அஸ்திவாரம்

Sunday, September 12, 2021

பாஜக மாநில தலைவரின் கடிதம்.-2

தடைகளைத் தகர்த்த தந்திமுகன் !



பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக்  குடும்பத்தின் சொந்தங்களே..... 

அனைவருக்கும்  வணக்கம்.

மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் எனது 

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். 

இந்து பண்டிகைகளின் வரிசையில் முதல் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

தாழ்த்தும் பேச்சினாலும், வாழ்த்து மறுப்பினாலும், மதச்சார்பின்மை என்ற பெயரிலேயே ஒரு சாராரை மட்டும் எப்போதும் வஞ்சித்து வரும் திமுக, இந்த முறையும் நோய்த்தொற்றைக் காரணம் காட்டி விநாயகர் சதுர்த்திக்குப் பலவகைகளில் தடைகளை விதித்தது.

ஏழை குயவர்கள் கைது செய்யப்பட்டனர். தாக்கப்பட்டனர். அவர்கள் செய்த விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டன. காவல்துறை ஆளும் திமுகவின் ஏவல் துறையாக மாறி பல அத்துமீறல்களைச் செய்து, தமிழக மக்களை அச்சுறுத்தியது. 

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் அகவல் பாடி வழிபட்டு, விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

பல்வேறு இடங்களில் மாற்று மதத்தினரும் மகிழ்ச்சியுடன் வந்து விநாயகருக்கு மரியாதை செய்த பரவசக் காட்சியும் நடந்தேறியது. அனைவரையும் மதிப்பதுதான் மத நல்லிணக்கம் என்பதை ஆட்சியாளர்களுக்குப் புரிய வைப்பதாக அந்நிகழ்வு அமைந்தது. 

பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திலும், தொகுதி, மண்டல் அலுவலகங்களிலும் விநாயகர் சிலைகளை, வாசலில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா  கொண்டாடப்பட்டது. 

நாம் எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை மனதார நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும். ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.

தெருக்களில் பொது அமைப்பினரால் வைத்து நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி விழாக்களை அரசு முற்றிலுமாக தடை செய்து விட்டது.... ஆனால் மக்கள் மிக விமரிசையாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினர். 

பாலகங்காதர திலகர் புனேயில் 1893 ஆம் ஆண்டு, பொதுவெளியில் பந்தல் போட்டு விநாயகரை வழிபடும் முறையை ஏற்படுத்தினார். சுதந்திரப் போரில் பொது மக்களை ஒன்று திரட்ட, அவர் செய்த இந்த புதிய முயற்சி மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. விடுதலையை வென்று தந்தது. 

விநாயகர் தந்த, அந்த வெற்றி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், சதுர்த்தி திருவிழா தடையானது. மக்கள் திமுகவின் இந்து மதச்சார்பின்மை கொள்கையைப் புரிந்து கொண்டார்கள். சந்தர்ப்பவாத அரசியலைத் தெரிந்து கொண்டார்கள். 

பல இடங்களில் தடைகளை மீறி விநாயகர் விழாவை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

#தமிழக_பாஜக_தலைவர்_கடிதம் - 2

அன்புச் சகோதரன் 

உங்க அண்ணா

(12/09/2021)


No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.