அஸ்திவாரம்

Saturday, June 08, 2013

365 இரவுகள்

சமீபத்தில் நான் பார்த்த நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எம்.ஏ திரைப்படத்தில் வந்த வசன வரிகளைக் கேட்டதும் என் மனம் துணுக்குற்றது.  நிச்சயம் அந்த படத்தைப் பார்த்த பாதிப்பேருக்கு கூட அந்த வசனம் குறித்து தீவிரமாக யோசித்திருக்க வாய்ப்பே இல்லை. அதுவொரு இயல்பான வசனமாகத்தான் கருதியிருப்பார்கள்.

சற்று விபரம் தெரிந்தவர்களுக்கு அதுவொரு இரட்டை அர்த்தம் வசமென்பதாக கருதி கடந்து போயிருப்பார்கள்.

அந்த வசனம் உண்மையான வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்டது என்றால் உங்களால் நம்பமுடியுமா?. ஒரு அரசியல் தலைவர் எப்போதும்  பேசும் வார்த்தைகள் அது. அவர் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.  

அந்த வசனம் சொல்லும் உண்மையான விசயங்கள் என்பது இன்றளவில் கோடம்பாக்கம் திரைப்பட நடைமுறை வாழ்க்கையிலும் உண்மையென மாறிப் போயிருக்கலாம்.  இது இன்றுவரையிலும் பிரபல்யமாக உள்ள ஒரு தலைவர் தனது அடிப்பொடிகளுடன் ஜாலியாக இருக்கும் போது உச்சரிக்கும் வார்த்தை அது.  நிச்சயம் மணிவண்ணன் தெரிந்தே தான் இதை வசனமாக பயன்படுத்தியிருக்கக்கூடும்.

அந்த வசனம் மணிவண்ணன் சத்யராஜிடம் சொல்லும் "ஒரு வருஷமென்பது 365 ராத்திரியண்ணே" என்பார்.

இது வெறும் வசனமல்ல.  படத்தில் சொன்ன இடமும், சொல்வதற்கான சூழ்நிலையையும் வைத்துப் பார்த்தால் இதை விட மோசமான வசனம் வேறெதும் இல்லை. ஆனால் இப்போதையை சூழ்நிலையில் இதை விட மோசமான விசயங்களை  இன்றைய திரைப்பட உலகம் கடந்து போய்க் கொண்டிருப்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை என்பதாக மாறிவிட்டது.  

காரணம் திரைப்பட உலகம் என்பது வணிகம் சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால் அதற்கு சமூகப் பொறுப்பென்பது தேவையில்லை என்பதாக ஒவ்வொருவரும் சொல்லிச் சொல்லி  இங்கே எதுவும் தப்பில்லை என்பதாக மாறியுள்ளது.

அதாவது "பெண் என்பவள் வெறுமனே போகப் பொருள்.  நடிகை என்பவளின் ஒவ்வொரு ராத்திரியும் ஒரு ஆணுடன் படுத்து எந்திரிக்க வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவள்".

இந்த வசனத்தை படத்தில் கேட்ட போது எனக்கு கடந்து போன பல நினைவுகள் வந்து போனது.

16 வருடங்களுக்கு முன் அறைவாசியாக வாழ்ந்து கொண்டிருந்த போது பக்கத்து அறைக்கு விருதுநகர் பகுதியில் இருந்து ஒரு நண்பர் வந்திருந்தார்.  ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர்களுக்கு மட்டுமே அனுமதி. இது போன்ற விருந்தினர்கள் திடீரென்று வந்தால் அவர்களுக்கு தினந்தோறும் தனியாக இருபது ரூபாய் என்று கணக்கு வைத்து மாதக் கடைசியில் கட்ட வேண்டும்.  பக்கத்து அறையில் இருந்த அந்த நண்பர் ராத்திரி பகலாக நிறுவனத்திலே இருக்க வேண்டிய சூழ்நிலையினால் எங்கள் அறைக்கு கூட்டிக் கொண்டு வந்து எங்களிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

"பாஸ் இவரு என் அறையில் தான் கொஞ்ச நாளைக்கு இருப்பாரு. நீங்க இருக்கின்ற நேரம் பேச்சு துணைக்கு இவருக்கு கொஞ்சம் கம்பெனி கொடுங்க" என்றார்.  

