அஸ்திவாரம்

Sunday, February 12, 2023

ஜியோ பைபர்

காட்சி 1

சில வாரங்களுக்கு முன்பு ஜியோ பைபர் திருப்பூரில் ஜனவரி பிப்ரவரி மாதம் கிடைக்க வாய்ப்புண்டு என்பதாக எழுதியிருந்தேன். நண்பர் ஒருவர் வாய்ப்பே இல்லை. பெருநகரங்கள் மட்டும் என்று பதில் அளித்து இருந்தார். அது தொடர்பான சில விசயங்கள்..... சொல்லக்கூடிய விசயங்கள் மூலம் தமிழகத்தில் நடந்த மாற்றங்கள் எப்படி நடந்தது என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள..... பெரிய கட்டுரை என்பதாக நினைத்தால் வேறு உருப்படியான வேலையைப் பார்க்க மாற்றுப் பாதையில் சொல்லவும்....



காட்சி 2
இரண்டு வருடங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றிய உயர் அதிகாரி பெண்மணியிடம் எனக்கு பைபர் நெட் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். என் வீட்டிலிருந்து 1500 மீட்டருக்கு அப்பால் பைபர் நெட் இணைப்பு இருந்தது. அது முக்கிய சாலை. என் வீட்டுக்கு வர வேண்டும் என்றால் தேவைப்படும் ஒயர் முதல் பணியாட்கள் சம்பளம் வரைக்கும் நான் தான் செலவு செய்ய வேண்டும் என்றார். நான் செய்கின்றேன். அதனை பில்லில் கழித்துக் கொள்வீர்களா? என்று கேட்டேன். மறுத்து விட்டார். நான் விட வில்லை. அவருக்கு மேலே உள்ள அதிகாரியைப் பார்த்தேன். அவர் தன் தரப்பு பிரச்சனைகளைச் சொன்னார். இப்படியோ அடுத்தடுத்து மூன்று அதிகாரிகளைப் பார்த்தேன். ஒருவர் கோப்பு வரைக்கும் அனைத்தையும் (நான் பேசிய வேகத்தில்) எடுத்துக் காண்பித்தார். அதாவது அப்போது நான் புரிந்து கொண்டது என்னவெனில் அரசாங்கம் அதிக இணைப்பு தேவையில்லாத இடங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்பதாக மறைமுக கட்டளை பிறபித்து இருந்ததைப் புரிந்து கொண்டு அதிகாரிகள் மேல் பாய்வதை நிறுத்திக் கொண்டேன். அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. ஒப்பந்தக் காரர் வந்து என்னிடம் பேசினார். மொத்தமாக ரூபாய் 8000 கொடுத்து விடுங்கள். நாளை முதல் நீங்கள் பைபர் ல் செயல்பட நான் கேரண்டி என்றார். எனக்கு மனசு ஆறல. பக்கத்து வீட்டில் ஏர்டெல் மற்றொரு வீட்டில் ஜியோ. எனக்குப் பெரிய காரியமில்லை. மாற்றிவிடலாம். ஆனால் அரசாங்கத்தின் ஒரு துறை மேலேயிருந்து கீழே வரைக்கும் எப்படி படிப்படியாக யார் யார் மூலம் சீரழிக்கப்படுகின்றது என்பதனை என் தேவைக்கு அப்பாற்பட்டுக் கவனித்து வந்தேன்.


காட்சி 3
மோடி அரசின் முதல் ஐந்தாண்டின் இறுதிக்கட்டத்தில் பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகள் என்னிடம் பல பேர்கள் புலம்பித் தீர்த்து உள்ளனர். நிர்ப்பந்தம். வலுக்கட்டாயம். பல்வேறு வகைகளில் தொந்தரவு. விடுமுறை கேட்டால் அளிக்காமல் சித்ரவதை செய்வது. ஒரு பெண்மணி என்னிடம் சில விசயங்களைச் சொல்லி அழுதார். நான் கிறிஸ்மஸ்க்கு கூடப் போகவில்லை சார் என்றார். காரணம் விஆர்எஸ் வாங்க எல்லா பக்கமும் இருந்து நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். பெரும்பாலான பேர்கள் காணாமல் போய்விட்டனர்.

