தமிழக பாஜக மாநிலத்தலைவரின் கடிதம்:
-------------------------------------------
கடிதத்தின் வரிசை எண் பதினாறு
பள்ளிகளுக்கு டாட்டா… கோவில்களுக்குப் பூட்டா…
பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... அனைவருக்கும் வணக்கம்.
வரும் 01.11.2021 தேதி அன்று 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதைத் தமிழகப் பாரதிய ஜனதா கட்சி வரவேற்கிறது.
பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த நேரடி வகுப்புக்களே சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும், கருதுகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கிறது. இதனால் அவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க வேண்டியது அவசியம் என்று சமீபத்தில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி திருமதி.சௌமியா சுவாமிநாதன் கூறியிருந்தார்.
மேலும் ஏற்கனவே 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக இருக்கும் என்ற அச்சம் மெதுவாக விலகி வருகிறது. மேலும் இரண்டாவது அலையின் தாக்கமும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. எனவே, மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில், குறிப்பிட்ட தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பள்ளிகள் மீண்டும் முழுமையாக இயங்கப் போகிறது. தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 2020 மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட உள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்குப் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளித்தாலும், பள்ளிகளைத் திறக்கும் முன்னர் அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாக அமல்படுத்த
வேண்டும்.
தினமும் பள்ளிக்கு வரும் அனைவருக்கும் அடிப்படைச் சோதனைகள் செய்யப்பட வேண்டும்.
பணிக்கு வரும் ஆசிரியர்கள் கண்டிப்பாக இரண்டு கட்ட தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் நோயில்லா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர இட வசதிகள் செய்யப்படவேண்டும்.
உண்ணும் உணவு மற்றும் கழிப்பறை போன்ற தேவைகளுக்கான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மாணவர்களை அழைத்து வரும் வாகனங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட வேண்டும்.
அதன் ஓட்டுனர்களும் நடத்துநர்களும் பள்ளி ஊழியர்களும் தடுப்பூசி முகக்கவசம் கையுறை போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு முறையான பாதுகாப்பு முன்னேற்பாடு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
இதில் மாநில அரசு எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதிருந்தால் மட்டுமே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நம்பிக்கையுடன் பள்ளிக்கு அனுப்ப முடியும்.
ஆனால் தமிழக அரசின் நடவடிக்கையில் கொள்கை முடிவுகளில் சில குழப்பங்கள் இருக்கின்றன.
அனைத்து மதத்திலும் உள்ளவர்கள் அவரவர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல அரசு தடைகள் விதிக்காமல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மேலும் இந்துக்கள் மிகப் புனிதமான மாதமாகக் கருதி வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் மார்கழி மாதத்தில் ஆலயங்கள் திறக்கப்படாமல், மக்களைக் கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்கு வழிவகை செய்யாமல், தடுப்பது உண்மையிலேயே மக்கள் நலத்திற்காகவா அல்லது இறை நம்பிக்கையற்ற தங்கள் கொள்கைகளைத் திணிப்பதற்காக என்பது விளங்கவில்லை.
இன்னும் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் , ஃப்ளோரிடா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மாகாணங்களில் மார்கழி மாதத்தை இந்துக்களின் புனித மாதமாக அங்கீகரித்து வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வழிவகை செய்திருப்பதைத் தமிழக அரசு செய்யத் தயங்குவது ஏன் என்ற காரணம் புரியவில்லை.
விபரம் தெரியாத, தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாத, இளம் மாணவர்களைக்கூட மதித்து பள்ளிகளைத் திறக்கும் தமிழக அரசு, தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்ட பெரியவர்களை, கொரோனா விழிப்புணர்வு கொண்ட இறை நம்பிக்கையுடையவர்களை, அவரவர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
மேலும் நவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகள் தொடர்வதால், புனித மாதமான புரட்டாசி மாதத்தில், ஆளும் மாநில அரசால், இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இதை மக்கள் பார்க்கின்றனர்.ஆகவே அரசு வழிபாட்டுத் தலங்களை, திறந்து மக்களுக்கு இயல்பான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.
தமிழகத்திற்கு நடுவே உள்ள மாநிலமான பாண்டிச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு வழக்கம் போல இந்துக்களுக்கு விதிக்கப்படும் தடையால் பாவம் எல்லா மதத்தினரும் பாதிக்கப்படுகிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
ஆகவே மக்கள் மன்றத்திலும், சமூக ஊடகத்திலும், அரசுக்கு அழுத்தம் கொடுப்போம், வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வைப்போம்.
அன்புடன்
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.