காலையிலும் இரவு நேரங்களிலும் எங்கள் அறையில் தான் அவர் இருப்பார்.  கொஞ்சம் பழகிய பிறகு தான் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தேசிய கட்சியின் முக்கிய புள்ளியின் வலதுகரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.  

எனக்கு இந்த வசனத்தை மணிவண்ணன் சொல்வது போல நண்பர் அன்று எங்களிடம் அட்சரம் பிறழாமல் 16 ஆண்டுகளுக்கு முன்  சொன்ன போதிலும் இன்று வரையிலும் உயிர்ப்போடு பல விதங்களில் பெண்கள் குறித்து, நடிகைகள் குறித்து பிரபல புள்ளிகள் பேசுவது  குறித்து பெரிதான ஆச்சரியமில்லை.  

இன்று இதைப் போல பல மடங்கு தகவல்களை கடந்து  வந்துள்ளேன். .

அறைக்கு வந்த அந்த நண்பர் தமிழ்நாடு மட்டுமல்ல டெல்லி அரசியல் சம்மந்தப்ட்ட பல விபரங்களை போகிற போக்கில் அள்ளி தெளித்து விட்டுக் கொண்டேயிருப்பார்.  அவரும் அப்போது ஒரு பிரச்சனையின் காரணமாக போலீஸ் கேஸ்க்கு பயந்து தப்பிப்பதற்காகவே இங்கே அடைக்கலம் ஆகியிருப்பது போன்ற பல விபரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

அவர் பத்தாண்டுகளாக தொடர்ந்து அரசியல் களத்தில் இருக்கின்ற காரணத்தால் தகவல் களஞ்சியமாகவே இருந்தார்.

அத்தனையும் பத்திரிக்கையில் வராத பல தகவல்கள். 

அவர் அன்று பேசிய பேச்சின் மூலம் இன்று தமிழ்நாட்டில் இறந்து போன, இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பல தலைகளின் உண்மையான யோக்கியதைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.  ஏறக்குறைய ஆட்டோ சங்கர் சுயசரிதம் போல. இன்றைய அரசியலில் பெண் பித்து இல்லாதவர்கள் என்று அடையாளம் காட்ட வேண்டுமென்றால் உங்கள் ஒரு கைவிரலுக்குள் அடக்கி விடலாம்.  ஆனால் அது நாளை மாறிவிடக்கூடும்.  காரணம் இப்பொழுதுள்ள சூழ்நிலை அப்படியுள்ளது.  என்ன செய்ய முடியும்?

அப்போது அவர் எங்களிடம் சொன்னது தான் இன்று படத்தில் மணிவண்ணன் பேசிய இந்த வசனம். இப்போது கர்நாடகாவில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பழைய நடிகையை வைத்து அந்த தலைவர் அன்று பேசிய வசனத்திற்குப் பின்னால் உள்ள அத்தனையும் கொச்சையான விவகாரங்கள்.

==================================================


அரசியலில் ஆன் த ரிக்கார்டு, ஆஃப் த ரிக்காடு என்று இரண்டு சமாச்சாரங்கள் உள்ளது.  

பத்திரிக்கை உலகத்தில் இருப்பவர்களுக்கு இது குறித்து நன்றாகவே தெரியும்.  

பெரும்பாலான அரசியல் தலைகளின் தனிப்பட்ட குணாதிசியங்கள், வெறித்தனமான ஆசைகள், கேவலமான எண்ணங்கள் போன்ற அம்பலத்திற்கு வராத அத்தனை விசயங்களையும் பத்திரிக்கை உலகம் சார்ந்த பலருக்கும் தெரியும்.  ஆனால் அவையெல்லாம் சில சமயம் மேம்போக்காக கிசுகிசு பாணியில் சில பத்திரிக்கையில் வரும்.  முழுமையாக இருக்காது.  துண்டு துக்கடா போல சமயம் சந்தர்ப்பம் கருதி சில சமயம் எழுத்து வடிவில் வரும். படிப்பவர்களுக்கு பாதிப் பேர்களுக்கு புரியாது.  சுவராசியத்திற்காக படித்து விட்டு நகர்ந்து விடுவார்கள். 

சிலருக்கு புரிந்து "என்னடா அவரைப் பற்றிய பாதிச் சமாச்சாரங்கள் கூட வரவில்லையே" என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு. 

