பிடி கத்திரி அனுமதி குறித்து இந்திய அரசாங்கம் எடுக்கும் முடிவு மான்சான்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் அதி முக்கியமானதாக இருந்தது.
ஏனெனில் உலகின் மிகப் பெரும்பாலான பகுதிகளிலும், நாடுகளிலும் மரபணு மாற்றுப் பயிர்களை விளைபொருட்களை மக்கள் எதிர்த்து வந்தனர். குறிப்பாக ஐரோப்பிய மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்க்கின்றனர். சில ஆப்பிரிக்க நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகளும் எதிர்க்கின்றன. ஐரோப்பிய சந்தையை ஈர்க்க வேண்டுமானால், ஐரோப்பிய அரசுகளை ஏற்க வைக்க வேண்டுமெனில் 120 கோடி மக்களுள்ள இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களை பரவலாக்கிட வேண்டும்,
அதிலும் குறிப்பாக மரபணு மாற்று உணவுப்பயிர்களை. அதன் மூலம் உலகின் மிகப் பெரிய நாடான இந்தியாவில் எல்லா மக்களும் அதை உண்கின்றனர். அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறி ஐரோப்பிய சந்தையை வென்றெடுக்க வேண்டியிருந்தது அந்த நிறுவனங்களுக்கு. அப்போது தான் அந்த நாடுகளில் மரபணு மாற்று விளைபொருட்களை, விதைகளை விற்க முடியும் என்பதே நிறுவனங்களின் கனவு.
ஆகவே அந்த நிறுவனங்கள் உயிர்ப் பிரச்சனையாகப் பாவித்து முடிவை எதிர்பார்த்தன.
பிடி கத்தரியை இந்திய அரசாங்கத்தை அனுமதிக்கச் செய்ய வேண்டிய நெருக்கடி அந்த நிறுவனங்களுக்கு இருந்தது. இதை திரு. ஜெயராம் ரமேஷ் உணர்ந்திருந்தார். அமெரிக்க அரசும் உணர்ந்திருந்தது.
ஆகவே தான் திரு. ஜெயராம் ரமேஷ் பிடி கத்தரி மீதான முடிவை அறிவிக்கும் நிலைக்கு வந்ததும் அழுத்தம் கொடுக்க அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டனின் அறிவியல் ஆலோசகரும் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தின் தீவிர ஆதரவாளர் என கருதப்படும் நினா ஃபெதோரோஃப் (Nina Fedoroff) பிப்ரவரி 9ம் தேதியே தில்லி வந்தார்.
ஆகவே தான் திரு. ஜெயராம் ரமேஷ் பிடி கத்தரி மீதான முடிவை அறிவிக்கும் நிலைக்கு வந்ததும் அழுத்தம் கொடுக்க அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டனின் அறிவியல் ஆலோசகரும் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தின் தீவிர ஆதரவாளர் என கருதப்படும் நினா ஃபெதோரோஃப் (Nina Fedoroff) பிப்ரவரி 9ம் தேதியே தில்லி வந்தார்.
இவரது இப்பயணம் திட்டமிடப்படாத பயணமாகும்.
அவர் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் திட்டக்குழுவின் துணைத்தலைவர் அலுவாலியா உள்ளிட்ட பலரைச் சந்திக்கிறார். 10 ம் தேதி அறிவிப்பதாக அறிவித்த சுற்றுச்சூழல் அமைச்சர் அதற்கு முந்தைய நாள் மாலையே தனது முடிவை அறிவித்தது அமெரிக்க அழுத்தத்திற்குள் சிக்காமல் இருக்கவே என்ற பேச்சு இன்று வரை தில்லியில் உலவுகிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் பிப் 9ம் தேதி மாலை 5 மணியளவில் பிடி கத்திரிக்கு காலவரையில்லாத தடை விதிக்கப்படுகிறது என அறிவித்தார்.
