நடுத்தரவர்க்கத்திற்குக் கீழ் நிறுவனங்களுக்குச் தொழில் செய்து கொண்டு இருக்கும் அனைவரும் நமக்கு துடைத்து எரியப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். ஒன்று அவர்கள் வைத்திருக்கும் நிறுவனம் ஒரு பெரிய நிறுவனத்திற்குக் கூலி நிறுவனமாக மாற வேண்டும் அல்லது பெரிய நிறுவனங்களுக்கு சிறிய நிறுவன முதலாளிகள் வேலைக்குச் செல்ல வேண்டும். தாங்கள் செய்யக்கூடிய தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளை, வாய்ப்புகளை ஒரே கூரையில் கீழ் இருக்கக்கூடிய வகையில் வசதி படைத்தவர்கள் மட்டுமே தற்போது தொழில் செய்ய முடியும். நிலைத்து இருக்க முடியும். லாபம் பார்க்க முடியும்.
தற்போது தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் அரசியல் என்பது டெல்லி மேல் மட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் செயல்படக் கூடியதாகவும், மாநிலத்திற்குள் கடைசி வரைக்கும் சூறையாடுதல் எப்படி? என்பதனையும் தற்போது செயல்முறையில் காட்டி வருகின்றனர். இவர்கள் நமக்குத் தேவைப்படுவார்கள் என்று அவர்களும் அவர்களை நாம் ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று இவர்களும் மாறி மாறி நடத்தி வரும் நாடகங்கள் சசிக்க முடியாததாக உள்ளது.
லஞ்சம், திருட்டு, கொள்ளை, அரசுப் பணத்தைச் சூறையாடுதல் என்பதைத் தற்போது தமிழகத்தில் வாழும் மக்களே ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றார்கள். தேர்தலில் ஊழல் பேசு பொருளாக இருக்கவே முடியாது என்று படித்தவன், படிக்காதவன், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் உள்ள புரோக்கர்கள் என்று அத்தனை பேர்களும் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றார்கள். உங்கள் தெரு, உங்கள் பகுதி சாலைகள் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதனைப் பற்றி நீங்கள் யோசித்துப் பாருங்கள். நான் இந்தக் கட்சியை ஆதரிக்கின்றேன் என்று சொல்லக்கூடிய எவராக இருந்தாலும் பத்திரப்பதிவுத் துறை முதல் போக்குவரத்துத் துறை வரை கூடவே மற்ற தமிழக அரசுத் துறைகளில் வாங்கப்படும் அநியாய லஞ்சப்பணம் குறித்துக் கவலைப்படாதவர்கள் குறித்து நான் கவலைப்படுகின்றேன்.
ஜெ உருவாக்கிய பாதையின் உச்சக்கட்டம் என்பது இந்த கால கட்டம் தான். வருடம் குடும்பத்திற்கு ஒரு லட்சம் கோடி. அமைச்சர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரு லட்சம் கோடி. அதிகாரிகளுக்கு அரை லட்சம் கோடி. மொத்த இரண்டரை லட்சம் கோடி தமிழக நிதிநிலையில் கடன் அதிகமான கணக்கு சரியாகவே பொருந்திப் போய் விடுகின்றது. மின்சாரக் கட்டண உயர்வில் தாக்குப் பிடிக்க முடியாத பல சிறு குறு தொழில் அதிபர்கள் மூடிவிட்டுச் சென்று விட்டனர். திருகப்படும் குரல்வளை குறித்து பேச ஆள் இல்லை.
இரண்டு லட்சம் கோடி சொத்தாக முதலீடாக, பணமாக, கிரிப்டோ நாணயமாக, வெளிநாட்டு முதலீடு என்று உருமாறியுள்ளது. நிஜமாக அடிமடி வலை போட்டு அத்தனையும் அள்ளிக் கொண்டு இருக்கின்றார்கள்.
சிறிய, பெரிய மற்றும் எதிர்க்கட்சிகளில் இரண்டாம் கட்ட நிலையில் உள்ளவர்கள் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் தொழில் ரீதியான புரிதல்களுடன் உள்ளூருக்கும் உள்ள முக்கிய கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து செயல்படக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். மதவாதம், சாதிய வாதம் என்பன போன்ற கொள்கைகள் அனைத்தையும் பொருள் வாதம் தின்று செரித்து விடுகின்றது. எந்தக் கட்சி என்றாலும் இரண்டாம் கட்ட அரசியல்வாதிகளும் சிறிய பெரிய பதவியில் இருப்பவர்கள் முதலீடு செய்து மூன்று மடங்கு லாபம் எடுக்கக்கூடிய அனைத்துச் சாத்தியக்கூறுகளைப் பார்த்து அந்தந்த பகுதிகளுக்கும் தத்தமது ராஜ்யங்களை அமைத்து உள்ளனர். இணையத்தில் வெறி கொண்டு அலைபவர்களுக்கு இந்த மைக்ரோ மேலாண்மை அரசியல் புரியாது.
***
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு சுபயோகச் சுப தினத்தில் தொலைக்காட்சி இனி நம் குடும்பத்திற்குத் தேவையில்லை என்று நான் முதலில் முடிவு செய்தேன். பிறகு குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டனர். ஒரே காரணம் கேபிள் இணைப்பு கொடுப்பவன் காட்டிய அலட்சியத் திமிர் முதல் இதற்குள் பின்னால் உள்ள வணிகம், நாம் எந்த அளவுக்கு முட்டாள் ஆக்கப்படுகின்றோம் என்பதனை உணர்ந்து செயல்படுத்தினோம். இன்று வரையிலும் வெற்றி அடைந்துள்ளோம். மகள்கள் கல்லூரியில் அடுத்தடுத்த வருடங்களில் படிக்கின்றார்கள்.
மிக நல்ல பெருமையாகச் சொல்லக்கூடிய மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
இன்னமும் தினசரி பத்திரிக்கை வாசிப்புப் பழக்கம் உள்ளது. வாரம் ஒரு முறை நூலகம் செல்கின்றார்கள். அப்படியான சூழலை நான் உருவாக்கிக் கொடுத்துள்ளேன்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.