அஸ்திவாரம்

Friday, May 22, 2020

ஆசிரியர், நண்பர் : திரு.ஜோதிஜி திருப்பூர்

Chakkravarthy Mariappan
11 April at 13:31 ·
"#டாலர்_நகரம்".

ஒரு விவசாயியின் நிலத்தில் விளைந்த பருத்தி, பஞ்சாகி, பிறகு ஒரு நூல் கடையில் நுழைந்து வெளியேறி, நூற்பாகி, ஆயத்த ஆடைகளுக்கு அடிப்படையாக மாறி பின்னர் ஏற்றுமதி செய்து வெளிநாடு செல்கிறது.

இதே போல ஒரு விவசாய குடும்பத்தவர் செல்லும் வணிக வாழ்க்கைப் பயணத்தில் வழியில் வாகனச் சக்கரம் பழுதாகி, டயர் பஞ்சராகி, ஆனால் இதற்கெல்லாம் நொந்து போகாமல் அனுபவத்தால், கற்றலால் முன்னேறி படைத்திருப்பது வாசிக்க அருமையான ஒரு நூல்.



அவரது எழுத்தில் காணும் உணவு, உணர்வு, உறவுகள், வாழ்க்கை முறை, செட்டிநாட்டு மண்வாசம் மறைந்து தொழில், முதலீடு, வேலைவாய்ப்பு, முன்னேற்றம், வளர்ச்சி என்ற திருப்பூர் சாயக்கறை போல ஊரின் பெயர் இவரது பின்னால் ஒட்டிக் கொண்டது ஆச்சரியம். வாசிக்கும் போது சுவாரசியம்.

உழைப்பு, அர்ப்பணிப்பு, பொருளாதார நெருக்கடி, வாழ்வியல் சிரமங்கள் என்று அடித்தட்டு மக்கள், முதலாளிகள், ஏற்றுமதியாளர்கள், துணைத் தொழில் முனைவோர் ( தண்ணீர் விற்பனை/சாயப் பட்டறை/ சரக்கு வாகனங்கள்) என்று ஆண், பெண் இருபாலர் பேதமின்றி சுக, துக்கங்களை பட்டியவிடுவது சிறப்பு.

வட மாநிலத் தரகர்கள் குறித்து ஒற்றைச் சார்பு வாதம் ஏற்புடையதல்ல. அவர்கள் தான் இச்சங்கிலியை உடைக்கும் வலுவற்ற இணைப்பு என்றால் அதனை இங்குள்ளவர்கள் எளிதாக அறிந்து ஏன் செய்ய முடியவில்லை, அப்படி மாறவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அமெரிக்க நிறுவன ஒப்பந்தங்கள் குறித்த பார்வை முக்கியமானது. இங்கு பலருக்கு வாக்கு தான் முக்கியம். வாக்கை காப்பாற்றதவர்களும் உண்டு. எழுத்து பூர்வ ஆவணங்களை முறையாக படித்துப் பார்த்து கையெழுத்திடக் கூட பொறுமை கிடையாது. இது தான் நமது வணிக சாம்ராஜ்யங்கள் சரிவதற்கான மையப்புள்ளி.

இங்கு தொழில்நுட்பம், ஆராய்ச்சி, அனுமதி, காப்புரிமை, சந்தைப்படுத்துதல் குறித்த அனுபவம் இல்லை. அதை கற்றுக்கொள்ள விருப்பமும் இல்லை. அது தரும் பாதுகாப்பு, வெகுமதியை ஒதுக்கித் தள்ளி விட்டு குறைந்த நேரத்தில் பணம் சேர்க்கும் இலக்கோடு வணிகம் செய்வதால் ஏற்படும் பிரச்சனை தான் முதன்மையானது.

