அஸ்திவாரம்

Thursday, February 24, 2011

பணம் வந்தால் பல்லாக்கு தேவைப்படும்

ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் செயல்பாடுகள் எப்போது மாறத் தொடங்கின்றது?  பொருளாதார ரீதியாக வளரும் போது அல்லது தன்னிறைவு நிலைக்கு அடையும் போது அவரவரின் சிந்தனைகளும் மாறத் தொடங்குகின்றது.  இதுவே தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஏறக்குறைய இவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாக இருக்கிறது.  முதலில் பொருள் தேடி அலைய வேண்டிய நிலையில் இருந்தனர். பொருள் சேர்க்கத் தொடங்கிய போது அதை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.  தொழிலில் வளர்ந்த நிலைக்கு வந்த பிறகு சமூகத்தில் தங்களின் இழிநிலையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.  இந்த சமயத்தில் தான் இவர்களின் பொருளாதார பலம் பலவிதங்களிலும் உதவியது என்பதோடு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.  

செல்வத்தை சேகரிக்க ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டிருந்த நாடார் இன மக்களுக்கு தங்களது இனப் பெருமை குறித்து கவலை ஏதும் வந்து விடவில்லை.  ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் செல்வந்தராக, மதிப்பு மிக்க வியாபாரிகளாக மாறிய போது தங்களுக்கான அடையாளங்களையும் அவரவர் பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து மாற்றிக் கொள்ளத் தொடங்கினர்.  

தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் உருவாக்கிய மாற்றங்கள் இவர்கள் வாழ்விலும் பல அடிப்படை விசயங்களை மாற்றத் தொடங்கியது.எண்ணங்கள் மாறத்தொடங்க   பிணங்களை புதைத்துக் கொண்டிருந்தவர்கள் எறிக்கத் தொடங்கினர், கனமான உலோகப் பொருட்களை காதுகளில் அணிந்த பெண்கள் சிறிய அளவில் நாகரிகமாக தங்க ஆபரணங்களை அணியத் தொடங்கினர். 

தொடக்கத்தில் இந்த இன பெண்களின் காது மடல்கள் தோள்பட்டை வரைக்கும் நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.  இந்த நீட்சியின் அளவு பொறுத்து இதையும் ஒரு பெருமையாக சொல்லப்பட்டது. ஒவ்வொரு பழக்க வழக்கமும் வெவ்வேறு காலகட்டத்தில் மாறத் தொடங்க இவர்களின் பேச்சு, செயல்பாடுகளும் நாகரிகம் என்ற போர்வையில் மாறத் தொடங்கியது.

1860 ஆம் ஆண்டு பார்ப்பனர்களை போலவே வேட்டி கட்டவும், குடுமி வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர். தலையில் எடுத்துக் கொண்டு செல்லும் தண்ணீர் பானைகளை இடுப்பில் கொண்டு செல்ல அதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது. ஆனால் இதிலும் இவர்களின் புத்திசாலித்தனம் ஆச்சரியமானதே.  தாங்கள் உருவாக்கிய குளம் மற்றும் கிணறுகளில் பெண்கள் எடுத்துச் செல்லும் பானைகள் இடுப்பில் வைத்து கொண்டு செல்கிறார்களா என்பதை கவனிக்க தனியாக ஒரு ஆளை நியமித்து கண்காணிக்கத் தொடங்கினர்.  இதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது.

பலரும் சைவத்திற்கு மாறத் தொடங்கினர். சமஸ்கிருத பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டத் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் முற்பட்ட சாதியினரைப் போல கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லாவிட்டாலும் கூட பல கோவில்களுக்கு செல்வந்தர்கள் தான தர்மங்களை வழங்கினர்.  இதன் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களுக்கு கோவில் சார்ந்த பணிவிடைகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதை மிகப் பெரிய கௌரவமாக கருதினர். இதன் தொடர்ச்சியாக பிராமணர்களைப் போலவே பூணுல் அணிந்து கொள்ளத் தொடங்கினர். 


