உயிரித் தொழில் நுட்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’, என்று குறிப்பிட்டது.
2004ல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில் தான்,’’உயிரித் தொழில் நுட்ப ஒருங்காற்று ஆணையம் ( Biotechnology Regulatory authority),’’ ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
உயிரித் தொழில் நுட்பம் சார்ந்த அனைத்தையும் ஒருங்கமைக்க ஆணையம் தேவை என்ற கருத்து முதன்முதலாக விதைக்கப்பட்டது, ஆனால் உடனே உயிர் பெறவில்லை.
மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கும் அங்கீகாரக் குழுவில் மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்குபவர்களே பெரும்பான்மையாக இருந்து அதிகம் கோலோச்சிய காலம் அது. விழிப்புணர்வும் எதிர்ப்பும் குறைவாக இருந்த காலம்,இந்தியாவை மரபணு மாற்றுப் பயிர்களின் தலைமையிடமாக, தலைநகராக மாற்றும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தனர்.
இவர்கள் மரபணு மாற்று விதை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சார்பாகவே இருக்கின்றனர். நடுநிலையுடன் இல்லை என்று பரவலான குற்றச்சாட்டுகள் ஆதரங்களுடன் எழுப்பப்பட்டன.
இந்தக் காலக்கட்டதில் 50க்கும் மேற்பட்ட உணவுப்பயிர்கள் உள்ளிட்ட 70க்கும் மேலான பயிர்களில் செய்யப்பட்ட மரபணு மாற்றங்கள் பல்வேறு கட்டங்களை அடைந்திருந்து. சில இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தன.
பிடி நெல் வயல்வெளி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.
பஞ்சாபிலும், கோவை ஆலந்துறையிலும் பிடி நெல் விவசாயிகளால் அழித்தொழிக்கப்பட்டது. இந்திய கத்திரி இரகங்களில் சிலவற்றை இந்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வகங்கள் மூலம் பிடி கத்திரியாக மரபணு மாற்றம் செய்து வயல்வெளி பரிசோதனைகளையும் நடத்தி முடிந்திருந்தது மகிஹோ-மான்சான்டோ.
இப்படி இந்தியப் பாரம்பரிய விதைகளை விதைகளை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் முன் அவ்வட்டார விவசாயிகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது தேசிய பல்லுயிர் பெருக்க ஆண்யத்தின் விதிகளில் ஒன்று. நம் பல்கலைக்கழகங்கள் தாங்களே விதைகளின் உரிமையாளர் என்பது போல் தனியார் நிறுவனங்களுக்கு தந்தன. இவ்வாறு இந்திய பல்கலைக்கழகங்கள் கொடுத்தது சட்டரீதியில் தவறானது.
தமிழக வேளாண் பல்கலைக்கழகம் ஒருபடிமேலே போய் ----- இரக கத்தரி விதைகளை மான்சான்டோ மகிஹோவிற்கு அனுப்பிய பின்னரே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இது வேளாண் பல்கலைக்கழகமல்ல மான்சான்டோ பல்கலைக்கழகம் என்ற போராட்டமும் நடந்தது.
தமிழக வேளாண் பல்கலை மட்டுமல்ல
தார்வாட் பல்கலை உள்ளிட்ட பிற பல்கலைகளின் இப்படித் தான் செயல்பட்டன.
இப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி கத்திரி இரகங்கள் தான் மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் அனுமதிக்காகக் காத்திருந்தது.
அங்கீகாரக் குழுவும் இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவில்லை. இந்தியக் கத்தரி இரகங்கள் மரபணு இப்படி மாற்றப்பட்டது குறித்து கர்நாடக மாநில பல்லுயிர் பெருக்க ஆண்யத்திடம் முறையீடு செய்யப்பட்டது.
எதிர்காலத்தில் மக்கள் அமைப்புகள், விவசாயிகள், இது போன்ற பிரச்சனைகள் எழுப்பாதிருக்கவும், இவ்வாறு மாற்றிட அனுமதி கேட்கும் போது அனுமதியை எளிதில் வழங்கிவும் இந்திய அரசு மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கிய வேலையைச் செய்த விஞ்ஞானி முனைவர். கே.சி பன்சாலை இந்திய தாவர வளங்களைக் காப்பதற்கான அமைப்பின் (National Bureau of Plant Genetic Resources - NBPGR) தலைவராக்கியது.
அவர் “சிறப்புத் தகுதிகள்’ பற்றிய விவரங்கள் தனியாக பெட்டி செய்தியில்.
