" அரசியல் என்பது சாக்கடை. உள்ளே இருப்பவர்கள் அத்தனை பேர்களுமே புழுக்கள் போல அசிங்கத்தை தின்று தின்று தன்னை வெளியே சிங்கமாக காட்டிக்கொண்டுருப்பவர்கள் "
காலங்காலமாக நமக்கு நாமே சமாதானங்கள் கூறிக்கொண்டு " பார்த்தாலே பாவம் " என்று அடுத்த சந்தின் வழியாக ஏறி குதித்து தப்பி விடும் நாமே அவர்கள் விரிக்கும் வலைக்குள் தான் சிக்கிக்கொள்வதோடு அதையே வாழ்க்கை முழுக்க சுகம் என்று கருதிக்கொண்டு வாழ்ந்து கொண்டுருப்பது மொத்த ஆச்சரியமான ஒன்று. நாடுகள் மக்கள் என்று மாற்றம் பெற்றதாக இருக்கும். ஆனால் இக்கரைக்கு அக்கரை பச்சை.
ஜெயவர்த்னே ஆண்டு கொண்டுருக்கும் மத்திம காலத்தில் இருக்கும் நாம் இதுவரைக்கும் இலங்கையை நோக்கி எந்த அந்நிய நாடுகளும், அவர்களின் அவசர அவஸ்ய தேவைகள் குறித்தும் ஆராயந்து பார்க்காமல் நாலு கால் குதிரை பாய்ச்சலில் அவசரமாக பயணித்து வந்து விட்டோம். இவர் காலத்தில் இலங்கைக்குள் ஆத்பாந்த நண்பனாக இருந்து கொண்டுருப்பவர்கள் நேரிடையாக மறைமுகமாக என்று பார்த்தால் அமெரிக்கா. அடுத்து இஸ்ரேல். மற்றபடி விட்ட விட்டகுறை தொட்டகுறையாக பாகிஸ்தான்.
அப்போதைய சீனா மாவோ வுக்கும் சாப்பாட்டில் கலந்து உண்ணும் இறைச்சி மாவுக்கும் உண்டாண வித்யாசங்களை ஆராய்ச்சி செய்து கொண்டுருந்த தருணமாக இருந்து இருக்கலாம். காரணம் அவர்கள் மொத்த உள்கட்டமைப்பு, ஜனத்தொகை பெருக்கம் என்று முழி பிதுங்கிக் கொண்டு இருந்தார்கள். மற்ற நாடுகளைப் போல பதினாலு கால் பாய்ச்சலில் தன்னை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று மொத்த கம்யூனிஸ தத்துவங்களை நூடுல்ஸ் போல் வேக வைத்து தரம் வரியாக சுவையை மாற்றி பார்த்துக் கொண்டுருந்தார்கள்.
சீனாவின் இன்றைய வளர்ச்சி என்பது 1980ல் அஸ்திவாரம் தோண்டப்பட்டு 90ல் கட்டிடம் கட்டப்பட்டு 2000ல் புது மனைபுகுவிழா நிகழ்ச்சி போல அவர்களின் மொத்த பிரமாண்ட வளர்ச்சியை உலகிற்கு அறிவித்தார்கள். அவர்களின் வளர்ச்சி என்பது எத்தகையது என்பது ஒரே ஒரு உதாரணம் போதுமானது. இன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவில் தாங்கள் போட்டு வைத்துள்ள மொத்த பணத்தை சீனா எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை வந்தால் அமெரிக்கா வெறும் உதார் பார்ட்டியாகி பாட்டி சொன்ன கதையாகி போய்விடும். இப்போது புரியும் ஓபாமா ஏன் சீனாவில் போய் அம்மா தாயே என்று கையேந்திய நிலைமை?
அமெரிக்கா விரும்பு எண்ணெய் வளமோ வேறு எந்த தரமோ இலங்கையில் இப்போதும் எப்போதும் இல்லை. வேண்டுமென்றால் உலகமே கொண்டாடும் திடம் மணம் குணம் உள்ள ஒரு கோப்பை சுத்தமாக பரிசோதிக்க தேவையில்லாத பச்சை தேயிலை தண்ணீர் குடித்து வயிற்றுப்போக்கை நிறுத்திக் கொள்ளலாம்?
