ஆழம் மாத இதழில் நவம்பர் 2012 ல் வெளியான கட்டுரையின் விரிவாக்கம்.
உறவினர் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்ருந்தவர் வெளியே வந்து சொந்தமாக ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கினார். உறவினர் உதவியுடன் விரைவாகவே குறுகிய காலத்திற்குள் அவரின் நிறுவனம் உச்சத்தை தொட்டது. ஒப்பந்தங்கள் கொடுத்துக் கொண்டுருந்த இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக பெரிய ஓப்பந்தங்களாக கொடுத்துக் கொண்டு வர நம்ப முடியாத அளவுக்கு வளர்ச்சி மேலேறியது. .
திடீரென்று ஒரு நாள் நிறுவனம் மொத்தமாக தனது அத்தனை உற்பத்தியை நிறுத்தும் சூழ்நிலை உருவானது. இறுதியாக கடன் கொடுத்த வங்கிகள் கழுத்தில் கை வைக்க தற்போது அந்த நிறுவன சொத்துக்கள் அனைத்தும் ஏலத்திற்கு வந்து விட்டது. பார்த்து பார்த்து அழகாய் உருவாக்கிய நிர்வாக கட்டிடமும், உற்பத்தித்துறை சார்ந்தவைகளும் விலைபேசியாகி விட்டது. கோபுரத்தின் உச்சியில் இருந்தவர் தற்போது அதளபாதளத்திற்குள் கிடக்கிறார்.
ஆடையில் பயன்படுத்திய ஒரு ஜிப் தான் காரணம். நம்ப முடியவில்லையா?
இறக்குமதியாளர் ஒப்பந்தங்கள் கொடுக்கும் போதே ஆடைகளில் இந்த ரக ஜிப் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியதோடு அது எங்கே கிடைக்கும் என்பது வரைக்கும் சொல்லியிருந்தார்.
ஆனால் இவர் அங்கே வாங்கவில்லை.
உள்ளூர் தயாரிப்பு விலை குறைவாக இருக்கிறது என்பதோடு தனக்கான லாபம் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தி விட்டார். ஒப்பந்தம் கொடுத்தவர் பலே கில்லாடி.
அந்த ஜிப் தயாரிக்கும் நிறுவனத்திடம் இந்த நிறுவனம் வாங்கியுள்ள ஜிப் குறித்து கேட்க எதுவும் வாங்கவில்லை என்று பதில் வந்தது. ஒப்பந்தம் கொடுத்த இறக்குமதியாளர் இது எனக்கான தரமல்ல என்று மொத்த ஒப்பந்தத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட பெரிய முதலீடு போட்டவர் மூச்சு கூட விட முடியாமல் இன்று முழிபிதுங்கி கிடக்கிறார்..
இது ஒரு மாதிரி தான்.
இது போல திருப்பூருக்குள் இருக்கும் ஒவ்வொரு நிறுவன கதையையும் நோண்டிப்பார்த்தால் ஓராயிரம் கண்ணீர் காவியங்கள் நம்மை யோசிக்க வைக்கும்.
ஆமாம்,
அந்நிய முதலீடு திருப்பூருக்குள் வந்தால் என்னவாகும் என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற உங்களுக்கு யோசனை வந்துருக்க வேண்டுமே?
இது தான் வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதோடு இந்த பாதையில் தான் பயணிக்க வேண்டும் போன்ற அத்தனை நிர்வாக விசயங்களையும் கற்றுக் கொடுத்து நம்மை கற்றுக் கொள்ளவும் வைத்து தான் கார்ப்ரேட் நிர்வாகம் செயல்படத் தொடங்குகின்றது.
ஆனால் திருப்பூரின் தொழில் சூத்திரமென்பது வேறு.
பயத்தில் தொடங்கி, பயத்தில் தொடர்ந்து கடைசி வரைக்கும் எவர் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் தான் நினைப்பது சரிதான் என்கிற ரீதியில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் நடந்து கொண்டுருக்கிறது.
