அஸ்திவாரம்

Monday, April 27, 2020

Play & Pause - Corona இயங்கும் விதிகள் மாறுகின்றது.



அந்த 42 நாட்கள் -  18
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


உள்ளே எந்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை அப்படியே Pause பட்டனை அழுத்தினால் எப்படியிருக்குமோ?. இந்தச் சூழலை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது.


நம்ப முடியாததாகவும் உள்ளது.






ஒரு வாரத்திற்குள் உலகம் மாறிவிடுமா? மனிதர்களின் குணம், மனம், செயல்பாடுகள் அனைத்தும் புதிதாகச் செயற்கையாக வடிவமைத்தது போல இருக்குமா? மாற முடியாமல் மாற்றிக் கொள்ளவும் முடியாமல் சந்துக்குள் சிக்கியவர் வெளியே வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். அழைத்துப் பேசுபவர்கள் லேசாக எரிச்சலைக் காட்டத் தொடங்கியுள்ளனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் தற்காலிக வேலை பறிபோயுள்ளது. இரவுப் பணியில் இருந்தவர்கள் சில வாரங்கள் கழித்து வாங்க. வீட்டுக்குள்ளே இருங்கள் என்று சொல்லி நாகரிகமாக அனுப்பியுள்ளனர்.

இன்று 21 நாளில் ஒரு வாரத்தைத்தான் கடந்துள்ளோம். ஆனால் இன்றே பலரின் கதறல் ஒலி மெதுவாகக் கேட்கத் தொடங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உருவாக்கிய சிறப்பான ஏற்பாட்டின்படி உழவர் சந்தை சமூக விலக்கத்தைக் கடைப்பிடித்துச் சிறப்பாகவே இருக்கும் என்று நம்பி இன்று அதிகாலை ஐந்து மணிக்கு உழவர் சந்தைக்குச் சென்ற போது கடல் அலைகள் போலவே கூட்டமிருந்தது. எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. தூரத்திலிருந்து பார்த்தவுடன் பின்வாங்கி விட்டேன். தப்பித்து சாலையோரக் கடைகளை வந்து பார்த்த போது அங்கும் இதே கொடுமை தான். விற்பவர் கொள்ளை நோய் பற்றிக் கவலைப்படாமல் கொள்ளையடிப்பதில் தான் குறியாக உள்ளார். பத்து ரூபாய் என்பது முப்பது ரூபாயாக மாறியுள்ளது. முப்பது ரூபாய் நூறாகவும் மாறியுள்ளது.

முகமூடியென்பது இப்போது மக்களுக்குக் கந்த சஷ்டி கவசம்போலவே மாறியுள்ளது. மாட்டிக் கொண்டால் போதும். தாயத்து போல. எதுவும் வராது. வந்தாலும் தாக்காது. எத்தனை எத்தனை விதமாக முகமூடிகளைப் பார்க்க முடிகின்றது. சேலை முகமூடி, கர்ச்சீப் முகமூடி, துணி முகமூடி.பிளாஸ்டிக் முகமூடி. இந்த நோய்க்கும் முகமூடிக்கும் தொடர்பில்லை. எவையெல்லாம் தொடர்புகளை உருவாக்குமோ அதைக் கெட்டியாகக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முகமூடிகளுக்குத் தொடர்பில்லாத பலவிதமான முகங்களைப் பார்த்தேன். போட்டு இருக்கும் முகமூடி அப்படியே ஒரு பக்கமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. போட்டு இருப்பவருக்கு நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்கிற திருப்தி. பொருட்களை வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அடுத்து ஒரு வாரத்திற்கு ஸ்டாக் வைக்க என்னன்ன வாங்கலாம் என்ற ஆராய்ச்சி.

