அஸ்திவாரம்

Sunday, June 04, 2023

குடிநோயாளிகள் வாழ்க்கை

 

பொறுமையாக நிதானமாக விரலால் தள்ளிக் கொண்டே செல்லாமல் படிக்க நேரம் இருந்தால் தொடரவும்.

••••



தமிழக அரசியல் வரலாற்றில் அவர் இரும்பு மனுஷி, இவர் வித்தைக்காரர் என்று பாராட்டி பத்திரம் வாசிக்கும் முன்பு ஒரே ஒரு முறை உங்கள் ஊரில் இருக்கும் தலைமை அரசு மருத்துவமனையை முழுமையாகச் சுற்றிப் பாருங்கள். பெரிய அரசு பள்ளிக்கூடம் இருந்தால் உள்ளே சென்று அடிப்படை கட்டமைப்பு எப்படி சிதைக்கப்பட்டுள்ளது? என்ன காரணம் என்பதனை யோசித்துப் பாருங்கள். கடைசியாக அரசு கலைக்கல்லூரிகள் இருந்தால் தேவையான பேராசிரியர்கள் இருக்கின்றார்களா

ஏன் இல்லை

பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதனை உங்கள் மகன் மகள் தனியார்ப் பள்ளி கல்லூரியில் படிக்க வைக்கக்கூடிய வசதி இருந்த போதிலும் நான் மேலே சொன்ன மூன்று விசயங்களும் கடந்த முப்பது ஆண்டுகளில் எப்படிச் சூறையாடப்பட்டுள்ளது என்பதனை உணர்ந்து உள்வாங்கிய பின்பு உங்கள் பிரியமான பட்டம் வைத்து அழைக்கவும்.

நான் இப்போது பேசப் போவது அரசு கலைக்கல்லூரிகளில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் கலந்தாய்வு சார்ந்து சில விசயங்களும் அதற்குப் பின்னால் உள்ள சமூகத்தில் திட்டமிட்டு மதுவினால் உருவாக்கப்பட்ட அலங் கோலங்களும் அதனால் உருவான பிளவுகளும்.

அரசு கலைக்கல்லூரிகளில் தற்போது மாணவச் சேர்க்கை நடந்து கொண்டு இருக்கின்றது. கடந்த சில நாட்களாக முதலில் எப்போதும் அழைக்கப்படும் ஊனமுற்றவர்கள், சிறப்புப் பிரிவில் உள்ளவர்கள் என்ற பட்டியலில் உள்ள மாணவிகள் மற்றும் மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டு இருக்கின்றது.தனிப்பட்ட என் விருப்பம் சார்ந்து செய்யப்படும் செயல்பாடுகளுக்கு உதவிடும் நண்பர் களுக்கு என் முதல் வணக்கம்.

நான் இங்குள்ள அரசு பெண்கள் கலைக்கல்லூரியைக் கவனித்து வருகிறேன். தரவரிசைப் பட்டியல் அனைத்தையும் பார்த்த போது இளங்கலை தமிழ் பாடத்திற்கு ஏறக்குறைய 1000 மாணவிகள் விண்ணப்பித்து இருந்ததைப் பார்த்தேன். நான் படித்த காலகட்டத்தில் தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற வகுப்புகளில் அதிகபட்சம் பத்து மாணவர்கள் இருந்தால் அதிசயம். தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் கல்லூரிகள் தங்கள் இருக்கை அனைத்தையும் நிரப்பி முடித்தவுடன் முடியாதவர்கள், கிடைக்காதவர்கள் அனைவரும் அரசு கலைக்கல்லூரிக்குள் வந்து விழுகின்றார்கள். ஆம் பாதிக்குப் பாதி மாணவிகள் வேண்டா வெறுப்பாகவே வந்து சேர்க்கின்றார்கள். நான் நேரிடையாகவே பேசிப் பார்த்துப் புரிந்து கொண்டேன்.

முப்பது வருடங்களுக்கு முன்பு கல்லூரிப் படிப்புக்குப் பெண்கள் வருவதில்லை. குடும்பம் விரும்பாது. திருமணம் முக்கியம். இன்று 1500 இருக்கை உள்ள கல்லூரிக்கு 7500 விண்ணப்பம் வந்து குவிகின்றது. பள்ளிக்கல்வித்துறை செய்யும் சமூக சேவையின் விளைவு இது.

ஆனால் இன்று சாதாரண அரசு கலைக்கல்லூரிகளில் கூடப் பணம் கட்ட முடியாத மாணவிகள் அனைவர் வாழ்க்கையிலும் மது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பதனை பார்க்க முடிந்தது.

