அஸ்திவாரம்

Saturday, September 17, 2011

நான் வெளிநாட்டு தமிழன் -- கதையின் தொடக்கம்


பிரிட்டீஷ் ஆட்சியின் போது அயல்நாடுகளுக்கு குடிபெயர்தல் என்பது தமிழகமெங்கும் பிரபல்யமாக இருந்தது. ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லத் துவங்கினர். சிலர் குறிப்பிட்ட காலம் பொருளீட்டி திரும்பி வந்து சமூக அந்தஸ்தில் உயர்ந்து இருந்தனர். இவர்களின் வீடுகளை வாழ்ந்த நாடுகளின் அடிப்படையில் ரங்கூன் வீடு, சிலோன் வீடு, பர்மா வீடு என்று பெயரிட்டு அழைத்தனர்.

இவர்களின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு பலருக்கும் அயல்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. இதற்கான அடிப்படைக் காரணங்களையும் வெள்ளை அரசாங்கமே மறைமுகமாக உருவாக்கியது.

இங்கு வாழ முடியாதவர்களும், வாழ வழியில்லாதவர்களுக்கும் இருந்தே ஒரே வாய்ப்பு இது போல பல நாடுகளுக்கு செல்லுதலே ஆகும்.

ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சி உருவாக ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடையத் தொடங்கின.  இதற்காகவே காலணி பகுதிகளை கைப்பற்றி, அங்கிருந்த மூலப் பொருட்களை கைப்பற்றுவது வரை தங்களுக்கான தொழில் கூடங்களை உருவாக்கத் தொடங்கினர். 

எல்லாநிலைகளிலும் தங்களுக்கான ஆதார வேர்களை உலகம் முழுக்க பரப்பத் தொடங்கினர். 

வெள்ளையர்கள் தாங்கள் கைப்பற்றிய நிலப்பகுதிகளை வளமாக்க அடிமைகளாகக் கொண்டு வந்த கருப்பின மக்களை பயன்படுத்திக் கொண்டனர்.  ஆனால் 1833 ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அடிமை வணிகம் தடைசெய்யப்பட ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருந்த அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அடிமைகள் மீண்டும் அந்த வாழ்க்கையை வாழத் தயாராய் இல்லை.

இந்த இக்கட்டான தருணத்தில் தான் இங்கிலாந்து அரசாங்கம் தங்கள் ஆளுமையில் இருக்கும் காலணி நாடுகளில் இருக்கும் மக்களை ஒப்பந்த கூலிகளாக தேவைப்படும் நாடுகளுக்கு வரவழைக்கத் தொடங்கினர்.  வெள்ளை அரசாங்கத்தின் எந்த திட்டமென்றாலும் நீண்ட காலம் பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும் எனபது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

இந்த நோக்கத்தில் தான் இந்தியாவில் பல மறைமுக திட்டங்களை பிரிட்டன் அரசாங்கம் நிறைவேற்றத் தொடங்கியது.

இந்தியா என்பது பிரிட்டன் பொருட்களை மட்டும் இறக்குமதி செய்யப்படும் நாடாக மாற்றப்பட்டது,  இங்குள்ள எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாகவே இங்குள்ள தொழில்கள் நசிவுறத் தொடங்கின. சிறு தொழில்களை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தெருவுக்கு வரத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக ஆங்கிலேய அரசாங்கம் போட்ட நிலவரிக் கொள்கையும் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்தவர்களையும் பாதிக்கத் தொடங்கியது.

அதிகமாக விளையும் நிலங்களுக்கு வரியை அதிகமாக்கினர்.  விளைபொருட்களைப் பொறுத்து மூன்றில் ஒரு பங்கை வரியாக அதையும் பணமாக செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தனர்.  விளையாத நிலங்களுக்கும் வரி என்ற பெயரில் அடாவடி வசூல் செய்தமைக்கு முக்கிய காரணம் செயற்கையான பஞ்சத்தை உருவாக்கினர்.

வெள்ளையர்கள் உருவாக்கிய பஞ்சத்திற்கான திட்டமிடுதல் நன்றாக வேலை செய்யத் தொடங்கியது.  வட்டிக்கு வாங்கி வரியாக கட்டியவர்கள் ஒரு அளவுக்கு மேல் செயல்படமுடியாமல் முடங்கிப் போகத் தொடங்கினர்.

