அஸ்திவாரம்

Wednesday, June 05, 2013

தமிழ்நாடு - அறிவாளிகளின் உலகம்

ஒவ்வொரு முறையும் ஊருக்குச் சென்று திரும்பும் போது ஏராளமான மாற்றங்கள் என்னுள் உருவாகிவிடுகின்றது.  

திருப்பூரில் இருந்து காரைக்குடிக்குச் செல்ல மூன்று வழிகளை தேர்ந்தெடுக்க முடியும்.  திருச்சி, மதுரை, திண்டுக்கல் என்று இந்த மூன்று பெருநகரங்களின் ஏதோவொன்றின் வழியாகத்தான் சென்று திரும்ப முடியும்.  

ஏறக்குறைய ஆறு மாவட்டங்கள் வழியே பயணித்து திரும்பி வரும் போது தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளின் வளர்ச்சியை, மாற்றங்களை உணர வாய்ப்பாக இருக்கின்றது. இதற்கு மேலாக வருடந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் ஊர்ப்பக்கம் உள்ள செய்திகளையும் உள்வாங்க முடிகின்றது.

எப்போதும் கரூர் தாண்டி பயணிக்கும் போது சற்று நேரத்தில் காவிரி ஆற்றின் குளிர்ச்சி நம்மைத் தழுவத் தொடங்கும்.  குளித்தலையை நெருங்குவதற்குள் குளிர் நம் உடம்பை ஊடுருவும்.  

ஆனால் இந்தப் பக்கம் வறண்டு போய்க்கிடக்கும் நிலங்களில் கண்களுக்கு எட்டிய வரையிலும் எந்த இடத்திலும் தண்ணீர் என்பதே காணவில்லை.  

குளிர்ச்சியான பசுமை என்பது மாறிப்போய் வறண்ட பாலைவனம் போலவே உள்ளது.  வாழையும், தென்னையும் சேர்ந்து நம்மை வரவேற்கும் காட்சி முற்றிலும் மாறிவிட்டது.  வாய்க்காலில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த பச்சை கலந்த நீரை பார்க்க முடியவில்லை. 

இந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் நன்றாக உணரமுடிகின்றது.  

காவிரிச் சண்டையும் ஓயவில்லை.  காவிரித்தாயும் கடிதம் எழுதி களைத்து போய் விட்டார். வாய்ச்சவடால்களும், வெட்டி அல்டாப்புகளுமாக சேர்ந்து இன்று தமிழ்நாட்டின் முக்கால்பகுதி நிலங்களை முழுமையான சுடுகாடாக மாற்றிக்காட்டியதில் நம் அரசியல் தறுதலைகள் வெற்றியடைந்துள்ளார்கள் என்றே கூற வேண்டும்.

ஒவ்வொரு முறையும் இந்த பாதையில் செல்லும் போது நூற்றுக் கணக்கான லாரிகள் தான் நம்மை வரவேற்கும். சாலையிலிருந்து பார்க்கும் போதே மணல் லாரிகளின் வரிசைகள் கண்களுக்கு எட்டிய  வரையிலும் வரிசை கட்டி நிற்கும்.  

சுரண்டிப் போட்ட தரையினால் இலகுவாக வளர்ந்தவர்களின் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை உணர்ந்து கொண்டே வெறுமையான மனதோடு பயணித்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் இந்த முறை லாரிகளைக் கூட காணவில்லை.  மணல் இருந்தால் தானே அள்ளுவதற்கு. 

மழை பெய்தால் கூட தண்ணீர் எங்கே நிற்கும்? கழிவு நீராகத்தான் பயணிக்கும். எவருக்கும் அக்கறையில்லை.  

அது குறித்து யோசிக்கக்கூட இங்கே எவருக்கும் நேரமும் இல்லை.

கடந்து போகும் பாதையில் பார்த்துக் கொண்டே வரும் ஒவ்வொரு நகருக்கும் வெவ்வேறு இலக்கணம் இருக்கின்றது.  அந்த பகுதியின் வாழ்க்கை முறை, பேச்சு  என்று எல்லாவிதங்களிலும் வினோத கலவையோடு இருந்தாலும் மாறி வரும் நாகரிக உலகில் எல்லோருக்கும் ஒரு பொதுவான அம்சம் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைத்து வைப்பதாக தெரிகின்றது. 
  