வட மாநிலங்களில் இருந்து வருபவர்களின் கொள்கை வேறு. தனக்கான லாபத்தில் மட்டும் குறியாக இருப்பார்கள். ஆனால் இங்கே வேறுவிதம். வளர்வதைப் போல எளிதாக வீழ்ந்தும் விடுகிறார்கள். மாற்றங்கள் எதுவும் தங்களை பாதிக்கப்படாமல் மரபு என்ற சொல்லுக்குள் செக்கு மாடு போல உழன்று கொண்டுருக்கின்றார்கள்..
கார்ப்ரேட் நிர்வாகம் என்பது கண்கட்டி வித்தையல்ல.
அந்நியர்கள் என்பவர்கள் ஆகாயத்திலிருந்து வந்து குதிக்கின்றவர்களும் அல்ல.
ஆனாலும் இந்தியாவிற்குள் வரும் அந்நிய முதலீட்டுக்கு ஏனிந்த எதிர்ப்பு?
இரண்டு காரணங்கள்.
ஒன்று நம் நாட்டின் சட்டங்களை பணம் இருந்தால் எளிதில் வளைத்துவிட முடியும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக அந்நிய முதலீடுக்கு என்று விதிக்கப்பட்ட அத்தனை கொள்கை ரீதியான விசயங்களும் வெறும் கண்துடைப்பாக போய்விடுமோ என்று அனைவரும் பயப்படுகின்றனர்.
கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களும் அப்படித்தான் இருக்கின்றது.
மற்றொன்று, நாம் எதிலும் போட்டி போடத் தயராய் இருப்பதில்லை. ஒரு தொழில் அமைந்து விட்டால் அதை மாற்றத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ள விரும்புவிதில்லை. முடிந்தவரைக்கும் லாபம் என்பதில் மட்டும் குறியாக வைத்துக் கொண்டு கறவை பசு போலவே கறந்துவிட துடிக்கின்றோம்.
புதிதான சவால்ளை நாம் சந்திக்க வேண்டிய தருணத்தில் சந்திக்க முடியாத அளவுக்கு நம் சிந்தனை பழமையானதாக இருப்பதோடு நம்மை மாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு புலம்பத் தொடங்குகின்றோம்.
வியாபாரத்தில் உள்ளூர் சந்தை என்பது இப்போது உலக சந்தையாக மாறியுள்ளது. ஆனாலும் நம்மை மாற்றிக் கொள்ள முடியவில்லை. எல்லா வசதிகளும் வேண்டும் ஆனால் எந்த போட்டியிலும் பங்கெடுக்க மாட்டேன் என்றால் அதற்கு பெயர் என்ன?
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிகாலத்தில் உருவான தடையற்ற பொருளாதார ஒப்பந்தங்கள் மற்ற துறையினருக்கு எப்படி பயன்பட்டதோ? ஆனால் திருப்பூர் தொழில்துறையினருக்கு புது ரத்தம் பாய்ச்சியது போலவே இருந்தது. ஏற்றுமதியின் வளர்ச்சி நம்பமுடியாத அளவுக்கு மேலேறத் தொடங்கியது. காரணம் வெளிநாட்டு தொழில் நுட்பங்கள் அணைத்தும் திருப்பூருக்குள் வரத்தொடங்கியது..
திருப்பூரில் உள்ள ஆய்த்த ஆடைத் தொழிலில் முக்கிய பிரிவாக ஐந்து பிரிவுகள் வருகின்றது.
நூல், அறவு, சாயமேற்றுதல், உலர்சலவையகம். இதற்குப் பிறகு தான் துணி வெட்டி தைத்து ஆடையாக மாறி பெட்டிக்குச் செல்கின்றது.
இருபது வருடங்களுக்கு முன் பஞ்சாலை தொழிலில் பயன்படுத்திய எந்திரங்கள் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களை சார்ந்து தான் இயங்கிக் கொண்டுருந்தது. ஒரு குறிப்பிட்ட எந்திரம் வேண்டுமென்றால் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே இந்த துறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுருந்தது. அவர்கள் வைத்ததே சட்டம்.
ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரலாம் என்றதும் இன்றைய சூழ்நிலையில் எவர் வேண்டுமானாலும் கையில் காசிருந்தால் எந்த நாட்டிலும் இருந்து தனக்கு தேவைப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன ரக எந்திரங்களை இறக்குமதி செய்து கொள்ள முடியும்.
