அஸ்திவாரம்

Friday, November 20, 2009

தோட்டத்தில் தொடங்கிய ஓட்டங்கள்

தமிழ்நாட்டில் மண்டபம் முகாம் என்பது இலங்கையில் வாழ்ந்த, வாழும், புலம் பெயர்ந்து வாழுந்து கொண்டுருக்கும் அத்தனை பேர்களுக்கும் மறக்க முடியாத இடம்.  மறக்கக்கூடாத இடமும் கூட.

தமிழினம் மறக்க முடியாத புனித பூமி இது.  இன்று வரையிலும் கடல் சாமி வரவழைக்கும் வெறும் கண்ணீர் சாமியாகத் இருக்கின்றது.
அனுப்பிய இடமும் வரவேற்ற இடமும் ஒன்று என்றால் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தை தவிர வேறு எதைக் காட்டமுடியும்.

1860 ஆண்டு ஆண்டுகளில் தான் ஆள்பிடிகாரர்கள் மூலம் தான் முதல் பயணம் தொடங்கியது.  இலங்கை,தென் ஆப்பிரிக்கா, பீஜீத்தீவுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இடப்பெயர்ந்தார்கள்.  அப்போது தான் தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான பயணத்தை தொடங்கினார்கள்.  இங்கு இருந்தால் வாழ முடியாது.  வயிறார உண்ணக்கூட முடியாது.  பொருள் இல்லை.  அத்துடன் சக மனிதர்களின் அருளும் இல்லை.  இனம், மதம், ஜாதி போன்ற துவேசப் பார்வையில் கூனிக் குறுகி வளைந்த முதுகும், வாழ்விழந்த சோகமும் சேரும் போது மனம் என்ன செய்ய முடியம்?

கூலியின் அவதாரம் ஆரம்பம்.  கூலிக்காக கூவிக் கூவி அழைப்பதற்கென்ற ஒரு பெருங்கூட்டம்.  கங்காணிகள்.  இதிலும் தாலூகா, மாவட்டம் போன்ற பகுதி பகுதியாக.  தனியான ஒப்பந்தங்கள் வேறு.

 "எங்கள் ஏரியா.  உள்ளே வராதே" ஆங்கிலேயர்களின் அற்புத வழிகாட்டல்கள்.

ஆங்கிலேயர்கள் இலங்கையை திடீர் என்று மொத்தமும் ஒரே நாடு என்றதும் அவர்களின் நோக்கம் என்பது நாட்டை வளப்படுத்த என்ற எண்ணமா மேலோங்கி இருந்து இருக்கும்?  மலை பூமியை மயக்கும் பூமியாக மாற்றத் தொடங்கினர். எதை தொடர்வது?  எங்கிருந்து ஆரம்பிப்பது?

உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்களை கொண்டு எதுவும் செய்து விட முடியாது.  அவர்கள் பார்வையில் கூலி என்பவன் கூலி கேட்க வேண்டும் என்பதையே மறந்து போயிருக்க வேண்டும்.

அறை குறை அறிவு கூட ஆகாது.  ஆமாம் சாமி என்பவர்கள் மட்டும் தான் வேண்டும்.

தமிழகத்தில் கங்காணிகள் கூவினார்கள்.  தமிழர்கள் கூலியாக மாறினார்கள்.  கப்பல், படகில் ரொப்பினார்கள்.  ஆமாம் உயிர் உள்ள ஜடத்தை அப்படித்தான் அன்று நடத்தினார்கள். படிப்பு என்பதையே அதுவும் ஒரு வாசனையாக இருக்கும் போல என்று நம்பிக்கொண்டுருந்தவர்களை நட்டாத்தை கடக்க வைத்தால்?

இதுவும் கடந்து போக வேண்டும் போல என்று கடல் கடந்தார்கள்.