பணம் சம்பாரிப்பதற்கான தேவையும், அது குறித்த பேச்சும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

பெருநகரங்களைத் தாண்டியதும் தெரியும் பொட்டல்காடுகளின் விஸ்தீரணம் மலைப்பை உருவாக்கினாலும் எந்த விஞ்ஞான மாற்றமும் இந்த நிலத்தை பயன்படுத்த முடியாமல் வைத்துள்ளதே என்று யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றது.  எப்பொழுதே படித்த இஸ்ரேல் சொட்டு நீர் பாசனம் முதல் தண்ணீர் தேவைப்படாத விவசாய வழிமுறைகள் என்று எத்தனையோ எழுத்தின் வழியே படித்திருந்த போதிலும் எந்த மாற்றமும் தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதர்களிடம் இன்னமும் வந்து சேரவில்லையே என்ற ஆதங்கம் மனதில் வந்து போய்க் கொண்டேயிருந்தது.

குறுகிய வட்டத்திற்குள் தான் இங்கே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  

எண்ணங்கள் விரிவடையவில்லை.அதற்கான வாய்ப்புகளை தேடிப்போவதும் இல்லை.  தேடி வந்தாலும் ஆதரிப்பவரும் எவரும் இல்லை.  

எப்போதும் ஒரு பயமும், அவநம்பிக்கையும் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து கொண்டே இருப்பதால் நெருஞ்சி முள் கணக்காக ஏதோவொன்று ஒவ்வொருவர் எண்ணங்களிலும் குத்திக் கொண்டேயிருக்கின்றது.  

நகர்ப்புற மனிதர்களிடத்தில் உரையாடல் கலை அற்றுப் போனாலும் சிறு நகரங்களில் இருந்து பயணிக்கும் மனிதர்கள் இன்னமும் பேசத்தான் விரும்புகின்றார்கள்.  அவர்கள் அறிந்ததை தைரியமாக கூச்சமின்றி பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றார்கள். 

நாம் தான் புத்திசாலித்தனத்தை வைத்தே மற்றவர்களை எடைபோடக் கற்றுக் கொண்டிருக்கின்றோம்.  புத்திசாலித்தனம் என்ற பெயரில் குறுகிய மனப்பான்மையை வளர்க்க விரும்புகின்றோம். குறுக்குப் புத்தியை ஆதரிக்கின்றோம்.  அது போன்று இல்லாதவர்கள் இங்கே லட்சக்கணக்கில் இங்கே அமைதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இங்கே முக்கால்வாசி கிராமத்து வாசிகளின் வாழ்க்கை இதயத்தை வைத்து தான் இயங்கிக் கொண்டிருப்பதால் மனிதாபிமானம் இன்னமும் மறைந்து விடாமல் தான் இருக்கின்றது.

உறவுகள் என்ற வார்த்தை இன்னமும் இருக்கின்றது.  ஆனால் அது உருக்குலைந்து போவதற்கான காரணங்கள் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.  

அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள் என்று தொடங்கி மற்ற அத்தனை உறவுகளிடத்தில் பணம் என்ற பிசாசு ஆழமாக ஊடுருவிக் கொண்டேயிருப்பதால் ஒவ்வொரு நிலையிலும் அச்சமும் ஆயாசமும் கலந்திருப்பதை கவனிக்க முடிகின்றது.  

உறவுகள் என்பது சின்னச் சின்ன சங்கிலி என்பதாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு முனையிலும் இந்த பணம் சார்ந்த எண்ணங்கள் தினந்தோறும் ஆசைகளை வளர்த்துக் கொண்டேயிருக்கின்றது. இதுவே எண்ணங்களை மெதுமெதுவாக துருப்பிடிக்க வைத்து பலரின் தூக்கத்தையும் தொலைத்துக் கொண்டேயிருக்கின்றது.