பிடி கத்திரி பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பதற்காக செய்து மகிஹோ-மான்சான்டோ சமர்ப்பித்த ஆய்வறிக்கையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட போதுது. மகிஹோ-மான்சான்டோவின் ‘வணிக இரகசியம்’, அதன் வணிக நலனைப் பாதிக்கும் எனக் கூறி தர மறுத்தது. கடும் சட்டப் போராட்டதிற்குப் பின் கிரீன் பீஸ் அமைப்பு பெற்றது.
‘கேட்காமலேயே தந்திருக்க வேண்டிய தகவல்களை கேட்டபின்னுபும் தரமறுப்பது சரியல்ல’ என்று கண்டிக்கப்பட்டதும் நடந்தது.
கடும் போராட்டத்திற்குப் பின் பெறப்பட்ட மகிஹோ-மான்சான்டோ சமர்பித்த பிடி கத்திரி அறிக்கையை பரிசீலனை செய்த தனியார் நிறுவனங்களைச் சாராத சுந்திரமான நிலையில் ஆய்வுகள் செய்யும் (Independent Scientists) பன்னாட்டு விஞ்ஞானிகள் கடுமையாக விமர்சித்தனர்.
‘கட்டாயம் செய்திருக்க வேண்டிய பல ஆய்வுகள் செய்யப்படவில்லை,’ என்றும், ‘சாதகமான முடிவுகளை தரும் வகையில் ஆய்வுகள் பல வடிவமைக்கப்பட்டுள்ளது,’ என்றும், ‘பாதிப்புகள் தெரியாத வகையில் முடிவுகள் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,’ என்றும் கூறினர். மேலும், ’’செய்யப்பட்ட பல ஆய்வுகள் கத்துக்குட்டிகள் செய்த ஆய்வுகள் போல உள்ளது,’ என்றும் பல வாரியான விமர்சனங்களை வெளியிட்டனர்.
இது போன்ற விவரங்கள் வெளியாக வெளியாக மக்கள் பிடி கத்திரிக்கு அனுமதி அளிக்கக் கூடாதென எதிர்த்தனர். பட்டிதொட்டிகளிலும், விளக்கக் கூட்டங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் மரபணு மாற்று அங்கீகாரக்குழு இந்த விமர்சனங்களையெல்லாம் உதாசினப்படுத்தி பி.ட்டி கத்தரியை விளைவிக்க, உணவாகப்பயன்படுத்த அனுமதியத்தது.
மக்கள் தீவிரப் போராட்டத்திற்குத் தயாராயினர் மக்கள் அமைப்புகளும் திரண்டெழுந்தன. சுற்றுச்சூழல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் இச்சந்தர்ப்பத்தில் தலையிட்டு பொது கருத்துக் கேட்பு நடத்தி எல்லா தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தியாவின் எல்லா மாநிலத்தவர்களும் பங்கேற்கும் வகையில் 6 இடங்களில் கருத்துக் கேட்புகள் நடந்தன. விதை நிறுவனங்கள் ஆட்களைத் திரட்டி வந்து பங்கேற்கச் செய்தாலும் ஒவ்வொரு கருத்து கேட்பிலும் ஒட்டு மொத்த சமூகத்தின் கடும் எதிர்ப்புணர்வு வெளிப்பட்டது. மின்னஞ்சல்கள் கடிதங்கள் மூலமும் கருத்துக்கள் குவிந்தன.
தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க, தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பிடி கத்திரியை எதிர்த்தன.
மக்களின் உணர்வை அவர்களும் பிரதிபலித்தனர். பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பு தமிழகத்தின் அன்றைய முதல்வர் கலைஞரைச் சந்தித்து பிடி கத்திரியின் ஆபத்துக்கள் பற்றி எடுத்துக் கூறி எடுத்துக் கூறியது.
ஆபத்துகள், சிக்கல்கள், ஆய்வுகள் முழுமையின்மை என பலவும் விளக்கப்பட்டதையடுத்து பி.ட்டிக் கத்திரிக்கு தமிழகத்தில் அனுமதியில்லை என அறிவித்தார். தமிழகம் உள்ளிட்டு 13 மாநிலங்கள் பிடி கத்திரியை தடை செய்தன.
இந்திய மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின் 2010 பிப்ரவரி 10ம் தேதி உலகின் முதல் உணவுப் பயிரான பிடி கத்திரி குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மத்தியச்சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.ஜெய்ராம் ரமேஷ் என்ன முடிவெடுப்பார் என்று உலகே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
தொடரும்..................
இந்தியப் பருத்திற்கென்று ஒரு உயர்ந்த தரம் என்றும் உண்டு... அதை தெரிந்தவர்கள் கண்டிப்பாக இந்த மோசமான வலையில் மாட்ட மாட்டார்கள்...
ReplyDeleteஇயற்கைக்கு மீறி எதுவும் சாதித்தாக சரித்திரம் எதுவுமில்லை...