அடிமை சட்டத்தை நீக்குதலை நிறைவேற்றிய வெள்ளையர் அரசாங்கம் 1861 ல் இந்திய குற்றவியல் சட்ட திட்டத்தை அறிமுகம் செய்தது.  அடிமைகளை வைத்திருப்பவர்கள் மேல் கடும் தண்டனை என்று அறிவிக்க பண்ணையடிமைகளாக இருந்தவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினர்.  ஆனால் பண்ணையடிமைகள் சுவாசித்த சுதந்திரக் காற்றே குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் அவர்களின் மூச்சை நிறுத்தவும் வைத்தது.  காரணம் ஆண்டில் 6 மாத காலமே விவசாயப் பணிகள் இருக்கும்.  வறட்சி காலங்களில் எந்த பணியும் இருக்காது.  வறட்சி காலங்களில் ஆதரித்த நிலபிரபுகளும் இப்போது சீந்துவார் இல்லாமல் போக பண்ணையடிமைகளுக்கு இருண்ட வாழ்க்கை அறிமுகமாகத் தொடங்கியது.

பண்ணையடிமைகளுக்கு உருவான பாதக சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் வெள்ளையர்கள்.  வெள்ளையர்கள் தாங்கள் உருவாக்க நினைத்த காபி, தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பத் தொடங்கினர்.  1917 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு அறிக்கையின்படி பள்ளர், பறையர்,அருந்ததியர், படையாட்சி  ஆகிய ஓடுக்கப்பட்ட இனத்தினரே அதிக அளவில் புலம் பெயரத் தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குடநாடு, கூர்க், மைசூர், நீலகிரி, ஆனைமலை போன்ற பகுதிகளில் உருவாக்கப்பட்ட தோட்டங்களிலும் நிலமற்ற ஏழை மக்களை கூலியாக மாற்றி குடியமர்த்தத் தொடங்கினர்.  சென்னை வழியாக ஸ்ரீலங்கா, பர்மா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, மொரிசியஸ், ரீயூனியன் மேற்கிந்திய குடியேற்றங்களை கர்மசிரத்தையாக நடந்தேறத் தொடங்கியது.

1876 ல் உருவான தாதுப் பஞ்சம் தமிழ்நாட்டை புரட்டிப் போட்டது. பல்வேறு சாதியினரும் வெளியேறத் தொடங்கினர்.

1875 ஆம் ஆண்டுக்கு முன்னால் வருடத்திற்கு ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் வெளியேறத் தொடங்கினர். ஆனால் இருபதாம் ஆண்டு முடிவதற்குள் ஒவ்வொரு ஆண்டும் 2,50,000 பேர்கள் புலம் பெயரத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் அதிக அளவு மக்கள் பல நாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். காரணம் இதே காலகட்டத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனியின் கைககளில் தமிழ்நாடு வந்தது

இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மிட்டா, மிராசு, ஜமீன்தார்கள்கள் கட்டுப்பாட்டில் உள்ள பண்ணையடிமைகளை ஆங்கிலேர்கள் ஒப்பந்தக்கூலிகளாக அயல்நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கினர்.


ஜாவா, சுமத்ரா போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளை வளமான கரும்பு வயல்களாக மாற்றியவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களே. தமிழர்கள் சென்ற நாடுகள் ஒவ்வொன்றும் வளம் கொழிக்கத் தொடங்கியது.  ஆனால் சென்ற இடங்களிலும் எந்த அடிப்படை உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் அவதிப்பட்டவர்களும் தமிழர்களே. வெள்ளையர்கள் தமிழர்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலணி நாடுகளுக்கு அனுப்ப முக்கிய காரணங்களில் சில இருந்தது. 

மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளிலும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள், எதற்கும் எதிர்ப்பு காட்ட துணியாதவர்கள், பல காலம் அடிமைகளாகவே வாழ்ந்தவர்கள் போன்ற காரணங்களே முக்கியமானதாக இருந்தது.

