அஸ்திவாரம்

Tuesday, May 03, 2022

நான் ஏன் அண்ணாமலையை ஆதரிக்கின்றேன்?

அண்ணாமலை என்ற பெயர் எனக்கு முதல் முறையாக அறிமுகமான போது எனக்கு இரண்டு பேர்கள் நினைவுக்கு வந்தார்கள்.  ஒன்று என்னுடன் எட்டாவது வரைக்கும் படித்த பள்ளித் தோழன். மற்றொருவர் என் இரண்டாவது சித்தப்பா.  


பெரிய கூட்டுக்குடித்தனத்தில் அண்ணாமலை சித்தப்பா கடைக்குட்டி.  நாங்கள் அனைவரும் வளர்ந்ததும் உச்ச நிலை எட்டியதற்கும் அடிப்படைக் காரணமாக இருந்தவர். தன் அண்ணனின் ( என் அப்பா) அதீத முன் கோபம் எங்கள் மேல் படாமல் காத்தருளிய அக்மார்க் நேர்மையாளர். தேசியச் சிந்தனையுள்ளவர். 

பாஜக தலைவர் அண்ணாமலையின் குணமும் இப்படித்தான் எனக்குத் தெரிந்தது. இலக்கைத் தீர்மானித்து இயங்கிக் கொண்டேயிருப்பது. அறுபது வயதுக்குரிய ஆளுமைத் திறன். முதிர்ந்த சிந்தனைகள் தெளிவான பார்வையுடன் 37 வயதிலும் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்கு நம் முன் வாழும் உதாரணம் கு.அண்ணாமலை அவர்கள்.

கோபால கிருஷ்ண கோகலே அறிவுரை சொன்ன காரணத்தால்  எளிமையான பயணத்தின் மூலம் இந்தியாவின் உண்மையான முகத்தைக் கண்டறிந்து பின்னாளில் மகாத்மா ஆனார் மோகன்தாஸ்.  அண்ணாமலைக்கு வழிகாட்டி யாருமில்லை. அவர் ஒரு சுயம்பு. 

என் யூகம் சரியாக இருக்குமேயானால் கடந்த எட்டு மாதங்களில் தமிழகத்தைக் குறுக்கும் நெடுக்கும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பயணப்பட்டு வந்து இருப்பார் என்றே நினைக்கின்றேன்.  இன்னமும் குறிப்பிட்ட சில பகுதிகள் தமிழக மலைக் கிராமங்களில் மட்டுமே அவர் காலடி படவில்லை.  மிக மிகக் குறுகிய காலத்தில் பாஜக தலைவர்களின் மிக அதிகத் தூரம் பயணம் செய்தவர் இவராகத்தான் இருப்பார். சோர்வுக்கு சோதனையளிக்கும் வித்தியாசமான பிறவி.

அண்ணாமலையைப் பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொன்றாக தேடித் தேடிப் படிக்கத் துவங்கினேன்.  அவரின் கல்வித் தகுதி என்னை ஈர்த்தது. அவரின் தடையற்ற ஆங்கிலப் பேச்சு எனக்கு வியப்பளிக்கவில்லை. வட்டார வழக்கு கன்னடப்பேச்சு வியப்பளித்தது. கூடவே ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ் அருவி போலக் கொட்டிய போது தான் எனக்குள் சாரல் மழை உணர்வு உள்ளும் புறமுமாக சிலிர்க்க வைத்தது. சிந்திக்கவும் வைத்தது.  

மோடி அவர்களின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை வேடிக்கை மனிதனாகவே பார்த்து வந்தேன்.  மோடியின் திட்டங்களை, மத்திய அரசின் செயல்பாடுகளை அறியவே சில ஆண்டுகளுக்கு முன் ட்விட்டரில் தீவிரமாக செயல்படத் துவங்கினேன். 

நம்பிக்கையளிக்கும் தலைவராகவே எனக்கு மோடி தெரிந்தார். கவர்ச்சி மற்றும் அறியாமையின் அடிப்படையில் மோடியை  நான் விரும்பவில்லை. இதுவரை வந்தவர்களில் ஒப்பீட்டளவில் உன்னத மனிதராக மோடி எனக்குத் தெரிந்தார். எட்டு வருடங்கள் ஆகியும் நாம் நம்பிக்கையிழக்காத ஒரே தலைவர் மோடி அவர்கள் மட்டுமே.  

