அஸ்திவாரம்

Thursday, June 17, 2021

IL&FS Group தலைவர் திரு. பார்த்தசாரதி ஒரு லட்சம் கோடி மோசடி

தமிழகத்தில் பஞ்சாயத்துக் கோஷ்டிகளிடம் வாழ்நாள் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் இன்று வரையிலும் ஸ்ரீராம ஜெயம் எழுதுவது போல இரண்டு வார்த்தைகளைப் பற்றித் தவறாமல் எழுதுவதை நீங்கள் கவனித்து இருக்க வாய்ப்புண்டு. 

ஒன்று நீட். மற்றொன்று பணமதிப்பு இழப்பு.




நீட் என்பது அம்மையார் நளினி சிதம்பரம் பட்டவர்த்தனமாக சொல்லியிருப்பது தெரிந்து இருந்தாலும் அவர்கள் வாழ்க ஒழிக போல இதனைத் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது தான் இங்குள்ள அரசியல்.

இதைப் போல இவர்கள் பேசும் பணமதிப்பு இழப்பு என்பதனை எங்கள் உத்தமர் பாசி அய்யா போன்றவர்கள் தேசிய பேரிடர் போன்று குறிப்பிட்டு இன்று வரையிலும் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதித் தள்ளிக் கொண்டே இருக்கின்றார். நாட்டின் மேல் இவருக்கும் இத்தனை பற்றா? என்றொரு கேள்வி உங்கள் மனதில் வரக்கூடும். அது சார்ந்த சந்தேகத்தைக் கீழே உள்ள தகவல்கள் உங்களுக்குப் புரிய வைக்கும் என்று நம்புகிறேன். 

சில தினங்களுக்கு முன்பு பணமதிப்பு இழப்பு மூலம் எத்தனை போலியான நிறுவனங்கள் அழித்து ஒளிக்கப்பட்டது. அது தொடர்ந்து இன்னமும் நடந்து வருவதைப் படித்து இருக்க வாய்ப்புண்டு.  

இன்று படிப்படியாக பல உயர்ந்த நிலையில் இருப்பதாக காட்டிக் கொண்ட பல நிறுவனங்கள் வங்கிகளை ஏமாற்றிய கதையை முழுமையாக புரிந்து கொண்டால் போதும். 

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு தரமான சம்பவம் நடந்தது. நம் முன்களப் பணியாளர்கள் வேறு வேலைகளில் கவனமாக இருப்பதால் இந்தச் செய்தியை நாம் தான் கொடுக்க வேண்டியதாக உள்ளது.

IL&FS Group தலைவர் திரு. பார்த்தசாரதி அவர்களை 200 கோடி மோசடி செய்துள்ளதாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

இப்போதுள்ள தமிழக ஆட்சி மாற்றச் சூழலில் கூடப் பஞ்சாயத்து அரசு இதில் தலையிடமுடியாத அளவுக்கு நடந்துள்ள குற்றத் தொகை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற காரணத்தால் மட்டுமே இந்நிகழ்வு நடந்து இருக்க வாய்ப்புண்டு.

பார்த்தசாரதி மூலம் ரூபாய் 200 கோடியை இழந்த 63 மூன்ஸ் டெக்னாலஜி லிமிட் அளித்த புகார் மூலம் தான் இது வெளியே வந்தது. உள்ளே தோண்டத் தோண்ட அது பூதம் போல மாறிக் கொண்டே இருக்கின்றது. பெரிய ஆச்சரியம் என்னவெனில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து வாடிக்கையாளர்கள் அவர்கள் மூலம் நிறுவனம் வாங்கிய வைப்புத் தொகை என்று ஒவ்வொன்றாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் இப்போது கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆராய்ந்து வருகின்றது.

அனைத்தும் உறுதிப்படுத்திய பின்பு அலுவலக ரீதியாக ஓர் அறிக்கை வெளியானது.

"1 லட்சம் கோடி ஐ.எல் அண்ட் எஃப்எஸ் மோசடியின் கிங் மற்றும் சூத்திரதாரி திரு. ரவி பார்த்தசாரதி 20.09.2020 தேதியிட்ட 2020 ஆம் ஆண்டின் குற்றவியல் எண் 13 தொடர்பாக Economic Offence Wing ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்" 

யார் இந்த பார்த்தசாரதி?