ஆனால் ஒரு விசயத்தை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.  எத்தனை குறைபாடுகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் பயணங்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக எளிதான விசயம் என்பதாக மாறியுள்ளது.

கடந்த நாலைந்து வருடத்திற்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் அழகான தேசிய நெடுஞ்சாலைகள் இங்கே ஒவ்வொரு பகுதிகளையும் இணைத்துக் கொண்டேயிருக்கின்றது.   

நாம் பயணிக்கும் போது பெருநகரங்களுக்குள் வரத் தேவையில்லை.  உங்கள் வாகனங்கள் உங்களின் பயணத்தை இலகுவாக மாற்றி சென்றடையும் தூரத்தை எளிதாக்கி விடும். அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் இந்த தேசிய நெடுஞ்சாலைகள்  லட்சக்கணக்கான மரங்களை காவு கொடுத்து நமக்கு இந்த வசதிகளை தந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் நான் பார்த்த, படித்த ஒவ்வொரு பத்திரிக்கையின் முக்கியமான விளம்பரமாக இருந்த தனியார் கல்விக்கூடங்கள் தான் செல்லும் பாதையில் இருமருங்கிலும் உள்ளது.  

நகர்ப்பகுதிகளை தாண்டியதும் கண்ணுக்கு எட்டிய வரையிலும் பொட்டல்காடுகளாக காட்சியளிக்கின்றது.  ஆனால் திடீரென்று ஒரு கல்விக்கூடம் கண்ணுக்குத் தெரிய ஒரு சிறிய நகர் அதனைச் சுற்றிலும் இருக்கின்றது.  

மீண்டும் பொட்டல்காடுகள்.  

விலை நிலத்தில் முளைக்கும் மாணவர்கள் வளர்க்கும் அறிவைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கின்றார்கள். 

நான் சந்தித்த ஆசிரியர் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

இந்த முறை நாமக்கல்லில் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு குறித்து புலம்பித் தீர்த்து விட்டார்.  நாமக்கல்லில் உள்ள தனியார் கல்விக்கூடங்கள் குறித்து ஏராளமான செய்திகளை படித்துப் படித்து எவருக்கும் புத்தி வந்தபாடில்லை. காரணம் மதிப்பெண்கள் என்பது இங்கே ரொம்பவே முக்கியம்.  

எத்தனை காரணங்கள் அறிவுரைகள் சொன்ன போதிலும் மதிப்பெண்கள் தான் எதிர்கால வாழ்க்கையின் அச்சாரமாக இருப்பதால் ஒவ்வொருவரும் கண்களை திறந்து வைத்துக் கொண்டு காதுகளை மூடிக் கொண்டு விடுகின்றார்கள்.

2013 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கிய போது நாமக்கல் பள்ளிகளில் நம்முடைய கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் திடீரென்று சோதனைகள் நடத்தி பல பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களை அதிரடியாக வேறு பக்கம் தூக்கியடித்தார்கள்.  

இது பலமுறை தொடர்ந்து நடந்த போதிலும் தனியார் பள்ளிகள் தான் இறுதியில் ஜெயித்தன.  

தமக்கு ஒத்து வருகின்ற ஆசிரியர்களை வரவழைத்து தேர்வு நடக்கும் மையங்களை காபி விற்கும் மையங்களாக மாற்றினார்களாம். நேர்மையான அதிகாரிகள் மேலும் கெடுபிடியாக்க அதிலும் ஒரு சிறப்பான உத்தியை கடைபிடித்தார்களாம்.  அறிவியல் பாடங்களில் உள்ள ஒரு (ONE MARK QUESTIONS) மதிப்பெண் வினாத்தாளை தேர்வு மையத்தில் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர் தங்கள் கைபேசி வழியாக படம் பிடித்து அது குறிப்பிட்ட அலைபேசிக்கு செல்ல அவர்கள் அதற்கான பதிலை மீண்டும் அதே அலைபேசி வழியாக அனுப்ப ஏறக்குறைய அந்த குறிப்பிட்ட மதிப்பெண்கள் வாங்க கடுமையாக பாடுபட்டனராம்.  

