அஸ்திவாரம்

Friday, March 03, 2023

பிஎஸ்என்எல் என்பது அம்பானிக்கு உரியதா?

கடந்த மூன்று நாட்களாக பிஎஸ்என்எல் சேவை அதளபாதாளத்தில் உள்ளது. இணைப்பு உள்ளது ஆனால் வேகம் இல்லை. பைபர் கணக்கு அனைத்தும் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஆமை போல நகர்கின்றது. காரைக்குடிக்குப் பேச முடியவில்லை. இராஜபாளையத்திலிருந்து அழைத்தவர் குரல் எக்கோ போல அங்கங்கே கேட்கிறது. பிரிபெய்டு ல் பிம் செயலி செயல்படவில்லை. எப்போதும் எனக்கு கோபம் வரும். அதிகாரியை உடனே அழைப்பேன். ஆனால் தற்போது ஓரளவுக்குப் புரியத் தொடங்கிய காரணத்தால் பின்னால் உள்ள காரணங்கள் ஒவ்வொன்றையும் வரிசையாகத் தேடித் தேடி படித்து வருகின்றேன்..




உங்களுக்குத் தோன்றும் ஏன் இவர்களைப் பிடித்து தொங்க வேண்டும்? வேறு தனியார் நிறுவன சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தானே? ஆம். நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மக்களின் வரிப்பணத்தை பிஎஸ்என்எல் கொண்டு போய் கொட்டாமல் இருக்க வேண்டும். ஏன் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். திட்டமிட்டு செயலாக்கத்தை தனியாருக்கு கொடுக்க ஏன் இத்தனை சிரமம். தனிப்பட்ட நபர்களுக்கு அரசு கடமைப்பட்டு இருந்தால் அப்படியே மொத்த நிர்வாகத்தையும் எடுத்து கொடுத்து விடலாம் தானே?
கொஞ்சம் விரிவாக இந்தப் பிரச்சனைகள் பற்றி பேசுவோம்?
சில தகவல்கள் உங்களுக்காக.
எதிர்மறை நேர்மறை என்பதனை விட நம்மைச் சுற்றிலும் உள்ள உலகம் எப்படி இயங்குகிறது? யார் இயக்குகிறார்கள் போன்ற பலவற்றையும் நீங்கள் என் பார்வையிலிருந்து பார்க்க அழைக்கின்றேன். அதன் பின் உங்கள் எண்ணங்கள் மாறலாம்...
பாரதப் பிரதமர் மோடி அவர்கள்
கட்சியில் இருந்தவர்கள், சேவை செய்தவர்கள், திறமை உள்ளவர்கள், மக்களைக் கவர தெரிந்தவர்கள் என்று பட்டியலிட்டு பாஜக பக்கம் கொண்டு வந்ததைப் போல அதிகாரிகளாக இருந்தவர்களையும் பாஜக பக்கம் கொண்டு வந்தார். அதாவது அமைச்சராக மாற்றி மக்கள் சேவைக்கு கொண்டு வந்தார்.
அஸ்வினி வைஸ்னவ் அப்படிப்பட்ட புத்திசாலி. முன்னாள் இஆப அதிகாரி. ராஜ்ய சபா எம்பி ஆக உள்ளே கொண்டு வரப்பட்டார்.
பியூஸ் கோயல் வேறொரு வகையில் திறமைசாலி என்றால் அஸ்வினி மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பணி என்பதனை நிர்வாகப் பணியாக மாற்றியவர். மாற்றிக் கொண்டு இருக்கின்றார். அதாவது இவருக்கு வழங்கப்பட்ட அமைச்சகங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் செயல்பாடுகள் போல முக்கியமாக லாபம் வந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தி வருகிறார்.
இவரின் கல்வித் தகுதியைப் பார்த்தாலே உங்களால் கொஞ்சம் யூகித்துக் கொள்ள முடியும்.
1991 இல் ஜோத்பூரில் உள்ள MBM பொறியியல் கல்லூரியில் (JNVU) எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பொறியியல் படிப்பில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார், பின்னர் ஐஐடி கான்பூரில் தனது எம். டெக் முடித்தார், 1994 இல் அகில இந்திய தரவரிசையில் 27 உடன் இந்திய நிர்வாக சேவையில் (ஐஐஎம்) சேர்ந்தார். .
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனிச் செயலாளராக இருந்த வைஷ்ணவ், கட்சியின் ஒடிசா பிரிவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசந்த பாண்டா மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இவரிடம் உள்ள துறைகள்
ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை
பியூஸ் கோயல் கையில் ரயில்வே இருந்தபோது அவர் செய்த முக்கிய காரியம் ரயில்வே துறைக்குள் இருந்த ஒவ்வொரு துறையையும் தனித்தனியாகப் பிரித்தார். முக்கியமானது முக்கியமற்றது என்பதில் தொடங்கி லாபம் தரக்கூடியது. லாபம் தராதது என்பதில் தொடர்ந்து இருக்கை தேய்க்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலகங்கள் என்று மாறி அனைத்திலும் கை வைத்து மாற்றி அமைத்தார். கூடுதலாகத் தெற்கு ரயில்வே மேலாளர் என்றால் அவருக்குத் தனித்த அதிகாரம் வழங்கினார். 500 கோடி வரைக்கும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். டெல்லி வந்து காத்திருக்கத் தேவையில்லை என்பதாக மாற்றினார். ஒவ்வொரு மண்டல மேலாளர்கள் சுகமாகச் சுவாசித்தனர். தங்கள் கடமைகளை மட்டும் செய்யத் தொடங்கினர்.