திண்டுக்கல், திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களில் செயல்பட்டுக் கொண்டுருக்கும் அதிக அளவு பஞ்சாலைகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான எந்திரங்களைக் கொண்டு தான் இன்று அதிக அளவு நூல்களை உற்பத்தி செய்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டுருக்கிறார்கள்.
அறவுத்துறையில் தொடக்கத்தில் இருந்த எந்திரங்கள் பனியன் ஜட்டிக்கென்று வடிவமைக்கப்பட்டு கோவை மற்றும் லூதியானாவிலிருந்து தான் திருப்பூருக்குள் வந்து கொண்டுருந்தது. இந்த எந்திரங்களை நம்பித்தான் தொடக்கத்தில் ஏற்றுமதி வர்த்தகமும் நடந்து கொண்டுருந்தது. ஆனால் கால வெள்ளத்தில் இன்று எந்திரங்கள் காணாமல் போய்விட்டது.
கொரியா, தைவான், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து என்று பல நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பல நவீன அறவு எந்திரங்கள் நம்ப முடியாத அளவுக்கு இந்த ஏற்றுமதி தொழிலை வளர்ச்சியடைய வைத்துள்ளது. திருப்பூரின் இன்றைய நம்பமுடியாத வளர்ச்சிக்கு இந்த நவீனரக அறவு எந்திரங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
சாயமேற்றுதல் துறையென்பது அடிமைகளை வைத்து வேலைவாங்குதல் போல மரபுசார்ந்த விசயமாகத்தான் இருந்தது. வின்ஞ் என்று சொல்லப்படும் எந்திரங்கள் வந்த போதும் கூட துணிகளில் உள்ள தரத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் மேம்பப்டுத்த முடியவில்லை.
ஆனால் சாஃப்ட் ப்ளோ எந்திரங்கள் வந்த பிறகு ஒரு ராட்சச பூதத்திற்கு தீனி போடும் அளவுக்கு இந்த துறை வளர்ந்தது. நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி ஒவ்வொன்றையும் சாதிக்க முடிந்தது.
தண்ணீரின் அளவைக்குறைத்து, அதிக சாயமின்றி லாபத்திற்கு வழிகோலும் பலவிதமான முன்னேற்றங்களை இந்த துறையில் பலராலும் சாதிக்க முடிந்தது.
தொடக்கத்தில் உலர்சலவைகள் என்று சொல்லப்படும் காம்பேக்ட்டிங் என்ற துறை ஸ்டீம் காலண்டிரிங் என்ற பெயரில் இருந்தது. துணியை இந்த எந்திரத்தில் கொடுத்தால் சுருக்கமின்றி தரும். ஆனால் காம்பேக்ட்டிங் என்ற எந்திரம் வந்தபிறகு தேவைப்பட்ட அளவோடு தேவையான தரத்தோடு துணியை கொண்டுவர முடிகின்றது. இந்த துறையில் இருக்கும் பல நவீன தொழில் நுட்ப வசதிகள் உள்ள எந்திரங்களின் வேகம் மற்றும் தரம் என்பது ஆச்சரியமளிக்கும் விசயமாகும்.
கடைசியாக தைக்கும் துறையில் உருவான் எந்திர மாறுதல்கள் நம்ப முடியாத அளவுக்கு மாறுதல்களை சந்தித்தது.
எத்தனை ஆடைகள் தைக்கலாம் என்ற கேள்வி மாறி இத்தனை லட்சம் ஆடைகள் இந்த வாரம் முடித்து விடலாம் என்ற நம்பிக்கை படியில் நடைபோட வைத்தது. கண்டெயினர் ரீதியான ஒப்பந்தங்கள் பலருக்கும் கைகூட உதவியது. உலகில் உள்ள அத்தனை இறக்குமதியாளர்களின் பார்வையும் திருப்பூர் மேல் பட்டது.
40,000 கோடி இலக்கு என்று யோசித்து இதை நம்மால் எட்டிப்பிடித்து விட முடியும் என்று நம்பிக்கையை உருவாக்கியது. ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தேவைப்படும் அத்தனை எந்திரங்களும் உள்ள வரவர இறக்குமதியாளர்கள் விரும்பும் எந்த வடிவத்தையும் எளிதாக கொண்டு வர முடிந்தது.