காரணம் அதற்கு முன்னால் பத்தாண்டுகளாக மிக நெருக்கமாக மன்மோகன் சிங் பெயரால் அரசு சக்கரத்தை இயக்கி வந்த சோனியா அம்மையாரின்  திருவிளையாடல்களை நான் ஓரளவுக்கு அறிந்தே வைத்து இருந்தேன்.  பலவற்றை எழுதியும் உள்ளேன்.

ஒப்பிட்டுப் பார்த்த போது மோடி அவர்கள் வராது வந்த மாமணியாகவே எனக்குத் தெரிந்தார். அதே நிலையில் என்னால் அண்ணாமலையை வைத்துப் பார்த்த போது இமயமலை உயரத்திற்குண்டான உன்னத மனிதர் என்பதாகவே நான் கருதினேன்.

காரணம் தமிழக அரசியலை 1980 முதல்  அச்சு ஊடகங்கள் வாயிலாக தினமும் கவனித்து வந்தவன் என்ற முறையில் ஒழுங்கீனத்தின் உச்சமாக இருக்கும் தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடு ஏதாவது ஒரு சமயத்தில் உருவாகும் என்றே நம்பிக்கையில் இருந்தேன்.  

நட்சத்திர வெளிச்சம் போல அவ்வப்போது சிலர் வந்தார்கள்.  

பெட்டி பரிமாற்றம், எதிர்பார்ப்புகள், மாறிய வெட்கமில்லாத கூட்டணி என்ற திருவிளையாடல்களைப் பார்த்துப் பார்த்து இவர்கள் ஏன் இன்னமும் இங்கே உயிருடன் வாழ்கின்றார்கள்? என்பதாகவே பலமுறை நினைத்து இருந்தேன். ஆனாலும் காலம் அவர்களுக்கான களத்தையும் வழங்கிய காரணத்தால் தமிழக அரசியல் என்பது இவர்கள் மாறி மாறி உருவாக்கும் நம்பமுடியாத கற்பனைவாதத்தையும், தேர்தல் வரும் சமயங்களில் ஓட்டளிக்க வேண்டிய மக்களின் இயலாத்தன்மையும், ஒன்று சேர்ந்து என்னை எவரையும் எப்போதும் ஆதரிக்காதே என்று எச்சரித்தது.   

ஓட்டளித்து ஜனநாயகக் கடமையை முடித்து வந்தேன். கட்சி அரசியலில் காலடி எடுத்து வைக்கவில்லை.

அசைக்க முடியாத கட்சி, ஆளுமை நிறைந்த தலைவர், 50 வருட பொது வாழ்க்கை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி. இட ஒதுக்கீடு தந்த தயாளன் என்று வாய்க்கு வந்த பட்டமெல்லாம் வழங்கியதையெல்லாம் கவனித்துச் சிரித்துக் கொள்வதுண்டு. காரணம் பின்னால் உள்ள கொள்ளையர்களைச் சேர்த்த சொத்துக்களைக் கணக்கீடு செய்ய கால்குலேட்டர்கள் தடுமாறுவதை எப்படி வெளியே சொல்ல முடியும்? சட்டங்கள் வெறுமனே சம்பிரதாயமாகவும் ஜனநாயகம் என்ற பெயரில் குடும்ப உறுப்பினர்கள் உல்லாசமாக வாழ்வதும் என்பதே இங்கே மக்கள் ஆட்சி என்கிறார்கள்.  

வருத்தப்பட்டு பாரம் சுமந்த எனக்கு அண்ணாமலை என்ற மனிதர் மேரு மலை போலவே தெரிந்தார்.

நான் மனதிற்குள் குமைந்து கொண்டிருந்த சமயத்தில் தான் எனக்கு அண்ணாமலை என்ற சுனை நீர் தமிழக அரசியல் பாலைவனத்தில் தென்பட்டது. அவர் படித்த கல்லூரிகள் முதல் பணிபுரிந்த சவால்கள் நிறைந்த சாகங்களையும் முழுமையாக வாசித்த பின்பு என் நம்பிக்கை முழுமையடைந்தது.  

வயதுக்கும் வாழ்க்கை தரும் அனுபவத்திற்கும் தொடர்பு இல்லை.  கற்ற கல்விக்கும் வெளிப்படுத்தும் விதங்களுக்கும் வித்தியாசமில்லை என்பதாக பலரையும் பார்த்து வந்த எனக்கு அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்பு ஊடகவியலாளர்களுக்கும் வழங்கிய பேட்டி ஒவ்வொன்றும் தமிழக அரசியல் களத்தில் உருவாக்கிய அதிர்வென்பது 1970க்குப் பின்பு கட்டமைத்த போலி பிம்பத் தனி மனித உருவ வழிபாடுகள் மேல் திராவக வீச்சு போலப் படரத் தொடங்கியது. 

