இன்று அதிகாலையில் நடந்து சென்ற போது எப்போது நான் பார்க்கும் காட்சிகளும், வீட்டுக்குள் வந்து விழுந்த செய்தித்தாள்களில் தினமும் முழுப்பக்க விளம்பரங்களைப் பார்க்கும் போது பல எண்ணங்கள் ஓடியது.
எடப்பாடியாருக்கு விளம்பரம் என்பது அரசு செலவில் தொடர்ந்து முழுப்பக்கம், இரண்டு பக்கம் என்று தினமும் வந்து கொண்டேயிருக்கிறது. மற்றபடி கோவைப்பதிப்பில் வேலுமணி நான்கு பக்க விளம்பரங்களை எல்லாம் சர்வசாதாரணமாக இடைவெளிவிட்டுக் கொடுத்து வாக்காளர்களைப் புல்லரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தத் தேர்தல் திருவிழாவில் எத்தனை சிறு தொழில்கள் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது?
மக்கள் கையில் பணப் பழக்கம் இல்லை என்று கவலையாய் போராளிக்கூட்டம் சொல்கின்றார்களே? இது நடைமுறையில் எப்போது உள்ளது என்பதனை பட்டியலிட்டுப் பார்த்தேன். இதில் கூகுள் தளத்தில் ஒப்பாரியை ஓட விட்டுச் செலவழிப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
1. டாடா ஏஸ் போன்ற சிறு வாகனங்கள், ஓட்டுநர், உதவியாளர், சவுக்கு கட்டைகள், கொடிகள் அமைக்கச் சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டுபவர். ஆட்டோ ஊர்வலம் இன்னமும் தொடங்கவில்லை. ஏப்ரல் மே மாதங்களில் அவர்கள் காட்டில் மழை பெய்யும். இது தவிர லாரிகளில் ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்பவர்கள் இப்போது பிசியாக இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் முன் முன்பதிவு அளவுக்குச் செல்லும் என்றே நினைக்கின்றேன்.
2. ப்ளக்ஸ் போர்டு தொடர்பான அனைத்துத் தொழில்களும் இப்போது கொஞ்சம் மூச்சுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அச்சு அச்சகம் மூலம் நோட்டீஸ், பசை, ஓட்டுபவர், இதனை மொத்தமாக ஒப்பந்தம் எடுத்தவர் இவர்கள் காலை முதல் மாலை வரை ஒவ்வொரு தெருக்களிலும் அதிகம் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுப் பொருளீட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
3. சுவரில் படங்கள் வரைபவர், பெயிண்ட் தொழில்கள், ப்ரெஷ் தொடர்பான தொழில்கள். உயரமான இடங்களில் சவுக்கு கட்டைகளைக் கட்டி வேலைகளைச் செய்பவர்கள் என்று இந்தப் பக்கமும் ஓரளவுக்குக் களைகட்டியுள்ளது.
4. சொல்லவே தேவையில்லை. டாஸ்மாக் 24 மணி நேரமும் சேவை செய்து கொண்டிருக்கிறது.
5. மைக் செட் முதல் சீரியல் லைட் வரைக்கும் வாடகைக்கு விடுபவர்கள் வாழ்வில் வசந்தம் வீசிக் கொண்டிருக்கிறது. இத்துடன் டேபிள் சேர் வாடகைக்குக் கொடுப்பவர்களுக்கும் சந்தோஷமான காலகட்டம் தான்.
6. விலையுயர்ந்த பிரியாணிக் கடையில் விற்கும் தரமானது முதல் மிஞ்சிப் போன பிரியாணி வரைக்கும் சூடாக விற்றுக் கொண்டிருக்கிறது,
7. வந்தால் ரூபாய் 300, கூட்டத்தில் கடைசி வரைக்கும் இருந்தால் 500 என்கிற வரையில் மக்களுக்குப் பணம் கிடைப்பதைப் போல இதனைக் கண்காணித்துக் கவனிக்கும் நபரும் தேர்தல் முடிவதற்குள் கோடீஸ்வரராக மாற வாய்ப்புள்ளது.
