இலங்கையில் உள்ள தமிழ் இனத்திற்கான போராட்டத்தை , அதன் அகல நீளத்தை பார்க்க மறந்து உள்ளே வாழ்ந்த மக்களை பார்க்க வேண்டிய அவஸ்யம் என்ன? விடுதலைப்புலிகளின் தோற்றம், வீழ்ச்சி, சிங்கள தலைவர்களின் ஆளுமை மற்றும் தந்திரங்கள் என்று இந்த இலங்கை போராட்டத்தை பார்த்தீர்களேயானால் அது ஒரு கண் வழியே பார்க்கும் பார்வை போன்றது.
தமிழ் மாணவர் பேரவையின் மூலம் தொடக்கத்தில் உருவான சிவகுமாரன் உருவாக்கிய சுடரொளி, 1970 ன் தொடக்கத்தில் கட்டுபாடு அற்ற பல்வேறு குழுக்கள் மூலம் முன் எடுத்து கொண்டு வரப்பட்டு, அப்போது பொதுவாக உச்சரிக்கப்பட்ட "சோகலிசத் தமிழீழம்" என்ற கொள்கைகள் ஆண்டு கொண்டுருந்த ஆளுமை வர்க்கத்தால் நீர்த்துப்போகச் செய்யப்பட்ட போது உருவானது தான் (1972) புதிய தமிழீழ புலிகள். ஆனால் தன்னுடைய 22ம் வயதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் மூலம் உருவாக்கப்பட்டது தான் "தமிழீழ விடுதலைப்புலிகள்”
தொடக்கத்தில் சொன்னது போல் இலங்கையில் நடந்து கொண்டுருக்கும் தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களை சிங்கள அதிகார வர்க்கம் --- விடுதலைப்புலிகள் என்று இருவருக்குள் மட்டும் இந்த போராட்டங்கள் தொடக்கம் முதல் இன்று வரைக்கும் நடந்து இருக்குமேயானால் இந்த நிமிடம் தமிழீழம் என்ற தனி நாடு , ஐ.நா சபையில் மலர்ந்து இருக்க வாய்ப்பு அதிகம்.
தொடக்கம் முதல் இன்று வரைக்கும் மொத்த சிங்கள தலைவர்களும் மிகுந்த விவேகம் பெற்றவர்கள். வீரம் என்பதை எங்கேயாவது அவர்கள் பாடப்புத்தகத்தில் படித்த வார்த்தையாக இருந்து இருக்கும்.
விடுதலைபுலிகள் இந்த இனப்பிரச்சனையின் உள்ளே வந்த பிறகு வீரம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? தமிழர்களின் முன்னோர்கள் உண்மையிலேயே வீரமாகத் தான் வாழ்ந்தவர்கள் தானாஈ? என்பதையெல்லாம் சிங்களர்கள் கூட இவர்களைப் பார்த்து தான் உறுதி படுத்திக் கொண்டுருப்பார்கள்,
ஆனால் இரண்டு பேருக்கும் மத்தியில் மத்யஸ்தம் என்ற போர்வையில் உள்ளே மறைந்து கொண்டு இருக்கும் மேலை நாட்டு அதிகார வர்க்கத்தின் நிகழ்வுகளை இடையிடையே பார்த்தால் மட்டுமே முள்ளிவாய்க்காலின் இறுதி மொத்த கொடூரத்தை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
இந்த இருவரின் வீரத்தையும் விவேகத்தையும் தங்களுடைய தந்திரத்தை வைத்துக்கொண்டு, "பஞ்சாயத்து" பெரிசுகள் உள்ளே வந்து வந்து படாய் படுத்தி இன்று தமிழர்கள் படுக்க இடமில்லாமல் கூட ஆகிப் போய் விட்டது. எனவே மேலைநாட்டு "மற்ற நாடுகளில் தனது அதிகாரத்தை நிலைநாட்டல்" தோற்றமும் இன்றைய காலகட்டத்தின் மொத்த பார்வையும் நமக்கு முக்கியம்.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை பார்த்த போது உருவான கேள்வி அப்போது வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடி இலங்கை தமிழர்களின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று நமக்குள் தோன்றி இருக்கும்?
