அஸ்திவாரம்

Tuesday, November 27, 2012

தர்மபுரி - வன்முறையும் வன்மமும்


நீங்கள் யார் பக்கம்? 

இன்று நாடுகள் முதல் வீடுகள் வரைக்கும் கேட்கும் கேள்வியிது? 

யோசிக்கக்கூட அவகாசமில்லாமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பலசமயம் இது தான் எதார்த்தம் என்பதாக சமாதானபடுத்திக் கொண்டே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.  ஆனால் சாதி குறித்து யாரிடமாவது கேட்டுப் பாருங்க. நேரிடையான பதில் வராது. அவர்களின் உண்மையான முகமே அப்போது தான் நமக்கு வெளியே தெரியும்.

ஒரு மனிதனின் உண்மையான ரூபம் எப்போது தெரியும்?

அவன் வேலையில் சேரும் போது தொடங்கும். அவன் திருமண வாழ்க்கை தொடங்கும் போது  உறுதிப்படும். குழந்தைகள் வளரும் போது மெருகேறும். குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கு முயற்சிகள் தொடங்கும் போது தான் அவனில் உள்ள அத்தனை மிருகங்களும் வெளியே தெரியும்.

ஆனால் நடந்து முடிந்த தர்மபுரி சாதிக்கலவரத்தில் பெண்களும் கூட பங்கெடுத்து முடிந்தவரைக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று சுருட்டியிருப்பதைப் பார்க்கும் போது தான் ஆதிக்கம் என்பதையும் தாண்டி அருவெறுப்பு என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

கடந்து வந்த தமிழர்களின் வரலாற்றில் இந்த சாதி என்ற ஒற்றை வார்த்தையினால் மட்டும் உருவான கலவரங்களும், வாழ்க்கை இழந்தவர்கள், இறந்து போனவர்கள், நிர்கதியாக்கப்பட்டு மூலைக்கு தள்ளப்பட்டவர்களின் பட்டியலின் நீளம் அதிகம். 

குறிப்பிட்டுச் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் ஏராளமான சிறிய பெரிய கலவரங்கள் தோன்றினாலும் பத்து வருடத்திற்கு ஒரு முறை உருவாகும் அல்லது உருவாக்கப்படும் இந்த சாதி ரீதியான கலவரங்கள் அடக்குறையின் உச்சம் என்பதை விட ஆதிககம் செலுத்த முடியாதவர்களின் வன்மத்தின் வடிகாலாகத்தான் இருக்கின்றது. 

மலத்தை கரைத்து ஒரு மனிதனின் வாயில் ஊற்றி கொக்கத்தரிவர்களின் ஆழ்மனம் குறித்த பார்வையை நாம் எந்த வகையில் எடுத்துக் கொள்ள முடியும்.? பெற்ற மகள் என்றும் பாராமல் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காகவே கொல்லத்துடிக்கும் அந்த மகாபாவியை எப்படி அழைப்பீர்கள்? 

உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரையிலும் மனம் என்பது ஒரு பொக்கிஷம்.  ஆனால் கட்டுத்தளைகளை உடைத்து வெளியே திரியும் போது அதுவொரு புதைபொருள்.

உங்களால் முழுமையாக உங்கள் மனத்தை புரிந்து கொள்ள முடியாமல் போனால் சாகும் வரையிலும் மனித வடிவில் மிருகத் தன்மையோடு வாழ வேண்டியிருக்கும்.ஆதிக்கம் செலுத்த விரும்புவர்களும், வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுமென இங்கே பலரும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சமூகத்தின் முக்கிய சீரழிவுக்கு இவர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். பட்டங்கள், பதவிகள், கௌரவம் என்று எத்தனை விதமாக வெளியே தெரிந்தாலும் சற்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அவர்கள் வாயிலில் வடியும் ரத்தக்கறை சுவைத்தும் அடங்காதவர்களாகத்தான் சமூகத்தில் இருக்கிறார்கள்.

தொடக்கத்தில் உருவான தீண்டாமை என்பதன் முழு அர்த்தமும் இப்போது முற்றிலும் மாறிப் போயுள்ளது.  மாறியுள்ளதே தவிர உள்ளே உள்ள வன்மம் மட்டும் குறைந்தபாடில்லை.

ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கி வாழ வேண்டியவர்கள் என்று அழைக்கப்பட்ட அத்தனை பேர்களின் சமூக வாழ்க்கையின் தன்மையும் இன்று மாறித்தான் வந்துள்ளது.  இது பெற்ற உரிமைகளினால் அல்ல. மாறி வரும் பொருளாதாரச் சூழ்நிலை. இதனோடு விரைவாக வளர்ந்து வரும் நகரமயமாக்கல் போன்ற காரணங்களினால் மட்டுமே இதன் எல்லைகள் உடைபட்டுக் கொண்டே போகின்றது. எந்த பன்னாட்டு நிறுவனங்களும் சாதி பார்ப்பதில்லை.  அந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு உள்ளே அந்த எண்ணம் இருந்தாலும் எளிதில் உடைத்துவிட முடிகின்றது.  திறமை முக்கியம். அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் அதைவிட முக்கியம்.  பொருத்திக் கொண்டால் பொறுமைசாலியாக வாழ்ந்தால் வாழ்க்கையின் அடுத்தபடிக்கு எளிதாக நகர்ந்துவிடலாம்.

உண்மையான முழுமையான மாற்றங்கள் இன்னமும் எட்டப்படாத நிலையிலும் கூட பலருக்கும் உருவாகிக் கொண்டிருக்கும்  மாறுதல்களை ஏற்றுக் கொள்ள மனமில்லை என்பதும் உண்மையே.  

இவன் இந்த சாதியில் பிறந்தவன். இவன் இப்படித்தான் இந்த வட்டத்திற்குள் வாழ வேண்டும் என்ற எல்லைக்கோடு உடைபடத் தொடங்கிய போதே பலரின் வெறுப்பு அணையாத நெருப்பு போலவே உள்ளேயே புகையத் தொடங்கியது. சாதி என்ற வார்ததை என்பது அடித்தளமாகவும் பொறாமை என்பது அதன் மேல் இருக்கும் கொடூர பகுதியாகவும் மாறத் தொடங்கியது. 

தொடக்கத்தில் உருவான அடிமை முறைகள் உருவானதற்கு முக்கிய காரணம்  தீண்டாமை அல்ல. அடிமைகளை வைத்து தங்களை வளப்படுத்திக் கொள்ள என்பதற்காக மட்டுமே என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பொன்னாசை, மண் ஆசை பொருள் ஆசை வளர வளர  ஒவ்வொருவரின் முகமும் பல்வேறு விதங்களில் வெளிப்படத் தொடங்கியது. 

அன்று அடிமை. இன்று சாதி.
அன்று உரிமை என்ற வார்த்தையே இல்லை. இன்று இருக்கிறது. ஆனால் அதை எதிர்பார்க்கக்கூடாது. மொத்தத்தில் குறிப்பிட்ட சிலரின் வளர்ச்சிக்காக குறிப்பிட்ட சமூகம் தன்னை மறந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.  இது தான் இதற்குள் இருக்கும் முழுமையாக அர்த்தம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள். பலதரப்பட்ட மனிதர்களுக்கு சேரியில் வாழும் மனிதர்கள். சேரிகள் உடைபட்டு சேதி என்ன தெரியுமா? என்று கேள்விகள் வரும்போது தான் கலவரமாக வெடிக்கின்றது. 

இது தான் நாம் பெற்ற வளர்ச்சிகளினால் கிடைத்த வித்தியாசம்.

மாறிவரும் நகரமயமாக்கல் வாழ்வின் சூத்திரத்தை முடிந்தவரைக்கும் உடைத்துக் கொண்டே வந்தாலும் மாறவே மாட்டேன் என்பவர்கள் இன்று வரையிலும் பெரும்பான்மையாக இருப்பதால் உருவாக்கும் ஆத்திரம் மட்டுப்படுவதே இல்லை.அதில் ஒரு காட்சி தான் சமீபத்தில் நாம் கண்ட தர்மபுரி கலவங்கள். ஒவ்வொருவரும் சாதியினால் பிரிக்கப்பட்டு வாழ்ந்தாலும் பொருளாதார முன்னேற்றங்கள் சாதியினால் வருவதல்ல. உழைப்பும் சேரும் போது தான் உருவாவது. 

இங்கே தான் பிரச்சனை தொடங்குகின்றது.