சமீப காலமாக இணைய வெளியில் இது போன்ற பல சமாச்சாரங்கள் அப்பட்டமாக எழுத்து வடிவில் பார்க்கும் போது சற்று சங்கடமாகவே உள்ளது.  

இருபது வயதில் உண்மையான சமூகத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் திடீரென்று இது போன்ற எதிர்மறை சமாச்சாரங்களை இணையத்தில் படிக்க வாய்ப்புள்ள ஒரு இளைஞனின் மனோபாவம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கின்றேன். 

குறிப்பிட்ட நபர் குறித்து மனதில் வைத்திருக்கும் அந்த புனித பிம்பம் கலைந்து போகும் அந்த தருணங்கள் எவ்வித மாற்றத்தை அவனுக்குள் உருவாக்கும் என்பதை எண்ணிப் பார்க்கின்றேன். நாள் தோறும் எதிர்மறை எண்ணங்களால் மட்டும் நிரம்பி வழியும் அவனது மனோபாவம் எப்படி மாறும்?

தற்போது இணையத்தில் நடந்து கொண்டிருக்கும் தனிமனித தாக்குதல்களின் உச்சத்தைப் பார்க்கின்ற போது  இதற்கென புழங்கும் வார்த்தைகள், முக நூல் பதிவுகள்,  தனிப்பட்ட பதிவுகள் போன்றவற்றை ஒரு வாரமாக தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால் தலைசுற்றி கீழே விழாத குறையாக இருக்கின்றேன். 

மனதில் உருவாகும் ஆயாசத்தை மீறியும் ஒரு எரிச்சல் உருவாகின்றது.  இணையத்தில் எதைப் பற்றி எழுதுவது? அதையும் எப்படி கவனமாக எழுதுவது என்பதாக யோசிக்கும் போது மனம் கூர்மையற்ற கத்தி போலவே உள்ளது.  எத்தனை முறை கீறினாலும் எந்த வார்த்தையும் வெளி வருவதில்லை.  ஒரு அச்சம் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது.  

நமக்கு இதே போல நேர்ந்தால் என்னவாகும்? நம் மனோநிலை இது போன்ற சந்தர்ப்பங்களை எப்படி எதிர்கொள்ளும்? என்பது போன்ற பலவற்றையும் யோசிக்க வைக்கின்றது. சம்மந்தபட்டவர்களின் தற்போதைய மனோநிலை எப்படி இருக்கும்? அவர்களால் தினந்தோறும் தூங்க முடியுமா? என்று யோசித்துப் பார்க்கும் போது மனதில் உருவாகும் வருத்தத்தை துடைக்கும் வழி தெரியாமல் தவிக்கின்றேன்.

நான் 1980 முதல் பத்திரிக்கைகள், வார இதழ்கள் என்று தொடர்ந்து படித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.  தொடக்கத்தில் திரைப்படம் சார்ந்த கிசுகிசுக்களை விரும்பி படித்ததுண்டு. அதுவே காலப்போக்கில் சிந்தனையின் வளர்ச்சியில் அர்த்தமற்றுப் போய் மாறிவிட்டது. தொடர்ந்து அரசியல் குறித்த செய்திகளை, அந்த செய்திகளுக்குப் பின்னால் உள்ள நம்பகத்தன்மையை ஏதோவொரு வகையில் படித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.  

அன்று சில பத்திரிக்கைகளை மட்டும் படிக்க வாய்ப்பிருந்த எனக்கு இன்று ஏராளமான பத்திரிக்கைகள், வார இதழ்கள், இதற்கு மேலாக தமிழ் இணையம் என்று படிப்படியாக என்னை வளர்ந்துக் கொண்டிருந்த போதிலும் குறிப்பிட்ட செய்தி குறித்த நம்பகத் தன்மை என்பது ஏதோவொரு புள்ளியில் நாமே தெரிந்து கொள்ளும் சூழ்நிலை இன்று எனக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.

இன்றைய சூழ்நிலையில் தனி மனித அந்தரங்கம் என்றதொரு வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

==================================================

ஜுன் 2 குழந்தைகளிடம் கெஞ்சி நேரம் கேட்டு வைத்துக் கொண்டு வேகமாக அலுவலகத்திலிருந்து ஓடி வந்து கலைஞர் தொலைக்காட்சியில் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி விழாவின் நேரிலையை ரசித்துக் கொண்டிருந்தேன்.  