ஏன் இருவருமே தமிழர்கள் தானே? அப்போதே இசைந்து போயிருக்கலாமே?
அப்போது உருவாகியிருந்த தறிகெட்ட சிந்தனைகள் படைத்து இருந்த அன்றைய தமிழ் தலைவர்களை மக்கள் நினைத்து இருந்தால் ஒரே அணியில் வரச் செய்து இருக்கலாமே?
கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால் இலங்கையில் தொடக்கம் முதலே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடி தமிழர்களின் வாழ்க்கைக்குள் நீந்தி வர வேண்டும்.
இவர்கள் இருவருக்கும் நடுவில் உள்ள மற்றொரு கதாபாத்திரம் தொடக்கம் முதல் இலங்கையில் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழ் இஸ்லாமிய சமூக மக்கள்.
இது தான் முக்கிய கிளை நதிகள். இந்த கிளைநதிகளிலும் உப நதிகள் உண்டு. ஐரோப்பியர்களை மணந்த பின் மாற்றம் பெற்றவர்கள்., பௌத்த மதத்தை தேர்ந்து எடுத்து சிங்கள தமிழ் என்று கரை சேர்ந்தவர்கள்.
கலப்பினர்களாக மாற்றம் பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை முற்றிலும் தமிழன் என்பதாக தொடக்கம் முதலே காட்டிக்கொள்ளாதவர்கள் என்று போய்க்கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் இங்கு சுட்டிக்காட்ட காரணம் குறிப்பிட்ட சிலர் மட்டும் தமிழர்களின் மொத்த பிரச்சனைகளை தொடக்கம் முதல் கையாண்டு இருந்தால் இன்றைய மொத்த இலங்கையும் இன்று வரையிலும் தமிழன் ஆட்சியில் தான் இருந்து இருக்கும்.
அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒவ்வொன்றையும் படிப்படியாக புரிந்து கொண்டால் தான் தமிழன் என்பவனின் கையாலாகாததனத்தை, ஒற்றுமையின்மையையும் எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். மொத்தமாக ஒவ்வொரு பிரச்சனைகளையும் நீங்கள் உள்வாங்கும் போது தான் இறுதியில் பிரபாகரன் என்பவர் குறித்த ஆளுமை, அச்சம், புரிதல், வியப்பு, விபரீதம் என்று எந்த வகையில் உங்கள் மனதில் வைத்து இருக்கிறீர்களோ அதை உரசிப் பார்த்துக்கொள்ள உதவியாய் இருக்கும்.
ஊடகத்தை பார்த்து மொத்தமும் புரிந்து கொள்ள விரும்பாமல், "ஐயோ பிரபாகரன் மோசம்" என்பதோ, பலர் அதிசியமாய் பேசுவதை மட்டும் வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு அவர் மேல் பாசம் வருவதும் சரியாக இருக்க முடியுமா?
தீர்வுகள் சரியான முறையில் கிடைக்காத வரைக்கும், உருவாக்க விரும்பாத ஆட்சியாளர்கள் இருக்கும் வரைக்கும் பிரபாகரன் போராட்டம் மட்டுமல்ல உலகத்தில் எந்த இனப் போராட்டங்களும் நின்று போனதாக சரித்திரம் சொல்லவில்லை.
பாலஸ்தீனியர்கள்,ஐரிஸ் மக்கள், எரீத்தியர்கள், நமீபிய மக்கள், கருப்பு தென்னாப்பிரிக்கா மக்கள், பாஸ்க் மக்கள், கிழக்குத் தீமோர் மக்கள், கேட்ஸ் மக்கள், எல்-சல்வடோரியர், மேற்கு சகாரா மக்கள்,.............................
இவர்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் போராடிய மாவோவில் இருந்து மகாபே வரை, சேகுவாராவிலிருந்த அரபாத் வரை எல்லோருமே தொடக்கத்தில் "பயங்கரவாதிகள்". முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரெனால்டு ரீகன் தொடங்கி வைத்த புனிதமான சொற்றொடர் "சர்வதேச பயங்கரவாதம்".