இந்த பூணூல் இப்போது அழைத்துக் கொண்டிருக்கும் பெயரான ஷத்திரியர்களுக்கு உரிய கௌரவமாகவும், மறுபிறவி அடையக்கூடிய அம்சமாகவும் கருதிக் கொண்டனர். ஆனால் இந்த எண்ணங்கள் எங்கிருந்து வந்தது? எவரால் உருவாக்கப்பட்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் பிராமணர்கள் இந்த நாடார்களின் வாழ்க்கையில் மதச் சட்ங்களுகள் செய்வதும், உபநயன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொருளீட்டுவதும் நடக்கத் தொடங்கியது. 

திருச்செந்தூர் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பொருளாதார ரீதியாக உயர்ந்த நாடார் இனமக்கள் திருமண வைபோகங்களில் பல்லாக்குளை பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்தது. இது உயர்குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே என்பதாக இருந்தது. தங்கள் செல்வ நிலைப்பாடுகளை சமூகத்திற்கு காட்ட மறவர்களை பல்லாக்கு தூக்கியாக பயன்படுத்திக் கொண்டனர். 

இது போன்ற பல சமூக மாறுதல்கள் நாடார்கள் தங்கள் ஷத்திரியர்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்பது மெதுமெதுவாக ஆலமர விழுதுகள் போல் பரவத் தொடங்கியது. இந்த மாறுதல்கள் எங்கே கொண்டு போயநிறுத்தியது தெரியுமா? 

1874 ஆம் ஆண்டு மதுரை நாடார்கள் தங்களது ஆலய நுழைவு உரிமைக்காக மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மேல் கிரிமினல் வழக்கொன்றை மூக்கன் நாடார் என்பவர் தொடர்ந்தார். கோவிலுக்குள் நுழைந்த என்னை பலாத்காரமாக வெளியே தள்ளிக் கொண்டு வந்து துணிக்கடை நிறைந்த பகுதியில் நிறுத்தி அவமானப்படுத்தினார்கள் என்று வழக்கில் சொல்லியிருந்தார். எங்களுக்கு ஆலயங்களில் உள்ளே நுழைய எழுத்துப் பூர்வ அனுமதி வேண்டும் என்றார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாடார்கள் ஆலய உள் நுழைவுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதே போல 1876 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகாவில் திருத்தங்கல் என்ற இடத்திலும் நடந்தது.   இதுவும் தோற்றுப் போனது. 

முறைப்படி 1878 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் திருத்தங்கலில் உள்ள நாடார்கள் ஆலயங்களில் உள்ளே நுழைவதற்கும், தெய்வங்களுக்கு தேங்காய் உடைப்பதற்கும் தடை என்ற சட்டத்தை அமுல்படுத்தியது. ஆனால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி நாடார் இன மக்கள் தெருக்களைச் சுற்றி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதுவே சாத்தூர் பகுதியில் உள்ள நாடார்கள் தெருக்களில் ஊர்வலம் நடத்த அங்குள்ள உயர்சாதியினரும் ஜமீன்தாரர்களும் அனுமதி கொடுக்காமல் எதிர்த்து நின்றனர்.

இந்த கோவில் விவகாரம் தான் திருநெல்வேலியில் வடக்குப் பகுதியில் உள்ள நாடார்களுக்கும் மறவர்களுக்கும் பகைமையுணர்ச்சியை உருவாக்கிய கலவரமாக மாறியது. கலவரத்தில் (1887) நான்கு மறவர்களை ஒரு நாடார் கூட்டம் கொலை செய்ததாக காவல்துறை அறிக்கை தெரிவிக்க ஏராளமான நாடார்களை கைது செய்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியபோதும் வலுவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வெளியே வந்தனர்.  ஆனால் மறவர்கள் மூன்று நாடார்களை கொலை செய்து கணக்கை நேர் செய்தனர்.

இது போன்ற பகைமையுணர்ச்சி இந்த மாவட்டத்தின் சகல இடங்களிலும் பரவி இருந்தது.  ஆனால் நாங்கள் உங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்றோம் என்றவர்களைப் போலவே நாடார் இன மக்களும் எங்களை சமஉரிமை மனிதர்களாக அங்கீகரிக்க வைக்கும் வரையிலும் ஓய மாட்டோம் என்று ஒவ்வொன்றாக செய்து கொண்டே வந்தனர். 