காரணம் இங்கே கட் ஆஃப் மதிப்பெண்கள் என்பது மிக முக்கியம் என்பதால் தேர்வு எழுதிய ஒவ்வொரு கட்டையும் கரிகட்டையாக இருந்த போதிலும்  இறுதியில் வென்றவர்களாக மாறினார்களாம். சட்டமன்றத்தில் பாலபாரதி அவர்கள் கூட இதைப்பற்றி ஆதாரப்பூர்வமாக பேசிப் பார்த்தார். 

இங்கே பணம் பெரிதா? கொள்கை பெரிதா? என்று பார்த்தால் இறுதியில் எல்லா இடங்களிலும் பணம் தான் ஜெயிக்கின்றது.

இந்த முறை எந்த மாணவனைக் கேட்டாலும் 90 சதவிகிதம் என்பதை மிக சர்வசாதாரணமாக சொல்ல நம் தமிழ்நாடு அறிவுடையவர்களின் தேசமாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்து நாம் ரொம்பவே பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும்.  

ஆனால் நம்முடைய கல்வி அமைச்சர் இந்த முறை தேர்ச்சி சதவிகிதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று மறைமுக கட்டளை கொடுத்ததை வைத்து அதன் வழியே வினாத்தாளை திருத்திய ஆசிரியர்களை இங்கே நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. 

அரசாங்க பள்ளிகள் அதளபாதாளத்திற்கு சென்று விட வருடந்தோறும் புதுப்புது கல்வித்தந்தைகள் இங்கே வளர்ந்து கொண்டேயிருக்கின்றார்கள்.

மதிப்பெண்கள் தான் இன்றைய மாணவர்களின் மதிப்பீடு என்பதாக மாறியுள்ளதால் கல்வி என்ற பெயரில் அறுவடை செய்பவர்களுக்கு முப்போகமும் நல்ல விளைச்சலை தந்து கொண்டேயிருக்கின்றது. 

விரைவான மாற்றங்கள் வேண்டுமென்ற உலகில் இங்கு எல்லாமே ஆச்சரியம் கலந்த அதிசயம் தான்.

14 comments:

  1. where is the end to this??
    -surya

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியம். எப்படி முதலில் வந்தீங்க என்று. நன்றி

      Delete
  2. வாழ்க்கை பயணத்தில் ஆரம்பித்து... நிஜப் பயணத்தில் மாறி... முட்டையுடன் முடிந்து விட்டது... ஆனால் எல்லா இடங்களிலும் இந்தப் பாழாப் போகும் பணம் தான் ஜெயிக்கின்றது...

    ReplyDelete
    Replies
    1. முதல் வகுப்பில் வாங்கும் மதிப்பெண்ணாக இந்த முட்டைதானே அறிமுகம் ஆகின்றது. பணத்தை மூட்டை கட்டி வைத்தவர்களை இங்கே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். ஆனால் கடைசி காலத்தில் நீ முட்டை திங்கக்கூடாது என்று வாயைக்கட்டி வயித்தைக் கட்டி கடைசியில் வேடிக்கை மனிதனாகவே வாழ்ந்து செத்துப் போயும் விடுகின்றார்கள்.

      Delete
  3. ஜோதிஜி,


    கல்விக்குறித்த உங்கள் கவலை சரியானதே ஆனால் மக்கள் மனசு வைத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம். அரசுப்பள்ளிகள் மோசமாக இருக்க ஒரு காரணம் பெற்றோர்களே என்பதை பலரும் அறிவதில்லை.

    50 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு பாதிநாட்கள் வருவதேயில்லை, திடிர்னு பரிட்சைக்கு வந்து நிற்பார்கள்,விடவில்லை எனில் உள்ளூர் அரசியல் பிரபலத்தினை அழைத்து வந்து அன்பாக மிரட்டுவதும் உண்டு. தனியார் பள்ளி எனில் பம்மிக்கொன்டு நிற்பார்கள், அப்புறம் எங்கே இருந்து அரசுப்பள்ளியில் ஒழுங்காக பாடம் எடுக்க, படிக்க வைக்க.

