ஊரில் வாழ்ந்த
வீடென்பது தோட்டமும் மரங்களுமாய் இருந்த காரணத்தால் எப்போதும் குப்பைகளுக்கு
பஞ்சமில்லை, உதிர்ந்த இலைகளும், உதிர்ந்து போக காத்திருக்கும் இலைகளும் சேர்ந்து அடிக்கும் காற்றில் வீட்டை
நோக்கி பறந்து வந்து
கொண்டேயிருக்கும், திடீரென்று
அடிக்கும் காற்றில் எங்கோயோ சுழன்று கொண்டுருக்கும் தூசிகள் எதிர்பாரா
விருந்தாளியாய் வீட்டை ஆக்ரமிக்கும், எப்போதும் தூசிகளுடன்
வாழ்ந்த வாழ்க்கையாகத் தான் இருந்தது,
வீட்டில் இருக்கும்
ஒவ்வொருவரும் முறை வைத்து கூட்டி பெருக்கிக் கொண்டேயிருந்தாலும் ஏதோவொரு ரூபத்தில்
வீட்டுக்குள் ஏதோவொரு இடத்தில் குப்பைகள் இருந்து கொண்டேயிருக்கும், ஏன் இப்படி வீடே குப்பையாய் இருக்கிறது?
என்று கேட்கத் தோன்றாது, காரணம்
அவற்றை இயல்பான வாழ்க்கையாக எடுத்துக் கொண்ட காரணத்தால் கூட இருக்கலாம்,
விசேட தினங்களில் தான்
வீட்டுக்கு புது சுவாசம் வரும், அது
வரைக்கும் அந்த தூசிக்குள் தான் நமது சுவாசக்காற்று அலைமோதும், வெளியுலகம் தெரியாத மனதில் எந்த எதிர்பார்ப்புகளும்
இல்லை, பெரிதான ஏக்கமும் இல்லை, ஆனால் காலமாற்றத்தில் நாம் கண்ட
ஒவ்வொரு சுத்தமான வீட்டை பார்க்கும் போதெல்லாம் நாமும் இப்படி இருக்க வேண்டும்
என்பதாக நினைத்துக் கொண்டே அது முடியாமல் தான் இன்று வரைக்கும் வாழ்க்கை ஓடிக்
கொண்டேயிருக்கிறது,
எப்போதும் நம் வீட்டை
சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதிறகுள் இன்று வரை இருந்து
கொண்டேயிருக்கிறது, வீட்டுக்குள்
இருக்கும் சின்ன ஒட்டடைகளை பார்த்து விட்டாலே போதும் நேரம் காலம் தெரியாமல் உடனே
குச்சியை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்ய தொடங்கி விடுவதுண்டு, ஆனால் ஓட்டடைகளை சுத்தம் செய்யத்
தொடங்கினால கடைசியில் அடுக்கி வைத்துள்ள அத்தனை மூட்டைகளையும் கலைக்க வேண்டியதாக
இருக்கும், எதையும் வெளியே தூக்கி போட முடியாமல் கடைசியில்
வீட்டுக்குள் பிரச்சனை தான் உருவாகும்,
வீடு முழுக்க முக்கால்வாசி புத்தகங்களாக அடைந்து கிடைக்கும்
போது எதை ஒதுக்கி எதை நீக்குவது என்ற குழப்பத்தில் மீண்டும் ஒவ்வொரு மூட்டைகளும்
இருந்த இடத்திற்கே சென்றுவிடும்,
ஆறாவது படிக்கும் போது
வாசிக்கத் தொடங்கிய வாழ்க்கையில் கல்லூரி படிப்பு படித்து முடித்த போது தான் காசு
கொடுத்து புத்தகங்கள் வாங்கும் பழக்கம் உருவானது, காசு கொடுத்து
புத்தகங்கள் வாங்குவது என்பது காசை பிடித்த கேடு என்பது வீட்டில் உள்ளவர்களின்
தராக மந்திரம், ஆனால்
புத்தக காதல் என்பது இன்று வரை மாறவில்லை,
என்ன கற்றுக் கொண்டோம்? இதனால் என்ன
பிரயோஜனம்? என்று எதைப்பற்றியும் யோசிப்பதில்லை, வாசிக்க வேண்டும் என்பது மட்டும் கொள்கையாக இருந்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும்
வைத்திருந்த கொள்கைகள் மாறியிருக்கிறது, ஆனால் இந்த புத்தக வாசிப்பு என்ற கொள்கை
மட்டும் தான் இன்று வரை மாறாமல் அப்படியே இருக்கிறது,
படக்கதைகளில் தொடங்கி,
கதைக்கு மாறி, சதைக்கு திரும்பி இன்று கட்டுரைகளில் வந்து நிற்கின்றது, வாசிக்கும்
விசயங்கள் தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டுருக்கிறதே தவிர புத்தகங்கள்
வாங்குவது இன்று வரை நின்றபாடில்லை, இடையிடையே வேலைப்பளூவின் காரணமாக
வாங்கி வரும் புத்தகங்களை படிக்க முடியாமல் மூலையில் கிடந்தாலும் அடுத்த வாரம்
கால்கள் இயல்பாக புத்தக கடைக்குச் சென்று விடுகின்றது, படிக்காமலேயே புத்தகங்கள்
இருக்கின்றேதே என்று மனம் கேட்பதில்லை, அடுத்த வார