இந்தியாவில் வடக்கே நாக்பூர் முதல் தெற்கே கன்யாகுமரி வரையிலும் உள்ள லட்சக்கணக்கான கிராம மக்களை பிரிட்டீஷ் அரசாங்கம் ஒப்பந்தக்கூலிகளாக அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

1820 ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள் தொகை அபரிமிதமாக பெருகத் தொடங்கியது. ஆனால் இணையாக உணவு உற்பத்தி பெருகவில்லை. பற்றாக்குறையும், விலையேற்றமும் அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது.  வறுமையாலும், நீக்க முடியாத நோய்களாலும் வாடத் தொடங்கினர்.  அடுத்தடுத்து வந்த பஞ்சமும், தட்டுப்பாடுகளும் ஒவ்வொருவரையும் புலம் பெயர வைத்துக் கொண்டிருந்தது.

ஓடுக்கப்பட்ட மக்கள் ஊருக்குள் நடமாட முடியாது.  பொது கிணற்றை பயன்படுத்த முடியாது.  சொந்த நிலம் வாங்க முடியாது. கல்வி கற்க முடியாது.  எல்லாவற்றிலும் தடை என்று உருவாக்கப்பட்ட காரணமே அவர்களை எந்த பக்கமும் நகர முடியாத அளவிற்கு நரக வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது. 

சாதி அடிப்படையிலே ஒவ்வொருவரும் தங்கள் தொழிலை பார்க்கவேண்டியதாக இருந்து.  நாவிதர், ஒட்டர், கல்தச்சர், ஆசாரி, குயவர், கொல்லர், கம்மாளர், வேளாளர் என்று அவரவர் பணியால் மட்டுமே அவர்களின் ஜாதி முன்னிலைப்படுத்தப்பட்டு அந்த தொழில் மட்டுமே பார்க்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர்.

வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த சாலை வசதிகளும், பிற வசதிகளுமாய் அருகே இருந்த துறைமுகங்களுக்கும், சிறு நகரங்களும் ஒவ்வொருவரையும் நகர வைத்துக் கொண்டிருந்தது.  மதுரை, திருநெல்வேலியைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மண்டபம், தூத்துக்குடி வழியாக இலங்கைக்குச் செல்லத் தொடங்கினர்.  இதைப் போலவே தென் ஆற்காடு, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மக்கள் நாகபட்டிணம் வழியாக மற்றும் சென்னை வழியாக வெளியேறத் தொடங்கினர்.

விவசாய பணிகள் இல்லாத மார்ச் முதல் ஜுலை மாதங்கள் வரை மற்ற நாடுகளில் பணிபுரிந்து உள்ளே வந்த ஓடுக்கப்பட்ட இன மக்களின் வசதி வாய்ப்புகளைப் பார்த்து மற்றவர்களும் பொருளீட்டும் ஆசை உந்தித்தள்ள அவரவரும் விருப்பம் போல பல நாடுகளுக்கும் நகரத் தொடங்கினர்.

ஆனால் பல ஆண்டுகளாக தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் இருந்து மீள முடியாத சிந்தனைகளில் இருந்த மக்களை கூலிகளை அயல்நாடுகளுக்கு அனுப்பும் கங்காணிகள் ஆசை வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தனர். தங்குமிடம், சாப்பாடு இலவசம். குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும் பொருளீட்ட முடியும் என்பது போன்ற பல சாகச வார்த்தைகளைக் கூறி வளமாக வாழ இந்த வாய்ப்பு என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.


பல்லாயிரக்கணக்கான தொலைவில் உள்ள அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்கம், ஆப்ரிக்காவின் தொன் பகுதிகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பிஜி தீவுக்கூட்டங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கு கூலிகளாக அனுப்பி வைக்கப்பட்டனர்.  சிலர் மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருளீட்டி தாயகத்திற்கு திரும்பி வந்தனர். பெரும்பாலோனார் அங்கேயே தங்கள் வாழ்க்கையை வாழத் துவங்கினர்.

