Yuhak KaviKindle Tamil Book Readers Club
ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை.
ஆசிரியர் ஜோதிஜி.
சிறு வயது முதல் செய்திகள் மூலம் கேள்விப்பட்ட வரலாற்றை முழுமையாக நூல் வடிவில் படிக்கக் கிடைத்தது. ராஜாஜி யை எனக்கு எழுத்தாளராக மட்டும் தான் தெரியும். முதலமைச்சராக இருந்தார் பெரியாரின் நண்பர் . இந்த இரண்டையும் தவிர அவரது அரசியல் வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாது. அதே போல பக்தவச்சலம் அவர்கள். ஆனால் பக்தவத்சலம் அவர்கள் சில விஷயங்களில் தோல்வி அடைந்து இருந்தாலும் நேர்மையான ஆட்சி தான்
கொடுத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
காமராஜர்- சொல்லவே தேவை இல்லை. அவர் பற்றிய வரலாறு ஒரு மீள் வாசிப்பு தான்.
ஆனால் ஒரு நாட்டின் பிரதமரையே தெரிவு செய்யும் வல்லமையுடன் இருந்த காமராஜர் கடைசியில் தனக்கு ஏதோ செய்கிறது என்று டாக்டர் ஐ அழைக்கச் சொல்லும் போது அவர் உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்படவில்லை என்பது தான் சோகம். உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிச் சென்ற உதவியாளரையும், பின்னர் அவரே அழைத்த போது எந்த டாக்டர் உடனே வர முடியாத சூழ்நிலையையும் வாசித்த போது கண்கள் கலங்கியது - காமராஜரை நினைத்து மட்டும் அல்ல. தமிழ் நாட்டையும் நினைத்து.
அது என்னவோ தமிழ்நாட்டுக்கு மக்கள் மீது அக்கறை உள்ள தலைவர்களை நீண்ட ஆயுள் உள்ளவர்களாக வைத்து இருக்கக் கடவுளுக்கு மனம் வரவில்லை. தமிழனுக்கு மட்டும் ஏன் இந்தத் துரதிர்ஷ்டம்? காமராஜர் மட்டும் அல்ல அண்ணாவின் ஆட்சியும் ஒன்றரை வருடமே. புற்றுநோய் காவு கொண்டது அவரை. தமிழன் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.
எனக்கு ஆச்சரியம் ஊட்டும் வரலாறு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடையது. ஓர் ஆன்மிக வாதியாக அன்பே உருவானவராக, கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே நுழையும் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த புரட்சியாளராக மட்டுமே சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் காட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் முத்துராமலிங்கத்தேவரின் மறுபக்கம் பார்த்த போது உண்மையில் திகைத்துப்போனேன்.
கோயில் நுழைவு போராட்டம் நடத்தியவரின் சாதிய வெறி, அதனால் நடந்த கொலைகள், கலவரங்கள் இது எல்லாம் தவிர அவர் இறந்து பலகாலத்துக்குப் பின் நடந்த சட்டக்கல்லூரி சாதிக்கலவரத்துக்கு கூட அவர் அமைத்த பின்னணி தான் காரணம் ஆகி இருக்கிறது என்று தெரிய வரும் போது நெஞ்சம் ஆடித்தான் போய்விடுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்டுவரப்பட்ட புதிய அடக்குமுறை பட்டியலில் பலவற்றை அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலும் காண முடிகிறது.
இருப்பினும் பெரியார் காலத்துக்கு பிறகான வரலாறுகளில் கொஞ்சம் சந்தேகம் வருகிறது. தான் நடுநிலையாக இதை எழுத வேண்டும் என்ற ஆவலில் ஆசிரியர் இந்தக் கால அரசியல் தலைவர்களுடன் கூட இருந்தவர்களுக்கு ஊடாக சில நிகழ்வுகளைப் பேசுகிறார். ஆனால் நடுநிலையாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் பண்ணிய இந்த முயற்சியே சில நடுநிலையற்ற கருத்துக்களைப் பதிவு செய்து விட்டதோ என்கின்ற எண்ணம் உருவாகிறது.நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்ப வேண்டியதாக இருக்கிறது.