தனிநபர்களின் தேசம் சார்ந்த நிறுவனங்கள், குறிப்பிட்ட காலகட்டத்தில் சர்வதேச நிறுவனங்களாக மாற்றம் பெற்ற போது, அத்தனை அதிகார வர்க்கமும் அவர்களுக்கு அடிபணியும் சூழ்நிலையில் மாற்றம் அடைந்து கொண்டே வந்தது. ஒவ்வொரு நாட்டின் அடிப்படை வளங்கள் ஆடிக்காற்றில் பறந்த அம்மி போல் பறந்து அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை உருக்குலைய வைத்தது. எதிர்த்தவர்கள் தீவிரவாதிகள். பயங்கரவாதிகள்.
உண்மையான தலைவர்களை பெற்ற நாடு இவர்களால் உருவாக்கப்பட்ட "பொருளாதார தடைகளால்" காலப்போக்கில் காலணியாக்கம் பெறத்துவங்கியது.
இறுதியில் "கஞ்சி" மட்டும் கிடைத்தால் போதும் என்று அடங்கி வாழவும் வேண்டிய சூழ்நிலை.
அப்போது முதல் இப்போது வரைக்கும் உரிமைகள் உரத்துக் கேட்க தொடங்கினார்கள். முடியாத போது ஆயுதம் தூக்கவும் செய்தார்கள்.
அடிப்படை வாழ்வுரிமை, மற்ற மொழிகளை திணித்தல், வாழும் இடங்களை வளைத்து அப்புறபடுத்துதல், சமஉரிமை இல்லாமல் சங்கடங்களை உருவாக்குதல் என்று ஒவ்வொன்றும் தொடரத் தொடர உலகமெங்கும் தோன்றிய தலைவர்களைப் போல உருவானவர்களில் ஒருவர் தான் பிரபாகரன் என்பவரும்.
ஓடிப்போய் ஒளிந்து கொண்டு , மறைந்து கொண்டே மொத்த அதிகாரத்தை கைப்பற்றி ஜெயித்த தலைவர்களும் உண்டு. உறங்காமல் ஓளிந்து கொண்டே முன்னெடுத்த போராட்டங்களால், கொண்ட கொள்கைகளால், அணையாமல் சுடர் விட்டு ஜொலிக்கும் சுடரொளியாய் மலர்ந்த புதிய தேசமும் உண்டு.
இலங்கையை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அப்போதைய காலகட்டத்தில் எல்லா நாட்டிலும் செய்து கொண்டுருந்த அதே புத்திசாலிதனத்தை இலங்கையிலும் செயலில் காட்டினர். ஆமாம். ஒரு பக்கம் கல்விக்கான பாடசாலைகள். மறுபக்கம் பைபிள் புத்தகம் மூலம் மதத்திற்கான பரப்புரைகள்.
இந்த விசயத்தில் அவர்கள் எந்த இனவேறுபாடும் காட்டவில்லை. சிங்களர்,கிறிஸ்துவர்,தமிழர், இஸ்லாமியர் என அத்தனை சமூக மக்கள் வாழ்க்கையிலும் புகுந்து வெளியே வந்தனர்.
ஆனால் இவர்களின் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொண்ட ஒரே மக்கள் யாழ்பாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள். காரணம் அவர்களுக்கு கல்வியைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை. பனைமரங்கள் உள்ள பூமி பள்ளிக்கூட பூமியாக மாறியது.
சிங்களர்கள் புத்த மதத்தை பின்பற்றிக்கொண்டு அதை மட்டுமே முக்கியமாக கருதிக்கொண்டு இருந்ததால் ஆங்கிலேயர்களை தொடக்கம் முதல் குறிப்பிட்ட இடைவெளியில் தான் வைத்து இருந்தனர். கல்வியை விட மதமே அவர்களுக்கு பிரதானமாக இருந்தது.
கிழக்கு மகாண மக்களும் பாதிரியார்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளவில்லை. காரணம் இலங்கையின் வளமான பகுதிகள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தது. கல்வியை விட அன்றாடம் புழங்கிக்கொண்டுருக்கும் தொழில் சார்ந்த பணம் தான் அன்று அவர்களுக்கு அன்று பெரிதாக இருந்தது.