பிரிட்டீஷ் ஆட்சியில் போது தமிழர்கள் பெருமளவில் குடியேறியது சிங்கப்பூரில் தான்.  ஆங்கிலேயர்களின் இந்த குடியேற்ற நாட்டை ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மெண்ட்ஸ் என்றழைக்கப்பட்டது. 1815 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு தோட்டத் தொழிலாளர்களை அனுப்பி வைக்க தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் முயற்சித்த போது அது தோல்வியில் தான் முடிந்தது.  அதன் பிறகே ஆட்களை திரட்டும் தரகர்களின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியது. 1828 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் உள்ள தோட்டங்களில் பணிபுரிய முதல் முறையாக 150 கூலிகள் ஓப்பந்த அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு உருவாக்கப்பட்ட காபி தோட்டங்களுக்கு 1939 முதல் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.

சர்க்கரைத்தீவு என்றழைக்கப்பட்ட மொரீசியசுக்கு 1819 ஆம் ஆண்டு முதல் இந்தியர் போகத் தொடங்கினர். ஆனால் தோட்டத்தில் பணிபுரிய ஒப்பந்தக் கூலிகளாக 1834 ஆம் ஆண்டு முதல் தான் பெருவாரியாக கல்கத்தா துறைமுகத்தின் வழியாக செல்லத் தொடங்கினர்.  இந்த ஆண்டு மட்டும் 7000 பேர்கள் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து 1838 ல் இரு கப்பல்களில் 400 பேர்கள் பிரிட்டீஷ் கயானாவிற்கும், 1844 ல் டிரினிடாட், 1845 ல் ஜமாய்கா போன்ற நாடுகளுக்கும் செல்வது தொடர்ச்சியாக நடக்கத் தொடங்கியது.

ஆறு மாதங்களுக்குரிய ஊதிய முன்பணம், உடைகள், உணவு என்பதற்காக ஒவ்வொரு ஒப்பந்தகூலிக்கும் 10 பவுண்டுகள் செலவிடப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்த அடிமைகள் கொண்டுவரப்பட்ட அவலத்தைப் போலவே இந்த ஒப்பந்தக்கூலிகளும் நடத்தப்பட்டது. இந்த கொடூர வாழ்க்கையில் உயிர் இழந்தவர்களும், தப்பி வர முயன்ற போது சிறையில் அடைக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் அநேகம் பேர்கள்.

1837 ஆம் ஆண்டு குடிபெயர்வுச் சட்டம் அமுலுக்கு வந்தாலும் பிழைப்புக்காக சென்றவர்களின் அவல வாழ்க்கை மட்டும் முடிவுக்கு வந்தபாடில்லை. கல்வியறிவற்ற அடித்தட்டு மக்களுக்கு தாங்கள் செல்லும் நாடுகளின் பூகோள அறிவோ, செல்லக்கூடிய நாட்டின் தூரம் குறித்தோ எந்த அறிவும் இல்லாமல் ஆசை வார்த்தையின் அடிப்படையில் நகர்ந்து சென்று அல்லல்பட்டர்வர்களில் அநேகம் பேர்கள்.தமிழர்களே, 


தமிழ்நாட்டுக்குள் தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த இழிநிலையை மாற்றிக் கொள்ள வாய்ப்பாக புலம் பெயர்தலை கருதிக் கொண்டனர்.  ஆனால் காலம் அவர்களை பண்ணையடிமையில் இருந்து இழிமக்கள் என்ற தகுதியை உருவாக்கி அவ்வாறே தென் ஆப்ரிக்காவில் குடியேறிய மக்களை வெள்ளையர் அரசாங்கம் அரசாங்க ஆவணத்திலும் இடம் பிடிக்க வைத்தது.

உள்ளூரில் பண்ணையடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேறொரு பெயர் உருவானது. கூலி என்றே அழைக்கத் தொடங்கினர்.  பெயர் மட்டும் தான் மாறியதே தவிர இவர்களின் அவல வாழ்க்கை மாறவில்லை. இவர்களின் சமூக அந்தஸ்த்து உயரவில்லை.

