தென் இந்திய மாநிலங்களில் உள்ள கல்வித்துறை எப்படிச் செயல்படுகின்றது? என்பதற்கும் நம் தமிழ்ப்பிள்ளைகள் நிர்வாகத்தில் நடக்கும் தமிழ்நாட்டு நிர்வாகத்திற்கும் உண்டான அடிப்படை விசயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாமே தலைகீழ் மாற்றம். கேரளாவில் மத்திய அரசின் அனைத்து கல்வி சார்ந்த நிதிகளை, திட்டங்களை அப்படியே பெற்று விடுகின்றார்கள். மத்திய மனித வளத்துறை இப்போது கல்வி அமைச்சகமாக மாறியுள்ள நிர்வாகம் என்ன எதிர்பார்க்கின்றார்களோ அதனை நிறைவேற்றி கூடுதலாக கல்வி மாவட்டங்களைப் பிரித்து அதிகமாகவும் வாங்கி விடுகின்றார்கள்.
கேந்திரியா வித்தியாலயா
நவோதயா பள்ளிகள்
மாநிலப் பள்ளிகள்
என்று மூன்றும் மூன்று பாதையாகவே பிரச்சனையின்றி செல்கின்றது. ஆனால் இன்று வரையிலும் கேரளாவில் மொழி அரசியல் இல்லை. ஒரு மலையாளி தங்கள் தாய் மொழியை விட்டுக் கொடுப்பதும் இல்லை.
தமிழ் நாட்டில் கல்வித்துறை என்பது மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பு. சாதாரண நபர்கள் எளிதாக பள்ளி தொடங்கிவிட முடியாது. பெரிய மூதலீடு செய்ய வேண்டிய சமாச்சாரம். அடி முதல் நுனி வரைக்கும் லஞ்சப் பேய்கள் உலாவும் இடமாகவும் உள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை என்பது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பலவிதங்களில் வருமானம் தரக்கூடிய துறையாகவே உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறையில் நடக்கும் அதிகார வர்க்க மாற்றங்களையும், உள்ளுற மறைந்துள்ள அதிகாரப் போட்டி, அடையும் லாபங்கள் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கண்காணித்து வந்தால் உங்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
எடப்பாடி பதவிக்கு வந்த 2017 பிப்ரவரி மாதத்தில் பள்ளிக் கல்வித்துறையில் செயலர் பதவிக்கு உதயச்சந்திரன் இஆப வந்தார். பல மாற்றங்கள் சீர்திருத்தங்கள் உருவானது. பத்தாண்டுகளுக்கு மேலாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டது. ஆனால் அவரை மாற்றினார்கள். அவமானப்படுத்தினார்கள். இப்போது தொல்லியல் துறை ஆணையாளராக இருக்கின்றார்.
அவர் மாற்றப்பட்டதற்குப் பிறகு நமது பள்ளிக் கல்வித்துறை என்பது ரோலிங் நாற்காலி போல மாறி யார் அமர்வார்கள்? எப்போது மாற்றப்படுவார்கள்? எதற்காக மாற்றுகின்றார்கள்? என்பதே அறிய முடியாத அளவிற்கு கல்வித்துறை நிர்வாகம் முற்றிலும் முழுமையாகச் சீரழிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூட்டணி என்பது தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறையில் நடந்து கொண்டிருந்த பல நூறு கோடி வணிக வர்த்தக செயல்பாடுகளை முற்றிலும் முடக்கியதுடன் அறவே துடைத்து எறிந்தும் விட்டார்கள். திரு. சூரப்பா மூலம் உருவான உருவாக்கப்பட்ட உருவாகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மாற்றங்களும் அரசியல்வாதிகளுக்கும் தனியார் பொறியியல் கூட்டமைப்புக்கும் பெரிய தலையில் விழுந்த பேரடியாகவே உள்ளது.