இதன் தொடர்ச்சியாக 1898 ஆம் ஆண்டு சிவகாசி நாடார்களின் தலைவர் செண்பகக்குட்டி இனி நாடார் இன மக்கள் அத்தனை பேர்களும் பூணூல் அணியுங்கள் என்றார். நாம் பிரமாணர்களின் தகுதிக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்று புரியவைத்தார். இப்படி சொல்லியதோடு மட்டுமல்லாமல் நாடார்கள் ஒவ்வொருவரும் பிராமணர்களைப் போலவே தினந்தோறும் குளிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். கோவிலுக்கு அருகே குளியல் வசதியுடன் கூடிய நந்தவனம் உருவாக்கப்பட்டது. 

இத்துடன் ஆச்சரியப்படக்கூடிய சமாச்சாரம் தாங்கள் உருவாக்கிய அம்மன் ஆலயங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த நாடார் பூசாரியை நீக்கிவிட்டு சிவகாசி நாடார்களுக்கென்று பிராமணர் ஒருவரை திருச்சிக்கு அருகேயிருந்த கோவிலில் இருந்து வரவழைத்தார். 

1911 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுத்த அதிகாரியான மாலினி என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

"நாடார்கள் மாட்டிறைச்சியை உணவாகக் கொள்ளாமையால் அவர்கள் ஷத்திரியர்கள் என் அழைக்கபடுகின்றனர்"


காரணம் 1860 ஆம் ஆண்டு தங்களை ஷத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்றனர். 1891 கணக்கெடுப்பில் தங்களை ஷத்திரியர்கள் என்று பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 24000 பேர்கள். ஆனால் இதுவே படிப்படியாக பல இன்னல்களைத் தாண்டி வந்து 1911 ஆம் ஆண்டு இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை போன்ற பகுதிகளில் வாழ்ந்த இந்த ஷத்திரியார்களின் எண்ணிக்கை 63 சதவிகிதமாக உயர்ந்து தாங்கள் விரும்பிய ஷத்திரியர் என்ற பெயரையே அரசாங்க குறிப்பேடுகளில் நிலைபெற வைத்தனர். இவர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாக முன்னேறி ஜனத் தொகையும் பலமடங்கு பெருகியிருந்தைப் போலவே தாங்கள் விருப்பப்டியே மாற்றிக் கொண்டதும் ஆச்சரியமே..

27 comments:

  1. ஆச்சர்யப் பட வைக்கும் மாறுதல்கள்! எங்கே இருந்து இவ்வளவு தகவல்கள் பிடிச்சீங்க? :-)

    ReplyDelete
  2. தகவல்களை திரட்ட நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பது உங்கள் பதிவில் தெரிகிறது... எவ்வளவு தகவல்கள்... அருமை அண்ணா.

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள்...

    ReplyDelete
  4. தகவல்களை திரட்ட நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பது உங்கள் பதிவில் தெரிகிறது..உங்களின் உழைப்பு அபாரம்..

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_24.html

    ReplyDelete
  5. அடையாளம் தெரியாமல் இருப்பதை (இருப்பவர்களை)அடையாளப்படுத்துவது காசு தான்.

    அடையாளப்படுத்தியதை ஒன்றும் இல்லாமல் செய்வதும் காசு தான் அன்பின் ஜோதிஜி.(அகங்காரம்)விளைவாய் பல குழப்பங்கள் உருவாகும். படிப்பவன் கற்றுகொள்வான் காத்துக்கொள்வான். பின் தொடர்பவன் அழிந்துபோவான்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
    நான் இன்னும் சில புத்தகங்கள் அனுப்புகிறேன். நன்கு படித்து எழுதி முடித்து விட்டு தயவு செய்து திருப்பி அனுப்பி விடுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  7. தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

    யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

    ==>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <==

    .

    ReplyDelete
  8. மிக அபூர்வமான தகவல் திரட்டு .

    ReplyDelete
  9. இப்படி சொல்லியதோடு மட்டுமல்லாமல் நாடார்கள் ஒவ்வொருவரும் பிராமணர்களைப் போலவே தினந்தோறும் குளிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.//

    ஹாஹ்ஹா:))))))

    எப்படியெல்லாம் வரலாறு ?