தென்னாப்பிரிக்காவில் கூலிகளை சுவாமி என்றே அழைத்தனர்.  இந்து மதத்தில் கடவுளைக் குறிப்பிடும் இந்த சொல் இழிசொல்லாக மாறியது.  இங்கிருந்து செல்லும் ஒவ்வொரு தமிழரின் பெயரும் முனுசாமி, மாரிச்சாமி, பழனிச்சாமி என்று சாமியில் முடிய இந்த பெயரையே பயன்படுத்தத் துவங்கினர். மொத்தத்தில் வெள்ளையர்கள் தமிழர்களை ஒட்டு மொத்தமாக சுவாமி என்றே அழைத்தனர்.

வெள்ளையர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டில் சென்னை மாநிலமென்பது மிக பெரிதாக இருந்தது. இப்போதுள்ள கேரளாவின் மலபார் மாவட்டம் வரைக்கும் ஒன்றாக இருந்தது. இதற்குள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, ஆகிய மொழி பேசுவோர்கள் இருந்தாலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் இருந்து தான் அதிக புலம் பெயர்தல் நடக்கத் தொடங்கியது.  சென்னை துறைமுகத்தின் வழியாக புலம் பெயர்ந்தோர் பெரும்போலோனார் தமிழர்களே. அக்காலத்தில் மலையாளிகள் புலம் பெயர்வதில் அதிக அக்கறை காட்டவில்லை.  தெலுங்கு மக்கள் அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கும், பர்மாவிற்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கையில் உள்ள தோட்டத்தில் பணிபுரிய தேவைப்படும் ஒப்பந்தக்கூலிகளை முறைப்படுத்தப்பட்ட சட்டத்தின் படி உருவாக்க முதல்முறையாக திருச்சியில் 1904 ஆம் ஆண்டு சிலோன் தொழிலாளர் ஆணையம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. வெள்ளையர்கள் முக்கிய பதவியிலும், தோட்டத்தின் சார்பாளர்களுக்கிடையே இங்குள்ளவர்கள் பணியாளர்களாகவும் இருந்தனர்.

இந்த ஆணையத்திற்கு முதல் முறையாக பொறுப்புக்கு வந்த நார்மன் ரோசல் என்பவ்ர் கங்காணி முறையில் ஆள்திரட்டும் புனிதப்பணியை துவங்கினார்.

சென்னை மாநில அரசின் உத்தரவின்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இவர்களுக்கு உதவி புரிந்தது.  இந்த காங்காணிகளுக்கு பெரிதான முன் அனுபவம் தேவையில்லை.  என்னவொன்று இவர்கள் ஏற்கனவே இலங்கையில் ஏதோவொரு தோட்டத்தில் பணிபுரிந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை கங்காணி என்ற பெயரில் ஆள் திரட்ட (ஆள் பிடிக்க) ஏற்பாடு செய்யப்பட்டது.  தமிழ்நாட்டிற்குள் வந்து சேரும் கங்காணிகளுக்கு தேவைப்படும் செலவுத் தொகையையும் இவர்களின் அடையாளத் தகடுகளும் ஆணையத்தில் இருந்து பெற்றுக் கொள்வர்.  இவர்கள் ஒரு குழுவாக ஆட்களை சேர்த்த பிறககு தட்டப்பாறைக்கோ மண்பத்திற்கோ அழைத்துச் செல்வர்.

நாள்பட இந்த தொழிலாளர் ஆணையம் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட இந்த ஆணையத்தில் கங்காணிகள் உதவியின்றி நேரிடையாக வந்து சேர வசதிகளையும் உருவாக்கப்பட்டது. மண்டபம் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து தனுஷ்கோடி அல்லது தலைமன்னாருக்கு அழைத்துச் சென்று இறுதியாக இலங்கைக்குள் கொண்டு சேர்த்தனர்.  இடையிலே எவரும் தப்ப முடியாத அளவிற்கு கெடுபிடியாக இதற்கென்று பயிற்சியில் இருக்கும் காவல்ர்கள் இருந்தனர்.

1917 ஆம் ஆண்டு இலங்கை தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் சம்பளம் ஆணுக்கு 8 முதல் 10 சென்ட்.  பெண்களுக்கு 4 முதல் 6 சென்ட் வரைக்கும் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கு 3முதல் 5 சென்ட் வரைக்கும் கொடுக்கப்பட்டது.