அத்தனைக்கும் ஒரே காரணம் நம்மிடம் இல்லாத தொழில் நுடபம் அந்நியர்களிடம் இருந்தது.
அவர்களும் தரத்தயாராய் இருந்தனர். நாம் தான் நம் எல்லையை விரிவு படுத்த மனமில்லாமல் இருந்தோம். நமக்கு நாமே கட்டியிருந்த சங்கிலிகளை உடைத்துக் கொண்ட போது நம்மால் விரைவாக உயர முடிந்தது.
இது சாதகமான ஒரு பக்கம் என்பது போல பாதகமான மற்றொரு பக்கமும் உண்டு.
வெளிநாட்டு தொழில் நுட்பங்களை உள்ளே கொண்டுவர விரும்பிய நம் அரசாங்கம் உள்ளூர் தொழிலை வளர்க்கவே விரும்பவில்லை என்பது தான் இன்றுவரையிலும் நாம் பார்த்துக் கொண்டுருக்கின்ற உண்மை.
வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு நிறுவனத்திறகு கிடைக்கும் நம்பமுடியாத அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எதுவும் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடைப்பதே இல்லை. எந்திரங்களை, பல்வேறு தொழில் நுட்பங்களை உள்ளே வர அனுமதிக்கும் அரசாங்கம் உள்ளே செயல்பட்டுக் கொண்டுருக்கும் தொழில் நிறுவனங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
அவரவர்களும் கரணம் தப்பினால் மரணம் என்பதாகத்தான் முன்னேறிக் கொண்டுருக்கிறார்கள். இது அரசாங்கத்தின் பக்கம் உள்ள குறைபாடுகளைப் போல நம் பக்கம் மற்றொரு பிரச்சனையும் உண்டு.
நாம் ஆர் அண்ட் டி என்று சொல்லக்கூடிய ஆராய்ச்சி மனப்பான்மை என்பது நம்முடைய தொழிலில் கிடையவே கிடையாது. எந்த தொழிலையையும் நாம் குறுந்தொழில் பார்வையாகத் தான் நாம் பார்க்கின்றோம்.
ஒவ்வொரு தொழிலையையும் குடும்பத் தொழிலாகத்தான் பார்க்க விரும்புகின்றோம்.
பணியில் இருப்பவர்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றோம்.
புதிய விசயங்களை ஏற்றுக் கொள்ள விரும்புவதே இல்லை என்பதோடு புதிய முன்னேற்றங்களை கண் கொண்டு கூட பார்க்க விரும்புவதே இல்லை.
தொழில் நுட்ப வளர்ச்சி வெள்ளமாக மாறி நம்மை அடித்துக் கொண்டு செல்லும் போது தான் கடைசி நேரத்தில் விழித்துக் கொள்கின்றோம்.
அதற்குள் நாம் நம் தொழிலை இழந்துவிட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றோம்.
ஒவ்வொருமுறையும் இந்தியாவில் இது தான் நடந்து கொண்டிருக்கின்றது. திருப்பூரில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
இது தான் மேலைநாட்டினருக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது.
திருப்பூர் என்பது அந்நியர்களை நம்பி அந்நியர்களுக்காகவே உருவாக்கப்பட்டு இன்று வரையிலும் வளர்ந்து கொண்டுருக்கும் நகரம். இங்குள்ள பெரு, சிறு, குறு முதலாளிகளும் ஒரு விதமான நாகரிக அடிமைகளே.
உலகில் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு ஆட்டிப்படைக்கும் அந்நியர் ஒருவரின் கட்டளையை நிறைவேற்றவே இங்குள்ள ஒவ்வொரு நிறுவனமும் விரும்புகின்றது. இருபது வருடங்களுக்கு முன் நிறுவனங்கள் மெதுவாக வளர்ந்து கொண்டுருந்தது. வளரத் தொடங்கிய போது கூட எவரும் முழித்துக் கொள்ளவில்லை. தனக்கான அடையாளத்தை உருவாக்க விரும்பாமல் மற்றவர்களின் அடையாளத்தை அவர்களின் பிராண்ட் உருவாக்கத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு நிறுவனமும் இன்று முழிபிதுங்கிப் போய் கிடக்கின்றது.