நன்றி தனபாலன். இயற்கையை உணர்ந்து கொள்பவர்களும் யாரிமில்லை என்பதும் உண்மையாகிக் கொண்டிருக்கின்றதே.
Deleteநன்றாக ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இத்தகைய பயனுள்ள பதிவுகள் அதிகம் வரவேண்டும். அப்போதுதான் ஆங்கில ப்ளாகுகளுக்கு இணையாக தமிழ் ப்ளாகுகளின் தரமும் வளரும்...
ReplyDeleteசென்னை பதிவர் சந்திப்பில் உங்களை எதிர்பார்த்தேன்.
Deleteநான் வந்திருந்தேனே. உங்களை நீங்கள் அறிமுகம் செய்துக்கொண்டதையும் (தேவியர் இல்லம் என்ற பெயருக்கு விளக்கம் கொடுத்தது நன்றாக இருந்தது) கேட்டேன். ஆனால் மாலை ஒரு திருமண வரவேற்புக்கு செல்லவிருந்ததால் இரண்டு மணிக்கே சென்றுவிட்டேன். தருமி ஐயா மற்றும் கந்தசாமி ஐயா அவர்கள் அமர்ந்திருந்த வரிசையில் அமர்ந்திருந்தேன். கூட்டத்தின் நடுவில் யாருடனும் அறிமுகம் செய்துக்கொள்ள முடியவில்லை. உண்மைத்தமிழன், தமிழ்வாசி, சென்னைபித்தன், ராஜி ஆகியோருடன் மட்டும் உணவு இடைவேளையில் அறிமுகம் செய்துக்கொள்ள முடிந்தது. கூட்டத்தின் இறுதி வரையில் இருந்திருந்தால் பலரையும் சந்தித்து உறவாடி இருக்க முடியும்.
Deleteபதிவில் நீங்கள் பேசிய புகைப்படத்தை வைத்து தான் நீங்கள் வந்ததை தெரிந்து கொண்டேன். ஏதோவொரு சமயத்தில் நிச்சயம் சந்திப்போம்.
Deleteமிகவும் அருமையான ஆழமான ஆய்வறிக்கை. நான் வங்கியில் சேலம் நகரில் மேலாளராக பணி புரிந்த காலத்தில் BT cottoan என்பது எப்படி விவசாயிகள் வாழ்க்கையில் விளையாடியது, எவ்வாறு அவர்கள் கடன் சுமையை மேல் மேலும் அதிகரித்துக் கொண்டு வாடினார்கள் என அறிவேன். சீன தேசத்திலிருந்து இங்கு வந்து மஸ்லின் துணி பற்றி அறிந்து சென்றதாக படித்துள்ளேன். ஆனால் இன்று, நாம் அரசியல்வாதிகள் காரணமாக...
ReplyDeleteஇது போன்ற பிளாக்குகள் எழுத கேட்டுக் கொள்கிறேன்.
நிச்சயம் தொடர்ந்து வாசித்து வாருங்கள். தொடர்ந்து இது குறித்து ஏழெட்டு பதிவுகள் வரும்.
Deleteகேடகவே பயங்கரமாக உள்ளது .எல்லா நாடுகளிலும் அரசியல்வாதிகள் இப்படி தான் போல . தொடந்து ஏழுதுங்கள்
ReplyDeleteஎல்லா நாடுகளிலும் அரசியல் வித்தியாசமானது. ஆனால் பணபலம் என்பது பொதுவானது தானே? நன்றி தீபக்.
Deleteஎல்லோரும் ஒரேமாதிரி ப்ளான் செய்துதான் "காய்" நகர்த்துகிறார்கள் போல!
ReplyDeleteகடைசியில் நம்மால் காய் வாங்க முடியாத அளவுக்கு. சரிதானே தலைவரே.
Deleteமரபணு மாற்றம் நிச்சயம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும் .அதை முறையாக பரி சோதனை செய்யாமல் கொடுப்பது ஆபத்துதான் !
ReplyDeleteஉண்மையான பரிசோதனைக்கூடங்களில் தேவைப்படும் வசதிகள் நம் நாட்டில் இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பது தான் நம் நாடு கொண்டுள்ள வளர்ச்சி.
Deleteமிக ஆராய்ந்து எழுதப்பட்ட பயனுள்ள கட்டுரை. ஜோதிஜி
ReplyDeleteசக்தி செல்வியா?
Deleteமிக ஆராய்ந்து எழுதப்பட்ட பயனுள்ள கட்டுரை. ஜோதிஜி
ReplyDeleteவணக்கம் அண்ணா...
ReplyDeleteதங்களை இன்றைய வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள இணைப்பின் வழியாக சென்று பாருங்கள்...
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4216.html
நன்றி.
நன்றி குமார்
Delete