இதனை எதிர்க்கும் அரசியல்வாதிகள், தனியார் கல்லூரி முதலாளிகள் வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டுகளில் ஒன்று அதிகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குத் தானே இருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது? அவர்கள் அரசியல்வாதிகள் சொல்வதைக் கேட்பதற்குத்தானே இருக்கின்றார்கள்? கூடவே இப்போது நடந்து கொண்டிருக்கும் கூத்துக்களைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் இவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதனையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்?
பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் பரிட்சை எழுதாதவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கக்கூடாது என்பதனை மேலிருந்து கீழ் வரைக்கும் உறுதியாக இறுதியாக வலியுறுத்திய பின்பும் இவர்கள் தன்னிச்சையாக அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நேற்று தான் அந்தப் பணி நிறுத்தப்பட்டது.
சிலமாதங்களுக்குள் பல பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பந்தாடப்பட்டுள்ளனர். இப்போது ஒரு பெண் அதிகாரி மாற்றப்பட்டதற்குப் பின்னால் உள்ள காரணம் அரசுக்கு அவப்பெயர் தேடித்தந்துள்ளார் என்கிறார்கள். அதாவது 5 மற்றும் 8வது மாணவர்களுக்குத் தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்பதும், கொரானா காலத்தில் கூடப் பள்ளிக்கூட மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தார்கள் என்ற குற்றச்சாட்டு வைத்து அரசியல்வாதிகளுக்கு இது தொடர்பில்லை என்பதாகச் செய்தி வந்து சேர்ந்தது. ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் கல்வி அமைச்சரின் கட்டுப்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை இருக்கின்றதா? என்பதே கண்ணாமூச்சி விளையாட்டு போலவே உள்ளது.
மானமிகு செங்க்ஸ் அவர்களின் அறிக்கையை, பேட்டியைக் கேலிக்கூத்தாக்கும் வண்ணம் அதிகார லாபி சிலரின் தூண்டுதல் காரணமாக வேறொரு வகையாக அறிவிப்பு வெளியிட மொத்தமாகக் குழப்பம் கும்மியடிக்கும் இடமாக தமிழக கல்வித்துறை இருந்தாலும் எவரை இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்துவதே இல்லை. மற்றொரு விசயத்தையும் நாம் யோசிக்க வேண்டும். திறமையாக செயல்பட்ட உதயச்சந்திரன் முதல் பல தமிழ் அதிகாரிகள் இங்கே இருந்தாலும் ஏன் இவர்களை எடப்பாடி அரசு தவிர்க்கின்றது? என்று உள்ளே நுழைந்து ஆராய்ந்தால் உங்களுக்கு இவர்களின் மக்களின் சேவை புரியக்கூடும்.
கடந்த சில நாட்களாக தமிழக உயர்கல்வித்துறையில் சூரப்பா புயல் வீசிக் கொண்டிருக்கிறது. கூடவே அனைத்து அரசியல்வாதிகளும் கட்சி பாரபட்சமின்றி இப்போது ஒன்றாகச் சேர்ந்து அறிக்கைப் போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இங்கே மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் தனிப்பட்ட மற்ற மாநில அதிகாரியின் கட்டுப்பாட்டில் போகக்கூடாது. உயர்கல்வித்துறை அமைச்சர் சொல்வதைத் தான் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படவே கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குச் சென்றால் இட ஒதுக்கீடு முழுமையாகப் பாதிக்கப்படும். பிரிக்கப்படும் போது அது நேரிடையாக மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும்.
இது போன்ற பல நீள்வெட்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தை உருவாக்கித் தொடர்ந்து இங்குள்ளவர்கள் கபடி ஆடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இவர்கள் நினைப்பது போல சூரப்பாவை வளைக்க முடியவில்லை. மாற்ற வழியில்லை. பணிந்து போகவும் விருப்பமில்லை. காரணம் தமிழக உயர்கல்வித்துறைக்கு மத்திய அரசிடமிருந்து வருடம் தோறும் கோடி கோடியாக நிதி வந்து கொண்டேயிருக்கிறது.
சூரப்பா பத்திரிக்கையாளர்கள் பேட்டியிலும், நிர்வாக கூட்ட அமைப்பிலும் சொல்கின்ற முக்கியமான சில விசயங்கள்.