    கிராமப்புற கல்வி நிலைக்குறித்து சொல்ல நிறைய உள்ளது ,எனக்கு சலிப்பாக இருப்பதால் பேசுவதில்லை.

    #

    ////பெருநகரங்களைத் தாண்டியதும் தெரியும் பொட்டல்காடுகளின் விஸ்தீரணம் மலைப்பை உருவாக்கினாலும் எந்த விஞ்ஞான மாற்றமும் இந்த நிலத்தை பயன்படுத்த முடியாமல் வைத்துள்ளதே என்று யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றது. எப்பொழுதே படித்த இஸ்ரேல் சொட்டு நீர் பாசனம் முதல் தண்ணீர் தேவைப்படாத விவசாய வழிமுறைகள் என்று எத்தனையோ எழுத்தின் வழியே படித்திருந்த போதிலும் எந்த மாற்றமும் தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதர்களிடம் இன்னமும் வந்து சேரவில்லையே என்ற ஆதங்கம் மனதில் வந்து போய்க் கொண்டேயிருந்தது.//

    உங்க ஆதங்கம் மற்றவற்றில் எல்லாம் சரி தான் ஆனால் விவசாயத்தில் பிரச்சினையைப்புரிஞ்சுக்கொள்ளாத ஆதங்கமா இருக்கே ,எனக்கும் நீங்க சரியா புரிஞ்சுக்கொண்டு ஆதங்கப்படலாம்னு ஒரு ஆதங்கம் :-))

    தண்ணீர் தட்டுப்பாடேயில்லாமல் கிடச்சாலும் விவாசய உற்பத்திக்கு உரிய விலை இல்லை, ஏதோ வைராக்கியத்துக்கு விவசாயம் செய்கிறார்கள், எனவே தண்ணீர் தட்டுபாடான இடத்தில் சொட்டு நீர், பாசனம் என செலவு செய்து உற்பத்தி செய்தாலும் கூடுதல் விலை கிடைக்கப்போவதில்லை. அப்படி இருக்கும் போது எப்படி சொட்டு நீர்பாசனத்திற்கு முதலீடு செய்வார்கள்.

    இயற்கை விவசாயம்னு செய்தால் கூட அதற்கு ஏற்ப கூடுதல் விலை கொடுக்க இங்கே யாரும் தயாரில்லை, எல்லாரும் சென்னைக்கு நேராக எடுத்து போய் விற்க முடியுமா?

    சொட்டு நீர் பாசனம் ,தண்ணீர் சிக்கனமான விவசாயம் எல்லாம் முயற்சிக்காமல் இருக்க காரணம் தெரியாமல் இல்லை, உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்திற்கு ஏன் பாடுப்பட்டு விவசாயம் செய்யனும் என்பதால் தான். இப்போ எல்லாம் நாற்று நடவோ,அறுவடைக்கோ கூட ஆட்கள் கிடைப்பதில்லை, சேத்துல இறங்குறது பேசாம திருப்பூருக்கு போய் பனியன் கம்பெனியில் கஷ்டப்படலாம்னு மக்கள் விரும்புகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. கல்வி குறித்து எழுத வேண்டும் என்று நினைத்தாலும் நிறைய குழப்பங்கள் அலையடித்துக் கொண்டேயிருக்கின்றது. சாதிப் பற்றி என் கண்ணோட்டம் பலருக்கும் எரிச்சலைத்தான் தரும் என்பதால் யோசித்துக் கொண்டேயிருக்கின்றேன்.

      அது போல இந்த விவசாயம் குறித்தும். அள்ளிக் குவிக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். அதோகதியாகிப் போனவர்களும் இருக்கின்றார்கள். நீங்கள் எழுதிய கடைசி வரி நிதர்சனம். ஒத்துக் கொள்கின்றேன்.

      இது குறித்த ஆதார தகவல்களை திரட்ட முடியாத நிலையில் இருப்பதால் இது போன்ற விசயங்களை கொஞ்சம் ஒழுங்காக எழுத வேண்டும் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கின்றேன்.