இன்றைய சூழ்நிலையில் மொத்த உலகத்தையும் தன் மேலை நாட்டு ஓரக்கண்ணால் ஓரவஞ்சணையால் பார்த்துக்கொண்டே பயணிப்பவர்கள் அத்தனை பேருமே நோபல் பரிசுக்கு உரியவர்கள் தான்.  ஆமாம் வெடிபொருள் மூலம் வந்த நிதி உலக இனத்தை தினந்தோறும் வெடிக்க வைப்பவர்களுக்குத் தானே கொடுத்து மகிழ வேண்டும்.

அணு ஆயுதம் ஓப்பந்தம் இறுதியாகும் வரைக்கும் இந்தியா.  ஐயா அந்தப்பக்கம் நகர்ந்தும் இந்தா உனக்குண்டான கொய்யா என்று பாகிஸ்தான் பக்கம்.  சீனாவின் குணம் வேண்டும் என்றால் திபெத் என்பதே சீனாவின் ஆளுமையில் உள்ள பகுதி.  அப்படியென்றால் தலாய்லாமா கதி?  அதற்கென்ன பேசி தீர்த்தால் போச்சு.

இப்படியே பேசிப்பேசி,  மொத்த உலக மக்களின் நாசிக் காற்றும் நிற்கும் போது ஒபாமா கொள்ளுப் பேரன் அன்று நடத்தும் நாடகத்தில் இதே போல் மற்றொரு நோபல் பரிசு.

உலகம் என்பது வட்டமா இல்லை இவர்கள் சுழற்றி ஆடும் தட்டையா?

ஆப்கானிஸ்தான் இன்று ஆப்பாயில்.  ஈராக் இன்று இளிச்சவாயன்.  பாகிஸ்தான் இன்று பக்கிகளின் ராஜ்யம். அமேசான் நாட்டுப்பக்கம் இருந்ததையெல்லாம் ஓரளவிற்கு உறிஞ்சாச்சு. வாழ்ந்து கொண்டுருந்த பழங்குடி மக்களையும் ஆயில் பூமியாக்கி கொதிக்கும் சட்னியாக மாற்றியாச்சு.

வேறு என்ன மிச்சம்.  இந்தியா?

அது தான் ஏற்கனவே கோட்டு போட்ட கணவான்களின் ஏலத்தில் நிற்கிறதே?  அறிவிக்கும் நாள் தான் பாக்கி.

அன்று மன்னர்கள் ஆண்ட போது மருகிக்கொண்டுருந்த பார்வையால் பல பேர்கள் உள்ளே வந்தார்கள்.  இன்று அந்நிய மூதலீட்டில் அகலக்கால் வைத்து படித்து முடிக்கும் முன்பே மறைமுகமாக அக்கரைக்கு விரட்டி விட்டுக் கொண்டுருக்கிறார்கள்.

நீங்கள் நோபல் பரிசு வாங்க வேண்டிய தமிழனா? இந்தியனா?

உடனடியாக செய்ய வேண்டியது அடுத்த விமானம் பிடித்து மேல்நாட்டு கல்வி கற்று அங்கேயே பணிபுரிந்து , வாங்கும் போதும் மட்டும் நான் மூணாப்பு படிச்சது எங்க ஊரு குக் கிராமத்துல என்று சமையல் சமாச்சாரத்தை சொல்ல வேண்டும்.  அப்படித்தான் இன்றைய சூழ்நிலையில் இந்திய மானத்தை காக்க வேண்டும்.

அன்று தொடங்கிய பயணம் இன்றும் வேறு வகையில் பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  கூலியின் உருவமும் அறிவும் வேறு வேறாக.

அன்று கால் வயிற்று கஞ்சிக்கு கரையை கடந்து அக்கரைக்கு போனார்கள்.
கூலியில்லை.  அவர்களின் வாழ்வாதாரத்தை அன்று கூவி நிலைநாட்டவும் ஆள் இல்லை.

