தமிழக பாஜகவிற்கு அண்ணாமலை அவர்கள் தலைவராக வந்த பின்பு மற்ற கட்சிகளிலிருந்து எத்தனையோ பேர்கள் பாஜக வில் வந்து சேர்ந்துள்ளனர். பாஜகவிற்கு ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியிலிருந்து கூட சில தினங்களுக்கு முன்பு பல பேர்கள் சேர்ந்தனர்.
கூடவே மற்ற கட்சிகளில் முக்கிய பொறுப்புகளிலிருந்தவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கியிருந்தவர்கள், பதவி தருகின்றோம் என்று ஏமாற்றப்பட்டவர்கள் என்று முக்கிய நபர்கள் அனைவரும் அண்ணாமலையிடம் வந்து அடைக்கலம் ஆகிக் கொண்டே இருக்கின்றார்கள்.
ஆனால் இவற்றை விட நான் முக்கியமாகக் கருதுவது தஞ்சாவூரில் அதி தீவிர ரஜினி ரசிகராக இருந்த கணேசன் (தஞ்சை மாவட்ட தலைவர்) பாஜக வில் அண்ணாமலை முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்தது பல வாசல்களைத் திறக்கப் போகின்றது என்று நினைக்கின்றேன்.
அண்ணாமலை மயிரிழையில் நடிகர் ரஜினிகாந்த் இடம் இருந்து தப்பித்து விட்டார் என்று தான் நான் நினைத்துக் கொண்டதுண்டு.
அது ஒரு வழிப்பாதை. உள்ளே நுழைந்தால் அவ்வளவு தான். தெரிந்தவர்களுக்குப் புரியும். இன்னமும் கூடத் தான் விரும்பிய நடிகர் மேல் அண்ணாமலை அவர்களுக்கு ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்கின்றது. அவர் ரஜினி குறித்துப் பேசும் போதெல்லாம் நான் அதனைக் கூர்மையாகக் கவனித்தே வருகின்றேன்.
ஆனால் இப்போது சூழல் வேறு. நடிகர் ரஜினிகாந்த் அவர்களே பெருமையாக (வெளியே சொல்ல முடியாத சூழலில் அவர் இருந்தாலும்) சொல்லக்கூடிய அளவுக்கு அண்ணாமலை அவர்கள் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
மற்ற கட்சிகளிலிருந்து பலரும் பாஜக நோக்கி வந்து கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணங்கள் என்று நான் கருதுவது
@ திமுக நேரிடையான குடும்ப கட்சி. அதிமுக மறைமுகமான சாதிக்கட்சி. ஆனால் இரண்டு கட்சிகளில் சாதி தான் அடிப்படை. அதனை மீறி தலைவர்களால் கூட ஒன்றும் செய்ய முடியாது..
@ குடும்ப கட்சிகளில் நீங்கள் கட்சி அலுவலக வாசலுக்குக்கூடச் செல்ல முடியாது. அப்புறம் எங்கே பேசுவது?
@ சாதிய ஆதிக்கம். பணம் இருந்தால் தான் மதிப்பு. ஏதாவது ஒரு வகையில் சொந்தமாக இருக்க வேண்டும்.
@ கோபாலபுரத்தில் உள்ள சமையலறை வளையத்திற்குள் நீங்கள் இருந்தால் மட்டுமே கட்சிக்காரன். இல்லாவிட்டால் வெறுமனே 200 ரூபாய் அபிமானி.
@ திமுக என்பது முன்பு திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி. இப்போது இதுவொரு உலகளாவிய வணிக நிறுவனம். கட்டுமானம், திரைப்படம், பணப்பரிமாற்றம், மது வகைகள் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற தொழில் மூலம் ஊழல் பணத்தை மாற்றும் நிறுவன அமைப்பு.
@ இந்த நிறுவன அமைப்பில் இணையத்தில் பொங்குகின்றவர்களுக்குப் பொங்கல் கூட கொடுக்க மாட்டார்கள். இந்த நிறுவன அமைப்பு சார்ந்த செயல்பாடுகள் அனைத்துமே டார்க் வெப் வகையைச் சார்ந்தது.
@ நிகழ் கால தொழில் நுட்பங்கள் அறிந்த இளைஞர்களின் மனோநிலைக்கும் தங்கள் சட்டைப் பையில் வெட்கம் இல்லாமல் புகைப்படங்கள் வைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருதிக் கொள்பவர்களின் மனநிலைக்கும் தொடர்பு இருக்காது.
@ கொத்தடிமைக்கூட்டமும் கொள்ளைக்கூட்டமும் ஒன்றோடு ஒன்று கலந்து செய்த கலவையிது.
@ கட்சியின் பெயர் தான் வெவ்வேறு. ஆனால் தனிநபர் பிம்ப அரசியல் தான் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.
@ திமுக அதிமுக வில் மட்டும் தான் இந்த கொடுமையா? என்றால் மற்றதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்?