ஒன்றைத்தவிர? அது இயற்கை கொடையாக வழங்கியிருக்கும் திருகோணமலை என்ற இயற்கை துறைமுகம். இதில் என்ன தான் சிறப்பு? மொத்த ஆசியாவை அங்கிருந்து கொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை மொத்தமாக நிலைநாட்ட முடியும். மொத்தநாடுகளும் தூங்கி எழுவது முதல் பல் துலக்கி இறுதியில் பாடையில் ஏறும் வரையிலும் கனகச்சிதமாக நாட்டாமை செய்ய முடியும். ஆளுமை செய்ய வேண்டுமென்றால் எதிராளி எப்போதும் பயத்துடன் இருக்க வேண்டும். அல்லது இருக்கச் செய்யும் அளவிற்கு நம்முடைய ஆளுமை இருத்தல் வேண்டும்.
பணம் வரும் வரைக்கும் தானே கொள்கை. வந்த பிறகு தேவைப்படுவது புகழ். அதற்கு தனி மனிதர்களுக்கு லயன்ஸ் கிளப். நாடுகளுக்கு நாட்டாமை பாத்திரம்?
பாகிஸ்தான் ஒரு பிரச்சனையே அல்ல. தேவைப்படும் போது காவல்துறையில் இருந்து வந்து அழைப்பார்களே? " வா ராசா கையெழுத்து போட்டுட்டு போப்பா " என்கிற ரகம். கிட்டத்தட்ட தெரு ரவுடி போல். எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. கெட்டதுக்கு மட்டும் தான் கூப்புடனும். ஆமாம். அது தான் அவர்களின் தரமும் தராதரமும். இன்று வரைக்கும் மாறாமல் அதே பாதையில் அடம் பிடிக்காமல் போய்க்கொண்டுருப்பது மொத்தத்திலும் உலக ஆச்சரியம்?
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தான் இந்தியாவின் பார்வை இலங்கையின் மேல் பட்டு படர்ந்துள்ளது. இந்திரா காந்தி உருவாக்கிய பாதை அது. இப்போது ராஜீவ் காந்தியின் கைக்கு வந்துள்ளது. பக்கத்து விட்டுக்காரன் சும்மா சமத்தா இருந்தாலும் பரவாயில்லை. மொத்த சாக்கடையையும் நம்ம பக்கம் திருப்பி விட்டுட்டு, ஊர்ல இருக்கும் ரவுடிகளையும் கொட்டமடிக்க வைத்துக்கொண்டுருப்பது எப்போது இருந்தாலும் நமக்கு ஆபத்து. இதை நிறுத்தியே ஆகவேண்டும். ஒன்று நட்புப்பிடியில் வைத்திருக்க வேண்டும் அல்லது உடும்பு பிடியில் அழுத்தியிருக்க வேண்டும்.
அதிலும் பிரச்சனை. அர்த்தசாஸ்திரம் போல் புதிய அரசியல் சாஸ்திரத்தை கடைபிடிக்கும் இந்த ஜெயவர்த்னே லேசுபட்டவரா? உங்களுக்கும் பெப்பே? உலகத்துக்கும் பெப்பே?
ஆனால் தொடக்கத்தில் தோன்றிய இந்தியாவின் எண்ணம் எண்ணமோ சிறப்பானது தான். மற்ற நாட்டுக்காரர்கள் அங்கு துண்டு போட்டு பந்தியில் உட்கார்ந்து விட்டால்? காலம் முழுக்க பிரச்சனை? இந்தப்பக்கம் காஷ்மீர் போல அந்தப்பக்கம் இராமேஸ்வரம். அப்படியே சென்னை, கல்பாக்கம் வரைக்கும் வந்து அப்படியே மும்பாய் வரும் மக்கள் போல் உள்ளே வந்து விட்டால்?
யோசித்த தலைமைக்கு கீழ் இருந்த மொத்த புத்திசாலிகளும் மனதார நம்பியது ஒரே ஒரு துறையை மட்டும். அது தான் புதிதாக உருவாக்கப்பட்டு வளர்ந்து கொண்டுருக்கும் ரா. ஆனால் ரா உளவுத்துறை என்பது சுருதி சேர்க்க முடியாத புரியாத ராக கீர்த்தனைகளுடன் இருக்க நாளுக்கு நாள் நேரத்திற்கு நேரம் பிரச்சனைகள் கூடிக்கொண்டுருந்தே தவிர தீர்வும் வந்தபாடில்லை.
இவர்களும் நான் திருந்துவேனா? என்ற அடம் வேறு? ஆனால் ராஜீவ் காந்தி மனதார நம்பினார். ரா அதிகாரிகள் காட்டும் கோப்பில் உள்ள எண்கள், எழுத்துக்கள் தொடங்கி கமா புல்ஸ்டாப் வரைக்கும் வேதவாக்காக எடுத்துக்கொண்டார். எடுத்துக்கொண்ட அந்த ஒரே காரணம் தான் இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை கொண்டு போய் நிறுத்தினால் இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்த மாதிரியும் ஆச்சு. அடம்பிடித்துக்கொண்டுருக்கும் பிரபாகரன் கொடடத்தை அடக்கி ஆண்டது போலவும் இருக்கும் என்று படைபட்டாளத்தை இறக்கும் வைபோகம் தொடக்கம் பெற்றது.
