1980 முதல் 1990 வரை பள்ளி முதல் கல்லூரி வரை வீட்டுக்கு வந்தவரை பாயம்மா வந்துருக்காங்க என்ற சொல் அளவுக்கு உறவு இருந்தது. கறிக்கடை பாய் மற்றும் மீன் கதை பாய் போன்றவர்கள் சாகின்ற வரைக்கும் காசுக்கு அல்லாடிக் கொண்டே இருந்தவர்களாக வாழ்ந்து இறந்தார்கள். நெல்மூட்டையை இறக்கியாச்சுன்னு அத்தாகிட்ட சொல்லும்மா என்று என்று அரபு உடை இல்லாத முகம் காட்டிய இயல்பான பெண்ணிடம் எளிதாகச் சொல்லிவிட்டு வர முடிந்தது. பெரிய அகப்பையில் கால் கிலோ கறி என்கிற அளவுக்கு மகன் மகள் திருமணத்தில் உறவு போலக் கலந்து கொள்ள முடிந்த காலம் ஒரே ஒரு நபரால் தமிழகத்தில் மொத்தமும் மாற்ற முடிந்தது. மாற்றினார்.
அவர் பெயர் பி. ஜெய்னுல் ஆபிதீன்.
தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலர் தனியாகப் பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினர். பின்னர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டு 16-01-2009 அன்று இந்திய தவ்ஹித் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பைத் துவங்கினார்.
தூய என்ற சொல்லைத் தேடத் தொடங்கினார்கள். தனி மனித வக்கிரங்களும் அணிவகுக்கத் தொடங்கியது. பணம் பார்த்தார்கள். பதவியை வைத்துக் காசாக்கினார்கள். புரியாதவற்றைப் புளி போடு விளக்குகிறேன் என்று என்னன்வோ தமிழகம் முழுக்க சென்று பேசினார்கள். பரப்பினார்கள். பணம் சேர சேர மாற்று வழிகளும் உருவானது. பலரும் சேர்ந்தனர். எப்போதும் போலச் சண்டை சச்சரவு அதிகாரப் போட்டிகளும் ஒரு சேர உருவானது. கிளை அமைப்புகளாகப் பல் வேறு பிரிவுகளும் உருவாக உருவாக எது உண்மை எது பொய் எது நிஜம் எது தான் மார்க்கம் என்பதனைப் பற்றி யாரும் யோசிக்காமல் அரசியல் அதிகார ஆசையில் முந்தினவனுக்கு முன்னுரிமை என்று ஓடத் தொடங்கினார்கள்.
ஒரு மசூதி என்பது மையப் புள்ளி. அச்சாணியாகும். அதன் சக்கரங்கள் பல உள்ளது. கால்வாசி தான் கண்களுக்குத் தெரியும். மீதி தெரியாது. மார்க்கம் என்ற கொள்கையை அப்படியே அட்சரம் பிறழாமல் நிஜமாகவே வாழ்பவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள். இங்கே ஸ்டார் நிட்டிங் என்ற பழைய நிறுவன முதலாளி ஒருவர் இருந்தார். அவர் இறந்த சமயத்தில் மொத்த ஊரும் அழுதது. அத்தனை பேர்களும் கடையடைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஏழெட்டு பேர்கள் இருக்கின்றார்கள்.
எங்கள் ஊரில் கலந்தர் ராவுத்தர் என்றொருவர் இருந்தார். அப்பாவுக்கு மிக மிக நெருக்கமானவர். ஒன்பது பெண் குழந்தைகள். கடைசியில் வெற்றிகரமாக ஆண் குழந்தை பத்தாவதாகப் பிறந்தது. பெரிய அரிசி ஆலை வைத்திருந்தார். ஊருக்குள் இருந்த 12 ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் செய்து கொடுத்தார். எங்கள் வீட்டில் யாரோ ஒருவருடன் யாரோ ஒருவர் படிப்பார்கள். ரம்ஜான் சமயத்தில் தான் பள்ளிவாசல் நினைப்பே பலருக்கும் வரும். தொழில் சிந்தனைகள் தான் அதிகம். தஞ்சாவூர் பக்கம் நெல் மூட்டைகள் போய் விடக்கூடாது என்பதற்காக ஆட்கள் வைத்து சந்தைப் பேட்டை பக்கம் மொத்த மாட்டு வண்டிகளையும் கொண்டு வரச் செய்து விடுவார்.