பலருக்கும் பயம் வந்தது. வெளியே காட்டிக் கொள்ள முடியாத சூழல் ஒரு பக்கம்.  யானையாக தங்களைக் கற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் காதில் ஏறி விளையாடிய அண்ணா மலையின் செயல்பாடுகளைத் தினமும் ரசிப்பதே என் வேலையாக இருந்தது.

அண்ணாமலை அவர்கள் தமிழக அரசியல் களத்திற்கு வந்த பிறகு இங்கே என்ன மாற்றங்கள் நடந்தது? என்பது பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கருத்துக்கள் உண்டு.  ஆனால் ஒரே ஒரு விசயத்தில் மட்டும் உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடத்தில் ஒரு மித்தக் கருத்து உருவானது என்பதனை நான் தனிப்பட்ட உரையாடல்கள் மூலம் உணர்ந்து கொண்டேன்.

தமிழக அரசியல்வாதிகள் தங்களை அரசியல் தலைவர்களாக காட்டிக் கொண்ட அத்தனை பேர்களின் உண்மையான அறிவு எந்த அளவுக்கு உள்ளது? துறை சார்ந்த விசயங்களில் யூஜ்யமாக உள்ளனர் என்பதனை அண்ணாமலை அவர்கள் தமிழக அரசியல் களத்திற்கு  வந்த பின்பு தான் தமிழர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டனர்.  நான்கு வரிகளைப் பார்த்து வாசிக்கவே தடுமாறும் கோமாளிக்கூட்டத்தை புகழும் கூட்டத்திற்கு அண்ணாமலை என்பவர் எட்டிக்காய் போலவே கசக்கச் செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகின்றது? 

தமிழக அரசியல் என்பது தற்போது நாடக கம்பெனியாகவும் விக் வைத்த வினோத ரூபங்கள் மூலமாக ஆட்சி நடக்கும் அநியாய காலமிதுவாகவும் உள்ளது. 

தகுதி தேவையில்லை. தரம் தேவையில்லை.  

புத்தியில் இருந்தால் தானே நிர்வாகத்தில் பிரதிபலிக்கும். கொள்ளை என்பது தாரக மந்திரம். கொடுஞ்செயல்கள் என்பதே நிரந்தரத் தந்திரமாகவும் வாழும் இந்த அற்பப் பிறவிகளைப் பார்த்த எனக்கு அண்ணாமலை என்பவர் அவதாரப் புருஷராகவே தெரிகின்றார். இது உணர்ச்சி வசப்பட்ட வார்த்தையில்லை. 

என் பேரன் பேத்திகள் தமிழக பூமியில் மலரும் போது இப்போதுள்ள அசிங்கங்கள் அகற்றப்பட்டே ஆக வேண்டும். அதற்கு அண்ணாமலை ஒருவரால் மட்டுமே முடியும். 

மோடியின் ஆதரவால் அவர் இதனை எளிதாக சாதிப்பார் என்றே நம்புகிறேன்.

தமிழக அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் "பில்டிங் ஸ்ராங் பேஸ்மெண்ட் வீக்" என்பதனை அதுவரையிலும் அவர்கள் அளித்த பேட்டி ( பிடித்த பாடல் எது? நடிகை யார்? சுவைக்கும் பழம்? போன்ற மொக்கை கேள்விகளை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள்) என்பது அண்ணாமலை அவர்கள் அளித்த பேட்டிகளுக்குப் பிறகு பேட்டி எடுக்க நினைக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர்களும் தடுமாறத் தொடங்கினார்கள்.  

ஒவ்வொரு அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் தெரிந்த காரணத்தால் சுய விளம்பரமாகவே ஒவ்வொன்றையும் உருவாக்கத் தொடங்கினார்கள்.  அது தான் இப்போது தீயசக்தி உருவாக்கும் பேக்ஐடி கலாச்சாரமாக உள்ளது.  

ஜோதிடம் தவிர வானத்திற்கும் பூமிக்கும் உள்ள அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு, குறிப்பில்லாமல், குதர்க்கமில்லாமல், கொச்சை மொழி தேவையில்லாமல், மடை மாற்றும் விதத்தில் பேசும் அநாவசிய அடுக்கு மொழி இல்லாது, அப்பட்டமாக கருத்தைக் கருத்தாக எடுத்து வைக்க, புதிய இளைஞர்கள் கூட்டம், பூவில் ஊறும் தேனை உறிஞ்ச வருவதைப் போலத் தன்னெழுச்சியாக அண்ணாமலை பக்கம் வரத் துவங்கினர். 