பிடி கத்தரிக்கு தடை என்ற செய்தி உலகின் பெரும் பகுதி மக்களால் கொண்டாடப்பட்டது. இது உலக மக்களால் கொண்டாடப்பட்டது. உலகில் மான்சான்டோக்களின் விதை ஆதிக்க வெறிக்கு எதிரான மிக முக்கிய வெற்றியாக இது மாறியது.
6 கருத்துக் கேட்பு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டவைகள், எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் மட்டும் கொண்டு இம்முடிவை எடுக்கவில்லை. எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் மட்டுமின்றி பன்னாட்டு அறிஞர்களின் கருத்துக்கள், மான்சான்டோ உள்ளிட்ட நிறுவனங்களிடமும், பிடி பருத்தி விளைவிக்கும் விவசாயிகளின் கருத்துக்களையும் பெற்றார்.
மேலும் ஆந்திராவில் சுமார் 35 இலட்சம் ஏக்கரில் ஆந்திர ஊரக வளர்ச்சித் துறை மூலம் பரப்பப்பட்டு விவசாயிகளால் ஆர்வமாக கைக்கொள்ளப்பட்ட பூச்சிக்கொல்லிகள் இல்லாத பூச்சிக்கட்டுப்பாட்டு முறை எப்படி செயல்படுகிறது, அதன் பயன் உள்ளிட்ட பலவற்றை அப்பகுதிகளில் 3 முறை பயணித்து, விவசாயிகளை நேரில் சந்தித்து உண்மை நிலவரங்களையும் அனுபவங்களையும் கேட்டறிந்த பின்னரே பிடி கத்திரி இல்லாவிட்டால் இந்திய உணவு உற்பத்தி பாதித்துவிடாது எனவும் அறிவித்தார்.
பிடி கத்தரிக்கு தடை விதித்த சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் தனது அறிக்கையில் கீழ் கண்டவைகளை தெரிவிக்கிறார்.
Ø எல்லா மாநிலங்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. அவைகளும் பதிலில் தங்களது அச்சத்தைத் தெரிவித்துள்ளன. உயர்ந்த பட்ச எச்சரிக்கை தேவை என்றன. (மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், ஒரு நிலைப்பாடு எடுக்கவும் அன்று இடமிருந்தது).
Ø என்ன தேவை? தற்சமயம் தனியார் கம்பெனிகள் அதிகப்படியான முன்னுரிமை கொடுக்குமளவுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நிலையோ, விளைச்சல் குறைந்துள்ள நிலையோ, விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நிலையோ நாட்டில் இல்லை. பூச்சிக்கொல்லிகள் பயன்பாடும் குறையும் என்கிற வாதம் தவிர பிற கருத்தில் கொள்ளத்தக்கதல்ல. பிடி நுட்ப வழி ஒன்றுதான் பூச்சிக் கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழியல்ல.
பி.ட்டி நுட்பமோ பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைக்க மட்டுமே செய்யும். பூச்சிக்கொல்லிகள் இல்லா பூச்சிக் கட்டுப்பாட்டுமுறை பூச்சிக்கொல்லிகளை முற்றிலும் நீக்குகிறது.
Ø Bt.கத்தரியை உருவாக்கியவர்களே அதன் தாக்கம், உயிரிப் பாதுகாப்பு (Biosafety) குறித்த ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இது தார்மீக சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஒதுக்கிட முடியாது. பிற ரக கத்தரி வகைகளை மரபணுக் கலப்படம் ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
Ø நாட்டின் உணவு உற்பத்தியை மான்சாண்டோ கட்டுப்படுத்துவது என்பது தேசத்தின் இறையாண்மை குறித்த ஒன்றாகும்.
Ø 3951 கத்தரி ரகங்கள்- 134 மாவட்டங்கள் கத்தரி வகைகள் நிரம்பியவை- இத்தகைய வளம் அழியும் என்கிற வாதத்தை ஒதுக்கித் தள்ள முடியாது.
Ø Bt.பருத்தியின் அனுபவங்களை குறிப்பாக பிடி நஞ்சிற்கு பூச்சிகள் எதிர்ப்பு சக்தி பெறுவது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும்.