இவர் எங்கள் அய்யா பாசியின் வலது கை மற்றும் இடது கை. இவர் கடந்த 25 ஆண்டுகளாக செய்த வந்த நிதி மோசடிகள் எல்லை கடந்தது. ஆனால் வலையில் சிக்காமலிருந்தார். காரணம் உங்களுக்கே தெரியும். குரு திறமையானவராக இருந்தால் சிஷ்யர்களும் அறுபதடி பாயக்கூடியவர்களாக இருப்பார்கள் என்பது உண்மை தானே.

பார்த்தசாரதி முன்பு வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் (எச்.டி.எஃப்.சி) வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக 25 ஆண்டுகளாக பணியாற்றினார். பின்னர் ஐ.எல் & எஃப்எஸ்-ஐ நிறுவினார், இது ஒரு பெரிய உள்கட்டமைப்பு நிதி மற்றும் கட்டுமான நிறுவனமாகும், இது ஒரு 'நிழல் வங்கி' அல்லது பாரம்பரிய வர்த்தக வங்கிகளைப் போன்ற சேவைகளை வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனமாக பணியாற்றியது.

"குற்றம் சாட்டப்பட்டவர், ரவி பார்த்தசாரதி, முழு ஐஎல் அண்ட் எஃப்எஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநருமாவார். 350க்கும் மேற்பட்ட குழு நிறுவனங்களைக் கொண்ட ஐஎல் அண்ட் எஃப்எஸ் குழு, மோசடி செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது".  

இந்த இடத்தில் ஷெல் நிறுவனம் என்றால் என்பதனை பொருளாதாரம் கற்றுக் கொள்ள விரும்பும் தமிழ்ப்பிள்ளைகள் தேடிப்பிடித்து உய்யவும்.  

ஏற்கனவே ஒரு பதிவில் பணமதிப்பு இழப்புக்குப் பின்னால் 5 லட்சம் ஷெல் நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்பதனை விரிவாக எழுதியுள்ளேன்.  

ஒரு நிறுவனத்தை உருவாக்குவார்கள். எந்த வேலையும் நடக்காது. பணப் பரிவர்த்தனை மட்டும் நடந்து கொண்டே இருக்கும். கண்டம் விட்டு கண்டம் செல்லும். உலகில் நீங்கள் அறியாத வரி இல்லாத தீவுகளை நோக்கிப் பாயும். திரும்பி உள்ளே வரும். சலவை சட்டை அணிந்து  மாறி விடும். பொருளாதார மேதை என்று புகழ்வார்கள். நீங்களும் நானும் நம்ப வேண்டும். கூடவே மோடி ஒழிக என்பதனை நாம் மறக்காமல் கூவ வேண்டும்.

பார்த்தசாரதியைக் கைது செய்வதற்கு முன்பு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்ட முன்னாள் நிர்வாக இயக்குநரான ராம்சந்த் கருணாகரன் மற்றும் ஐ.டி.என்.எல் முன்னாள் துணைத் தலைவரும் இயக்குநருமான ஹரி சங்கரன் ஆகியோரைக் கடந்த ஜனவரி மாதம் மாநில காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு கைது செய்தது.

எப்படி மாட்டினார்கள்?

இன்றைய சூழலில் பணப் பரிவர்த்தனை அத்தனை எளிதாக செய்து விட முடியாது. எல்லாவற்றுக்கும் கணக்கு வேண்டும். கணக்கு காட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஆப்பு தான்.  

இதன் அடிப்படையில் இந்த நிறுவனம் கடுமையான பணப்புழக்கச் சிக்கல்களால் பல குழு நிறுவனங்களுக்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்துவதில் தவறியதை அடுத்து, 2018 ஆம் ஆண்டில் ஐ.எல் அண்ட் எஃப்எஸ் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. 

அதன் இரண்டு துணை நிறுவனங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும், நிறுவனங்களுக்கு இடையிலான வைப்புத்தொகையைக் கடனளிப்பவர்களுக்குத் திருப்பிச் செலுத்துவதிலும் தவறிவிட்டன.

நிறுவனத்தின் கறுப்பு பக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத்துவங்கின. பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவை நாடினர்.