      நன்றி வவ்வால்.

      Delete
  4. மதிப்பெண்கள் முறையையும், கட் - ஆப் முறையையும் நிறுத்திவிட்டு வேறு முறைகளை கொண்டு வரலாம். அழியும் இயற்கை வளம், பெருகும் நகரமயமாதலையும், அறிவு வளர்ச்சி அற்ற கல்வி முறையும் தமிழகத்தில் புதிய நரகத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நரகம் தான் சொர்க்கமாக மாறிக் கொண்டேயிருக்கின்றது என்பதும் எதார்த்தம்தானே

      Delete
  5. மாற்றம் இயற்கையின் நியதி.

    அடுத்த தேர்தலைக் குறிவைத்து ஆட்சி நடத்தாமல் அடுத்த தலைமுறையை நினைவில் வைத்து ஆட்சி நடத்த நேர்மையான தலைவர்கள் தேவை.

    ReplyDelete
    Replies
    1. கனவு காண்பதைத்தவிர வேறு வழியில்லை

      Delete
  6. மிக அருமையான பகிர்தல். இந்த விஷயத்தில் வவ்வால் சொன்னதை வழிமொழிகிறேன். விவசாயம் செய்கிறவனுக்கு மரியாதையும் இல்லை. வருமானமும் இல்லை. வந்த விலைக்கு விற்றுவிட்டு பஞ்சம் பிழைக்க பட்டணம் போகிறவர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் பொட்டல் காடுகளெல்லாம் கான்கிரிட் காடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

    கல்விமுறை மாற்றம் அவசியம். சம்மசீர் கல்வி அம்மாவிடம் பட்ட அவஸ்தை எளிதில் மறக்கக்கூடியதல்ல. அதனால் அதைப் பற்றிப் பேசிப் புண்ணியமில்லை என்று கருதுகிறேன். தவிரவும் அம்மா இப்போது ஆயாவாகிவிட்டார்கள். முதியோர்களை அதிகம் துன்புறுத்தக்கூடாது. ஓய்வெடுக்கட்டும். அது அவருக்கும் நல்லது. தமிழகத்துக்கும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. இப்போது ஆயாவாகிவிட்டார்கள். முதியோர்களை அதிகம் துன்புறுத்தக்கூடாது. ஓய்வெடுக்கட்டும். அது அவருக்கும் நல்லது. தமிழகத்துக்கும் நல்லது.

      Delete

  7. ஜோதிஜி,

    இது போலெல்லாம் யோசிக்கவும்,
    கவலைப்படவும், எவ்வளவு பேர்
    இருக்கிறார்கள் ?

    இப்படி கவலைப்படும் நாம்
    சிறுபான்மையினராகத் தானே இருக்கிறோம் ?

    இந்தச் சிறுபான்மை -பெரும்பான்மையானால்
    தான் இந்த நாடும், சமூகமும் உருப்பட ஆரம்பிக்கும்.

    பாருங்களேன் - நேற்று ஒரு கழிசடை
    Express Mall-ல் மூன்றாம் மாடியிலிருந்து
    குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறது.
    இவனைப் பெற்று வளர்த்து, இவ்வளவு செலவழித்து,
    படிக்க வைத்த அம்மா, அப்பாவைப் பற்றி
    கொஞ்சமாவது கவலைப்பட்டிருந்தால் அவன் இப்படி
    செய்திருப்பானா ?

    இவர்கள் எல்லாம் என்ன படிக்கிறார்கள் ?
    என்ன கற்றுக் கொள்கிறார்கள் ?

    செய்தியைப் படிக்கும்போது - வெறுப்பும்,
    வேதனையும் தான் உருவாகிறது.

    நம்மால் முடிந்ததை தொடர்வோம்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி.பகிர்வதே ஆவணப்படுத்தலின் பொருட்டே தானே. நிச்சயம் வட்டத்தின் பாதை முடிவுக்கு வந்து தானே ஆகனும்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.