1886/87 வறட்சி வருடங்களில் சேலம் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நடைபயணமாக திருச்சியில் இருந்த சிலோன் தொழிலாளர் ஆணையத்திற்குச் சென்று தங்களை குடிபெயர பதிவு செய்து கொண்டனர். முறைப்படி பதிவு செய்யாமல் கள்ளத்தோணி மூலம் சென்றவர்கள் இதை விட பல மடங்கு அதிகம்.  1931 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்த இந்திய வம்சாளி மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாகும். 

13 comments:

  1. விபரம் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அற்புதமான செய்திகள்.அருமை .பகிர்வுக்கு நன்றி.தொடருங்கள் ...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. என்ன பாதியிலே முடிஞ்சுட்டேன்னு மறுபடி தலைப்பை பார்த்தா தொடர்...தொடருங்கள் ...

    ரெவெரி

    ReplyDelete
  4. :( thankx for sharin..post more ;)

    ReplyDelete
  5. அவசியமான கட்டுரை! நன்றி ...
    தொடருங்கள்

    ReplyDelete
  6. வரலாறு மறந்து
    இழிநிலை அடைந்த
    இனத்திற்கு, இலவசமாய்
    “தன் இன வராலாறு” புகட்டும்
    ஜோதிஜி -க்கு
    என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. தற்போது மொழி மறந்து பெயரில் மட்டும் தமிழ்ர்களாய் வாழும் தூர தேச தமிழர்களின் வரலாற்றின் வறண்ட பக்கங்களை தோண்டியெடுத்து படைத்து வரும் அற்புத பணியை தொடருங்கள்.

    ReplyDelete
  8. தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  9. அருமையான பதிவு. தமிழ்நாட்டுத் தமிழ்ஹர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி. இப்படி குடியேறியவர்கள் ஃப்ரான்சுக்கு சொந்தமான திவுகளில் சுமார் 5 லட்ச்ம் பேர் ஃப்ரென்ச்சு குடியுரிமையுடன் வாழ்கிறார்கள். தமிழை மறந்தாலும் தமிழ்ப்பண்பாட்டை மறக்கவில்லை. சமீபத்தில் அங்கு நான் எடுத்த கட்சிப் படங்கள்.

    https://www.facebook.com/video/video.php?v=153911714677050

    https://www.facebook.com/video/video.php?v=153974891337399

    ReplyDelete
    Replies
    1. Good one Vijay. Had the joy of visiting your Facebook pages with all those pictures. Hopefully now with improved communication and skype/internet, more exchanges of language/culture is made possible. Amazing how during these centuries with almost no contact, Tamil culture has been maintained and nourished.

      Delete
  10. விஜய்

    இளமையான பெயரை வைத்து இருக்கீங்க. உங்கள் வயதை யூகிக்க முடியல. பெரும்பாலும் பிரான்ஸ் அருகே ரீ யூனியன் தீவுக்கு அருகே இருப்பீங்கன்னு நினைக்கின்றேன். படங்களைப் பார்த்தேன்.

    தொழில் ரீதியான சிலரின் நெருக்கமான தொடர்புகள் உண்டு. இந்த தீவுகளில் உள்ளவர்கள் சென்ற வருடம் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு வந்த போது தொலைபேசியில் அழைத்து பேசினார்கள். அவர்களின் குழும படங்களை அங்குள்ள நிகழ்ச்சி படங்களை அனுப்பி வைத்தார்கள். கலாச்சாரம் அப்படியே இருக்கிறது. எழுத்து மொழி மட்டும் சற்று மாறியுள்ளது. அதிகமாக பிரெஞ்ச் மொழி தென்படுகின்றது. ஆனால் அவர்கள் பேசும் போது மிகத் தெளிவாக நல்ல தமிழில் பேசினார்கள்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  11. I think almost all of the emigrants descendents have done well. V.S.Naipaul, whose ancestors left Bihar in the 1800s, visited his ancestral village (as described in India An Area of Darkness). The first question his distant relatives asked was, why his ancestors had not sent money for their ship journey too? They were all poorly off and Bihar is still what it was a few centuries ago - poor starving and not pleasant to live.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எழுதியதை வைத்து விவரித்து தொடர் போல எழுதலாம் போலிருக்கே.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.