ஒவ்வொரு ஊரிலும் இதே போல சொல்வதற்கு ஒரு கதையுண்டு. மதம் என்ற பெயரில் கெடுபிடி இல்லை. விலக்கல் இல்லை. விருந்தோம்பல் இயல்பாகவே இருந்தது. தூய இஸ்லாம் என்று சொல் மூலம் தமிழகத்தை கூறு கூறாகப் பிரித்ததோடு இன்று என்ஐஏ மாவட்டம் தோறும் வாரந்தோறும் தேடித் தேடிப் பிடித்துச் செல்லும் அளவிற்கு மாற்றிவிட்டனர்.
நான் எழுத வந்தது வேறு. அந்த முதலாளி என் சாதியைச் சேர்ந்தவர். அந்த இயக்குநர் என் மதத்தைச் சேர்ந்தவர் தான் என்று ஏதாவது ஓர் உதவி கேட்டுப் பெறுங்கள் பார்க்கலாம். சென்னையில் கிரசண்ட் கல்லூரியில் வருடந்தோறும் எத்தனை இஸ்லாமியர்களுக்கு இலவசமாக சீட் கொடுக்கின்றார்கள். கேட் அளவில் நிறுத்தி விசாரித்து அனுப்பி விடுகின்றார்கள். இன்று வரையிலும் அப்படித்தான் அந்த நிர்வாகம் நடத்துகின்றது. இயக்குநர் அமீர் வாய் கிழிய பேசுகின்றாரே? நிஜ வாழ்க்கையில் எத்தனை பேர்களுக்கு உதவிக் கொண்டு இருக்கின்றார். வாய்ப்பே இல்லை. அவரே பிழைப்பைப் பார்க்க டீக்கடையும் காபி கடை வைக்கவும் தொடங்கி தன் பிழைப்பை பார்க்கத் தொடங்கி விட்டார்.
தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் மலேசியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் கூட எவ்வித தொடர்புமில்லை. முப்பது வருடங்கள்அங்கே வாழ்ந்தாலும் அவர்கள் இவர்களை ஊர்க்காரன் என்று தான் அழைப்பார்கள். அரபு இஸ்லாமியர்கள் கதையோ இன்னமும் வேறு. ஆனால் இங்கே இருப்பவர்கள் காஸாவில் என்ன நடக்கின்றது என்பதே அறியாத மக்களைப் பேசி சொல்லி ஒன்று திரட்டி எங்கள் வலிமையைக் காட்டுகின்றோம் என்ற பெயரில் கோவையில் ஊர்வலம் நடத்துகின்றார்கள். அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டமாகப் பரவும். தேர்தல் முடியும் திருக்குவளை கும்பல் வேகமாக நகர்த்துவார்கள். இன்னோருத்தவர் நெற்றில் திருநீறு வைக்காமல் அவர்கள் முன் நின்றால் நமக்குத் தான் ஒட்டளிப்பார்கள் என்று அப்பாவியாக நம்புகின்றார். என்ன சொல்வது?
என் எழுத்தை மிக ஆர்வமாக வாசிக்கும் சென்னையைச் சேர்ந்த நண்பர் நான் பாஜக ஆதரவுத் தளத்தில் எழுதத் தொடங்கியவுடன் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டார். மற்றொரு நண்பர் இயல்பாகப் பேசி நான் சுருக் சுருக் என்று உண்மையைப் போட்டு உடைக்கும் காரணத்தால் தேவைப்படும் நேரத்தில் அழைக்கின்றார். நேற்று பேசியவர் உங்கள் ஈழம் புத்தகத்திற்கு 800 கொடுக்கலாம் என்கிறார். அப்படியே ஈழத்தில் விடுதலைப்புலிகள் தொடக்க காலத்தில் கொன்றழித்த இஸ்லாமியர்களை நினைவில் வைத்து அதைப் பற்றி ஏன் விரிவாக எழுதவில்லை என்றார். இவர்கள் அத்தனை பேர்களும் இதையும் வாசிப்பார்கள்.