அன்று பரிதாபத்தில் தொடங்கிய பயணம் இன்றோ பயங்கரத்தில் வந்து முடிவடைந்து இருக்கிறது..

தொடக்கத்தைப் பார்க்கலாம்.

பயணம் தொடங்கிய காலத்தில் கப்பல் பயணம் என்பது ஒரு சவலான சாவை நோக்கி நகரும் பயணம் தான்.  முட்டி மோதி நிற்பதும், மூழ்கித் தொலைவதும் சர்வ சாதாரணம்.  வரலாற்றுப் பக்கங்களில் வெளிவராத தகவல்களில் இதுவும் ஒன்று.

தொடக்கத்தில் இலங்கைக்கு கூலியான தமிழர்கள் பயணித்த "ஆதிலட்சுமி" என்ற கப்பல் பாதி வழியிலேயே மூழ்கி அதில் பயணித்த 120 பேர்களும் அந்த லட்சமியிடமே  போய் சரண் அடைந்தனர்.  அவர்கள் ஆதியும் தெரியவில்லை.  அந்தத்தையும் அன்று கண்டுபிடிப்பார் யாருமில்லை.  இதே காலகட்டத்தில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் கதை இன்று படமாகக்கூட பார்க்கப்பட்டு பாராட்டையும் பெற்று விட்டது.  தமிழர்களின் சோகத்தைக்கூட சரித்திர பக்கங்கள் வெறும் தரித்திரமாகத் தான் கருதுகிறது போலும்.

பயணித்தாலும் இலங்கையில் உள்ள குறிப்பிட்ட இலக்கை அடைவது அதை விட பெரிய சவால்.  தலைமன்னாரில் இறங்கி மலையகம் போய் சென்றடைய சில மாதங்கள் கூட ஆகலாம்.  முதலில் கண்டியை அடையவே ஒரு மாத காலம் எடுத்துக்கொள்வார்கள்.

இடையில் பயணிக்க முடியாதவர்கள், பாதியில் இறப்பவர்கள் எல்லாம் போக உறுதியாய் போய் அடைபவர்களே உத்தம கூலிகள்.

1867 ஆம் ஆண்டு (பிரிப்ஸ் ஏ டம்பளர் துணை கலெக்டர் அறிக்கை) புறப்பட்டவர்களின் எண்ணிக்கை 639.  மலையகம் அடைந்தவர்கள் 186.  வழியில் இறந்தவர்களின் 453.

1841 முதல் 1846 இந்த ஆறு ஆண்டுகளில் 90 ஆயிரம் மக்கள் இறந்து போயினர்.

மேட்டை பள்ளமாக்கி தன்னை குள்ளமாகிக் கொண்டவர்கள்.  மலையைக் குடைந்து சாலை வசதிகளை உருவாக்கி செத்துத் தொலைந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள்.

திடீர் என்று பயமுறுத்தும் விச காய்ச்சல், காட்டு அட்டைக்கடி, கண்ட மிருகங்களின் பயமுறுத்தல்கள், தட்ப வெப்ப நிலை மாறுபாடுகள்,  உழைப்பதற்கென்ற பிறப்பு எடுத்தவர்கள்.

கல்வி என்பதையே அறியாதவர்களை தங்களுடைய கைப்பாவையாக வைத்துக்கொண்டு நினைத்ததை, நினைவில் வரப்போவதை என்று எல்லாவற்றையும் சாதித்துக்கொண்டார்கள்.  உழைத்த தமிழர்களுக்கு எப்போதும் போல விதி என்று ஒன்று துணை இருந்து இருக்கும் போல.  அவர்களுக்கு கொண்டு உறவாட சாதி சனமும் அங்கேயே உருவாக்கிய கடவுள் சிலையும் நின்றபடியே தான் இருந்தது.