மேலே நான் சுட்டிக் காட்டியுள்ள தொழில் போல இதற்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான துணைத் தொழில்கள் அதிகம். இரவில் உற்சாகப்படுத்தும் தொழில்களை இதில் கொண்டு வரவில்லை.
இன்றைய சூழலில் தமிழகத்தில் ஒரு நாள் புழக்கத்தில் சில லட்சம் கோடி பணம் உருண்டு கொண்டிருக்கிறது.
எதுவும் டிஜிட்டல் மணி அல்ல. எல்லாமே புத்தம் புது கரன்சி என்பதனை நினைவில் வைத்திருங்கள்.
இந்த முறை மொத்தமாக 90 000 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். ஒரு வாக்குச் சாவடிக்கு பத்துப் பேர்கள் தேவைப்படும். கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மொத்தம் எத்தனை ஆட்கள்? அவர்களுக்குத் தினசரி சாப்பாடு, பேட்டா, சம்பளம்?
பெட்ரோல், டீசல் இரண்டும் ஒரே விலைக்கு வந்து விட்டாலும் வாகனங்களில் அணிவகுப்புகளைப் பார்க்கும் இந்தியாவின் மாத ஜிஎஸ்டி தேர்தல் முடிவதற்குள் இன்னும் அதிகமாகும் என்றே தோன்றுகின்றது.
கையில் காசு. வாயில் தோசை என்ற கொள்கையின் அடிப்படையில் அரசியல் சதுரங்கத்தில் காந்தி தான் தலைமைப் பொறுப்பிலிருந்து தமிழகத்தின் சிறு தொழில்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார். பாரபட்சமின்றி அனைவர் கரங்களிலும் சிரிக்கின்றார்.
கொரோனா காரணத்தினால் பள்ளி திறந்தும் ஒரு வாரம் கழித்துப் பார்த்து என் மகளைப் பள்ளிக்கு அனுப்புவேன் சார் என்ற செக்கிங் பெண்மணி இன்று வரவில்லையே? என்று கேட்ட போது
"எடப்பாடி மீட்டிங்குக்கு வந்துருக்கேன் சார். நாளை கம்பெனிக்கு வந்து விடுகிறேன்" என்கிறார்.
நாள் முழுக்க நின்று கொண்டே உழைத்தால் கிடைக்கும் ரூபாய் 400 பெரிதா? கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பினால் கிடைக்கும் ஆயிரம் பெரிதா?
வளரும் தமிழகம்.
ஒளிரும் தமிழகம்.
என்னமோ போடா மாதவா!
ReplyDeleteRaajan
மாதவன்கள் ஒரு நாளைக்கு தேர்தல் செலவுக்கு 100 கோடி வரைக்கும் செலவளிப்பதில்லையே ராஜன்.
Deleteஏ'மாற்றம்...
ReplyDeleteமாற்றம் முன்னேற்றம்.
Delete"எடப்பாடி மீட்டிங்குக்கு வந்துருக்கேன் சார். நாளை கம்பெனிக்கு வந்து விடுகிறேன்" என்கிறார்.
ReplyDeleteநாள் முழுக்க நின்று கொண்டே உழைத்தால் கிடைக்கும் ரூபாய் 400 பெரிதா? கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பினால் கிடைக்கும் ஆயிரம் பெரிதா?
வளரும் தமிழகம்.
ஒளிரும் தமிழகம். - அருமை.
நன்றி
Deleteஅடுத்த சில நாட்களில் போக்குவரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல், வரமுடியாமல் ஏற்படப்போகும் தடங்கல்களை நினைத்துக் கவலையாய் இருக்கிறது.
ReplyDeleteஎங்க தொகுதிக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள் என்று எங்கள் பகுதி மக்களுக்கு கவலையாக உள்ளது ராம்.
Deleteஇவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு லட்சங்களிலேயே கொடுக்கலாம்! கறுப்பாவது வெள்ளையாகும்!
Delete