நம் முன் கை கட்டி நிற்க வேண்டியவர்கள் இப்படி வளர்ந்து விட்டார்களே என்ற ஆதங்கம் எரிச்சலாக மாறி, பொறுமையுடன் கூட வன்மமாக உருவாகி சமயத்திற்காக காத்திருக்க வைத்திருக்கின்றது.  தேடித்தேடி ஒவ்வொரு முறையும் இந்த மக்களின் வாழ்க்கை சூறைகாற்றில் சிக்கியதாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றது.

பொருளாதார பார்வையில் நாம் பார்க்கும் ஏழைகள் பணக்காரன் என்ற இந்த இரு பிரிவைப் போல மற்றொரு பிரிவும் இயல்பாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிக் கொண்டே தான் இருக்கிறது. 

சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், செலுத்த முடியாதவர்கள்.

இந்த இரண்டு கோட்டுக்குள் தான் ஒவ்வொருவரும் வாழ வேண்டியிருக்கிறது. சாதி என்பது ஒரு முலாம் போல பூசப்பட்டு அதற்கு வெவ்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட்டுக் கொண்டே வரப்படுகின்றது. 

பாதிப்பு என்பது ஒரு பக்கம் மட்டும் உருவாவதல்ல. கலப்புத் திருமணங்கள் இது போன்ற கலவரத்திற்கு காரணம் என்று சொன்னாலும் சமூக சீர்கேட்டையும் இவர்கள் உருவாக்குகிறார்கள என்றொரு மறு பக்க காரணமும் நாம் ஆழமாக உள்வாங்க வேண்டும். 

மிரட்டியே வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களும், மிரட்டித்தான் பார் பார்க்கலாம் என்ற சொல்லும் இந்த இரு பிரிவு மக்களும் முடிந்தவரைக்கும் தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்து வைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

உண்மையான காரணங்கள் எதுவாக இருந்தாலும் உள்ளுக்குள் இருப்பது மொத்தத்தில் பொருளாதாரம் சார்ந்தது தான் என்று நமக்குத் தெரிந்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. நன்றாக சமூகத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள்.  பொருளாதார ரீதியாக வளர்ந்த மனிதர்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களில் ஆதிக்கம் செலுத்துவது சாதி அல்ல.

பணம் தான் பிரதானமாக இருக்கிறது. இந்த பணம் தான் கடைசி வரையிலும் அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

சாதிகள் குறித்து நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் பேசிப் பாருங்கள்.  ஒரு இழுவையோடு தான் பதில் வரும். 

படித்தவர், பண்பாளர், நாலும் தெரிந்தவர், மதங்களை கடந்தவர், இறை மறுப்பு கொள்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று எத்தனை வட்டங்களை உடைத்து வாழ்ந்தாலும் உள்ளூர ஏதோவொரு முலையில் இந்த சாதி குறித்த எண்ணங்கள் ஒவ்வொருக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றது.  சிலருக்கு ரணமாக, சிலருக்கு காயமாக. பலருக்கும் சீழ் பிடித்த புண்ணாக இருக்கிறது.  ஆற்றவும் தெரியாமல் அகற்றவும் முடியாமல் அவஸ்த்தையோடு தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கே ஒவ்வொரும் விரும்பியே தான் இந்த சாதி வளர்ந்தது, வளர்கின்றது.  வளர்ந்து கொண்டே இருக்கவும் போகின்றது. உண்மையான காரணங்களை நீங்கள் உரத்து பேச முடியாது. காரணம் நீங்கள் ஓரங்கப்பட்டப்படுவீர்கள் அல்லது ஒழிக்கப்படுவீர்கள்.

சமீபத்தில் தர்மபுரியில் நடந்த கலவரமென்பது நம்மைப் பொறுத்தவரையிலும் ஒரு நிகழ்வு. இன்னும் சில மாதங்கள் கழிந்தால் ஆமா.. அந்த காதல் திருமண தம்பதிங்க தானே... என்று அடுத்த செய்திக்கு தாண்டிவிடுவோம்.  

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக நடந்த ஒவ்வொரு சாதி ரீதியான கலவரங்களும் இப்படித்தான் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இந்த கலவரத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கு சிறிது காலம் தான் பிடிக்கும். ஆனால் உருவாக்கப்பட்ட மிரட்டல் தான் இங்கே முக்கியமாக பேசப்பட வேண்டும் என்று தோன்றுகின்றது. 