இன்று வரையிலும் இலங்கை தேயிலைக்கு சர்வதேச சந்தையில் தனி மதிப்பு இருக்கிறது என்றால் அத்தனையும் தொடக்ககால தமிழனின் ரத்தம்.  அந்த சிவப்பு தான் மலை போர்த்திய பச்சையாக இருக்கிறது.
அட்டைப்பூச்சிகள் மட்டும் உறிஞ்சவில்லை.  ஆறறிவு உள்ள ஆங்கிலேயர்கள் தான் அன்று இவர்களை அதிகமாக உறிஞ்சினார்கள்.

அன்று மண்டபத்தில் தொடங்கிய வரலாற்றுப் பயணம் இன்று மண்டையோட்டு குவியலில் வந்து முடிந்துள்ளது.  சென்ற பயணத்திலாவது இறங்கியதும் தான் பிரச்சனைகள். ஆனால் இன்று உள்ளே வரும் பயணத்தில் தொடக்கம் முதல் தமிழ்நாட்டிற்குள் வந்து சேரும் வரைக்கும் உயிர் பயம் என்பதை மவுன வலி உணர்ந்து இருந்தால் எப்போதோ வழி உருவாகி இருக்கும்.

கறை என்பது கரை கடந்தவர்களின் நெஞ்சுக்கு நீதியாகத் தான் தமிழின உலகம் முடியும் வரைக்கும் இருக்கும்.

ஆனால் இந்த தோட்டத்தமிழர்கள் வாழ்வியலின் அவலத்தை விட அவர்களுக்கு உள்ளே நடந்த அவல அரசியல் பகடைக்காய்கள் அத்தனையும் இன்றைய தமிழ்நாட்டு அரை வேக்காட்டு தனத்தைவிட அதிகமாகத் தான் இருக்கிறது.

தோட்டத் தொழிலாளருக்கு பேசத் தெரியாது.  பேசினாலும் புரியாது. உரிமை என்பதை உள்ளத்திற்கு உணர்த்துவர் யாரும் இல்லை. கல்வி என்பதே அதுவும் ஒரு ஏதோ ஒரு வாசனை என்று கருதுபவர்களை எப்படி கையாளுவார்கள்?

வந்தவர்கள் போனாவர்கள் அத்தனை பேரும் பந்தாடினார்கள். ஆட்டத்தின் இறுதியில் கோல் போட்டாகி விட்டது.

ஆமாம் கோல்மால் மூலம் மொத்த நபர்களையும் (சிறீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம்) ஒரே நாளில் வந்ததைப் போலவே நாடோடியாக மாற்றம் அடைய வைத்தனர்.   மொத்த உழைப்பையும் உறிஞ்சு விட்டு ஒரு தலைமுறையும் "ஓடுங்கடா உங்க ஊருக்கே" என்றால் என்னை நினைக்கத் தோன்றும்.

அந்த புனித நல்ல தமிழரையும் பின்னால் பார்க்கலாம்.

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஓரே நாடு.

தமிழனின் துரோகத்தால் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிப்பு.

இதனால் என்ன லாபம்?  என்ன நட்டம்?

அன்றைய தினத்தில் மொத்த பூர்வகுடி தமிழர்களும், தோட்டத் தொழிலாளர்களான இந்திய தமிழர்களும் ஒரே அணியில் நின்று இருந்தால்?


அன்றைய தினம் மொத்த தமிழர்களின் ஜனத்தொகையை வைத்து உருவாகி இருந்த 33 சதவிகிதம் மூலம் இன்று வரையிலும் எந்த சட்ட மசோதவும் உயிர் பிழைத்து வந்து இருக்க முடியாது.  தமிழன் ஒப்புதல் இல்லாமல் இன்றைய இந்தியா கூட "என்னப்பா சௌக்கியமா?" என்று மட்டும் தான் குசலம் விசாரித்துக்கொண்டுருக்க முடியும்..

அன்றைய தமிழ் தலைவர் ஒருவர் உருவாக்கிய ஓரவஞ்சகம் இன்று வரைக்கும் மொத்த இலங்கை தமிழர்களையும் வஞ்சகம் இல்லாமல் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது.