உதாரணத்துக்குத் திராவிடக்கட்சி ஏன் அரசியல் கட்சியாக இருக்கக் கூடாது என்று தாம் நினைத்ததாகப் பெரியார் கூறியதாக அவர் அலுவலகத்தில் வேலை செய்தவர் சொன்னதாகச் சொன்ன தகவல். அது அப்போது பெரியார் அப்படிச் சொன்னார் என்பதற்கு இந்த நபரைத் தவிர வேறு ஆதாரம் எதுவுமே கணக்கு கிடைக்கவில்லை. அந்த வார்த்தைகள்- முதலில் அரசியல் கட்சி பின்னர் அது குடும்ப ஊழலில் கொண்டு வந்து விடும் என்கின்ற அந்த வார்த்தைகள்- அண்ணா காலத்தில் பெரியார் சொன்ன வார்த்தைகளா அல்லது கலைஞர் காலத்தில் இப்படிக் குடும்ப ஊழல் எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெரியார் இப்படி அன்றைக்கே சொன்னார் என்கிற ரீதியில் இந்த நபரால் இட்டுக்கட்டப்பட்ட வார்த்தைகளா என்கின்ற சந்தேகம் வருகிறது. ஒரு நபரின் வாய்மொழியை மட்டும் நம்பி எதுவும் சொல்லி விட முடியாது- அதுவும் இந்தக்காலத்தில்.
என்னதான் பக்கச் சார்பு அற்று எழுதினாலும் கலைஞர் பக்கம் ஆசிரியரின் அனுதாபம் கொஞ்சம் கனமாகவும் எம்ஜிஆர் பக்கம் கொஞ்சம் குறைவாகவும் இருப்பது போல இருக்கிறது. அவர் பயன் படுத்திய மொழிப்பிரயோகங்களில் அது தெரிகிறது.
ஈழம், பற்றிய உணர்வுகளில் கலைஞர் ஆரம்பக் காலத்தில் எடுத்த உணர்வுகள் அவர் முழுமனதோடு உண்மையான உணர்வோடு எடுத்தார் என்று பல இடங்களில் சொல்லப்படுகிறது.அவர் உள் மனதில் புகுந்து அவர் உன்பார்வை திட்டவட்டமாக அறிய எந்த மனிதரால் முடியும்? அது தான் உண்மை என்று எப்படி அடித்துச் சொல்ல முடியும்?
இதில் கலைஞர் தந்தை செல்வாவின் மகனான சந்திரசேகர் வழிகாட்டுதலில் மட்டுமே இயங்கினார். அவர் உள்ளுணர்வில் எந்த அளவு உண்மையாக இருந்தார் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. உண்மையாக இருந்து இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
அதே மாதிரி எம்ஜிஆர் பற்றிச் சொல்லும் போது ஓர் இடத்தில் பெரிய கொடைவள்ளல் போலக் கொடுத்ததும்.. என்ற சொற்றொடர் அவர் உண்மையில் கோடை வள்ளல் இல்லை.அப்படி ஓர் இமேஜ் உருவாக்கினார் என்கிற கருத்தைக் கொடுத்து விடுகிறது. அவர் உள்மனதோடு கொடுத்தாரா இல்லையா என்கின்ற இடத்தில் அவர் மனதிலும் புகுந்து பார்த்து அது போலி என்று யாராலும் சொல்லி விட முடியாது. போலியாகவும் இருக்கலாம்.உண்மையாகவும் இருக்கலாம்.. இப்படி சொற்றொடர்களும் மற்றும் கலைஞர்-எம்ஜிஆர் முரண்பாடு,மோதல்களை விவரித்த விதமும் கலைஞரை நேர்மையானவராகவும் எம்ஜிஆரைச் சுயநலவாதியாகவும் பிம்பப்படுத்தி விடுகிறது.
திமுக மூடிய சாராயக் கடைகளைத் திறந்து விட்டதும் நோய்வாய்ப்பட்டுப் படுத்துக்கிடந்த கொண்டே ஜெயித்ததும் தவிர எம்ஜிஆர் எதுவுமே செய்யவில்லை என்ற காட்சிப்படுத்தல் மற்றும் அவரின் சினிமாவில் அநீதியை எதிர்த்துப் போராடுபவராகக் கதை அமைத்து தனக்கு என்று ஒரு வில்லனை உருவாக்கி எம்ஜி ஆர்க்கு பிறகு நம்பியார்க்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனதற்கு எம்ஜிஆர் தான் காரணம் என்கின்ற மாதிரி முடித்து இருப்பதும்.. -மன்னிக்கவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நம்பியார் மட்டும் அல்ல அசோகன் சுருளி ராஜன் போன்ற பலபேர் வில்லன் ஆக நடித்தார்கள். எம்ஜிஆர் மட்டும் அல்ல சிவாஜியும் இப்படி வில்லனை எதிர்க்கும் ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்தார், இவர்களுக்கு முன் இருந்து இன்று வரை இந்த கலாச்சாரம் தொடர்கிறது. இதில் எம்ஜிஆர் வில்லன் ஆக்கி நம்பியாரை அதற்க்கு பிறகு நடிக்கவே முடியாத நிலைக்கு ஆளாக்கினார் என்று கூறுவது எம்ஜிஆர் மீது தனிப்பட்ட எதிர்ப்பை பதிவு செய்கிறது.