சாதிகள் குறித்து பேசும் போது இங்கு ஒவ்வொருவரும் உருவான வரலாற்றை, உருவாக்கியவர்களை மட்டும் தான் பேச விரும்புகிறார்கள்.  ஆனால் எவரெல்லாம் விரும்பி கடைபிடிக்கின்றார்கள் என்பதைப் பற்றி மறந்தும் கூட பேசுவதில்லை. இன்று வரையிலும் நீ இப்படித்தான் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு வருபவர்கள் யார்?

இந்த சாதியைப் பற்றி பேசுபவர்கள் தவறாமல் குறிப்பிடும் ஒரு வார்த்தை தான் பிராமணியம்.

ஆனால் இந்த சாதி வேரை மரமாக்கி விழுதுகள் விடுமளவிற்கு வளர்த்தது யார்? இன்று காய் கனியாக பூத்துக் குலுங்குவதையும், கவனமாக தண்ணீர் ஊற்றி பாதுகாத்துக் கொண்டிருப்பதும் யார்?

வர்ணாசிரம்ம தத்துவங்கள் இந்த கொடுமைகள் உருவாக்கியது என்று சொல்பவர்களின் குடும்பத்தில் பார்த்தால் அந்த தத்துவம் சொன்ன பூஜை புனஸ்காரங்கள் என்று கனஜோராக ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது தெரியும்.

நமக்கு கிடைத்த வழிகாட்டிகள் அத்தனை பேர்களின் குடும்பப் பெண்கள் பின்பற்றும் இறையியல் தத்துவங்களை தடுக்க முடியாமல் சமூகத்தை திருத்த நினைக்கும் சமூகப் போராளிகளைத் தான் நாம் பெற்றுள்ளோம். அவர்களின் வார்த்தைகளை நம்பித் தான் இன்று பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்க்கை அவல நிலைக்கு தள்ளப்படுகின்றது. அறிவுரைகள் என்பது காலம் காலமாக அடுத்தவர்களுக்கு மட்டும் தானே?

சாயங்கள் உதிர மூன்று துருவங்களை அலசி காயப்போட வேண்டும்.  

ஆன்மீகம், அரசியல், மாற்றம் வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் போராடிக் கொண்டிருக்கும் சமூகப் போராளிகள்

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீகம் சம்மந்தபட்ட மடங்கள் அனைத்தும் பழமைவாத ஆன்மீகவாதிகளிடம் சிக்கி தானும் வாழத் தெரியாமல் மடங்கள் உருவாக்கிய கொள்கையை பின்பற்ற வழியும் தெரியாமல் அறக்கட்டளை என்ற பெயரில் தான் நடந்து கொண்டு இருக்கிறது.  ஒவ்வொரு மடங்களும் என்ன செய்தது? என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்த்தீர்களேயானால் கடைசியில் அது அசிங்க கதைகளின் உச்சகட்டமாகத்தான் இருக்கிறது.

மதம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பிரிவினைகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கை குறித்த அக்கறையில்லை. பணம் படைத்தவர்களின் பணத்தை கொண்டு வந்து கொட்ட வேண்டிய ஒரு கிட்டங்கியாகத்தான் தற்போதைய அனைத்து மடங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு மடத்திற்கும் ஒவ்வொரு கொள்கை. தின்று கொழுத்து ஏப்பத்தோடு வாழ்ந்து கொண்டுருக்கும் இவர்களின் வாழ்க்கையில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது மறைக்கப்பட்ட ஒன்று அல்லது மறந்து போன ஒன்று.
மக்களிடையே பிரிவினைகள் நாளுக்கு நாள் வளர வளர இது போன்ற மடங்கள் இன்று வரையிலும் வலுவிழந்து கொண்டிருப்பது கண்கூடு. ஆனால் அந்த மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எவருக்கும் இது குறித்த அக்கறையில்லை. பிரிவினைகள் வளரத்தானே செய்யும்.

வளர வளரத்தான் இவர்களின் வாழ்க்கையும் வசதியாக இருக்கும். . 