ஒரு பாடப்புத்தகத்தை பிரதி எடுக்கும் நகலகம், பாடல்களை பதிவு செய்யும் ஒலி நாடா, இணையத்தில் திருட்டுத்தனமாக காணப்படும் திரைப்படங்கள், இலவசமாகப் பதிவிறக்கம் செய்யப்படும் போலி மென்பொருள் போன்ற அனைத்தும் காப்புரிமைக்கு எதிரானது. ஒரு படைப்பாளி கஷ்டப்பட்டு எழுதிய புத்தகத்தை PDF ஆக வாட்ஸப் பில் கேட்பது போன்றது இந்த வலி. புரிந்தும் புரியாதவர்களுக்கு இதனை விளக்க முடியாது.

அளவற்ற வேலை நேரம், சுய கட்டுப்பாடற்ற அதிக/குறைந்த இலாப விகிதங்கள், முறைசாரா ரொக்கப் பரிவர்த்தனைகள், தரக் கட்டுப்பாட்டை மீறி விலை குறைவான (மூலப்) பொருள்களை தேர்ந்தெடுக்கும் உற்பத்தியாளர்கள், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை வெளியேற்றும் ஆலை நிர்வாகம், அமிலம் கலந்து அதனை திடப் பொருளாக்கி மண்ணில் கிடத்தி, மூட்டையில் அடைத்து பின்னர் மழையில் விடுவதெல்லாம் பணத்தை மட்டும் தீண்டும் விஷச் சிந்தனைகள்.

அமெரிக்காவில் வாங்கிப் பயன்படுத்திய உடையை சில நாள்களுக்குள் எனக்கு பிடிக்கவில்லை என்று திரும்பித் தர இயலும். இங்கு ஒவ்வொரு சிம் கார்டு வாங்கும் போது தரும் நமது அடையாளச் சான்று போல மேலைநாடுகளில் நடைமுறை கிடையாது. அங்கு விற்பனை செய்யப்படும் அலைபேசிகள் IMEI எண்ணோடு வாங்கியவர் பெயர், விபரம், அடையாளச் சான்றிதழ் இணைக்கப்பெறும். உற்பத்தி, சந்தைப்படுத்துதல், விநியோகஸ்தர், வணிகர் என வரி செலுத்தி உற்பத்தி செய்யும் முதலாளி முதல் அனைவருக்கும் அங்கு சட்ட ரீதியான பாதுகாப்பு உண்டு. போலி தயாரிப்புகளை எளிதாக விற்பனை செய்ய முடியாது, மாட்டார்கள்.

என் பிறந்த ஊர் அருகில் உள்ள சிவகாசியும் இதே போல ஒரு கந்தக பூமி. சின்னச்சின்ன கடைத்தெருக்கள், நெரிசலான சாலைகள். பட்டாசு, தீப்பெட்டி, அச்சக வணிகத்தின் தலைமையகம் என்று அதுவும் வணிகத்தில் கோலோச்சுகிறது. விருதுநகரில் திறந்த வெளி சாக்கடைகள் வீட்டு வாசலில் ஓடும். ஊருக்குள் சென்று வெளியேற படாதபாடு பட வேண்டும். ஆனால் அருகில் உள்ள இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் இவற்றோடு ஒப்பிட்டால் அந்த பரபரப்பில் கொஞ்சம் கூட இருக்காது, அமைதியாக நன்றாக இருக்கும். ஆனால் தொழில், வருமானம், வளர்ச்சி வளம் வேறு மாதிரி.

ஏரல் - திருச்செந்தூர் அருகே உள்ள பெரிய வணிக சந்தை. ஆண்டு முழுவதும் ஓலைப்பந்தல் வேயப்பட்டு ஒரு கி.மீ வணிக வீதி பொது மக்களுக்கும், கடைகளுக்கும் ஏதுவாக ஒரு சூழல் இருக்கும். அதே அளவு வணிகம் நடைபெறும் சுரண்டை- தென்காசி பரபரப்பாக மட்டுமே இருக்கும். சுகம் இருக்காது.

அறிவியல், தொழில்நுட்பம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவை வராவிட்டால் உலகில் பஞ்சத்தில் கோடிக்கணக்கானோர் உயிரழந்து இருப்பர். திருப்பூர் போன்ற நகரங்கள் அழுக்கைச் சுமந்து பிற ஊர்களை அழகாக வைக்க உதவுகிறது. அங்குள்ள தொழில் வாய்ப்பு இல்லை என்றால் இன்று தமிழகத்தின் பல கிராமங்களில் அடுப்பு எரியாது.