அப்போது கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் பேசிய கலைஞர் புகழுரையைக் கேட்டதும் ஒரு மாதிரியாகவே உணர்ந்தேன்.  அவர் நக்கீரனில் எழுதும் எதிர்குரலை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருந்த போதிலும் கலைஞர் விழாவில் அவர் தன்னை ஒரு திமுக அபிமானியாகவே பகிங்கரமாக அறிவித்துக் கொண்டதாகவே எனக்குப்பட்டது.அதுவரையிலும் அவர் எழுத்தின் அப்பட்டமான பல விமர்சனங்களை படித்து வந்த போதிலும் ஒரு கட்சியின் சார்பாக யோசிக்க முடியவில்லை. தனிப்பட்ட விருப்பங்களை அவர் எழுத்தில் கவனமாகவே கையாண்டார் என்பதாகத்தான் எனக்குப் பட்டது.

நிச்சயம் அவர் எழுதிக் கொண்டிருக்கும் எதிர்க்குரல் போல இணையத்தில் இதற்கு எதிர்வினைகள் அதிகம் உருவாகப் போகின்றது என்றே கணித்து வைத்திருந்தபடியே இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.  ஆனால் இந்த அளவுக்கு சுனாமி போல பல்முனைத் தாக்குதல்கள் நடக்கும் என்று என்னால் யூகிக்கமுடியவில்லை. இதற்கென்று ஒரு முக நூலே உருவாகும் அளவுக்கு உருவானதை நினைத்து மிரண்டு போயுள்ளேன். 

அவரைப் பற்றி எங்கங்கு எவர் எவர் எழுதியுள்ளனரோ அத்தனை விசயங்களையும் வீக்கி பீடியா போல தொகுத்து அங்கு மாட்டி வைக்க குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்த பக்கத்தை விரும்புவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் எகிறிக் கொண்டே செல்கின்றது.

அப்போது தான் பிரபல்யம் என்ற ஒரு வார்த்தையை குறித்து யோசித்துப் பார்த்தேன்.  பதவி, புகழ், அதிகாரம்,செல்வாக்கு போன்ற பலவற்றுக்குப் பின்னால் உள்ள பல விசயங்களைப் பற்றி சில தினங்களாக அதிகம் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

==================================================

வலைபதிவில் நீங்கள் எழுதுகின்றீர்கள் என்றால் நிச்சயம் பல பிரச்சனையை சந்திக்க வேண்டும்.  

குறிப்பாக உங்களுக்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கும்.  பரஸ்பரம் அவநம்பிக்கையுடன் பழகுபவர்கள் தான் அதிகம். 

நான் தொடக்கத்தில் இது போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்துள்ளேன். நண்பர்கள் பேசத் தொடங்கும் போது நண்பா இதைப் பற்றி எதையும் எழுதி விடாதீர்கள் என்பார்கள். உங்களை நிருபிக்க நிச்சயம் அவகாசம் வேண்டும். பெரும்பாலும் பேச்சை குறைத்துக் கொண்டு விடுவார்கள். 

காரணம் ஏதோவொரு வழியில் நாம் பேசியது எழுத்து வடிவில் வந்து விடுமோ என்ற அச்சம் பரஸ்பரம் இருந்து கொண்டேயிருக்கும்.

கடந்த நான்கு வருடங்களில் இணையத்தில் வளர்ந்தவர்கள், வீழ்ந்தவர்கள், அவஸ்த்தைபட்டவர்கள், பட்டுக் கொண்டிருப்பவர்கள், அடுத்தவர் அந்தரங்கம் குறித்து அக்கறையற்று இருப்பவர்கள்.எதைத்தான் இணையத்தில்  எழுதுவதென்றே தெரியாது இருப்பவர்கள்,  என்று ஏராளமான நபர்களை அவர்களின் எழுத்து வடிவில், அவர்களின் போலியான மின் அஞ்சல் முகவரி என்று ஏராளமான விசயங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இன்று வரையிலும் பெரிதான ஆச்சரியம் எதுவுமில்லை. 

காரணம் அன்றும் இன்றும் என்றும் சமூகம் என்பது கீழான விசயத்தை நோக்கி தான் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. மனவக்கிரம் என்பது எல்லோருக்குள் இருக்கத்தான் செய்கின்றது.  அளவீடுகள் மட்டுமே கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் சிலரை உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது.  பலரையும் கடைசி வரையிலும் கண்டு கொள்ள முடியாமல் போய்விடுகின்றது.  