Ø மரபணு மாற்று தொழில் நுட்ப அங்கீகாரக் குழுவின் நம்பகத் தன்மை குறித்த கேள்விகள் உள்ளன- அறிவியல் அடிப்படையிலான நம்பகத் தன்மையும், சார்பு நிலையுமில்லாத, நடுநிலையான, சுதந்திரமான ஆய்வுகள் நடத்துவதற்காக தேசிய உயிரித்தொழில் நுட்ப ஒருங்காற்று ஆணையம் NBRA தேவை.
Ø உலகில் பெரும்பாலான நாடுகள் மரபணு மாற்றுப் பயிர்களுக்குள் செல்லவில்லை. அமெரிக்காவில் பரவலாக இருக்கிறது என்பதற்காக அமெரிக்காவைப் பின்பற்ற வேண்டும் என்ற பெருங்கட்டாயம் நமக்கு இல்லை.
Ø கார்ட்டஜென்னா (Cartegenna Protocal)மாநாட்டில் ஏற்றுக் கொண்ட விதிமுறைகள், ரியோ உச்சி மாநாட்டு அறிவிக்கை, கேடெக்ஸ் வழிகாட்டு அறிக்கைகள் போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள், வழிகாட்டு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது.
Ø விஞ்ஞானிகளிடையே தேவை குறித்த தெளிவான ஒற்றுமையில்லை. சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் உள்ளனர்.
Ø சிறிய அளவிலான பயிரிடுதலுக்கு அனுமதி என்பது சாத்தியமில்லாதது. பாதுகாப்புடன் தனித்து பயிரிடப்படுவது மிகவும் கடினமான ஒன்று, நடைமுறை சாத்திமில்லாதது.
Ø உச்ச நீதிமன்றம் முந்தைய காலத்தில் ‘பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக் கொள்கையின்”(Precatuionary Principle)அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கியுள்ளது.
Ø இதுவரை செய்யப்பட்ட, செய்யப்படாமல் உள்ள ஆய்வுகள் ஒட்டிய பிரச்சினைகள் சரிசெய்யப்படாமல் உள்ளது.
Ø பொது மக்களின் மனநிலை எதிராக உள்ளது.
Ø உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறியான Bt.கத்தரியை அனுமதித்தாக வேண்டிய அத்தியாவசியக் கட்டாயம் எதுவும் எழவில்லை.
இந்தஅறிக்கையைப்பெற
இந்தத் தடை உலகளவில் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பதில் மிகுந்த தாக்கத்தை உருவாக்கியது. மேலும் பிடி கத்தரிக்கு எதிரான இயக்கம் இந்திய அரசியல் கட்சிகளை இந்தப் பிரச்சனையில் ஏறத்தாழ ஓரே பக்கத்தில் நிறுத்தியது.
பல ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களே பிடி கத்தரிக்கு எதிரான மன உணர்வை வெளிப்படுத்தினர். இத்தகைய கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மனநிலை மரபணு மாற்றுப் பயிர்களை ஆராய்ந்த வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையிலும் பிரதிபலித்தது.
பிடி கத்தரிக்கான தடையான கத்தரிக்கானது மட்டுமேயொழிய அணைத்து மரபணு மாற்றுப் பயிர்களுக்கானது அல்ல என்பதால் புதிய மரபணு மாற்றுப் பயிர்களைக் கொண்டு வயல் வெளி பரிசோதனைகள் நடத்த தங்கு தடையின்றி அனுமதி வழங்கியது மரபணு மாற்றுத் தொழில் நுட்ப அங்கீகாரக் குழு.
2010 பிகாரில் மான்சான்டோவின் மரபணு மாற்று மக்காச் சோளத்தின் வயல்வெளி பரிசோதனை மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வராமலேயே தொடங்கியது.
தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 2011ல் பீகார், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வயல்வெளி சோதனை நடத்த 2010லேயே அனுமதி அளிக்கப்பட்டது
பீகாரில் பரிசோதனை நடத்தப்படுவது மாநில அரசிற்கு தெரிய வந்ததும் முதல்வர் நிதிஷ்குமார் சுற்றுச்சூழல் அமைச்சரிடம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். சுற்றுச்சூழல் அமைச்சர் 2010 மார்ச் மாநில அரசின் ஓப்புதலின்றி வயல்வெளி பரிசாதனைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உத்திரவிட்டார். அதுவரை எவ்விதக் கட்டுபாடுமில்லாது, தன்னிச்சையாக சோதனைகளை நடத்தி வந்த நிறுவனங்களின் ‘சுதந்திரம்’ கடுமையாக பாதிக்கப்பட்டது.
13 மாநிலங்கள் இத்தகு வயல்வெளி கள சோதனைகளுக்கு அனுமதி மறுத்து விட்டன.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்தப் புதியக் கட்டுப்பாடு மரபணு மாற்று விதை நிறுவனங்களுக்குக் கிடைத்த அடுத்த பெரிய அடியாகும்.
வயல்வெளி ஆய்வுகளுக்கு பெரும்பான்மையான மாநிலங்கள் அனுமதி அளிக்காததால் விதை நிறுவனங்களின் அமைப்பான ஏபில் (ABLE-Agricultural Biotechnology led enterprises) கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாரோ, ‘வயல்வெளி சோதனைகளை தடை செய்வது உயிரித் தொழில்நுட்பத்தை தடுக்கும் வகையில் செயல்படக்கூடாது,’ என்று நிதிஷ்குமாருக்கு அறிவுரை செய்தார்.
அதே சமயத்தில் உச்ச நீதிமன்றத்தில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான வழக்கொன்றை 2004 ஆண்டிலிருந்தே நடத்தி வரும் அருணா ரோடரிகஸ், பிரசாந்த் பூசன் உள்ளிட்டோர் வழல்வெளி சோதனைகள் அங்கீகாரக்குழுவின் அனுதியின்றியே நடப்பது, மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் உறுப்பினர்களின் சார்பு நிலை, விதி மீறல்களைக் காணாமல் இருப்பது போன்றவற்றை உச்ச நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்த முறையீட்டின் பேரில் 2006 மே மாதம் 1 ம் தேதி உச்சநீதி மன்றம் மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் அனுமதியின் பேரில் தான் வயல்வெளி பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்று உத்திரவிட்டது.
அதன் பின்னும் வயல்வெளி சோதனைகளில் பல குளறுபடிகளும் விதிகள் கடைபிடிக்காமையும் தொடர்ந்ததால் வயல்வெளி சோதனைகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இருப்பினும் நிறுவனங்கள், மரபணு மாற்றுப் பயிரை உருவாக்கிய விஞ்ஞானிகளின் மறு முறையீட்டையடுத்து உச்ச நீதிமன்றம் 2007ல் தடையை சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் நீக்கியது.
வயல்வெளி சோதனைகள் செய்யும் போது 200 மீட்டர் இடைவெளியை பாதுகாப்பு இடைவெளியாக வைத்திருக்க வேண்டும் (Isolation distance) என்று உத்திரவிட்டது. மனுதாரர்கள் கேட்ட விளக்கத்தின் பேரில் உச்சநீதி மன்றம் திணித்து வைக்கப்பட்ட மரபணுக்கள் பிற உயிரினங்களில் 0.01 சதவிகித அளவில் தான் கலக்கலாம் என்ற கூடுதல் விதியையும் விதித்தது. இருப்பினும் உறுப்பினர்களின் சார்பு நிலை உள்ளிட்ட பல பிரச்சனைகள் தொடர்ந்தன. உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு இவை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து உச்சநீதி மன்றம், ‘மரபணு மாற்று அங்கீகாரக் குழுவில் சுதந்திரமான, சார்பு நிலை இல்லாத வல்லுனர்கள் இல்லை, அதன் கட்டமைப்பும் சரியாக இல்லை’, என்றும் கருத்தைத் தெரிவித்ததுடன் பிப்ரவரி 13, 2008ல் இரு உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளை மரபணு மாற்று அங்கீகாரக் குழுவிற்கு தனது பார்வையாளர்களாக நியமித்தது.