கோயல் துடிப்பான இளைஞன் மனோபாவம் கொண்டவர். இந்திய ரயில்வே யின் அடுத்த மாறுதலுக்கு உட்பட்ட 25 ஆண்டு கால இலக்குகளை அவர் தீர்மானித்துக் கொடுத்து விட்டு இலாகா மாறினார்.
ஆனால் அஸ்வினி அவர் போட்ட பாதையில் செல்கிறார். தனிப்பட்ட முறையில் ரயில்வே, தொலைத் தொடர்புத் துறையில் என்ன சாதித்துள்ளார் என்பதனை இன்று வரையிலும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிகார மனோபாவம் என்பதனையும் கார்ப்ரேட் துறையில் பணிபுரிபவர்களுக்கும் மட்டுமே இருக்கக்கூடிய தனித்த குணாதிசயங்கள் இருப்பதாக அவர் செயல்பாடுகள் மூலம் நான் உணர்கின்றேன். லாபம். லாபம். லாபம்.
மக்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் என்பதற்கு லாபம் முக்கியமல்ல. அதே சமயத்தில் அது நஷ்டத்தில் தான் செயல்பட வேண்டிய அவசியமில்லை. வளர்ச்சி, மாறுதல், சேவை, வசதிகள் அடிப்படையில் லாபம் தீர்மானிக்கப்பட்டு இன்னமும் ரயில் மூலம் பயணிப்பது தான் தங்கள் பொருளாதாரத்திற்கு உகந்தது என்று வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை அளிப்பதே அதன் முதல் பணி.
அதை நிச்சயம் கோயல் நிறைவேற்றினார். ஆனால் தொலை தொடர்பு துறை எப்படி செயல்படுகின்றது?
வாசிக்கும் உங்களுக்கு கோபம் வரலாம். பிஎஸ்என்எல் எவ்வளவு கேவலமாக செயல்பட்டது. இப்போது தனியார் போட்டியில் என்னன்ன நன்மைகள் நுகர்வோர்க்குக் கிடைத்துள்ளது? அரசாங்கம் தொழில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? போன்ற ஆக்கப்பூர்வமான கேள்விகள் வரக்கூடும். உண்மைதான்.
நம் ரயில்வே துறை எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருந்தது? மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இடத்தில், பல்வேறு கலாச்சாரம் கொண்ட மக்களிடத்தில், பல்வேறு வினோதமான மாநில அரசியல் சூழல் கொண்ட தன்மையில் இருந்த அரசு நிறுவனமான ரயில்வே துறையில் எப்படி மாறுதல் உருவாக்க முடிந்தது? லாபம் ஒரு பக்கம். மக்கள் விருப்பம் மறுபக்கம். இரண்டும் முகம் சுழிக்காத அளவுக்கு எப்படி உருவாக்க முடிந்தது. வந்தே பாரத் வாரம் மூன்று ரயில்களை உருவாக்க முடியுமா என்று தொடங்கும் இந்த காலகட்டம் என்பது அரசு நிர்வாகத்தில் தான் நடக்கின்றது என்பதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் சில தகவல்களைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இந்தியாவின் மொத்தம் 734 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் 387 மாவட்டங்களில் வேலை நடக்கிறது என்றால் அது பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு அல்ல. தனியார் துறைக்கு அரசு உதவி செய்கின்றது என்று அர்த்தம். காரணம் எந்த தனியாருக்கும் தனிப்பட்ட முறையில் கோபுரம் இல்லை. ஒரு பிஎஸ்என்எல் கோபுரத்தில் அத்தனை தனியாரும் வந்து குடியிருக்கிறார்கள். வாடகை சொன்னபடி அரசாங்கத்திற்கு வருவதில்லை என்பது கூடுதல் தகவல்.
வாங்கும் அலைக்கற்றைக்கு உடனே பணம் கொடுக்கத் தேவையில்லை. படிப்படியாக கொடுக்கலாம் என்பது மாற்றப்பட்டுள்ளது. இது சார்ந்த பொருட்கள் அனைத்தும் வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை வழங்கப்படுகின்றது. அதாவது அரசாங்கம் மூலம் இந்தத் தொலைத் தொடர்புத் துறை நடக்கும் பட்சத்தில் சங்கம் முதல் இட ஒதுக்கீடு வரைக்கும் ஆயிரத்தெட்டு அக்கப்போர் இருப்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் இவர்களை நினைத்தபடி வேலை வாங்க முடியாது.