ஆனால் இன்று என்னுடன் தங்களின் குடும்ப வாழ்க்கை பிரச்சனைகள் குறித்து வரைக்கும் எத்தனையோ இணைய நண்பர்கள் பேசியபடிதான் இருக்கின்றார்கள். மிக நெருக்கமாக இருப்பவர்கள் அநேகம் பேர்கள். 

குடும்ப உறவுகளை விட இவர்களின் உறவுத்தன்மை என்பது கெட்டியாகவே உள்ளது. அந்த நம்பிக்கையை வளர்ப்பது தான் முக்கியம்.  எத்தனை பேர்களால் முடிகின்றது என்பது தான் இங்கே கேள்வி.  

காரணம் நம் இணையத்தில் எழுதும் எழுத்துக்களை என்பது வெறும் பாராட்டுரைகளை மட்டும் தான் தரும்.  

அதற்கு மேலாக நம் எழுத்துக்கள் படித்தவர்களுக்கு தந்த நம்பிக்கையும், அதன் மூலம் ஊக்கம் பெற்று அவர்கள் நம்முடைய உரையாடும் போது தேடும் ஆறுதல் என்பதற்கு விலை எதையும் வைக்க முடியாது.  

அதை உணர்ந்தவர்களால் தான் மட்டுமே அடுத்தவரின் அந்தரங்கத்தை நம் அந்தரங்கம் போல பொக்கிஷமாக போற்றி பாதுகாக்க முடியும். 

இங்கே பிரபல்யம் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல ஒவ்வொருவரும் தயாராகவே உள்ளனர்.  ஆனால் எது பிரபல்யம் என்பதில் தான் பலருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது,  

இன்று அரசியல்வாதிகள் பணம் கொடுத்தால் தான் தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள் இருக்கின்றார்கள்.  

தலைவனால் ஆதாயம் என்றால் மட்டுமே அண்டங்காக்காய் போல சுற்றுபவர்கள் உள்ளனர்.  

சரியான பதவியில் இருந்தால் தான் அதிகாரியைச் சுற்றி கூட்டம் இருக்கின்றது.  

இந்த பிரபல்ய வட்டத்தில் எழுத்தாளர்களை தமிழ்நாட்டில் கொண்டு வரவே முடியாது என்று தான் நினைக்கின்றேன்.  

காரணம் எட்டு கோடி வாழும் மக்கள் தொகையில் 80 000 பேர்கள் கூட புத்தகங்கள் வாங்கி படிப்பார்களா? என்று யோசிக்க வேண்டிய நிலையில் தான் தமிழ்நாட்டின் வாசக தன்மை உள்ளது.  தமிழ்நாட்டில் இந்த 80 000 பேர்களுக்குக்கூட இந்த தமிழ் இணையம் தெரியுமா? என்று தெரியவில்லை.  

அதுவும் தொடர்ந்து வருவார்களா? என்பது அடுத்த பெரிய கேள்வி?

இந்த சூழ்நிலையில் தான் ஒவ்வொருவரும் பிரபல்யம் என்ற வார்த்தைக்கு நம் கௌரவத்தை இழக்க தயாராக இருக்கின்றோம்.  

திருவள்ளுவர் எழுதிய 1330 குறளில் ஒரு குறளான "ஓழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்று சொல்லியுள்ளார்.  நம் உடம்பில் உயிர் என்பது எந்த இடத்தில் இருக்கின்றது என்பது யாருக்குமே தெரியாது.  அவரவருக்கு ஒரு உத்தேச கணக்காகத்தான் இந்த உயிரை நினைக்கின்றோம். 

ஆனால் அப்படிப்பட்ட நம்மால் கண்டுபிடிக்கவே முடியாத உயிரை விட ஒழுக்கம் என்பது மிக முக்கியமானது என்கிறார். 

ஆனால் தற்போது இந்த தனி மனித ஒழுக்கம் என்பது தேவையில்லாத சமாச்சாரம் என்பதாக மாறிவிட்ட காரணத்தால் நாம் செய்யும் எல்லாமே சரியாக மாறியுள்ளது.  அதற்கு மேலும் கருத்து சுதந்திரம் என்கிற வார்த்தை வேறு வளர்ந்த நாகரிகத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

என்ன செய்ய முடியும்?