ஒற்றை பிராண்ட் என்பது ஒரு வகையில் மோகினிப் பிசாசு தான். இருட்டில் இருந்து பார்க்கும் போது மினுமினுப்பாய் பளபளப்பாய் கவர்ச்சியாக இருக்கும். ஆனால் சிநேகம் பிடித்துக் கொண்டு விட்டால் நாமும் ஒரு வகையில் அடிமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை தான் உருவாகும்.
அவர்கள் சொன்னது தான் சட்டம். அதுவே தான் வேதவாக்கு. அப்படித்தான் இன்று திருப்பூர் தொழில் தேய்ந்து கொண்டுருக்கிறது. காரணம் நம்மிடம் சந்தைப்படுத்தும் திறமையும் இல்லை. அதை நோக்கி நகர்வதும் இல்லை.
ஆனால் இந்த சந்தைப்படுத்தும் முறைக்கு அரசாங்கத்தின் கொள்கை ரீதியான ஒப்புதல் என்பதும் ஒத்துழைப்பும் இந்தியாவில் கண்துடைப்பாகத்தான் இருக்கிறது. இதன் காரணமாகவே திறமையுள்ளவர்கள் கூட எதற்கு வேண்டாத வேலை என்று தன்னளவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை சார்ந்து தங்களை அடகு வைத்துக் கொண்டுவிடுகிறார்கள்.
ஒற்றை பிராண்ட நிறுவனங்களை நம்பி இங்குள்ள பெரும் முதலாளிகள் பல நூற்றுக்கணக்கான கோடிகளை கொண்டு அதற்கென்று சிறப்பு வடிவமைப்போடு தனியாக நிறுவனங்களை உருவாக்கினார்கள்.
சிறப்பாகவே முன்னேறிக் கொண்டுருந்தார்கள். ஆனால் காலமாற்றத்தில் உன்னைவிட அவன் இன்னமும் குறைவாக கொடுக்கத் தயாராய் இருக்கின்றான். நீ ஏன் குறைத்துக் கொள்ளவதில்லை என்று சொல்லியே இன்று முதலீடு போட்டவர்களின் குரல்வளையில் கையை வைத்து பலரின் மூச்சையும் நிறுத்தி விட்டார்கள். இங்கே நம்பி முதலீடு போட்டவர்களுக்கு வேறு வழி இல்லை.
செயல்பட முடியாத நிறுவனங்களை வைத்துக் கொண்டு வங்கி அதிகாரிகளுக்கு தினமும் பதில் சொல்லிக் கொண்டுருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடுத்த நாட்டுக்கு தாவி போய் விட்டார்கள்.
இது தான் அந்நியர்களின் கொள்கை அதுவே தான் கார்ப்ரேட் நிர்வாகம். தரத்தில் சமரசம் எதுவுமில்லை என்பதைப் போலவே எழுதப்பட்ட ஒப்பந்தத்திற்கு மேல் ஒரு பைசா கூட கொடுக்க விரும்பாதவர்கள் தான் இன்றைய மேலை நாட்டு சமூகத்தினர்.
கட்டுரையின் தொடக்கத்தில் ஒருவரின் கதையை படித்தோம் அல்லவா? இந்த கதை தான் அந்நிய முதலீடு திருப்பூருக்குள் அதிக அளவு நுழையும் போது நடக்கத் தொடங்கும்.
நாம் மேலே பார்த்த ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் பங்கெடுக்கும் பிரிவுகளைப் போல இன்னும் பல பிரிவுகள் உண்டு. அத்தனையும் துணை பிரிவுகளாக இருப்பவை. ஆடைகளுக்கு தைக்க தேவைப்படும் நூல் முதல் பிற துறை சார்ந்த அத்தனை பிரிவுகளும் குறு சிறு தொழிலாக லட்சணக்கனக்கான தொழிலாளர்களை வாழ வைக்கும் தொழிலாக திருப்பூரிலும் இதனைச் சார்ந்த பிற ஊர்களிலும் இருக்கிறது. இந்த சிறு குறு தொழில்கள் அத்தனையும் முடங்கி விடும் அபாயமுண்டு.