எல்லா மக்களும் மடத்திற்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பெயர் சந்தைக்கூடமாக மாறிவிடும் என்பது இவர்களின் அசைக்கமுடியாத எண்ணமாக இருப்பதால் இன்று வரையிலும் சமயத்தில் உள்ள அத்தனை மடங்களிலும் போடப்படுகின்ற சாம்பிராணி புகையில் பார்ப்பதைப் போல ஒவ்வொன்றும் மங்கலாகத் தெரிகின்றது. எல்லாமதங்களிலும் இப்படித்தான் இருக்கின்றது.

இன்று இதன் மூலம் ஆதாயம் தேடுபவர்கள் முதல் இதனை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் வரைக்கும் ஓங்கி முழங்கும் எந்த கொள்கைக்குப் பின்னாலும் ஆத்ம ரீதியான புரிதல் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா? அரசியல் மூலம் வகுக்கப்பட்ட கொள்கையில் மூலம் கிடைக்க வேண்டிய உரிமைகளும் முழுமையாக கிடைத்தபாடில்லை. கிடைத்தாலும் வெறுமனே கண்துடைப்பாக இருப்பதால் உண்மையான நீதி கிடைப்பதற்குள் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பரலோகம் செல்வது தான் நடந்து கொண்டிருக்கிறது.  

அரசியல் என்ற போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் பகடைக்காய் போலவே இந்த இன மக்கள் நடத்தப்படுகிறார்கள். உரிமைகளைப் பற்றி பேசக்கூடாது. புரிந்து கொள்ளக்கூடாது என்பதாகத்தான் ஒவ்வொரு முறையும் கவனமாக காய் நகர்த்தப்படுகின்றது. அதற்குள் அடுத்த ஆட்சி வந்து விடும். மறுபடியும் பூஜ்யத்தில் இருந்து தொடங்கும்.

ஆனால் ராஜ்ஜியத்தை ஆள வந்தவர்கள் வாண வேடிக்கை நிகழ்த்திக் காட்டுவதோடு அவர்களும் ஒதுங்கி விடுகிறார்கள்.

ஆனால் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட சமூகப் போராளிகள், சாதி சங்கங்கள், சாதி தலைவர்கள் என்று வருகின்ற, உருவாகின்ற அத்தனை பேர்களும் காலப் போக்கில் அரசியல் என்ற பள்ளத்தில் விழ வேண்டியவர்களாகத்தான் அவர்களின் பயணம் முடிகின்றது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மறுக்கப்பட்ட பல உரிமைகள் குறித்து இப்போது பேசவாவது முடிகின்றது.  ஆனால் அந்த உரிமைகள் மறுக்கப்படும் போது குறிப்பிட்ட சிலரிடம் தான் இந்த இன மக்கள் தங்களை அடகு வைக்க வேண்டியிருக்கிறது.  அவர்களும் தங்களின் சுய லாப அரசியல் வளர்ச்சியை மனதில் கொண்டே ஒவ்வொரு முறையும் பந்தாடி இந்த மக்களை பாதாள குழியில் தள்ளிக் கொண்டேயிருக்கிறார்கள்.

பொருள் செய்ய பழகு என்றார்கள்.  

ஒருவனின் பொருளாதாரம் என்பது அது வெறுமனே பொருள் சார்ந்த விசயம் மட்டுமல்ல.

உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்ககூடியது.
உரிமைகளை உங்கள் அருகே வரவழைப்பது.
கண் அசைவில் காரியம் செய்ய முடியும் என்று உணர வைப்பது. எல்லைகளை தகர்த்து எறிய வைப்பது.

ஆனால் முறைப்படியான பொருளாதார வளர்ச்சி என்பது அது கல்வியோடு சேர்ந்த ஒரு கூட்டுக் கலவையாக இருக்கும் பட்சத்தில் தான் நீடித்து நிற்க முடிகின்றது.

தற்போதைய சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சட்டங்களின் மூலம் எவரும் எந்த இடத்தையும் அடைய முடியும்.

வழியெங்கும் முள் பாதைகளால் இருந்த வாழ்க்கை இன்று மாறியுள்ளது. இன்னமும் புறக்கணிப்பு என்பது பல இடங்களில் இருந்த போதிலும் அது எத்தனை நாளைக்கு இருக்கும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. 