என் பதிவின் தலைப்பில் வைத்துள்ள வாசகம் என்பது எனக்காக நானே எழுதி உருவாக்கி வைத்துக் கொண்டவை.  என் வாழ்க்கை அனுபவங்கள் தந்த அனுபவ பாடம் அது.  இந்த சமயத்தில் மீண்டும் ஒரு முறை இங்கே எழுதி வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

”கடந்து போன அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தங்களை மாற்றிக் கொண்டு வாழ விரும்பாதவர்கள் சபிக்கப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றே அர்த்தம்.”

என் டைரிக்குறிப்புகள்

கடந்து போன நாட்கள்

கலைஞர் முகப்பு நூலா? அவர் முகமா?

காரைக்குடி உணவகம்

முகமூடி- விமர்சனமல்ல

திரும்பி பாரடா 2012

திரும்பி பாரடா 2012 (2)

திரும்பிப் பாரடா 2012 - மகிழ்ச்சி அறிவிப்பு

தமிழ்நாடு - அறிவாளிகளின் உலகம் 

திறந்து வைப்பது நல்லதா?




24 comments:

  1. ஜோதிஜி,

    தனிமனித ஒழுக்கம்,அந்தரங்கம்னு என்னம்மோ கலந்து கட்டி சொல்லியிருக்கீங்க, ஆனால் ஒரு கோர்வையான ,தெளிவான புரிதலே இல்லையே! இரண்டுக்கும் என்ன முடிச்சு போடுறிங்கன்னு நீங்களே விளக்கினால் தான் உண்டு.

    அந்தரங்கம் என்பது அடுத்தவருக்கு தெரியாத வரையில் தான் அந்தரங்கம், இன்னொருவருக்கு தெரிந்த பின்னர் என்ன அந்தரங்கம் ,வெட்டவெளிச்சமானால் நாலு பேருக்கு கூடுதலா தெரியும்,அதனால் என்ன ஆகிடப்போகுது?

    நம்ம அந்தரங்கமும் இப்படி வெளியாகிடுமோனு கவலைப்படுபவர்கள் தான் இணையத்தில இப்படி நடப்பதை கண்டுப்பயப்படனும், இதுக்கெல்லாம் கவலைப்படாமல் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜானு ஓடிக்கிட்டே இருக்கலாம்,எவன் என்ன செய்திட முடியும்?

    #//பிரபல்ய வட்டத்தில் எழுத்தாளர்களை தமிழ்நாட்டில் கொண்டு வரவே முடியாது என்று தான் நினைக்கின்றேன்.//

    ஹி...ஹி இப்போ மனுஷ்யபுத்திரன் எதனால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்னு நினைக்கிறீங்க, புண்ணாக்கு வித்து புகழடைந்தவர்னா :-))

    எழுத்தாளர்கள் தங்களைத்தானே பிராபல்யமாக உருவகித்துக்கொண்டு செயல்படுவது தமிழ்நாட்டில் தான் அதிகம் :-))

    இப்போ அந்தக்கூட்டத்தில வலைப்பதிவர்களும் சேர்ந்துக்கிறாங்க ,நாம எதாவது சொன்னாப்போதும் நாலுப்பேரு ஓடிவந்து அவரு பிராபல்யப்பதிவர் அவரையே நீ கேள்விக்கேட்டுட்டியானு குதிக்கிறான்ங்க :-))

    #//தமிழ்நாட்டில் இந்த 80 000 பேர்களுக்குக்கூட இந்த தமிழ் இணையம் தெரியுமா? என்று தெரியவில்லை. //

    தமிழ் இணையம் தெரியாமல் போனால் குடி ஒன்றும் மூழ்கிடாது, ஏன் எனில் தமிழ் இணைய உலகில் தான் குப்பைகள் அதிகமாகிட்டு இருக்கு,எனவே அவரவருக்கு தெரிந்ததை வைத்து காலம் தள்ளிக்கிட்டு இருப்பாங்க.எனக்கு தெலுகு,மலையாளம் எல்லாம் படிக்க தெரியாதென்பால் அங்கே என்ன நடக்குதுனு தெரியாது,தெரிந்ததை வைத்து சொன்னேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் ஒரு விமர்சனத்தில் குழந்தைகளிடத்தில் தர்க்க அறிவை வளர்ப்பது முக்கியம் என்ற விமர்சனத்தை கொடுத்து இருந்தீங்க. அதன் பலன் தான் இந்த பதிவு. எதையோ சொல்ல வந்து எங்கேயோ பயணப்பட்டு நாலைந்து முறை மாற்றி மாற்றி எழுதி இவர்களிடம் கணினியை கைப்பற்றுவதற்குள் மூச்சு முட்டிப் போய்விடுகின்றது.