"ரவி பார்த்தசாரதியும் அவரது குழுவினரும் கவனக்குறைவு, திறமையின்மை மற்றும் பொய்யான நிதிநிலை அறிக்கைகளை முன்வைப்பதன் மூலம் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதற்குக் காரணமாக இருந்தனர். ஐ.எல் அண்ட் எஃப்எஸ் அதன் பணப்புழக்கங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததைக் கண்டு பிடித்தோம். தாங்கள் செய்வதாக சொல்லிய கடமைகளுக்கும் பரிவர்த்தனையில் காட்டிய கணக்கு வழக்குகளும் பொருந்தாமல் இருந்தன.

கடுமையான பொருந்தாத தன்மையை மறைத்து அதன் நிதி அறிக்கைகளை மறைத்து வைத்துச் செயல்பட்டு உள்ளனர்.

மொத்தப் பணப்புழக்கமின்மையை மறைத்து, மோசமான நிதி விகிதங்களை வெளிப்படுத்திய காரணத்தால் எளிதாக கண்டு பிடிக்க முடிந்தது".

என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிறுவனம் முழுக்க முழுக்க நிழல் உலக சாம்ராஜ்யமாகவே செயல்பட்டு வந்து உள்ளது.

சட்டவிரோத நடைமுறைகள், கடன் மதிப்பீட்டு முகவர் நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுப்பது மற்றும் பிற மோசடி நடைமுறைகளை கடைபிடித்து தொடர்ந்து தவறு இழைத்து வந்து உள்ளது. 

ஐ.எல் அண்ட் எஃப்எஸ் குழுமத் தலைவர் பார்த்தசாரதியின் செயல்பாடுகள் அனைத்தும் இந்திய நிதியியல் பரிவர்த்தனையைக் கேலிக்கூத்தாகும் வண்ணம் இருந்தது.


6 comments:

  1. இன்னும் எவ்வளவோ...

    பேரம் பேசுதல் சரியில்லாமலும் இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. இது 20 வருடங்களாக நடந்து வந்த திருட்டுத்தனம்.

      Delete
  2. ஏதோ ஒரு முடிவோட எழுதிட்டு இருக்கீங்க போல :-) .

    பண விஷயத்தில் மத்திய அரசு அனைவருக்கும் செக் வைத்து விட்டது. சாதாரண நபர் முதல் மிகப்பெரிய தொழிலதிபர் வரை அரசை ஏமாற்றுவது எளிதல்ல.

    நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தவறை தற்காலிகமாக சமாளிக்கலாமே தவிர தொடர்ந்து செய்ய முடியாது. இது தான் நிதர்சனம்.

    இதுவே பல பெரிய தலைகளைக் கடுப்படித்துள்ளது. இவ்வளவு நாட்களாக கொள்ளை அடித்து வந்ததை தற்போது செய்ய முடியவில்லை.

    அந்தக் கோபத்தால் மோடிக்கு எதிராக பல்வேறு வழிகளில் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

    பெட்ரோல், கேஸ், டோல் போன்றவற்றில் மத்திய அரசு வைக்காமல் இருந்தால், மக்களிடையே வரவேற்பை பெறும்.

    இதைச் செய்யத் தவறினால், என்ன நல்லது செய்தாலும் மக்களிடையே நல்ல பெயர் கிடைக்காது. இதை மோடி எதிரிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.

    இது தான் நடைமுறை எதார்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஐந்தாண்டுகளில் பெட்ரோல் டீசல் என்ற வார்த்தை மத்திய அரசாங்கத்திற்கு தேவை இல்லாத பொருளாக மாறிவிடும். உள்கட்டமைப்பு வசதிகள் என்பது இந்தியா முழுக்க 20 சதவிகிதம் கூட இன்னமும் நிறைவேறாமல் உள்ளது. 50 சதவிகிதம் இலக்கு அடையும் வரைக்கும் எரிபொருள் மூலம் வரக்கூடிய வருமானம் தான் முக்கியமாக உள்ளது. 120 கோடி மக்களில் இரண்டு கோடி மக்கள் கூட வருமானவரி கட்டுவதில்லை. இதில் 25 லட்சம் பேர்கள் (நிறுவனங்கள்) தான் முழுமையாக வரி கட்டுகின்றார்கள்.