மரபணுப் பொறியியல் (Genetic Engineering) என்ற சொல்லாக்கத்தை உலகில் முதன்முதலில் உருவாக்கியவரும், இந்திய அறிவாண்மைக் கமிசனின் (Indian Knowledge Commission) துணைத் தலைவருமான, இந்தியாவில் முதன்முதலில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biolology) ஆய்வகத்தை உருவாக்கியவருமான புஷ்பா பார்கவா மற்றும் பச்சைப் புரட்சியின் அப்பாவான எம்.எஸ்.சுவாமிநாதன் என இவ்விருவரையும் தனது பார்வையாளராக உச்சநீதிமன்றம் நியமித்தது.
எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தப் பொறுப்பை ஏனோ ஏற்கவில்லை.
இதன் காரணங்களால் வயல்வெளி சோதனைகள் முன் போல் நடக்கவில்லை. ஆனால் மரபணு மாற்றுப் பயிர்களுக்குத் தடை வேண்டி உச்சநீதி மன்றத்தில் அரூணா ரோடரிகஸ் தொடுத்திருந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்து.
இவ்வழக்கின் தொழில் நுட்பத் தன்மை, தொடர்ந்து எழுந்து வந்த வாதப் பிரதிவாதங்கள், உலக அளவில் வெளிவந்த பாதிப்புகள் குறித்த புதியபுதிய ஆய்வறிக்கைகள் போன்றவைகளை உள்வாங்கிய உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையில் தனக்கு தொழில் நுட்ப ரீதியில் உதவ 2012 ஆகஸ்டு 6ம் தேதியன்று வல்லுனர்கள் கொண்ட குழுவை (Technical Expert Committee ) நியமித்தது.
இக்குழுவானது பிரச்சனையில் சம்மந்தப்பட்ட எல்லா தரப்பினரிடம் கருத்து கேட்டு அறிவியல் அடிப்படையில் அறிக்கையை விரைந்து அளிக்க வேண்டும் என்றும் விரைவில் அறிக்கை அளிக்க இயலாத நிலை இருப்பின் இடைக்கால அறிக்கையாவது அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டது.
இக்குழுவில்
அ). தாவர உயிரித்தொழில்நுட்ப மரபியல் வல்லுனரான, திட்டக்குழு முன்னாள் உறுப்பினர், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் போன்ற பொறுப்புகள் வகித்த, பத்மபூசன் உட்பட பல அரசு விருதுகள் வழங்கப்பட்ட முனைவர்.வி.எல் சோப்ரா.
ஆ).தாவர கருவளர் உயிரியல் (Plant Development Biology) வல்லுனரும், செல் மற்றும் மாலிக்குலர் உயிரியல் மையத்தின் (Centre for Cellular & Molecular Biology) முக்கிய விஞ்ஞானியுமான இம்ரான் சித்திக்
இ), ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வெளியிட போராசிரியரும் (Emeritus Prof) சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்க ஆய்வாளருமான பேரா. பி.எஸ் இராமகிருஷ்ணன்
ஈ). மரபியல் நச்சியல் மற்றும் உணவின் நச்சின்மைத் துறை (Genetics toxicology and food safety) வல்லுனரான முனைவர் பி.சி. சௌகான்.
உ). எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தின் மதிப்புமிகு ஆய்வுறுப்பினரான (Distinguished Fellow), இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலை மற்றும் சமூக வளர்ச்சி மையத்தின் வெளியிடப் போராசிரியரான (Emeritus Professor) மரபியல் நச்சுயிரியல், கதிர்வீச்சு உயிரியல் மற்றும் வளம் குன்றாத அறிவியல் வல்லுனரான பி.சி கேசவன்.
ஊ). தேசிய உணவு ஊட்டச்சத்து நிறுவனத்தின் (National Institute of Nutrition) முன்னாள் இயக்குனரான முனைவர். பி.சிவக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு உச்சநீதிமன்றம் கீழ்கண்ட வரையரைகளையும் வழங்கியது.
