சுய ஊரடங்கு 5.0 - 73
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் ஜுன் 30 வரை)
கொரோனா தொற்று நோயினால் அரசாங்கம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இந்த நேரத்தில் தளர்வு இருந்த போதிலும் இது போன்ற சமயங்களில் நடக்கும் மரணம் என்னுள் அதிகப் பாதிப்புகளை உருவாக்குகின்றது.
சமூகத்தில் பிரபல்யம், அதிகப் பொருளாதார வசதிகள் கொண்டவர் என்ற பாரபட்சமின்றி அனைவரும் அனாதை போலவே மாறுகின்றார்கள். வசதிகள் இல்லாத வீட்டில் ஈமச் சடங்கு எப்படியிருக்குமோ? அப்படித்தான் உள்ளது. வீட்டுக்கருகே மிகப் பெரிய கோடீஸ்வரன் குடும்பத்தில் ஒரு பெண்மணி சில தினங்களுக்கு முன் இறந்தார். வகைவகையான வெளிநாட்டுக் காரர்கள் வந்து கொண்டேயிருந்தது. வந்தார்கள். வெளியே நின்றார்கள். தூரமாக நின்று கொண்டார்கள். முகத்தில் கட்டியுள்ள முகக் கவசத்துடன் நான் வந்தேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடமே பறந்து சென்று விட்டார்கள்.
பிணம் ஏற்றப்பட்ட வாகனத்தில் உள்ளே எவரும் அமர முடியாது. பின்னால் சில நபர்கள் மட்டுமே செல்கின்றார்கள். குறுகிய நேரத்திற்குள் மொத்த வீட்டையும் மருத்துவமனையைச் சுத்தம் செய்வது போலவே செய்கின்றார்கள். நம்மோடு வாழ்ந்தவர், நம்மோடு ஒன்று கலந்து இருந்தவரின் உடல் என்பது கொரானா பயத்தால் எடுத்தால் போதும் என்கிற அளவிற்குக் கணவனை, மனைவியை, சகோதரர்களை, மற்ற உறவினர்கள் அனைவரும் மாற்றிவிடுகின்ற சோகத்தைப் பல இடங்களில் பார்த்தேன்.
***
கொரானா காலத்தில் நான் வியந்த மற்றொரு விசயம் முகக் கவசம். அரசாங்கம் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்கிறார்கள். அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் என்கிற வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். ஆனால் இந்த முகக் கவசம் படும் பாடு சொல்லி மாளாது. எதில் தயாரிக்கின்றார்கள் என்பது முதல் எதற்காக அணிகின்றோம் என்பதனைப் பற்றி துளியும் கவலைப்படாமல் மக்கள் முகக் கவசத்தையும் கையாள்வதைப் பார்க்கும் சிரிக்கத் தான் தோன்றுகின்றது.
1. பத்து ரூபாய்க்கு மூன்று என்கிற ரீதியில் விற்கப்படுகின்றது. அந்தத் துணி கவசமே ஆரோக்கியமாக இருக்குமா? என்பதே பெரிய கேள்விக்குறி.
2. தரமான முகக் கவசம் என்பதனைப் பற்றி எவருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் ரூபாய் 100க்கு மேல் அதனை வாங்கி அணிய எவரும் விரும்பவில்லை.
3. முகத்தில் பாதுகாப்பு (முக) கவசம் உள்ளது என்கிற பெயரில் வாய்க்குக் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது.
4. முகக் கவசத்தை விட அருகே செல்லாதே. தொட்டுப் பேசாதே என்பது தான் முக்கியம் என்பதனை மறந்து வாகனங்களில் மூன்று பேர்கள் நெருக்கியடித்துப் பயணிக்கின்றார்கள்.
5. என்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிமிடம் வரைக்கும் கொரானா குறித்து, வைரஸ் குறித்து, எப்படிப் பரவுகின்றது, என்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதனைப் பற்றி அறிந்தவர்கள் பத்து சதவிகிதம் கூட இருப்பார்களா? என்பது சந்தேகமே.
6. முகக் கவசம் தயாரிப்பு என்பது மிகப் பெரிய தொழிலாக மாறியுள்ளது. இதில் உருவான இடைத் தரகர் கூட்டம் என்பது மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
7. சீனாவுடன் முட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சமயம் வரைக்கும் தரமான முகக் கவசமென்பது சீனாவை நம்பித்தான் இந்தியச் சந்தை உள்ளது தான் முக்கியமான ட்விஸ்ட்.😏
***
தற்போதைய நீதிமான்களுக்கு இபிகோ விற்கும் தொடர்பில்லை என்பது போல அவர்களின் தீர்ப்புகளுக்கும் பொது மக்களின் உண்மையான வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்பதாகத்தான் சமீப டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்ற உத்தரவும், ஆன் லைன் வழியாக விற்பனை செய்வதை மாநில அரசாங்கமே முடிவு செய்து கொள்ளலாம் என்பதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் தமிழக அரசு ஊரடங்கு சமயத்தில் மதுக்கடைகளைத் திறந்தது?