தொடக்கத்தில் சொன்னதை தான் மறுபடியும் சொல்லத் தோன்றுகிறது.  விதி?


இவர்கள் பிழைக்க வந்தவர்கள்.  இந்தியாவில் வாழ தகுதியில்லாமல் வந்தவர்கள்.  இங்கு இவர்களுக்கு குடியுரிமை எதற்கு? என்று எத்தனை புனித ஆத்மாக்கள் பாடு பட்டார்களோ?   எத்தனை பேர்கள் இதன் மூலம் விலை போனார்களோ?


இன்று வரையிலும் இலங்கை பிரச்சனைகள் தீர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே உருவான அவதாரம் தான் இந்த தோட்டத் தொழிலாளர்கள்.

வினையை விதைத்து விட்டு தினை எங்கே என்று கேட்டால் திகைப்படைய மாட்டீர்களா?

ஆங்கிலேயர்கள் ஒரே நாடு.  சிங்களர்கள் தான் பெரும்பான்மையினர் என்று கொண்டு வந்தமைக்கு அவர்களுக்கு எத்தனையோ உள் அர்த்தமான காரணங்கள் இருந்து இருக்கலாம்.  ஆனால் வந்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல், பரதேசியாக மாற்ற உதவிய தொடக்க கால தமிழ் தலைவர்கள் அன்று தொடங்கிய ராஜபாட்டை தான் இன்றைய வாழ்க்கையின் எச்சமும் சொச்சமும்.

அவர்கள் கல்லறையில் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் இன்று இருப்பவர்களையோ உனக்கு கல்லறையும் தேவையில்லை. உன் கருவரையில் வளரும் குழந்தையும் தேவையில்லை என்று உருவாகி உள்ள கருவை தினந்தோறும் அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆமாம் தொடக்கத்தில் 33 சதவிகிதம் உள்ள தமிழினம்.  இன்று?

அன்றைய தினத்தில் இலங்கையில் மொத்தமாய் வாழ்ந்த தமிழனித்தின் 33 சதவிகிதத்தை சரியான விதத்தில் செயலாக்கம் படுத்தி காட்டி இருந்தால்?

தோட்டத் தமிழர்களின் குடியுரிமை ஆதரவு மூலம் நிலைநாட்டி இருந்து இருந்தால்?

மொத்த தமிழ் மக்களும் ஒரே நோக்கம்.  ஒரே பார்வை.  ஒரே தமிழினம்  என்ற இந்த மூன்று கொள்கைக்குள் கொண்டு வந்து இருந்தால்?

இன்றைய தமிழ்நாட்டு தலைவர்களுக்கு வேலை இல்லாமலே போயிருக்கும்.  அவர்களும் ஓட்டுக்காக வேறு எதையாவது யோசித்துக் கொண்டு இருப்பார்கள்

மற்றொன்றையும் யோசித்துப் பாருங்கள்.  இந்திய முன்னாள் பிரதமர் நேரு, மனைவி கமலா அவர்களை ஸ்விஸ் நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்து அங்கே தங்கி இருந்த போது அப்போது இத்தாலியை ஆண்டு கொண்டுருந்த சர்வாதிகாரி முசோலினி தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்றார்.

ஸ்விஸ் நாட்டில் உள்ள இத்தாலி தூதரகம் வழியே எங்கள் நாட்டு விருந்தினராக வந்து விட்டுப் போங்கள் என்ற அழைப்பையும் நேரு நிராகரித்தார்.

காரணம் அப்போது ஆப்பிரிக்கா பழங்குடியினர் மேல் கொடூரமான விச வாயு தாக்குதல் நடத்தியவரின் ரத்த கரங்களை குலுக்க விரும்பாத நேரு சொன்ன வார்த்தைகள் இப்போது இங்கு உள்ளவர் எவருக்கும் வந்து எட்டியிருக்காது.