ஒருவன் முறைப்படியான பெற்ற கல்வி என்பது எந்த அளவுக்கு தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் உயர்த்தும் என்பதற்கு அண்ணல் அம்பேத்கார் தான் மிகச் சிறந்த உதாரணம்.  

தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் அணியும் ஆடைகளை குறியீடாக மாற்றியவர்கள் இரண்டு பேர்கள்.

ஒருவர் மகாத்மா காந்தி.

அடித்தட்டு மக்களும் நானும் சமம் என்பதைப் போல கடைசி காலம் வரைக்கும் அவர் உடுத்திய உடைகள் மூலம் இந்த சமூகத்திற்கு குறியீடாக விளங்கினார். 

நாங்களும் கோட் சூட் போட்டு கணவான் போல வாழ முடியும் என்பதை உணர்த்திக் காட்டினார் அண்ணல் அம்பேத்கார்.

கடைசி வரைக்கும் அவர் பட்டபாடுகள் அதிகம் என்றாலும் இன்று இந்த இன மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் அவர் தொடங்கி வைத்த பயணத்தில் கிடைத்த பலனே ஆகும்.

நாம் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேச விரும்புகின்றோம்.  ஆனால் அதற்கு எப்படி உழைக்க வேண்டும் என்பதைப் பற்றி மறந்தும் கூட பேச விரும்புவதில்லை.  

மூன்று தலைமுறைக்கு முன்னால்  நாடார் இன மக்கள் இன்று அடைந்துள்ள உரிமைகள் என்பது அவர்கள் பெற்ற கல்வி கொடுத்த பொருளாதார வளர்ச்சியே ஆகும்.

கேரளாவில் ஈழவா என்ற இனத்தை எப்படி நசுக்கி ஒதுக்கி வைத்திருந்தார்கள் என்பதை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும். ஆனால் நாராயணகுரு உருவாக்கிய கல்விக்கூடங்கள், மறுமலர்ச்சிப் பாதைகள் இன்றைய வளர்ச்சியின் அச்சாரமாக இருக்கிறது.

உண்மையான அக்கறையான தலைவர்கள் தோன்றாதவரைக்கும் இங்கே எதுவும் மாறப்போவதில்லை.

காரணம் முறைப்படியான வளர்ச்சி என்பது கல்வி தொடங்கி வைப்பது. அதன் மூலம் உருவாகும் பொருளாதார வளர்ச்சியே நிலைப்படுத்தும். மொத்த ஒற்றுமையே  உலகத்தை கவனிக்க வைக்கும். 

இன்று ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின், பழங்குடியினர், சீர்மரபினர்களின் எண்ணிக்கை மட்டும் நூற்றுக்கும் மேலே. அதை விட முக்கியம் நான் உன்னை விட மேலானவன் என்ற தத்துவம் இதற்குள்ளும் இருக்கிறது.

ஆயிரத்தெட்டு பார்வைக்ள் அசிங்கமான பிரிவினைகள். 

இலக்கே இல்லாத பயண்த்தின் பாதையாகத்தான் தெரிகின்றது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து மேலேறி வந்தவர்கள் எவரும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்புவதில்லை.

முடிந்தவரைக்கும் ஒதுங்கிவிடவே விரும்புகின்றார்கள்.

உருப்படியானவர்கள் ஒதுக்கி நிற்க ஒழுக்கமற்றவர்கள் தான் தலைவர்களாக உருவெடுக்கின்றார்கள். இவர்கள் மூலம் உருவாக்கப்டும் ஒவ்வொரு விசயங்களும் இறுதியில் சண்டை சச்சரவுகளில் தான் முடிகின்றது. அவனை நிறுத்தச் சொல். நானும் நிறுத்துகின்றேன் என்றே மேலும் மேலும் வன்மம் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

கடைசியாக பாதிக்கப்படுவதும் அப்பாவிகளே. 

ஆதிக்கம் செலுத்துபவர்களின் மனதில் உள்ள பிடிமானம் என்பது தங்களை விட்டு சென்று கொண்டிருக்கின்றதே என்பதன் வெளிப்பாடு தான் வன்மம்.  இந்த வன்மத்தை அடைகாத்து அடைகாத்து அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டே  வருகின்றார்கள்.   