இது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.
மோடி அவர்கள் அதிமுக ஆட்சியில் இருந்த போது கிராமங்கள் பைபர் நெட் வழியாக இணைப்பது என்றொரு அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்தார். நம் கருமை நிறக் கண்ணன் எடப்பாடியும் மன்னர் உதயகுமார் அவர்களுக்கு வாய்க்கரிசி போல மத்திய அரசு ஒதுக்கிய ஆயிரத்து சொச்சம் கோடி அவல் பொரி போல திங்கப் பார்த்தனர். பேரிரைச்சல் உருவானது. அப்படியே எஸ்கேப்பாகி விட்டார்கள். இந்தத் திட்டம் புலிகேசி கூட்டத்திடம் வந்துள்ளது. என் கணக்கு சரியாக இருக்குமேயானால் அது சபரீசன் நிறுவனத்திடம் சென்று சேரும் என்றே நம்புகின்றேன்.
இந்த இடத்தில் எனக்கொரு சந்தேகம் என்னவென்றால் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் கிராமங்களை இணைக்கும் பைபர் நெட் இணைப்புகளை ஏர்டெல் மற்றும் ஜியோ கையில் பிரித்துக் கொடுத்து இலக்கு கொடுத்து இருந்தால் இந்நேரம் முழுமையாக முடிந்து இருக்கும். மாநிலத்தில் உள்ள கொள்ளி வாய் பிசாசுகளிடம் இருந்து தப்பித்து இருக்கும். இதென்ன இந்த இரண்டு முதலாளிகளும் முதல் நகரங்களை விட்டு நகர மாட்டார்களா? அதுவும் அரசு உருவாக்கி வைத்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளிலிருந்து கொண்டு நொட்டுவார்களா?
மற்றொரு தகவல்
வருகின்ற ஏப்ரல் 1 2023 முதல் அஸ்வினி அய்யா பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் க்கு 53 000 கோடி ஒதுக்குகிறார். எதற்கு என்றால் கோபுரம் சீரமைப்பு. 2 ஜி யை 3 ஜியாக மாற்றுவது பிறகு 3 ஜி யை 4 ஜியாக அதன் பின்பு 5 ஜியாக மாற்றுவது என்கிறார்.
ஏற்கனவே இந்த வருட இறுதிக்குள் பிஎஸ்என்எல் 5 ஜி சேவை வழங்கும் என்று வேறு கூறியிருப்பதை நாம் நினைவில் வைத்துக் கொண்டு யதார்த்தம் என்ன? என்பதனை யோசித்தால் இன்னமும் பிஎஸ்என்எல் 3 ஜி சேவையை விட்டு வெளியே வரவில்லை. வர விடமாட்டேன் என்று பூட்டி வைத்துள்ளார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஏன் இத்தனை இத்தனை விரிவாக படிப்படியாகக் எழுதுகின்றேன் என்றால் அரசு தொலைத் தொடர்புத் துறை பணத்தைக் கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது.
உங்கள் புரிதலுக்கு
தபால் மற்றும் தொலைத்தொடர்பு திட்டங்களுக்கு அரசு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்புத் துறைக்கு ரூ.97,579.05 கோடியும், தபால் திட்டங்களுக்கு ரூ.25,814 கோடியும் அடங்கும்.
பாதுகாப்பு சேவைகளுக்கான ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அடிப்படையில் கட்டமைப்புக்கு ரூ.2,158 கோடியும், வடகிழக்கு மாநிலங்களில் தொலைத்தொடர்பு திட்டங்களுக்கு ரூ.715.8 கோடியும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
குட்டிச்சுவர் போலவே இருந்த தபால் நிலையங்கள் இன்று முன்னங்கால் பாய்ச்சலில் போய்க் கொண்டு இருக்கின்றது. ஆனால் தொலைத் தொடர்பில் இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முடக்கி ஏன் குறிப்பிட்ட சிலரை வளர்க்க முயல வேண்டும். அவர்களைப் பெண்டு கழட்டி வேலை வாங்கி இவர்களையும் சரிசமமாக ஓட விடலாமே? அவர்கள் வளர மக்கள் பணம் முழுக்க முழுக்க அதில் மேலும் மேலும் கொண்டே வருடந்தோறும் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
அந்தப் பணத்தை இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவ பயன்படுத்தலாமே?
சென்ற வருடத்தை ஒப்பிடும் போது செயல்பாடுகள் லாபம் மற்றும் சேவை என்பதன் அடிப்படையில் அஸ்வினி அய்யா வைத்துள்ள ரயில்வே துறைக்கு என் மதிப்பெண் 100 க்கு 90 . அவரிடம் உள்ள மற்றொரு துறையான தொலை தொடர்பு துறைக்கு நான் வழங்கும் மதிப்பெண் 100 க்கு 7.5
இந்த ஏழரை மாற வேண்டும். அவர் சொல்லியுள்ள மாதிரி இந்த வருட இறுதிக்குள் பிஎஸ்என்எல் 5 ஜி சேவை வழங்கும் என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.