காட்சி 4
ஆறு மாதத்திற்கு முன்பு வேறொரு விசயத்திற்காக பிஎஸ்என்எல் அலுவலகம் சென்று இருந்தேன். தனியார் ஏஜென்சி மூலம் சிம்கார்டு விற்றுக் கொண்டு இருந்தார்கள். அலுவலகத்தில் மொத்தமே இரண்டு பெண்கள் மட்டுமே. அதுபோல பில் சார்ந்த அலுவலகத்தில் மிக மிகக் குறைவான நபர்கள். இடையே பழுது என்றால் ஒப்பந்தக்கூலிகள் வந்தார்கள். அவர்கள் கடந்த 18 மாதம் சம்பளம் வாங்காமலிருந்த கதைக்குப் பின்னால் அனைத்து திரைமறைவு விசயங்களையும் சொன்னார்கள். இன்று மாறும். நாளை மாறும் என்றே பலரும் சம்பளம் இல்லாமல் கூட வேலை செய்தனர். வெற்றிகரமாக ஆறு மாதத்திற்கு முன்பு மிகக் குறைவான கட்டண அடிப்படையில் பைபர் பிஎஸ்என்எல் வழங்கியது. தனியார் நிறுவனம் தான் அனைத்துக்கும் பொறுப்பு. பில் மட்டும் பிஎஸ்என்எல் அலுவலகம் பொறுப்பு என்கிற ரீதியில் செயல்படுகின்றது. அதாவது பைபர் நெட் என்பதற்காக நான் முயன்று முப்பதாவது மாதம் எனக்கு இயல்பான முறையில் கிடைத்தது. இந்த சமயத்திற்குள் முதல் 75 000 கோடி அடுத்து எம்டிஎன்எல் (மகாராஷ்டிரா) இணைப்பு என்கிற ரீதியில் 25 000 கோடி என்கிற அளவுக்குப் பெருந்தொகை இதற்குள் இறக்கி இருந்தனர்.
என் அளவில் பிரச்சனை இல்லாத அளவுக்குத் தனியார் நிறுவனம் (பயந்தபடி) சேவை அளிக்கின்றனர். அதிகார மட்டத்தில் எவராயினும் 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கின்றனர்.

காட்சி 5
பிஎஸ்என்எல் குறித்து எழுதும்போது பலருக்கும் எகத்தாளம் உருவாகும். ஏளன வார்த்தைகள் இயல்பாகக் கொப்பளித்து எழும். பணிபுரிபவர்களை வார்த்தைகளை சுட்டெரிப்பார்கள். கடந்த மூன்று வருடுங்கள் ஒவ்வொரு பகுதிகளுக்குள்ளும் உள்ளே நுழைந்து வெளியே வந்துள்ளேன். தனியார் நிறுவனங்கள் எப்படி பிஎஸ்என்எல் யை சூறையாடுகின்றார்கள். எத்தனை விதமாக மக்களின் சொத்தை அவர்கள் இலவசமாகக் கையாள்கின்றார்கள் என்பதனையெல்லாம் கவனிக்கும் வாய்ப்பு அமைந்தது. பெரிய அதிகாரிகள் என்றாலும் குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகி அவர்கள் பதில் அளிக்க முடியாத சங்கடங்களை நான் பார்த்துள்ளேன். காரணம் அவர்கள் பதில் அளித்தால் மேலே உள்ள அதிகாரிக்குப் பாதிப்பு உருவாகும். அதுவொரு சங்கிலி போல. ஒரு இடத்தில் கொழுத்த பணம் கைமாறியிருக்கும். இது தவிரக் கீழ்மட்ட அளவில் தனியார் நிறுவனங்கள் மாத சம்பளத்தில் பலரையும் (பிஎஸ்என்எல் ஊழியர்கள்) வைத்து உள்ளனர். கெடுக்க, மாற்ற, திருக, உருக்குலைக்க என்று பல தொழில்முறையில் சொன்னால் சமயோசித காரியங்கள் நடப்பதைப் பலர் மூலம் அறிந்தேன். என் போராட்ட உணர்வைக் குறைத்துக் கொண்டேன். என் அளவில் எல்லாவறையும் சரி செய்து கொண்டேன். சரியாகவே போய்க் கொண்டேயிருக்கின்றது.