2000 வருடங்கள் கொடுக்க விரும்பாமல் வைத்திருந்த உரிமைகளை 66 வருடங்களுக்குள் பெற்று விடுவது எளிதான காரியமா?

இன்றைய போராட்டங்களின் பலன்கள் இந்த தலைமுறைக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்று சிந்தக்கூடிய ரத்தமும் உழைப்பும் அடுத்த தலைமுறைக்கு உதவ வேண்டுமானால் உண்மையான கல்வியின் மூலம் பொருள் செய்ய பழகு. 

பொருள் இல்லையேல் இவ்வுலகம் உங்களுக்கு இல்லை. 

முன்னேற வேண்டும் என்பதும் எப்படியாவது தம்மை இந்த சமூகத்தின் பார்வையில் ஒரு கௌரவ மனிதனாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றே ஒவ்வொருவரும் ஆளாய் பறந்து கொண்டேயிருக்கிறார்கள்.  

நேருக்கு நேர் நின்று போராடுவதை விட்டு பெரிய நாடுகள் கூட வெளியே வந்து விட்டது.  பொருளாதாரத்தில் கை வை என்ற நோக்கத்தில் தான் இன்று ஒவ்வொரு உரிமைகளும் பேசப்படுகின்றது.  

நாம் புழுதியில் வாழுவே விரும்புகின்றோம் என்னும் போது அவர்கள் நம்மை புரட்டி விளையாடவே விரும்புவார்கள்.

கல்வி என்பது கேள்வி கேட்க உதவும். ஆனால் எதையும் இவர்கள் கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் கல்வியைத் தவிர மற்றவற்றைப் பற்றி இங்கே அனைவரும் பேசுகின்றார்கள்.

முட்டுக்கட்டைகள் தான் இங்கே பலருக்கும் படிக்கல்லாக மாறுகின்றது.

நாம் நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமும் கூட.

15 comments:

  1. ஜோதிஜி,

    நல்ல கருத்தாக்கம், பல கசப்பான உண்மைகள், ஆனால் மாற்ற யாருக்குமே விருப்பம் இல்லையோன்னு தான் தோன்றுகிறது.

    2000 வருடமாக ஒரு மக்கள் கூட்டம் கீழ கிடந்தது, கொஞ்சம் முன்னேறியதும் ,அது எப்படி முன்னேறலாம், எப்படி இட ஒதுக்கீடு அனுபவிக்கலாம், வருமானத்தின் அடிப்படையில் கொடுக்கலாமேன்னு தர்க்க நியாயம் பேசி , சாதியம் பேசிக்கொண்டு நிற்கிறார்கள், 2000 ஆண்டுகால மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இப்போ மட்டும் உடனே சமகால கோட்பாட்டினை பேசுறோமேன்னு தோன்றுவதில்லை.

    படிப்படியாக தானாகவே மேம்பட்ட நிலைக்கு ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகமும் மாறும் வரையில் இட ஒதுக்கீடு தேவையான ஒன்றே. ஏன் இதனை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மதத்தின் அடிப்படையில் சாதியம் அடக்குவதை தடுக்க மதம் மாறுங்கள் என சொல்கிறார்கள் சிலர். அதனால் ஒரே இரவில் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசிடாது என்னும் பொழுது எப்படி மாறுவார்கள் என்பதை புரிய வைக்கவே.

    இதில மருத்துவர் அடிக்கிற கூத்தையெல்லாம் பார்த்தால் நாம் எப்படியான சமூகத்தில் வாழ்கிறோம் என நிஜமாகவே சந்தேகம் வந்துவிடுகிறது :-((

    ReplyDelete
    Replies
    1. மாற்றுக் கருத்து உங்களிடமிருந்து வருமென்று எதிர்பார்த்தேன். ஆச்சரியப்பட்டேன்.

      Delete
  2. //சாதியம் அடக்குவதை தடுக்க மதம் மாறுங்கள் என சொல்கிறார்கள்//

    எரிகிற வீட்டில் பிடுங்கியது எல்லாம் லாபம்!

    ReplyDelete
    Replies
    1. நூறு சதவிகிதம் உண்மையும் கூட.