    ReplyDelete
  10. //தொழிலில் வளர்ந்த நிலைக்கு வந்த பிறகு சமூகத்தில் தங்களின் இழிநிலையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். //

    ஆம்,ஜோதிஜி மனிதன் உணவு,உடை,இருப்பிடம் போன்றவற்றில் தன்னிறைவடைந்த பிறகு மற்றவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவனுடைய செயல்கள் இருக்கின்றன.அதை சிறப்பாக பதிவு செய்துள்ளீர் .

    ReplyDelete
  11. ஈட்டி எட்டின வரை பாயும்;
    பணம் பாதாளம் வரை பாயும்
    என்பதற்கு வாழும் உதாரணம்....

    ReplyDelete
  12. படிப்படியாக நடந்த மாற்றத்தினை எளிமையாக புரியும்படி எழுதியுள்ளீர்கள், நன்றி சார்

    ReplyDelete
  13. //ஆனால் மறவர்கள் மூன்று நாடார்களை கொலை செய்து கணக்கை நேர் செய்தனர்.
    //

    இது சரியான சொல் பிரயோகமா? சாதி வெறி சம்பவங்களை கணக்கு தீர்த்தல் என்ற கோணத்தில் அணுகாதீர்கள்.ஒரு பொதுவான பார்வையில் வருதல் நலம்.நீங்கள் இன்னொரு (எதிர்) பக்கத்தில் இருந்து எழுதுவதைப் போன்ற தோற்றத்தை இது உருவாக்குகிறது.

    ReplyDelete
  14. POTHUVAAGA NAADAARKAL BRAMIN SASTHIRI KALAI THIRUMANAM PONDRA SUBA KAARIYANGKALUKKU ALAIP PATHILLAI

    ReplyDelete
  15. "பிராமணர்கள் இந்த நாடார்களின் வாழ்க்கையில் மதச் சட்ங்களுகள் செய்வதும், உபநயன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொருளீட்டுவதும் நடக்கத் தொடங்கியது.

    இன்றும் அதுதான் நடக்கிறது. வருமானத்திற்காக எதையும் மீறத்தயாராய் இருப்பதே பார்ப்பனீயத்தின் பண்பு. சேரிப் பக்கம் திரும்பிக்கூட பார்க்காதவர்கள் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டு விசேசங்களுக்கு பூஜை புனஸ்காரம் செய்யத் தயங்குவதில்லையே. இது போலத்தான் அன்றும் நடந்துள்ளது.

    ஒடுக்கப்பட்ட சாதியினரும் தந்களை மேனிலைப்படுத்திக் கொள்ள பூஜை புனஸ்காரங்களை பார்ப்னர்களையே விஞ்சும் வகையில் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

    ஒடுக்கப்பட்டவர்களே பார்ப்பனியமயமாகி வரும்போது பார்ப்பனியத்தை ஒழிப்பது மேலும் கடினமாகி வருகிறது.

    ReplyDelete
  16. நல்ல கட்டுரை. இன்னும் கொஞ்சம் ஆதரங்களையும் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒட்டு மொத்த கலாசார உருமாற்றங்களுக்கும் பிராமணர்கள் காரணகர்த்தாக்கள் தான். ஆனால் அன்றைய சமூக பொருளாதார நிர்பந்தங்களையும் ஆவணபடுத்தவேண்டியது அவசியம் என்பது எனது கருத்து

    ReplyDelete
  17. செந்திலான் ஆதரவு எதிர்ப்பு விருப்பம் என்ற நோக்கத்தில் எதையும் எழுதவில்லை. அந்த சொல் பிரயோகம் நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு மறுபடியும் யோசித்துப் பார்க்கின்றேன். வெறி உருவாகும் போது எந்த மனிதனாக இருந்தாலும் இது போன்று தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டவே இந்த வாசகத்தை பயன்படுத்தினேன்.

