அஸ்திவாரம்

Saturday, January 08, 2022

தமிழக அரசு பள்ளிக்கூடங்கள் 2022

நெருங்கிய நண்பர்கள் என் மேல் அக்கறையும் மரியாதையும் உள்ள நண்பர்கள் தனிப்பட்ட உரையாடலில் ஏன் பாஜக வை ஆதரிப்பதில்லை என்று கேட்டால் அவர்கள் சொல்லும் காரணம் பிராமணர்கள் மற்றும் பிராமணியம் என்று தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள்.  கூடவே படிக்கக்கூடாது என்று மற்றவர்களை அடிமைப் படுத்தி வைத்திருந்தார்கள் என்று பல விசயங்களைச் சொல்கின்றார்கள்.




இதுவே இன்று வரையிலும் இந்தியாவில் ஜனாதிபதி மாளிகை முதல் உள்ளூர் நீதிபதி வரைக்கும் அவர்கள் தான் இருக்கின்றார்கள். அவர்கள் மட்டுமே இருக்கின்றார்கள். இந்திய ஜனத் தொகையில் இரண்டு சதவிகிதம் மட்டுமே இருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் நம்மை வாழ விட மாட்டார்கள் என்று முடிகின்றார்கள்.

இது குறித்து நான் அரசியல் கட்சிகள் சார்ந்து உள்ளே நுழைய விரும்பவில்லை. இந்தப் பதிவை அரசியல் பதிவாக எழுத விரும்பவில்லை. கடந்த சில வருடங்களாக குறிப்பாக சில மாதங்களாக மகள்கள் படிக்கும் பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் ஊன்றி கவனித்து வருகின்றேன்.  

தனியார் பள்ளிக்கூடம், அரசு பள்ளிக்கூடம், அரசு உதவி பெறும் பள்ளி என்று மூன்றையும் பார்த்துக் கேட்டு விட்டேன். இராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர் மூன்று மாவட்டங்களில் உள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பணியில் பணியாற்றும் என்னுடன் படித்த கல்லூரித் தோழர்கள் என்று அனைத்து பக்கங்களிலும் இருந்து கேட்ட பின்பு பொதுவான விசயங்கள் குறித்து மட்டும் இங்கே பதிவு செய்துள்ளேன்.

நேற்று மகள்கள் இருவரும் இப்போது படித்துக் கொண்டு இருக்கும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்குச் சென்று வந்தேன்.  

மனம் இனம் புரியாத கவலையில் உள்ளது. சமூகத்தின் மாறுதல்கள் குறித்து பலவிதமாக யோசித்துக் கொண்டு இருக்கின்றேன். இவற்றை ஆவணப்படுத்தி வைத்து விட வேண்டும் என்பதற்காகவே இதனை இங்கே எழுதி வைக்கின்றேன்.

1. தமிழகத்தில் எந்த துறைகளிலும் துல்லியமான கணக்கு என்ன? என்பதனை நீங்கள் எங்கேயிருந்தும் வாங்க முடியாது.  தமிழக அரசு சார்ந்த இணைய தளங்கள் பக்கம் ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள்?  நீங்கள் எதையும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதில் ஆட்சியில் இருப்பவர்கள், வர ஆசைப்படுகின்றவர்கள் அத்தனை பேர்களும் தெளிவாக இருக்கின்றார்கள்.  

உத்தேச கணக்காக இதைச் சொல்லுகின்றேன்.  தமிழ்நாட்டில் 30 கல்வி மாவட்டங்கள் உள்ளது. 45.000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. 13,000 தனியார் பள்ளிகள் உள்ளது.  மொத்தம் ஒரு கோடியே முப்பது லட்சம் மாணவர்கள் இங்கே ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கின்றார்கள்.

1. பத்தாம் வகுப்பு (பத்து லட்சம் மாண வர்கள்)  பணிரெண்டாம் வகுப்பு (ஏழே முக்கால் லட்சம் பேர்கள்) பரிச்சை எழுதுகின்றார்கள்.  ஒன்று முதல் படிப்படியாக கணக்கு எடுத்தால் கடைசியில் எத்தனை சதவிகித மாணவர்கள் படிக்காமல் வெளியேறுகின்றார்கள் என்பதனை எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

அரசு இந்தக் கணக்கைக் கடந்த முப்பது வருடங்களாக வெளியிடுவதேஇல்லை.

நான் பலவற்றைக் கணக்கில் வைத்து கணக்கிட்ட போது மூன்று லட்சம் மாணவர்கள் வருடம் தோறும் பள்ளிப்படிப்பை விட்டு வெளியே செல்கின்றார்கள். 

அதாவது 12 ஆம் வகுப்பு முடிவதற்குள்.  1990 முதல் 2020 என்று முப்பது வருடங்கள் கணக்கிட்டுப் பாருங்கள். 

இன்றைய எட்டு கோடி ஜனத் தொகையில்  ஐந்தில் ஒரு பங்கு மாணவ மாணவியர்கள் பல்வேறு காரணங்களால் படிக்காமல் பாதை மாறுகின்றார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் கடந்த முப்பது வருடத்தில் இன்றைய 30 வயது இளைஞர்களுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான பேர்கள் 12 ஆம் வகுப்பு முடிக்காமல் சமூகத்தில் உள்ளனர்.