புத்தகமும் வீட்டில் வந்து விழும்,
ஆனால் மொத்தமாக மெனக்கெட்டு ஒருநாள் உட்கார்ந்து படிக்கத்
தொடங்கும் போது கொடுத்த காசுக்கு பிரஜோனமில்லையே என்ற அங்கலாய்ப்பு மனதிற்குள்
இருந்தாலும் அதுவும் மாறிவிடும், அப்புறம் எப்போதும் போல ஏதோவொரு குப்பை பத்திரிக்கையை தலைப்பு பார்த்து
காசு கொடுத்து வாங்கி வந்து திட்டிக் கொண்டே தூக்கி எறிந்து விடுவதும் நடந்து
கொண்டு தான் இருக்கிறது,
நூலகத்திற்குள்
சென்றால் எவர் கையில் எந்த புத்தகம் இருக்கிறது என்பதை கண்டு பிடிப்பதே ஒரு பெரிய
சவாலான வேலையாக இருக்கிறது. அந்த
புத்தகத்தை எடுத்து எப்போது படித்து முடித்து வைப்பார் என்பதை கண்கொத்தி பாம்பாக
பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும், நம்மைப் போல மற்றொருவரும்
கவனித்துக் கொண்டுருப்பார். இத்தனை தொந்தரவுகளையும்
தாண்டி அந்த புத்தகத்தை கையில் எடுக்கும் போது சார் வேலை நேரம் முடிந்து விட்டது, பூட்டப் போகின்றோம் என்று நூலகர்
பக்கத்தில் வந்து சொல்லும் போது மனம் வெறுத்துப்
போய்விடும், இந்த பஞ்சாயத்துக்கு பயந்து கொண்டே வாரமானால் நூறு ரூபாயை ஒதுக்கி வைத்து
விடுவதுண்டு, அந்த
வாரத்தில் படிக்காத புத்தகங்களை மறுவாரத்தில் பார்க்கும் போது படிக்கத் தோன்றாது, இப்படியே கடந்து வந்த பாதையில்
என்ன சாதித்தோம் என்று யோசித்துப் பார்த்தால் குழப்பம் தான் அதிகம் மிஞ்சுகின்றது,
தொடக்கத்தில் படித்த
வாரபத்திரிக்கையில் முக்கியமான கட்டுரைகள், அற்புதமான துணுக்குத் செய்திகள் என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து
படித்து முடித்ததும் கத்திரித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது, அதற்கென்று ஒரு கோப்பு உருவாக்கி துறை வாரியாக பிரித்து வைத்துக்
கொள்வதுண்டு, இது
எதற்காக இப்படி செய்கின்றோம் என்பது தெரியாமலே பல வருடங்கள் செய்து கொண்டே
வந்துருக்கின்றேன், நாமும்
எழுதப் போகின்றோம் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை, ஆனால் சேகரித்த தாள்களை திடீர்
என்று கிடைக்கும் விடுமுறை தினத்தில் ஆர்வமாக ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கும்
போது என்சைக்ளோபீடியா போல நம் மனக்கண்ணில் பல பிம்பங்கள் விரியும், பல மனிதர்களின் மேல் வைத்திருந்த
அபிமானங்களும் மாறும், நம்மை குருடர்களாக, செவிடர்களாக, பைத்தியங்களாக நினைத்துக் கொண்டு பத்திரிக்கையில் அவரவர் அந்தந்த
காலகட்டத்திற்கேற்ப கொடுத்த பேட்டிகளை படித்து முடிக்கும் போது இவர் மேல் நாம்
இத்தனை அக்கறை கொண்டுருந்தோமா? என்று நமக்கே வெட்கமாக
இருக்கும்,
ஆரம்பத்தில் விரும்பிய
நடிகை, நடிகர்கள் காலவெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு மாறிய பிம்பங்கள் நமக்கு பல பாடங்களை உணர்த்தும், வட
நாட்டில் எவருக்கோ இரண்டாம் தாரமாகவோ அல்லது மறைந்து வாழும் வாழ்க்கையென்ற
வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் அந்த நடிகையின் மேல் நாம் கொண்டுருநத
அக்கறை இப்போது நமக்கும் கேலியாய் பார்த்து சிரிக்கும், என்ன செய்வது? மாற்றம் என்பது மாறாதது தானே?
நல்ல அலசல்...
ReplyDeleteஎன்ன நடந்தததோ அதையே உங்கள் பதிவு படிக்கும் போது ஏற்பட்டது...
டைரி கூட அப்படித்தான்... நான் எழுதியதே என்னை கேலியும் செய்தது... திருத்தவும் செய்தது...
நன்றி...
சிறப்பான அனுபவப் பகிர்வு என்னுடைய பல அனுபவங்கள்/ எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
ReplyDeleteஎன் வீட்டில் குப்பைகளே இல்லை சார் :-)
ReplyDelete