    ReplyDelete
  18. ஒரு எழுத்தாளனின் பார்வை நடுநிலைமை போன்ற தோற்றத்தைத்தான் தர வேண்டும். எனவே நண்பர் செந்திலானின் விமர்சனம் சரியானதே. வரும் கட்டுரைகளில் வார்த்தைப்பிரயோகத்தில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம். பல புத்தகங்களை படித்து விட்டு தொடர்ந்து மெனக்கெடுவதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அடையாளம் தெரியாமல் இருப்பவர்களை அடையாளப்படுத்துவது காசு தான்.

    அடையாளப்படுத்தியதை ஒன்றும் இல்லாமல் செய்வதும் காசு தான்

    பதிவின் சாரத்தை என்னமாய் ஒரு குடுவைக்குள் போட்டு அடைத்துவிட்டீர்கள் தவறு. நன்றிங்கோ.

    சித்ரா நீங்க வாழ்ந்த ஊரை யோசிக்க யோசிக்க இது போன்ற நிறைய ஆச்சரியங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது.

    ரத்னவேல் அய்யா சொன்னது போல் இது முழுமையான நாடார் வரலாற்றுப் பதிவாக கொண்டு செல்ல விரும்பாத காரணத்தால் சற்று மேலோட்டமாகத்தான் கொண்டு செல்ல முடிகின்றது.

    பாருங்கள் சென்ற பதிவில் எல் போர்ட் சொன்ன பஞ்சாயத்து வார்த்தை பிரயோகமாக மாறி நண்பர் ஒன்று சேர் வரைக்கும் வந்து நிற்கிறது. இன்னமும் கவனம் வேண்டும் போலிருக்கு.

    அன்றைய சமூக பொருளாதார நிர்பந்தங்களையும் ஆவணபடுத்தவேண்டியது அவசியம்

    இது தான் என்னுடைய நோக்கமும் ஜீவன் சிவம். நன்றிங்க.

    ஒடுக்கப்பட்டவர்களே பார்ப்பனியமயமாகி வரும்போது பார்ப்பனியத்தை ஒழிப்பது மேலும் கடினமாகி வருகிறது.

    எந்த காலத்திலும் ஒழியாது மறையாது. காரணம் நம் மனதிற்குள் இருக்கும் ஆசைகள்.

    குமார், கிருஷ்ணமூர்த்தி, இரவு வானம், கிருஷ்ணா, இராஜராஜேஸ்வரி (முற்றிலும் உண்மைங்க) கருத்துக்கு நன்றி.

    பயணமும் எண்ணங்களும் .... இன்னும் நிறைய ஆச்சரியப்படத்தக்க விசயங்கள் உண்டு.

    மனிதன் உணவு,உடை,இருப்பிடம் போன்றவற்றில் தன்னிறைவடைந்த பிறகு மற்றவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவனுடைய செயல்கள் இருக்கின்றன.

    இதுவே பல சமூக விதிகளை உடைபடும் விதமாகவும் மாறத் தொடங்குகின்றது.

    ReplyDelete
  20. //இந்த காலகட்டத்தில் முற்பட்ட சாதியினரைப் போல கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லாவிட்டாலும் கூட பல கோவில்களுக்கு செல்வந்தர்கள் தான தர்மங்களை வழங்கினர். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களுக்கு கோவில் சார்ந்த பணிவிடைகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதை மிகப் பெரிய கௌரவமாக கருதினர். இதன் தொடர்ச்சியாக பிராமணர்களைப் போலவே பூணுல் அணிந்து கொள்ளத் தொடங்கினர். //

    //திருச்செந்தூர் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பொருளாதார ரீதியாக உயர்ந்த நாடார் இனமக்கள் திருமண வைபோகங்களில் பல்லாக்குளை பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்தது. இது உயர்குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே என்பதாக இருந்தது. தங்கள் செல்வ நிலைப்பாடுகளை சமூகத்திற்கு காட்ட மறவர்களை பல்லாக்கு தூக்கியாக பயன்படுத்திக் கொண்டனர்.//

    என்ன சொல்றதுன்னே தெரியல :)

    //தாங்கள் விரும்பிய ஷத்திரியர் என்ற பெயரையே அரசாங்க குறிப்பேடுகளில் நிலைபெற வைத்தனர்.//

    இதனால தான் இட ஒதுக்கீட்டுல ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து பிற்படுத்தப்பட்ட சாதிக்கு அனுப்பிட்டாங்களா? :)

    ReplyDelete
  21. ஜோதிஜி, நீங்க ஒரு மாதிரி சார்ந்து தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உங்களது நோக்கம் - ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் எப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு ஒருங்கிணைந்து முன்னேறியது என்பது பற்றித் தான் என்பதால் விட்டுவிடலாம். இதையே குறிப்பிட்ட சமூகத்து ஆட்கள் எழுதியிருந்தால் கேள்விகளுடனே படித்திருப்பேன்..