      நாளை பள்ளிக்கூடம்.

      எனக்கு சுதந்திரம்.

      Delete
  2. நாகராஜ சோழன் படத்தில் சத்யராஜ் வீட்டில் இருக்கிற அத்துணை வேலைக்காரர்களுமே பெண்கள் தான்.பின்னே வேற என்ன சொல்லுவார் ?

    ReplyDelete
  3. என்னமோ சொல்லவந்து எதையோ சொல்லிட்டீங்க...ஒன்னும் விளங்கல..

    ReplyDelete
    Replies
    1. பிரிக்காமல் போட்டது என் தவறு.

      Delete
  4. ரசித்தேன்.
    பழனி.கந்தசாமி

    ReplyDelete
  5. இரண்டு மூன்று விதக் கட்டுரைகளோ? பிரித்திருக்க வேண்டுமோ?


    ReplyDelete
    Replies
    1. துல்லியமான பார்வை. நீங்க சொன்னபடியே செய்துள்ளேன்.

      Delete
  6. வலையுலகம் வருவதற்கு முன்பே... கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஒரு சுற்று... மெகா சுற்று - வாசித்தாகி விட்டது... தளம் தொடங்கினால் என்ன எழுத வேண்டும் என்று அன்றே முடிவாகி விட்டது... மாறி விடுவோமோ என்று நினைப்பதுண்டு... ஆனாலும் மனதில் உறுதி இருக்கிறது...

    பல வலையுலக சண்டைகள் முடிவில் சிரிப்பைத் தான் வரவழைக்கும்...

    சொல்ல நினைத்த சில தகவல்களை உங்கள் தளத்திலேயே உள்ளதால் லிங்க் கொடுத்தால் போதும் எனும் நினைக்கிறேன்-இனி..

    மற்றபடி இந்த பதிவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால்... நாலடியார் 358...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பல வலையுலக சண்டைகள் முடிவில் (தனிப்பட்ட நபர்களின் மன வக்கிரத்தையும்)சிரிப்பைத் தான் வரவழைக்கும்...

      Delete
  7. அரசியல், எழுத்து, இலக்கியம் என பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டவனுக்கு அந்தரங்கம் என்ன வேண்டியிருக்கு?

    கணவன் - மனைவி இருவருக்குமான களவி வாழ்க்கை தவிர தொழில் - வருவாய் - சொத்து - அரசியல் - சக மனிதர்களுடனான உறவுகள் எதுவானாலும் மனித வாழ்க்கை வெளிப்படையானது. இதில் அந்தரங்கத்திற்கு இடமில்லை. இவை எல்லாம் அந்தரங்கமானது என ஒருவன் கருதினால் அவன் எதையோ மறைக்கிறான் என்று பொருள்; அதாவது அவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்றுதான் கருத வேண்டும்.

    வெளிப்படையாக உள்ளவன் மீது விமர்சனங்கள் வந்தாலும் அதை அவனால் சுலபமாக எதிர்கொள்ள முடியும். மடியில் கனம் உள்ளவன் மட்டுமே அஞ்சுவான். இந்த அச்சமே அவனை மேலும் அம்பலத்துக்குக் கொண்டு வந்துவிடும்.

    நமது மடியில் கனம் இல்லாதவரை நாம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் இது போன்ற எண்ணங்களைத்ததான் சரியென்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் உங்கள் விமர்சனத்தின் மூலம் மற்றொரு பதிவு எழுத முடியும் போலிருக்கே.

      Delete
  8. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை ஜோதிஜி!. ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அலசியிருக்கலாம். அரசியல் அந்தரங்கம், ஒழுக்கம் என்று.

    ஊரான் சொல்வதைப்போல கணவன்-மனைவி இருவருக்குமான கலவி வாழ்க்கையைத் தவிர (களவி வாழ்க்கை அல்ல) மற்றவை எல்லாம் வெளிப்படையான மனித வாழ்க்கைதான். அந்தரங்கம் என்றாலே தனிப்பட்ட செகஸ் வாழ்க்கைதான். அல்லது காதல் வாழ்க்கையாக இருக்கலாம். இதில்கூட அந்தரங்கத்தை காப்பாற்றுவது என்பது எதிராளிக்கு எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதுதான் முக்கிய காரணமாக இருக்கும்.