      Delete
    2. ஜோதிஜி

      மத்திய அரசுக்கு பணம் இல்லையென்பதாலும், நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்பதாலும் பெட்ரோல் டீசல் விலையை அதிகப்படுத்தினால், அதை சராசரி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

      நாட்டின் வளர்ச்சியை விட தங்கள் தின வாழ்க்கை எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதையே எவரும் எண்ணுவார்கள்.

      எனவே, இவ்வகை உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும், அடிக்கடி உயர்வு, அதிக உயர்வு என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

      இவை எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். இன்னொரு வகையில் கூறுவதென்றால், நல்லது செய்தும் பாஜக வெற்றி பெற முடியாமல் போகலாம்.

      எனவே, தேர்தலுக்கு முந்தைய இரு வருடங்களில் இவ்வகை உயர்வைக் குறைத்து, மேற்கூறிய ஊழல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.

      ஒரேயடியாக மக்களை அழுத்துவதும் தவறு.

      வேறு பல நல்ல திட்டங்கள் மூல மக்களுக்கு பலன் கிடைக்கிறது என்றாலும், இவையே அனைவர் முன்பும் இருக்கும். காரணம் இடது சாரி ஊடகங்கள் இவற்றையே முன்னிறுத்தும்.

      தமிழக பாஜக வே மோடி திட்டங்களை மக்களுக்குச் சரியாக கொண்டு செல்லாத போது யாரை குறை கூறி என்ன பயன்?

      பாஜக இதே போல தொடர் உயர்வை கேஸ், பெட்ரோல், டோல் வழியாக செய்தால், சிக்கலே.

      டோல் பணம் மூலம் பல சாலை திட்டங்கள் நடைபெற்றுள்ளது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

      இது தான் எதார்த்தம்.

      வருமானவரி கட்டுவதில்லையென்று நியாயமாக கட்டுபவர்களையே கசக்கி பிழிந்தால் என்ன செய்வது.

      என் சம்பளத்தில் 30% வரியாக செல்கிறது. இவை அல்லாமல் மற்ற வரிகளை கணக்கெடுத்தால், என் வருமானத்தில் 50% க்கு மேல் வரியாகவே செல்கிறது.

      மேற்கூறிய முறையில் நெருக்கடிகளைக் கொண்டு வரும் போது வரி கட்டுபவர்கள் எண்னிக்கை அதிகரிக்கும். GST அதிகரிப்பது போல.

      அந்த சமயத்தில் வரியைக் குறைக்க அரசு முயற்சிக்க வேண்டும். குறைந்த வரி என்றால், அதிக மக்கள் கட்ட முன் வருவார்கள்.

      Delete
    3. பரிவர்த்தனைகளின் அடிப்படையில் மிகக் குறைந்த அளவு வரி கட்டுதல் என்ற திட்டம் வரப் போகின்றது. வருடம் தோறும் வருமான வரி கட்டுதல் தணிக்கையாளர் மூலம் நம் ஒரு வருட ஜாதகத்தை ஒப்படைக்கும் பழைய பஞ்சாங்க நடைமுறைகள் விரைவில் மாறப் போகின்றது. அதற்கு முதலில் 70 சதவிகித மக்களின் டேட்டா விபரங்கள் அரசுக்குத் தேவை. அந்த முயற்சியில் கால் கிணறு தான் தாண்டியுள்ளோம். ஏற்றுமதி துறையில் இப்போது நடந்த நடந்துள்ள மாற்றங்கள் என்பது நீங்கள் கற்பனையில் நினைத்தே பார்க்க முடியாதது. வெளியே எவரும் தெரியாது. சரியான முறையில் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் மட்டும் தான் இனி வரும் காலங்களில் இங்கே தொழில் செய்ய முடியும். காரணம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஓட்டைகள் முக்கால் வாசி அடைக்கப்பட்டு நான்கு பக்கமும் கம்பி வேலி போட்டு கட்டப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் இனி இப்படி தப்பித்து கணக்கு காட்டாமல் இருந்து விடலாம் என்பது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 சதவிகிதம் வாய்ப்பே இல்லை. வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் சில மசோதாக்கள் வர இருக்கின்றன. தமிழக பாஜக குறித்து நான் எப்போதும் எங்கேயும் எதுவும் சொல்லவே மாட்டேன். காரணம் மனிதர்கள் எப்போதும் பலகீனமானவர்கள்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.