கடந்த 30 வருடத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் தங்கள் சுயலாபத்திற்காக மது என்ற அரக்கனை இங்கே அனுமதித்து, வளர்த்து, ஆளாக்கி இன்று அவன் இல்லையெனில் தமிழகம் செயல்படாது என்பதாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ள நாடகத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயமும் பணவெறி முதலைகளின் ரத்த கவிச்சியே ஆகும்சமகால சமூக அவலங்களினால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாழ்க்கை எப்படிப் பாழாகி அடிப்படையான மிகச் சிறிய கல்லூரி கட்டணம் கூடக் கட்ட முடியாமல் தடுமாறுவது வரைக்கும்.

வளமான, வசதியான குறைந்த பட்சம் அடிப்படைத் தேவைகளுடன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இது போன்ற மாணவர்களை, மாணவிகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்களின் வாழ்நிலை, சூழ்நிலை போன்றவற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். என் செயல்பாடுகளை முழுமையாக எப்போதும் வெளிப்படையாக எழுதுவதில்லை. ஆனால் என்னைப் புரிந்து என்னோடு என் பயணத்தில் பங்கெடுத்த, பங்கெடுத்துக் கொண்டிருக்கும் பல நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் இங்கே எழுதி வைப்பது என் கடமை எனக் கருதுகின்றேன்.

வாழ்நாளின் இறுதிவரைக்கும் காரைக்குடி வள்ளல் அழகப்பர் போலக் கோடி கொடுத்துக் குடியிருந்த வீடும் கொடுத்த மகான் போல வாழ முடியாது என்று தெரிந்ததும் நம்மால் முடிந்ததை முயல்வோம் என்ற நோக்கத்தில் இந்த வருடம் கண்டதும் கேட்டதும் பார்த்ததும் என்று உள்வாங்கியதைப் பதிவு செய்வது முக்கியமல்லவா?

காரணம் இது போன்ற நிகழ்வுகளை எவரும் எழுத விரும்புவதில்லை. முதலில் பள்ளிக்கல்வித்துறையிலிருந்து தொடங்குகின்றேன்.

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அரசு பள்ளிக்கூடங்களில் உடல் ஊனமுற்றோர் என்றொரு பிரிவு உண்டு. அவர்களின் உடல் ஊனம் பொறுத்து அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. அதற்குண்டான தகுதிகள், வசதிகள், வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படுகின்றது. நரம்பு பாதிப்புகளால் எழுத முடியாதவர்கள் தேர்வில் ஆள் வைத்து எழுதிக் கொள்ளலாம். இதே போல ஒவ்வொரு உறுப்பு பாதிப்புக்குத் தகுந்தாற் போல அரசு பல உதவிகள் அவர்கள் செய்கின்றது. மொத்தத்தில் அவர்கள் தனிமையாகி விடக்கூடாது. அவர்களின் தனித்திறமை பாதிப்படையக்கூடாது என்பதே முக்கிய குறிக்கோள்.

ஆங்கிலம் எழுதாமல், பல மாணவிகளுக்கு அந்த தேர்வு சவாலாக உள்ள காரணத்தால் அதில் தேர்ச்சி இல்லை என்றாலும் கல்லூரி சேர முடியும். இதே போல உள்ளடக்க விசயங்கள் உள்ளது. பெரும்பாலும் இது போன்ற மாணவிகள் அனைவரும் தேர்ந்தெடுப்பது இளங்கலை தமிழ் பாடமே. ஒரு பட்டம் வேண்டும் என்பதற்காக மட்டுமே.

இது போன்ற குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் இந்தக் குழந்தைகளை அம்மா ஒருவர் தான் உயிர்வலியோடு பாதுகாத்து வளர்க்கின்றார். 95 சதவிகித அப்பாக்கள் தறுதலையாகவே இருந்து குடும்பத்தையும் இந்த குழந்தைகளின் மேல் சிறப்பு கவனம் வைக்க வேண்டிய சூழலை ஒதுக்கி கவனிக்காத நபராக இருக்கின்றார்கள். ஆனால் மாணவிகள் ஆர்வத்துடன் படித்து அடுத்த கட்டத்திற்குத் தங்களைத் தயார் படுத்தி கொள்கின்றார்கள். இந்த வருடம் பல அனுபவங்களை நேரிடையாகப் பார்த்தேன்.

