அஸ்திவாரம்

Friday, November 12, 2021

அசோக் ராஜா திருமணம்

முதல் அக்காவின் மகன் திருமணத்திற்கு நான் நேற்று (11.11.2021) ஊருக்குச் சென்று வந்தோம். ஊடகங்கள் தொடர்ந்து மழை குறித்துப் பயமுறுத்திக் கொண்டே இருந்தன.  திருமணம் தேவகோட்டையில் உள்ள சிவன் கோவிலில் நடக்க இருந்த காரணத்தால் மனதிற்குள் பயம் இருந்து கொண்டே இருந்தது.


ஆச்சரியம் என்னவெனில் திருப்பூரிலிருந்து கிளம்பியது முதல் திரும்பி வந்து சேர்ந்தது வரைக்கும் மழை என்பது இல்லவே இல்லை.  

2020 ஜனவரி மாதம் பள்ளியில் நடந்த விழாவிற்காக ஊருக்குச் சென்றேன்.  வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்கள்.  22 மாதங்கள் கழித்து இப்போது தான் சென்றே ஆக வேண்டும் சூழல் உருவானது. இடையில் நடந்த சாவு, திருமணம், மற்ற விசேடங்கள் எதற்கும் செல்லவில்லை. கொரோனா என்றொரு அரக்கன் தடை செய்து வைத்திருந்தான். 

கரூர், திருச்சி, புதுக்கோட்டை என்று எங்கெங்கும் சாரல் தான். இதமாக இருந்தது.

புதுக்கோட்டையிலிருந்து இரண்டு சக்கர வாகனம் மூலம் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வாயிலாக எளிதாக (60 கிமீ) ஒரு மணி நேர பயணத்தில் சென்றோம். எப்போதும் செல்லும் பாதையில் சென்றால் மூன்று மணி நேரம் ஆகும்.

தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை ஐந்து மணிக்கு பயணம் செய்த போது ஊட்டியில் இருப்பது போலவே இருந்தது. ஆள் அரவம் இல்லாமல் அத்துவானக் காட்டுக்குள் பயணம் செய்தோம். உறவினரின் பல்சர் வாகனத்தில் பறந்து செல்வது போலவே இருந்தது. 

ஆனால் சாலையில் ஆட, மாடு, குரங்கு முதல் அனைத்து விதமான விலங்குகளும் நடமாட மனதிற்குள் இனம் புரியாத பயம் இருந்து கொண்டே இருந்தது.  அப்படியும் பாதை மாறி சென்று விட்டோம். அங்குள்ள பிரச்சனையை அப்படியே வந்தவுடன் ட்விட்டரில் மத்திய அரசின் சாலை போக்குவரத்துக்கு தெரிவித்து விட்டேன்.



மொத்தமாகவே புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டம் என்பது மக்கள் உயிர் வாழ்வதற்காகவே உள்ள இடமாகத் தெரிகின்றது. வேறு எந்த வளர்ச்சியும் இல்லாத காரணத்தால் தேசிய நெடுஞ்சாலையில் கண்களுக்கு எட்டிய வகையில் மனித நடமாட்டமே இல்லை.

இராமேஸ்வரம் என்ற புனிதத்தலம் மட்டும் இல்லாவிட்டால் இந்த மாவட்டங்கள் 1947 போலவே தான் இருக்கும் என்றே தொடர்ந்து எழுது வருகின்றேன்.  இந்தப் பெருமைக்கு சொந்தக்காரர் ப.சிதம்பரம் மட்டுமே.  

திருமண மண்டபத்திற்குள் தாமதமாகச் சென்றோம்.  உள்ளே நுழைந்த போது காலை உணவுக்கான பந்தி தொடங்கி இருந்தது. அம்மா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். நான் சென்றவுடன் அவர் அருகே நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு அவர் இலையில் உள்ள பதார்த்தங்களையே எடுத்துச் சாப்பிடத் தொடங்கினேன்.  