பல்லாயிரம் கோடி ஏற்றுமதி செய்யும் வளர்ந்த நகரம் அங்குள்ள குறுகிய மனம் படைத்த சிலரால் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எப்படி சில ஆண்டுகளில் ஒரு கோயில் நகரமான திருப்பதி காணும் இடம் எல்லாம் கழிப்பறை, குளியலறை, பேருந்து, தங்குமிடம், மருத்துவம், இலவச உணவு விடுதி என்று மாறியது. சிந்திக்க வேண்டும். இங்கு மத்திய அரசு, மாநில அரசு கடமை, பொறுப்பின்மை என்று சப்பை கட்டுவது வீண் வேலை.

எது தேவை, முக்கியத்துவம் என்று அங்குள்ள மக்கள் உணர்கிறார்களோ அது மட்டுமே அங்கு கிடைக்கும். புதிய அனுவம் தந்தமைக்கு வாழ்த்துகள்.

ஆசிரியர், நண்பர் : திரு.ஜோதிஜி திருப்பூர்

டாலர் நகரம் (DOLLAR NAGARAM



8 comments:

  1. அருமை. நன்றி திரு Chakkravarthy Mariappan

    ReplyDelete
  2. நல்லதொரு வாசிப்பனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. கிட்டத்தட்ட உங்கள் நடை, மற்றும் கருத்துக்களோடு ஒத்து போகிறது. சும்மா படித்து பாருங்கள்.

     Jayakumar

    ReplyDelete
  4. கிட்டத்தட்ட உங்கள் நடை, மற்றும் கருத்துக்களோடு ஒத்து போகிறது. சும்மா படித்து பாருங்கள்.
     https://selventhiran.blogspot.com/2020/05/blog-post_22.html?

    ReplyDelete
    Replies
    1. ‘ஐயா எங்கள் ஊரில் பிழைக்க வழியில்லாமல்தான் இங்கு வந்தோம். சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு, வேலைநேரத்தில் ஏற்றத்தாழ்வு, தங்குமிடம் தகரக்கொட்டாய், உண்ணும் உணவு பன்றிக்குரியது எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டோம். நன்றியோடுதான் உழைத்தோம். வீடடங்கால் நாங்கள் பசித்திருந்தோம். உணவுக்காக தட்டியபோது முதலாளிகளின் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவர்கள் காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு பஞ்சணையில் புரண்டு படுத்துக்கொண்டார்கள். பசியென கதறும் ஒருவனைக் கடந்துபோக முடியுமென்றால், கண்டுகொள்ளாமலிருக்க முடியுமென்றால் அங்கே நீதியுணர்ச்சி செத்துவிட்டது என்று பொருள். நான் உணவில்லாமல் இன்றோ நாளையோ நாளை மறுநாளோ இறக்கக் கூடுமெனில், இவர்கள் என்னை எடுத்து அடக்கம் செய்யமாட்டார்கள். என் உடல் ரோட்டில் வீசப்படும். அநாதையாகச் செத்துப் போவதற்குப் பதிலாக ஊரில் என் அன்னையின் மடியில் சாவேன். ஒரு மனிதனுக்குச் சோறு போட சமூகத்திற்கு வக்கில்லையெனில் உலகையே தீயிட்டு கொளுத்து என ஒரு கவிஞன் அறம்பாடுவது இதனால்தான். ஒருவனின் பசி கண்டுகொள்ளப்படாதென்றால் அதுதான் அறவீழ்ச்சியின் எல்லை. அதற்கு அப்பால் கீழிறங்குவதற்கு எதுவுமில்லை. ‘தருமம்’ எனும் ஒரே காரணத்திற்காக நான் பிறந்த மண்ணிலும் அதிகமாய் நேசித்த ‘கோவையும்’ இதற்கு விதிவிலக்கல்ல எனும் உண்மையால் என் கும்பி எரிந்தது. இன்று இது என் ஊரல்ல.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.