ஒரு பக்கம் தூய இஸ்லாம் உருவாக்கியது என்ன? மற்றொரு பக்கம் திமுக ஆதரித்த காரணத்தால் நம் சமூகத்தின் வளர்ச்சி என்ன? என்பதனை உள்ளும் புறமும் இவர்கள் எவரும் அலசி ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை. பாஜக நம் எதிரி என்ற இந்த மூன்று வார்த்தைகளை மந்திரம் போலவே உச்சரித்துக் கொண்டேயிருக்க வைக்கின்றார்கள். ஏன் எதிரி? எதற்காக எதிரி? எப்போதிலிருந்து எதிரி? எவரும் பேசுவதில்லை. மதவாதத்தை எதிர்க்கின்றோம். மத நல்லிணக்கம் பேசுகின்றோம் போன்றவைகள் எல்லாம் கருணா காலத்து பழைய டயலாக். மதம் சாதி வேறுபாடு இல்லாமல் தொழில் என்றால் அசுர வேகத்தில் செயல்படக்கூடியவன் தான் வெல்வன். இது தான் உலக நியதி. என்னை தாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் ஏறி மிதித்து சென்று கொண்டே தான் இருப்பார்கள். வாய் இருந்தால் போதாது. செயல் முக்கியம்.
எட்டரைக் கோடி பேர்களில் சுண்டு விரல் அளவில் இருக்கும் நமக்கும் ஆள் காட்டி விரல் போல மொத்த ஜனத் தொகை ஐந்தில் ஒரு மடங்கு உத்திர பிரதேசத்தில் வாழும் இஸ்லாமியர்கள் ஏன் பாஜக விற்கு ஓட்டளிக்கின்றார்கள் என்பதனை இவர்கள் உணர மறுக்கின்றார்கள் என்றா நினைக்கின்றீர்கள்? கோஷம் போடும் ஒவ்வொருவருக்கும் தெரியும். திமுக நமக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்கின்றது. அதிகமாக ஏழைகளாகவே நம் மக்கள் இன்னமும் இருக்கின்றார்கள். படிப்பறிவு மிகவும் குறைவு. அனைத்தும் தெரியும். புலி வால் பிடித்த கதை தான். விட்டால் அவன் அந்தரங்கம் இங்கே வெளியே வரும். இங்கே உள்ள அந்தரங்கம் அங்கே வெளியே வந்து விடும். நீ மூடு. நானும் மூடிக் கொள்கிறேன். இப்படித்தான் இந்த உறவு இன்னமும் போய்க் கொண்டு இருக்கின்றது.
எத்தனை கோடி எந்தந்த நாட்டில் இன்பம் வைத்தாய் இறைவா? என்பது இவர்களுக்கும் தெரியும்? அர்த்தம் புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.
கருணாநிதி என்னவெல்லாம் தமிழக இஸ்லாமியர்களுக்குத் துரோகம் இழைத்தார். எப்படிப் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடித்தார். எப்படி இஸ்லாமிய இயக்கங்களைத் துண்டாடினார். வளர்ந்து வரக்கூடியவர்களை எப்படித் திசை மாற்றினார் என்பதனை அப்துல் சமது ஒரு சிறிய புத்தமாக எழுதியதை என் தமிழக அரசியல் வரலாற்றில் ஓர் அத்தியாயத்தில் எழுதியுள்ளேன். இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றவனை, மது மூலம் மொத்த மாநில மக்களையும் தள்ளாட்டத்திலே வைத்துக் கொண்டு இருப்பவர்களையும், அரசியல் என்பதே அறமற்ற செயல்கள் செய்வதற்கு மட்டுமே என்பதாக இவர்கள் இருவரும் மாறி மாறி நோம்பு சமயத்தில் குல்லா போட்டு தங்களை ஏமாற்றுகின்றார்கள் என்பதனை மக்கள் மனதில் உணர்ந்தே இருக்கின்றார்கள். ஆனால் அதிகார அரசியலுக்கு ஆசைப்படும் பிம்பங்கள் எப்படித் தங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார்கள் என்பதும் ஏதோவொரு சமயத்தில் இது உடைபடும் என்பதனையும் பார்த்துக் காத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
வெறுமனே இவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டித் தூண்டி, பயமுறுத்தியே வைத்து ஓட்டு வாங்கிக் கொண்டு ஏற்கனவே இயல்பாக நடந்த சில விசயங்களை வைத்துக் கொண்டு நாங்கள் மட்டும் இல்லையென்றால்? என்று மிரட்டல் கலந்த கெஞ்சலுடன் எத்தனை நாட்களுக்குத்தான் இவர்கள் ஆட்டம் போடப் போகின்றார்கள்?