மொத்த சிங்கள மக்களின் எதிர்ப்பு, JVP என்றழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுணா இடது சாரிகளின் எச்சரிக்கை, ஜெயவர்த்னே ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திய எதிர்ப்பாளர் பிரேமதாசாவின் (இவர் ஒரு கூட்டத்திற்காக ஜப்பான் சென்று இருந்த போதுதான் தீட்சித் சென்று மொத்த முடிவுகளை இலங்கை அமைச்சரவை கூட்டி எடுத்தார்கள்) மொத்த எதிர்ப்பையும் மீறி கடல் என்பது நீல நிறமா? இல்லை இந்திய கப்பல்களின் அணிவகுப்பா என்கினற அளவிற்கு ஒன்றன்பின் ஒன்றாக இலங்கை துறைமுகத்தை நோக்கி போய்க்கொண்டுருக்கிறது. காரணம் தொடக்கத்தில் அமைதியை நிலைநாட்ட என்று சொல்லப்பட்ட இந்த அமைதிப்படை வீரர்களின் எண்ணிக்கையும், கொண்டு போன ஆயுதங்களும் , வாகனங்களும் தொடர்ந்து வாசிக்கும் போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்படியென்றால்? என்னவோ திட்டமிருக்கு?
ஆமாம் இந்த இந்திய உளவுத்துறையை ராஜீவ் காந்தி ஏன் இந்த அளவிற்கு நம்பினார்? அப்படி என்றால் ஏற்கனவே இந்த உளவுதுறையின் உலக பிதாமகன் CIA எப்போது தொடக்கம் பெற்றது? இன்று வரைக்கும் அமெரிக்காவின் மொத்த அரசியலில் இந்த சிஐஏ தானே முக்கிய பாத்திரம் வகிக்கின்றது? அமெரிக்கா உருவாக்கிய வழிமுறைகளால் பெற்ற வலியினால் தானே இன்று ஒவ்வொரு நாடும் இந்த உளவுத்துறையை வளர்த்து வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டுருக்கிறது?
உள்ளுர் விவசாயிகளை வளர்த்து விட்டு விவசாய நாடான இந்தியாவை வெளியே கொண்டு போய் காட்டுங்கப்பான்னா யாரு கேட்கிறாங்க? கொண்டு போய் ஆயுதத்தில் கொட்டுவதும், அதில் தோன்றிய ஊழல்களை மறைக்க, ஆயுதவியாபாரியை, தரகரை காக்க, மொத்த ராஜீவ் புகழ் மங்கியதும், உள்ளே உள்ள ஒவ்வொரு ஊழலும் வட இந்திய தேர்தல் வெற்றிகளை பாதிக்க தன்னை தன் புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவஸ்யம் அப்போது அதிகமாக இருந்தது. விட்டேனா பார்? என்று தொடை தட்டி எந்திரித்தவர் தொல்லையில் போய் சிக்கியதும் தான் இறுதியில் நடந்தேறியது.
CIA தொடக்கம் பெற்றதை சுருக்கமாக, முதலில் அவர்களைப்பற்றி உள்வாங்கி விட்டு கொழும்புக்குள் உள்ளே நுழைந்து கொண்டுருக்கும் காந்தி தேசத்தின் கண்ணிய கணவான்களை வரவேற்க நாமும் போய் வரிசையில் நின்று கொள்வோம்.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் யூனியன் எழுச்சி பெற்ற பின்பு ஒவ்வொரு நாடுகளுக்கும் மொத்தமாக அணுஆயுத பீதி நிரந்தரமாக தூக்கத்தைப் போக்கியது. அவனா? நீயா? இவனா? என்று பார்க்கும் பார்வையெல்லாம் மஞ்சள் காமாலை பார்வை?