பாஜக தான் எங்கள் கட்சி என்பதனை உரக்கச் சொல்லத் துவங்கினர்.

சமூக வலைதளங்களில் பாஜக என்றால் அடித்தால், கேள்வி கேட்க நாதியில்லாமல் இருக்கக்கூடியவர்கள் என்ற  எண்ணம் மாறியது 

இது எனக்கு முக்கியமாகத் தெரியவில்லை.  

ஒவ்வொரு துறை சார்ந்தவர்கள் தங்களால் ஆன கருத்தாழம் மிக்க ஊடகங்கள் மறைந்த விசயங்களை அப்பட்டமாக அழகாக எழுதத் துவங்க பாஜக வை தமிழகத்தில் வளரவே விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தவர்கள் கண்களில் கண்ணீர் வருவதை நான் பலமுறை பார்த்துள்ளேன்.  

ஊமை அடி என்பார்களே? அப்படித் தினமும் நான்கு பக்கமும் வரத்துவங்க எப்போதும் போல தீயசக்திதிமுக தன் அடிப்படை மரபியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபாடு காட்டத் துவங்கியது. அது தான் தனி மனிதத் தாக்குதல். இதன் எல்லை மிக நீளம்.  

கூச்சம், வெட்கம், நாகரிகம் என்பது அவர்களுக்குத் தெரியாது என்பது உலகத்திற்கே தெரியும்.

திமுக விற்கு தங்கள் சின்னம் சூரியன் என்பதாகத்தான் தெரியும்.  ஆனால் அண்ணாமலை என்பவர் தகதகக்கும் வாழும் சூரியன் என்பதும் தனி மனித ஒழுக்கத்தில் அருகில் எவரும் நெருங்கவே முடியாது என்பது தீயசக்திக்குத் தெரிந்த போது அடுத்த ஆயுதத்தை எடுத்தனர். ஆதரிக்கும் நபர்களை அச்சுறுத்தத் தொடங்கினர். எதிர்க்கட்சியாக இருந்த போது செய்ய முடியாத அனைத்தையும் ஆளுங்கட்சியாக மாறிய போது அளவில்லாமல் செய்த போதும் கூட அண்ணாமலையின் புகழை அவர்களால் மட்டுப் படுத்தமுடியவில்லை.

கேரளா சென்று சிங்கத்தின் கடைவாய்ப் பல்லில் மருந்து தடவி விட்டு வந்தார். அந்தமான்  தீவு சென்று தேர்தலில் தங்கப் புதையல் வழங்க காரணமாக இருந்தார். குஜராத் சென்று நம்பிக்கையளித்தார். மும்பை சென்று தாராவி தமிழ் உறவுகளை உற்சாகப்படுத்தினார். தெலுங்கானா சென்று சிங்க மலை என்ற தன்னெழுச்சியை உருவாக்கினார். இப்போது கடல் கடந்த இராமர் பாலத்திற்கு அப்பால் உள்ள கண்ணீர் தீவுகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கின்றார். அடுத்த வருடம் அமெரிக்காவில் இந்தியப் பிரதிநிதியாக குரல் ஒலித்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன்.

கட்சி அரசியல் என்பது கடுகளவு நண்பர்களையும் மலையளவு எதிரிகளையும் கொண்டது என்பது அண்ணாமலை அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதனை அவரின் பல பேச்சுகளில் பார்த்துள்ளேன். இது இயற்கை வழங்கிய கொடை. இதனை ஞான ஒளி என்று எழுதினால் அவரை பிடிக்காதவர்கள் மனதிற்குக் குமைந்து இரவு தூக்கம் வராமல் தடுமாறக்கூடும்.  

வாழ்வில் பக்குவம் அடைந்தவர்களுக்குத் தான் தெரியும். சிறிய வயதில் இருக்கும் தெளிவு, கிடைக்கும் புரிதல் என்பது லட்சத்தில், கோடியில் ஒருவருக்குத் தான் வாய்க்கும். அது அபூர்வமாக அண்ணாமலை அவர்களுக்கு அமைந்துள்ளது. 

என்னை அவர் கண்டு கொள்ளவில்லை. 