இறுதியாக சில வார்த்தைகள்....
இது வரை இந்தியாவில் இருந்த பிரதமர்களின் இஸ்லாமியர் நாடுகள் மோடியைத்தான் தங்கள் உற்ற நெருக்கமான நண்பராக வர்த்தக சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு மிக மிக நெருக்கமாக வைத்துள்ளது இங்குள்ள படித்த இஸ்லாமியர்களுக்கு நன்றாகவே தெரியும் தானே?
அதி தீவிர மார்க்க வாதத்தைத் கடைபிடிக்கும் ஈரான் தான் தொடக்கம் முதல் இந்தியாவிற்கு ஐ. நா சபை வரைக்கும் அசாத்தியமான நம்பிக்கையளித்த நாடு. இன்று வரையிலும். இஸ்ரேல் போரில் ஈரான் ஒரு வேளை இறங்கினால் மோடி என்ன செய்வார்? என்பது மிகப் பெரிய தர்மசங்கடம்? எத்தனை இஸ்லாமியர்களுக்குத் தெரியும்?
சவூதி நாடுகளில் ஜெய் ஸ்ரீ ராம் என்று பேசுகின்றார்கள். சொல்கின்றர்கள். உரையைத் தொடங்கும் போது சிரித்துக் கொண்டு ஆர்ப்பரிக்க வைக்கின்றார்கள். அவர்கள் மதம் இதனால் என்ன பாதிப்படைந்து விட்டது.
இஸ்ரேல் பாலஸ்தீனம் விசயங்களை எவரும் பேச வேண்டாம். அறிவுரை தேவையில்லை. பிச்சுப் பிடுவேன் படவா? என்று ஏன் அரச குடும்பத்தினர் அதட்டுகின்றார்கள்? இங்குள்ள உட்டாலக்கடி வேலையெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. பிதுக்கி விடுவார்கள்.
எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் நாளுக்கு நாள் பொருளாதார ரீதியாக மேலே எழுந்து வருவார்கள். இவர்கள் மேலே வந்து விட்டால் நமக்கு ஆபத்து என்று கருதிக் கொண்டு இருப்பவர்களின் முகத்திரை ஒரு நாள் தெரியும்.
ஆனால் தமிழகத்தில் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டுக்குள் கட்டாயத்திற்கு வாழும் இங்குள்ள இஸ்லாமியர்கள் விரைவில் உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
டெல்லியில் உள்ள பல்வேறு பிரிவுகள் அடங்கிய இஸ்லாமியர்கள் ஏன் மோடி மேல் இத்தனை அக்கறை வைத்துள்ளார்கள்? அனைத்து கூட்டங்களிலும் மோடி கலந்து கொண்டு தானே இருக்கின்றார்? கடந்த ஒன்பது ஆண்டுகளில் எத்தனை மதவாத கலவரம் இந்தியாவில் நடந்தது? காங்கிரஸ் ஆட்சியில் கணக்கெடுத்து பார்க்கலாமே? மதம் மனதிற்குள் இருக்க வேண்டும். நம் பொருளாதார வளர்ச்சிக்கு யார் உதவுகின்றார்களோ அவர்கள் பின்னால் செல்வது தான் அனைவரும் செய்யும் காரியம் ஆகும். அப்படியுள்ள சமூகம் தான் முன்னேறும். இங்குள்ளவர்கள் சரியான தலைமையை தேர்ந்தெடுத்து இனியாவது மாறத் தொடங்க வேண்டும்.
யோகி வந்து அமர்வதற்குள் மாறியாக வேண்டும்.
அவர் மோடியல்ல.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.