      Delete
  3. தீண்டாமையின், ஆதிக்கத்தின் வெறிக்கு ஆட்படவர்களுக்கு சரியான உதாரணமாக கூரவேண்டுமானால், குடியிருப்பு நிலங்களின் விலை விண்ணைத்தொடும் நிலையிலும் சென்னை போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட குடியிருப்புக்களை கடந்து செல்லவேண்டிய காலிமனைகளை 2 km சுற்றிக்கொண்டுபோய் காட்டுகிறார்கள். மேலும் தாழ்த்தப்பட்ட குடியிருப்பிற்கு பக்கதில் உள்ள இடங்களை 2-3 லட்சங்கள் குறைவாகவும் விற்க முன்வருகிறார்கள்.வாங்கத்தான் ஆளில்லை. என்ன கொடுமை சார்?

    ReplyDelete
    Replies
    1. இது புதிய செய்தி எனக்கு.

      Delete
  4. உங்கள் கருத்தை மதிக்கிறேன், ஆனால் இந்த கட்டுரையையும் முழுமையாக படிக்கவும்.

    http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. இந்த சமயத்தில் இதுவொரு முக்கியமான பதிவு. நன்றி ஆனந்த்.

      Delete
  5. // நீங்கள் யார் பக்கம்? ..... .... .... ......ஒரு மனிதனின் உண்மையான ரூபம் எப்போது தெரியும்? //
    நீங்களே கேள்விகள் கேட்டு நீங்களே விளக்கமும் தந்து விட்டீர்கள்.

    இப்போது நாட்டில் இருக்கும் எல்லா ஜாதியிலும் சில தலைமுறைகளுக்கு முன்பே கலப்பு ஏற்பட்டு விட்டது. கறுத்த மேனி , சிவத்த மேனி என்ற தோற்றம் எல்லா ஜாதியினரிடமும் இருக்கிறது. தலைவரும் அவர் வீட்டு பிள்ளைகளும் சிவத்தவர்களாக இருக்கிறார்கள். தொண்டர்கள் கறுப்பாக இருக்கிறார்கள். நாம் வைத்திருக்கும் சான்றிதழ் அடிப்படையில் நாம் ஒரு ஜாதி அவ்வளவுதான்.

    எல்லோரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை. தொழில் அதிபர்கள் நாங்கள் எங்கள் ஜாதி ஆட்களை வைத்தே தொழில் நடத்திக் கொள்வோம் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இப்போதே மின்வெட்டு காரணமாக திருப்பூரை விட்டு சென்றவர்கள் மீண்டும் வராததால் யாருக்கு நஷ்டம்?

    பெரிய கட்சிகளில் பதவி கிடைக்காதவர்கள், கூட்டணி வைக்க முடியாதவர்கள் தேர்தல் நெருங்க நெருங்க ஜாதிப் பித்தம் தலைக்கேறி செய்யும் அரசியல் எல்லோரையும் பாதிக்கிறது. அவர்கள் ஜாதிக்காரர்களே அவர்களை தலைவராக ஏற்றுக் கொள்வதில்லை.




    ReplyDelete
    Replies
    1. தெளிவான் பார்வையுடன் கூடிய ஆழமான விமர்சனம். நன்றி.

      Delete
  6. மனம் கனக்கிறது நண்பரே! நிறைய செய்திகளை எழுதி தெரியாதவர்களுக்கு தெரிவித்திருக்கிறீர்கள். எனக்கும் புதியதாகவே இருந்தது. ரொம்ப நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கு நன்றி நண்பரே.

      Delete
  7. இங்கே உ;;அ இரு வகுப்பு மக்களுமே இணைய விரும்பினாலும் சாதி கட்சிகளே தடுக்க வழி செகிறது அவமானம்

    ReplyDelete
  8. இதனை நானும் படித்தேன் என்பதற்கு அடையாளமாக ஒரு கருத்தை(commend)பதிவிடுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

    ReplyDelete
  9. ''Class is a mobile caste. Caste is an immobile class,''said Dr Rammanohar Lohia.
    ''Annihilation of caste demands annihilation of Hindu religion which sanctioned caste,'' says Dr Ambedkar. But for Gandhi, Ambedkar could have never become the Law Minister. Such was the grip of upper castes in Congress at that time. Only Gandhi could make some dents in the steel frame. ''Three Treacheries of Gandhi''by Jeyamohan is worth reading on this topic.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.