அ) மரபணு மாற்றுப் பயிர்களை இயற்கைச் சூழலில் வெளியிடப்படுவதற்கு முன் செய்ய வேண்டிய பாதிப்புகள் குறித்து செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆபத்துகள் மதிப்பீடுகள் என்னென்ன என்பதை அறிவதற்குச் செய்ய வேண்டிய ஆய்வுகள் மற்றும் அது சார்ந்த பரிந்துரைகள் வழங்கல்.
ஆ). வயல் வெளி சோதனைகளை அனுமதிக்கக் கூடிய வகையில் செய்ய வேண்டிய சோதனைகள் என்னென்ன என்பதை பரிந்துரைப்பது.
இ).மரபணு மாற்றுப் பயிர்கள் மீதான வயல்வெளி சோதனைகளை பசுங்குடில்களில் செய்வது அறிவியல் ரீதியில் ஏற்கக்கூடியதா மற்றும் பல்வேறு விவசாய சூழல்களில் செய்வதற்கு மாறாக பசுங்குடில்களில் செய்வது சாத்தியமானதா என்பது குறித்து ஆலோசனை வழங்கல்.
ஈ). மரபணு மாற்றுப் பயிர்களை, ஆய்வுகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் நாளது வரை உருவாக்கியுள்ள கட்டுப்பாடுகள் போதுமானவைகளா இல்லையெனில் வயல்வெளி பரிசோதனைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க இன்னமும் செய்யவேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை பரிந்துரை செய்ய வேண்டும்.
உ). வயல்வெளி பரிசோதனைகளால் வெளியேறும் மரபணுக்கள் சூழலில் கலந்து பிற உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதை கண்டறிவதற்குரிய, அறிவியல் உலகு ஏற்றுக் கொண்டுள்ள ஆய்வுமுறைகளைப் பரிந்துரைப்பது.
ஊ). இந்தியாவில் உள்ள ஆய்வகங்களுக்கு மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் குறித்த அதிநவீன ஆய்வுகளைச் செய்யக் கூடிய ஆய்வுக்கூடங்கள், கட்டமைப்புகள் உள்ளதா? அவற்றை இன்னமும் எப்படி வலுவாக்குவது? அப்படி இல்லையெனில் அவற்றை இந்தியாவில் சுதந்திரமான ஆய்வுக்கூடம் அல்லது அமைப்பை உருவாக்குவது பற்றி பரிந்துரைப்பது.உயிரிப் பாதுகாப்பு (Bio-safety) சோதனைகளைச் செய்வதற்குரிய வல்லுனர்கள் உள்ளனரா?
மற்றும்
ஏ). இக்குழு தேவை எனக் கருதுமானால் இதுவரை இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கைகளையும் பரிசீலிக்கலாம்.
இந்த வரையறைகளுக்குள் தனது அறிக்கையை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும், அது இயலாவிடின் இடைக்கால அறிக்கையை இழங்க வேண்டும் என்று உத்திரவிட்டது. இதில் முனைவர் வி.எல்.சோப்ரா தனது பணி மற்றும் சொந்த காரணங்களைக் காட்டி இக்குழுவிலிருந்து விலகினார்.
உச்சநீதிமன்றத்தின் உத்திரவு பெற
என்னவோ போங்க.
ReplyDeleteயாருக்கும் பொருப்பென்பதே இல்லாமல் போய்விட்டது.
எதையும் சாப்பிடவே பயமாக உள்ளது.
இன்றல்ல...என்றைக்காவது மாறுமா?
ஒருவர் எழுதியிருக்கின்றார். விஞ்ஞானிகளுக்கு எதிர்ப்பது தான் வேலையா என்று? விபரம் தெரிந்தவர்கள் என்று நாம் நம்பும் பலரும் கூட பல சமயத்தில் பாமரன் போலத்தான் தங்கள் அறிவை வளர்த்து வைத்துள்ளனர் என்பது தான் ஆச்சரியமே.
ReplyDelete