என்னை அவர் மதிக்கவில்லை. 

எனக்கு அவர் பொறுப்பு வழங்கவில்லை. 

என்னிடம் பேச நேரம் ஒதுக்கவில்லை. 

என்னை அமித்ஷா வரும் போது அறிமுகப் படுத்தவில்லை. 

என்னை மோடி அவர்களிடம் அழைத்துச் செல்லவில்லை. 

என்னை அங்கீகரிக்கவில்லை. 

இது போல ஆயிரமாயிரம் குற்றச்சாட்டுகள் அண்ணாமலையை நோக்கி தினமும் குத்தீட்டியாக குத்திக் கிழிப்பதைப் பார்த்து வருகின்றேன்.

அவசரப்பட்டு பலரும் தங்கள் கருத்து என்பதனை நாகரிகமற்று சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தும் போது அதனை அவர்களின் முதிர்ச்சியற்ற உளறல் என்பதாக எடுத்துக் கொள்கின்றேன்.

99.9 சதவிகித எதிரிகளுடன் போராடி தன் தனித்தன்மையை இழக்காமல், தான் நினைத்து வந்த காரியத்திலிருந்தும் விலகாமல், ஆரோக்கியத்துடன் அசராமல் களப்பணி ஆற்றிக் கொண்டிருப்பவர்களின் எனக்கு முதன்மையாக தெரியும் உன்னத மனிதர் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்.  

இரண்டாவது மனிதர் என் தலைவன் அண்ணாமலை என்பேன்.

1972 முதல் 1977 வரை முதலமைச்சராக எம்ஜிஆர் அவர்கள் பதவியேற்ற நாள் வரைக்கும்  மு. கருணாநிதி அவர்கள் எத்தனை விதமான காரியங்கள்  எம்ஜிஆருக்கும், அதிமுக என்ற கட்சிக்கும் எதிராக செய்தார் என்பதனை வரலாற்றுச் சுவடுகளில் தேடிப் பிடித்துப் பாருங்கள்.  

இன்று அதனை விடச் சமூக வலைதளங்கள் மூலமாக அண்ணாமலை அவர்களை மன உளைச்சல் அடைய, சோர்வடைய, அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த ஆயிரமாயிரம் சேனைகள் கொண்டு தமிழக தீயசக்திகள் செய்து கொண்டே இருக்கின்றது. இவர்களை அனைவரையும் வளர்ப்பவர்கள் யார் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.

இவர்களுடன் அருகிலிருந்து கொண்டே குழிக்குள் தள்ளப்பார்க்கும் நூற்றுக்கணக்கான கட்டுவிரியன்களைத் தினமும் பார்த்துச் சிரித்துக் கொண்டே கடந்து வந்து கொண்டு இருக்கும் அண்ணாமலை என்பவர் எனக்கு தனிப்பட்ட முறையில் கிரியா ஊக்கி. 

என்னைத் தூரத்திலிருந்து இயக்கிக் கொண்டிருப்பவர். சோர்வடையவே கூடாது என்பதாக என் முன்னால் வாழும் முன்மாதிரி அவர்.

அண்ணாமலை அவர்கள் தற்போது இருப்பது இலங்கையில். நிச்சயம் அடுத்த முறை இந்தியப் பிரதிநிதி என்ற பெயரில் அமெரிக்கா சென்று உரை நிகழ்த்தினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

காரணம்  1949 ல் மறைந்த முதல்வர் அண்ணா உருவாக்கிய தவறான கொள்கையை வைத்து தவறான தகுதியற்ற ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கமாக மாறிய தமிழகத்தை மீட்க வந்த மீட்பர் இந்த அண்ணா(மலை).

மீட்கும் வரை நான் அண்ணாமலை பக்கம் நிற்பேன். என்னால் முடிந்த பணிகளைச் செய்து கொண்டே இருப்பேன்.

ஜெய் ஹிந்த். (ஜோதிஜி 01.05.2022)

3 comments:

  1. உங்கள் மன உறுதி, சொல்லுறுதி இரண்டும் போற்றுதலுக்கு உரியவை.

    ReplyDelete
  2. அவர் கட்சியிலேயே இருக்கும் அவரது எதிரிகள் அவளை வளர விடுவார்களா?  தலைமையும் இவரை நல்ல நேரத்தில் ஒன்றும் இல்லாமல் ஆக்கி உட்கார வைக்காமல் இருக்கவேண்டும்.

    ReplyDelete
  3. யதார்த்தமான பதிவு.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.