1951 ஆம் ஆண்டு. ஈரான் நாட்டில் இருந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் (இன்றைய BP யின் முன்னோடி) மொத்த ஈரானின் வளத்தையும் மக்களையும் சூறையாடிக்கொண்டு இருந்தது. அப்போது ஈரானில் மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்று இருந்த பிரதம மந்திரி மொஸாடெக்
மொத்த ஈரான் நிறுவனங்களை தேசிய உடைமையாக்கி மொத்த பணத்தையும் அரசின் கஜானவிற்கு செல்லும் பாதையை உருவாக்கிவிட்டார். அந்த ஆண்டு டைம் பத்திரிக்கை அவரை உலகின் சிறந்த மனிதர் என்று தேர்ந்தெடுத்து மகுடம் சூட்ட இங்கிலாந்துக்கு வந்ததே கோபம். பங்காளி அமெரிக்காவிடம் போய் மூக்கை சிந்திக்கொண்டு அவன் என் குச்சியை புடுங்கிட்டான்னு போய் நிற்க, பங்காளி பலம் கொண்டு யோசித்தார். என்னடா அக்கிரமமாயிருக்கு. இவனுங்க நாடு மக்கள்ன்னு யோசிக்க ஆரம்பிச்சா நாமெல்லாம் எங்கே போறது. மெமரி ப்ளஸ் மாத்திரை தேவைப்படாத அமெரிக்கா ஒரு தந்திர வலையை உருவாக்கியது.
நேரிடையா மோதப்போனா சோவியத் யூனியன் பின்னி பெடல், வீல், மர்காடு எல்லாத்தையும் பார்ட் பார்ட்டா கழட்டிவிடுவாரு? என்ன செய்யலாம்? படைவீரர்களுக்கு பதிலாக அப்போது இருந்த சி.ஐ.ஏ உளவாளியான கெர்மிட் ரூஸ்வெட்டை (இவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்டின் பேரன்) ஈரானுக்கு அனுப்பி வைத்தது. கெர்மிட் வெட்டிட்டி வாப்பான்னா கொத்து கொத்தா கொன்று போட்டு விட்டு வர்ற ஆளு. போதாதா?
ஈரானுக்குள் அமெரிக்காவின் பணம் தண்ணீராக பீச்சி அடிக்கப்பட்டது. தெரு ரவுடி முதல் அரசியலில் இருந்த தெருப்பொறுக்கி வரைக்கும் பாரபட்சம் இல்லாமல் தான தர்ம பிரபுவாக அவதாரம் எடுக்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கனஜோராக சண்டைகள், கலவரங்கள், கண்ணீர் காட்சிகள், கதறல்கள். மொத்தமாய் அவர்கள் எதிர்பார்த்த குழப்பங்கள் உள்ளே அரங்கேறியது. நாளுக்கு நாள் வன்முறை கோரத்தாண்டவம் அரங்கேற இறுதியில் மொத்த மக்களும் உள்ளே நடக்கும் சூழ்ச்சியை அறியாமல் அத்தனைக்கும் காரணம் இந்த மொஸாடெக் தான் காரணம் என்று முடிவுக்கு வந்தனர். திறமையில்லாதவர் என்று பரப்பப்பட்ட பரப்புரைகள் உருவாக்கிய மாயை இறுதியில் அவரை வாழ்நாள் முழுக்க வீட்டுக்காவல் சிறைக்கு தள்ளியது. பிறகென்ன?
அமெரிக்கா தேர்ந்து எடுத்து வைத்திருந்த அடிமையான சர்வாதிகாரி முகமது ரேஸா ஷாவின் ஆளுமையில் ஈரான் வந்தது. பிறகு? அமெரிக்காவுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
அன்று முதல் அமெரிக்கா உருவாக்கிய பயம் தான் மற்ற நாடுகள் தங்களை காத்துக்கொண்டால் போதும் என்பதை விட அமெரிக்காவிடம் கோபப்படாமல் நடந்து கொண்டால் போதும் என்கிற இன்றைய சூழ்நிலை வரைக்கும் நடத்திக்கொண்டு வந்துள்ளது. அவர்கள் பாணியே அலாதியானது. முதலில் மிரட்டல் அப்புறம் அதட்டல். இரண்டும் மிஞ்சும் போது தான் சம்மந்தப்பட்டவர்கள் தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம். பெரியண்ணன் உருவாக்கிய இந்த வலையைப் பார்த்து ஒவ்வொரு நாடும் தன்னுடைய தகுதிக்கேற்ற சின்ன வலை, பெரிய வலைன்னு பின்னு பின்னுன்னு பின்னிக்கிட்டுருக்காங்க.
சரி வாங்க நம்ம கொழும்புக்கு,யாழ்பாண பலாலி விமான தளத்திற்குப் போய் கூட்டத்தோடு நின்று இந்திய அமைதிப்படையை வரவேற்போம்.
(ஆறாம் பாகம் முடிவடைந்தது)
தொடர்ந்தவர்களுக்கு நன்றி. தொடர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாங்க ராசா வாங்க?
(ஆறாம் பாகம் முடிவடைந்தது)
தொடர்ந்தவர்களுக்கு நன்றி. தொடர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாங்க ராசா வாங்க?