இவர்கள் இருவரைப்பற்றிய விமர்சனங்களில் நடுநிலை தவறி விடுகிறது என்பதே என் எண்ணம் .ஆசிரியர் அதைத் தவிர்க்க முயன்றாலும் அது வெளிக்காட்டப்பட்டு விடுகிறது.
கலைஞர் குடும்பம் பின்னர் செய்த ஊழல்களை விவரிக்கும் போது நடுநிலைக்குத் திரும்பி வந்து விடுகிறார்.( இதனால் அறியப்படுவது யாதெனில் ஆசிரியருக்கு எம்ஜிஆரைப் பிடிக்கவில்லை-அது வரிகளுக்கு இடையில் காட்டப்பட்டு விடுகிறது.) தவறு எனில் மன்னிக்கவும்.
2G
ஊழல் விபரங்கள் - பிளந்து கட்டுகிறார். இது பற்றி இவ்வளவு விரிவாக யாரும் சொல்லியதாக எனக்குத் தெரியவில்லை.
இதெல்லாம் விட முக்கியமாக விஜய் டிவி. ஒரு செய்தி கூடப் போடாமல் மக்களை முழுதுமாக நாடகங்களுக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் வைத்து இருக்கிறதே என்று எத்தனையோ நாள் நான் விஜய் டிவியை விமர்சித்து இருக்கிறேன். விஜய் டிவி இப்படி இருக்கக் காரணமே அரசியல் என்பதும் அன்று மறுக்கப்பட்ட செய்தி ஒளிபரப்பும் உரிமை இன்றுவரை அதற்கு வழங்கப்படவில்லை என்பதும் எங்கள் ஆட்சி நேர்மைக்கு உதாரணம்.
புத்தக முடிவில் எனக்கு ஒன்று தான் புரிந்தது. இங்கே தலைவர்கள் என்பவர்கள் கையை முன்கூட்டி மக்களை வாழவைத்துக்கொண்டு எந்த நேரமும் மக்கள் நலனுக்காகவே செயற்பட்டுக்கொண்டு எந்த நேரமும் சுயநலமற்ற தீர்க்கமான பிழைகள் அற்ற முடிவுகளைத் திடச் சிந்தையுடன் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் இல்லை.
நல்லதும் கெட்டதும் எல்லோருக்குள்ளும் உண்டு. என்ன அந்த விகிதாசாரம் வேறுபாடும். Bias இல்லாத முடிவுகளை எடுத்த தலைவர்கள் வரலாற்றில் இல்லவே இல்லை. அது கதைகளில் மட்டும் தான்.
மக்கள் நலன் தான் என் கொள்கை என்கின்ற கோட்பாட்டுடன் ஆட்சி செய்த காமராஜர் கூட தன் முடிவால் குடும்ப ஆட்சிக்கு வித்திட்டு நாட்டையே நேருவின் வாரிசுகளுக்குத் தாரை வார்த்தார்.
நல்லது நடந்தால் பாராட்டவும் கெட்டது நடந்தால் தட்டிக்கேட்கவும் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும். நடுநிலையான அரசியல் விழிப்புணர்வு எல்லா மக்களுக்கும் இருக்க வேண்டும். ஆனால் இங்கே
நாங்கள் பரம்பரை பரம்பரையா ரெட்டை இலைக்குத் தான் ஓட்டுப் போடுவோம்.
நாங்கள் குடும்பமே உதய சூரியனுக்கு நாங்கள் எல்லாரும் எப்போதும் கைக்குத் தான்.
நாங்கள் வம்சாவளியா தாமரைக்குத் தான்
என்கின்ற வாக்காளர்கள் தான் அதிகம். அரசியல் கட்சிகள் மட்டும் குடும்ப அரசியல் நடத்தவில்லை.வாக்காளர்களும் குடும்ப அரசியல் தான் நடத்துகிறார்கள். இந்த நிலை மாறி, எஜமான விசுவாசம் இல்லாத அரசியல் பார்வை மக்களுக்கு வந்தால் தான் நேர்மையான அரசியலை இங்கே எதிர்பார்க்க முடியும். ஆசிரியரின் இந்தப் புத்தகம் கண்டிப்பாக இளம் தலைமுறையினர் தீர்க்கமான அரசியல் பார்வையை எடுக்க ஓர் உசாத்துணை நூலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteபாராட்டுக்கள் அண்ணே...
ReplyDeleteநல்ல மதிப்புரை. வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை
ReplyDelete