அரசாங்கம் எதிர்பார்த்த, அறிவுறுத்திய அனைத்தும் காற்றில் பறக்கின்றது. கோவிட் காற்றில், கையில், பையில், வாங்கிய காயில் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. அவரவர் வாழ்வியல் அவரவர் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகின்றதா? நம்பிக்கை தான் வாழ்க்கை என்று நம்புகின்றார்களா? தெரியவில்லை. ஆனால் இவர்கள் அதை மட்டுமே நம்புவதால் இயல்பாக இருக்கின்றார்கள். நான் ரொம்ப ஹைஜீனிக் என்று சொன்னவர்கள் பயந்து கொண்டு பொந்துக்குள் தான் இருக்கின்றார்கள்.

என்னால் முடியவில்லை. மொத்தக் கூட்டத்திலும் இருந்து தப்பித்து ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. 150 ரூபாய் காய்கறியை 610 கொடுத்து வாங்கி வந்தேன். நேற்று மீன்கடை இதே போல வெளுத்து வாங்கியது. இன்னும் பத்து நாட்களில் தெரியும். வாங்கிக் கொண்டு சென்றவர்கள் வெறும் மீனை மட்டும் வாங்கிச் சென்றார்களா? அருகே இருந்தவர் கொடுத்ததையும் வாங்கிச் சென்றாரா? என்பதும் புரியும்.

கடந்த பத்து நாளில் திருப்பூரில் நடந்திருக்க வேண்டிய நாலைந்து கோடீஸ்வர திருமண நிகழ்ச்சிகள் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. சில கோடிகளில் செலவு செய்திருப்பார்கள். இப்போது சில ஆயிரங்களில் கோவிலில் வைத்து முடித்துள்ளார்கள். அதே கௌரவம். அதே மரியாதை. பணம் மிச்சம். குப்பைக்குப் போகும் சாப்பாடு மிச்சம். தாங்யூ கொரானா என்று சொல்லத் தோன்றுகின்றது. மிச்சப்படுத்திய பணத்தை முதலமைச்சர் நிதிக்கு அனுப்பியிருப்பார்கள் என்று கனவு காணாதீர்கள்.

நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை. அலாரம் வைக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே தூங்கச் செல்பவர்களுக்கு வாரத்தில் ஏழு நாட்களுமே ஞாயிறு போலவே மாறப் போகின்றது என்பதனை சில வாரத்திற்கு முன்பு சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா?

பத்தாம் வகுப்பு இன்று இரண்டு பரிச்சை முடிந்திருக்கும். 11, 12 சுற்றுலா கிளம்பியிருப்பார்கள். தனியார் நிறுவனங்களும், பள்ளிக்கூடங்களும் அடுத்த வருட அறுவடையைத் தொடங்கியிருப்பார்கள்.

எல்லாமே ப்ரீஸ் ஆகி அப்படியே நிற்கின்றது.

எப்போது ப்ளே பட்டனைத் தொட முடியும் என்று புரியவில்லை.



திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள்.

2 comments:

  1. பலருக்கும் சரியான புரிதல் இல்லை. வீட்டை விட்டு வெளியே போகாதே என்றால் யார் கேட்கிறார்கள். முகமூடி - கடமைக்கு அணிவதே வழக்கமாகி இருக்கிறது. நிறைய பேர் இரவு நேர உலா வருகிறார்கள், செல்ஃபி எடுக்கிறார்கள் - காவல் துறை கண்ணில் பட்டால் - கடைக்குப் போகிறோம் என்று பொய்யாக அலறுகிறார்கள்.

    தலைநகர் தில்லியில் கடைக்காரர்கள் கொள்ளைக் காரர்களாக மாற வில்லை - இன்றைக்கு காய்கறிகள், பழங்கள் போன்றவை முன்பு விற்ற விலையிலேயே கிடைக்கிறது. கிடைக்கும் காய்கறி வகைகள் குறைவாக இருந்தாலும், விலையில் மாற்றமில்லை.

    ReplyDelete
  2. இனி எல்லாமே ப்ரீஸ் தான்...

    தொட்டு விட தொட்டு விட தொடரும்...
    கை பட்டுவிட பட்டுவிட மலரும்...

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.