காட்சி 6
கடந்த முப்பது நாட்களுக்கு முன் என் வீட்டுக்கு முன் ஒருவர் குழி தோண்டிக் கொண்டு இருந்தார். அதனை இங்கே ஏற்கனவே எழுதியுள்ளேன். காரணம் கேட்ட போது அவர் கிராமத்து (தமிழர்) மொழியில் ஜியோபையரு என்றார். முப்பது நாட்கள் முடியவில்லை. 5ஜி பைபர் எங்கள் வீடு இருக்கும் சந்துக்கள் உள்ள அத்தனை பக்கமும் ( ஒரு கம்பம், கீழே ஒயருககு பள்ளம் என்று தொடங்கி மொதத வேலைகளையையும முடித்து விட்டனர். ( படம் இணைத்து உள்ளேன்.

காட்சி 7
தனியார் நிறுவனங்களில் வேலை விரைவாக நடக்கும் என்பது உண்மை. மக்கள் எளிதாக அணுகும் வண்ணம் தொழில் ரீதியாகச் சலுகைகளுடன் செயல்படுவார்கள். இதுவும் உண்மை. ஆனால் நேற்று என் அலைபேசியில் டேட்டா சரியாக வருவதில்லை என்று பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உள்ள பெண்ணிடம் கொடுத்த போது பழைய சிம்.என்று பணம் வாங்கிக் கொண்டு புதிய சிம் மாற்றினார் வேகமாக வரும் என்றார். மாற்றிய போதும் முன்பு இருந்ததைப் போலவே இருந்தது. காரணம் கேட்ட போது அண்ணா பிஎஸ்என்எல் 3 ஜி தான் திருப்பூர் முழுக்க. நீங்க 4 ஜி அளவுக்கு ஆசைப்படாதீர்கள் என்றார். அதாவது 4 ஜி இன்னமும் பிஎஸ்என்எல் உள்ளே வரவில்லை. ஆனால் நடந்த வந்த பாதையில் 5 ஜிக்கான முன்னேற்பாடு வேலை நடந்து வருகின்றது.

நடந்த முன்னேற்றங்களும், நடக்கப் போகும் முன்னேற்றங்களும் அதனதன் எந்தந்த சமயங்களில் யாருக்குத் தேவையோ அதன் அடிப்படையில் படிப்படியாகத் தான் இங்கே உருவாக்கப்படுகின்றது. உருவாகின்றது.


இறுதிக்காட்சி
பெங்களூரில் இருந்த போது 5 ஜி தொழில் நுட்பத்தில் என் அலைபேசி எப்படிச் செயல்படுகின்றது என்பதனை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதீத வேகம் என்பதோடு மிக விரைவாக பேட்டரி திறன் செயல் இழக்கின்றது.
எனக்கு அந்த அளவுக்கு வேகம் தற்போதைய சூழலில் தேவையில்லை. இயல்பான வேகம் போதும். மத்திய அரசைத் திட்ட மாட்டேன். பிஎஸ்என்எல், ஜியோ குறித்து எந்தக் கருத்தையும் நான் எழுத மாட்டேன். காரணம் என் அப்பா சாகும் போது தான் செருப்பு என்பதனையே போட ஆரம்பித்தார். என் பேரன் நிச்சயம் இயல்பான முறையில் பைபர் 5ஜியை பயன்படுத்த வாய்ப்புண்டு. சென்னை போன்ற காங்கீரிட் காடுகளுக்குத் தான் முதன் மரியாதை என்பதனை உணர்ந்தே உள்ளேன். மேலும் மேலும் இது போன்ற ஊர்களை வளர்க்க ஆட்சியாளர்களுக்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். நேரிடையாக மறைமுகமாக வருடந்தோறும் மாநில அரசு மத்திய அரசுக்கு (இவர்கள் திருப்பூர் என்ற உலகம் அறிந்த தொழில் நகருக்கு கடந்த முப்பது வருடங்களில் ஒரு சிறிய துரும்பைக் கூட எடுத்துக் கொடுக்கவில்லை என்பது தனிக்கதை) சில லட்சம் கோடிகளை கொடுத்த போது நாங்கள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக எப்போதும் கையேந்தி வாழ்வதில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை.
உணர்ச்சி வசப்பட்டு எழுதவில்லை. உள்ளுற இருந்த பாரங்களை இறக்கி வைத்துள்ளேன்.

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.