உள்ளே வரும் எந்த அந்நியர்களும் தாங்கள் ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டு நடத்த விரும்புவதில்லை. ஆனால் அந்த நிறுவனம் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வர். ஒரு நிறுவனம் ஒப்பந்தம் மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டால் அந்த உற்பத்தி சார்ந்த அத்தனை விசயங்களுமே அவரின் கட்டுப்பாட்டுக்கே வந்து விடுகின்றது.
இந்த நூல் பயன்படுத்த வேண்டும் என்று தொடங்கி ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியும். அதுவும் இந்தியாவிற்குள் இருக்கும் பொருட்களும் அதன் விலைகளை விட மற்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதைத் தான் விரும்புவார்கள்.
மன்மோகன் சிங் உருவாக்கியுள்ள 30 சதவிகிதம் இந்தியப் பொருட்களையே பயன்படுத்தப்ட வேண்டும் என்ற கொள்கை எப்போதும் போல காற்றில் பறக்கவிடப்படும். தினந்தோறும் ஊடகங்களை பார்த்து படித்துக் கொண்டுருப்பவர் எனில் உங்களுக்கு சில விசயங்கள் தெரிய வாய்ப்புண்டு.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளில் இயங்கிக் கொண்டுருக்கும் பல பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பேருராட்சி நகராட்சிகளுக்குக்கூட தங்களது அடிப்படையை வரியைக் கூட கட்டாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டுருப்பதை கேள்விப் பட்டிருக்கலாம். இது தான் இங்கே முக்கிய பிரச்சனை. இந்திய சட்டங்கள் என்பது நடைமுறையில் சாமான்ய மக்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் வெவ்வேறு விதமாக செயல்படுவதை பல செய்திகளின் மூலம் நம்மால் உணரமுடியும்.
இப்போது கூட திருப்பூருக்குள் பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் மற்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதியாகிக் கொண்டுருக்கிறது. ஆனால் இது போன்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் அத்தனை பேர்களும் நம்மவர்கள்.
தொழில் ரீதியான உறவுகளுடன் மற்ற துறை சார்ந்த இணக்கமான உறவுகளுடன் இயல்பாக போய்க் கொண்டுருப்பது அந்நியர்கள் தலையிடும் போது நிச்சயம் மாறுதல்கள் உருவாகும். நம்பிக்கைச் சார்ந்த விசயங்களின் மூலம் நடந்து கொண்டுருக்கும் இது போன்ற துணை தொழில்களின் முகம் மாறும்.
ஆனால் அந்நியர் கைகளுக்கு வரும் போது கையில் காசு வாயில் தோசை என்று மாற்றப்படும்.
ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் 50 பேர்கள் பணிபுரிகின்றார்கள் எனறால் அந்த எண்ணிக்கை குறைக்கப்படும்.
கார்ப்ரேட் நிர்வாகம் என்பது திறமையானவர்களைத் தவிர மற்ற அத்தனை பேர்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளியே அனுப்பி விடுவர். மேலும் மேலும் தங்களது வேலையை உறுதிப்படுத்திக் கொள்ள தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டே ஆக வேண்டும்.
ஆட்களை குறைத்து பல இடங்களில் எந்திரங்கள் மூலம் ஒவ்வொரு வேலையும் எந்திரமயமாக்கப்படும். திறமை இருப்பவர்களும் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நவீன அடிமை சாசனத்தில் கையெழுத்திடுவர்.
திருப்பூருக்குள் அந்நிய முதலீடு நுழையும் போது முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் முதலீடு போட்ட பெரிய அடிமை மற்றும் சொன்னதை செய்ய வேண்டிய சின்ன அடிமை என்கிற ரீதியில் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொள்ள முடியும்.
மன்மோகன் சிங்கின் கனவுகள் அற்புதமானவை. தொழில் ரீதியாக போட்டி போட முடியவில்லையா? அந்தத் தொழிலை ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடு! கனிம வளம் நிரம்பிய இடம் இருக்கிறதா? உடனடியாக ஒரு நிறுவனத்துக்கு தாரை வார்த்துவிடு!
பொருளாதார சிறப்பு மண்டலம் உருவாகட்டும். மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாதே. வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள். ஏழைமையை ஒழிப்பது என்றால் ஏழைகளை ஒழிப்பது என்று புரிந்துவைத்திருக்கும் ஒரு பிரதமரால் வேறு எப்படிச் சிந்திக்கமுடியும்?