சீமான் கட்சியில் அவரே சொல்லியிருக்கின்றார். தார் டப்பாவை உதைத்துத் தள்ளுவது போல உங்களை உதைத்துத் தள்ளி விடுவேன். நான் சொல்வது தான் சட்டம் என்று உரக்கச் சொல்கின்றார். முன்பு இருந்த வேகம் இப்போது அவரிடம் இல்லை. அவர் உறுப்புகள் சுருங்க உணர்வுகள் மங்கத் தானே தொடங்கும். வைகுண்டராஜன் இன்னமும் எத்தனை நாளைக்குப் படியளப்பார் என்பது தெரிந்தால் சீமான் எந்த இடத்திற்கு நிற்பார் என்பதனை நாம் எளிதாகச் சொல்லிவிட முடியும். இப்போது உதயநிதி பாசம் வேறு வந்து சேர்ந்துள்ளது. என்ன கணக்கோ?
சீமானிடம் சேர்ந்த உணர்ச்சி வசப்பட்ட கூட்ட இளைஞர்கள் இப்போது இல்லை. அவர் வேடிக்கை காட்டி பணம் பார்க்கும் குறளிவித்தை மனிதர். அவ்வளவு தான். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதனை உணர்த்தும். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் ஓரளவுக்குக் காட்டிவிட்டது.
டிடிவி தினகரனை சசிகலா மட்டுமல்ல அவர் சாதிக்காரர்களே வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். சிவகங்கை மாவட்டத்தில் கள்ளர் சமூகத்துடன் மறவர் சமூக மக்களும் தற்போது அண்ணாமலை வருகைக்குப் பிறகு பாஜக பின்னால் அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர். இது இன்னமும் விரிவடையும். திமுக வுடன் தற்போது ஒட்டியுள்ள ஒட்டுண்ணிக் கட்சிகளைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமே இல்லை. வாசலில் தட்டு ஏந்தி நிற்கும் அபலைக்கூட்டமது.
எங்கள் கோட்டை என்று திமுகவும் கம்யூனிஸ்ட்களும் சொல்லும் ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என்ற இரண்டு சமூகத்தில் உள்ளவர்களும், செங்கொடி ஏந்தியவர்களும் இப்போது பாஜக அபிமானிகள்.
காரணம் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் திருமாவளவனை நம்ப முடியாத நிலைக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். எக்காரணம் கொண்டு கிறிஸ்துவ இஸ்லாம் பக்கம் செல்ல முடியாத அத்தனை பேர்களுக்கு அண்ணாமலையை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றார்கள். தென் மாவட்டத்தில் ஓபிஎஸ் க்கு அவர் சொந்தக் காரர்களே ஓட்டளிக்க மாட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் எப்படி வன்னியர் என்ற பெயரை வைத்துக் கொண்டு வகைதொகையில்லாமல் உச்சத்தை தொட்டு இப்போது அதிகாரத்தை எதிர்பார்த்து புலம்பிக் கொண்டு இருக்கின்றாரோ அதே போல இனி வரும் இளைஞர்கள் எவரும் மேலே உள்ள எந்த நபர்களின் பின்னாலும் செல்லவே மாட்டார்கள்.
பாஜக வில் வந்து சேர்ந்த பொறுப்பில் உள்ள இளைஞர்கள் அத்தனை பேர்களையும் பாருங்கள். கடந்த காலத்தில் கம்யூனிஸ்ட்களால் ஏமாந்தவர்கள். ஏமாற்றப்பட்டவர்கள். திமுக வை அடி ஆழத்திலிருந்து வெறுப்பவர்கள். இனி இந்த கூட்டம் அனைத்தும் பாஜகவிற்கே என்பதனை கும்பகோணம் மற்றும் திருவாரூர், தஞ்சாவூர் பொதுக்கூட்டம் உணர்த்தியுள்ளது.
ஆனால் இவற்றை விட ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பிலிருந்து அனைவர் பார்வையும் படும் அளவிற்கு இருந்தவர்கள் இனி அண்ணாமலை பக்கம் வந்தே தீருவார்கள். இதுவொரு நடிகர் கூட்டம் என்பதோடு நிற்காது என்றே நினைக்கின்றேன். தங்களுக்குப் பிடித்த நடிகர் என்பதாக வைத்துக் கொண்டு தங்கள் தலைவர் இனி அண்ணாமலை என்பதாகவே ஒவ்வொரு ரசிகரின் அரசியல் எண்ணம் உருவாகும் என்றே கருதுகின்றேன்.
காரணம் இதுவரையிலும் நடிகர் பக்கம் சென்ற ஒவ்வொரு இளைஞரும் சொன்ன காரணங்கள் அனைத்தையும் அண்ணாமலையின் வருகை மாற்றியுள்ளதாகவே கருதுகின்றேன். எளிதாகப் பேச முடியும். உரையாட முடியும். பகிர்ந்து கொள்ள முடியும். கல்வி பின்புலம் முதல் தமிழக அரசியல் களத்தில் நடந்து கொண்டிருக்கும் அயோக்கியத்தனம் இல்லாத உண்மையான அரசியல் தலைவராகக் காலம் இங்கே அவரை கொண்டு வந்து சேர்த்துள்ளது என்பது தான் நிகழ் கால உண்மை.
நம் கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை மிக விரைவில் நாமும் பார்த்து நம் தலைமுறைக்கும் கிடைக்கப் போகின்றது என்பது மகிழ்ச்சியான செய்தி தானே?
நல்லவர்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.
ReplyDelete