நாங்கள் தான் இஸ்லாமியர்களின் காவலர்கள் என்று தொடர்ந்து திமுக சொல்லி வருகின்றார்கள்? இது உண்மையா?
TMMK-ப.அப்துல் சமது கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு என்று நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க சில அம்சங்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.
1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்குக் காரணமான சதித் திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டனர்.
இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாகத் தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.
1) இந்திய தேசிய காங்கிரஸ்,
2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.
இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன.
காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குப்பதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்குத் தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது.
காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.
திமுகவைத் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்தக் கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றிக் கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடையக் கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.
முஸ்லிம் சமுதாயத்தைக் கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்?
1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தறுவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களைச் சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியைக் கூறி இந்தச் சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர்.
இது எந்த அளவுக்கு உண்மை?
கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.
1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த முதல்வர் கலைஞர் ஓர் அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாகக் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
இதனைக் காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். எதிர்காலம் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக்காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.
காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயமும் பாதிக்குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணயச் சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காகக் குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
தமிழர்களைப் பற்றிக் கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்கக் கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளைக் கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்கக் காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகுத் தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.
ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்குச் சாதகமான முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த இருவருக்குப் பதவி கொடுத்தார் கலைஞர்.
சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டுச் சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்தப் பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.
இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்?
தொடரும்.........
நான் அறியாத விஷயங்கள்.
ReplyDeleteஆறு பகுதிகள் உள்ளது. நான் சுருக்கி விட்டேன்.
Delete