இங்குள்ள அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் இந்த வருடம் இளங்கலை தமிழ் பாடத்திற்கு விண்ணப்பித்த மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 900. இருக்கும் இருக்கை மொத்தம் 60. கட் ஆஃப் என்பது 99 என்பதிலிருந்து தொடங்கி கடைசியில் 35 வரைக்கும் உள்ளது. அரசு கலைக்கல்லூரிகள் வெளியிடும் தரவரிசைப் பட்டியலில் நான் கவனித்த வரைக்கும் அனைத்துப் படிப்புகளிலும் ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த எஸ்சி மற்றும் எஸ்டி மாணவிகள் தான் மிக அதிகமாக விண்ணப்பம் செய்கின்றனர்.

அதாவது வசதி இல்லாதவர்கள், வாழ்க்கையைப் போராட்டமாக நாள்தோறும் நடத்திக் கொண்டிருப்பவர்கள், குடி நோயாளி தகப்பன், ஷிப்ட் சம்பளத்தில் அல்லாடும் அம்மா, தன்னை படிக்க வைத்தால் தங்கையைப் படிக்க வைக்க முடியாமல் போய்விடுமோ என்று நாம் திரைப்பட காட்சிகளில் பார்க்கும் அனைத்தும் இங்கு உண்டு. நாம் பளபளப்பாகப் பார்க்கும் சமூகம் வேறு. இது வேறொரு உலகம்.

உழைக்கக்கூடியவர்கள் கட்டாயம் தெரிந்தோ தெரியாமலோ போதையின் பாதையில் சென்று இறுதியில் தினமும் மது அருந்தக்கூடியவர்களாக மாறி விடுகின்றார்கள். கடைசியில் குடி நோயாளியாக மாறி இல்லற வாழ்க்கை என்பது சண்டை சச்சரவு நிறைந்த வாழ்க்கை என்பதாக மாறிவிடுகின்றது. குழந்தைகளுக்கு உருவாகும் பாதிப்பென்பது கணக்கில் அடங்காது. பெருநகரங்கள், சிறு நகரங்களில் ஏதோவொரு வேலை செய்து அதில் கொஞ்சமாவது உண்ண உடுக்க இருக்க செலவு செய்கின்றார்கள் என்றால் கிராமங்களைச் சார்ந்த வாழ்க்கை வாழக்கூடிய குடிநோயாளிகள் வாழ்க்கை, அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கை அனைத்தையும் கணக்கில் கொண்டு வந்து பாருங்கள்.

இந்தப் பாவத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஜெயா. இன்று பாலாஜி காட்டில் குபேர மழை கொட்டிக் கொண்டிருக்கின்றது. அரசு கணக்கின்படி வருடந்தோறும் 65 ஆயிரம் பேர்கள் காப்பாற்ற முடியாத அளவுக்குச் சென்று இறந்து கொண்டு இருக்கின்றார்கள். எத்தனை லட்சம் பெண்கள் தாலியை அறுக்கின்றார்கள் என்பது அரசுக்குத் தெரியாது. தற்போது லேசாக சலசலப்பு வந்தாலும் எனக்கு நம்பிக்கையில்லை. காரணம் வருடம் அதிகாரபூர்வமற்ற வகையில் (அரசு கஜானாவிற்கு வருவதைத் தவிர்த்துத் தனிப்பட்டவர்களின் பைக்கு சென்று சேரும் அனைத்தும் சேர்த்தால்) ஐம்பதாயிரம் கோடி இவர்களுக்குக் கிடைக்கும் போது மக்கள் நலன் குறித்து யோசிக்க முடியுமா?


Swasam Publications Private Limited, 52/2, Near B.S Mahal, Ponmar, Chennai, Tamil Nadu - 600127

8148080118

அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் மற்றவர்களுக்கு வைக்கக்கூடிய கோரிக்கை என்னவெனில் வரக்கூடிய குழந்தைகளின் குடும்பச் சூழல் என்பது நாம் என்ன பாடுபட்டாலும் அவர்களின் கல்வித்தரத்தை ஓரளவுக்குத்தான் கொண்டு வர முடியுமே தவிர மற்றபடி அவர்கள் வாழ்நிலை மிக மிக மோசமான நிலையில் உள்ளது என்பதனை திரும்பத் திரும்ப சொல்வதைப் பலமுறை கேட்டுள்ளேன். இதுவே தான் கல்லூரி வந்து சேர்ந்ததும் அவர்கள் இயல்பான பாடங்களைப் படிக்கக்கூடி அதிக கஷ்டப்படுகின்றார்கள். அடிப்படைக்காரணம் கட்டமைப்பு முழுமையும் சிதைத்து விட்டார்கள். அதுவே தங்களுக்குப் பாதுகாப்பு மற்றும் வருமானத்திற்கு உகந்தது என்று நம்புகின்றார்கள்.

காலம் என்ன பதில் வைத்துள்ளது என்று தெரியவில்லை?

 

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.