2. கடந்த 24 மாதங்கள் என்பது இதுவரை நாம் சந்திக்காத அனைத்து விதமான துறைகளிலும் நடந்துள்ளது. நடந்து கொண்டே இருக்கின்றது.  தொழில் நுட்பம் ஒரு பக்கம் விரட்டிக் கொண்டே இருக்கின்றது.  மக்களின் ஆசைகள் மறு பக்கம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.  வேலை வாய்ப்புகளின் தன்மை மாறிக் கொண்டே இருக்கிறது.  அவரவர் விரும்பும் வேலைகள் கிடைப்பதில்லை. உடல் உழைப்பு விரும்பாத சமூகம் என்பது மிக அதிகமாகவே உள்ளது. 

ஆனால் பாடத்திட்டங்கள் ஏதும் மாறியுள்ளதா? இல்லை.  காரணம் என்ன? தமிழகத்தில் இப்போது மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டம் என்பது உதயச்சந்திரன் அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியது.  அதற்கு முன்னால் 25 வருடங்கள் என்ன படித்தார்கள்? எப்படி அவர்கள் அறிவு வளர்ந்து இருக்கும்? யார் காரணம்?

3. தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கூட மொத்த எண்ணிக்கையில் கழிப்பிட வசதிகள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை இது.  மொத்தம்  7, 837 பள்ளிகள். ( இது மத்திய அரசின் மனித வளத்துறை அறிக்கையின் அடிப்படையில்) தமிழக அரசு இது குறித்து எதுவும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.

4. பாதுகாப்பு வசதிகள் உடைய கட்டிட வசதிகள் என்பது தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் பெருமையாக சொல்லக்கூடிய வகையில் இல்லை. பரவாயில்லை என்பதாகவே உள்ளது.  பெரிய விபத்துகள் ஏற்படாத வரைக்கும் மாணவர்கள் செய்த புண்ணியம் என்பதே தற்போதைய நிலைமை. மத்திய அரசின் 2020 புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்.  

ஒவ்வொரு பாடத்திற்கும் ஓர் ஆசிரியர் கட்டாயம் இருக்க வேண்டும்.  ஆனால் தமிழக அரசுப் பள்ளிகளில் பாதிக்குப் பாதி ஆசிரியர் பற்றாக்குறை உண்டு. புதிதாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.  

ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல.  அன்றாட கூலி போலவே அவர்களை அரசு நடத்துகின்றது.  ஆர்வமின்றி ஆசிரியர் பணி என்பதனைமறந்து அவர்கள் கடமைக்காகப் பணியாற்றுகின்றார்கள். 

பல அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இது போன்ற ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்குவதில்லை. நிறுத்தி விட்டார்கள். அந்தந்த பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வசூல் செய்து தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்.  அரசாங்கம் தலையிடாது என்று சொல்லிவிட்டனர்.  ஆசிரியர் இல்லையென்றால் வகுப்பு நடத்த வேண்டாம் என்றும் சொல்லியுள்ளனர். இப்படித்தான் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. 

பாதிப் பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை. தலைமையாசிரியர் பிச்சை எடுக்காத குறையாக பலரிடமும் கெஞ்சுகின்றார்கள்.  ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து அவர்கள் நன்கொடை கொடுத்து தனியாக வைப்பு நிதி வைத்துள்ளனர். அந்த வட்டி மூலம் சில ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்துகின்றார்கள்.  இன்றைய அரசுப் பள்ளிகளில் எதார்த்தம் இது தான்.

(இதற்குப் பின்னால் எழுத சில விசயங்கள் உள்ளது. பெற்றோர்களின் மனோநிலை எப்படி மாறியுள்ளது? மாணவ மாணவியர்களின் கற்றல் திறன், ஆர்வம் எப்படி மாறியுள்ளது? சமூகம் அரசு பள்ளிக்கூடங்களை எப்படிப் பார்க்கின்றது?) 

அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இப்போது நான் நண்பர்களிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி மேலே சொன்ன ஏதாவது ஓர் இடத்தில் பிராமணர்கள் வருகின்றார்கள்? ஏன் நம் கல்வித்துறை இப்படி ஆனது? என்ன காரணம்?  பின்னால் உள்ள அரசியல் என்ன?

பதில் அளிக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

3 comments:

  1. சனாதனம் / மநு நீதி / வர்ணாசிரம தர்மம் என பல மனித குல சீரழிவுகள் உள்ளன... புராண கட்டுக் கதைகள் வேறு... அப்புறம் ஓரிரு வரிகளில் :

    படித்து படித்து அறிவு பெருகி விட்டதால் (அப்படி ஒரு எண்ணம்), பக்தி பக்கம் சென்று கடவுளுக்கு கடவுள் ஆகி விட்டார்கள்...!

    ஐயனே...

    அச்சமே "கீழ்களது ஆசாரம்" எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது

    ReplyDelete
    Replies




    1. தம்பி இன்னும் டீ வரல (நான் கேட்டுள்ளதற்கு பதில் வரல) மு. வரதராசன் உரை : கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

      சாலமன் பாப்பையா உரை : கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.

      Delete
    2. கருத்துரை தொடக்கத்தில் சொன்ன மூன்றையும் அறிந்து தெரிந்து புரிந்தால், விருந்து கிடைக்கும் அண்ணே...

      குறைந்தபட்சம் 500 வருடங்களுக்கு முன்... ம்ஹீம்...

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.