ஊழல் உள்ளே இருக்கக்கூடாது. தகுதியைப் புறக்கணிக்கக்கூடாது. கல்வி கற்பது போல ஆராய்ச்சி ரீதியான விசயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் நிதி செலவழிப்பது என்பது வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும்
போன்ற பல கோரிக்கைகளை இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்து மாநில அரசு கூட ஒத்துழைப்புடன் சென்று இந்த பல்கலைக்கழகத்தின் தரத்தை இன்னமும் மேம்படுத்தவே விரும்புகிறேன் என்று கம்பீரமாக முழங்கவே செய்கின்றார்.
ஆனால் முழங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வியாதிகள் தாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள் மேல் தான் அக்கறை இருக்கின்றதே தவிர அரசு பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் குறித்து சிறிது கூட அக்கறை இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஒரு கல்லூரி துணைவேந்தர் பதவிக்கு 40 கோடி வரைக்கும் வாங்கியவர்கள் மெரினாவில் கரையான் அரித்து மண்ணோடு மண்ணாக மாறியிருக்கின்றார்கள்.
ஆளுநர் தொந்தரவாக இருக்கின்றார் என்று அவரை நகர்த்த இங்கு காலம் காலமாகப் பின்பற்றப்படும் பெண் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை கடந்து வந்து தன் இடத்தை அப்படியே நங்கூமிட்டு அமர்ந்து விட்டார்.
தற்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திரு சூரப்பாவின் அலுவலகத்திற்குச் செல்லவே இவர்கள் பயப்படும் நிலைமை இருப்பதால் புலம்பும் அளவிற்கு சூழல் மாறியுள்ளது.
காரணம் அவர்
தமிழ்ப்பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து நடத்தினால் இருக்கும் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ? என்று அச்சத்துடன் வெளியே கம்பு சுழற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களின் அழிவு தமிழ்நாட்டில் வளர்ச்சி.
ஜோ பேச்சு https://youtu.be/bS4gB8q6-Pk
உதயச்சந்திரன் அவர்களை மாற்றிய காரணத்தை அறிந்து தெரிந்து புரிந்தால்...
ReplyDeleteநாடாகும் நாடகத்தின் உச்சத்தில் சீரழிந்(த்)த பின் அறியலாம்... தெரியலாம்... புரியலாம்...
// ஜோ பேச்சு https://youtu.be/bS4gB8q6-Pk //
ReplyDeleteகாணும் இணைப்பு வேறு... செல்லும் இடம் வேறு... கவனித்து மாற்றவும்...
DeleteThis is correct link. Subscribe link
கட்டியே முடிக்காத ஜியோ இன்ஸ்டியூட், Institutes of Eminence
ReplyDeleteஅந்தஸ்து வழங்கியது பற்றி உங்களது கருத்து என்ன. மத்திய அரசு அதற்கு நிதி உதவி செய்யும் தானே. தெரியாததை கேட்பது தவறு அல்ல என்று நினைக்கிறேன்.
நம் மாநிலத்தில் இருப்பவர்கள் இங்கே இருக்கும் உள் கட்டமைப்பு விசயங்களில் அதிக கவனம் செலுத்தி குறைந்தபட்சம் கல்வித்துறையில் ஊழல் இல்லாமல் வைத்திருந்தால் போதுமானது என்பது என் கருத்து. கல்வித்துறையில் ஊழல் நடந்தால் பல தலைமுறைகள் பாதிப்புக்கு உள்ளாகும். மற்ற தனியார் குறித்து நாம் ஏன் கவலைப்படவேண்டும். இங்கிருப்பவர்கள் ஊழல் வாதிகளாக இருப்பதால் தானே அதனை வைத்துக் கொண்டு வரும் ஒவ்வொரு மத்திய ஆட்சியாளர்களும் மிரட்டுகின்றார்கள். தங்கள் விருப்பப்படி ஆட்டிவிக்கின்றார்கள்.
Delete