    இன்னொன்றும் கூட இதில் இருக்கு, இது மறைக்கப்பட வேண்டியது அல்லது யாருக்கும் சொல்லப்படக்கூடாதது என்றால் ஏதோ ஒரு தப்பு இருக்கிறது என்பதுதான். தப்பைத்தான் மறைக்கவேண்டியிருக்கும். அந்த அந்தரங்கம் வெளியே தெரிந்துவிட்டால் அங்கே தனிமனித ஒழுக்கம் கேள்விக் குறியாகிவிடுகிறது! ஒழுக்கமானவன் என்ற பிம்பம் கலைந்து போகிறது!

    ReplyDelete
    Replies
    1. அழுத்தமாய் வந்த விசயங்களை அவசரமாய் பதிவாக மாறிவிட்டது.

      Delete
  9. நெடிய பதிவு, சில விமர்சகர்கள் சொன்னது போல் மூன்றாக பிரித்த பின்னரும், மணிவண்ணன் வசனத்தினால் அதிர்ந்து என்ன முடிவாக சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லையோ, அல்லது ஆரம்ப காலத்தில் விசு வசனம் பேசியது போல் ஆகிவிட்டதோ என எண்ண வேண்டியுள்ளது.
    ஒழுக்கத்திற்கும், அரசியலுக்கும் சம்பந்தம் உண்டா என்ற கேள்வி தோன்றி பல வருடங்கள் ஆகிவிட்டதே- திரைப்படங்களில் சொல்வது மிகைப்படுத்தப்படுவது போல் தோன்றினாலும், யதார்த்தத்தில் நடப்பதை பல சமயங்களில் திரைப்படம் சொல்லி வந்துள்ளது.
    அரசியல் வாதி ஏன்?? பல அரசுத் துறைகளில், நிறுவனங்களில் மிக உயர் பொறுப்பிலிருப்பவர்கள் மாறியவுடன் இவரை எதை வைத்துக் "கவுக்கலாம்" (மது, மாது, பணம்)அவர் முன்பு பணியாற்றிய இடத்தில் புரோக்கராக செயல்பட்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, இந்த அலுவலகத்தில் காரியம் முடிய வேண்டுமா என்னிடம் வாருங்கள் என புதிய அலுவலக "காரியம் சாதிப்பவர்" செயல்பட துவங்கிவிடுகிறாரே?
    நல்லதை, சரியானதை சொல்வதற்கு அச்சப்பட தேவையில்லை, விளம்பரத்திற்கு, பிரபலம் என்ற பெயரிற்கு ஆசையின்றி எத்தனையோ பேர் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வழியில் உங்கள் பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  10. உலகம் ஒரு கதம்பம்! இதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு! நல்லவைகளை நாம் தேர்ந்தெடுப்பின் குழப்பம் இல்லை! நல்லது என்று சில சமயம் தீயதை நாடிவிடும்போதுதான் சிக்கலே! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். தேர்ந்தெடுப்பதில் இன்றைய சவால் மிகுந்த வாழ்க்கை

      Delete
  11. kannadasanin vanavasam padiyugal,neengal kurippidum antha thalaivarin antharangangal pala visayam ungalukku puriyum,thiru jothi ji.

    ReplyDelete
  12. ஒரு கிசு கிசு தொடர் போடுங்க ஜி...
    நிறைய ஹிட்ஸ் கிடைக்கும்...

    அரசியல் தொடர்பு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு...

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு ஆள் வந்து அள்ளிக் கொண்டு போகவும் வாய்ப்புள்ளது.

      Delete
  13. வீட்டுக்கு ஆள் வந்து அள்ளிக் கொண்டு போகவும் வாய்ப்புள்ளது.உண்மை ஹஹஹ

    ReplyDelete
  14. வலைபதிவில் நீங்கள் எழுதுகின்றீர்கள் என்றால் நிச்சயம் பல பிரச்சனையை சந்திக்க வேண்டும்.

    குறிப்பாக உங்களுக்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கும். பரஸ்பரம் அவநம்பிக்கையுடன் பழகுபவர்கள் தான் அதிகம். = நிஜம் தான். அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.