    ReplyDelete
  22. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் எப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு ஒருங்கிணைந்து முன்னேறியது என்பது பற்றித் தான்

    நன்றி. நேற்று அய்யாவிடம் தொலைபேசி உரையாடல் வழியாக தெரிவித்த கருத்தும் இதுவே.

    ReplyDelete
  23. பழக்க வழக்கங்கள், நடை முறைகளிலிருந்தே இது போன்ற விஷயங்களை விரிவாக்க முடியும். நல்ல முயற்சி. நடுநிலையுடன் நோக்குவது மிக அவசியம்.

    தமிழகத்தில் சாதிகளின் வரலாறு குறித்த சமீப கால ஆய்வு நூல்கள் உள்ளனவா தெரியவில்லை. கூகுளில் தேடும் பொது கண்ணில் பட்டவை மிக குறுகிய தலைப்பில் செய்யப்பட பீ எச் டி ஆய்வு மடல்களே. அன்பர் ரத்தினவேல் அனுப்பிய நூல்களின் தலைப்புக்கள் அறிய ஆவல்.

    பார்ப்பனர்களைப் பார்த்து தினமும் குளிக்க வேண்டும் என்ற நல்ல பழக்கத்தை கைக்கொண்டனர் என அறிய மகிழ்ச்சி. பார்ப்பனர்கள் ஒரு சில நல்ல வழக்கங்களும் பரவ காரணமாக அறியப் படுவதில் மகிழ்ச்சி. கல்வி கற்பதிலும் அவர்கள் தாக்கம் இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  24. பார்ப்பனர்களைப் பார்த்து தினமும் குளிக்க வேண்டும் என்ற நல்ல பழக்கத்தை கைக்கொண்டனர் என அறிய மகிழ்ச்சி. //

    இதைவிட நாடார்களை இழிவு படுத்த முடியாது.:)))))))))

    குளிக்க மட்டுமா இன்னும் வேறெல்லாத்துக்குமா?...

    யோசிக்க வேண்டாமா?..

    ஏழை என்றால் அவன் அழுக்கானவன் , திருடன் , ஒழுக்கமற்றவன் என்பதுபோல...

    அருவருப்பூட்டுகிறது ஒரு சாதியை பார்த்து இன்னொரு சாதி சுத்தத்தை கற்கும் கட்டுக்கதையெல்லாம்...

    ReplyDelete
  25. எனக்கு தெரிந்து சில ( கவனிக்க ) பிராமணர் இல்லங்கள் அசுத்தமாகவே இருந்து வந்துள்ளது ...சில பிராமணர்களுமே..

    இக்கமெண்டை டிலீட் செய்யலாம்.. நாடார் பற்றிய அக்கமெண்ட் நீக்கும்போது...

    ஏன் சொல்ல வருகிறேன் என்றால் இதுபோன்று இவை தனிப்பட்ட தனிமனித விஷயங்கள்.. இவற்றை ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு பொருத்தி பார்த்திடக்கூடாது...

    ReplyDelete
  26. வணக்கம். தமிழினத்தின் அனைத்து உட்கூறுகளையு்ம் அலசி ஆராயந்து பதிவு செய்யவேண்டியது தமிழர்களின் கடமை. தமிழர்கள் செய்யத்தவறியவற்றில் இதுவும் ஒன்று. இதில் விறுப்புக்கு இடமில்லை. உள்ளதை உள்ளபடி பதிவு செய்வதுதான் ஒரு ஆய்வாளனின் பணி. இந்தப்பணியை தாங்கள் மேலும் செழுமைப்படுத்தி தங்கள் பணியை தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.