சம்பந்தம் இல்லாத பழங்குடியினருக்காக கண்ணீர் சிந்தியவர்களை கொண்டதும் இந்த இந்திய நாடு தான்.  தொப்புள் கொடி உறவை விட "கொண்ட உறவு" மேலானது என்பவர்களையும் கொண்டதும் இந்த நாடு தான்.

எத்தனையோ இந்திய தலைவர்கள் இறந்த போது இன்று பள்ளி விடுமுறை தினம் என்று மகிழ்ந்த மனம், அன்னை இந்திரா இறந்த போது புரியாத வயதில் கூட மனம் குதுகலமாய் இருக்கவில்லை. உருவாகி இருந்த பிம்பம் கூட ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். அன்று புரியாத காரணங்கள் இன்று புரியும் போது, இந்த இலங்கை தமிழர்களுக்காகவது அந்த காலன் வைத்து இருந்த அந்த அன்னையின் பேரேடு தொலைந்து போயிருக்கக்கூடாதா? என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.

அதனால் என்ன?  இந்தியனாக வணக்கம் செலுத்துவது தானே முறை.

வாழ்க பாரதம்.  வளர்க எதிர்காலத்தற்காக பணம் சேர்க்கும் நாயகர்கள்

ஆனால் இந்த இடத்தில் தனி மனித மனதின் வைராக்யத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  பிரிட்டனை ஆண்ட மார்க்கெரட் தாட்சர் இதே போல் ஹிட்லர் கொடுமையில் இருந்து தப்பித்து அகதியாகத்தான் போய் சேர்ந்தவர்.  வாழ்ந்தவர்.  வாழ்க்கையின் இறுதியில் அத்தனை பேருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

3 comments:

  1. /இன்றைய தமிழ்நாட்டு தலைவர்களுக்கு வேலை இல்லாமலே போயிருக்கும். அவர்களும் ஓட்டுக்காக வேறு எதையாவது யோசித்துக் கொண்டு இருப்பார்கள்/

    சரியாகச் சொன்னீர்கள்.

    /இந்த இலங்கை தமிழர்களுக்காகவது அந்த காலன் வைத்து இருந்த அந்த அன்னையின் பேரேடு தொலைந்து போயிருக்கக்கூடாதா? என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது./

    அந்த அம்மையாரும், எம்.ஜி.ஆரும் இருந்திருந்தால் சரித்திரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். தமிழனுக்கு தலைஎழுத்தும் மாறி இருக்கும்.

    ReplyDelete
  2. //உடனடியாக செய்ய வேண்டியது அடுத்த விமானம் பிடித்து மேல்நாட்டு கல்வி கற்று அங்கேயே பணிபுரிந்து , வாங்கும் போதும் மட்டும் நான் மூணாப்பு படிச்சது எங்க ஊரு குக் கிராமத்துல என்று சமையல் சமாச்சாரத்தை சொல்ல வேண்டும். அப்படித்தான் இன்றைய சூழ்நிலையில் இந்திய மானத்தை காக்க வேண்டும்

    //


    செருப்படி.


    எங்கோ படித்த கவிதை நினைவிற்கு வருகின்றது...


    சிங்களவன் அடியாலே
    சிதறிவந்து விழுந்தவனே!
    எக்கதியும் அற்றதனால்
    அகதியாய் ஆனவனே!

    நாடிழந்து,வீடிழந்து
    உரிமைகளை நீ இழந்து
    ஆண்டியான காரணத்தால்
    உன்னை மண்டபத்தில்
    ஒதுக்கிவிட்டார்!

    ReplyDelete
  3. மண்டபம் கேம்பில் ஒரு வருடம் படித்திருக்கிறேன். பல புலம் பெயர்ந்தவர்கள் என் நண்பர்கள். பாம்பன் பாலம் மறக்க முடியாத ஒரு இடம், என் தந்தையை இழந்த இடம்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.