அஸ்திவாரம்

Sunday, April 19, 2020

கொரானா எப்படி உருவானது?


அந்த 42 நாட்கள் -  2
Corona Virus 2020

அமெரிக்காவின் ‘ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற நிறுவனத்தை (Scripps Research Institute) சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவானது புகழ்பெற்ற ‘நேச்சர் மெடிஸன்’ ஆய்விதழில் நேற்று (March 17, 2020) வெளியாகியுள்ளது.

SARS-CoV-2 என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த வைரஸின் மரபணுக்களை ஆய்வு செய்த நிபுணர்கள், அவை ஆய்வகத்தில் செயற்கையாகவோ அல்லது மரபணுமாற்றம் செய்யப்பட்டோ உருவாகவில்லை என்றும் இயற்கையில் பரிணமித்த புதிய இனப்பிரிவு என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 இனப்பிரிவைச் சேர்ந்த கரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியது. அப்போது முதல் 2020-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 110 நாடுகளில் குறைந்தபட்சம் 1,21,564 நபர்களிடம் இந்த நாசகார கிருமி பரவி சுமார் 4,373 மனித உயிர்களை குடித்துள்ளது.

வூஹான் நகரில் வைரஸ் ஆய்வு நிறுவனம் உள்ளதால் கரோனா வைரஸ் அங்கே ரகசியமாக தயாரிக்கப்பட்ட செயற்கை கிருமி என்ற புரளி எழுந்தது.

"ஏற்கெனவே நாம் அறிந்துள்ள வேறு கரோனா வைரஸ் இனப்பிரிவுகளின் மரபணு தொடரோடு புதிய இனப்பிரிவை ஒப்பிட்டு பார்க்கும்போது SARS-CoV-2 இனப்பிரிவு வைரஸ் இயற்கையில் பரிணமித்த ஒன்று என தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இரண்டு வகையில் இந்த நாவல் SARS-CoV-2 வைரஸ் பரிணமித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலாவதாக, வேறு விலங்குகளில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் உருவாகி, பின்னர் மனிதர்களிடம் நோய் ஏற்படுத்தும் கிருமியாக பரிணமித்து பரவியிருக்கக் கூடும். இல்லையெனில், முதலில் நோயற்ற வடிவில் மனிதரிடம் பரவி, பின்னர் மனிதரிடம் பரிணமித்து நோய் ஏற்படுத்தும் கிருமியாக உருவாகியிருக்கலாம்.

வவ்வால்களிடம் பரவும் SARS-CoV-2 வைரஸின் சாயல் இந்த கரோனா வைரஸில் காணப்படுகிறது. எனவே, வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவி இருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது. SARS மற்றும் MERS வகை SARS-CoV கரோனா வைரஸ்கள் இப்படி தான் முதலில் புனுகு பூனை மற்றும் ஒட்டகங்களில் முறையே உருவாகி பின்னர் மனிதரிடம் பரவியது.




எனினும், வவ்வால்களிடம் நோய் ஏற்படுத்தும் அதே இனம், மனிதரிடம் நோய் ஏற்படுத்த முடியாது. எனவே இரண்டுக்கும் இடைப்பட்ட இனப்பிரிவு பரிணமித்து இருக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட இனப்பிரிவு இனம் காணப்படவில்லை. எனவே, வவ்வால்களிடம் உருவாகி மனிதனுக்கு இது பரவியது என தீர்மானமாக கூற முடியாது.

மாற்றாக நோய்விளைவிக்கின்ற திறன் அற்ற வகை வைரஸ் மனிதர்களிடம் பரவி, பின்னர் காலப் போக்கில் பரிணாமத்தின் காரணமாக, நோய் விளைவிக்கின்ற தன்மை கொண்ட இனப்பிரிவாக உருவெடுத்து இருக்கலாம். அழுங்கு எறும்புண்ணிகளில் இந்த சாயல் கொண்ட வைரஸ் உள்ளது. அந்த விலங்கிடம் காணப்பட்ட வைரஸ்களிலும், SARS-CoV-2 வைரஸ்களிலும் ஒரே வகை RBD அமைப்புதான் உள்ளது.

எனவே நேரடியாக எறும்புண்ணியிடமிருந்தோ அல்லது பூனை இன விலங்குகளிடம் இருந்தோ இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவி இருக்கலாம். மனிதர்களிடம் பரவிய பின்னர், பரிணாம படிநிலை வளர்ச்சியில் மனித செல்களை துளைத்து திறக்கும் 'சாவி புரதம்' பரிணமித்து தொற்றுநோயாக உருவாகியிருக்கலாம் என்கிறார்கள்.

இரண்டில் எது சரி என்பதை இப்போது நம்மிடம் உள்ள தரவுகளைக் கொண்டு இறுதி செய்ய முடியாது. தொற்று விளைவிக்க கூடிய திறனோடுவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றால் மறுபடி இந்த வைரஸின் வேறு ஒரு வடிவம் எதிர்காலத்தில் பரவி புதிய தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நோய் ஏற்படுத்தும் திறனற்ற வடிவில் மனிதர்களிடம் பரவி பின்னர், நோய் தன்மை கொண்ட வைரஸ் பரிணமித்துள்ளது என்றால் மறுபடியும் அதேபோன்ற நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. எப்படி இந்த வைரஸ் உருவானது என்பதை கூடுதல் ஆய்வுதான் நமக்கு தெளிவுப்படுத்தும்.

நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது கிரீடம் (கிரவுன்) போல அல்லது சூரியனை சுற்றி இருக்கும் ஒளிக் கதிர்கள் (கரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் கரோனா வைரஸ் குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது.

நமக்கு தெரிந்த வரையில், மனிதர்களை தாக்கும் ஆறு கரோனா வைரஸ்களில் 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் ஆபத்து அற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். MERS-CoV மற்றும் SARS-CoV ஆகிய இரண்டும் கிருமி தாக்கியவர்களில் சிலருக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு நோயை ஏற்படுத்தும்.

ஏழாவதாக உருவானதுதான் இந்த SARS-CoV-2. எனவேதான், புத்தம் புதிதாக சமகாலத்தில் பரிணமித்த இனப்பிரிவு என பொருள்படும் 'நாவல்' என்ற அடைமொழியோடு 'நாவல் கரோனா வைரஸ்' என பெயர் சூட்டப்பட்டது. இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர்தான் கோவிட்-19.

ஏறக்குறைய பந்து வடிவில் இருக்கும் கரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கூர் முனைகள் உள்ளன. இந்த கூர் முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை இந்த வைரஸ் பற்றிக் கொண்டு துளையிட்டு உள்ளே நுழைகிறது.


4 comments:

  1. இயற்கை (ஊழ்) செய்யும் விளையாட்டை கணிக்கவே முடியாது...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எப்போதும் அமைதியாகவே இருக்கிறார். காரணம் கேட்ட போது எனக்கு சொந்தமானது, நான் அனுபவிக்க வேண்டியது, என்னிடம் வந்து சேர வேண்டியது வந்தே தீரும் என்கிறார். அதே மாதிரி அவருக்கு வந்தும் சேர்ந்து விடுகின்றது. நமக்கு அந்த அளவுக்கு இன்னமும் மெச்சூரிட்டி வரவில்லை.

      Delete
  2. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இயற்கை அதன் வேலையை எப்போதும் சரியாகவே செய்து வந்துள்ளது. இனியும் அப்படியே செய்யும்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.