பந்தியில் பரிமாறிக் கொண்டு இருந்தவர்கள் முதல் அங்கே உள்ள உறவுக்கூட்டம் வரைக்கும் எங்களையே வேடிக்கை பார்த்தனர். 

அம்மா என் வேகத்தைப் பார்த்து பறிமாறுபவரிடம் கேட்க அடுத்தடுத்த பலகாரங்கள் வந்து கொண்டே இருந்தது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு செட்டிநாட்டு பலகார வகைகள்.

அம்மா பேசிக் கொண்டே இருந்தார். 

சற்று நேரத்திற்கு முன்பு வரை தொடர்ந்து  யார் யாருடன் கூட சண்டை போட்டுக் கொண்டுருந்துருப்பார் போல. 

அது சரியில்லை? இது சரியில்லை? என்று 85 வயதில் 5 வயது குழந்தைத்தனமாக நடந்து கொள்வது அவரின் வாடிக்கை என்பதால் அவர் வரிசையாக ஒவ்வொருவர் மீதும் குற்றஞ்சாட்டிப் பேசிக் கொண்டு இருந்ததைப் பலகாரத்தைச் சாப்பிட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டு இருந்தேன்.

காலை மற்றும் மதிய உணவு என்பது நீண்ட நாளைக்குப் பிறகு என் சைவ உணவின் ஆசையை அதிகப்படுத்தியது.  ஏற்கனவே சென்னையில் ராஜகோபாலன் வீட்டில் சாப்பிட்ட சைவ உணவுக்குப் பின்பு அக்கா மகன் திருமண விருந்தில் பறிமாறிப்பட்ட பல தரப்பட்ட சைவ உணவு என்பது நம்பிக்கையளிப்பதாக இருந்தது.

அப்போது எடுக்கப்பட்ட படமிது.

ரயிலில் வரும் போது மனைவியிடம் சொன்னேன்.

50 வயது ஆன பின்பு நண்பர்களிடம் உரையாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  காரணம் நிறைவேறாத ஆசைகளுடன் வாழும் ஒவ்வொருவரும் மனதளவில் மிருகமாகவே வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். 

60 வயது ஆக தொடங்கும் வீட்டில் உள்ளவர்களிடம் தேவையின் பொருட்டு பேச வேண்டும்.  அது மன அமைதிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  காரணம் உடல் உறுப்புகளுக்கும் உள்ளத்திற்கும் மிகப் பெரிய போராட்டம் நடக்கும். உடல் சொல்வதை உள்ளம் கேட்காது.  மனம் எதிர்பார்ப்பதை உடல் விரும்பாது.

70 வயது ஆகும் சமூகத்திலிருந்து முடிந்தவரைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.  தனிமை உத்தமம். நம் நினைவலைகள் தான் உற்ற நண்பர்.

80 வயதில் உடம்பிலிருந்து கழிவுகள் எளிதாக செல்லும் பட்சத்தில் நாம் தான் மகா கோடீஸ்வரன்.

அம்மாவுக்கு இப்போது வயது 85க்கு மேல் இருக்கும்.  அவர் கோடீஸ்வரியாகத்தான் இருக்கின்றார். ஆனால் அவர் சொல்வதை யாரும் கேட்காத போது திருமணத்திற்கு வழங்கப்பட்ட உடைகள் நகைகள் எதையும் அணியாமல் இப்படித் தவழும் குழந்தையாக பேசத் தொடங்கி விடுகின்றார்.  



மூன்று வருடங்களுக்கு முன் மற்றொரு அக்கா மகள் திருமணத்தில் எதார்த்தமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இந்த சமயத்தில் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

காலம் என்பது நம் ஆரோக்கியத்தில் நடத்தும் தாக்குதல் என்பது வன்முறைகளை விட மிக அதிகமான காயங்களை உருவாக்குகின்றது.

1 comment:

  1. வயதுகளின் கணிப்பு சிறப்பு...

    "ஆகா இப்படியே தொடரக்கூடாதா...?" அடியேன் மனதின் தவிப்பு...

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.