கடலோர பகுதிகளில் வாழ்ந்த மக்களும் இதே போல் தான். மீன் தான் கல்வி. கடல் தான் பள்ளிக்கூடம். மொத்தத்தில் கல்வியை விட உருப்படியான வேலை பார்ப்பது தான் உன்னதம் என்று அவர்கள் கருதினர். கல்வி கற்பது என்பது சோம்பேறிகளின் வேலை என்பதாக அவர்களும் கருதினர்.
வாழ்ந்த பூமியும் வளமாக இல்லை. செய்தொழிலுக்கும் வேறு வாய்ப்பு இல்லை. வேறு என்ன செய்ய முடியும்? மொத்தமாக இயற்கையாகவே தொடக்கம் முதலே கல்வி கற்பதில் ஆர்வமாய் யாழ்பாண மக்கள் இருந்தனர்.
ஏற்கனவே சுட்டிக் காட்டி இருந்து அவவ்போது விதியால் உருவாக்கப்பட்ட ஆளுமை நிர்வாக அமைப்பும் ஒரு பக்கம்.
குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் வட்டியும் முதலுமாய் மொத்தமாய் ஆங்கிலேயர்கள் உருவாக்கி இருந்த அத்தனை பதவிகளிலும் யாழ்பாண தமிழர்கள் கோலோச்சத் தொடங்கினார்கள்.
கல்விமான்கள், மொழிபெயர்பாளர்கள், நீதிபதிகள், வக்கில்கள், அரசு உயர் பதவிகள்,காவல் துறை, இராணுவம் என்று எல்லா பதவிகளிலும் நீக்கமற நிறைந்து இருந்தனர்.
இரண்டாவது தலைமுறை அரசு ஊழியத்தில் வளர்ந்தது. தொடர்ந்து வந்த தலைமுறைகள் கல்வியின் தரத்திலும், கற்றவர்களின் எண்ணிக்கையிலும் படிப்படியாக உயரத் தொடங்கினர்.
வெறியை மனதில் வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் உன்னத இடத்தை ஒவ்வொரு சமயத்திலும் கற்ற கல்வியால் அடைந்தனர். ஆனால் யாழ்பாண தமிழர்களின் மொத்த வாழ்க்கையிலும் இன்று வரை பாதிரிமார்களுக்கும், கிறிஸ்துவ மதத்திற்கும் எப்போதுமே மரியாதையாக பாவித்தனர். காட்டிய செய் நன்றி பிரபாகரன் வரைக்கும் கூட.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சிங்களர்களும், புத்த பிக்குகளும் மொத்த இலங்கை என்பது தங்களுடைய நாடு, நாட்டின் அங்கரிக்கப்பட்ட மதம் என்பது பௌத்தம் என்பதாக தங்களுடைய ஆளுமையை நிலை நாட்ட முற்பட்டனர். ஆனால் கல்வியின் மூலம் உயர்ந்த இடத்தில் இருந்த தமிழர்களிடத்தில் செல்லுபடியாகவில்லை.
முட்டல் மோதலும் தொடங்கியது.
சிங்களர்களை மதம் என்பது ஒரே கூரையின் கீழ் அனைவரையும் கொண்டு வந்து நிறுத்தியது.
ஆனால் அன்று மொத்தமாய் இலங்கைக்குள் வாழ்ந்த தமிழர்களை?
ஆனால் அன்று மொத்தமாய் இலங்கைக்குள் வாழ்ந்த தமிழர்களை?
ReplyDeleteமதம் கொன்று குவித்தது...............?
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html
ReplyDeleteமிக அருமையான எழுத்து நடையில் அமைந்த கட்டுரை,ஓட்டுக்கள் போட்டாச்சு. விரைவில் தொலைபேசுகிறேன்.
ReplyDeleteஉங்களின் பல இடுகைகளையும் படித்தேன். நல்ல useful info. எனக்கு பலதும் தெரியாது. சுவாரசியமாவும் எழுதறீங்க. இனிமே அடிக்கடி வந்து படிப்பேன். நீங்களும் எழுதுங்க :)-
ReplyDelete