1. கள்ளச்சாராயம் விற்பனை உருவாகத் தொடங்கியது.
2. அரசு நிர்வாகத்திற்குப் பணம் தேவை.
3. மது ஆலைகள் இயங்க வேண்டும்.
4. சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முக்கியம்.
5. அரசியல்வாதிகளின் மறைமுக வருமானம் பாதிக்கப்படக்கூடாது
என்பது போன்ற பல விசயங்களை அடுக்க முடியும்.
ஆனால் மதுக்கடைகளைத் திறக்கும் போது நீதிமன்றம் போட்ட ஒவ்வொரு உத்தரவுகளும் இப்போது நகைப்புக்குரியதாக மாறிவிட்டது.
1. இந்த நேரத்தில் தான் கடை திறக்க வேண்டும்.
2. ஆதார் அட்டை எண் வாங்க வேண்டும்.
3. வயதுக்குத் தகுந்தாற் போல ஒதுக்கப்பட்ட நேரத்தில் மது வழங்க வேண்டும். 4. குடைபிடித்து வர வேண்டும்.
5. இரவு ஏழு மணிக்கு மேல் விற்பனை கூடாது.
ஆனால் நடைமுறைச் சிக்கல் பின்வருமாறு உள்ளது.
1. பார் திறக்கக்கூடாது என்ற காரணத்தால் கூட்டமில்லை.
2. வாங்கிச் செல்லும் மதுப் பாட்டில்களை இருட்டாக இருக்கும் இடங்களில் கும்பலாக உட்கார்ந்து அங்கேயே அருந்தி அங்கேயே தூக்கி எறிந்து விட்டுச் செல்லும் போக்கு உருவாகியுள்ளது.
3. இரவு 7 மணிக்கு மேல் பார் களில் பணிபுரிந்த நபர்கள் மூலமாக ஒரு பாட்டிலுக்கு 50 முதல் 100 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யும் போக்கு.
அரசாங்கத்திற்கு வரக்கூடிய வருமானம் அனைத்தும் தனிநபர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
மதுக்கடைகளுக்கு அருகே இருக்கும் பெட்டிக்கடைகள் ஸ்டாக் வைக்கும் இடமாக மாறியுள்ளது. எந்த மதுக்கடைகளிலும் செயல்படும் நேரங்களில் கூட்டம் இல்லை என்பதற்கு முக்கியக் காரணம் அதனை வாங்கிக் கொண்டு சென்று அருந்துவதற்குள் பாதிப் போதை இறங்கி விடுகின்றது என்கிறார்கள் மதுப்பிரியர்கள்.
பிரியமான நீதிமான்களே உங்களின் பார்வையும், நீங்கள் வாழும் வாழ்க்கையும் நிஜமான இந்தியக் குடிமகன்களுக்குத் தொடர்பில்லாத சமாச்சாரம் என்பதால் எப்போதும் போல கோக் பெப்ஸி பானங்களைத் தடைசெய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர் மேல் 5 லட்சம் அபராதம் என்று சொல்லி எவரும் இந்தப் பக்கம் இனி வருவீர்களா? என்பது போலவே இருக்கட்டும்.
இந்தியாவில் கடைசி நம்பிக்கையாக இருக்கும் உங்கள் கட்டிடம் இன்றைய நிலையில் நீதி என்ற வார்த்தைக்கும் நிதி என்ற வார்த்தைக்கும் இடையே தொங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.
இக்காலத்திய பாதிப்புகளில் முக்கியமானது இப்போதையமரணங்களின்போது நடைபெறுகின்ற நிகழ்வுகள். மரண வேதனையைவிட கொடிய வேதனை.
ReplyDeleteஅழகான வருத்தமான நிதர்சமான விமர்சனம்.
Deleteஇக்காலத்திய மரணம் - கொடுமை தான். நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் - இச்சூழலின் சிக்கல்களை.
ReplyDeleteசாராயக் கடை - வேண்டுமென்று ஒரு கூட்டம், வேண்டாமென்று ஒரு கூட்டம்!
இக்காலத்திய மரணம் பெரிதும் வேதனைதாய் ஐயா.
ReplyDeleteபெரும்பாலான மக்கள் இன்னும் கொரோனா பற்றிய விழப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள்,
இனி அனைத்தும் தொங்கல் தான்...
ReplyDelete